Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோம்பு வருது.... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2016 | , ,

இஸ்லாமிய மாத வரிசையில்
ஒன்பதாம் மாதமாம் உன்னதமாய்
சங்கைமிகு ரமளானும் நம்மை
சீராட்டி இறைப்புகழ் பாராட்ட வருது

தெளிவாக வானம் தென்பட்டாலும்
தெரியாமல் போன அப்பிறையை
இலங்கை ரேடியோ கண்டெடுக்கும்

அதனால் நோன்பும் ஊரில் ஆரம்பமாகும்
முதற்பிறையை கண்டதுமே
எம் முகமலர்ச்சி பெற்றிடுமே
பெரியவர் சிறியவருக்கெல்லாம்

பெரும் மகிழ்ச்சி வந்திடுமே
பிறையைக்காணும் முன்னே
நம் வீட்டு பெண்டிரும்
ஒரு மாத தேவைகளை

அது வருமுன்னே செய்திடுவர்
வீட்டை கழுவி ஒட்டடை அடித்து
மாவிடித்து பூபோல் வறுத்தெடுத்து
வீட்டு ஆண்களின் அகம்புறம் குளிர

அனைத்தையும் செய்து வைப்பர்.
பள்ளிகளெல்லாம் வெள்ளையடித்து
தன்னழகை மெரு கூட்டி நிற்கும்
காற்றில் கரைந்து வரும் பாங்கின்ஒலி

தொழுகைக்கு நம்மை தயார் படுத்தும்
கஞ்சி கீற்று கொட்டகையிடம்
பிஞ்சு உள்ளம் கெஞ்சிக்கேட்டிடும்
இன்னும் பதினொறு மாதங்களும்

நீ பள்ளியிலேயே தங்கிடுவாயாவென.
நோன்பு கால தண்ணீர் தாகம்
வீம்பின்றி பொறுமை கொள்ளும்
பசிகளெல்லாம் பறந்து போகும்

நோன்பு திறக்கும் சமயத்தை எண்ணி.
கண்சிவக்க குளித்து வந்த குளக்கரையும்
உள்ளம் குளிர உம்மா தந்த சர்பத்தும்
பார்வையால் உண்டுமகிழும் பதார்த்தங்கள்

பசித்தலால் உருவாகும் பல ருசித்தல்கள்
பள்ளிவாசல் நஹராவோ
பகல்நேர சூரியக்குளியல் எடுக்கும்
பகலவன் மறையும் மக்ரிபில்

இடிமுழக்கமென ஊருக்கு பறைசாற்றும்
ஆங்காங்கே வாடா,சம்சா கடைகள்
திடீர் காளானாய் முளைத்து நிற்கும்
வாடாவில் புதையுண்ட இறாலை

கண் பார்வை பெயர்த்தெடுக்கும்
இராக்கால வீண் விளையாட்டு
போர்க்களம் போல் நடந்தேறும்
தேவையற்ற தெரு சண்டைகளும்

தேடாமல் தெருவுக்கு வந்து சேரும்
தலை நோன்பில் கொடுத்த சீனி சோறு
நினைக்கும்பொழுதெல்லாம் தித்திக்கும்
சில்லரையில் நிறையும் சட்டைப்பை

நிறைமாத கர்ப்பிணியாய் வழிந்திருக்கும்
முதல் நாள் ஆசையாய் தொழுத தராவீஹும்
இரண்டாம் நாள் ஆசையே மோசம் செய்யும்
மூன்றாம் நாள் இடுப்பொடிந்த கிழவன் போல்

அமர்ந்து கொண்டே நார்சாவுக்கு நேரம் கடத்தும்
அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டு
கபடியும்,கிளித்தட்டும் கட்டவிழ்த்துவிடப்படும்
இராக்கால வணக்க வழிபாடாய் உள்ளம்

தவறாக வீண்விளையாட்டை புரிந்துகொள்ளும்
பவுடர் போட்ட கேரம் போர்டில்
கருப்புவெள்ளையை சிகப்பு விரட்டும்
குழிக்குள் விழும் காய்களோ

குழந்தையாய் தொட்டில் உறங்கும்
அதிகாலையிலிருந்து அமைதியுற்ற இதயம்
அஸருக்குப்பின் அங்குமிங்கும் அலைபாயும்
வாடா,சம்சா வேண்டியதை சேமித்து வைக்கும்

வாங்கி வரும் வரை கஞ்சியும் காத்திருக்கும்
பேரீத்தம்பழம் கிடைத்து உள்ளம் பேரானந்தமடையும்
அதன் கொட்டை எடுக்க கைகள் பட்டை தீட்டும்
பசியின் உச்சத்தில் நோன்புதிறக்க ஓதும் து'ஆவும்

ஏனோ மறந்து போகும் பாதியில் மறைந்து போகும்
கஞ்சி குடிக்கும் முன் உள்ளம்
பசியில் கோட்டை கட்டும்
குடித்ததுமே ஆசையில் சேமித்தவை எல்லாம்

அடுத்த நாள் வேலைக்காரிக்கு போய் சேரும்
திருக்குர்'ஆனும் சிறப்புடன் ஓதி முடித்து
பள்ளிகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து
வருவோருக்கு நல்ல நாக்கு ருசியாய் நார்சாவும்

நிரப்பமாய் வந்து சேரும் வயிறுண்டு வாழ்த்தும்
முதல் பத்தில் உள்ளம் சிறு மூச்சு விடும்
இரண்டாம் பத்தில் அரை கடலை தாண்டும்
மூன்றாம் பத்தில் பெருநாளுக்கு தயாராகும்

முடிவில் வேதனையுடன் ஆனந்தமடையும்
ஏழைகளின் ஏக்கம் தீர்ந்து காசும் சேரும்
பயனடைந்தவர்களின் உள்ளமோ இன்னும்
பன்னிரண்டு மாதமும் ரமளானை வேண்டும்

இராப்பகலாய் ரஹ்மத்தும் ரஹ்மானிடமிருந்து வந்துசேரும் காலஞ்சென்ற ரமளான் நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தேன்.

இன்னும் இரு மாதங்களில் புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் புனித ரமளானே! நீ எங்களுக்கு வாழ்வில் பரக்கத்தும், ரஹ்மத்தும் தந்து எஞ்சி இருக்கும் எம் வாழ்நாட்களை இனிமையாக்கி இறுதியில் இன்முகத்துடன் இறைவனடி வந்து சேர உன்னையும், என்னையும் படைத்த அந்த வல்லோனிடம் இறைஞ்சிடுவாயா!

என புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் ரமளானை பாசத்துடன் கேட்டுக்கொண்டவனாக..

இனிய நினைவுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ் இறைவன் அதற்கு வாய்ப்புகள் கொடுக்கும் வரை.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

2 Responses So Far:

sabeer.abushahruk said...

எம் எஸ் எம்மின் நினைவலைகள் முன்கூட்டியே தயார் செய்கிறது, ரமளானை எதிர்நோக்கி!

Yasir said...

நன்மையுடன் மகிழ்ச்சியையும் தரும் ரமலானை இப்படி வரவேற்பதும் மகிழ்வே...நன்றி நண்பரே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு