Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மரம் வளர்ப்பது ஒரு அறம் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2016 | ,

"ஏம்பா மரம் மாதிரி நிற்கிறே?" என்ற வார்த்தைகள் நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்தான். ஒன்றும் செயல்படாமல் இருக்கும் மனிதர்களைப் பார்த்துத்தான் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் அந்த வார்த்தைகளில் பொருள் இருக்கிறதா? மரம் என்றால் அது செயல்படாததா? ஒன்றுக்கும் பயனற்றதா? இப்படி மரத்தைக் கேவலமாக ’எடுத்தெறிந்து‘ பேசுவது சரியான அணுகுமுறைதானா? உண்மையில் மரம் பயனற்றதா? மரம் என்றால் அது வெறும் மரம் மட்டும்தானா?

இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்த்தால் , வரும் விடைகள் - பிள்ளைகள் தங்களது தாய் தந்தையர்க்கு சமமாகப் பாவிக்கப்பட வேண்டியவை மரங்கள்; காடுகளில், வீடுகளில், தோட்டங்களில், சாலை ஓரங்களில் இருந்து அன்புப் புரட்சியையும் அமைதிப் புரட்சியையும் அழகாக நிகழ்த்திக் கொண்டிருப்பவை மரங்கள்; ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் அன்றாடங் காய்ச்சிகளுக்கும் கூட ஆறுதலும் அரவணைப்பும் தருவதே மரங்கள் என்ற பதில்கள் கிடைக்கின்றன.

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களால் நல்லவருக்கு உவமையாகக் காட்டப்பட்டது பேரிச்சை மரம். இன்னும் பிற சமயங்களில் புத்தனுக்கு ஞானம் தந்தது போதி மரம் என்றும்; ஆண்டவனின் அற்புதத்தை சொல்வது அரசமரம்; மேலும் புராணக் கதைகளான இராமாயணத்தில் சீதைக்கு சிறையாய் இருந்தது அசோக வனம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது ஒரு ஆலமரத்தின் அடியில்தான் என்று பிறமதத்தவர்களும் நம்புகிறார்கள்; அத்திமரமும், ஆலிவ் மரமும், செடார் மரமும் இந்து மத வேதங்களிலும் பைபிளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமறை குர்ஆனிலும் இறைவன் இந்த மரங்களின் மீது சத்தியமிட்டு ஒரு அத்தியாயத்தை இறக்கினான். (அத்தியாயம் : 95 அத்-தீன்)


வாழையடி வாழையாக குடும்பம் தழைத்து வாழுங்கள் என்று வாழ்த்தும் மரம் வாழ (வாழை) மரம்; உடலின் உறுதியை உலகுக்கு உரைப்பது தேக்கு மரம்; தேன்காயாக குலைகளைத் தருவது தென்னை மரம் ; பெரிய என்ற பொருள்தருவது பெருந்தமையான மா மரம். 

"தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்" 

என்று நன்றி உடையோரின் அளவுகோலாக வள்ளுவனால் காட்டப்படுவது பனைமரம். அதே பனை மரம்தான் நிலையற்ற உறவு கொண்டாடுவோரையும் நன்றி கொன்றோர் உறவும் பனை மரத்து நிழலும் ஒன்றுதான் என்றும் காட்டப்படுகிறது.

“பெத்த புள்ளே தராவிட்டாலும் வச்ச புள்ளே தரும்” என்று பெற்று வளர்த்த பிள்ளைகளை விடவும் தென்னை மரங்களை பிள்ளையாகப் பாவித்து நம்பிக்கை வைப்பது நமது பண்பாடு. அதனால்தான் தென்னங்கன்றுகளுக்கு தென்னம் பிள்ளை என்று பெயர். அதுமட்டுமல்லாமல், இள வயது மரங்களை, பசு தான் ஈன்ற ஒரு கன்றுக்கு இணையாக மரக் கன்றாக கருதுவதும் பண்பாடுதான். வளர்ந்து ஆளாகும் வரை பிள்ளைகளைப் பராமரிப்பதுபோல் கன்றுகளையும் பராமரிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வதுதான் இதன் நோக்கம்.

மத , இன பேதமின்றி அவரவர் வழிபாட்டுத்தலங்களில் மரம் நட்டு வைப்பது நமது நாட்டின் கலாச்சாரம். அந்நாளில் பல்வேறுபட்ட அரசுகள் தங்களுக்காக எல்லைகளில் காவல் மரங்களை நட்டு வைத்து அடையாளப்படுத்தியதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கிராமங்களில் மரத்தடிகள்தான் உச்ச நீதிமன்றமாகவும் உயர்நீதி மன்றமாகவும் இன்றும் திகழ்ந்து வருகின்றன. நாட்டாமையும் சின்னக் கவுண்டர்களும் அங்குதான் உருவாகின்றனர். மரங்கள், வாழ்வோடு இணைந்து இழைந்து இருந்தும் பயன் தருகின்றன; இறந்தும் பயன் படுகின்றன. 

மரங்களை காட்டு மரம், வீட்டு மரம், வழிபாட்டுத்தளங்கள் அல்லது கல்விக் கூடங்களில் வைக்கும் மரம் என மூன்று பிரிவாக பிரித்து வகுத்து உள்ளனர் நமது முன்னோர்கள். உலகில் ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பல்வேறுவகையான மரங்கள் இருப்பதாக உலக மூலவள ஆதார அமைப்பு (World Resources Institute) கணக்கிட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 400,246, 300, 201 மரங்கள் இருப்பதாக நாஸா விண்வெளி நிறுவனம் (NASA) கணக்கிட்டுள்ளது.

மரம் நடுவோம் ! மரம் நடுவோம்! என்று அரசுகளும் நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களும் தங்களின் மார்பில் அடித்துக் கொண்டு கதறக் காரணங்கள் யாவை?

மரங்கள் நிழலைத் தருகின்றன; மரங்கள் மழை மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைக்கின்றன; மரங்கள் இருக்கும் இடத்துக்கு அழகூட்டுகின்றன. அனைத்துக்கும் மேலாக, மரங்கள் மனித இனம் உயிர் வாழத்தேவையான பிராண வாயு என்கிற ஆக்சிஜனை உற்பத்தி செய்து, மனித இனம் உயிர்வாழத் தேவையற்ற கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி அழிக்கின்றன.

இன்று உலகமெங்கும் புவி வெப்பமாகிறது என்று ஓங்கி ஒலித்து கதறப்படுகிறது. இதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமானது – அழைக்கப்பட வேண்டிய காடுகள் அழிக்கப்படுவதுதான். ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களில் கூட குடிநீர்ப் பிரச்னை என்று கேள்விப்படுகிறோம். காரணம், நகர் மயமாகும் நச்சுத் திட்டத்தின்கீழ் அரசியல்வாதிகளாலும் செல்வாக்குப்பெற்றோர்களாளும் வனப்பகுதிகள் கதறக்கதற கசக்கப்பட்டு கற்பழிக்கப்படுவதே. உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் உள்ளிட்ட இயற்கை வளம் சூழ்ந்த பகுதிகளில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி இயற்கை வளங்களை அழித்து கட்டடங்கள் பெருகியதே அங்கு மண்சரிவு ஏற்பட்டு பேரழிவுக்கு காரணமாக அமைந்தது.

நச்சு வாயுக்களின் வெளியேற்றம் என்பது நகர மயமாக்கல் – பொருளாதார வளர்ச்சி ஆகியவை நமக்குத் தந்த பரிசுகளாகும். கழிவறைகளே இல்லாத வீடுகள் இருந்ததன ஒரு காலம் ; ஆனால் இன்றோ அனைத்து அறைகளிலும் பிரிட்ஜ் முதல் ஏர்கண்டிஷனர் வரை உள்ளீடாக வைத்தே வீடுகள் கட்டப்படுகின்றன. இவைகளுடன் இன்று ஒரு குடும்பத்தில் ஒன்பது வகை இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. இவைகள் கக்கும் புகைகள் காரணமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடின் விகித்தாச்சார அளவு அதிகரிக்கிறது. இந்த அத்துமீறலை எதிர்த்து அமைதிப் புரட்சி நடத்துவது மரங்கள் மட்டுமே. ஆக்சிஜனை உற்பத்தி செய்து கார்பன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் விகிதாச்சாரத்தை சமன் செய்யும் ஒரு ஆக்சிஜன் மையமாக செயல்பட்டு, காற்றில் தனது தலையை விரித்துப் பேயாடிப் போராடுவது மரங்கள் மட்டுமே.

மரங்களை அழிப்பதே மழை இன்மைக்குக் காரணம் என்று அறியாத பேதையர்கள் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார்கள்; கோயில்களில் இருக்கும் நந்திகளுக்கு பால் அபிஷேகம், மிளகு அபிஷேகம், நெய்யூற்றி நடத்தும் யாகங்கள், பெண்களின் நடுநிசி நிர்வாண பூஜைகள், முழங்கால் தண்ணீரில் அம்ர்தவர்ஷினி ராகத்தை கழுதையாக கத்துவது, வருண ஜெபம் என்றெல்லாம் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நோய்க்கு மருந்து கொடுப்பதற்கு பதிலாக பேய்க்கு தூபம் போட்டுக் கொண்டிருப்போர் மனித மாமிச மலைகள், மரங்களை வேருடன் பிடுங்கி வீசி எறிவதுதான் முக்கியக் காரணம் என்று எப்போது உணர்வார்களோ அன்றுதான் விடியும்.

அறிவியல் ரீதியாக சில புள்ளி விபரங்களை நாம் பார்ப்போமானால் பயனாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் உள்ளே உறிஞ்சி காற்றை தூய்மைப்படுத்தும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அதுமட்டுமல்லாமல், 18 மனிதர்கள் ஒரு வருடம் முழுதும் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் அவை வெளியிடுகின்றன.

ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் சேவைகளை பணத்தால் மதிப்பிட்டால் ஆக்சிஜன் US$ 30,000, சுத்திகரிக்கும் நீர் US$ 35,000 கார்பனை வடிகட்டுவதற்கான செலவு US$ 1,25,000 ஆகுமென்று ஒரு கணக்கீடு சொல்கிறது. 

அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன. இவை அனைத்து சேவைகளையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன. ஒருவேளை இலவசமாக இந்த சேவை கிடைப்பதால்தான் மரங்களின் அருமை நமக்குத் தெரியவில்லையோ என்னவோ. மரங்கள் செய்யும் இத்தகைய விலைமதிப்பற்ற சேவைகளைக் கூட பணத்தால் மதிப்பீடு செய்யப்படுவதற்குக் காரணம், பணத்தாசை கொண்ட பலரால் மரங்கள், பணத்தால் மதிப்பிடப்பட்டு வெட்டப்பட்டு விற்கப்படுவதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

மரங்கள் செய்யும் சேவைகள் என்கிற பட்டியலில் மேலே நாம் சுட்டிக்காட்டிய மூன்று சேவைகளை மட்டும் அல்லாமல் மரங்கள் நில அரிப்பை தடுகின்றன; நிலத்தடி நீரின் அளவை உயர்த்துகின்றன; ஆறுகளின் பாதையையும் ஆற்றுப் பெருக்கையும் கட்டுப்படுத்துகின்றன; ஊரைக் குளிர்விக்கின்றன; குருவிகள் கூடுகட்டும் இடமாகி பல்லுயிர்களை பெருக்குகின்றன; பட்டுப் போன மரங்கள் வீட்டுக்காகவும் விறகுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்தையும் விட ‘நீரின்றி அமையாது உலகு ‘ என்ற நிலையில் அடிப்படையான மழை பெய்யக் காரணமாகின்றன; அதன் காரணமாக விவசாய உற்பத்திப் பொருள்கள் விளைவிக்கப்படுகின்றன என்ற மரங்களின் பணிகளுக்கெல்லாம் பணத்தால் மதிப்புப் போட்டால் இந்த உலகையே மரங்களுக்கு விலையாக கொடுத்தாலும் ஈடாகாது.

மாமன்னர் அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட அவர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டினார் என்பதையே சரித்திரம் புகழ்கிறது. எல்லா மதங்களும் மரம் நடுவதை தலையாய தர்மங்களில் ஒன்று என்று சொல்கின்றன. குறிப்பாக இஸ்லாம் பெருமானார் ( ஸல்) அவர்களின் பொன் மொழிகள் மூலமாக மரம் நடுவதை மிகவும் உயர்வாகப் பேசுகிறது. இதோ சில சான்றுகள்!

“எவரேனும் மரம் நடுவாரேனால் அம்மரத்திலிருந்து எவ்வளவு உண்ணப்படுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை மரம் நட்டவருக்கு கிடைக்கும். அதிலிருந்து திருடப்பட்டதும் தர்மாகிவிடும். பிராணிகள் உண்டதும் தர்மமாகிவிடும் “ அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) ( முஸ்லிம் )

“ஒருவர் மரம் நாட்டினால் அம்மரத்தின் மூலம் எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ அவற்றின் அளவுக்கு மரத்தை நட்டவருக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும்" அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி) (முஸ்னத் அஹ்மத்)

ஒரு மனிதன் இறந்து போனதும் அவனது நல்ல மற்றும் கெட்ட செயல்களும் அதன் மூலமான நன்மை மற்றும் பாவங்களும் நின்று போய்விடுகின்றன. ஆனால் அந்த மனிதன் உயிரோடு இருக்கும் போது வெட்டிய கிணறு , ஏற்படுத்திய கல்வி நிறுவனம், நட்டு வைத்த மரங்கள் ஆகியவை அவை மக்களுக்குப் பயன்படும் கால காலமெல்லாம் அவன் உலகைவிட்டு மறைந்தாலும் அவனுக்கு நன்மையை சேர்த்துக் கொண்டே இருக்கும் என்று கூறும் இஸ்லாம் அதை ‘சதக்கத்துல் ஜாரியா’ என்று வகைப்படுத்துகிறது. செத்தும் கொடுத்த சீதக்காதிகள் இவர்கள். 

“பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் “ - என்று திருக்குறளும் கூறுகிறது. 

நாம் செய்தால் என்ன? இப்படித் தொடங்கினால் என்ன? என்ற வகையில் சில கருத்துக்களை சீர்தூக்கிப் பார்க்கலாம். 

எல்லா நற்காரியங்களும் அவரவர் இல்லங்களிளிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்று சொல்வார்கள். ( CHARITY BEGINS AT HOME ) . அதே போல் நாம் வீடு கட்டத் திட்டமிடும்போதே வீட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மரங்களையாவது நட்டு வைக்க இடம்விட வேண்டும். அதனால் முதலாவதாக நமது வீடுகளின் வசிப்பிடம் காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இதனால் 6 முதல் 9 செல்சியஸ் வரை உஷ்ணம் குறைவதாக கணக்கிட்டு இருக்கிறார்கள். குளிர் சாதனங்களைப் பயன்படுத்தும் நேரமும் மின்சாரச் செலவும் குறையலாம்.. 

இதற்காக வீட்டில் நடத்தக்க பப்பாளி, முருங்கை, மாதுளை, கொய்யா, நெல்லி போன்ற பயன்தரும் செடிகளை நடலாம். வீட்டை சுற்றி அழகுதரும் வண்ணப் பூச்செடிகளை நடலாம். அரளி, மல்லிகை, செம்பருத்தி, இட்லிப் பூ ஆகியவை அழகும் மணமும் தருமே. இந்த மரம் மற்றும் செடிகளுக்கான தண்ணீருக்கு நாம் ஒன்றும் பிஸ்லேரி மினரல் வாட்டருக்கு ஆர்டர் செய்ய வேண்டாம். நமது குளியலறைகளிலிருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை பாயச் செய்தாலே போதுமானது. இதனால் தெருக்களில், கால்வாய்களில் சாக்கடை நீர் கலப்பதையும் தடுக்கலாமே! 

வீட்டினுள் நிழலில் வளரும் செடிகளை தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம். முக்கியமாக துளசி, ஓமவல்லி, கற்றாழை போன்ற செடிகளை இவ்விதம் வளர்ப்பதால் அவை தொற்று நோய்கள் அண்டாமல் காக்கும். மணி பிளான்ட் செடிகளை துணைச் சுற்றி வளர்த்தால் காண ரம்மியமாக இருக்கும்.

குழந்தை பிறந்தால் அதன் நினைவாக தேக்கு மரக் கன்றுகளை நடலாம்; குழந்தைகள் பிரசவமாகும் மருத்துவமனைகளுக்கு மருத்துவச செலவுடன் நான்கு மரக்கன்றுகளையும் பரிசளிக்கலாம். திருமணங்கள் நடத்தால் ஊரெங்கும் அழைப்பு விடுத்து விருந்து வைக்க முன்பு, திருமண மாப்பிள்ளை பள்ளிக்கு திருமண ஒப்பந்தத்துக்காக வரும் பாதைகளில் செடிகளை நட்ட பிறகே வருவதை வழக்கமாக்கலாம். திருமண அழைப்பிதழோடு ஒரு சில விதைகளையும் கொடுத்ஹ்டு அழைக்கலாம். திருமணப் பரிசாக எவர்சில்வர் தட்டுகளையும் குடங்களையும் வழங்கி அவைகளைப் பழைய சாக்கில் கட்டிப் பரண்மேல் போடுவதற்கு பதிலாக மரக் கன்றுகளை நட்டு பரிசளிக்கலாம். 

யாராவது இறந்தால் கபர்ஸ்தானின் சுவர் ஓரங்களில் வேப்பங்கன்றுகள் போன்றவற்றை நடலாம். தலைவர்களின் பிறந்த நாள்களைக் கொண்டாடும் கட்சிக்காரர்கள் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரச் செடிகளை நட்டு புதிய அத்தியாயம் படைக்கலாம். நடிகர்களின் பிறந்த நாளுக்கு, தலைகளை மொட்டை அடிக்கத் தயாராகும் இரசிகர்கள் அவரது வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகளை நடலாமே! 

நெல் வயல்களையும் தென்னந்தோப்புகளையும் வீட்டுமனைகளாக மாற்றி விற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போர் அந்த இடங்களில் இருந்த மரங்களை வெட்டிய பாவத்துக்குப் பரிகாரமாக மனைப் பகுதியில் சாலைகளுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் இருபுறமும் பராமரிப்புடன் கூடிய புன்னை, புங்கை , வேம்பு , பாதாம் செடிகள் போன்ற மரக்கன்றுகளை பாதுகாப்புடன் நட்டு வைக்கலாம். மனைகளை வாங்குவோருக்கு ஆளுக்கு நான்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கலாம்.

மா, ஆல, அரச, புளிய , வாகை, பெருவாகை ஆகிய மரங்கள் நிறைய இடங்களை ஆக்கிரமித்து வளரும் வகையானவை. பரந்த நிழலைத் தரக் கூடியவை. வேர்களைப் பரப்பி வளரக் கூடியவை. இவைகளை வீட்டில் வளர்ப்பதைவிட பள்ளிக் கூடங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள், அரசு அலுவலகங்கள், மைதானங்கள் ஆகியவற்றில் நட்டு வளர்க்கலாம்.

மனிதன் செய்யும் செயல்களிலும் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக மரக்கன்றுகளை நடுதல், அவைகளைப் பேணுதல், பராமரித்தல் ஆகியவற்றை கருதிட வேண்டும். மரம் நடுவது ஒரு அறம் அதுவும் தலையாய அறங்களில் ஒன்று என்ற எண்ணம் நம்மிடையே பரவலாக வேண்டும். நமக்காகவும் நமது வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் எவ்வளவோ செய்கிறோம். அந்தப் பட்டியலில் இனி மரங்களை நடுவதையும் சேர்த்துக் கொண்டால் ஊர் செழிக்கும் நமது உள்ளமும் மகிழும்; சுற்றுச் சூழல் மேம்படும்; நாம் எண்ணிப் பார்க்காத நன்மைகளெல்லாம் நம்மை வந்து சேரும்.

நமக்கு முந்தைய தலைமுறையிலும் நம்முடைய இளமைக் காலங்களிலும் இல்லாத ஒன்றாக இன்று நமது காலடியில் இருக்கும் தணணீரை காசு கொடுத்து வாங்குகிறோம். அது போதாது என்று இப்போது காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு மெதுவாகத் தள்ளப்படுகிறோம். எதிர்கால தலைமுறை காற்றுக்கு காசு செலவழிக்கப் போகும் முன் நாம் மரக்கன்றுகளை நமது கைகளில் எடுத்துக் கொண்டு விழித்திடவும், செயல் புரிந்திடவும் வேண்டும். உயிர் இல்லாத விதைகளை உயிர்ப்பித்துக் கொடுக்க மண் தயாராக இருக்கிறது. கைப்பிடி அளவு மணல் நமது கைகளில் இருந்தாலும் அதில் ஊரையே வளைக்கும் ஒரு ஆலம் விதை முளைத்து விடுகிறது. 

விதைகள் தயாராய் உள்ளன; விதைகளை வரவேற்க மண்ணும் தயாராக உள்ளது. அதே போல் இலவச மரக் கன்றுகளை வழங்கிட அரசுத்துறைகளும் தன்னார்வ அமைப்புகளும் தயாராக உள்ளன. பசுமை அதிரை 2020 திட்டமும் தயாராக உள்ளது. மனிதர்கள்தான் தயாராக வேண்டும். தயாராவோமா தாயபுள்ளைகளே!

இப்ராஹீம் அன்சாரி

9 Responses So Far:

அஹமத் தௌஃபீக் said...

அருமையான ஆக்கம். இதுவும் சமூகத்திற்கு செய்யும் ஒரு நற்சேவை தான். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, தன்னை சுற்றியுள்ள சுற்றுப்புறமும் நன்றாக தூய்மையாக இருக்கவேண்டும் என்ற பொதுநலவாதிகளின் எண்ணக்களை இக்கட்டுரை பிரதிபலிக்கிறது.

(பி.கு) புது வீடு குடி செல்பவர்களுக்கு பரிசாக மரக்கன்று நட்டுக்கொடுப்பதையே நான் வழக்கமாக செய்து வருகிறேன்.

தூய்மை அதிரை 2020 வரைவு திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? அறியத்தரவும்.

Ebrahim Ansari said...

காலையிலேயே படித்து முதல் கருத்தைப் பதிவு செய்த சகோதரர் அஹமது தெளபீக் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

//(பி.கு) புது வீடு குடி செல்பவர்களுக்கு பரிசாக மரக்கன்று நட்டுக்கொடுப்பதையே நான் வழக்கமாக செய்து வருகிறேன்.//

பாராட்டுதலுக்குரியது. தொடருங்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைப் பின்பற்றும்படி செய்யுங்கள்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

 

அன்பிற்குரிய காக்கா,

 

மரம் நடுவதும் வளர்ப்பதும் அறம் எனில் அதைத் தெளிவாகச் சொல்லும் தங்கள் கட்டுரையும் ஓர் அறம்தான்.   மரம் வளர்க்கச்சொல்லும் இந்தப் பாடமும் கண்கவர் படமும் மனத்தில் இடம் பிடிக்கின்றன.  

 

எதைச் சொல்ல வந்தாலும் அதை முழுமையாக அலசும் தங்கள் பாங்கு இதிலும் மிளிர்கிறது.  கட்டுரை வாசிப்பதை ஒரு கதையோ கவிதையோ வாசிப்பதைப் போன்ற சுவாரஸ்யத்தோடு எழுத எல்லோராலும் முடிவதில்லை. அது ஏனோ, உங்கள் கட்டுரையை மட்டும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடுகிறேன். 

 

தேன் கலந்தது போன்ற தங்களின் மொழி நடையில் கடினமான கருத்துகளைச் சொன்னாலும் இலகுவாகப் புரிந்து விடுகிறது. 

 

மரங்களின் பல பலன்களைச் சொல்லும் கட்டுரை, அவற்றின் முதல் பயனான காய் தருவதையும் கனி தருவதையும் பற்றி நேரிடையாகக் குறிப்பிடாதது ‘இது ராணி, அம்புலிமாமா’ தரத்திலுள்ளதன்று என்று பரைசாற்றவா?

 

 

மாஷா அல்லாஹ்.

 

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

 

(இந்த ஒரு கட்டுரைக்காகத் தங்களின் வீட்டைச் சுற்றி ஒரு பாடு மரம் நட்டுத்தந்தாலும் தகும்.)

 

 

 

Shameed said...

எனக்கு மரம் நடுவதிலும் மரம் வளர்ப்பதிலும் அதித ஆர்வம் உண்டு இந்த கட்டுரையை படித்ததும் இன்னும் எனக்கு ஆர்வம் அதிகமாகின்றது

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

//எதைச் சொல்ல வந்தாலும் அதை முழுமையாக அலசும் தங்கள் பாங்கு //

ஜசகல்லாஹ் அல்லாஹ் ஹைரன். உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் படிப்பதால் மிகவும் கவனமாகவே எழுத நேரிடுகிறது. அதனால்தான் முழுவிபரங்களும் அல்லாமல் Understood ஆக இருக்கும் விஷயங்களை அளவு கருதி தவிர்ப்பதும்.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

மருமகன் சாகுல் !

உனது ஆர்வம் நான் அறிந்ததே. நாங்கள் அனைவரும் அறிந்ததே.

இன்னும் தோட்டக்கலையில் சில திட்டங்களை வைத்து இருக்கிறாய். அவை சிறப்புற வாழ்த்துகிறேன்.

இந்தக் கட்டுரைக்கு நீ எடுத்த படமே அழகு சேர்க்கிறது. என்று சொல்வதைவிட பொருத்தமாக இருக்கிறது . தேர்வு செய்த தம்பி அபு இபு அவர்களுக்கு முதுகில் ஒரு செல்லமான தட்டு.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

 

அன்பிற்குரிய காக்கா,

 

மரம் நடுவதும் வளர்ப்பதும் அறம் எனில் அதைத் தெளிவாகச் சொல்லும் தங்கள் கட்டுரையும் ஓர் அறம்தான்.   மரம் வளர்க்கச்சொல்லும் இந்தப் பாடமும் கண்கவர் படமும் மனத்தில் இடம் பிடிக்கின்றன.  

 

எதைச் சொல்ல வந்தாலும் அதை முழுமையாக அலசும் தங்கள் பாங்கு இதிலும் மிளிர்கிறது.  கட்டுரை வாசிப்பதை ஒரு கதையோ கவிதையோ வாசிப்பதைப் போன்ற சுவாரஸ்யத்தோடு எழுத எல்லோராலும் முடிவதில்லை. அது ஏனோ, உங்கள் கட்டுரையை மட்டும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடுகிறேன். 

 

தேன் கலந்தது போன்ற தங்களின் மொழி நடையில் கடினமான கருத்துகளைச் சொன்னாலும் இலகுவாகப் புரிந்து விடுகிறது. 

 

மரங்களின் பல பலன்களைச் சொல்லும் கட்டுரை, அவற்றின் முதல் பயனான காய் தருவதையும் கனி தருவதையும் பற்றி நேரிடையாகக் குறிப்பிடாதது ‘இது ராணி, அம்புலிமாமா’ தரத்திலுள்ளதன்று என்று பரைசாற்றவா?

 

 

மாஷா அல்லாஹ்.

 

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

 

(இந்த ஒரு கட்டுரைக்காகத் தங்களின் வீட்டைச் சுற்றி ஒரு பாடு மரம் நட்டுத்தந்தாலும் தகும்.)

 

 

 

sheikdawoodmohamedfarook said...

மரம்வளர்ப்பது ஒருபிராத்தனை!அது அல்லாவை துதிபாடி நாமக்காக கை ஏந்தும்! தொடங்கட்டும் இந்த யாத்திரை! சுவாசத்துக்கு சிறந்த மாத்திரை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு