Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஏனெனில் 'திமிர்' 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 10, 2016 | , , , ,

இப்படி தான் எதையும் ஆரம்பிக்க வேண்டும் என்று வரையரைக்குள் அடைக்கனும் என்றெல்லாம் விரும்பவில்லை. அதனால் நேரடியாக பதிவுக்குரிய விஷயத்துக்குள்… 

சம்பவம் 1

நாலு வருடத்திற்கு முன்னர்… சென்னை புறநகர் இரயில் நிலையம் …..

ஒரு வயதானவர், ஒரு பர்தா அணிந்த பெண் கையில் குழந்தையுடன் கடைசி நிமிடத்தில் வண்டியை பிடிக்க ஓடி வர்றாங்க. பெரியவர் “நீ லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் ஏறிக் கொள்ளுமா” என்கிறார். குழந்தையுடன் ஏறிக்கொள்கிறாள். மணி சரியாக இரவு 9.02…

பல பெண்கள் வேலை முடித்து சோர்ந்த நிலையிலும் எதை எதையோ பேசிக்கொள்கிறார்கள்; கீரையை வாங்கி ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பொது அறிவு புத்தகம் விற்பவர் காமெடி செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பை கிளப்ப, கையில் குழந்தையுடன் நிற்கும் பெண்ணுக்கு இடமில்லை.

இன்னும் சிலருக்கு இடம் கொடுக்க மனமிருந்தும் தங்களின் அசதி காரணமாக எழுந்து இடம் கொடுக்க முடியவில்லை. இவ்வாறான நிதர்சனம் புரியும் வேலையில் வண்டி கொஞ்சம் கொஞ்சமாக புறநகர் நோக்கி செல்ல செல்ல, கொஞ்சம் காற்று வர, இடம் காலியாக , இவள் அமர்ந்து கொள்கிறாள் முக்கால் மணி நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள்.

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு போய் சேர ! பக்கத்தில் இருக்கும் பெண் தானும் இறங்கப் போவதாகவும், இனி நீ மட்டும் எப்படி இங்கே இன்னும் அரை மணி நேரம் தனியே செல்வாய்? என்று கேட்கும்போது,  “பரவாயில்லை பக்கத்தில் உள்ள பெட்டியில் உறவினர் உள்ளார்” என்று கூறினாலும் பயம் லேசாக எட்டி பார்க்கிறது.

அப்போது தான் கவனிக்கிறாள் கைப்பையை, செல்லிடப்பேசி அனைத்தும் பெரியவரிடம் உள்ளது என்று. அந்த நிமிடம் உண்மையிலேயே பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த்து.  குழந்தையுடன் தானும் இடையே இருபது இருக்கைகள் தள்ளி ஒரு அழுக்கு சட்டையுடன் வாரப்படாத தலையுமாக ஒரு ஆண் அமர்ந்திருந்தார்.  அவர் பிச்சை எடுப்பவரா / மனநிலை பிறழ்ந்தவரா / மது அருந்திய கோலமா என தெரியவில்லை .

ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு ஆண்...

தடக்… தடக்... தடக்...

இரயில் செல்ல வேண்டிய இடத்தை நெருங்க இன்னும் இருபது நிமிடங்கள்.  அச்சம் அகலாத மிச்ச நேரங்கள் !

()()() கட் . . . ()()()

சம்பவம் 2

பேருந்து , திருச்சியிருந்து புதுக்கோட்டை செல்கிறது…

அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது.

ஒரு நிறுத்தம் ! சுடிதார் அணிந்த கல்லூரிப் பெண்கள் !

குரல்கள் என்னவோ குயில்கள் கூட்டமாக அல்ல.. கூக்குரல்களாக ஏறுகிறார்கள்.

தங்களது தோல் பைகளை மேல வைத்த பிறகு ஒரே ’கக்கே பிக்கே’ தான், அட அவர்களின் சிரிப்பைத் தான் சொல்றேன்.

அதில் ஒருத்தியின் தோல்பை இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் (கல்லூரி செல்பவரா அல்லது பணியில் இருப்பவரா தெரியவில்லை, எது எப்படியோ அவரை ஹீரோ என்று வைத்து கொள்வோம்) அவர் தலையில் விழ..

’’ஐயோ சாரி சார் . . . . சாரி சார்’’

‘’பரவாயில்லை ங்க.. !’’

கிட்டத்தட்ட பத்து நிமிடம் கழித்து மறுபடியும் அந்த ஹீரோ தலையில் விழ,

’’சாரி…’’

அந்த பெண் திரும்ப கேக்க பிக்கே..

இந்த கூத்துகள் அனைத்தையும் ஏறக்குறைய ஒட்டு மொத்தமாக பேருந்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்க்க,  அதில் ’பர்தா அணிந்த பெண்ணும் ஒரு கல்லூரி செல்லும் பையனும் அடக்கம்’

அடுத்து அந்த பெண்களில் ஒரு குறும்புக்காரி, கம்பிகளை பிடிக்காமல் ஓடும் பேருந்தில் நிற்கிறேன் என்று கைகளை கட்டிக்கொண்டு நின்றார்.  ஓட்டுநர் ஒரு பிரேக்கை அழுத்த அந்த குறும்புக்காரி வசமாக உட்கார்ந்து இருந்த ஹீரோ மடியில் போய் விழுந்தே விட்டார்…

()()() கட் . . . ()()()

சம்பவம் 1ல் - அந்த அழுக்குச்சட்டை நபர் அந்த பெண்ணிடம் பணத்தையோ பொருளையோ பறிக்க முயற்சிப்பதாகவும்…

சம்பவம் 2ல் - அந்த பெண் மடியில் விழுந்தவுடன் பல தேவதைகள் சூழ அந்த பெண்ணும் ஆணும் கண்ணும் கண்ணும் நோக்கி டூயட் பாடுவதாகவும் உள்ள காட்சிகள் நிச்சயம் சினிமாவுக்கானதே…

எடிட்டிங் !

நடந்தது என்ன என்று சொல்ல வேண்டுமானால் அந்த அழுக்கு சட்டை அணிந்த நபர் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை. இந்த பெண்ணை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. இனி இரவு நேரத்தில் தூரம் செல்பவர்கள் புற நகர் வண்டியில் பெண்கள் பெட்டியில் ஏறக்கூடாது என்ற படிப்பினையோடு நடையை கட்ட ஆரம்பித்தாகி விட்டது.

அந்த பேருந்து ஹீரோ, கண்ணும் கண்ணும் நோக்காமல் “ irresponsible idiot பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாதா உனக்கு? இதெல்லாம் யாரும் சொல்லிக்கொடுக்கவில்லையா?” என்று பரேடு எடுக்க பெண்கள் அதற்கு பிறகு ‘கப் சிப்’

திறந்த வெளி திரைக் கதை அப்படி முடிந்தது !

இந்த இரண்டு சம்பவங்களிலும் பர்தா அணிந்த கேரக்டர் ஒன்னு வருதே அது வேற யாரும் இல்லை நானே தான் !

பெண்கள் பற்றி பெண்களே சரியாக புரிந்து கொள்ள முடியாத போது ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதுவும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது நீதி தேவதையின் தராசு தட்டு ஒன்றின் கீழ் காந்தம் ஒட்டியது போல தோணுகிறது. தற்சமயம் 'பெண்ணியவாதி' என்று வார்த்தையை கேட்டால் ஆண்கள் அலறுவதும் பெண்களிலே சிலர் பின்னங்கால் பிடரியடிக்க ஓடுவதைத்தான் பார்க்க நேருகிறது.

பெண்ணீயம் !?

ஆண்களை எதிர்த்து பேசுவது பெண்ணீயமா? அரைக்கால் சட்டை அணிந்து கொண்டால் பெண்ணீயமா ? தலையை விரித்து போட்டு கொண்டால், தர்கம் செய்தால் பெண்ணீயமா?

சிறு வயதில் பெண்கள் பொருளாதாரத்தில் ஆணுக்கு சரி நிகர் சமானமாய் தன்னிறைவு அடைந்தால் பெண்கள் விடுதலை பெற்று விட்டதாக நினைத்த நாட்களில், நான் கல்லூரியில் பெரிதும் மதித்த பெண் விடுதலை பற்றி பக்கம் பக்கமாக பேசிய மேடம், ஆசிரியர் அறையில் “ஒரு சாதாரண டிக்கெட் பதிவு செய்ய தெரியாது, எல்லாம் அவர் பார்த்து கொள்வார்” என  சொன்ன போது அவரை என்னால் 'என்னங்க திருமதியாக' நினைத்து பார்க்க முடியவில்லை நான் கட்டமைத்த பிம்பம் உடைந்தது அன்றுதான்.

திருமணம் முடிந்த பல ஆண்டுகளுக்கு பிறகு தனியே வந்த போது தில்ஷாத் என்ற நடுத்தர வயது பெண் பழக்கமானவர். தீவிர குடியின் காரணமாக சந்தேகப் பேர்வழியாக இருந்த கணவனை விட்டு பிரிந்து தனியே மகள்ளை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம். மொழி தெரியாமல் வேறு தேசம் செல்ல, விமான நிலையத்தின் பிரம்மாண்டம் மிரட்ட தன்னுடைய கணவர் நல்லவராக இருந்திருந்தால் இந்த நிலை தனக்கு வந்திருக்குமா என்று ஒரு நிமிடம் கலங்கி , மறுநிமிடம் சக மனிதரை நம்பி பயணப்பட்ட அனுபவத்தை கேட்ட பொது கல்வி பொருளாதார தன்னிறைவு எல்லாம் ஒன்றும் இல்லை என்று தோன்றியது.

யாரையும் காயப்படுத்தாமல் கவலைகளை துன்பங்களை விட்டு விலகி காலம் கடந்தாலும் தன்னுடைய அடிகளை தானே அழுத்தமாக எடுத்து வைத்திருக்கும் தில்ஷாத் மெத்தப்படித்த ‘என்னங்க திருமதி’களை காட்டிலும் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லதானே?

சிலநாட்களுக்கு முன்னர் ’ஓலா விவகாரம்’ கலை கட்டியது நாம் அறிந்தே அந்த பெண் மட்டும் அந்த ஓட்டுனரை மரியாதையுடன் பேசியிருந்தால் அடுத்த கட்ட சம்பவத்திற்கு அவசியம் என்ன வந்தது. அதற்காக அந்த ஓட்டுனரின் வார்த்தை சரி என்று இல்லை. ஆரம்பித்து வைத்ததென்னவோ அந்த பெண் தானே.

இந்த சமூக வலைதளங்களில் தங்களின் தனிப்பட்ட அனுபவம் அல்லது கொள்கை என்று பல காரணங்களை முன்னிருத்தி ஆண்களை பற்றிய வன்மையான போக்கை காணும் போது, கடந்து போக நினைத்தாலும் சில சமயம் எரிச்சலை கிளப்பவது உண்மையே !

ஆண் பெண் இணையில்லாமல் இந்த உலகம் எப்படி சாத்தியப்படும்? இந்த சமன்பாடு தானே இயற்கை வகுத்தது. இதில் முரண்பட்டு என்ன செய்ய முடியும் நம்மால்? இது ஆண்களுக்கும் பொருந்தும்.

பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “ஆதாமோடு உலகம் அஸ்தமித்து போயிருக்கும்” என்கிறான் புதுக்கவிஞன்.

குறைகளும் உள்ளடங்கிய மனிதர்களாய் தான் படைக்கப்பட்டுள்ளோம் இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. பெண்களுக்குள்ளே சொல்ல வேண்டிய அனுபவக் கதை ஏராளம் இருக்கிறது. அதை காது கொடுத்து கேட்கின்ற ஆண் பெண்ணால் பெரிதும் நேசிக்கப்படுகிறான். உடலின் வலிமையை மனதுக்கு கடத்தத் தெரியாதவனாக இருக்கின்ற ஆணுக்கு இளைப்பாரிக் கொள்ள நிழல் தருகின்ற பெண் தாயாகிப்போகிறாள்.

இந்த அடிப்படையில் ஆண் பெண் உலகம் இயங்குகிறது, ஆனால் இன்றைய சூழலில் 'ஆண் திமிர் அடக்கு' என்று ஒரு ஆணை சுட்டி காட்டும் அதே தருணத்தில் 'பெண் திமிர்' தலை தூக்குகிறதா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஏனெனில் 'திமிர்' எனும் சொல் அன்புடைய நெஞ்சங்களை சிதைத்து போடும் வல்லமை கொண்டது.

சபிதா காதர்

3 Responses So Far:

sabeer.abushahruk said...

அருமையான பதிவு! தீர்க்கமான பதிவு!

பெண்ணியம் என்னும்
பிரம்பைக் கொண்டு
தன்னைத்தானே அடித்துக்கொள்கிறார்கள்
நவீன பெண்ணியவாதிகள்.

ஆணுக்குப் பெண்
சமமாக முடியாது
ஆணைவிட உயர்ந்தவள்
தாயென்னும் பெண்

ஆமினா said...

அருமையான கட்டுரை சபிதா

crown said...

இந்த அடிப்படையில் ஆண் பெண் உலகம் இயங்குகிறது, ஆனால் இன்றைய சூழலில் 'ஆண் திமிர் அடக்கு' என்று ஒரு ஆணை சுட்டி காட்டும் அதே தருணத்தில் 'பெண் திமிர்' தலை தூக்குகிறதா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஏனெனில் 'திமிர்' எனும் சொல் அன்புடைய நெஞ்சங்களை சிதைத்து போடும் வல்லமை கொண்டது.
--------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். சமூகமே! நிமிர்!என திமிர் இல்லாத அடக்கமான,ஆழமான எழுத்து ஓட்டம் ,அருமை பாராட்டுக்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு