நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யூசுபும் மொம்மாலியாக்காவும் 6

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜூலை 31, 2016 | , ,

“மொம்மாலியாக்கா! என்னாது இன்னக்கி நாக்காலியெத் தூக்கிட்டுவந்து சப்புலே நிக்கிறிய?” 

‘இந்த யூசுபுப் பயல் பாத்துட்டானா?’ என்று நினைத்தவர், “மொழங்கால் வலி, இடுப்பு வலி எல்லாம் சேந்துக்கிட்டு, ஆளே நிண்டு தொலுவ விடமாட்டேங்குதுடா” என்று மெதுவாக பதில் கொடுத்த மொம்மாலியாக்கா, ச்சேரில் அமர்ந்து, ‘அல்லாஹு அக்பர்’ என்று தக்பீர் கட்டினார்.

தொழுகை முடிந்து இருவரும் பள்ளியை விட்டு வெளியில் வந்தனர். 

“இன்னிக்கி ‘நூவன்னா’ ஊட்டுக் கல்யாணமாமே?” யூசுபுதான் மவுனத்தைக் கலைத்தான்.

“ஆமாப்பா. எனக்கிந்தான் பத்திரிக்கெ வந்திச்சு.  கல்யாணம் முடிஞ்ச சீர்க்கு சாப்பாடாம்.  போறதா இல்லையாண்டு யோசிச்சுக்கிட்டு ஈக்கிறேன்” என்றார் மொம்மாலியாக்கா. யூசுபு காரணம் புரியாமல் அவரைப் பார்த்தான்.

“அதாம்பா, அந்த பிரியாணி.  அதெல்லாம் நமக்கு ஒத்துக்காது.  விருந்துக்குப் போனாலும், ‘வெஜிட்டேரியன்’ உண்டானு கேட்டுட்டுத்தான் போகணும்” விளக்கினார் மொம்மாலியாக்கா.

“ஆமா.  கொலஸ்ட்ரால்!  பிரியாணி சாப்டாதியோ.  ஆனா, அதிலே ‘நல்ல கொலஸ்ட்ராலும்’ உண்டுன்னு சொல்லுவாங்க” யூசுபு ‘எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்’ கொடுத்தான்.

“அதென்னப்பா ‘நல்ல கொலஸ்ட்ரால்’?”  ஆர்வத்தோடு கேட்டார் மொம்மாலியாக்கா.

“அதா?  அதெக் கண்டுபிடிக்கிறத்துக்குள்ளே பாதி உஸுர் போய்டும்” என்றான் யூசுபு.

“அப்ப விடு அதை” என்று முற்றுப்புள்ளி வைத்தார் மொம்மாலியாக்கா.  அத்தோடு யூசுபின் வீடு வந்தவுடன், இருவரும் பிரிந்து விட்டனர்.

***  

கல்யாண வீடு களைகட்டி நின்றது.  இடம் போதாமையால், அடுத்த 2 வீடுகள், எதிர்த்த வீடு எல்லாம் நிரம்பி வழிந்தது.  வேகவேகமாக ஒரு வீட்டுக்குள் நுழைந்தார் மொம்மாலியாக்கா.  சஹனுக்கு நாலுபேர் என்று அமர்ந்து எல்லாரும் சஹன் கூடிவிட்டார்கள்.  அதோ ஒரு மூலையில் 3 பேர்! அவசரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார் மொம்மாலியாக்கா;  அந்த 3 பேர் யார் யார் என்று பார்க்கவில்லை.  

எதிர்த்தாப்லே இருந்து ஒரு வேகமான கனைப்புக் கேட்டது.  ஏறிட்டுப் பார்த்தார்.  யூசுபு!  ‘நம்மலெக் கலாய்க்க இங்கேயும் வந்துட்டானா பயல்?’ என்று நினைத்தவர், தலையைக் கவிழ்ந்து கொண்டார்.  ‘இன்னக்கி ‘சுபு’ தொலுதுட்டு வரும்போதுதானே இவனிடம் மொழங்கால் வலி இடுப்பு வலி, கீலே உக்கார முடியலேண்டு சொன்னோம்!  பிரியாணி, கொலஸ்ட்ரால், வெஜிட்டேரியன் பத்தியெல்லாம் பேசிக்கிட்டு வந்தோம்?  இந்த ஹராமி நம்ம சஹன்லேயே இரிக்கிறானே!” என்று நினைத்தவர், மவுனம் காத்தார். 

ஒருவாறு விருந்து முடிந்தது.  மொம்மாலியாக்கா யூசுபைத் தவிர்த்து விட்டுத் தனியாகப் போக நினைத்தார்.

மறுபடியும் அந்தக் கனைப்பு பின்னால் கேட்டது!  ‘பாவிப் பயல் யூசுபோ?’ என்று நினைத்துத் திரும்பிப் பார்த்தார். சாட்சாத் அவனேதான்!

“என்னாது.....?  எப்டி இருந்திச்சு பிரியாணி?”  கிண்டலாகக் கேட்டான் யூசுபு.

“உம்” மட்டும்தான் பதில் மொம்மாலியாக்காவிடமிருந்து.

“பிரியானிலே, சோத்தைவிடக் கறிதான் கூடுதல்!”  கிண்டினான் யூசுபு. 

“நேத்து சொன்னிய, உங்களுக்கு இனிப்பு நீர் ஈக்கிதுண்டு? பிர்னிச் சட்டியெ வளிச்சு வளிச்சு சாப்டீங்க?  இன்னக்கி, உக்கார முடியலேண்டு சொன்னிய? வேஜிட்டேரியன்லாம் எங்கே போச்சு?” யூசுபு நக்கலாகக் கேட்டான்.

அட சும்மா இருடா.  ஒரு ஆசைக்கி இன்னக்கி மட்டும்” என்று மட்டும் சொல்லி விட்டு, தன் வீட்டை நோக்கி வளைந்து சென்றார் மொம்மாலியாக்கா! 

அதிரை அஹ்மத்

இயற்கை இன்பம் – 17 1

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ஜூலை 30, 2016 | , , , ,

தேனீ பூக்களினுள்  பொதிந்துள்ள  இன்பத்  தண்ணீர்
                  போய்க்குடிக்கும்  தேனீக்கள்  திரும்பி  வந்தே
ஆக்கிவைத்த  அடைக்கூட்டின்  அறையி  னுள்ளே
                  அடுக்கடுக்கு  வயிற்றுக்குள்  மாற்றம்  பெற்ற
பீக்கழிவைத்  தேனாகச்  சேர்த்து  வைத்துப்
                  பெருகிவரும்  நோய்களுக்கு  மருந்தாய்  ஆக்கும்!
ஈக்களினால்  மாந்தற்குக்  கிடைக்கும்  இந்த
                  இணையற்ற  மருந்திறையின்  அருளே  யன்றோ?!

அதிரை அஹ்மத்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 049 4

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூலை 29, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

நீங்கள் வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் : அந்நூர்: 24:61)

''மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 861)

'பெண்களான எங்களைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். (அபூதாவூது)

திர்மிதீயில் வரும் ஹதீஸ் :

''நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் பள்ளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பெண்களில் ஒரு கூட்டம் அங்கே அமர்ந்திருந்தது. உடனே அவர்கள் தன் கையால் சைகை மூலம் ஸலாம் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீத்(ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீயில்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 864)

'முஸ்லிம்களும், இணை வைப்போரும், சிலை வணங்கிகளும், யூதர்களும் கலந்து இருந்த ஒரு சபையை கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: உஸாமா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 868)

''உங்களில் ஒருவர் அவைக்கு வருவாரானால், அவர் ஸலாம் கூறட்டும். (அங்கிருந்து) புறப்பட விரும்பினாலும் ஸலாம் கூறட்டும்! (புறப்படும் போது ஸலாம் கூறுதல் எனும்) பிந்தியதை விட, (வந்தபோது ஸலாம் கூறுதல் எனும்) முந்தியது ஒன்றும் அதிக முக்கியத்துவம் பெற்றதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 869)

வீட்டில் நுழைய அனுமதி கோருதலின் ஒழுங்குகள்

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.  (அல்குர்ஆன் : 24: 27)

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு  அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ''திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ்; அறிந்தவன். (அல்குர்ஆன் : 24: 28)

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்: ஞானமிக்கவன். (அல்குர்ஆன் : 24: 59)

''அனுமதி கேட்பது ஏற்படுத்தப்பட்டது என்பது, (தவறான) பார்வையை (விட்டும் தடுக்கும்) காரணமாகத்தான்'' என்று நபி(ஸல்); கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஹ்து(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 870)

''நபி(ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். அவர்களின் (வீட்டினுள்) நுழைந்து, ஸலாம் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், ''நீர் திரும்பிச் செல்வீராக! அஸ்ஸலாமு அலைக்கும் நான் உள்ளே வரலாமா?'' என்று கேட்பீராக!  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கில்தா இப்னு ஹன்பல் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (புகாரிமுஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 873)

தும்மியவர், 'அல்ஹம்துலில்லாஹ்' கூறினால் அவருக்கு பதில் கூறுவது விரும்பத்தக்கதாகும்.

நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால், அதைக் கேட்ட அனைத்து முஸ்லிமின் மீதும் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' (அல்லாஹ் உனக்கு  அருள் புரிவான்) என்று கூறுவது கடமையாக உள்ளது. கொட்டாவி விடுதல் என்பது, ஷைத்தானின் செயல்களில் உள்ளதாகும். உங்களில்  ஒருவர் கொட்டாவி விட்டால், அதை முடிந்த அளவுக்கு  தடுத்துக் கொள்ளட்டும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 878)

 ''உங்களில் ஒருவர் தும்மினால் அவர், ''அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறட்டும்! அவரின் சகோதரர் அல்லது அவரது நண்பர் அவருக்கு ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறட்டும்! யர்ஹமுகல்லாஹ் என அவருக்கு ஒருவர் கூறினால், தும்மியவர், "யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹுபாலகும்'' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக! உங்கள் நிலையை சீராக்குவானாக) என்று கூறட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 879)

''உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' எனக் கூறுங்கள். அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறவில்லையானால், அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' கூறாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 880)

''நபி(ஸல்) அவர்கள் முன் இரண்டு நபர்கள் தும்மினார்கள். அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறி துஆச் செய்தார்கள். மற்றொருவருக்கு துஆச் செய்யவில்லை. தனக்கு துஆச் செய்யாத நிலையில் உள்ளவர் ''இன்ன மனிதர் தும்மினார். அவருக்கு நீங்கள் ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறி துஆச் செய்தீர்கள். நான் தும்மினேன். எனக்கு துஆச்  செய்யவில்லையே'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். ''இவர் ''அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார். நீர் அல்லாஹ்வை புகழவில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 881)

''நபி(ஸல்) அவர்கள் தும்மினால் தன் கையை அல்லது  தன்  துணியை தன் வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்து) குறைத்துக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 882)

''உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால் தன் கையால் தன் வாயை மூடட்டும். நிச்சயமாக ஷைத்தான் அதன் வழியாக நுழைந்து விடுவான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 884)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….

99:01 பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,

99:02 தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,

99:03 இதற்கு என்ன நேர்ந்தது?  என்று மனிதன் கேட்கும் போது,

99:04,05 அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.

99:06 அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.

99:07 அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.

99:08 அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன் :அஸ்ஸில்ஸால் - நில அதிர்ச்சி : 99 :1 - 8)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

உலகம் எப்படி உருவானது ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், ஜூலை 28, 2016 | , , ,


உலகம் எப்படி உருவானது  என்ற சோதனை நடக்கின்றது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்  இந்த சோதனையை நடத்துகிறது.  உலகம் எப்படி உருவானது(ரூம் போட்டு யோசிப்பான்களோ ) என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்.(இது என்ன லண்டன் கந்துரி கடையா வேடிக்கை பார்க்க ) இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக பல  பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகள் கூட்டு சேர்ந்து இந்த  டீம் வொர்க் நடக்கின்றது.(இதில்  நீங்கள் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும்  ஒரே பைப்பில் ஓட உட போறிங்க நாங்க பல வருசத்துக்கு முன்பே ஒரே பைப்பில் நல்ல தண்ணியையும் சாக்கட தண்ணியும் மோத விட்டு என்னென்ன நோய்கள் பொது மக்களுக்கு வருதுன்னு கண்டு பிடிச்சிட்டோம்)


தடிமனான இரும்பால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் பலவித  ரசாயனங் களை கலந்து பூசி மொழுவி , அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு  கொண்ட இந்த கொல்லாய்டர்.எனும் ஆய்வு கலன் தயார் செய்யப்பட்டு உள்ளது (நீங்களெல்லாம் இரும்புக்கு ரசாயனம் தடவுரிய நாங்க கோழிக்கு மசாலா தடவுறோம் )

இது அணுக்களைp பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். இதன் செயல்பாடும்  ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். (என்ன இவன் எப்போ பார்த்தாலும் வேகத்தை பத்தியே போட்டு அருக்கின்றானே என்று வேகமா புலம்புவது காதில் விழுது ) 1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன சர்கஸில் கூண்டுக்குள் பைக்கில் சுத்துவார்களே அதுபோல் . LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.(இதை எல்லாம் எப்படித்தான் எண்ணுகிறார்களோ)

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். (அந்த கரண்டை கொஞ்சம் தமிழ் நாட்டு பக்கம் திருப்பி விட்டா நாங்க கொசு கடி இல்லாம நிமதியா தூங்குவோம்) அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் அப்சர்வ் செய்து  அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்ய திட்டமிட்டு உள்ளனர் கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.அதாவது உலகம் எப்படி உறவானது என்று ஒரு ரிகர்சல் பார்க்க போகின்றார்கள். இதை சிம்பிளா சொன்னா வட்டில் அப்பம் வைக்க தெரியாதவக சும்மா நாலு முட்டைக்கு வட்டில் அப்பம் வைத்து பார்ப்பதுபோல்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம் ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.அதாவது கருவாட்டு ஆன வாசத்துக்கு நம்ம  ஊர் பூனை அடுபங்கரையை  சுற்றி சுற்றி வருவதுபோல்  இந்த வளையத்தில் புரோட்டான்கள் சுற்றி சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். (காட்டு மாடுகள் அனிமல் சேனலில் முட்டிக் கொள்வதுபோல்) இப்போது புரிகிறதா. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்று. 

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை வட்டில் அப்பம் வைக்க முட்டை அடிப்பதுபோல் அடித்தால்  குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் பலவாறாக அடித்து   சிதறடிக்கப்படும்   மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம்.உண்டு   ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் இது வரை நிரூபித்ததில்லை.அறிவியலில்  எந்த  விசயமாக  இருந்தாலும்  நிருபிக்கப்படவேண்டும் (சும்மா வாயால் விடும் புருடாவிற்க்கெல்லாம் வேலை இல்லை) இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை மூலம்  வெளியில் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் 5000 விஞ்ஞானிகள்  செயலில் இறங்கி உள்ளனர்   ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. (கூடங்குள  கதைதான் அங்கும் )உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கெளப்பியும்  அவுத்தும்  விடுகின்றார்கள் 

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் ஊரில் ஒரு  சஹன் சோத்தை ஒரே ஆள் உள்ளே தள்ளுவிட்டு மறு சோறும் கேட்ப்பாரே அதுபோல்  . உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை போட்டு ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்ப மட்டும் என்னவாம் தெளிவாவா இருக்கு என்று பலரும் புலம்புவது காதில் விழத்தான் செய்கின்றது 

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள்,கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலங்கள் அல்ல  அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் (D.M.K.குடும்பம் அல்ல ) இருக்கும் மண்டலத்தின் பெயர் பால்வெளி மண்டலம்

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.  

ஒரு சிறிய பட்டாணிக்கடலை   சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், (அது என்ன நிலாக்கள் நிலா தானே என்று  கேள்வி வரும் அதாவது நமது பூமிக்கு ஒரு நிலாதான் மற்ற கோள்களுக்கு  நான்கு  ஐந்து நிலாக்கள்  எல்லாம் உண்டு நாம் ஒருநிலாவை வைத்துக்கொண்டு பாட்டும் கவிதையும் போட்டு தாக்குகின்றோம்  ). எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவைதான்  கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என்ற அச்சத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள் .

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.இதைத்தானே கூடங்குளத்திலும் நம் விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள் எந்த ஒரு நாட்டில்   விஞ்ஞானிகளும் பொது மக்களும் ஒத்து போகின்றார்களோ அந்த நாடுதான் முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும்.

இத்தனை பணம் செலவு செய்து உலகையே பணயம் வைத்து இந்த ஆராய்ச்சியை செய்யும் இவர்கள் இந்த அல் குரானின் சூராவை பார்க்காதது ஏனோ !!!!! 

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

50:38   وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ

50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை

57:4   هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا  ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்

Sஹமீது

ரோமாபுரியின் ரோஜா மலர்! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், ஜூலை 27, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 18

அவர் ஓடினார். தலை தெறிக்க ஓடினார். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடினார். வெஞ்சினமும் வீராவேசமுமாகத் தன்னைக்  குதிரைகளில் துரத்தி வருபவர்களிடம் சிக்கினால், உயிர் தம்முடையதில்லை என்பதை முற்றிலும் உணர்ந்தே, அவர் காற்றைக் கிழித்துப் பறந்தோடினார்!

இதற்கு மேல் ஓட முடியாது என்ற நிலையில் ஒரு மலைக் குன்றின் மீது சடாரெனப் பாய்ந்து ஏறி நின்றுகொண்டு தன்னைத் துரத்தி வந்த மக்கத்து மடையர்களைப் பார்த்துக் கத்தினார்.

“எவனாவது இதற்கு மேல் என்னை நெருங்கினால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் அம்புகளால் அவனைக் கொன்று போடுவேன். அதையும் மீறி வேறு யாரும் நெருங்கினால், இருக்கவே இருக்கிறது என் போர்வாள்!” என்று  உயர்த்திக் காட்டி நின்றார் உருக்கு மனமும் உடையாத உறுதியுமாய்!

அவரைத் துரத்தி வந்தவர்கள், ஓரிறையை மறுத்து வந்தவர்கள்  அங்கே மலைத்து நின்றார்கள்!

ஒருவன் கூவினான். "எங்கள் ஊரில் நீ திரட்டிய பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு, யத்ரிபுக்கு நீ ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது"

"ப்பூ! இவ்வளவுதானா? நான் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் தந்துவிட்டால்,  தடையில்லைதானே?"

"தடையில்லை!"

"அப்படியானால், இன்னின்ன இடத்தில், இவ்வளவு இவ்வளவு வைத்திருக்கிறேன். அத்தனையும் எடுத்துக் கொள்ளுங்கள். என்னை என் வழியில் விட்டு விடுங்கள்." உடன்படிக்கை உடனே முடிந்தது!

ரோமாபுரியிலிருந்து மக்கா வந்து சேர்ந்ததிலிருந்து அயராது உழைத்துத் திரட்டிய அத்தனைச்  செல்வங்களையும் ஒரு நொடியில் உதறித் தள்ளிவிட்டு, அல்லாஹ்வின் பாதையில் மதீனாவை நோக்கி நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் வீறு நடை போட்டவரைப் பற்றி, அங்கே மதீனாவில் அல்லாஹ்வின் தூதருக்கு அழகிய வேத வசனம்  அருளப்பட்டுக் கொண்டிருந்தது!


அவர்தான் பாரசீகத்தில் ராஜகுமாரனாகப் பிறந்து, ரோமாபுரியில் அடிமையாக வளர்ந்து, மக்காவில் மிகப்பெரும் வணிகராகி, தற்போது தம் செல்வத்தையெல்லாம் அல்லாஹ்வுக்காகத்  துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டு, மதீனா முனவ்வராவை நோக்கி வீசிய கையும் வெறுங் கையுமாக, ஆனால், இதயமெல்லாம் இறைநேசத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி).

"அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி, தம்மையே விற்று விடுவோரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ் (அத்தகைய) அடியார்களிடம் மிகப் பெரும் கருணை கொண்டவன்!"(1)

இதுதான் எல்லைகளை எல்லாம் கடந்த பாக்கியம்!
தன்னுயிர் பிரியும் 'சகராத்' உடைய பெரும் வேதனையிலிருந்து விலக்கப்படுவதை விட, மண்ணறையின் கடுமையான நெருக்குதலிலிருந்து காக்கப்படுவதை விட, எரிதழல் நரகின் கொடிய தண்டனையில் இருந்து விடுதலை பெறுவதை விட, சுகந்தரும் சொர்ண பூமியாம் சுவர்க்கத்தின் சோலைகளில் மாளிகைகள் கிடைப்பதை விட,

ஆங்கே, கற்பனைக் கெட்டாத அத்தனை இன்பங்களையும் அனுபவித்து மகிழ்வதை விட,

மேலும் இவை அல்லாத எல்லாவற்றையும் விட,  தன்னை அணுவணுவாகப் படைத்தவனின் தன் நேசர்கள் மீது கொண்ட "திருப்தி" எனும் திருப் பொருத்தம் அருளப்படுவதே பாக்கியங்களில் எல்லாம் மிகப்பெரும் பாக்கியமாகும்!

அதுதான் அல்லாஹ்வின் 'ரிள்வான்!' அதுதான் பேறுகளில் எல்லாம் மிகப்பெரும் பேறாகும்!

அந்தப் பெறுதற்கரிய பெரும் பாக்கியத்தை, தம் தோழர்களுக்குப் பெற்றுத் தந்தவர் யார்?

எவர் வரவால் இந்த உலகம் எல்லாம் சிறந்ததோ,

எவர் வரவால் அந்த உள்ளம் எல்லாம் மகிழ்ந்ததோ, அவர்தாம்!

அவருக்கு எழுதவும் தெரியாது! படிக்கவும் தெரியாது!

எனினும், சூழலைச்  சுவர்க்கமாக்க, ஏற்றமிகு நபி எழுந்து வந்தார்!

அவர் நின்று பேசினார். எல்லா இலக்கியங்களையும் அது விஞ்சி நின்றது!

அவருக்கு அருளப்பட்டதை ஓதிக் காட்டினார். அதுபோன்ற ஒரு வரியை

எவராலும் இதுவரை எழுத முடியவில்லை!

அவர் பேசிய மொழியெல்லாம் வழியாகவும்

அவர் காட்டிய வழியெல்லாம் வாழ்வாகவும் ஆகிப்போனது!

மொத்தத்தில்,

எவ்வழி எல்லாம் நல்வழியோ இவ்வுலகில்,

அவ்வழி எல்லாம் நபிவழியாய் நிலைத்து நின்றது!

இனிய தோழர்கள் கடந்து சென்ற பாதையெல்லாம் இறைவழியாய் எழுந்து நின்றது!

அதன் பெயர்  அறவழி! அதுதான் அல்லாஹ்வின் வழி!

அண்ணலாரின் பயிற்சிப் பாசறை ஒரு சாதாரணமான பள்ளிக்கூடமல்ல; அது ஒரு பல்கலைக்கழகம் என்று பார்த்தோம். அந்த இறையருள் மிகுந்த இனிய தூதரின் தூதுத்துவப் பயிற்சிக்கூடம், சாதாரணப்  பல்கலைக் கழகமல்ல!

கண்ணியத்தூதர் போதிப்பதற்காக கம்பீரமாக நின்ற அது ஒரு "பன்னாட்டுப் பல்கலைக் கழகம்!"

அங்கே, அபூபக்ரு, உமர், உதுமான், அலீய், தல்ஹா, ஜுபைர் போன்ற மக்காவின் மைந்தர்களும்

அபூதர், அனஸ் ஆகிய கிஃபாரி கோத்திரத்தாரும்

அபூஹுரைரா, அபூதுஃபைல் போன்ற அவ்ஸ் குலத்தவரும்

அபூமூஸா அஷ்அரீ, முஆத் பின் ஜபல் போன்ற யமன் நாட்டினரும்

தம்மாத் இப்னு தஃலபா போன்ற அஸ்துக் குலத்தவரும்

கப்பாப் இப்னு அல்அரத் போன்ற பனூ தமீம் கோத்திரத்தாரும்

முன்கித் பின் ஹப்பான், முன்திர் இப்னு ஆயித் போன்ற பஹ்ரைன் தேசத்தவரும்

உபைத் மற்றும் ஜஃபர் போன்ற ஓமன் நாட்டவரும்

ஸல்மான் அல்ஃபார்ஸி போன்ற பாரசீக தேசத்தவரும்

பிலால் பின் ரபாஹ் போன்ற அபிசீனிய நாட்டினரும்

ஃபைரூஜ் போன்ற தைலமா பகுதியினரும்

சன்ஜித் போன்ற ஈரானியரும்

ஃபர்வா இப்னு அம்ர் போன்ற சிரியா தேசத்தவரும்

மேலும், சுஹைப் பின் ஸினான் என்ற  ரோம் தேசத்தவரும்

இப்படிப் பலதரப்பட்ட குலத்தவரும் பலதரப்பட்ட இனத்தவரும் பலதரப்பட்ட நாட்டினரும் அல்லாஹ்வின் தூதரின் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்து பயிற்சி பெற்றார்கள். பாடம் கற்றார்கள்! இவர்களே, மார்க்கத்தை எத்திவைக்கும் மகிமையாளர்களாக, அநீதிகளை எதிர்த்துப் போராடும் அறப்போர் வீரர்களாக, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் அறிஞர் பெருமக்களாக, சென்றவிடமெல்லாம் வாகை சூடும் வெற்றிப் படைத் தளபதிகளாக, அமைதிப் பணிபுரியும் அருங்குணம் கொண்டவர்களாக உருவெடுத்தார்கள். தங்கள் செயலின் அழகால் சிறந்து  மிளிர்ந்தார்கள்!

இப்படி அறிவும் ஆற்றலும் அமைந்தவர்கள் மட்டுமல்ல! உண்மையும் விசுவாசமும் உடையவர்கள் மட்டுமல்ல! ஏற்றுகொண்ட கொள்கைக்காக தங்கள் இன்னுயிரையும் தயங்காது எடுத்து வீசிய தியாக சீலர்கள் அவர்கள்! இந்த உத்தம சீலர்களின் உன்னத வரிசையில் ஒருவர்தாம் நம் சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி) அவர்கள்.

சுஹைப் பின் ஸினான் (ரலி) மெசபடோமியாவில் பிறந்தவர். பாரசீகப் பேரரசின் ஆளுநரான ஸினானின் செல்லப் பிள்ளை!

தந்தை ஸினான் 'நுமைர்' எனும் அரபுக் கோத்திரத்தைச் சேர்ந்தவர். சுஹைப் (ரலி) அரபித் தந்தைக்கு பாரசீகத்தில் பிறந்த ராஜகுமாரன்!

எனினும், ரோமர்களின் ஒரு படையெடுப்பில் கைது செய்யப்பட்டு விதிவசத்தால்  ரோமாபுரியில் அடிமையாக வளர்ந்தவர்!

கிரேக்க மொழி பேசியதாலும் சிவந்த தலைமுடியும் வெளிர் நிறமும் அந்நியமான அரபி உச்சரிப்பும் அசல் வெள்ளைக்காரராகவே, மக்காவின் மக்களுக்கு அவரை அடையாளம் காட்டியதால் "சுஹைப் அர்-ரூமி (ரோமாபுரிக்காரன்)" என்றே அந்த மக்களால் அவர் அழைக்கப்பட்டார்!

கிரேக்கர்களிலேயே முதன்முதலாக, இஸ்லாத்தை வாழ்வு நெறியாக வலிந்து ஏற்றுக் கொண்டதால், 'கிரேக்க நாட்டின் முதற்கனி' என்று இவரை வர்ணித்தார்கள் எல்லோரும் போற்றுகின்ற இனிய நபியவர்கள்!

ஒரு வழியாகக் கொடுமையாளர்களிடமிருந்து தப்பித்து வந்து, புனித மதீனா நகருக்கு வெளியே குபா பள்ளியில் தங்கி இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஆரத்தழுவி, அவர் பேச வாய் திறக்குமுன் பெருமானார் (ஸல்) அவர்கள், 'நீர் நல்ல வெகுமதியான வாணிபம் செய்து வந்துள்ளீர் அபுயஹ்யாவே' என்று மூன்றுமுறை அழுத்தமாகச் சொல்லி பிறகு, அவர் குறித்து அருளப்பட்ட அல்லாஹ்வின் பாக்கியமிகு வசனங்களை அவருக்கு ஓதிக் காட்டினார்கள். அவர் பொருட்டு அருள்மறையில் ஒரு வசனமே அருளப்பட்டது குறித்து அவர் மெய்சிலிர்த்து நின்றார்! அல்லாஹ்வுக்கு இனிது நன்றி கூறினார்!

தன்னந்தனியாகப் பாலைவெளியை நடந்தே கடந்து வந்ததில் மிகவும் களைத்துப் போயிருந்தார் சுஹைப் பின் ஸினான் (ரலி). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைப் பின் ஸினான் (ரலி) யை உணவுண்டு ஓய்வெடுக்கச் சொன்னதால், அவர் ரொட்டியும் பேரீத்தையும் வைத்து உணவுண்ணத் தொடங்கினார்.

வாழ்வின் சோதனைகள் கவலை எனும் இருளை அள்ளி வீசும்போது நமக்கு ‘நகைச்சுவை’தானே சற்றே ஒளியேற்றி வைக்கிறது!

அதுவும், முத்திரைத் தூதர் முஹம்மது நபிக்கு முகத்தில் புன்னகையும் அகத்தில் நகைச்சுவை உணர்வும் மெல்லிய கீற்றாக எப்போதுமல்லவா இலங்கிக் கொண்டே இருக்கும்!

நண்பரைக் கண்ட மகிழ்ச்சியில் அவரிடம் நகைச்சுவையாக உரையாடத் தொடங்கினார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். சுஹைப் பின் ஸினான் (ரலி) யின் ஒரு கண் வெப்பத்தால் வீங்கி இருப்பதைக் கண்ட பெருமானார் (ஸல்), அவரிடம் சிரித்துக்கொண்டே "கண் வீங்கியிருக்கிறதே! எப்படி நீ சாப்பிடுகின்றாய் சுஹைப்?" என்றார்கள் வேடிக்கையாக!

நகைமுகம் கொண்ட நாயகம் அவர்கள், தன்னிடம் வேடிக்கையாகப் பேசுகிறார்கள் என்பதை விளங்கிக் கொண்ட சுஹைப் பின் ஸினான் (ரலி)யும் "அதனால் என்ன! நன்றாக இருக்கும் மற்றொரு கண்ணின் உதவி கொண்டு, நான் வாயால்தானே உண்ணுகிறேன் அல்லாஹ்வின் தூதரே!" என்றார் அவரும் வேடிக்கையாக!

சுஹைபின் இந்த சாமர்த்தியமான பதில் கேட்டு மனமகிழ்ந்து சிரித்தார்கள் சிரிப்பழகர் நம் செம்மல் நபி நாயகம் அவர்கள். (2)

அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து, மஸ்ஜித் தக்வா (இறை அச்சத்தால் உருவாக்கப்பட்ட பள்ளி) என்று குர்ஆன் கூறும் குபா பள்ளியை நிர்மாணிப்பதில் அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து சுஹைப் (ரலி) யும் பெரும் பங்கு எடுத்துகொண்டார்.(3)

அரபிகளில் முதல் முஸ்லிம் நான்!

அபிசீனியர்களில் முதல் முஸ்லிம் பிலால் பின் ரபாஹ்!

பாரசீகர்களில் முதல் முஸ்லிம் ஸல்மான் அல்ஃபார்ஸி!

ரோமர்களில் முதல் முஸ்லிம் சுஹைப் பின் ஸினான்! என்று அருளினார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

சுஹைப் பின் ஸினான் (ரலி) அவர்கள், வள்ளலாகி தமது செல்வமெல்லாம் வறியோர்க்கு வாரித் தருகிறார் என உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிந்து, சுஹைப் (ரலி) உடைய தாராளத் தன்மையை மிகவும் பாராட்டுபவராக இருந்தார்கள்.

அதுமட்டுமின்றி, இறக்கும் தருவாயில், அடுத்த கலீஃபா தேர்ந்தெடுக்கப்படும்வரை மஸ்ஜித் நபவீயின் இமாமாக சுஹைப் பின் ஸினான் (ரலி) தான் பணியாற்ற வேண்டும் என்றும் தம்  ஜனாஸா தொழுகையையும் சுஹைப் பின் ஸினான் (ரலி) தான் முன்னின்று தொழவைக்க வேண்டும் என்றும் தம்  இறுதி நேரமதில் உறுதியுடன் நியமித்தார்கள்!
எத்தகைய  உன்னதமான உயர்ந்த தகுதி அது!

மரணம் தன் கொடுமையை இழந்து, மகிமை மிகும் நபித் தோழர்களின் மறுமை வெற்றிக்கான மகத்தான பாதையாக அதனை மாற்றிக் கொடுத்தது!

o o o 0 o o o
ஆதாரங்கள்:

  1. அல்குர்ஆன் 2:207
  2. இப்னு மாஜா 3569 : சுஹைப் பின் ஸினான்  அர்ரூமி
  3. அல்குர்ஆன் 09 :108
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

அணு அணுவான மின்சாரமே ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஜூலை 26, 2016 | , , ,


தட்டுப்பாடு, கட்டுப்பாடு, ஊரெல்லாம் ஒரே கூப்பாடு ! மின்சாரத்தை வெட்டாதே ! எங்கள் வாழ்வாதாரத்தில் விளையாடாதே ! உயிரைப் பனையம் வைக்காதே... தொடரும் போராட்டங்கள். இதெல்லாம் எதற்கென்று தெரியாததுபோல் ஒரு கூட்டம் தான் உண்டு தனது நிலைகண்டு நாட்களை கடத்துகிறது.

மின்சாரத்திற்கான தேவையுடைய மக்களின் கோரிக்கையைவிட அது கிடைக்கப்பெறும் உலைய மூட போராடும் மக்களின் கோரிக்கை வலுத்திருந்து இப்போது வழுவிழந்து நிற்கிறது ! மின்சாரத்தை தொட்டாலும் பேராபத்து அதனை கிடைக்காமல் விட்டாலும் ஆபத்து !

என்ன செய்யலாம் !? -  கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை !

அணுவை வைத்து மின்சாரம் எப்படி உற்பத்தி செய்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்  

அணுக்கரு பிளவுக்கு முக்கியமாக  பயன்படுத்தப்படுவது   யுரேனியம் அல்லது   புளுட்டோனியம் இதில் எது நம் நாட்டின் மண்ணில் அதிகம் கிடைக்கின்றதோ   அதை வைத்து . “இந்த அணு ஆற்றலை உருவாக்கத் தேவையான  மூலப் பொருள் தயார் செய்யப்படுகின்றது    ஒவ்வோர் அணுமின் உலையிலும் அணுக்கரு பிளப்புக்கு   தேவையான யுரேனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள். எதிர் எதிராக  இருக்கும் இந்தக் கம்பிகளைக் “கோர்’ என்று சொல்வார்கள்.(நாம் கார்களுக்கு பயன்படுத்தும் ரேடியேட்டரில் இருப்பதுபோல்)   அணு உலையில் நடுப் பகுதியில் அணுக்கலனில் உள்ள தண்ணீரில் இந்தக் கோர் வைக்கப்பட்டு இருக்கும். உலோகத்தால் செய்யப்பட்ட  இந்த அணுக்கலன் மிகவும் பாதுகாப்பானது.(அப்படித்தான் சொல்றங்க!) அணுக்கரு பிளப்பை  கட்டுக்குள் வைப்பதற்குப் “போரான்’ இல்லையென்றால்  காட்மியம் என்ற கட்டுப்பாட்டு கருவி வைக்கப்பட்டு இருக்கும். இதற்கு   கட்டுப்பாட்டு கம்பிகள் என்று சொல்வார்கள் இது செயல் இழந்தால் யாரும் செயல் பட முடியாது

அணுக்கருவைப் பிளக்கும் போது (அதாவது நியூட்ரான்கள்  என்னும் அணுத்துகள்களை  மோதி பிளக்க செய்வது)  மிக அதிக அளவில் வெப்பம் வெளிப்படும் . அந்த வெப்பத்தைக்கொண்டு     கலனுக்குள் உள்ள நீரை கொதிப்படைய செய்து நீரை ஆவியாக்குவார்கள் இங்கே வெளிப்படும் அணுக்கதிர்கள்  வெளியே வராத அளவுக்கு   அணுக்கலனின் சுவர் மிகவும் தடிப்பாகவும் அணு கதிர் வீச்சை தாங்க கூடிய தன்மையிலும் அமைக்கப்பட்டிருக்கும் .

மேலும் அணுவை  பிளக்கும் போது ஏற்படும் கடும் வெப்பத்தினால் கொள்கலனில் உள்ள நீர் கொதித்து  நீராவி உருவாகும் நிலக்கரி எஞ்சினில் நீராவி வருவதை விட பலமடங்கு அதிகமான அழுத்தம் மிகுந்த அந்த நீராவி குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு   அந்த அழுத்தத்தின் மூலம்  பெரிய அளவில் உள்ள டர்பன் என்று சொல்லப்படும் டைனமோ சுழற்றப்படும் அது சுற்றுவதன்  மூலம் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படும் 

இந்த  வகையில் பார்க்கும்போது அணுமின்சாரம் உருவாக்க அடிப்படையாக அணு உலையில் ஏற்படும் வெப்பமே காரணம் வெப்பத்தைத் தணிக்க (சூட்டை தணிக்க)தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றது.மறுபக்கம் உலையில் (தொட்டியில்) . அணுக்கலனின் வெப்பம் குறிப்பிட்ட அளவை  தாண்டாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம் . இதனால் தண்ணீர் மூலம் அணுக்கலன் எப்போதும் சூட்டை தனித்துக்கொண்டே(COOLING SYSTEM)    இருக்க வேண்டும் இதற்கு அதிகமாக தண்ணீர்   தேவைப்படும்.அதனால் தான் அணு உலைகள் எப்போதும் கடற்கரை ஓரமாக அமைக்கின்றார்கள் 

கடல் நீரை பெரிய பம்புகள் வைத்து உரிந்து அணுகலன் உள்ளே செலுத்தி மறுபக்கம் அந்த நீர் சூடாக வெளியே வரும் இப்படி கடல் நீர் உறிஞ்சப்படும் போது மீன்களும் மீன் குஞ்சுகளும் உறிஞ்ச படாமல் பாதுகாப்பு  செய்யப்பட்டு இருக்கும் இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் அணுகலன் அதிக அளவில் சூடாகி வெடித்து விடாமல் இருக்கும் இதில்  ஏதாவது தவறு ஏற்பட்டு, தண்ணீர் வராமல் நின்று போனால்   அணு உலை சூடு தாங்காமல் வெடித்து விடும். அப்படி வெடித்தால் என்ன ஆகும் என்று அதனைச் சுற்றியிருப்பவர்களுக்கு தெரியும் முன்பே உயிர்  அவர்களை விட்டு பிரிந்து போயிருக்கும்.

Sஹமீது

மக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், ஜூலை 25, 2016 | , , ,


இதற்கு முன்பு ‘அதிரை நிருபர்’ தளத்தின் ஓர் இழையில், ‘மதீனாவில் ராமழானும் பெருநாளும்’ எனும் தலைப்பில் ஒரு பதிவு இட்டிருந்தேன்.  இப்போது, உங்களைப் புனித மக்காவுக்கு அழைத்துச் செல்கின்றேன்.

மக்கா ‘ஹரம் ஷரீஃப்’ நிர்வாக அதிகாரியான ஹமூத் அல்-இயாத் அவர்களின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் ரமழானில் இப்புனிதப் பள்ளியில் நாற்பது லட்சம் மக்கள் தம் நோன்பைத் துறப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்!  நம் கண்கள் வியப்பால் விரிகின்றன!  இது, கடந்த இரண்டாண்டுகளுக்கு முந்தைய செய்தி.  தற்போது எப்படியோ?

எனினும், எனது அனுபவத்தில் கண்ட ‘இஃப்தார்’ எனும் நோன்பு துறக்கும் நிகழ்வைச் சில வரிகளில் தந்து, வாசகர்களின் வியப்பையும் வேட்கையையும் கிளர்ந்தெழச் செய்ய விழைகின்றேன்.

இரவு – பகல் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்ந்து நடக்கும் வணக்கம், மக்கத்துக் ‘கஅபா’வை மக்கள் வலம்வரும் வணக்கம் மட்டுமே எனில் மிகைக் கூற்றாகுமோ?  அதுவும், புனித ரமழானில்...?


‘இஃப்தார்’ எனும் நோன்பு துறக்கும் நேரம் நெருங்க நெருங்க, இறைக் காதலர்களின் நடையெல்லாம் புனிதக் ‘கஅபா’வை நோக்கியே.  விடுதிகளில் தங்கியிருப்போர், வீடுகளில் வசிப்போர், ஜித்தா – தாயிஃப் போன்ற அடுத்திருக்கும் நகரங்களிலிருந்து வந்திருப்போர், இன்னும் ரியாத், தம்மாம், புரைதா, தபூக் முதலான தொலைவிலுள்ள நகரங்களிலிருந்து வந்திருப்போர் அனைவரின் நோக்கமும், ‘கஅபாவில் இஃப்தார் செய்யவேண்டும்’ என்பதே.

‘ஹரமுல் மக்கி’ – புனிதக் ‘கஅபா’ – நிர்வாகத்தினரின் முன் அனுமதியைப் பெற்ற உள்ளூர்வாசிகள் தம் வீடுகளிலிருந்து நோன்பு துறப்பதற்கான உணவுப் பொருள்களைக் கொண்டுவரலாம்.  அவை, அவர்களுக்கு மட்டுமா? ضيوف الرحمن   (ழுயூஃபுர் ரஹ்மான்)  எனும் இறைவிருந்தினர்களுக்கும் சேர்த்துத்தான்!

‘கஅபா’ பள்ளியின் மேல் – கீழ் வளாகங்களில் விரிப்புகள் பரப்பப்பட்டு, அவற்றின் மீது மக்கத்தும் மதீனத்து (அஜ்வா, பர்ஹி) மற்றும் தாயிஃப், தபூக், கஸீம் (சுக்கரி), அல்பாஹா, கைபர் முதலான ஊர்களில் விளைந்த இனிமையான பேரீத்தம் பழங்கள் பரப்பப்படுகின்றன.  இல்லை, ‘டன்’ கணக்கில் கொட்டப்படுகின்றன!   

கெட்டித்தயிர், பாலாடைக் கட்டி, ஜூஸ், ரொட்டி முதலான உணவு வகைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.  அல்லாஹ்வின் அடியார்கள் அழுது கண்ணீர் வடித்து, அவனிடத்தில் ‘துஆ’ – இறைஞ்சல் - செய்து கொண்டிருப்பர். அது, தன் அடியார்களின் வேண்டுதல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளும் புண்ணிய நேரம்!

இதே வேளை, இன்னொன்றும் நடந்துகொண்டிருக்கும்.  மதீனாவின் ‘நபிப்பள்ளி’யில் நிகழ்ந்ததல்லவா?  அது போன்ற இழுபறி!  “தஆல், தஆல், தஆல் ஹினா” (வாருங்கள், வாருங்கள், இங்கே வாருங்கள்!”) என்ற கனிவான அழைப்போசைகள்!  அரபுகளின் அன்பழைப்பைத்  தவிர்க்க முடியாத நம்மவர்கள், தமக்காகக் கிடைக்கும் இடங்களில் அமர்ந்து, அவர்களும் ‘துஆ’விலும் இறைநினைவிலும் திளைத்திருப்பார்கள்.

‘அதான்’ (பாங்கு) சொல்லும் ‘முஅத்தின்’ ஒலிப்பானைத் தட்டுகின்றார்.  அதனைத் தொடர்ந்து, “அல்லா.........ஹு அக்பர்!  அல்லா........ஹு அக்பர்!” என்ற அழைப்போசை மக்காவெங்கிலும் எதிரொலிக்கின்றது!

“பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!”  ‘கஅபா’ பள்ளி முழுவதிலும் இதே ஓசை!  நோன்பாளிகள் விரைவாக நோன்பு துறக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “நோன்பாளிக்கு மகிழ்வுக்குரிய நேரங்கள் இரண்டு.  ஒன்று, நோன்பு துறக்கும்போது;  மற்றொன்று, அவர் தன் இரட்சகனை (அல்லாஹ்வை மறுமையில்) காணும்போது.”   - ஸஹீஹ் முஸ்லிம் (2120)

‘ஹரம்’ நிர்வாகி ஹமூத் கூறுகின்றார்:  “நோன்பு துறக்கும் நேரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்ந்தால், நோன்பாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்ய ‘ஆம்புலென்ஸ்’ வண்டிகள் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.  மேலும், ‘இறைவிருந்தாளி’ (ழுயூஃபுர் ரஹ்மான்)களை இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய் விடுவதற்காகவும் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”

இனி, ஓர் அற்புத நிகழ்வின் பக்கம் வாசகர்களின் கவனத்தைத் திருப்புகின்றேன்.  நோன்பாளிகள் பத்தே நிமிடங்களுக்குள் நோன்பைத் துறந்துவிட்டு, ‘ஜமாஅத்’ எனும் கூட்டுத் தொழுகைக்காக எழுந்துவிடுவார்கள்.  நோன்பு துறப்பு நிகழ்வின்பின் ‘கஅபா’ வளாகத்தில் பரவிக் கிடக்கும் குப்பை கூளங்களை அகற்றுவது எப்படி?  யார் அகற்றுவார்?  அதற்காகவென்றே நீல நிறச் சீருடை அணிந்த துப்புரவுப் பணியாளர்களின் ‘படை’ ஆயத்த நிலையில் வந்து நிற்கும்!  அதோ, மேலே உள்ள படத்தில் பார்க்கின்றீர்கள் அல்லவா?  அவர்கள்தாம்!

‘இப்படை தோற்கில், எப்படி வெல்லும்?’ என்று கூறுவது போன்று, அவர்கள் முடுக்கி விடப்படுவார்கள்.  முதலில், மக்கள் கடந்து செல்லாத அளவுக்குத் ‘தடைப்பட்டி’ நிறுத்தங்கள் அமைக்கப்படும்.  வரிசை வரிசையாகச் சிறு சிறு துப்புரவு வாகனங்கள் வந்து, தண்ணீரையும் உணவுத் துகள்களையும் உறிஞ்சிக்கொள்ளும்.  இவ்வாறு சுற்றிலுமுள்ள குறிப்பிட்ட ஒரு பகுதி தூய்மையாக்கப்பட்டவுடன், அடுத்த பகுதிக்கும் அவ்வாறே.  இப்படி, ‘கஅபா’ வளாகம் முழுவதுமே ஐந்து அல்லது பத்து நமிடங்களுக்குள் தூய்மை செய்யப்பட்டுவிடும்!  

இப்பணியாளர்கள் இயங்கும் விதம்!  ஆகா!  அற்புதம்!  எஞ்சியிருக்கும் தண்ணீரையும் பொருள்களையும் நீலச் சீருடைப் பணியாளர்கள் வழித்தெடுக்கும் விதம்!  Roller Scatting கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  பார்த்திருக்கிறீர்களா?  அதே போன்று, எஞ்சிய தண்ணீரையும் துகள்களையும் தம்மிடமுள்ள wiper (வழிப்பான்)களைக் கொண்டு வழித்துக் கொண்டுபோய், ‘கஅபா’ வளாகத்தின் சுற்று ஓரங்களில் தள்ளிவிடுவார்கள்.

இவர்கள் இயங்கும் விதம், மிக அற்புதமானது!  இவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்டார்களா?  அல்லது, தமது பல்லாண்டுப் பட்டறிவின் விளைவா? தெரியவில்லை! Spotless clean! ‘கின்னஸ் ரிக்கார்ட்’ பதிவுக்குப் பொருத்தமானது!  

இந்தப் பணியின் ஒரு சிறு பகுதியைத்தான் இணைப்புப் படங்களில் நீங்கள் பார்க்கின்றீர்கள்!  நேரில் போய்த்தான் பாருங்களேன், இந்த ரமழானில்!  இன்ஷா அல்லாஹ்...!       

அதிரைஅஹ்மது

நபி பெருமானார் வரலாறு - முன்னுரை 0

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜூலை 24, 2016 |

அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்,

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள்; எத்தனையோ சீர்திருத்தவாதிகள் பிறந்திருக்கிறார்கள்; பலப்பல மதப்பெரியார்கள் உத்தம நெறிகளைப் போதித்துச்

சென்றிருக்கிறார்கள். அவர்களுள் சிலருடைய வரலாறுகள் வரைந்து பாதுகாக்கப் படாமையால், அவர்களைப் பெருமைப் படுத்தும் ஆர்வத்துடன் பின்னே வந்த பக்தி மிக்க சீடர்கள் கற்பனைகள் பலவற்றைப் பொருத்திவிட்டிருக்கிறார்கள். உண்மை எது? கற்பனை எதுவென்று பகுத்தறிய முடியாத பல புராணங்கள் எங்கெங்கும் மல்கிக் கிடப்பதை நாம் காணலாம்.

ஆனால், 1400 ஆண்டுகட்குமுன், கட்டுப்பாடில்லாத ஒரு சமுதாயத்தில், ஆட்சிமுறை எதுவும் அமைந்திராத வனாந்தர வெளியில், படித்தறிந்தோர் மிகச் சிலரே காணப்பட்ட பாமர மக்கள் வாழ்ந்திருந்த கூட்டத்தார்களிடையில் இறைவன் ஓர் உத்தம சிகாமணியைத் தோற்றுவித்தான். மனிதருள் மாணிக்கமாய்த் திகழத்தக்க வகையில் அப் பெரியார் அவர்களை 63 ஆண்டு காலம் மண்ணிடை வாழச் செய்தான்; இதுவரை உலகம் கண்டிராத அத்துணைச் சிறந்த மாண்புமிக மாபெரு வெற்றி வீரராக உயரச் செய்தான்; அனைத்து நற்குண நல்லொழுக்கங்களின் சிகரமாகத் திகழச் செய்தான். அந்த மாபெரும் உத்தமசிகாமணியே உலகம் இன்றளவும் போற்றிப் புகழும் முஹம்மத் முஸ்தஃபா (சல்) அவர்கள் ஆவார்கள்.

இந்தப் புகழ்மிக்க நபி பெருமானார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகைபடுத்தாமலும், மாசு படுத்தாமலும் பல சீடர்கள் குறித்து வைத்தார்கள்; மனப்பாடமாக உள்ளத்துள் பொறித்து வைத்தார்கள். எனவே, 1400 ஆண்டுக்ள கடந்தும்கூட, அந்தப் பெருநபியவர்களின் வாழ்க்கைச் சரிதமும், அன்னாரின் அன்றாட நடைமுறை நல்லொழுக்கங்களும் அப்பட்டமாக நமக்குக் கிடைத்து வருகின்றன. தமக்குமுன்னே தோன்றிய நபிமார்கள் பற்றிக் கற்பனையான, மிகையான வக்கணையான ஸ்துதிகளும் பாராட்டுதல்களும் இடம் பெற்று மாசு உண்டுபண்ணப்பட்டு விட்டதையுணர்ந்த நபிபெருமானார் அவர்கள், எங்கே தம்மையும் ஒரு ‘புராண புருஷனாகப்’ பிற்சந்ததியார்கள் உயர்த்திவிடுவார்களோ என்று ஒவ்வொரு நிமிடமும் கவலைப்பட்டு,

“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே அன்றி, தேவனோ, தேவகுமாரனோ, கடவுள் அவதாரமோ அல்லன்; என்னையும் உங்களையும் படைத்த அந்த ஏக இறைவனின் ஒரு தூதன் —நபியே ஆவேன். எனக்கு முன் தோன்றிய நபிமார்களை, அவர்களுடைய பக்தர்கள் தெய்வாம்சம் மிக்கவர்களாக உயர்த்தியதைப்போல் என்னையும் உயர்த்தி மாசு கற்பித்து விடாதீர்கள்!”

என்று எச்சரிக்கைகள் பலவற்றை அவ்வப்போது இட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உத்தம நற்சிகாமணியின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமே இந்நூலாகும். மனிதராய்ப் பிறந்து மனிதராய் வாழ்ந்து, எல்லா மக்களும் அடைகிற சகலவிதமான இன்ப துன்பங்களுக்கும் ஆளாகி, இறைவனிட்ட கட்டளைகள் அத்தனையையும் இனிது நிறைவேற்றி முடித்து, அவன் மக்களினக் கடைத்தேற்றத்துக்காக வழங்கிய திருக்குர்ஆன் அருமறையை ஒப்பித்து, நேர்வழி காட்டிச் சென்ற பரம உத்தமரிகன் 63 ஆண்டுகால மண்ணுலக வாழ்க்கையின் மாண்பைச் சுருக்கமாக எடுத்துக்காட்டும் நூலே இது.

நபிகள் பெருமானார் பற்றி இதுவரை எத்துனையோ எண்ணிலடங்காத நூல்கள் உலகின் மொழிகள் அனைத்திலும் வெளிவந்துள்ளன. என்றாலும், என்ன காரணத்தாலோ, அம் மாபெரும் உத்தம சிகாமணியின் உன்னத வாழ்க்கை வரலாற்றைப் பல லட்சக்கணக்கான மாந்தர் தெரிந்து கொள்ளாமல், அல்லது தவறாகக் கருதிக் கொண்டு ஒதுங்கி நிற்கிறார்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, ஒரு குறிப்பிட்ட காலவரையறை எல்லைக்குள் வாழ்ந்தவர்களுக்கு, அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்காக மட்டும் தோன்றியவர்தாம் முஹம்மத் (சல்) என்று எண்ணிக் கொள்வோர் நம்மிடைப் பலருண்டு.

ஆனால், இறைவன் வழங்கிய அழகிய திருமறையாம் குர்ஆன் வேதத்திலே ஓரிடத்தில் திரு நபியவர்கள் அகில பிரபஞ்ச அனைத்துப் படைப்புக்கும் ஒரு கருணையங் கடலாகவே (ரஹ்மத்துன்லில் ஆலமீன்) அனுப்பப் பட்டிருப்பதாகப் பகிரங்க அறிவிப்பைக் கொடுத்திருக்கிறான். அந்த அருமறையின் 21-ஆவது அத்தியாயத்தின் 107-ஆவது திருவாக்கியமே அது. எனவே, எல்லாப் பிறவியினரக்கும், உலகில் வாழும் சகல மக்களக்கும் கருணையுருவாக அமைந்த அப் பெருநபியை யாவர்க்கும் அறிமுகப்படுத்த வேண்டியது சகல முஸ்லிம்களின் தலையாய கடனாக அமைந்திருக்கிறது. முஸ்லிமல்லாதார் அந்தப் பெருமானாரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமற் போனதற்கு முதற்காரணம், போதுமான நூல்கள் போதுமான அளவில் அச்சிட்டுப் பரப்பப்படாமையே என்பதில் ஐயமில்லை.

பூம்புகார் பிரசுரத்தார், உலகின் மாண்பு மிகு வீரராகிய நபிபெருமானாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் வெளியிட வேண்டும் என்னும் உற்சாகத்தை ஊட்டினார்கள். சற்றும் குறுகிய நோக்கமோ, சமய வேறுபாட்டு உணர்ச்சியோ இல்லாமல், பரந்த நோக்குடன் அந்த நிறுவனத்தார் இப்பெருந்திட்டத்தை மேற்கொண்டமைக்கு இறைவன் அவர்களுக்கு என்றென்றும் நற்பாக்கியத்தைத் தந்தருள்வான் என்பதில் ஐயமில்லை.

நபிபெருமானார் அவர்களுடைய வரலாற்றைச் சகல மதத்தினரும், அனைத்துத் துறையினரும் உள்ளன உள்ளபடி உணர்வதற்கு ஏற்றமுறையில் தமிழில் எழுதித்தரும் வல்லமை படைத்தவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும், அந்நிறுவனத்தார்கள் ஏழையேனாகிய என்னைத் தேர்ந்தெடுத்து, இம் மகத்தான பெரும்பணியை என்னிடம் ஒப்படைத்தார்கள். யானும் என்னால் இயன்ற அளவு முயன்று, அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக இந்நூலை எழுதித்தந்தேன். ஒரு சிறந்த இலக்கியத்தை உருவாக்கிவட வேண்டுமென்று அந் நிறுவனத்தினர் பெருந்தனத்தைச் செலவிட்டு இதை இந்த முறையில் அச்சிட்டு உங்கள் கரத்திடைத் தந்திருக்கிறார்கள். இம் மகத்தான சேவைக்காகத் தமிழுலகம ்அவர்களுக்கு நிரம்பவும் கடமைப்பட்டிருக்கிற தென்பதை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். தற்கால விலைவாசிப்படி இந் நூலுக்கு ரூ. 12/-வரை விலை நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், தியாக உள்ளம் படைத்த பூம்புகார் பிரசுர நிறுவனத்தினர் வெறும் லாப நோக்கத்தைக் குறியாகக் கொள்ளாமல், அதிகம் பேர் வாங்கிப் படிக்க வசதியாக, ரூ. 7-90 என்று இதற்கு விலை நிர்ணயித்திருப்பதை நாம் ஊன்றிக் கவனிக்கக் கட்டுப் பட்டிருக்கிறோம்.

திரு நபியவர்களின் வரலாற்றை இத்துணைப் பெரும் செலவில் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் இதை உங்கள் யாவரின் கரத்திலும் மிளிரச் செய்த பெரமைக்கு இறைவன் இவர்களுக்கு என்றென்றும் அருள் புரிந்து பெருமை வழங்கியருள்வானாக!

இந் நூலைப் படிக்கும் முஸ்லிமல்லாதார், முஸ்லிம்களின் பழக்க வழக்கப் பண்பாட்டை நன்குணராதவர்கள் முதலியோர் ஒருமை-பன்மை மயக்கம் கொள்ளாமல், ஆற்றொழுக்காகப் படித்தறிய வசதியாகத் திரு நபியவர்கள், அன்னாரின் பத்தினிமார்கள், அன்னாரின் சீடர்களாகிய அபூபக்ர், உமர் போன்றவர்கள் எல்லாம் மரியாதைப் பன்மையாகிய ‘அர், ஆர்’ விகுதியமைந்த வினைமுற்றுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளனர். முஸ்லிம் சம்பிரதாயப் பழக்க வழக்கத்தை யொட்டி, அவ் வினைமுற்றுச் சொற்களுடன் ‘கள்’ என்னும் விகுதி மேல் விகுதியேற்றிப் படிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

திரு நபியவர்களின் வரலாற்றைத் தமிழக மக்களுக்குப் புதுத்தோற்றப் பொலிவுடன் அறிமுகப்படுத்த எனக்கொரு வாய்ப்பைத் தந்த பூம்புகார் பிரசுரத்தார்க்கு எனது உளங்கனிந்த நன்றியை நவில்வதுடன், இதை இப்படி வடித்துத் தர எனக்குத் திராணியளித்த இறைவனுக்குச் சிரந்தாழ்த்தி வணங்கி அடி பணிகின்றேன். தமிழக மக்கள் இப் பெருநூலைப் படித்து இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு பெற்றுய்ய வல்லோன் வழிவகுப்பானாக என்றும் வாழ்த்துகின்றேன்.

N.B. அப்துல் ஜப்பார்

சென்னை-2,
15-2-1978
நன்றி : 


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு