Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வித்தியாசமான வணிகர் - 07 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 10, 2016 | ,

மதீனாவில் இமாம் அபூஹனீஃபாவுக்கும் அல்பாகிருக்கும் இடையே நிகழ்ந்த முதல் சந்திப்பை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அவர்கள் இருவருக்கும் இடையே மற்றொரு சுவையான உரையாடலும் நிகழ்ந்துள்ளது. அபூஹனீஃபாவிடம், ‘ஈராக்கைச் சேர்ந்த சகோதரரே! எம்முடன் நீர் அமர வேண்டாம்’ என்றார் அல்பாகிர். ஆனால் அபூஹனீஃபாவோ

அவருடன் அமர்ந்தார். பிறகு அல்பாகிரிடம், “அல்லாஹ் தங்களை நேர்வழியில் நிலைநிறுத்தட்டும். அபூபக்கர் (ரலி),  உமர் (ரலி) பற்றித் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?”என்று கேட்டார்.

ஷிஆ பிரிவினரின் குழப்பம் அதிகரித்திருந்த காலம் அது. அலீ (ரலி) குடும்பத்தினர் தங்களின் கொள்கையைச் சார்ந்தவர்களாக ஷிஆக்கள் சித்தரித்துக் கொண்டிருந்தனர். இது ஈராக் முஸ்லிம்களிடையே குழப்பத்தைத் தோற்றுவித்திருந்தது. எனவே, எதற்கு அங்கு இங்கு என்று கேட்டுக்கொண்டு? நேரடியாகத் தொடர்புடையவரிடமே கேட்டால் போச்சு என்று வந்து அமைந்த வாய்ப்பில் இமாம் அல்-பாகிரிடம் அதைக் கேட்டுவிட்டார் அபூஹனீஃபா.

‘அல்லாஹ் அவர்கள் இருவர் மீதும் கருணை புரிவானாக’ என்று பதில் அளித்தார் அல்-பாகிர். சகட்டுமேனிக்கு நபித்தோழர்களை வசைபாடிக்கொண்டும் சாபமிட்டுக் கொண்டும் திரியும் ஷிஆக்களுக்கு நேரிதிராக அமைந்த அந்தப் பதிலில் தம் நிலையைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்திவிட்டார் அவர்.

‘தாங்கள் அவர்கள் இருவரையும் ஒப்புக்கொள்ள மறுப்பதாக ஈராக்கில் பேசிக் கொள்கிறார்களே?’

அல்-பாகிர் வியப்புடன், ‘நான் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறேன். அவர்கள் பொய்யுரைக்கிறார்கள். கஅபாவின் அதிபதியின்மீது ஆணையாக! அலீ தம்முடைய மகள் உம்மு குல்தூம் பின்த் ஃபாத்திமாவை, உமர் இப்னுல் கத்தாபுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்ததை நீர் அறிவீரல்லவா? அவர் யாரென்பதை நீர் அறியாதவரா?’

‘அவருடைய பாட்டி அன்னை கதீஜா, சுவனத்தின் மங்கை. அவருடைய பாட்டனார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). அவருடைய அன்னை ஃபாத்திமா சொர்க்கத்தின் தலைவி. அவருடைய சகோதரர்கள் அல்-ஹஸன், அல்-ஹுஸைன், சொர்க்கத்திற்குரிய இளைஞர்களுள் தலையாயவர்கள். அவருடைய தந்தை அலீ இப்னு அபீதாலிப் இஸ்லாத்தின் பெருமைக்குரியவர்களுள் முதன்மையானவர். இத்துணை பெருமை வாய்ந்த உம்மு குல்தூமுக்கு உமர் பொருத்தமற்றவராக இருந்திருப்பின் அலீ தம் மகளை அவருக்கு மணமுடித்துக் கொடுத்திருக்க மாட்டார்.’

இது ஒன்று போதாது ஷிஆக்களின் பொய்யை நசுக்க? இமாம் அல்-பாகிர் இதை ஈராக்கின் மக்களுக்குத் தெரிவித்துவிட்டால் குழப்பத்திற்குப் பெரும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில், ‘தாங்கள் இதை தங்கள் கைப்பட எழுதி, அவர்களுக்கு மறுப்புத் தெரிவித்து’ என்று பேசத் தொடங்கிய இமாம் அபூஹனீஃபாவை இடைமறித்தார் அல்-பாகிர். ‘எழுதித் தெரிவிப்பதற்கெல்லாம் தகுதியற்றவர்கள் அவர்கள். நான் உம்மை எம்முடன் அமர வேண்டாம் என்று சொன்னேன். அந்தச் சிறு விஷயத்தையே நீர் ஏற்கவில்லை. எனும்போது, உம்முடைய நாட்டைச் சார்ந்த அவர்களிடம் என்னுடைய கடிதம் எப்படி செல்லுபடியாகும்?’ என்றார் அல்-பாகிர்.

அலீ (ரலி) அவர்களின் வழித்தோன்றல்களிடம் நேரடியாகப் பேசியதால் கிடைத்த தெளிவினாலும் நபியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும் அவர்கள்மீது இமாம் அபூஹனீஃபாவுக்கு இயல்பான நல்லெண்ணமும் அன்பும் ஏற்பட்டிருந்தன. அதனால், பின் வந்த காலத்தில் உமய்யாக்களின் ஆட்சிக்கு எதிராக ஸைது இப்னு அலீ போராடியபோது அவரை ஆதரித்து இமாம் அபூஹனீஃபா பல கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவையெல்லாம், இமாம் அபூஹனீஃபா ஷிஆக் கொள்கையைச் சார்ந்தவர் என்ற கருத்தை உருவாக்கி, அது மக்காவிலும் மதீனாவிலும் பரவியிருந்தது.

ஆனால், நபியவர்களின் குடும்பத்தினரை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் ஷிஆக்களிடம் இருந்த குருட்டு மனப்போக்கு அவரிடம் இருந்ததில்லை. நபித்தோழர்களை நிராகரித்து, சாபமிட்டு, இறைவனின் சாபத்திற்கு அவர்கள் ஆளானதைப் போன்ற அவலத்திற்கும் அவர் ஆட்பட்டதில்லை. மாறாக, முதல் நான்கு கலீஃபாக்களையும் அவர்களது அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்டு அதில் தெளிவான கருத்தும் கொண்டிருந்தார் இமாம் அபூஹனீஃபா.

மக்காவில் அதா இப்னு அபீரபாஹ் எனும் மார்க்க அறிஞரைச் சந்திக்கும் வாய்ப்பு இமாம் அபூஹனீஃபாவுக்கு அமைந்தது. ‘நீர் யார்?’ என்று அதா அவரை விசாரித்தார். ‘கூஃபா நகரைச் சார்ந்தவன்’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார் அபூஹனீஃபா. கூஃபா என்றதுமே, ‘மார்க்கத்தைப் பல குழுக்களாகக் கூறுபோட்டிருக்கிறார்களே அந்த மக்கள் வசிக்கும் ஊரைச் சேர்ந்தவரா?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் அதா இப்னு அபீரபாஹ். அந்த அளவுக்குப் புகழ்பெற்றிருந்தது கூஃபா.

‘ஆம்.’

‘நீர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்?’

‘நான் ஸலஃபுகளைச் சாபமிடாதவன். கதரிய்யாக்களின் கோட்பாடுகளைக் கொண்டிராதவன். தவறான ஒரு செய்கையால் மனிதன் இறை நிராகரிப்பாளன் ஆகிவிடுவான் என்பதை நம்பாதவர்களுள் ஒருவன்.’ இவ்வாறு, தாம் குழப்பவாதிகளின் எந்தக் குழுவையும் சாராதவன் என்று அழகாக, தெளிவாகச் சொன்னார் அபூஹனீஃபா. அதன் பிறகுதான் அதா அவரைத் தம்முடன் இணைத்துக் கொண்டார்.

மார்க்கக் கல்விக்குள் புகுந்தவரைப் பின் தொடர்ந்து கொண்டே வந்ததில் அவரின் அந்தப் பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்து விட்டோம். தொழில்ரீதியாக அவர் வர்த்தகரல்லவா? அது என்னாயிற்று என்று சந்தைப் பகுதிக்குள் சற்று நுழைந்து விட்டு வருவோம்.

அபூஹனீஃபாவின் தந்தையும் பாட்டனாரும் பட்டுத்துணி தொழில் புரிந்த வர்த்தகர்கள். அதில் அவர்கள் சிறப்புடன் திகழ்ந்தனர். அபூஹனீஃபாவும் தமது குடும்பத் தொழிலையே தொடர்ந்தார். பின்னர் மார்க்கக் கல்வியின் பக்கம் கவனம் திரும்பி அவரது உழைப்பும் நேரமும் கல்வி ஞானத்தைப் பெறுவதிலும் ஹதீஸ்களிலும் ஃபிக்ஹ் பாடங்களைப் பயிற்றுவிப்பதிலும் செலவிடப்பட்டாலும், இறுதிவரை அவர் தமது வாழ்வாதாரத்திற்கான தொழிலையும் விட்டுவிடாமல் தொடர்ந்திருக்கிறார். இரண்டுமே நேரத்தைப் பெருமளவு கோரும் விஷயங்களல்லவா? மார்க்கக் கல்வியிலும் அது சார்ந்த விஷயங்களிலும் அபூஹனீஃபா நேரம் செலவிட நேரும்போது வர்த்தகம் என்ன ஆவது? நம்பகமான தொழில் கூட்டாளி ஒருவர் அவருடன் இருந்திருக்கிறார்.

பிரச்சினை ஒன்றுமில்லை; நீங்கள் போய் கல்விப் பணியைக் கவனித்துவிட்டு வாருங்கள்; நான் வணிகத்தைப் பார்த்துக் கொள்கிறேன் என்பதுபோல் அவர் இமாம் அபூஹனீஃபாவுக்குப் பெரும் உதவி புரிந்திருக்கிறார். இது அவருக்குப் பேருதவியாய் அமைந்தது.

வர்த்தகராய் அபூஹனீஃபாவை அணுகும்போது அவரிடம் அமைந்திருந்த நான்கு சிறப்பான பண்புகளை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். வர்த்தகர்களிடம் இயல்பாய் அமைந்திருக்குமே பேராசை, அது அவரிடம் அறவே இருக்கவில்லை. எந்த அளவுக்கென்றால் சந்தேகத்திற்குரிய வகையில் அமையும் ஆதாயங்களிலிருந்துகூட அவர் விலகியிருந்திருக்கிறார். நேர்மையான வணிகமும் இறைவழிபாட்டின் ஓர் அம்சம் என்பது அவரது கருத்து.

தமது பரிவர்த்தனைகளில் மிகவும் நம்பிக்கையானவராகத் திகழ்ந்திருக்கிறார். இரக்கமும் தயாள குணமும் ஏராளம். ஆழ்ந்த இறையச்சம் இருந்ததால் கடமையான தொழுகை, நோன்பு மட்டுமின்றி, உபரி நோன்புகளால் பகலும் அதிகமான தொழுகைகளால் இரவும் அவருக்குக் கழியும். அவையெல்லாம் அவரை மற்ற வர்த்தகர்களிடமிருந்து அப்படியே வேறுபடுத்தி, மக்கள் அவரை அபூபக்கருடன் (ரலி) ஒப்பிட்டுச் சிலாகிக்கும் அளவுக்கு இருந்தன.

சரக்கில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அபூஹனீஃபா அதைத் தெளிவாகத் தெரிவித்துவிடுவார். மக்களைக் கவர்ந்திழுத்து ஏமாற்றும் வகையில் அலங்காரமான, அழகிய பொருள்களை மேலே அடுக்கி வைத்துவிட்டு தரம் குறைவானதை மறைக்கும் தந்திரமெல்லாம் அவர் புரிந்ததில்லை. அனைத்துப் பொருள்களுடனும் அவையும் சாதாரணமாகக் கலந்திருக்கும். விற்பனையில் மட்டும் நாணயம் என்றில்லை. சரக்கைக் கொள்முதல் செய்வதிலும் அதேதான். எப்படி?

ஒரு பெண்மணி பட்டுத் துணி ஒன்றை விற்பதற்காக இமாம் அபூஹனீஃபாவிடம் வந்தார். விலை நூறு திர்ஹம் என்றார். ‘அந்த விலைக்கெல்லாம் இதை வாங்க முடியாது; இதன் மதிப்பு அதைவிட அதிகம்’ என்றார் அபூஹனீஃபா.

‘சரி உங்கள் விருப்பம். அதிகம் போட்டுத் தாருங்கள்’ என்று சற்று விலையை உயர்த்தினார் அப்பெண்மணி.

‘ம்ஹும். இது அதைவிட விலை அதிகம்.’

அந்தப் பெண் மேலும் சற்று விலையை உயர்த்த, அதுவும் குறைவே என்றார் அபூஹனீஃபா. அவரும் விலையை உயர்த்திக்கொண்டே வர, அபூஹனீஃபாவும் மறுத்துக்கொண்டே இருந்தார்.

இறுதியில், ‘சரி நானூறு திர்ஹம்’ என்றாள் அவள். அதுவும்கூட குறைவான விலைதான் என்றார் அபூஹனீஃபா. நூறுக்கு விற்க வந்ததை நானூறுக்கு உயர்த்தியும் அவர் வாங்க மறுக்கிறார் என்றதும் அப்பெண்மணிக்குச் சந்தேகம் வந்துவிட்டது.

‘என்னைப் பரிகாசம் செய்கின்றீர்களா?’

அது அவரது நோக்கமில்லையே. அதனால், ‘இந்தத் துணியின் தரத்தைப் பற்றி நன்கு அறிந்த அனுபவமுள்ள ஒருவரை அழைத்து விலையைக் கேட்போம்’ என்று பரிந்துரைத்தார் அபூஹனீஃபா. ஏற்றுக்கொண்டார் அப்பெண்மணி. வந்த மனிதர், அத்துணியின் மதிப்பு ஐநூறு திர்ஹம் என்று தெரிவிக்க ‘இந்தாம்மா ஐநூறு’ என்று கொடுத்து அதை வாங்கினார் அபூஹனீஃபா.

சரக்கு கொள்முதல் இப்படி என்றால், விற்பனை நிகழ்வொன்று மற்றொரு வியப்பு. ஒரு மூதாட்டி அவரிடம், ‘நான் வயதானவள், ஏழை. என்னிடம் நேர்மையாக நடந்துகொள்ளவும். இந்த ஆடைக்கு அதிகம் விலை வைக்காமல் எனக்குத் தாருங்கள்’ என்று ஓர் ஆடையை விலைக்குக் கேட்டார். தம்முடைய ஏழ்மை நிலையை உணர்ந்து அவர் குறைந்த இலாபத்திற்கு அதை விற்க வேண்டும் என்பது அவளது கோரிக்கை.

‘அப்படியா! நான்கு திர்ஹத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் இமாம் அபூஹனீஃபா.

வெகு நிச்சயமாக அதிகமான விலையுள்ள அந்த ஆடைக்கு மிக, மிகச் சல்லிசான ஒரு விலையை அவர் தெரிவிப்பதைக் கேட்டு, நம்பமுடியாமல் அந்த மூதாட்டிக்குக் கோபம் வந்து விட்டது.

‘என்ன நான் வயதானவள் என்பதால் பரிகாசமா?’

அதற்கு அபூஹனீஃபா, ‘நான் இதைப்போன்ற இரண்டு ஆடைகளை வாங்கினேன். இரண்டையும் என்ன விலை கொடுத்து வாங்கினேனோ அதைவிட நான்கு திர்ஹம் குறைவாய் முதலாவது ஆடையை விற்றுவிட்டேன். இப்பொழுது இதை நீங்கள் நான்கு திர்ஹத்திற்கு வாங்கிக்கொண்டால், இவற்றுக்கென நான் போட்ட முதல் கிடைத்துவிடும்.’ நஷ்டமும் இல்லை; இலாபமும் இல்லை. போட்ட முதலுக்கும் மோசமில்லை. மூதாட்டிக்கும் முழு அளவிலான உதவி என்று நடைபெற்றது அந்த விந்தை வர்த்தகம்.

ஒருமுறை அபூஹனீஃபாவின் நண்பர் ஒருவர் அவரிடம் வந்து ஒரு குறிப்பிட்ட வகையான பட்டுத் துணியை ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் வேண்டுமென்று கேட்டார். அத்தகைய துணி அவரிடம் அப்பொழுது கையிருப்பில் இல்லை. எனவே, ‘பொறுமை காக்கவும். உமக்காக நான் அதை வரவழைத்துத் தருகிறேன் – இன்ஷா அல்லாஹ்’ என்றார் அபூஹனீஃபா.

ஒரு வாரம் கழிந்திருக்கும். நண்பர் குறிப்பிட்டுக் கேட்ட துணி வந்தது. அதை நண்பரிடம் எடுத்துச் சென்று, ‘நீர் கேட்டது வந்துவிட்டது’ என்று அளித்தார்.

‘என்ன விலை?’

‘ஒரு திர்ஹம்.’

‘என்ன பரிகாசமா?’

‘நான் உன்னிடம் பரிகாசம் புரியவில்லை. இரண்டு துணிகளை இருபது தீனார் ஒரு திர்ஹத்திற்கு நான் வாங்கினேன். அதில் ஒன்றை இருபது தீனாருக்கு விற்றுவிட்டேன். மீதமுள்ள இந்தத் துணி 1 திர்ஹம்’ என்று அந்த நண்பரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

தம்முடைய தொழில் கூட்டாளி ஹஃப்ஸ் இப்னு அப்துர் ரஹ்மானிடம் சில சரக்குகளை விற்பதற்கு அளித்து, ஓர் ஆடையில் சேதம் உள்ளது; வாங்குபவர்களிடம் அதைத் தெளிவாகச் சொல்லி விடவும் என்று கூறி அனுப்பியிருந்தார். ஹஃப்ஸ் தம்முடைய கவனக் குறைவால் அந்தக் குறையை எடுத்துரைக்காமல் அனைத்துச் சரக்கையும் விற்றுவிட்டார். அபூஹனீஃபாவுக்கு அவ்விஷயம் தெரிய வந்தது. சற்றும் யோசிக்கவில்லை அந்த விற்பனையில் கிடைத்த அனைத்துப் பணத்தையும் அப்படியே அள்ளி தானமாக அளித்துவிட்டார்.

தம் வர்த்தகத்தில் கிடைக்கும் இலாபத்தில் ஆசிரியர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் அவர்களது தேவைகளுக்காக  உணவு, உடை எனச் செலவிடுவதும் அவரது இயல்பு. மீதமாகும் தீனார்களையும் அவர்களிடமே அளித்து, ‘உங்களுக்கு வேறு என்ன தேவையோ வாங்கிக் கொள்ளுங்கள். நன்றியை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிவியுங்கள். நானாக உங்களுக்கு எதையும் அளிக்கவில்லை. அவை உங்களுக்கான அல்லாஹ்வின் அருளே’ என்று சொல்லிவிடுவார்.

இமாம் அபூஹனீஃபாவுக்கு அகம் போலவே புறத்தோற்றமும் அழகு. சிறந்த உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வதும் நறுமணம் பூசிக்கொள்வதும் அவர் வழக்கம். தம்முடைய காலணியின் வாரையும்கூடக் கவனமாகப் பார்த்துக்கொள்வார். அறுந்த வாருடன் கூடிய காலணியில் தாம் தோற்றமளிப்பதை அவர் விரும்பியதில்லை. அந்த அளவிற்குத் தம்மைப் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்பவர் அதே அக்கறையைப் பிறர்மீதும் காட்டியதுதான் சிறப்பு.

ஒருமுறை அவருடைய குழுமத்தில் அவர் நண்பரொருவர் நைந்த ஆடையை உடுத்தி அமர்ந்திருப்பதைக் கவனித்தார் இமாம் அபூஹனீஃபா. அன்றைய நிகழ்வு முடிந்து அனைவரும் கலைந்து செல்லும்போது அவரை மட்டும் அழைத்து, ‘அந்தத் தொழுகை விரிப்பைத் தூக்கி அதன் அடியில் இருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார்.

அவர் அதைத் தூக்கிப் பார்க்க, அங்கு ஆயிரம் திர்ஹம்.

‘அதை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான ஆடைகளை வாங்கிக் கொள்ளுங்கள்!’

‘நான் போதிய வசதி படைத்தவன். எனக்கு இது தேவையில்லை’ என்றார் நண்பர்.

அதற்கு இமாம் அபூஹனீஃபா, ‘தன்னுடைய அடியானுக்கு அளித்திருக்கும் அருளின் தடயம் அந்த அடியானின் தோற்றத்தில் வெளிப்படுவதை அல்லாஹ் விரும்புகிறான்’ என்ற நபிமொழியை தாங்கள் கேள்விப்பட்டதில்லையா? எனவே உங்களது புறத் தோற்றத்தைச் சீர் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய நண்பர் உங்களால் வருத்தமடையாமல் இருக்க உதவும்’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

(தொடரும்)
நூருத்தீன்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு