Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நானே மிகச் சிறந்த மனிதன் ! - “I am the Greatest” 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2016 | , , , , ,


“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக. 

நான் நிறைய செய்ய முடியும். இறைவன் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார்.  ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். 

இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே” 

இந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றைத் தெரிந்துக்கொள்ளவேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கையே ஒரு வரலாற்று நிகழ்வுதான்.

அந்த மனிதன்.. அரசன் அல்லன், தலைவன் அல்லன், புரட்சி வீரனுமல்லன். உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன்தான். ஆனால் அவனது வாழ்வாதாரப் போராட்டம் என்பது, அவனது சுயவளர்ச்சியாக மட்டுமில்லாமல், அவனது இன எழுச்சியாகவும் இருந்தது.

அது, அவன் மக்களின் உரிமைக்கான அங்கீகாரத்தை, ‘கேட்டுப்பெறுவதல்ல எப்போதும் அவர்களோடு இருப்பது’ என்பதை உலகிற்கு அறிவிப்பதாக இருந்தது.

ஒரு தனிமனிதனின் வாழ்வியல் போராட்டம் எப்படி ஒரு இனத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த மனிதனின் வாழ்க்கையைப் பார்க்கவேண்டும்.

அந்த மனிதனின் பெயர் 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்'. பிறந்தது  ஜனவரி 17,1942 ஆம் ஆண்டு, அமெரிக்காவில். ஒரு 'ஆப்பிரிக்க-அமெரிக்கன்' குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை. ஏழ்மையான குடும்பம்.

பன்னிரெண்டாவது வயதில் தன் மிதிவண்டியைக் திருடக் கொடுத்துவிட்டு, திருடனை அடிக்க வேண்டும் என விரும்பியவனை கண்ட ஒரு போலிஸ்காரர் அவனுக்கு குத்துச்சண்டையை பயிற்றுவித்தார்.  உள்ளூர் போட்டிகளில் பணத்திற்காக கலந்துக்கொண்டான்.  தொடர்ந்து வெற்றிதான். அவ்வெற்றிகள் அவனை, 1960-இல் 'ரோமில்' நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வெல்லும் வரை கொண்டு சென்றது. இங்கே இருந்துதான் அவன் வாழ்க்கை திசைமாறுகிறது. அதுநாள் வரை 'அமெச்சூர் பாக்ஸராக'  இருந்தவன், ஒரு 'தொழில்முறை பாக்ஸராக' உருமாறுகிறான்.

1960-63 -க்கு இடைப்பட்ட காலத்தில், 19-0 என்ற கணக்கில் கலந்துகொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறான். அதில் 15 நாக்-அவுட்ஸ். 

அவனிடம் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்தது. போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன்னோடு மோதும் எதிராளியை எந்த ரவுண்டில் தோற்கடிப்பான் என்று சொல்லுவதும், அதை அப்படியே நிறைவேற்றுவதும். சொல்லி அடிப்பது என்பார்களே, அது போல.

அதேப்போல மற்றொரு பழக்கமும் அவனிடமிருந்தது. தன்னோடு போட்டிப்போடும் போட்டியாளரின் முன், தன்னைப்பற்றி பெருமையாகவும் அவனைத் தாழ்த்தியும் பேசுவது. பல நேரங்களில் அது தற்பெருமையாக, ஆணவப் பிரகடனமாக இருக்கும். அவ்வார்த்தைகள் எல்லாம், பின்நாட்களில் மேற்கோள்களாக ஆகியன. காரணம் அத்தனை வார்த்தைகளையும் மெய்ப்பித்தான் அவன்.

“I am the Greatest.” - நானே மிகச் சிறந்தவன்

“I won’t be who you want me to be!” - நீங்கள் என்னை யாராக இருக்கச்சொல்கிறீர்களோ அவனாக நான் இருக்க மாட்டேன்.


இப்படி அவன் சொன்ன வார்த்தைகள் ஏராளம். தான் வாழ்ந்த வாழ்க்கையால், அத்தனை வார்த்தைகளையும் சரித்திர குறிப்பேட்டில் குறிக்கச் செய்தான். அதை உலகம் ஒருபோதும் மறுத்ததில்லை. 

எதிராளியை போட்டிகளுக்கு முன்பாகத் திட்டுவதும், அவர்களின் மனோதிடத்தை உருக்குலைப்பதும் அவனுக்குக் கைவந்தக் கலை. 'நீ ஒரு அசிங்கமான கரடி' .. 'நீ என்னைத் தாக்கவே முடியாது, ஏனெனில் உன் கண்களால் பார்க்க முடியாததை உன் கைகள் எப்படித் தாக்கும்?' என்று சன்னி லிஸ்டனோடு மோதியப் போட்டியின் போது அவனைப்பார்த்து சொன்னான். மேலும், 'நான் வண்ணத்துப்பூச்சியைப்போல் மிதப்பேன், தேனீயைப்போல் தாக்குவேன்' ("float like a butterfly and sting like a bee,") என்றான். 

இப்படிப்பேசுவதும் வழக்கமான முறையில் சண்டையிடாமல், தனக்கே உரிய மாறுபட்ட யுத்திகளையும் வடிவமைத்துக்கொண்டான். போட்டிகளின் போது தன் கால்களை அதிகம் பயன்படுத்தினான். ஒரு இடத்தில் நிற்காமல், வேகமாக நகர்ந்துக்கொண்டே இருந்தான். 

அதேபோல் அவனுடைய பேச்சுகள் ஒருவித நயத்தோடு இருக்கும். அது அவனுக்கு ‘குத்துச்சண்டை கவிஞன்’ என்ற பெயரை எடுத்துக்கொடுத்தது.

1964-இல் 'சன்னி லிஸ்டனோடு' மோதி வெற்றி பெற்று, தன் முதன் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றான். அப்போது அவனது வயது 22. உலகில் முதன்முறையாக, மிகக்குறைந்த வயதில் 'ஹெவி வெயிட்' பிரிவில் அப்பட்டதை வென்றது அவன்தான். 

தன்னுடைய வெற்றிகளை, அவன் தன் தனிப்பட்ட வாழ்க்கையின் சுய வளர்ச்சியாக மட்டும் பார்க்கவில்லை. தன் இனத்தின் வெற்றியாக, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்கான அங்கீகாரமாக, மாற்ற முயன்றான்.  ஒரு போதும் அவன் தன்னை ஒருவனாக, தனி மனிதனாக கருதியதேயில்லை. தான் ஒரு இனத்தின் அங்கம் என்பதும், தான் என்பது தன் இனத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என்பதும் அவனது வெளிப்பாடாக இருந்தது.

தான் நம்பியது மட்டுமல்லாமல், உலகமும் அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றான்.  அது அவனை இன்னும் பலமானவனாக உணரச்செய்தது. மூர்க்கமானவனாக மாற்றிற்று. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இனம் அல்லவா? அதன் ஒட்டு மொத்த எழுச்சியாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன.

ஆம்.. நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவன் தன்னை உலக சாம்பியன் என்று நிரூபித்ததும் செய்த முதல் செயல் என்னத் தெரியுமா?

தன்னையும் தன் இனத்தையும் இதுநாள் வரை அடிமையாக ஆண்டதுமில்லாமல், அதை குறிக்கும் வகையில் தன் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் 'கிளே' என்ற பெயரைக் களைய நினைத்தான். மேலும் கிருத்துவனாக இருப்பதிலிருந்தும் மாற நினைத்தான். தான் சுதந்திரமானவன் என்பதை தன் மதம் மற்றும் பெயரை மாற்றி இந்த உலகத்திற்கு அறிவித்தான். அவன் மாறிய மதம் இஸ்லாம், மாற்றிய பெயர் 'முகமத் அலி'.

ஆம் தோழர்களே! உலகத்தின் ஆகச் சிறந்த குத்துச்சண்டை வீரர் 'முகமத் அலி'தான் அவர். அவரின் முந்தைய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என்ற பெயரில் நாம் அவரை நினைவில் கொள்வதில்லை. அது மிகச் சரியானதுதான். ஏனெனில், அது அவர் அடிமை என்பதை குறிப்பதாக இடப்பட்டது.  தான் அடிமையில்லை, சுதந்திரமானவன் என்பதுதான் அலியின் அறிவிப்பு. இதை மற்றவர்கள் ஏற்காதபோதும், மறுக்கும்போதும் அலிக்கு வரும் கோபம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. 

Ernie Terrell-என்ற குத்துச்சண்டை வீரரோடு மோதிய ஒரு போட்டியின் போது Terrell அலியைப்பார்த்து, 'கேசியஸ் கிளே' என அழைத்துவிட்டார்.  அது அலியை கோபப்படுத்தியது. தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதினார். சாம்பியன் தன்னை இழிவுப் படுத்தியதற்கு தண்டிக்க நினைத்தார். 

அந்தப் போட்டி முடியும் முன்பாக "என் பெயர் என்ன என்பதை உனக்கு தெரிய வைக்கிறேன்" என்று Terrell-இடம் சொன்னார். அவ்வளவுதான் அப்போட்டி முடியும் வரை, ஒவ்வொரு குத்தின் போதும் "What's my name, Uncle Tom ... What's my name?" என்று டெரிலிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

டெரில் மிக மூர்க்கமாகத் தாக்கப்பட்டார். குத்துச்சண்டை வரலாற்றிலேயே மிக அசிங்கமான (uglier fights) சண்டை என அதைச் சொல்லுகிறார்கள். மிக மோசமாக தண்டித்தார் அலி. பதினைந்து சுற்றும் நடந்தது அந்தச்சண்டை. அலி நினைத்திருந்தால் அந்தச் சண்டையை முன்பே முடித்திருக்க முடியும், ஆனால் Ernie Terrell-ஐ தண்டிக்க நினைத்ததனால்தான், பதினைந்து சுற்று வரை கொண்டுவந்து அவனைத் தாக்கினார் அலி என்கிறார்கள்.

பெயரை மாற்றிச் சொன்னதற்கா இந்த அடி? இல்லை. அது அவரின் சுதந்திரத்தை மறுத்ததற்கான அடி. அவரின் சார்பாக மட்டுமல்லை, ஒட்டுமொத்த இனத்தின் சார்பாக விழுந்த அடி அது.  இந்த சுதந்திரப் பிரகடனத்தை அவர் தனிமனிதர்களிடத்தில் மட்டும் காட்டவில்லை. ஒரு தேசத்திடமே காட்டினார். அதுவும் அவர் வாழ்ந்த ஆனானப்பட்ட அமெரிக்காவிடமே காட்டினார்.


அது 1966 ஆம் ஆண்டு. வட அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டம். அமெரிக்கச் சட்டப்படி, முகமத் அலியை வியட்நாம் போருக்கு அனுப்ப முயன்றார்கள். அலி முடியாது என்றார். 

“நான் ஏன் போகவேண்டும், எனக்கு எவ்வித சச்சரவும் வியட்நாமியரிடம் இல்லை, எந்த வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று அழைத்தது இல்லை”.

"இல்லை, நான் போகப்போவதில்லை. 10,000 மைல் தாண்டிபோய், மக்களைக் கொன்று, அவர்களின் உடைமைகளைக் கொளுத்தி, வெள்ளையர்கள் கறுப்பு மக்களை உலகமுழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத் தொடர்வதற்கு உதவப்போவதில்லை"

"எதற்காக என்னை சீருடை அணிந்து பல்லாயிரம் மைல் கடந்து சென்று ‘Brown People’ மீது குண்டுபோடச் சொல்கிறார்கள்? இங்கே 'நீக்ரோ' என அழைக்கப்படும் என் மக்கள், மனித உரிமைகள் எதுவும் அற்று நாய்களைப்போல நடத்தப்படும்போது.."

இவை, அலியின் புகழ்ப் பெற்ற வியட்நாம் போருக்கான எதிர்ப்பு வார்த்தைகள். வியட்நாம் போரை அவர் எதிர்த்தார்.  ஏனெனில் அது, அவர் இனத்தைப் போன்ற இன்னொரு இனத்தின் மீதான வன்முறை என்பதை உணர்ந்திருந்ததனால்.

இந்த எதிர்ப்பை அவர், இராணுவத்திற்கு ஆளெடுக்கும் போது காட்டினார். ஒரு இராணுவ அதிகாரி அலியை, அவரின் முந்தைய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என அழைத்தார். அலி தன் இடத்திலிருந்து நகராமல் இருந்தார்.  மூன்று முறை அழைக்கப்பட்டார். அப்போதும் அலி அசையாமல் இருந்தார். காவல் அதிகாரி, அலியின் முன் வந்து "கிளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா? அடுத்த முறை நீங்கள் பதிலளிக்காவிட்டால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், ஐந்தாண்டு சிறையும் பத்தாயிரம் டாலர் அபதாரமும் விதிக்கப்படும்" என்றார்.

மறுமுறை அவரின் பெயர் அழைக்கப்பட்ட போது.. அலி நகராமல் இருந்தார். உடனடியாக அலி கைதுச் செய்யப்பட்டார். அதேநாள் நியூயார்க் விளையாட்டு கழகம் அவரின், குத்துச்சண்டைக்கான உரிமத்தை ரத்துசெய்தது. மேலும் அவரின் உலகச்சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது.

தன் சுதந்திரத்திற்காக, அங்கீகாரத்திற்காக, போராடிப் பெற்ற பட்டத்தையும் தன் தொழிலுக்குத் தேவையான உரிமத்தையும் ஒரே நேரத்தில் அலி இழந்தார்.  ஆனால் அவர் கலங்கி விடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றம் வரை போனது. அலி மக்களோடு பேசினார். மக்கள் அவரோடு இணைந்து, போருக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மக்களிடம் அலியின் மதிப்பு உயர்ந்தது. நான்கு வருடம் அவர் தடை செய்யப்பட்டிருந்தார். 1971-இல் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. அவரின் உரிமம் மீண்டும் தரப்பட்டது.

பிறகு அக்டோபர் 30,1974-இல் நடந்த போட்டியில் 'ஜார்ஜ் ஃபோர்மேனை' வென்று இரண்டாவது முறையாக உலகச்சாம்பியன் பட்டத்தை பெற்றார். ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கும் ஜியர் நாட்டில் நடந்த அப்போட்டி "The Rumble In The Jungle" என்று அழைக்கப்படுகிறது. அப்போது அது உலகின் மிக பிரபலமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் 'ஜார்ஜ் ஃபோர்மேன்' அப்போதைய நடப்புச் சாம்பியன். அவரை வெல்வது மிகக்கடினம் என கருத்துக் கணிப்புகள் சொல்லின. 

அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் ஃபோர்மேனின் குத்துகள் மிகப் பிரபலம். எதிராளியை குத்துகளாலேயே மண்டியிடவைக்கக் கூடியவர். அவரை தோற்கடிப்பது முடியாத காரியம் என அலியின் நீண்ட நாள் ஆதரவாளர்களாலேயே நம்பப்பட்டது. 

அப்போட்டியின் போதுதான், நாம் இந்த கட்டுரையின் முதல் பாராவில் பார்த்த வரிகளை அலி சொன்னார். இப்போது அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். அதனுடைய அர்த்தம் முழுமையாகப் புரியும்.

“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக. 

நான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார்.  ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். 

இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.

அச்சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேன் அலியை மூர்க்கமாகத் தாக்கினார். அலி வழக்கபோல் ஒரு புதிய யுக்தியை இப்போட்டியில் பயன்படுத்தினார். சுற்றுக்கயிற்றோடு சாய்ந்துகொண்டு அடிகளைத் தடுத்தும், சில சமயங்களில் வாங்கியும் கொண்டார். நூற்றுக்கணக்கான அடிகளை ஜார்ஜ் ஃபோர்மேன் அலியின் மேல் பிரயோகித்தார். அத்தனையும் தாங்கிகொண்ட அலி, ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடையும் வரை காத்திருந்தார். 

ஏழாவது சுற்றுக்கு அப்புறம் ஜார்ஜ் ஃபோர்மேன் முழுமையாக சோர்வடைந்திருந்தார். இதைக் கண்ட அலி, உற்சாகமானார். அவர் காத்திருந்தது இதற்காகத்தான். அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டது இதற்குத்தான். எட்டாவது சுற்று துவங்கிய போதே, அலி தன் கைவரிசையை காட்டத் தொடங்கினார். தொடர்ச்சியான குத்துகளின் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தினார். 

இதன்மூலம் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை அலி பெற்றார். இந்த போட்டியில் அவர் உபயோகித்த யுத்தி "The Rope-A-Dope" என்று அழைக்கபடுகிறது. இந்த போட்டி அப்படியே ஆவணப்படமாக எடுக்கப்பட்டு 'When We Were Kings' (மன்னர்களாக நாம் இருந்தபோது) என்ற பெயரில் திரையிடப்பட்டு, சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் (1996) விருதையும் பெற்றது.

1978 மீண்டும் மூன்றாவது முறையாக, அலி உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 27, 1979-இல் அலி ஓய்வுப்பெற்றார்.  அவர் கலந்துக்கொண்ட சண்டைகள் மொத்தம் 61, வெற்றி பெற்றது 56, அதில் 'நாக் அவுட்டில்' வெற்றிப்பெற்றது 37. இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள் அவை. அவர் சண்டையிட்ட காலத்தை குத்துச் சண்டை வரலாற்றின் பொற்காலம் என்கிறார்கள்.

அதன்பின், பல பொது காரியங்களில் ஈடுபட்டு, தன் இன மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறார்.  மக்கள் எங்கெல்லாம் அவதிப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று உதவுகிறார். இருபத்திரெண்டு மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார் என்கிறார்கள். 

1991-இல் ஐ.நா. வின் சார்பில் ஈராக் சென்று 'சதாம் உசைனை' சந்தித்து, அமெரிக்கப் பிணையக் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக பேசி இருக்கிறார். 1998-லிருந்து 2008 வரை ஐ.நாவின் அமைதி தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 2002-இல் அமைதிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். 

அமெரிக்காவின் சிறந்த குடிமகனுக்கான பெரிய விருதுகளான 'Presidential Citizens Medal' மற்றும் 'Presidential Medal of Freedom' ஆகிய விருதுகளை 2005-இல் அதிபர் புஷ்ஷின் கைகளால் பெற்றிருக்கிறார். எந்த அரசாங்கத்தோடு அவர் மோதினாரோ, அதே அரசாங்கம் இவரைச் சிறந்த குடிமகன் என்று விருது கொடுத்து கௌரவித்தது. இதைத்தாண்டி பல நாட்டு விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். 

1984-இருந்து 'பர்கின்சன்ஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்று உண்டு. 

1960-இல் ரோம் ஒலிம்பிக்கில் வாங்கியத் தங்கப்பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்திருக்கிறார். காரணம் ஒரு விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும்தான் உணவு தரப்படும் என்று சொன்னதனால் கோபப்பட்டு.  பின்பு 1996-இல் அட்லாண்டா ஒலிம்பிக்கின் போது, தூக்கி எறிந்த பதக்கத்திற்கு பதிலாக மாற்றுத் தங்கப்பதக்கம் இவருக்குத் தரப்பட்டது.

இவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் அலி (Ali) 2001-இல் வெளிவந்தது. புகழ்ப்பெற்ற இயக்குனர் 'மைக்கேல் மேன்' இயக்கத்தில் 'வில் ஸ்மித்'  முகமத் அலியாக நடித்தார். பொதுவாக ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் என்பது, ஒருவரின் சிறுவயது முதல் மரணம் வரை அல்லது சாதனைகள் வரை சொல்லப்படும். ஆனால் இப்படம் அப்படி எடுக்கப்படவில்லை.  

இப்படம் ஒரு தனிமனிதனின் இனம் சார்ந்தப் போராட்டமாக, அரசியல் பார்வையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அலி தன் முதல் உலகச் சாம்பியன் பட்டம் பெறுவதில் தொடங்கி, அவரின் அரசியல் பார்வையில் சென்று, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப்பிறகு மீண்டும், இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டதை அவர் மீட்டெடுப்பது வரை சொல்லப்பட்டிருக்கிறது.

ALI - Trailer - HQ - (2001)

அற்புதமான படம். சிறந்த தொழில்நுட்பத்தில், சிறந்த நடிப்பில், ரசனையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச்செல்கிறது.

ஒரு திரைப்படம் என்பது அதன் கதையம்சம், கருத்து, பொழுதுபோக்கு என எல்லாம் தாண்டி ஒருவித உணர்வை நமக்குள் தூண்டும். என்னைப் பொருத்தவரை அவ்வுணர்வைக் கொண்டுதான் திரைப்படங்களை மதிப்பிடுகிறேன்.  ஒரு நல்ல திரைப்படம், அது என்ன மாதிரியான படமாகவும் இருக்கலாம். ஆக்சன், த்ரிலர், நகைச்சுவை, சோகம் என ஏதோ ஒன்று, அதன் முடிவில் அது ஏற்படுத்தும் உணர்வை, முழுமையாக நான் அடைந்தால் மட்டுமே, அப்படத்தை என் வரையறையில் நல்ல படமாகக் கருதுகிறேன்.

சில படங்கள் நம்மை காதலில் நெகிழச்செய்யும், சோகத்தில் தள்ளாடச் செய்யும், நல்லவனாக இருப்பதில் சுகமிருப்பதாக நம்பச்செய்யும், உண்மையே வாழ்நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைக்கத்தூண்டும். சில படங்கள் சினிமாவே இனி பார்க்க வேண்டாம் என எண்ணத்தூண்டும், அது வேறு வகை..! 

இப்படம் பார்க்கும்போதே, நம்மை நம் அரசியல் அறிவோடு இணைத்துவிடுகிறது.  அது தூண்டும் அறிவுப்பூர்வமான விடைகளை நோக்கிய பயணம், நம்மை ஒரு வரலாறு நிகழும் சமயத்தில் உடனிருந்த நிலையில் வைத்திருக்கிறது. 

இந்தத்திரைப்படத்தின் கட்டுமானத்தை புரிந்துக்கொண்டாலும், அதை ஒரு தொழில்நுட்பாளனாக இங்கே முயற்சித்தாலும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியான ஒன்று.  மிகக் கடினமான கட்டுமானத்தைக் கொண்டது இப்படம்.  இசை, ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என மாற்றி மாற்றி பின்னப்பட்டிருக்கும் இப்படம், ஒரு புதிய அனுபவம். பின்னணியிசை படத்தின் முக்கால்வாசி நேரங்கள் பாடல்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.  

"நானே மிகச் சிறந்தவன், நான் அறிந்துக்கொள்வதற்கு முன்பாகவே அதை சொல்லிவிட்டேன்"
 -முகமத் அலி

"நானே மிகச் சிறந்தவன்" என்று உலகத்திற்கு அவர் சொன்னபோது அவருக்கு வயது இருபது.

தன் வாழ்க்கையை ஒரு தனிமனிதனின் போராட்டமாக, சாதனையாக அவர் எப்போதும் பார்த்ததில்லை.  தன் வெற்றியைத் தன் இனத்தின் வெற்றியாகப் பார்த்தவர் அவர். தன் அங்கீகாரம் தன் இனத்தின் சுதந்திரத்திற்கான அங்கீகாரமாக இருக்கவேண்டும் என போராடியவர். அவர் இளம் பருவத்தில் 'மால்கம் எக்ஸ்' போன்றவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர். தன் காலத்தில் 'மால்கம் எக்ஸ்' மற்றும் 'மார்டீன் லூதர் கிங்' போன்றவர்களின் படுகொலைகளைப் பார்த்தவர். அவர் காலத்திலேயே ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக ஆக முடியும் என்பதையும் கண்டவர்.

ஒடுக்கப்பட்ட இனத்தின் தனிமனித முயற்சிகள், தனிமனித சாதனைகள் யாவும் அவ்வினத்தின் அடையாளமாகவே கொள்ளப்படவேண்டும். தனிமனிதச் சாதனைகளோடு இனத்தின் விடுதலையும் சேர்த்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதும், போராடினால் எதுவும் சாத்தியம் என்பதும்,  'முகமத் அலி' வாழ்ந்துக்காட்டிய பாடம்.

அலி தன்னுடைய முதல் உலகச் சாம்பியன் வெற்றிக்குப் பிறகு அம்மேடையில் சொன்னார் "I shook up the world!" . அது உண்மைதான். நம்மில் பலர், நம்மால் இவ்வுலகத்தை அதிர வைக்க முடியும், அலியைப்போல என்று நம்புவதுகூட இல்லை. பெரும்பான்மையோர் தெரிந்துவைத்திருப்பதில்லை, மேன்மையும், நன்மையும் பிரகாசிக்கத் தாங்கள் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதை. 

அலியின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுவது நாம் இன்னும் சிறப்பானவர்களாக இருக்கலாம் (we can be more) என்பதைத்தான்.  நம்புங்கள் நண்பர்களே நாம் முயன்றால் இந்த உலகத்தை அதிரவைக்க முடியும்.

"மற்றவர்களுக்குச் சேவை செய்வது நீங்கள் இந்த பூமியில் இருப்பதற்கு செலுத்தும் வாடகை" -முகமத் அலி       

குறிப்பு: இது மீள்பதிவு – சமீபத்தில், முகமது அலியைப்பற்றி மீண்டும் படிக்கவும், 'When We Were Kings' படத்தைப் பார்க்கவும் முடிந்தது. அதன் விளைவே இது. அம்மனிதனைப் பற்றி பேசிகொண்டே இருக்கலாம். இவ்வுலகில் நான் மிகவும் நேசிக்கும் மனிதன் அவன்தான்.

'When We Were Kings' படத்தை உடனடியாக பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். வாழ்நாளில் தவறவிட்டுவிடக்கூடாத படம். இதுவரை நான் பார்த்த திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த படம். படத்தின் முடிவிற்குள்ளாகவே ’அலி’ நம்மிடையே மாபெரும் மனிதனாக உருவமெடுப்பதை உணரமுடியும்.

தகவல் : ஆமினா முஹம்மத்

1 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

அலியின் வாழ்க்கை போராட்டவாதிகளுக்கு வழிகாட்டும் புத்தகம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு