Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது ? 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2016 | ,

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலை பள்ளிவரை முழுஆண்டு தேர்வு முடிந்து மாணவ மாணவியர்கள் பெருமூச்சுவிட்டபடியிருக்கும் இவ்வேளையில் மிக மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். காரணம் வருஷம் முழுக்க நேரத்திற்கு எழுந்து பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமாவதும் ,வீட்டுப் பாடம் படிப்பதும் தேர்வுக்குப் படிப்பதும் டியூசனுக்கு போவதும் இப்படி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தவர்களுக்கு நீண்ட விடுப்பு என்றால் சும்மாவா... ஹல்வா சாப்பிடுவதுபோல் ஆனந்தமாக சந்தோசமாக இருக்கத்தானே செய்யும். வருஷம் முழுக்க வகுப்பாசிரியர்களையும், சக மாணாக்களையும் பார்த்த கண்களுக்கு சற்று மாற்றம் இருக்கத்தானே வேண்டும். அதில் தப்பொன்றுமில்லை.


இதில் நர்சரி பள்ளி தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோரின் பார்வையிலும், பாசத்திலும், அரவணைப்பிலும் இருந்து அவர்கள் கூட்டிச்செல்லும் இடத்திற்கும் உறவினர்கள் நட்புக்கள் வீட்டு விசேஷ காரியங்களுக்கும் கூட சென்று சந்தோசமாக இருப்பதுடன் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள் உறவினர்வீட்டுக் குழந்தைகளென பிற குழந்தைகளுடன் ஒன்று கூடி விளையாடி மிக்க மகிழ்ச்சியுடன் விடுமுறையை கழித்து விடுவார்கள்.

பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பதென்று குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப்பருவத்தை அடையவிருக்கும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் விடலைப்பருவத்தினர் தான் இவ்விடுமுறையை எப்படிக் கழிக்கவேண்டும் என முக்கியமாக கவனிக்கவேண்டும்.

ஆகவே இவ்விடுமுறையில் சுற்றுலா செல்ல விருப்பமுள்ளோர் அதற்க்கான வசதிகளை பெற்றவர்கள் பெற்றோர்கள் அல்லது சகோதர சகோதரிகள் அல்லது உறவினர்களுடன் தகுந்த பாதுகாப்புடன் சுற்றுலா செல்லலாம்.

இயற்கைகள் பசுமைகள் வரலாற்றுச் சின்னங்கள் அதிசய அமைப்புக்கள் உயிரியல் பூங்காக்கள் அருவிகள் போன்ற இடங்களில் சுற்றுலா சென்று நம்மை சந்தோசப்படுத்திக் கொண்டு கண்களையும் மனதையும் இதமாக்கி கொண்டு வரலாம். பார்க்கப்போகும் இடங்களில் சில நாம் படித்த பாடத்தில் வந்த இடமாக இருந்தால் இன்னும் மனம் சந்தோஷமாக இருப்பதுடன் அதனைப்பற்றிய மேலும் சில குறிப்புக்களும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் இதுபோன்ற சுற்றுலாவுக்கு பெரியோர்கள் துணையின்றி சிறியோர்கள் நண்பர்கள் மட்டும் ஒன்றுகூடி செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அது பாதுகாப்பாக இருக்காது.

ஓய்வு கிடைத்து விட்டது என்பதற்காக ஒரேயடியாக தூக்கத்திலேயே பொழுதை கழிக்கக் கூடாது.அது உடலையும் மனதையும் சோர்வடையச் செய்துவிடும். அதற்காக பள்ளி நாட்களில் பரபரப்புடன் காலையில் எழுந்ததுபோல் அல்லாமல் இயல்பாக காலைநேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்திட பழகிக்கொள்ளவேண்டும்.

விடுமுறை என்று வீட்டிலேயே முடங்கிக் கிடந்தது முழுநேரமும் டி வி, வீடியோ கேம், டேப்லட், லேப்டாப் , என்று மூழ்கிடக் கூடாது. தொடர்ந்து அதிகமாக இதில் கவனம் செலுத்தினால் நாம் படித்த கல்வியை மனதிலிருந்து மறக்கச் செய்து புத்தியை மழுங்க வைத்துவிடும். இதை தவிர்க்க நண்பர்களுடன் தெருவிளையாட்டு விளையாடலாம். பலவகை விளையாட்டு போட்டிகள் நடத்தலாம்..இது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தரும்.

அடுத்து சொல்வதானால் இந்தக் கோடை வெயிலில் தேவையில்லாமல் சுற்றித் திரிவதைவிட பத்தும் வகுப்பு ப்ளஸ் 1, ப்ளஸ் 2, மாணவ மாணவிகள் கணினி பயிற்ச்சிக்கோ ஆங்கிலம் அல்லது பிற அவசியமான மொழிகள் கற்றுக்கொள்ளவோ ,தட்டெழுத்து பயில்வதற்க்கோ பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன்பெறலாம்.

வாய்ப்பு கிடைக்கும்போது பெற்றோர்கள் உறவினர்களுக்கு உதவியாய் இருப்பதுடன் அவர்கள் செல்லும் அலுவலகம் வங்கி மற்றும் அரசு சம்பந்தமான வேலைகளுக்கு கூடச் சென்று அந்த வேலைகளை எப்படி செய்கிறார்கள் யாரை எப்படி அணுகுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதுபற்றி தெரிந்து கொண்டோமேயானால் பெற்றோர்களுக்கு பிரயோஜனமாக இருப்பதுடன் பிற்காலத்தில் தமக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

மாணவ மாணவியர் வசிக்கும் அந்தந்த பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசுபட்டு இருந்தால் அசுத்தங்கள் நிரந்பியிருந்தால் அதை சீர்படுத்த பொதுநல அமைப்புகளுடன் சேர்ந்து உதவலாம். சமூக நலன் சார்ந்தவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பொதுப்பணிகள் செய்யலாம். அப்போது சமூக மக்களிடத்தில் நற்ப்பெயரை பெறுவதுடன் தான் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இப்படி நாம் எல்லாவகையிலும் இந்த விடுமுறையை பயனுள்ளதாய் ஆக்கிக் கொண்டோமேயானால் மனம் புத்துணர்வு பெறுவதுடன் மேற்கொண்டு நாம் படிப்பதற்கு ஆர்வமும் உண்டாகும். கல்வியறிவில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன் ஒழுக்கம், நேர்மை, கண்ணியம் ஆகியவைகளை இந்தப் பிராயத்திலேயே அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாகவும் இருக்கும். நமது முன்னேற்றத்திற்கான முயற்ச்சிக்கு எப்படி ஈடுபடலாம் என்கிற நற்ச்சிந்தனை மனதில் வளர வாய்ப்பாக இருக்கும். நமது வருங்கால வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படவும் இலகுவாக கையாள ஏதுவாகவும் இப்போதே நல்ல வழிமுறைகளை அமைத்துக்கொள்ள உதவியாகவும் இருக்கும்.

ஆகவே மாணவ மாணவிகளே பள்ளி விடுமுறை நாட்களை வீண்விரயம் செய்து விடாமல் ஏதாவது நலம்பயக்கும் விஷயத்தில் ஈடுபாட்டுடன் இருந்து பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டீர்களேயானால் தான் பயிலும் கல்விக்கு மேலும் வலிமை சேர்ப்பதுடன் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ள இப்போதே போடப்படும் பலமான அஸ்திவாரத்திற்கு ஆரம்பமாய் இருக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

அதிரை மெய்சா

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு