Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பழமைக் (கூக்)குரல்கள்... 22

அதிரைநிருபர் பதிப்பகம் | March 08, 2016 | , , , ,

(அண்மைய நாட்களாக ரொம்ப tough ஆன subject களாகவும், வாக்கு வாதங்களாகவும் ‘அதிரைநிருபர் தளத்தில் இடம் பெற்றுவிட்டதால், கொஞ்சம் relax ஆக இந்தப் பதிவு.)

ஓர் அரை நூற்றாண்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  நமதூர் வீதிகளில் மாடி வீடுகள் மிகக் குறைவு. அவை,  ‘மெத்தை வீடுகள்’’ என்று அழைக்கப்படும். நடுத்தெருவில், ‘மெத்தை வீட்டு சவியாமத்தா’  கீழத் தெருவில் கச்சா கடைக்குப் பக்கத்தில் ஒரு ‘மெத்தை வீடு’ – இப்படிச் சில. மீதியிருந்த எல்லா வீடுகளும் – எங்கள் வீடு உள்பட – எல்லாம் நாட்டு ஓடுகளால் அடுக்கப்பட்ட கூரை வீடுகள்.  

அந்தக் காலத்தில் வெளிநாடுகள் என்று பொதுமக்களுக்குத் தெரிந்தவை எல்லாம், இலங்கை (சிலோன்), பர்மா, சிங்கப்பூர், மலேஷியா (மலாயா), இன்னும் ஒன்றிரண்டு!  யூக்கே, அமேரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் இன்னும் என்னென்னவோ நாடுகளில் நம்மூர்க்காரர்கள் இன்று வாழ்கின்றார்களே, அவையெல்லாம் அறியப்படாதவை!  அல்லது ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்தவை.  

அந்தக் காலத்தில் நம் வீதிகளில் நடந்துகொண்டிருந்த (கூக்)குரல்களைக் கேட்க உங்களை அழைத்துச் செல்கிறேன், வாருங்கள்! 

“அம்மி கொத்தலையா?  அம்மீ....மாமியோவ்!”

இப்போதைப் போல், அன்று ‘மிக்ஸி’ இல்லை! ‘கிரைண்டர்’ இல்லை! ‘வாஷிங் மெஷின்’ இல்லை!  அம்மியும் ஆட்டுக் கல்லும் உரல் உலக்கையும் வண்ணாரப் பிள்ளையும்தான்!

அம்மியில் உணவுக்கான பொருள்களை அரைத்து மாவாக்க, அந்த அம்மியைச் சிறு சிறு பள்ளங்களாகக் கொத்திவிடச் செய்து, அரைத்துக் கையால் வழித்துவிட்டு, மீண்டும் அரைப்பார்கள் வீட்டுப் பெண்கள்.  அரைத்து அரைத்து அம்மியும் ஆட்டுக் கல்லும் (கொடக்கல்) தேய்ந்து போகும்.  அதை  மீண்டும் கொத்தி விடவேண்டும்.  அந்த வேலையைச் செய்வதில் திறமையானவர்கள் குறத்திகளே.

அவர்கள் தெருத்தெருவாக அலைந்து, “அம்மி கொத்தலையா!  அம்மி கொத்தலையா!  மாமீ...!  மாமியோவ்...!” என்று குரல் கொடுப்பார்கள்.  தேவை உடையவர்கள், “இந்தா, ‘அம்மி கொத்தலையா!’ (அவளுக்குப் பெயர் அதுதான்) என்று கூப்பிட்டு, வேலை செய்யச் சொல்லிக் கூலி கொடுத்தனுப்புவார்கள்.  அல்லது, அவள் கேட்கும் பழைய புடவையைக்  கூலியுடன் கொடுத்தனுப்பு வார்கள் நம் வீட்டுப் பெண்கள்.

“சாலா மிஸ்ரி..ஹல்வா....! லேகியோம்....!”

குறத்திகளுக்கு மேற்கண்ட வேலை.  குறவர்களுக்கு...?  பிசுபிசுப்பான ஒரு பொருளை – பார்வைக்கு அது உலர்ந்த ‘ஆப்ரிகாட்’ பழம்போல் இருக்கும் - கம்பியில் அல்லது நூலில் கோர்த்துக்கொண்டு, “சாலா மிஸ்ரி ஹல்வா....” என்று கூவிக்கொண்டு தெருக்களில் போவார்கள்.  நாங்களெல்லாம் அதைப் பார்த்துக் குடல் பிரட்டலுக்கு உள்ளாகியிருப்போம்.  பல வியாதிகளைக் குறிப்பிட்டு, அவற்றை குணப்படுத்தும் என்றும் கூவுவான்! நம் தெருக்களில் யாரும் அதை வாங்க நான் பார்த்ததில்லை.

பட்ச்சி வைத்திய எண்ணெய்:  

இவனும் குறவனாகத்தான் இருப்பான் போலும்.  ஒரு விரிந்த, வட்ட வடிவமான பாத்திரத்தில், பல குருவிகளின் செத்த உடல்களும் சில பெரிய பறவைகளின் உடல்களும், எண்ணெயில் தோய்ந்த நிலையில் கிடக்கும். மூட்டு வலி, இடுப்பு வலி, கை-கால் கடுப்பு, கழுத்து வலி, தலைவலி, போன்ற நோய்களுக்கு அந்தப் பட்சிகளின் சாறு மருந்தாம்!  அவனை நம்பி வாங்கிச் சென்றவர்களையும் என் பள்ளிப் பருவத்தில் கண்டுள்ளேன்.  அவன் கூப்பாடு, வெகு தூரம்வரை கேட்கும்!  என் வாழ்க்கையில், இதுவரை அப்படி எந்த நாட்டு வைத்தியரும் மருந்தாக, அந்தப் பட்சி எண்ணெயைப் பரிந்துரைக்கக் கேட்டதில்லை!

“காதுக் குடும்பி எடுக்கலையா?  காதுக் குடும்பீ....!” 

இப்படி ஒருவன் கூப்பாடு போட்ட பின்னர்தான் சிலருக்குக் காதுக்குள் அரிப்பு ஏற்படுவதுபோல் உணர்ச்சி உண்டாகும் போல.  அவர்களின் கை அவர்களை அறியாமலே காதுக்குள் போகும்.  இதைக் கண்டுகொள்வான் அந்த ‘காதுக் குடும்பிக்காரன்’.  “அய்யாக்குக் காதுப்பீ கல்லாப் போயிருக்குது” என்று நெருங்கிச் செல்வான்.  ஏமாளிகள் சிலர், தம் காதுகளை அவனிடம் அர்ப்பணம் செய்வார்கள்.  தானும் அமர்ந்து, தன் ‘கஸ்டமரையும்’ உட்கார வைப்பான். அவனிடமிருக்கும் பழைய பெட்டி திறக்கப்படும். “வலிக்காது! பயப்டாதீங்கோ” என்று கூறித் தன் surgery equipmentகளை  எடுப்பான்.  நாங்களெல்லாம் வேடிக்கை பார்ப்போம்.  

சற்று நேரத்தில், “கல்லு தட்டுப்படுது” என்று கூறி, தனது பையைத் திறந்து ‘லாவகமாக’ ஒரு சிறு கல்லைத் தன் விரல் நகத்தால் மறைத்து எடுத்துக் காதில் போடுவான்!  அது ‘சொய்ஞ்...’ என்று இறங்கிக் காதுப் பீயுடன் ஒட்டிக்கொள்ளும்.  பின்னர் அவன் சிறிய இடுக்கியொன்றால் ‘லாவகமாக’ வெளியில் எடுத்துக் கஸ்ட்டமரின் கையில் கொடுப்பான்!  அந்தக் கல்லுக்கு ரெண்டு திட்டு விழும்! தூக்கிப் போட்டுவிடுவான் அந்த ஏமாளி!  அடுத்து நிற்கும் நாங்கள், அர்ஜெண்டினாவின் மரடோனா கோள் போட்டவுடன் தட்டுவது போல் கை தட்டுவோம்!

பூம்பூம் மாடு:

முறுக்கு மீசை, தலைப்பாகையுடன், ஒரு மாட்டை பல நிறத் துணிகளால் அலங்கரித்து, அதன் கொம்பிலும் முகத்திலும் பல வண்ணப் பூச்சுகளைப் பூசி, தன் தோளில் ஒரு மத்தளத்தையும் மாட்டிக்கொண்டு, அதில் தன்னிடமிருக்கும் வளைந்த கம்பால் மேலும் கீழும் உரசுவான் அந்த மாட்டுக்காரன்.  அது ‘பூம்பூம்’ என்று ஒலியெழுப்பும்.  அதனால் அவனுக்கு, ‘பூம்பூம் மாட்டுக்காரன்’ என்பர்.  ‘கோயில் மாடு’ என்றும் அந்த மாட்டுக்குப் பெயருண்டு.  

“அம்மாக்கு யோகம் பொறக்குது!  ஐயாக்கு யோகம் பொறக்குது” என்று தொடங்கி, வீட்டுக்காரர் வியாபாரியா, வெளிநாட்டுப் பயணக்காரரா என்பதை, தன்னைப் பின் தொடர்ந்து கத்திக்கொண்டு வரும் சிறுவர்களை அலட்டுவது போல் கேட்டு வைத்துக்கொள்வான்.  அதன் அடிப்படையில், “சீக்கிரம் கல்யாணம் வருது.  சீக்கிரம் கடுதாசி வருது” என்றெல்லாம் அவனது ஆரூடம் அந்த வீட்டின் முன் வெளிப்படும்.  தனது ஆரூடத்தை உறுதிப்படுத்த, மாடு கட்டப்பட்டிருக்கும் கயிற்றைச் சற்று இழுப்பான்.  அது  தன் தலையை ஆட்டும்.  “பாத்தீங்களா?  மாடு ஆமாங்குது!” என்பான்.  சிலர் சில்லறை (ஒன்றைக் காசு) போடுவார்கள்; சிலர் விரட்டி விடுவார்கள்.  மாட்டுக்காரன் அந்த வீட்டுக்காரர்களைத் திட்டிக்கொண்டு போவான். அவனுடைய திட்டுக்கு பயந்த சிலர், அவன் ‘பூம்பூம்’ அடிப்பதற்கு முன்பாகவே காசை எடுத்துக் கொடுத்துப் போகச் சொல்லிவிடுவார்கள்.  துணிச்சலான சில ‘பசங்க’ மாட்டின் வாலைப் பிடித்து இழுப்பார்கள்.  “டேய்! அது கோயில் மாடுடா!” என்பான் ஒருவன்.  “மைர் மாடு.  போடா எனக்குத் தெரியும்” என்ற பதில் அந்தத் துடுக்குப் பயலிடமிருந்து வரும். மாட்டை வைத்து இப்படி ஒரு பிச்சைப் பிழைப்பு!

வயிற்றிலடித்துப் பிச்சை!

இன்னொரு பிச்சைக்காரன் வந்தான்.  அவன் பிச்சை கேட்ட விதமோ, விநோதமானது!  இடுப்பில் கட்டிய ஒரு துணி மட்டும்.  திறந்த மேல் பகுதியுடன் வருவான்.  வீட்டு வாசலுக்கு முன் நின்றுகொண்டு, “ய்யெப்ப, ய்யெப்ப” என்று பலமுறை சொல்லி ஓங்கித் தனது வயிற்றில் அடித்துப் பிச்சை கேட்பான்!  அந்தப் பரிதாபக் காட்சியைக் கண்டு தர்மம் கொடுப்பார்கள். உடலை வருத்தி, மடமைப் பிச்சை கேட்கும் முறையிது!

உருண்டு புரண்டு: 

இன்னொருவன் சற்று நேரம் நடப்பான்.  பின்னர், தெருவின் நடுவில் உருண்டு உருண்டு, “அம்மா...!  தாயே...!” என்று ஏங்குவான்.  இந்தப் பரிதாப நிலையைக் கண்டு, அவன் கையில் பிடித்திருக்கும் செம்புப் பாத்திரத்தில் செப்புக் காசுகள் வீழும்.  “தாயில்லாப் பிள்ளை” என்று தலையில் அடித்துக்கொள்வான்!  பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.

அந்தக் காலத்தில்தான் டூவீலர், த்ரீவீலர், கார்கள், லாரிகள், பஸ்கள் எல்லாம் அபூர்வமாச்சே. அப்படியே வந்தாலும், வாகணக்காரர்கள் ஒதுங்கிப்  போவார்கள்.  அவன் வீதியின் நடுவில்தான்!  இதை மக்கள் பரிதாபமாகப் பார்ப்பார்களே தவிர, யாரும் அவனை எழும்பச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு கூக்குரல் பிச்சை!

குடுகுடுப்பைக்காரன்:   

பார்க்க, ஆள் இப்போதைய ஜனாதிபதிகளின் குதிரைப் படை ராணுவப் பாதுகாப்பு வீரர்களைப்போல் இருப்பான்!  அவன் தலைப்பாகையின் முன்பகுதி, அப்படி நட்டிக்கொண்டிருக்கும்!  கையில் சிறிய மத்தளம் போன்ற குடுகுடுப்பை.  இரண்டு பக்கமும் தட்டி ஓசை எழுப்பும் தடிப்பான மணிகள் நூலினால் கட்டப்பட்டிருக்கும். வளமும் இடமும் வேகமாகத் திருப்பினால், சிறு மத்தளத்தில் அடித்து ஒலி எழுப்பும்.  இவனும் தன் ஆரூடத்தை அவிழ்த்து விடுவான்.

“யோகம் பொறக்குது!  யோகம் பொறக்குது!  இந்த ஊட்டுக்காரங்களுக்கு யோகம் பொறக்குது!  வீட்லே பொதையல் கெடக்குது!  பதிமூணு வர்ஷம் போனா பூதங்காத்து, எடது பக்க மூலைலே மூடிக் கெடக்குது!  அம்மாடே ஆறாவது புள்ளக்கிக் கெடைக்கும்!” என்பது போன்றெல்லாம், புத்தியை அடகு வைத்தவர்களிடம் புதையல் ஆசையைக் கிளப்பிவிடுவான் இவன்.  சிலபோது அந்த வீட்டுக்கார அம்மா பல ஆண்டுகளாக மலடியாகக்கூட இருப்பாள்!  ‘இனி ஆறு பிள்ளைகள் எப்படிப் பிறக்கும்?’  சிந்திக்க அறிவிருக்காது!  இவனுக்கும் காசு விழும்.

பாம்பாட்டி: 

தோளில் தொங்கும் நீளமான பைக்குள் வட்ட வடிவில் ஓலையால் வேயப்பட்டு மூடப்பட்ட ஒரு பெட்டி.  அதற்குள் சின்னச் சின்ன பாம்புகள்! அந்தக் காலத்தில், காம்பவுண்ட் சுவர்களுக்கு பதிலாகப் பெரும்பாலும் வேலிகள்தான் வீடுகளைச் சுற்றிலும், அல்லது ஒரு பக்கத்தில் அடைக்கப்பட்டிருக்கும்.  பற்கள் பிடுங்கப்பட்டுப் பாஷாணம் (விஷம்) நீக்கப் பட்ட பாம்புகளுள் ஒன்றை, யாரும் பார்க்காத நேரத்தில் எடுத்து வேலிக்குள் விட்டு விடுவான் அந்தப் பாம்பாட்டி!  அவனிடம் பாம்புகளை மயங்கி ஆட வைத்து இசை எழுப்பும் ஓர் ஊதுகுழல் உண்டு.  அது இரு பக்கங்களிலும் சிறுத்து நீண்டும், நடுவில் உருண்டையாகவும் இருக்கும்.  அதன் ஒரு பக்கம் வாய் வைத்து விதவிதமாக ஊதுவான்.  அது எழுப்பும் ஓசையில் மயங்கிப் பாம்பு ஆடும்!  

தன் இசையைச சற்று நிறுத்திவிட்டு, “அம்மா!  இந்த வேலிக்குள்ளே ஒரு பாம்பு இருக்குது.  அதெப் பிடிச்சுத் தாறேன்” என்பான் அவன்.  அந்த warning வீட்டாருக்கு அச்சத்தைக் கிளப்ப, அந்த வீட்டுக் கிழடுகள், “அட நல்லாயிருப்பா!  நீ அதெப் பிடிச்சிட்டாப் போதும்.  எங்களுக்குத் தரவேணாம். நீனே வச்சுக்கோ!  இந்தா ஒர்ருவா” என்று நீட்டும்.  வீட்டின் குறுக்கும் நெடுக்கும் நோக்கிவிட்டு, பெரிதாயிருந்தால், இருவருக்கும் bargaining நடக்கும். பெரும்பாலும் அவன் கேட்டதே கொடுக்கப்படும்.  ‘பாம்பென்றால், படையும் நடுங்கும்’ அல்லவா?

அதையடுத்து ‘ரீங்காரம்’ தொடங்கி, பாம்பொன்று வேலியிலிருந்து வெளிப்பட்டுத் தலை விரித்தாடும்!  வீட்டுப் ‘பசங்க’ வேடிக்கை பார்ப்பார்கள், அச்சத்தோடு!  பாம்பாட்டி, தனது வட்டப் பெட்டியின் மூடியைத் திறப்பான். உடன் அந்தப் பாம்பு உள்ளே சென்று அடங்கிவிடும்!  வீட்டார் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்!

இன்னும் சிலர் பாம்பாட்டும் வித்தையைத் தெருக்களின் நடுவில் வைத்துச் சின்னப் பிள்ளைகள் சூழ, வேடிக்கை காட்டுவார்கள்.  நடுவில் துண்டு விரித்துவிட்டுப் பாம்பைப் பிடித்துக்கொண்டு சுற்றி வருவான் பாம்பாட்டி.  நடுங்கிய மக்கள் நடுவில் விரித்த துணியில் காசை வீசிவிடுவர்.  இப்படியும் ஒரு பிழைப்பு!

“ஈயம் பித்தாலக்கிப் பேர்ச்சம் பலம்!”    

இப்படி ஒரு கூப்பாடு!  வீடுகளில் பல உலோகப் பாத்திரங்களும் பண்டங்களும் புழக்கத்தில் 

இருக்கும்.  அவை நைந்து போனால், அல்லது உடைந்து போய்விட்டால், அல்லது துருப் பிடித்துப் பழையவையாகிப் போய்விட்டால், அவற்றை வாங்கிக் கொள்ள சைக்கிள் வண்டிக்காரர்கள் வருவார்கள் மேற்காணும் கூப்பாட்டோடு. பேரீத்தம் பழம் இவர்களுக்கு அந்தக் காலத்தில் எங்கிருந்து கிடைத்தது? ‘அதுதான் ஈக்கிதே ராஜஸ்தான் பேரீச்சம் பழம்.  வேறென்ன, ஹாஜிகளா கொடுக்கப் போறாங்க?  நல்லா ஈக்கிது போங்க’ என்கிறார் ‘ஊர் சுற்றி உதுமாங்கனி.’

பழையன கழிதலும் புதியன புகுதலும்
                                வழுவல கால வகையி னானே”

என்ற தமிழிலக்கண நன்னூல் சூத்திரத்திற்கு உருக் கொடுப்பார்கள் வீட்டார்.

இதில் வருந்தத் தக்கது என்னவென்றால், வளைந்த, உடைந்த, பழையதாகிப் போன பண்டபாத்திரங்களைக் கொடுக்கும் அதே வேளை, விலை மதிப்பற்ற பழைய காலத்துச் செப்பேடுகளும் தாமிரப் பட்டயங்களும் சைக்கில்காரனின் கைக்கு மாறும்!  முடிவில், அக்காலத்துப் பணம் பல்லாயிரங்களுக்கு அருங்காட்சியகங்களுக்குக் கை மாறும் அந்த அரும்பொருள்கள்!  வீட்டாருக்குக் கிடைப்பதோ, ஓர் அரைக் கிலோ உலர்ந்த பேரீத்தம் பழம்!

இதன் தொடர் இன்றும் நடைபெறுகின்றது, வேறு விதத்தில்.  “எரும்பு வாளி (இரும்பு வாளியைத்தான்), பிளாஸ்டிக் வாளி, பழைய சைக்கிள், பழைய இரும்பு, பழைய நோட்டுகள், புஸ்தகங்கள், பழைய பேப்பர், பிளாஸ்டிக் ச்சேர், எலக்ட்றி சாமான்கள்” என்று இப்படிக் கூவிக்கொண்டு வந்து, அள்ளிச் செல்கிறார்கள் இன்றைய சைக்கிள்காரர்கள்.  பழைய சாமான்களின் மொத்த வியாபாரிகள் அவற்றை வாங்கித் தரம் பிரித்து மூட்டை கட்டி, லாரிகளில் ஏற்றிப் பெரும்பெரும் தொழிற்சாலைகளுக்குப் பல லட்சங்களுக்கு விற்கிறார்கள்!  இது ஒரு lucrative பிசினஸ் ஆக நம் நாட்டின் பல பாகங்களில் நடைபெறுவதை நாம் தினமும் பார்க்க முடிகின்றது.  இதிலும் சில இழப்புகள்! சில வீடுகளில் பல அரிய இஸ்லாமிய இலக்கிய நூல்களும் பழைய மார்க்க நூல்களும் ‘கடலைக்காரனுக்கு’ அள்ளிக் கொடுக்கப்படும் அவல நிலை! ‘பழசைக் கொடுத்தாலும், பார்த்துக் கொடுக்கணும்’ என்ற அறிவில்லை நம் மக்களுக்கு! என்ன செய்ய?!

அதிரை அஹ்மத்

22 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.சாச்சா,அருமை ! விசிலடிக்கனும்போல தோனுது! படிச்சிக்கிட்டு வரும் போது ஒருவித புன்னகை ஏற்பட்டாளும். நாம் இவ்வளவு பொக்கிசங்களை நம்மை அறியாமல் விலைமதிப்பற்ற பொருளை இழந்திருக்கிறோம் என்கிற வலி'ஏற்பட்டது. நம்மின் அறியாமை!இப்ப தோனினது. பழய அருவா,கத்திக்கு சானம் தீட்டுறது விட்டுடிங்க! இது போல் நிறைய இருக்கலாம்!இந்த நினைவுதான் உடனே வந்தது.( நினைவுகளை கூர்மையாக்கிவைக்க அப்பப்ப சானம் தீட்டனும் நு தோனுது)

sheikdawoodmohamedfarook said...

பாம்பாட்டியின் ஊது குழல் கருவிக்கு பெயர் மகுடி.

sheikdawoodmohamedfarook said...

சுவையானபதிவு.இன்னும்எத்தனையோ அரிய பொருள்கள்எல்லாம் நம்மைவிட்டுகடந்துவிட்டது அல்லது கடத்திவிட்டோம். அஞ்சரைபெட்டி/அடுக்குபானை/பாக்கு வெட்டி/பாக்குஉரல்/பல்லாங்குழி/ பளிங்கு ரவை/ஊதாங்குசல்/உறி/உரல்உலக்கை/பம்பாய்மிட்டாய்/பிரிமனை/மண்னடுப்பு/தேக்குமரத்தில் தூன்வைத்தவீடுகள்/பலகை யால்செய்தமரவை/ இன்னும்பலபல.

Muhammad abubacker ( LMS ) said...

மாமூ சாரி அப்பா நல்லா இருக்குங்கோ! நல்லா இருக்குங்கோ! பழைய கூக் குரல்.

சில புத்தி கெட்ட ஜென்மங்கள் அல்லாஹ்வுடைய கலாம்.கிழிந்து போன குரானை கூட கூளம் குப்பையில் போடுதுங்க.

Shameed said...

(கூக்)குரல்கலில் மெஜாரிட்டி குறவன் குறத்திகள் தான்

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

“ஈயம் பித்தாலக்கிப் பேர்ச்சம் பலம்!”? ஈயம் பித்தாலக்கிப் பேர்ச்சம் பழம்?

Ebrahim Ansari said...

ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம் விற்பவர்கள் வராமல் இருந்து இருக்கலாம்.

அண்மையில் தமிழக அரசு இலவச மிக்சி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் ஆகியவற்றை வழங்கிய போது ஊரெங்கும் கேட்டது

" ஓட்டை உடைசலுக்கு பேரிச்சம் பழம் "

நல்ல வியாபாரம் என்று கேள்வி.

Ebrahim Ansari said...

//(அண்மைய நாட்களாக ரொம்ப tough ஆன subject களாகவும், வாக்கு வாதங்களாகவும் ‘அதிரைநிருபர் தளத்தில் இடம் பெற்றுவிட்டதால், கொஞ்சம் relax ஆக இந்தப் பதிவு.)//

Tough ? Subject or individual?

ZAKIR HUSSAIN said...

உங்கள் பதிவு படிக்கும்போது என்னைச்சுற்றி பிளாக் & ஓயிட் காலத்தில் படிப்பதை போன்றே உணர்ந்தேன். கடும் வெயிலில் நடந்து வந்தபோது ரோட்டோர புளியமரத்து நிழலில் குளிரான மோர் குடித்தது போன்ற உணர்வு.

ZAKIR HUSSAIN said...

//அரிய பொருள்கள்எல்லாம் நம்மைவிட்டுகடந்துவிட்டது அல்லது கடத்திவிட்டோம். அஞ்சரைபெட்டி/அடுக்குபானை/பாக்கு வெட்டி/பாக்குஉரல்/பல்லாங்குழி/ பளிங்கு ரவை/ஊதாங்குசல்/உறி/....//


அதோடு சேர்ந்து நல்ல மனிதர்களையும் நாம் தொலைத்துவிட்டோம். முன்பெல்லாம் இருந்த கணிவு/மரியாதை எல்லாம் இப்போது வெகுவாக மாறிப்போய்விட்டது. பணத்தை துறத்தி பண்புகளை தவற விட்டு விட்டோம்.

ZAKIR HUSSAIN said...

கருணையுடன் உதவி செய்பவர்களுக்கு
இன்றைய பெயர் = இளிச்சவாயன்

தர்மம் செய்பவர்கள் = வாழ்க்கையில் ப்லேனிங் இல்லாதவன்.

தானாக இழுத்துப்போட்டுக்கொண்டு
சொந்தங்களை பார்ப்பவன் = வேலை வெட்டியில்லாதவன்.

ZAKIR HUSSAIN said...

இந்த விமர்சனங்களை நாம் இன்னும் மனதில் வைத்துக்கொண்டு நகராமல் இருந்தால் நாம்தான் பைத்தியக்காரன்.....போடா வெண்ணெனு போய்கிட்டேஇருக்கனும்.

sabeer.abushahruk said...

//பார்க்க, ஆள் இப்போதைய ஜனாதிபதிகளின் குதிரைப் படை ராணுவப் பாதுகாப்பு வீரர்களைப்போல் இருப்பான்! //

ஹஹா...செம உவமானம்.

பதிவைப் படித்ததும் வேலையிலிருந்து வந்தபோதான ஸ்ட்ரெஸ் குறைந்துபோனது உண்மை.

sheikdawoodmohamedfarook said...

china[clay]யில்செய்த சகன்,தட்டைபீங்கன்.படிக்கான்.மங்குகாணா போச்சு/பினாங்கிலிருந்து தட்டைபீங்கான்,கோஸ்கோப்பை மங்கு கட்டிவந்த பெரம்புவக்குள் கானாபோச்சு.அத்தோடுகூட மெத்தைபாய்.பின்னாடி குஞ்சம் வச்சதுருக்கி தொப்பி, மிதிறிகட்டைபோச்சு.கஞ்சிபோட்ட பிண்ணால்தொப்பி கண்டதுண்டா?

sheikdawoodmohamedfarook said...

பதனி, மோர் அண்ணாத்தி குடித்த மூக்கு குவளையை காணோம்/பனைஓலையில் எறச்சி கட்டிகொடுத்த காலம் எங்கேபோச்சு? மாடுகட்டி பால்கறந்த வீடுஎங்கேபோச்சு? அழுக்குதுணிகளை துவைதுக்கொடுத்த வண்ணார பிள்ளையும் அவர்பொதிசுமந்த கழுதையும் எங்கே? ஒ! மாமியோ அம்மிபொளியிரியா? அம்மிபொளியிரியா?என்று கூவிகூவி கேட்டநரிகுறத்திஎங்கே?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இல்லாமல் போன இனிமைப்பதிவு!

Unknown said...

அருமையான பதிவு. பழைய நினைவுகள் மீண்டும் திரும்பாதோ என ஏங்குகிறது மனசு.
இதுபோல் இன்னும் பழைய நிகழ்வுகளை நானும் பகிரலாமா?
வழி சொல்லுங்கள்.

Unknown said...

அருமையான பதிவு. பழைய நினைவுகள் மீண்டும் திரும்பாதோ என ஏங்குகிறது மனசு.
இதுபோல் இன்னும் பழைய நிகழ்வுகளை நானும் பகிரலாமா?
வழி சொல்லுங்கள்.

sabeer.abushahruk said...

//இதுபோல் இன்னும் பழைய நிகழ்வுகளை நானும் பகிரலாமா?
வழி சொல்லுங்கள்//

கண்டிப்பாக!

எழுதி

editor@adirainirubar.blogspot.comக்கு அனுப்புங்கள்

Unknown said...

Zakir Hussain said:

//அதோடு சேர்ந்து நல்ல மனிதர்களையும் நாம் தொலைத்துவிட்டோம்.//

'அதிரை வரலாறு' தளத்தில் நான் எழுதிய 'அதிரை வரலாற்றில் நான் கண்ட நல்லவர்கள்' என்ற கட்டுரையை மீள்பார்வை செய்க.

Unknown said...

Zakir Hussain said:

//அதோடு சேர்ந்து நல்ல மனிதர்களையும் நாம் தொலைத்துவிட்டோம்.//

'அதிரை வரலாறு' தளத்தில் நான் எழுதிய 'அதிரை வரலாற்றில் நான் கண்ட நல்லவர்கள்' என்ற கட்டுரையை மீள்பார்வை செய்க.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு