Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெற்றி பெற்ற விஜயலட்சுமி... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2016 | , ,

நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 27

அது ஒரு மானசீகமான ஓட்டப்பந்தயம். அதற்காக அமைந்தவை மூன்று ஓடுதளங்கள். அதில் பங்கெடுத்தோர் மூவரல்ல; ஒரே ஒருவர்தான்!

இந்து, கிருஸ்தவம், இஸ்லாம் எனும் அந்த ஓடுதளங்களில் ஓட நின்றவர் டாக்டர் விஜயலட்சுமி என்ற இந்துப் பெண்ணாக இருந்து, சல்மா என்ற முஸ்லிம் பெண்ணாக மாறி, வெற்றி பெற்றுப் பேறு பெற்ற பெண்மணியாவார்.

ஆந்திர மாநிலத்தின் மேற்குக் கோதாவரிப் பகுதியிலிருக்கும் நாதித்வாலா என்ற சிற்றூரின் பழமைக் கொள்கையுள்ள ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் விஜயா.

சிறுமியாக இருந்த போதே, விஜயாவுக்குக் கோயில்கள், சிலைகள், சிற்பங்கள், அவற்றிற்கான சடங்குகள் ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை! வளர்ந்த பின்னர் சரியாகிவிடுவாள்  என்றெண்ணிய பெற்றோரும், அவளுடைய படிப்பில் கவனத்தை செலுத்த அனுமதித்தனர். நன்றாகப் படித்து டாக்டராக வேண்டும் என்ற நோக்கில் படித்துக் கொண்டிருந்த மகளுடைய புதினப் போக்கைப் பற்றி அவர்கள் அவ்வளவாகக் கவலைபடவில்லை.

தான் பிறந்த மதச் சடங்குகளின் மீது தீராத வெறுப்புடனேயே கல்வி கற்ற காலம் முழுவதும் கழிந்தது. ஒருவாறாக M.B.B.S. படிப்பை முடித்து மருத்துவத் தொழிலைத் தொடங்கினார்.

இந்து மதத்தின் மீது பிடிப்பற்று நின்ற விஜயாவுக்கு, அப்போதைக்கு ஒரு மாற்று வழி தென்பட்டது! உடன் பணியாற்றிக் கொண்டிருந்த கேரளத்து மருத்துவரான டாக்டர் குஞ்சி முஹம்மது  என்பவரிடம் இஸ்லாம் பற்றிய விளக்கங்களைக் கேட்கத் தொடங்கியது முதல், அவ்விருவரும் காதல் வயப்பட்டனர்! அது, பின்னர் திருமணத்தில் முடிந்தது. ஆனால், திருமணம் எவ்வளவு விரைவாக நடந்தததோ, அவ்வளவு விரைவாக அதன்முறிவும் அமைந்து விட்டது பாவம்!

மகளின் முடிவும், அதன் பின்னர் ஏற்பட்ட முறிவும், விஜயாவின் பெற்றோரை முடுக்கிவிட்டன. மகளை நெருங்கி அவளுடைய இல்லறப் பின்னடைவுக்கு காரணம் கடவுள்களை மறந்த நிலையும் மதிக்காத தன்மையும்தாம் எனக் கூறி, இந்துக் கோயில்களுக்கும் புண்ணியத் தளங்களுக்கும் அவளை இட்டுச் சென்றனர். ஆனால், விஜயாவின் உள்ளம் அவற்றிலெல்லாம் அமைதி காணவில்லை!

அந்த நேரத்தில் டாக்டர் விஜயாவுக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதன்படி, ஆந்திராவில் கனபாவரம் என்ற ஊரிலிருக்கும் கிருஸ்தவ மிஷன் மருத்துவக் கல்லூயில் சேர்ந்து M.D.உயர் கல்வியைப் படிக்கத் தொடங்கினாள்.

அந்தக் கால கட்டத்தில் கிருஸ்தவ மதத்தின் அறிமுகம் கிடைக்கவே, அம்மதம் பற்றிய நூல்ககளைப் படிக்கத் தொடங்கினாள். ஆனால், கிருஸ்தவ மதத்தின் கடவுட் கொள்கையானது குழப்பமான ஒன்றாகத் தென்பட்டது. குறிப்பாக திரியேகத்துவம், கடவுளுக்கு மகன் போன்றவை மிகவும் குழப்பமாக தெரிந்தன. கிருஸ்தவத் திருச்சபைப் போதகர்களால் விளக்கமளிக்க முடிவில்லை.

அகிலத்தையும் வானத்தையும் அண்டகோளங்களையும் அவற்றிற்கு அப்பாற்பட்ட அனைத்தையும் கற்சிலைக் கடவுள்களோ, மனிதர்களோ படைத்து இயக்கிக் கொண்டிருக்க முடியாது; அவற்றைப் படைத்த வல்லவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்; அவன்தான் உண்மையான கடவுள் என்ற சிந்தனையைத் தன் இதயத்தின் அடித்தளத்தில் பதிய வைத்திருந்த விஜயாவுக்கு, அந்த வல்லமை மிக்க அல்லாஹ் தன் பாதையைக் காட்ட விழைந்தான் போலும்!

அது 1990 ஆம் ஆண்டு, சவுதிஅரேபியாவிலிருந்து பெண் மருத்தவர் தேவை என்ற விளம்பரம் ஒன்று விஜயாவின் பார்வைக்குக் கிட்டிற்று. உடனே அதற்கு விண்ணப்பித்தார் விஜயா. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற, அரபு நாட்டுப் பயணம் தொடங்கிற்று.

முதன் முதலில் டாக்டர் விஜயாவுக்குப் பணியமர்வு கிடைத்த இடம் : Al-Saleh Medical Center at Al-Kohbar. அங்கு உடன் பணியாற்றிக் கொண்டிருந்த பாக்கிஸ்தானிப் பெண்ணொருத்தியின் தோழமையின்பின், இஸ்லாத்தின் திருவேதமான குர்ஆன் ஒன்று வாசிக்கக் கிடைத்தது விஜயாவுக்கு. அதனை ஆழ்ந்து படிக்கத் தொடங்கிய விஜயா, அதிலேயே மூழ்கிப் போனாள். அதனைப் படிக்க படிக்க, தன் உள்ளத்தில் இருந்த ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த விடை கிடைத்ததை உணரத் தொடங்கினாள்.

அந்த நேரத்தில், ஜித்தாவிலுள்ள டாக்டர் ஹசன் கஸ்ஸாலி மருத்துவமணையில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கவே, டாக்டர் விஜயா அங்கு மாற்றலாகிச் சென்றார். ஜித்தாவில் இருந்தபோது தான், டாக்டர் விஜயாவுக்கு அருமையான தோழி ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர்தான் சகோதரி சாரா. இவர் கிருஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவி, ஜித்தாவின் இந்தியத் தூதரகப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் டாக்டர் விஜயாவின் தாகத்தைத் தணிக்கத் துணை புரியும் இன்னும் பல இஸ்லாமிய நூல்களைக் கொடுத்துப் படிக்கச் செய்தார். படிக்கப் படிக்க அறிவு கூடியதோடு, விஜயாவின் இதயத்திலிருந்த எத்தனையோ கேள்விகளுக்கு விடைகளும் கிடைத்தன. அவற்றிலிருந்து தான் தேடிக் கொண்டிருந்த மார்க்கம் இதுதான் என்று தீர்க்கமாக உணர்ந்த டாக்டர் விஜயா, தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் குர்ஷித் அவர்களிடம் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

டாக்டர் குர்ஷித்தின் துணையுடன் டாக்டர் விஜயலட்சுமி ஜித்தாவின் 'ஷரீஆ' நீதிமன்றத்திற்குப் போய், 'ஷஹாதா' மொழிந்து 'சல்மா' வானார். அன்றே புனித மக்காவுக்குப் போய் 'உம்ரா'வையும் நிறைவேற்றினார். அது 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி.

டாக்டர் சல்மாவின் தீர்மானம் உறுதியானது; இறுதியானது! "நான் எடுத்த இந்த முடிவின் விளைவு இந்தியாவில் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் எனது சமூகத்தில் எந்த மாற்றங்களும் எதிர்ப்புகளும் வரும் என்பதும் எனக்குத் தெரியும். நான் ஒதுக்கப்படுவேன்; பரவாயில்லை. என்னைப் பலரும் வினோதமாகப் பார்ப்பார்கள்; பரவாயில்லை, குடும்ப சொத்தில் பங்கு கிடைக்காது; பரவாயில்லை. பெற்றோர் ஒதுக்கி விடுவார்கள்; பரவாயில்லை. ஆனால், அவர்களும் நேர்வழியடைய வேண்டும் என்பதே என் ஆசை" என்கிறார் டாக்டர் சல்மா.

மக்களை இறைவணக்கத்தின் பக்கமும் நேர்வழியின் பக்கமும் அழைக்கும் 'தஅவா' என்ற இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வது, எனக்கு என் டாக்டர் தொழிலை விட முக்கியமானதாகும். நான் பெற்ற பேற்றை மற்றவர்களும் பெற்றால் அதைவிட நற்பணி வேறுண்டா?" என்று கேட்கும் டாக்டர் சல்மா, சிந்தனையும் நம்பிக்கையும் ஒன்றிணைந்திருப்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்றுணர்ந்து. அதன் ஓரிறைக் கொள்கை, சமூக ஒற்றுமை, ஐங்காலத் தொழுகை, ஜகாத் ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டுகிறார்.

நேரம் தவறாமல் நிறைவேற்றப்படும் கூட்டுத் தொழுகை, முஸ்லிம்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக்குகின்றது. படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகின்றது. மற்ற மதங்களில் செய்யப்படும் தான தர்மமோ சமூக சேவையோ, எதுவாயினும், அவரவருடைய பாவவிமோசனத்துக்காவே செய்யப்படுகின்றன. ஆனால், இஸ்லாம் தேவையுடையவர்களுக்கு உதவுவதைக் கட்டாயக் கடமையென்று கூறுகின்றது. இந்த உலகில் மக்கள் படும் துன்பங்களை நீக்குவதைக் கடமையாக வகுத்துள்ளது இஸ்லாம்." டாக்டர் சல்மாவின் சீரிய சிந்தனையின் வெளிப்பாடு இது.

தனது வாழ்வில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதிலும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து 'தஅவா'ப் பணி புரிவதிலும் ஆர்வத்துடன் செயல்படுகின்றார் டாக்டர் சல்மா. அவருடைய பிரச்சாரத்தின் விளைவாக அவருடன் பனியாற்றும் சகோதரர் ஒருவரை முஸ்லிமாக்கி, அவருக்கு இஸ்மாயில் என்ற பெயரையும் வழங்கி உயர்த்தியுள்ளார் இந்த 'தாஇயா' (பெண் அழைப்பாளர்).

தனது மருத்துவப் பணிகளினூடே இஸ்லாமியப் பிரச்சாத்தையும் அவ்வப்போது செய்துவரும் இப்பேறு பெற்ற பெண்மணி, தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரம் முழுவதையும் குர்ஆன் மொழி பெயர்ப்பையும் மற்றுமுள்ள இஸ்லாமிய நூல்களையும் படித்து, நாளுக்கு நாள் தனது இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொண்டு வருகின்றார். தனது பழைய பெயரில் விஜயம் (வெற்றி) பெற்றுள்ள இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலமும் வெற்றியைப் பெற்றுவிட்டார்தானே?

அதிரை அஹ்மது

1 Responses So Far:

N. Fath huddeen said...

இஸ்லாத்தை விட்டு வெளியேறி, மாற்றானுடன் ஓடும் இழிவடைந்தப் பெண்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கவேண்டுமே!

"தான் நாடியவருக்கே நேர்வழி காட்டுவேன்" அல்லாஹ் கூறுவது எவ்வளவு உண்மை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு