Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2016 | , , ,


நோம்பு  முடிந்து சங்கை மிகு ஈகைப் பெருநாள் துவங்கும் விளிம்பில் (அதிரையில்) இருக்கும் நாம், இந்த நோம்பு காலங்களில் இரவு தொழுகைகளிலும் பகல் நேரங்களில் குர்ஆன் ஓதியும் சிறப்புடன் கழித்த அத்தனை அனபர்களுக்கும் அல்லாஹ் வின் அருள் உண்டாவதாக!

இது ஒரு ஃப்ளாஸ்பேக்...: (இரண்டு கண்ணுக்கு நடுவில் வட்டம் வட்டமாக சுழல்வது போன்று கற்பனைகள் வந்தால் அது விளம்பரதாரர் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்)

35 வருடங்களுக்கு முன் பெருநாட்களில் ஒரு பெருநாளை சுற்றியே எமது நினைவலைகள் பின்னோக்கி செல்கிறது.... ! (ஈஸ்மண்ட் கலரில் தெரியவில்லை என்றால் கலர் பேப்பர் ஒட்டிய பிளாஸ்டிக் கண்ணாடி பெருநாள் அன்று மாலைக் கடைகளில் வாங்கி போட்டுக் கொண்டால் நல்லது).


பெரியவர்களெல்லாம் "பிறையை கண்டாச்சா இல்லையா, அது கண்ட இடம் எந்த இடம்" என்ற கேள்வியோடு மரைக்காப் பள்ளியில் ஒன்று கூடுவர். எங்களைப் போல் உள்ள சிறுவர்களுக்கு ஏக்கமெல்லாம் நாளை வைக்கப் போகும் பெருநாள் ஸ்டால் மற்றும் சர்பத் கடை பற்றிய சிந்தனையே!

வீடு வீடாய்ப்போய் சர்பத் பாட்டிலை கண்டெடுத்து செக்கடிக் குளத்திலே கழுவியெடுத்து நானும் சித்தீக்கும் ஆளுக்கு ஒன்றரை ரூபா முதலில் ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவோம். சீனியோடு வியாபார யுக்திக்காக சாக்ரீனும் ஜப்ஜா விதையும் பிசின் மற்றும் கலர் பவ்டர் இதுதான் கச்சாப் பொருளாகும். அடுத்து  அணிகுண்டு தயார் செய்ய சக்கரையும் பொட்டுக் கடலையும் வாங்கி சக்கரையை பாகாக்கி பொட்டுக் கடலையை அதனுள் இட்டு கிண்டினால் அணிகுண்டு தயார். தினத்தந்தி பேப்பரை சதுரமாய்க் கிழித்து அதை சிறு சிறு அணிகுண்டாக்கி உருட்டி விற்பனைக்கு தயார்படுத்திடுவோம்.

அடுத்து அரை லிட்டர் பால் வாங்கி காய்ச்சி 4- 5 வீடேறி ஒரமோரு வாங்கி வந்து அதை தயிராக்கி எங்க வீட்டு நீச்சோற்றை பிசைந்து வடிகட்டி அத்தோடு நீர் சேர்த்து விட்டால் எங்கள் ஐஸ் மோர் ரெடி. (மோர் தயாரித்த தந்திரத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு சொன்ன சித்தீக் இங்கே மன்னிக்கனும்) 

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் 
அல்லாஹு அக்பர்....

தக்பீர் முழக்கம் ஒலிபெருக்கியில் தொடரும் அழகிய ஓசை….

விடிந்தது பொழுது...
பெருநாள் வந்தது…

மரக்கட்டிலை துடைத்தெடுத்து கடை பரத்த தயாராவோம். பாட்டிலில் கலர் கலராய் தண்ணீர் ஊற்றி வரிசையாய் அடுக்கி வைத்து அனிகுண்டும் ஐஸ் மோரும் அத்தோடு கொத்து மாங்காய், கடலை மிட்டாய் வரிசையாய் அடுக்கி வைத்து வியாபாரத்தை ஆரம்பிப்போம் .

அப்போதெல்லாம் பணக்கார வீட்டுப் பையன் (!!?) வந்துதான் முதல் போணியை ஆரம்பிப்பான். 

“காக்கா ஒரு சர்பத் ரெண்டு கடலை மிட்டாய்.”

புத்தம் புது ரென்டு ரூபா நோட்டை நீட்ட “சில்லரை இல்லையடா!!” என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு.

“அப்புறம் வா” என்று அனுப்பி வைப்போம்.

அடுத்த கஸ்டமர் எல்லாமே சிறுசுங்க தானே வந்து நின்று அனிகுண்டு ரெண்டு பேட்பான். 3 பத்து பைசா என்று 3 கொடுத்திடவே !!! வியாராபரம் சூடு பிடிக்கும். வாங்கிய அனிகுண்டை பிரிப்பதற்குள் எங்க கஸ்டமருங்க படும் திண்டாட்டம் தான் (ஹைலெட்டே !). தினத்தந்தி பேப்பரோடு அனிக்குண்டும் ஐக்கியமாகிவிட பாதி பேப்பர் பிரித்தெடுக்க, மீதி அதோடு ஒட்டியிருக்க கொடுத்த காசு வீணாப் போகுதுன்னு அப்படியே சாப்பிடுவர் எங்கள் வாடிக்கையாளர்கள்.?!?! (அப்போவெல்லாம் கன்ஸூமர் கோர்ட் எல்லாம் இல்லேய்ய்ய்ங்கோ)

முதல் போனி கஸ்டமரான பனக்கார வீட்டுப் பையன் வந்துவிட...

“காக்கா மீதி காசு???” என்று கேட்டு நிப்பான். 

“தம்பி சில்லரை இன்னும் சேரவில்லை” என்று சொல்லி மீண்டும் ரெண்டு க்ளாஸ் சர்பத் கொடுக்கப்படும்!!!


மணி 10 வெயிலும் சூடு பிடிக்க ஐஸ் மோர் விற்பனையும் சூடு பிடிக்கும் 12 மணிக்கெல்லாம் விற்று தீரும். மறுபடியும் தயார் செய்ய  வீடு தேடி ஓடிடுவோம் நீச்சோரு பானையை நோக்கி!!! "இப்பத்தான் கொறத்தி வந்து வாங்கிப் போனாள்" என்று உம்மா சொல்ல உடனே உதயமாகும் அடுத்த யோசனை. நடுத்தெரு வெலக்காரியிடம் மோர் வாங்கி தண்ணீர் விட்டு இரட்டிப்பாய் மாற்றிவிட்டு விற்று பெருமிதம் கொள்வோம்.

அட ! வந்து விட்டான் நம்ம முதல் கஸ்டமர் பையன் மீதி காசு கேட்பதற்காகவே…

“நீ இன்னும் மோரே குடிக்கலையே இந்தா மோர்” என்று ரெண்டு க்ளாஸ் ஊற்றி அதீத சந்தோஷத்தோடு எங்களால் அவனுக்கு கொடுக்கப்பட முறைத்து விட்டு குடித்திடுவான். 

மறுபடியும் மீதி கேட்கையிலே...

"அப்புறம் வா"யென்று சொன்னால்..

"உம்மா திட்டுது" என்பான். 

"கவலைப்படாதே உம்மாவுக்கு ரெண்டு க்ளாஸ் சர்பத் பார்சல்" என்று (பார்சல்….) போடப்படும். 

“போங்கடா (….........)களா” என்று சொல்லி திட்டிவிட்டு ஓடியே போய் விடுவான்.

கம்பெனிக்கு(!!!) மிச்ச காசு உபரி(யாக) லாபம் !.

எங்களுக்கு போட்டியாளர்களே டாட்டாவும் பிர்லாவும் தான். அம்பானியெல்லாம் அதற்கு அப்புறம் தான்.

மு.செ.மு. சபீர் அகமது (திருப்பூர்)

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னது !? - அது பொற்காலமா ? எங்களைப்போன்ற அணிகுண்டு ரெகுலர் கஸ்டமருங்களை ஏமாத்தின காலம் ! :) இப்போதான் எல்லா உண்மையும் வெளியாவுது !

என்னா அவசரம் இவ்வ்ளோ சீக்கிரம் சீக்கிரெட்டை போட்டு ஒடச்சுட்டீங்க ? மத்திய அரசின் தனிக்கை துறை ஏதாவது ஏடாகூடமாக அறிக்கை வெளியிட்டுமோன்னு பயந்துதானே...

டாட்டா(வின்) பார்ட்னர்களே :)

இனிய நினைவுகளை கிளறிவிடுவதிலும் கிள்ளிவிடுவதிலும் நீங்கள் அனைவருமே சலைத்தவர்கள் அல்ல !

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தம்பி நெய்னாத்தம்பிக்கு எனது பெருனால் வாழ்த்துக்கல் இப்பவெல்லாம் பேப்பரில் ஒட்டத அனிகுன்டு கிடைக்கும்

கிடைக்குமிடம் என் மருமகன் கடை

Adirai pasanga😎 said...

அது அப்போது

இப்போதெல்லாம் குண்டுன்னு சொன்னா அனு அறிவியலாளர் அபுல்கலாம் நினைவு வரமாட்டேங்கிது. இந்த பாழாப்போன மீடியாகரங்களுக்கு முஸ்லிம் தீவிரவாதி? என்றுதான் கூற தோன்றுகிறது

ZAKIR HUSSAIN said...

இந்த மாதிரி வியாபார [ட்ரிக்கா...இல்லை தில்லாலங்கடியா?] விசயம் தெரிந்து இருந்தால் 1977 என்ன எப்போதும் பொற்காலம்தான்.

பாவம் அந்த 2 ரூபாய் கொடுத்த பையன்.

Yasir said...

நல்ல குதுக்கலத்துடன் பெருநாள் நினைவூட்டல்....அணிகுண்டு என்றால் என்ன ? காக்கா....”பூனைக்கொல்லை” ஞாபகங்களை நினைவூட்டும் கலக்கல் ஆக்கம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வியாபாரம் படு சூப்பரு!

பார்ட்னர் எங்கே?
மோரு தந்திரத்தை பப்ளிக்கில் போட்டுடைத்த கோபமா? இல்லெ நம்மலே விட பார்ட்னர் இப்படி எழுத ஆரம்பித்து விட்டாரே என்ற சோகமா?
சீக்கிரம் இன்னும் சொல்ல வாங்க!

KALAM SHAICK ABDUL KADER said...

கம்பனும் ஓடி ஒளிந்தான்; கம்பன் ஓடிய பாதைக்குள் ஓடிய “பூனை”க்கொல்லையும் ஓடி ஒளிந்த மர்மம் என்ன? கடற்கரை தெரு யாசிர் விளக்கம் தரலாம்!

Unknown said...

சர்பத் கடை காலங்களை நினைக்கையில் ரொம்ப நல்லா இருக்குது.

என்ன சபீரு!
&
சித்தீக்கு

அந்த 2 ரூபா பார்ட்டி நான் தானென்று நினைக்கிறேன். நல்லா யோசித்து பார்த்து இன்றைய மதிப்புக்கு எங்கூட்டுலெ கொடுத்துடு ஆமா!

சம்சுதீன்(வாய்க்கால் தெரு)
லன்டனிலிருந்து.

Unknown said...

சர்பத் கடை காலங்களை நினைக்கையில் ரொம்ப நல்லா இருக்குது.

என்ன சபீரு!
&
சித்தீக்கு

அந்த 2 ரூபா பார்ட்டி நான் தானென்று நினைக்கிறேன். நல்லா யோசித்து பார்த்து இன்றைய மதிப்புக்கு எங்கூட்டுலெ கொடுத்துடு ஆமா!

சம்சுதீன்(வாய்க்கால் தெரு)
லன்டனிலிருந்து.

sabeer.abushahruk said...

சகோதரர் சபீரின் பெருநாள் நினைவுகள் இனிமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.  

கிழே எங்க டைப் கொண்டாட்டங்கள்.

ஆஹா பெருநாள் 
அருமையான திருநாள்...
ஆண்டவன் நமக்களித்த 
அழகான ஒருநாள்!

ஆர்ப்பரிக்கும் மனது
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து 
அந்தக்கால பெருநாள்!

அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!

குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!

உச்சந் தலை முதல்
உள்ளங் கால் வரை
உஷ்ணம் தீர உடம்பில்
உம்மா தேய்த்த எண்ணெய்!

எண்ணெய்ப் பிசுக்கெல்லாம்
எங்கெங்கும் மிதக்க
வெட்டிக்குளமெல்லம் 
தொட்டு விளையாட்டு..
உள்நீச்ச லோடு 
கண்டு விளையாட்டு!

புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு போட்டு
பினாங்கு அத்தர் பூசி...

உச்சமான உடுப்பாக
ஷைத்தானுக்கு தடுப்பாக
ஹெல்மெட்டு போல
வெல்வெட்டில் தொப்பி!

கண்களில் சுர்மா 
கையில் சீக்கோ ஃபைவ்
கால்களில் கித்தாச் செருப்பு
கைக்குட்டைக்குள்ளும் 
யாட்லி பவுடர்...

சங்கு மார்க்கு லுங்கி
டெட்ரெக்சில் கம்சு சட்டை
சில்லென்ற ஹவ்தில்
ஒலூச் செய்ய நனையும்

தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!

ஊருக்கே உரித்தான 
ப்ரத்யேக ராகத்தில்
அத்தனைப் பள்ளிகளிலும் 
சத்தமாய்க் கேட்கும்...
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!

பெருநாள் காசு பைக்குள்ளே
திருநாள் தொழுகை நிறைவேற்றி
தோள்தழுவி வாழ்த்தி
சந்தோஷ தருணங்களைப் பகிர்வோம்!

உப்புக்கண்டம் சப்புக்கொட்டி
வர்ணங்களிலும் 
வடிவங்களிலும்
வார்த்துவைத்த கடப்பாசி
வாய்க்குள் கரையும் 
வட்லப்பம் 
இடியப்பம் சவ்வரிசி
ரொட்டி எறச்சானம்...
அதிரைபட்டினத்தின் 
அந்தக்கால பெருநாள்!

இன்றோ...

நெட்காலிலும்
நீண்ட பெருமூச்சிலும்
ரகசிய கண்ணீரிலும்

மூடிய இமைகளுக்குள்-
முடிவற்ற நினைவுகளிலும்

செல்ஃபோனில் சேகரித்த-
செல்லுலாய்டு முகங்களிலும்

சட்டென முடிந்துபோகிறது
பெருநாள் சந்தோஷங்கள்!!

KulluAm WaAnthum BiKhair

- Sabeer Ahmed abuShahruk




மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நன்பன் சம்சுதீனுக்கு சபீரின் சலாம் ஒன்னத்தான் இவ்வளவுனாலா தேடிக்கொண்டுயிருந்தேன் நீ கொடுத்த நோட்டு செல்லவில்லை அதர்க்கு பதிலா உண் ரூம்மெட் ஜஹபரிடம் வேரு நோட்டு மரியாதையா கொடுத்துவிடு

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நன்பன் சம்சுதீனுக்கு சபீரின் சலாம் ஒன்னத்தான் இவ்வளவுனாலா தேடிக்கொண்டுயிருந்தேன் நீ கொடுத்த நோட்டு செல்லவில்லை அதர்க்கு பதிலா உண் ரூம்மெட் ஜஹபரிடம் வேரு நோட்டு மரியாதையா கொடுத்துவிடு

அதிரை சித்திக் said...

சபீர் ...
சீனி பாகுல கொசு உட்கார ..
இரண்டு இறகுகளும் பாகில்
நனைய வேண்டும் என்பதற்கு
கொசுவை பாகில் அழுத்த ,,
பாகில் கொசு மூழ்கி நைந்து போக ..
அவசரம்மா ஒரு ஸ்பெசல் சர்பத் கஸ்டமர்
கேட்க ..கொசுவுடன் சர்பத் ரெடி ..
அந்த சர்பத் குடித்த நபர் இன்று இஞ்சிநீரோ
வக்கீலோ ..டாக்டரோ ..தெரியல ..
சபீர் முதல் வரவே ..அமர்க்களம் ..
அவ்வபோதே தரும் பதில் நல்ல பொறுப்புணர்வு ..
நல்ல எதிர்காலம் உண்டு நண்பா..
அதிரை நிருபருக்கு ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர்
கிடைத்துள்ளார் ..இன்று எங்களுக்கு பெருநாள் ..
எனது மகன் நம்மவரை பெட்டி எடுத்துள்ளான்
இன்சா அல்லாஹ் விரைவில் காணொளி
அனுப்பி வைக்கிறேன் ...

இப்னு அப்துல் ரஜாக் said...

சபீர் காக்கா,சித்திக் காக்கா
இப்பிடி உங்க ரெசிப்பிய பப்ளிக்கா சொல்லிட்டீங்களே,
ஆளாளுக்கு இப்படி கிளம்பினால்,ஊரு என்னாவது?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நல்லா நன்னாரி சர்பத் குடித்தமாதிரி சில்லுன்னு இருக்கு. எல்லாருக்கும் பெருனாள் வாழ்த்துக்கள்.

Unknown said...

ரெண்டு ரூவா கஸ்டமரை இந்த கட்டுரையில் முதலிலிருந்து கடைசி வரை கொண்டு சென்றது சுவராஸ்யம் ....!

சபீர் காக்கா நல்ல இருக்கு உங்க சிறுவயது கூத்து .நீங்களும் சித்திக் சாச்சாவும் சிறு வயதில் எடுத்த போட்டோ இருந்தால் அதை போடவும். (நான்பார்த்திருக்கிறேன் ).

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் .

Unknown said...

//மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

நன்பன் சம்சுதீனுக்கு சபீரின் சலாம் ஒன்னத்தான் இவ்வளவுனாலா தேடிக்கொண்டுயிருந்தேன் நீ கொடுத்த நோட்டு செல்லவில்லை அதர்க்கு பதிலா உண் ரூம்மெட் ஜஹபரிடம் வேரு நோட்டு மரியாதையா கொடுத்துவிடு //
வ அலைக்கு முஸ்ஸலாம்

ஆஹோ
அப்ப இந்த வெளையாட்டுக்கு நான் வரலே
வாபஸ் வாபஸ்

2 ரூபா பார்ட்டி
நான் அவன் இல்லை

Unknown said...
This comment has been removed by the author.
ABU ISMAIL said...

சித்தீக் சபீர் சலாம்.
உங்க சர்பத் கடை நல்லா ஞாபகம் இருக்கு.
அது பற்றிய நினவலைகளின் தொகுப்பும் அருமையாக இருக்குது.
வாழ்த்துக்க்கள்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

இந்த கட்டுரையின் மூலம் அந்த 2ரூபா நபரை கண்டு பிடித்து அந்த தொகையை கொடுத்து விடலாம் என்று தான் இந்த வெப்சைட்டை பார்த்தவர்கள் அல்லது பார்த்தவர்க்ளிடம் கேட்டு தெரிந்து கொண்டவர்கள் அதிரை நிருபரை தொடர்பு கொள்ளவும்

அப்துல்மாலிக் said...

என்னதான் பெருநாளைக்கு வூட்டுலே ரோஸ்மில்க், கடப்பாசி குடுச்சாலும் தெருவோர கடையிலே நன்னாரி சர்பத்தோ, ஐஸ் மோரோ குடுச்சாதான் பெருநா வந்தாமாதிரி ஈக்கும், வியாபார ரகசியங்களை வெள்ளந்தியா சொல்லிருக்கீங்க அருமை காக்காமார்களே...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு