Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உயிர்க் கொத்திப் பறவை 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 02, 2016 | , ,


உயிர்க் கொத்திப் பறவை
ஊர் சுற்றிப் பறந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஆயுள் முடிக்கின்ற
இதே ஊரில்தான்
என் வீடும் இருக்கிறது

எந்தத் தெரு
என்ன வரிசை
யார் வீடு முதலில்
யாதொரு முன் குறிப்புமின்றி
திடீர் திடீரென
உயிர்க் கொத்துகிறது

உழைக்கப் பெயர்ந்த
ஊரிலிருந்து
ஓய்வூதிய நாட்களை
உறவுகளோடு களிக்க
வந்திறங்கிய பின்

இழவுத் துயர் பகிர
அவ்வீடுகளின்
உள்ளே நுழைந்ததும்
ஞாபக மின்னல் வெட்ட
இடியென ஓலமிட்டு
கண்ணீர் மழை பொழியும்
சொந்தங்கள்

யாவற்றிலும் மிகைத்த
சூத்திரதாரியின்
கணிக்கவியலாத கணக்கீடுகள்
யாவும்
விதிக்கப்பட்டவையே

எவ்விதத்திலும் சாத்தியப்படாததாக
நாம் கருதும்
எல்லா சமண்பாடுகளும்
எல்லைகளற்ற
அந்தத் தொலைவில்
சமண்பட்டே முடிகின்றன

உயிர்க் கொத்தும் பறவைக்கு
கூடவே
நினைவுகளையும் பெயர்த்தெடுத்துச் செல்லும்
திராணியில்லாதது வருந்தத் தக்கதே.

கிடத்தி வைக்கப்பட்டிருந்த நடுக்கூடம்
படுக்கவைத்துக் குளிப்பாட்டிய கட்டில்
இவற்றோடு
சற்றே சிதைந்த பல் துலக்கும் குச்சி
பாதிக்குமேல் பிதுக்கப்படாத பற்பசை
நீண்ட நாட்களாகவே
உபயோகிக்கப்படாமல்
சன்னலுக்கடியில் கிடக்கும் செருப்பு
என
ஞாபகங்கள் வதைப்பது கொடுமை

உயிர் வற்றிப் போன
உடல் கொத்தி இடும்
மண்ணறைவாசிகளின்
குடியிருப்புப் பகுதியில்
காலி மனைகள்
காத்திருக்கின்றன

உயிர்க் கொத்திப் பறவையும்
ஊரைச் சுற்றிப்
பறந்து கொண்டேதான் இருக்கிறது

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உயிர் வற்றிப் போன
உடல் கொத்தி இடும்
மண்ணறைவாசிகளின்
குடியிருப்புப் பகுதியில்
காலி மனைகள்
காத்திருக்கின்றன//

மரணம் நிறையவே பாதித்து இருக்கிறது பலருக்கு... அந்த பயத்தில் இங்கே அமைதி !

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

முடிவல்ல
முடிவில்லா
பயணத்தின் ஆரம்பம்
மரணம்:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

முடிவல்ல
முடிவில்லா
பயணத்தின் ஆரம்பம்
மரணம்:

crown said...

உயிர்க் கொத்திப் பறவை
------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.பொத்திவைத்த உயிரை கொத்திப்போகும் பறவைதான் நம்மை அறியாமல் சுத்தி ,சுத்தி வருகிறது! என்று கொத்தும்? , நாம் செத்தும் நல்லபடி சுவர்கம் போகனும் ஆமீன்.மரணத்தை நினைவுறுத்தும் உயிர் தடவும் கவிதை!

crown said...

எவ்விதத்திலும் சாத்தியப்படாததாக
நாம் கருதும்
எல்லா சமண்பாடுகளும்
எல்லைகளற்ற
அந்தத் தொலைவில்
சமண்பட்டே முடிகின்றன
-----------------------------
அருமை!உயிரின் மர்ம முடிச்சு என்றும் ஒரு புள்ளியில் அவிழ்ந்தே தீரும்!

crown said...

உயிர்க் கொத்தும் பறவைக்கு
கூடவே
நினைவுகளையும் பெயர்த்தெடுத்துச் செல்லும்
திராணியில்லாதது வருந்தத் தக்கதே.
------------------------------------------
அதன் (உயிர் கொத்தியின்)எல்லை அதுவரை! அதன் கடமை அது செய்து முடிப்பதாகவே எனக்கு படுகிறது ! விட்டுச்செல்லும் நினைவுகளை எடுத்துச்செல்லும் பணி அதற்கு நியமிக்க படவில்லை படைத்தவனால் என நான் கொள்கிறேன்!

crown said...

கிடத்தி வைக்கப்பட்டிருந்த நடுக்கூடம்
படுக்கவைத்துக் குளிப்பாட்டிய கட்டில்
இவற்றோடு
சற்றே சிதைந்த பல் துலக்கும் குச்சி
பாதிக்குமேல் பிதுக்கப்படாத பற்பசை
நீண்ட நாட்களாகவே
உபயோகிக்கப்படாமல்
சன்னலுக்கடியில் கிடக்கும் செருப்பு
என
ஞாபகங்கள் வதைப்பது கொடுமை
-----------------------------------
கவலை தரும் நிவைவுகள்!சில அடையாளங்கள் பல நேரம் நம்மை பாதிப்பதாகவே இருக்கிறது!இவையாயும் தவிர்க்க முடியாத திணிப்புகள்! கசக்கும் இனிப்புகள்!

crown said...

உயிர் வற்றிப் போன
உடல் கொத்தி இடும்
மண்ணறைவாசிகளின்
குடியிருப்புப் பகுதியில்
காலி மனைகள்
காத்திருக்கின்றன

உயிர்க் கொத்திப் பறவையும்
ஊரைச் சுற்றிப்
பறந்து கொண்டேதான் இருக்கிறது
------------------------------------
சாகா வரம் பெற்ற பறவை!இந்த பறவையின் நினைவுகளை செதுக்கிய கவிஞனின் ஆற்றல் மிக்க புலமை நம்மை நன்மையை நோக்கி செலுத்தும் உந்துதல்!எப்பொழும்போல் உயிர்பான கவிதை! வாழ்க வளமுடன், நீடூழி!

Unknown said...

உயிர்க் கொத்தும் பறவைக்கு
கூடவே
நினைவுகளையும் பெயர்த்தெடுத்துச் செல்லும்
திராணியில்லாதது வருந்தத் தக்கதே.
---------------------------------
அதுதான் genetics !.............திரானி இல்லை என்பதாகாது !
திரானி இருப்பதால் தான் அசல் தொலைந்தப்பின் அச்சு !
அந்த அச்சுவின் எச்சை தான் இந்த பிரபஞ்சம் !

கவிஞரே ஏற்றுக்கொள்வீர்களா ?

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம், க்ரவ்ன்!

எதார்த்தத்தை மறந்து தலைகால் புரியாமல் ஆடும் மனிதர்களுக்கு மரணத்தை அடிக்கடி நினைவுறுத்துதல் அவசியம்தானே?

வாழ்க்கையை ஈடுபாட்டோடும் எதிர்பார்ப்புகளோடும் வாழ முற்படுவதே வாழ்வியல் தாத்பரியம் எனினும் மரணம் சாசுவதம் என்பதை மறக்கவியலாது!

வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி.

sabeer.abushahruk said...

தம்பி அப்துர்ரஹ்மான்,

ஏற்கனவே ஏற்றுக்கொண்டதுதான்; நினைவுறுத்தலுக்கு நன்றி.

மாறாக, இங்கு ஒரு சாமானியனின் ஏக்கமாகவே இந்த ஆற்றாமை புலம்புகிறது.

வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி.

sabeer.abushahruk said...

அபு இபு / அஹமது அமீன்

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு