Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உளத்தூய்மை : (மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்) 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2016 | , , ,

உளத்தூய்மை 
(மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்)

ஆக்க ஒரு தெய்வம்
அழிக்க ஒரு தேவன்
காக்க ஒரு கடவுள்
கண்காணிக்க ஒன்று

படைக்க ஒரு பரம்பொருள்
பரிபாலிக்க பரமன் என
பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய
பலகீனனல்லன் படைத்தவன்

வானங்களைப் படைத்தவன்
வணக்கத்திற்குரியவன்
அவன் என்று சொல் -அவன்
ஒருவன் என்று கொள்

உடற் தேவை உளத் தேவை
உள்ளிழுத்து வெளியேற்றும்
உயிர்ச் சுவாசத் தேவை - இன்னும்
அகத் தேவை புறத் தேவை
அளவற்ற பொருட் தேவை
எனும் எத் தேவையும்
இல்லாதவன் அவன்

தாயொரு தெய்வம்
தந்தையொரு கடவுள்
மகனொரு கடவுள் -அவர்தம்
அண்ணனும் ஆண்டவன் என்று
இனப்பெருக்கிகள் போல்

ஈகையை எடுத்தியம்பும்
ஈடிணையற்ற இறைவன்
எவரையும்
ஈன்றெடுத்ததில்லை
யாராலும்
ஈன்றெடுக்கப் படவுமில்லை

அவனியைக் காக்கும்
அவனுக் கிணையோ
அகிலமும் படைத்த
அவனுக்கு நிகரோ
அவ் வொருவனைத் தவிர
யாரு மிலர்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி: www.satyamargam.com

பொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2016 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்...

பொதுச்சிவில் சட்டம் பற்றிய கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துவந்த நிலையில், இஸ்லாமியப் பெண்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக இருந்தது. பொதுச்சிவில் குறித்து ஆண்கள் பேசுவதை விடவும் பெண்கள் சாதகபாதகங்களை அலசுவதே சிறப்பென கருதினோம். பொதுச்சிவில் குறித்த கேள்வியை இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பில் மொழிந்து இஸ்லாமியப் பெண்களின் கருத்துக்களை திரட்டினோம். ஒவ்வொருவரின் பதிலிலும் தீர்க்கமான பார்வைகள் இருந்தன. அவை அனைத்துக்கூறுகளையும் அலசிய கருத்துக்களாக அமைந்தன. பொதுச்சிவில் எதிர்க்கும் அதே வேளையில் நடுநிலையுடன் இன்றைய குழப்பங்களின் காரணங்களையும் விவரித்துள்ளனர். அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

ஜெ.பானு ஹாரூன் ( வடகரை) - நாவல் எழுத்தாளர் 

இஸ்லாமியர்கள் திட்டவட்டமாக எக்காலமும் ஏற்றுக்கொள்வது ஷரியாவை மட்டுமே ! ஆடு நனைகிறதே என்று அழுது ஊளையிடாமல் கீழ் மட்டத்திலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்விக்கும் ,வேலை வாய்ப்பிற்குமான சட்டத்திருத்தங்கள் செய்யுங்கள் ; உணவுத்தேவைக்கான வழிகளை காட்டுங்கள்; தினம் இடைக்காலத்தடை போடுபவர்களுக்கு அடைக்கலமளிக்காதீர்கள்-இதுவே இஸ்லாமியர்களுக்கு அரசு செய்யும் பேருதவி

ஒருவருக்கொருவர் அநியாயம் செய்து இறைவனுக்கும் மாறு செய்து துணையை விட்டுவிட்டு ஓடி ஒளிவதை விட, உடனிருந்துகொண்டே பிடிக்காத இணையை கொடுமை படுத்தி நச்சு உணர்வுடன் நெறுக்கிப்பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பதை விட இஸ்லாமிய சட்டப்படி செய்து கொள்ளப்படும் ''தலாக் '' -- க்கில் எவ்வித குறையுமில்லை.

மனநோய் , தாம்பத்யத்தில் ஒத்துழையாமை , குடும்பத்தில் நெருக்கமின்மை ,கடமைகளை புறக்கணித்தல் ,துணைக்கு மாறு செய்தல் ,சொத்துக்களை அபகரித்தல் ,குழந்தைகளை பிரித்துவைத்தல் போன்ற பல காரணங்கள் ! சிலவை வெளியே சொல்லாமல் பெண்களின் நலன் கருதி மறைக்கப்பட்டும் விடும் . தலாக்கினால் ஆண்களின் நடைமுறை வாழ்க்கையும் , பொது வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகிறது . மனைவியை தவிர வேறு எந்த பெண் உறவுகளும் ஒரு ஆண்மகனுக்கு நெருக்கமான பணிவிடைகள் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை . அதனால் இன்னொரு திருமண வாழ்க்கையின் தேவையும் ஏற்படுகிறது.

வெறுமனே கேட்பவருக்கெல்லாம் ''தலாக் ''-கை அனுமதித்து விடுவதில்லை . சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பிரச்னைக்குரிய காரணங்கள் ,பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் , குழந்தைகள் இருப்பின் அவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்று அலசி ஆராய்ந்த பின்னரே வேறு வழியில்லாத நிலையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . தம்பதியரிடையே பிரச்சனை நிகழ்ந்தால் சமாதானம் செய்துவைக்க மற்றவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது, இணக்கம் ஏற்பட வேண்டி பொய் சொல்லவும் இச்சமயத்தில் அனுமதி அளிக்கிறது. இத்தகு கட்டங்களைத் தாண்டியே பயனற்ற நிலையில் தலாக் கொடுக்கப்பட , இஸ்லாத்தை புரியாதவர்கள் தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். 

ஹுசைனம்மா (அபுதாபி) - எழுத்தாளர், இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் : 

பொது சிவில் சட்டம் எதிர்க்கப் படவேண்டியதே. அடிமை இந்தியாவில், தம்மை எதிர்ப்பதில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்தபோதும், ஷரிஆ சட்டத்திற்குத் தடையில்லை. சுதந்திர இந்தியாதான் அந்தச் சுதந்திரத்தை மறுக்கிறது.

சிவில் சட்டம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பொங்கிப் பாய்ந்து எழும் இஸ்லாமிய சமூகம், சலசலப்பு அடங்கியதும் மீண்டும் தனது கூண்டுக்குள் பதுங்கி விடுகிறது. சிவில் சட்டத்தைவிட, நம் இஸ்லாமியச் சட்டம் சிறப்பானது என்பதை நிரூபிக்குமளவு நம் சமூகத்தின் நிலை உள்ளதா என்ற பரிசீலனையோ, உரிய நடவடிக்கைகளோ எதுவும் எடுக்காமல் அதே நிலையைத் தொடர்ந்தால், நம் உரிமைப் போராட்டம் வீழ்வதற்கு நாமே காரணமாவதைத் தடுக்க முடியாது.

தலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.

பலதார மணத்தை நபிவழியெனும் நாம், விவாகரத்தின்போது குழந்தைகளைப் பெண்களின்மீது சுமையாக்கி அவர்களின் மறுமணத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறோம்.

பர்தா அணிவதில் பெண்களுக்கு நரகத்தைச் சொல்லிப் பயமுறுத்தும் நாமேதான், நரகத்தின் அச்சமின்றி அவர்களின் சொத்துரிமையில் கைவைக்கின்றோம்.

இறைவனே வடிவமைத்துத் தந்த நம் சட்டம் எத்தனை சிறப்பானது? ஆனால், குர் ஆனில் இறைவன் முந்தைய “அஹ்லே கிதாப்” மக்களை எதற்காகச் சபித்தானே, அதே தவற்றை - சாதகமானவற்றைப் பின்பற்றுவதும், பாதகமானதை ஒதுக்குவதும், திரிப்பதும் ஆன அதே பாவத்தை அல்லவா நாம் செய்கிறோம் என்ற உண்மையை என்று உணர்வோம் நாம்?

அந்நாளில்தான் சிவில் சட்டத்தை நம்மீது திணிப்பதற்கு அஞ்சுவார்கள்!!

13:11. எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;

மலிக்கா (முத்துப்பேட்டை) - கவிதாயினி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :

பொதுசிவில் சட்டம்குறித்து காட்டுத்தீபோல் இஸ்லாமிய நெஞ்சங்களில் பற்றிக்கொண்டுள்ளது. இது ஜனநாயகநாடு/ இதில் பல்வேறு சமயத்தினர் வாழ்கிறார்கள்.  இந்தியச்சட்டத்திலும் அந்தந்த மதங்களுக்கு உண்டான தனிப்பட்ட சட்டங்களிலும் மதநம்பிகைகளிலும் அவரவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும்போது இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் அந்த உரிமையை பறிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?

அதேசமயம், இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாய் இஸ்லாமியவாதியென தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்

சரிவர அதன் சட்டங்களை புரியாது அல்லது பின்பற்றத்தெரியாது சிலபல குழப்பங்களை செய்து  அதனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வதை நிச்சயமாய் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும் !  பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே!. 

ஷாபானு வழக்கைப்போல் மேலும் சிலர் தொடுத்த வழக்குகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பேற்காது,  பொறுப்பற்று இதுபோன்ற அநீதிகளை கண்டும் காணாமலும் விட்ட அந்தந்த மாநில மற்றும் ஊர் ஜமாத்தார்கள் , சிலபல பெரிய அறிவாளிகள் பொடுபோக்கு நிலையே இதுபோன்ற பெண்களின் அநீதிகளுக்கு காரணமாக இருக்கும். அதனை உரியமுறையில் களையெடுத்து களையவேண்டுமே தவிர எங்களின் வாழ்வியல் பாடங்களான இஸ்லாமிய சட்டமே தவறானதென்ற குற்றச்சாட்டை எப்படி ஏற்கமுடியும்? ஆனால் அதனை சரிவர நடைமுறைக்குகொண்டுவராது செயல்படுத்தாதன் விளைவே விஷ்வரூபமாய் இன்று!

மேலும் எந்த சமயத்தில்தான் இல்லை இதுபோன்ற உட்பூசல்கள் ? இதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள் நாங்கள் உடன்படுகிறோம். மத உணர்வுகளில் தலையிட வேண்டாம் !

பெனாசீர் (தூத்துக்குடி) - இல்லத்தரசி : 

பொது சிவில் சட்டம் பெண்களின் பார்வையில் ஒரு சம உரிமையை தரும் சட்டம் என்று வைத்து கொள்வோம் ,ஆனால் இதனை பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இது இஸ்லாமிய கொள்கையினை பற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதாக எடுத்து சொல்ல தலாக் சட்டத்தை ஊக்குவிக்க கூடாது என்பதை மட்டுமே முதலில் கூறியவர்கள், பின்பு இஸ்லாமியர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்த பின்பு சுதாரித்து கொண்ட அவர்கள் 'இது பெண்களுக்கான சம உரிமை' என்று இப்போது கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் இதிலே புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களான நாம் இறைவன் நமக்கு திருகுர்ஆன் வழியாக கூறியவற்றையே நாம் பின்பற்றவேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திட்டபோதும் ஈமான் இழக்கமாட்டோம்.

சபிதா காதர் (அரக்கோணம்) - இல்லத்தரசி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் : 

பொது சிவில் சட்டம் பற்றி பல்வேறு அதிர்வலைகள் கிளம்பும் இவ்வேளையில்  அதை வேண்டாம் என்று பதிவு செய்பவளாக இருக்கின்றேன் இது ஒரு வகையில் ஒவ்வொருவரின் தனித்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் முயற்சியே  பன்முகத்தன்னைக்கு வைக்கப்படும் வேட்டு.

எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்தியேக உரிமையை விட்டு தர விரும்பவில்லை

சித்தி நிஹாரா (மலேசியா) - இல்லத்தரசி , இக்றா கல்வியியல் அமைப்பு நிர்வாகி : 

பெண்களின் கண்ணியம் சுயமரியாதை கட்டிக்காப்பதற்காகவே விவாகரத்துச் சட்டங்களை வரையறுத்து பெண்களுக்கு பல சலுகைகளையும் மறுமணத்திற்கான வழியையும் காட்டியுள்ள ஒரு மார்க்கத்தில் உடன்கட்டை ஏறுதலையும் தலையணையின்றி உறங்க வேண்டுமென்றும், மொட்டையடித்து அவளை நடைப்பிணமாக்கி அலங்கோலப்படுத்துவதையும் கொள்கையாய் வைத்திருந்த கூட்டம் முஸ்லிம் பெண்களை பற்றி பேசுவது வேடிக்கையானது! பொதுசிவில் சட்டம் முஸ்லிம்களின் மீது தொடுக்கும் நேரடிப்போர். ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தாலும் அது நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. முஸ்லிம் ஜமாஅத்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் என நினைக்கிறேன்.

யாஸ்மின் (துபாய்) - இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர்

பொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகமோ அது போல் அநாகரீமானது. இன்னும் சொல்லப் போனால் அவரவர் மத உணர்வுகளில் கை வைப்பது உயிரை வைத்து உடலை மரத்து போகச் செய்வதற்கு சமம்.

இருக்கும் பொது சட்டங்களையே பாரபட்சமின்றி காட்டாத அரசும், அரசாங்கமும் தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து அனைவரையும் சமமாக நடத்தப் போகிறதா?

ஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டுமே இருக்கைகளும், பதவிகளும், நீதி என்றும், இருக்கும் அனைத்து தண்டனைகளும், அடக்குமுறைகளும், சிறைகளும் சிறுபான்மையினருக்கும், தலீத்துகளுக்கும் மட்டும் என்று கபட நாடகம் ஆடும் இந்திய தேசத்தில் பொது சிவில் சட்டத்தை வைத்து அனைவரும் சமம் என்பதை நிறுவப் போகிறோம் என்று சொல்வது இந்திய தேசியம் மூளைச்சாவு அடைந்து விட்டதற்கு சமம், “ஆப்பரேசன் சக்சஸ் ஆனா பேசன்ட் டைட்”

ஜபினத் (சென்னை) - கவிஞர், நாவல் எழுத்தாளர் , ஈவண்ட் ஆர்கனைசர் :

நாம் இஸ்லாமிய இந்தியர்களுக்கு மதமும் நாட்டுப்பற்றும் இரு கண்களைப் போன்றதாக கருதுகிறார்கள்/ ஒவ்வொரு இஸ்லாமியனும் எவ்வளவு தீவிரமாக மார்க்கத்தை நேசிக்கிறார்களோ அதே அளவில் தான் நாட்டையும் நேசிக்கிறார்கள். இறைவனின் வேதத்தை பின் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் வாழவும் செய்து, தான் வாழும் நாடு வகுக்கும் சட்டத்தை பேணியும் காத்து நடக்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து இறைவனின் சட்ட திட்டங்களை பேணுதல் என்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமன்று. ஆனால் மாறுபட்ட கொள்கை உடைய ஒரு நாட்டில் மார்க்கத்தையும் பேணி சட்டத்தையும் மதிப்பது என்பது அத்தனைச் சுலபமானதல்ல, அதைச் சால செய்வது என்பதில் தான் இந்திய இஸ்லாமியனின் நாட்டுப் பற்றும் மார்க்கப் பற்றும் தெளிய நீரோடைப் போல் தெரிய வருகிறது.

இஸ்லாமியன் என்ற காரணத்திற்காய் கொலை, கொள்ளை எந்த வழக்கிலிருந்தும் பாகுபாடில்லாமல் தான் இந்திய சட்டம் தன் தீர்ப்பை வழங்குகிறது. ஏன் ஹெல்மெட்டுக்காக தண்டிக்கப்படும் சிறிய அளவு குற்றமாயினும் எந்த பாகுபாடும் இல்லை. அப்படி இருக்கும் போது தன் மார்க்கத்திற்கே உரிய திருமணம், பர்தா போன்ற உளவியல்களுக்குள் இந்தியச் சட்டம் பாய நினைக்கும் பொழுது பொது சிவில் மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இன்றியமையாததாகிவிடுகிறது.

நூற்றாண்டுகளாய் இருந்து வந்த மாட்டு இறைச்சி விசயத்தில் புதிதாக சட்டத்தை கொண்டு வந்து தன் இந்துத்துவ ஆதரவை மறைமுகமாக இந்திய அரசு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான சட்டம் இஸ்லாமியர்களின் மீது மட்டும் உளவியல் ரீதியாக தன் கோரக்கரத்தை நீட்டுவதால் இதுகாலும் அமைதியாக இருந்த சிறுபான்மையினரின் கோபங்களை கிளறிப்பார்த்துள்ளது. உரிமைகள் பிடுங்கப்படும்போது போராட்டங்கள் எழுவது இயல்பே, எனவே இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்களின் உளவியல்களோடு விளையாடாமல் பொது சிவில் சட்டம் என்ற எண்ணத்தை கைவிடல் வேண்டும்.

ஒரு வீடாகினும், நாடாகினும் மார்க்கமோ, சட்டமோ இயல்பாகவே வகுத்த சட்டங்களில் மனிதர்கள் இடையில் புகுந்து பெண்களுக்குரிய உரிமைகளை தடுக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து அத்துமீறல்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு இயல்பாக வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுவதுமாக உணர்வாகளாயின் அப்போது தான் இந்திய சட்டம் பொதுவாக பெண்கள் மீதாக எத்தகைய எதிர்ப்புகளை புகுத்தி வருகிறது என்பதை உணர்வார்கள்.

அதே சமயத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டம் வேறு இன்று நடைமுறைப் படுத்தப்படுவது வேறு. இன்றைய மார்க்க அமைப்புகளுள் ஒற்றுமை இல்லாமையும் இரட்டடிப்பு செய்யப்படும் பெண்களின் உரிமைகளும் ஆண்வர்க்கத்தின் சுய இலாபங்களையும், பதவி ஆசைகளையுமே எடுத்துரைக்கிறது. மார்க்கத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கும் இந்த ஆணாதிக்க அமைப்புகளிடமிருந்து வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் ஈமானின் பால் நின்று மீட்டெடுப்பர் என்று நம்புகின்றேன், எனது கரத்தையும் அதில் இணைக்கின்றேன். அத்தகைய ஈமானிய உணர்வுகளுக்கு உங்கள் பொதுச்சிவில் தேவையில்லை ! 

பர்வீன் அனஸ் (சென்னை) - Managing Director at BURAK India , Director (company) at Burak Lanka Private Limited. 

பொது சிவில் சட்டத்தை பற்றி விவாதிக்கும் முன் நாம் இந்தளவுக்கு பரபரப்பை உண்டாக்கிய காலகட்டத்தை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் . நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சரியான இடைவெளிகளுடனும்- பல பிரச்சனைகளை- முக்கியமாக மதம் ஜாதி சார்ந்த பிரச்சனைகளை பொது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுபான்மையினரை குற்றப்படுத்தி 'இந்து சமுதாய மக்களின் பாதுகாவலன் தாங்கள்தான்' என்பதை மிகைப்படுத்திக்காட்டவே ஒரே கொள்கையுடைய பிரச்சனைகளும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கர் வாப்சி,லவ் ஜிஹாத்,மாட்டிறைச்சி,ராமர் கோவில், கலபுர்கி டபோல்கர் மற்றும் பன்சாரே போன்றோர்களின் கொலை, ரோஹித் வெமுலாவின் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என தொடர்ச்சியாக சரியான கால இடைவெளியில் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சிகளை தூண்டும் அரசியலே இதுவரை பார்த்து வந்துள்ளது மத்திய அரசு.

மட்டுமல்லாது நலத்திட்டங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் ,பேட்டி பச்சாவோ,டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மண்ணைக்கவ்வியதாலும் ஜாதி ஓட்டு முறையாலும் பீஹாரில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு உத்திரப்பிரதேசம்,உத்ராகண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தலை தோல்வி இல்லாமல் எதிர்கொள்ள எடுத்த விசயம்தான் பொதுசிவில் சட்டம்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொதுசிவில் சட்டம் என்பது இயலாத காரியம். அனைத்து வித மத மக்களுக்கும் அந்த மதம் சார்ந்த திருமணம்,விவாகரத்து,சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தினரின் ஷரீஅ சட்டங்களில் கைவைப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத கயவாளித்தனத்தை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் ஷரீஅ சட்டங்களை திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமைகளுக்கு பின்பற்றுவது மற்ற சமுதாய மக்களின் பாதுகாப்புக்கோ இறையான்மைக்கோ அச்சுறுத்தலாக இல்லாத போது ஏன் இஸ்லாமியர்களின் தலாக் சட்டங்களை மட்டும் குறி வைக்க வேண்டும்?

நமது சமுதாயத்திலும் முத்தலாக் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும்,மணக்கொடை பற்றிய தெளிவான அறிவும் பின்பற்றுதலும் இல்லாதது பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ் இயற்றிய சட்டங்களை நாம் கடைபிடித்தாலே ஜீவனாம்சம் பற்றிய கேள்வி எழாது. பள்ளிவாயில்களும் ஜமாஅத்தும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றாததால் இன்று நமது சட்ட உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு இதை தேர்தல் கால யுக்தியாகவும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி மூடி மறைக்க எடுத்த ஆயுதமாக கொண்டாலும் , இந்த நேரத்தை பயன்படுத்தி நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாஅத்களும் சமுதாய தலைவர்களும் முன்வர வேண்டும்.

இந்த பிரச்சனையின் வீரியம் குறைந்ததும் ஓரணியில் நிற்கும் தலைவர்கள் பிரிந்து விடாமல் சமுதாய மக்களின் நலனுக்காக இணைந்து பயனிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் பெர்ஸனல் போர்டுக்கு ஆதரவாக கையெழுத்துகளை அளிக்க இயக்கம் கடந்து அனனவரும் கையெழுத்திட்டது பெரிய மாற்றம். அந்த மாற்றம் கண்துடைப்பாக மாறிவிடாமல் முத்தலாக்கின் சட்டங்கள் குறித்த தெளிவை ஜீம்ஆ பயான்கள் மூலம் மக்களை சென்றடைய பள்ளிநிர்வாகமும் இமாம்களும் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். துண்டுப்பிரச்சாரங்கள், ஒருநாள் பயிலரங்கங்கள், புத்தகங்கள் ,ஆவணப்படங்கள் மூலமாகவும் இளைஞர்களிடையே எடுத்து செல்லலாம். அதே சமயத்தில் பிறமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

ஆமினா முஹம்மத்
செயலாளர் - இக்றா பயிற்சி மையம்
நிறுவனர் - இக்றா ஆன்லைன் புக்‌ஷாப்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

கடமையான தொழுகைகளை பேணுதலின் கட்டளை!

‘’தொழுகைகளையும், நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் : 2:238 அல்பகரா - அந்த மாடு)

''செயல்களில் மிகச் சிறந்தது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ''உரிய நேரத்தில் தொழுவது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''பின்பு எது?'' என்று கேட்டேன். ''பெற்றோருக்கு நலம் பேணுதல்'' என்று கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். ''அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்தல்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1074)

''ஒரு மனிதனுக்கும், இணை வைத்தலுக்கும் இடையே வேறுபாடு, தொழுகையை விடுவதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1078)

''நமக்கும் (முஸ்லிமல்லாத) அவர்களுக்குமிடையே உள்ள ஒப்பந்தம் தொழுகை தான். அதை விட்டவர், இறை மறுப்பாளர் ஆகிறார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1079)

'' மறுமை நாளில் ஓர் அடியான் அவனின் செயல் பற்றி கணக்குக் கேட்கப்படுவதில் முதன்மையானது, தொழுகைதான். அது சீராக இருந்தால் அவர் வெற்றி பெற்று, நல்லவராகி விட்டார். அது கெட்டு விட்டால், அவர் கவலையும், துயரமும் அடைந்தவராவார். அவரது கடமையான தொழுகையில் ஏதும் குறை இருந்தால், ''என் அடியானிடம் உபரியான நன்மை உண்டா? என்று பாருங்கள்'' என, அல்லாஹ் கூறுவான். கடமையான தொழுகையில் உள்ள குறைகள் அதன் மூலம் நிறைவு செய்யப்படும். பின்பு இது மாதிரியே மற்ற செயல்களும் ஆகும் என்று  நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன் : 1081)

முதல் வரிசையின் சிறப்பு  

''நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''வானவர்கள் தங்களின் இறைவன் முன் அணிவகுத்தது போல் நீங்கள் அணிவகுக்க மாட்டீர்களா?'' என்று கூறினார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! வானவர்கள் தங்கள் இறைவன் முன் எப்படி அணி வகுத்து நிற்பர்? என்று கேட்டோம். ''அவர்கள் முதல் வரிசைகளில் நிற்பார்கள். மேலும் வரிசையில் நெருக்கமாக நிற்பார்கள்'' என்று கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1082)

''நபி(ஸல்) அவர்கள் வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்குச் செல்வார்கள். எங்களின் நெஞ்சுகளையும், தோள்பட்டைகளையும் தடவுவார்கள். ''நீங்கள் மாறுபட்டு நிற்காதீர்கள். உங்களின் இதயங்கள் மாறுபட்டு விடும்'' என்று கூறிவிட்டு ''நிச்சயமாக அல்லாஹ் முதல் வரிசையில் உள்ளோருக்கு அருள்புரிகிறான். வானவர்கள்; அருள்புரிய வேண்டுகிறார்கள்'' என்றும் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது) ரியாளுஸ்ஸாலிஹீன் : 1090 )

''வரிசைகளை (சமமாக) பேணுங்கள். தோள்பட்டைகளை சமமாக்குங்கள். இடைவெளிகளை நீக்குங்கள். உங்கள் சகோதரர்களின் கைகளை மென்மையாகப் பிடியுங்கள். ஷைத்தான்களுக்கு இடைவெளியை ஏற்படுத்தி (இடம் தந்து) விடாதீர்கள். வரிசையில் சேர்ந்து நிற்பவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். வரிசையை விட்டு பிரிந்து நிற்பவனை, அல்லாஹ் பிரித்து விடுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (அபூதாவூது - ரியாளுஸ்ஸாலிஹீன் : 1091 )

''முதல் வரிசையை முழுமைபடுத்துங்கள். பின்பு அடுத்த வரிசையை முழுமைப்படுத்துங்கள். குறை எதுவும் இருப்பின், அது கடைசி வரிசையில் இருக்கட்டும்'' என்று  நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன் :1093 )

சுப்ஹின் சுன்னத் இரண்டு ரக்அத்களின் அவசியம்

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும், சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விடமாட்டார்கள்.  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1100)

''நபி(ஸல்) அவர்கள் உபரியான (நபிலான) தொழுகைகளில் சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்களைவிட வேறு எதிலும் மிக உறுதியாக கடைபிடிப்பவர்களாக இருந்ததில்லை. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1101)

''சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்கள், இவ்வுலகம், மற்றும் அதில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1102)

''நபி(ஸல்) அவர்கள் சுப்ஹின் இரண்டு ரக்அத்தில் ''குல் யாஅய்யுஹல் காஃபிரூன்'' (109 வது அத்தியாயம்), மற்றும் குல்ஹுவல்லாஹுஅஹத்''  (112 வது அத்தியாயம்) ஆகியவற்றை  ஓதுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1108)

லுஹரின் சுன்னத்

''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்தையும், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்தையும் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1113)

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தை விடாதவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1114)

''லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தையும், லுஹருக்குப்பின் நான்கு ரக்அத்தையும் ஒருவர் பேணி (தொழுது) வந்தால், அல்லாஹ் அவருக்கு நரகத்தை தடை செய்து விட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1116)

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தை தொழாவிட்டால், அதன்பின் (பர்லுக்கு பின்) அதைத் தொழுவார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1118)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமாலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 5:8)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். ((அல்குர்ஆன்: 49:6)

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! (அல்குர்ஆன்: 49:11)

வானங்களிலும், பூமியிலும் மறைவாக உள்ளதை அல்லாஹ் அறிவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்:49:18)

உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை  அவன் படைத்தான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது. (அல்குர்ஆன்: 11: 118,119 )

எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் : யூஸுஃப் - 12:53 யூஸுஃப் நபி)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் '' 
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

முத்தலாக்கின் மூடுபொருள்! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2016 | , , ,


மோகத்திற்கு முப்பதும்
ஆசைக்கு அறுபதுமென
தொண்ணூற்றி ஓராம் நாள்
திகட்டிற்று வாழ்க்கை

சமைந்த நாள்முதல்
சமைக்கவே இல்லை போலும்
உண்ணக் கொடுத்ததிலெல்லாம்
உப்பு, புளி கூடியது

துவைத்து உலர்த்திய
துணிமணியி லெல்லாம்
ஈர வாடை இருந்தது
எதிர்ச் சொற்கள் சொல்லியே
எரிச்சல் கூட்டியது

ஆயிரெத்தெட்டுக் காரணங்கள்
அவளுக்கெதிராய்
ஒன்றுகூட நினைவில்லை
ஒருமித்து வாழ்வதற்கு

முதல் தலாக்குக்குப் பிறகு
முதுகில் முளைத்தது சிறகு

முறுக்கித் திரிந்தது இளமை
சொல்பேச்சுக் கேட்காதவளின்
சோலியை முடித்த
செருக்கோடு

***
இரண்டாம் தலாக்குக்குப் பிறகும்
இளகி வரக்காணோம்.

பிடிவாதம் என்றொரு நோய்
மண வாழ்வின்
அடிநாதம் கசக்கவைக்கும் எட்டிக்காய்
குடிகெடுக்கும் கோட்டானின் வாய்

உடல்வாதம்கூட
ஒரு பக்கமே இழுக்கும்
உறுப்புகளை வளைக்கும்
பிடிவாதம் எந்த
மனத்தினையும் சுருக்கும்
மனிதனையே முடக்கும்

முயலுக்கு மூன்று கால்கள்
மூச்சுமுட்ட முழங்கும்
நாலாவது காலை
கண்டாலும் மறுக்கும்

காண்பதையும் கேட்பதையும்
கொள்கை யென்று ஏற்கும்
தீர விசாரிக்காது
தீர்வுகளை எட்டும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுகளைப் போடும்
ஒட்டடை படிந்ததுபோல்
உள்ளத்தைப் பாழாக்கும்

மாற்றமில்லாக் கோட்பாடுகளில்
ஏற்ற இறக்கம் தேடும்
வரிகளுக்கிடையேதான்
வாசிக்க நாடும்

****
மூன்றாம் தலாக்குக்கு
முதல் நா ளிரவில்
விட்டம் நோக்கிய
வெற்றுப் பார்வையில்
விழிகளில் நீர்

கண்டதும் களித்ததும்
காத்திருந்து புசித்ததும்
தலைவலித் தைலத்தோடு
உயிர் தோய்த்துத் தேய்த்ததும்

கைப்பிடித்த நாள்முதல்
கதி நீயே என்றதும்
கண்ணுக்கெட்டாத் தூரத்தை
கைகோர்த்துக் கடந்ததும்

வாழ்ந்த வாழ்க்கையின்
வசந்தம் நினைத்துக்
கனிந்தது உள்ளம்

மனைவியின் அன்பு
நினைவினைத் தீண்ட
மாசற்ற சேவைகள்
மனதினில் தோன்ற

சில்லரைச் சச்சரவுகளை
நல்லதைக் கொண்டு வெல்ல
மறுநாள் காலை
மனைவிக்காக விடிந்தது

இறைவனின் கருணையால்
இருவரும் இணைய
முத்தலாக்கின் மூடுபொருள்
முழுதும் புரிந்தது!

துலாக்கோலில் நிறுத்தறிய
பலாக்காயல்ல வாழ்க்கை
நிலாக்கால நினைவுகளை
தலாக்கென்று வெட்ட வேண்டாம்!

 சபீர் அஹ்மது அபுஷாரூக்

சுருக்க நடவுல... ! - வாக்கி டாக்கி ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2016 | , , , ,


அதிரை மண்ணின் மைந்தர்கள் ஆகாயத்திலும் மனைபோட்டு வீடுகட்ட தயங்காதவர்கள் இருந்தாலும் விமானங்களை வீட்டு மாடியிலேயே இறக்கி கலரிச் சாப்பாட்டில் கலந்து கொள்ளும் வேகமும் இருக்கும். இது கடல் கடந்து இருக்கும் ஆண்மக்களோடு இருந்திடாது, அதிரையின் அழகும், ஆளுமையும், அன்பும், ஆர்ப்பரிப்பும் ஒருங்கே சுற்றிச் சுழலும் பெண்மக்களும் சலைத்தவர்கள் அல்ல. உலக அரசியலானாலும் உள்ளூர் பிரச்சினைகளானாலும், ஜெயா-சசி பிணக்கானாலும், மு.க. குடும்ப பிரச்சினைகளானாலும். எதனையும் அலசும் அசாத்திய துணிச்சலும் தீர்வும் தங்களுக்குள் சொல்லும் இருவர்; சாலை வழி காலை வாக்கிங்  சென்று கொண்டிருந்த இரு பெண்டிரின் அசத்தும் உரையாடலைக் கேட்க நேர்ந்தது அதன் பாதிப்புதான் இந்த பதிப்பு.


“என்னாவுள இந்தப்பக்கமா தெரியுது எதாச்சும் சேதி இல்லாம இந்தபக்கம் வரமாட்டியே”

 “அதயான் கேக்குறேவுள, இம்புட்டு நாளா ஓடிக்கிட்டு இருந்த ‘அட்லாண்ட ஓடத்த’ நிப்பாட்ட போறாஹலாம்”

“அது எங்கவுள ஓடிக்கிட்டு இருந்துச்சு”

“அந்த கூத்து தெரியாத ஒனக்கு? இதுவரைக்கும் பூமிக்கும் வானத்துக்கும் 135 தடவ பறந்து போயிட்டு வந்து கீது மொத மொதல்லே ஆமாத்து மாப்பிள இருக்கிற அமெரிக்காவுல 1983 வருசத்துலதான் சேலன்சர்’னு புராக்கு வாஹம்மாதிரி ஈக்கிறத்துல அனுப்பி அது அங்கே போயி கோளை சுத்த விட்டுட்டு பூமிக்கு திருபும்புனிச்சி.

“வானத்துக்கும் பூமிக்குமா? என்னமோ அதுராம் பட்டன்த்துக்கும் பட்டுக்கோட்டைக்கும் PP லே போயிtடு வரமதிரில சொல்றீய்வுல?”

“அடியா ஆமாவுளே அப்புடித்தாவுள போச்சு ஆனா ஒருவாட்டி போனது திரும்பி வரலே வானத்துலே மாக்குண்டு  சாஞ்சி வெடிச்சி போச்சி  நம்ம ஊரு பொம்புளை ஒன்னு மௌத்தாபோச்சு அது கூட போன பதிமூணு பெரும் சேந்து மௌத்தா போய்ட்டாஹ”

“என்னவுளே சொல்றே  நீ சொல்றது எல்லாம் ஒரு கொதரத்தாவும் புதுனமான   செய்தியாவுல ஈக்கிது அதுவும்  நம்ம ஊரா எந்த தெருவு”

“அடிபோடி இவ ஒருத்தி, வெவரம் இல்லாதவ நம்ம ஊருன்னா நம்ம நாட்டு பொம்புளைன்னு சொல்ல வந்தேன்”

“அதானே பாத்தேன். ஆமா அந்தபுள்ள பேருகூட கல்பனா’ன்னு ஊட்லே புள்ளையளுவோ ரொம்ப நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருந்துச்சுவோ நா என்னவோ தர்மாஸ்பத்திரி நர்ஸுன்னு நினைச்சேன். அதுகூட அரசல் புரசலா காதுலே உளுந்துச்சி”

“ஒனக்கும் ஊரு ஒலகத்துளே நடக்குறது அப்பொப்போ காதுல உளுவுதுதான், மொதல்ல வாணவேடிக்கை காட்டுறமாதிரி எல்லாம் ராக்கெட்டை வானத்துலே போய் செயற்கை கோளை இறக்கி உட்டுப்புட்டு அந்த ராக்கெட்டு தன்னாலே வெடிச்சி வாணம் முழுக்க ஒரே குப்பையும் கூளமுமா போகுதுன்னுதான் இந்த அட்லாண்ட ஓடத்த கண்டு பிடிச்சாஹ இது போயிட்டு கோளை வானத்துலே விட்டு புட்டு பத்தரமா திரும்பி  வந்துடும் வானத்தையும் குப்பை கூலமக்காது, நம்ம சேர்மனுக்கும் அலச்சல் இல்லாம போயிடுச்சுவுல”

“அடியா ரைமாம பேத்திடியாடி நீ ஒனக்கு வெளக்கா தெருவுலே நல்ல மீனு  மட்டும்தான் வேங்க தெரியும்ன்னு இம்புட்டு நாளா தப்பாவுல வெளங்கிட்டேன் நீனும் வெவரமாத்தான் ஈக்கிறே எந்த புத்துல எந்த பாம்பு ஈக்கும்ன்னு  அல்லாஹ்க்குத்தான் வெளிச்சம்”

“இன்னும் ஈகிது கேளுவுள இந்த அட்லாண்ட ஓடம் மொத்தம் அஞ்சு செஞ்சாஹவுள, அதுலே ஒன்னு வெடிச்சி போச்சி பாக்கி நாளுல ரெண்டே செத்த காலேஜ்லே வச்சிபுட்டாஹ பாக்கி ரெண்டுக்கு இப்போ ஓய்வு கொடுக்க போறாஹவுல”

“இம்முட்டு நாளா இந்த அஞ்சும் என்ன வேல செஞ்சிச்சி இதுக்குமா ஓய்வு கேக்குது ? நீ சொல்லறது எல்லாம் எனக்கு புதுனமா தாம் புள்ள ஈக்கிது”

“வர வர நீனும் நல்ல நல்ல கேள்வியா கேக்குறேவுள. இந்த அஞ்சும் இதுவரைக்கும் நூத்துகணக்கான செயற்கை கோளை வானத்துல போய் சுத்த உட்டுபுட்டு பூமிக்கு திரும்பி வந்துருச்சி அதுலே முக்கியமான ஒன்னு ‘ஹப்பில்’ தொலைநோக்கியை வானத்துலே சுத்த உட்டு ஊரு உலகத்துலே என்ன நடக்குதுன்னு ஒத்து கேக்குறது இல்லே இல்லே உத்து பாக்குறது. அதுபோய் பாத்துட்டுதான் ஆச்சிக்கு ஃபோன் போட்டு எங்கடி ஊரு ஒலஹத்துல மனை இருக்குன்னு சொல்லுதுவுல”

“ஆமா இந்த நூத்துக்கணக்கான கோலும் அங்கே  வானத்துலே போய் என்னாவுல செய்து ?”

“நல்லா கேட்டே போ, நமக்கு அடுத்த ஊடு பூட்டி இருந்தாலே கொஞ்ச நேரத்துலே நாம  மக்கசக்க ரத்துலே வர்றோம் அவுக எங்கோ போயிட்டாக என்ன வாங்க போய்ட்டஹன்னு தலை சுத்துது அதுபோல் பக்கத்து பக்கத்து நாடெல்லாம் என்ன செய்றாக எங்கே போரஹன்னு  மேலர்ந்து கீழ  உத்து பார்க்கத்தான் இப்புட்டு ஏற்பாடும்”

“அப்போ மேலர்ந்து பாத்தா கீழே எல்லாம் நல்லா தெரிய்மாவுள?!”

“என்ன புள்ள ஒனக்கு எல்லா சேதியையும்  எம்பிக்கிகனுமாவுளோ இக்கிது.  நீ கொல்லைளே இருந்து மீன் ஆஞ்சா அது கொடுவா மீனா, கெலகன் மீனா, பண்ணா மீனான்னு சரியா பாத்துரலாம் ! அதுல அந்த அளவுக்கு கேமராவ வச்சிகிரஹ இங்கே மூணாவது கண்ணு நாலாவது கண்ணுன்னு எல்லாம் வச்சி போட்டோ எடுக்குரோஹலே அந்த கேமராவெல்லாம் டுபுக்குத்தான் புள்ள 

“அடியே  இப்புடி காட்டி குடுக்குறதாளதான்  அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ !! இனி கொல்லைக்கு போனாலும் மொட்ட மாடிக்கு போனாலும் தலைக்கு முக்காட்டை இழுத்து  போட்டுகிட்டுதான் போவனும். இப்புடி எல்லாத்தையும் அவ்வோ கைலை வச்சிகிரதலதான் இந்த பவுமானமா  இக்கிதோ!”

“நீவேற புதுசு புதுசா கெளப்பி உடுறே இதையும் கேளு அட்லாண்ட ஓடத்த நெருத்துரதால அங்கே வேல செஞ்ச  நாசாவின் 4 ஆயிரம் பேருக்கு வேல இல்லாம போவுதாம்”

“அல்லாவே அப்படின்னா நம்மவூரு புள்ளையலுவோ எல்லாம் அப்பம் மாதிரி திரும்பி வந்திடுவாஹலோ ?”

“என்னாவுல எந்த ஒலஹத்துல ஈக்கிறே?”

“அப்போ அவ்வோ  அவ்வளவு பெரும் சோத்துக்கு என்ன செய்வோக நாசன்னு பேர வச்சிக்கிட்டு அந்த  4000 பேரையும் நாசம் பண்ணிட்டாஹலே”

“அடி போடி இவ ஒன்னும் வெலங்காதவளா ஈக்கிரா  அவ்வொளுக்கு சோத்துக்கா பஞ்சம்  இவ்வளவு நாளா செஞ்ச வேலகித்தான் பணத்த அல்லு அள்ளுன்னு அள்ளி ரெண்டு மூணு தல மொறைக்கு சேத்து கட்டி வச்சி இருபாஹலே”

“அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ    திரும்ப திரும்ப உட்டுர்றாஹ. நம்ம ஊருல செய்ற பாலித்தின் பைய ஒருக்கா   பயன்படுத்துனா மருவா பயன்படுத்த முடியாம செஞ்சி ஊரு முழுக்க  எங்கே பாத்தாலும்  குப்பையும் கூளமுமா    பிளாஸ்டிக் பையா தான்  கெடக்குது  அவுக வானத்தைய குப்பை கூலம் பன்னக்குடதுன்னு பாக்குரக நாம இருக்குற பூமிய போட்டு எல்லா அடந்தரசியும் பண்ணி வச்சிக்கிறோம்    எப்போதான் நாம திருந்த போறோமோ தெரியலவுள?”

“அடியா சீக்கிரம் நடவுல, நம்மல ஃபோட்டோ எடுத்துடப் போவுது”

-Sஹமீத்

அல்லாஹ் யாரை நேசிக்கிறான் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2016 |

நேசம் போற்றாத மனிதன் எவரும் இவ்வுலகில் இருப்பதில்லை, ஒருவருக்கொருவர் நேசத்தை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அதனை நிலைப் படுத்திக் கொள்வதிலும் சூழலுக்கு ஏற்பவும் நெருக்கத்துக்கு ஏற்றவாரும் மாறுபடும்.

ஆனால், நம்மை படைத்த இறைவனின் நேசத்தை பெறுவதற்கு நாம் அன்றாடம் செய்யும் செயல்கள்தான் என்ன !?

இந்த காணொளியில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் இறைவசனங்கள் எடுத்துரைக்கிறது அல்லாஹ் யாரை நேசிக்கிறான் என....


அதிரைநிருபர் பதிப்பகம்

ஸ்டெடி ரெடி அப்புறம் புடி ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2016 | , , ,

நம்மைச் சுற்றி நிகழ்பவைகளில் உலகில் நிறைய விசயங்கள் மாறினாலும் ஒரு சில விசயங்கள் இன்னும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றன அல்லது இயங்குகின்றன ! முன்பெல்லாம் நாங்கள் மல்லிபட்டினம் மனோராவுக்குச் சென்றாலும் அங்கே நின்று அல்லது அந்த கட்டிடக் கலையை போட்டோ எடுப்பவர்கள் மனோராவின் உச்சியை தொடுவது போல் அங்கே நின்று போஸ் கொடுப்பவரின் கையை தூக்கிக் கொண்டு நிற்பதும் அதனைப் படம் எடுப்பவரோ தரையில் உட்கார்ந்தும் உருண்டும் புரண்டும் ஃபோட்டோ  எடுப்பதை காணாமல் வந்ததில்லை.

கடந்த ஆண்டு வேலையாக (பணி நிமித்தம்) மும்பை சென்றபோது கேட்வே ஆஃப் இந்திய சென்று வந்தேன் அங்கே ஒருவர் கையை தூக்கிக் கொண்டு ஓபராய் ஹோட்டலின் உச்சியை தொடுவது போல்  போஸ் கொடுக்க அதை அங்கு இருந்த ஃபோட்டோ கிராபர் ஃபோட்டோ எடுத்ததை பார்த்ததும் நம்மூர் மல்லிபட்டினம் மனோரா மலரும் நினைவுகள் நினைவுக்கு வந்தது. பலரையும் படம் எடுக்கும் இந்த புகைப் படக்காரரை அதாங்க ஃபோட்டோ கிராபரை நான் ஒரு கிளிக் கிளிக்கு கொண்டு வந்தேன்.

புகைப்படம் எடுப்பதும் அதனை ரசனைக் கண் கொண்டு ரசிப்பதும் அவரவர் விருப்பம் அதிலும், சில புகைப் படங்கள் திகைக்க வைக்கும் அழகையும், ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஊட்டும். இன்னும் சிலவகையோ எப்படியெல்லாம் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று படம் பிடித்து காட்டிவிடும். ஆளுக்கு ஒரு டிஜிட்டல், அல்லது மொபைல் ஃபோன் கிளிக் அங்கே அவரவருக்கு தகுந்த (ரசனைக்கேற்ற) விளக்கமும் விமர்சனமும் பதிக்கப்படுவதை நினைத்து எப்படியெல்லாம் எடுக்க கூடாது என்ற பாடமும் நமக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இப்போ ஏனுங்க அதுக்கு இப்படியொரு பீடிகையுடன் ஒரு சிறு கட்டுரை அதுக்கு ஒரு ஃபோட்டோ என்று கோபப்படமா ஒரு விஷயத்தை கவனிங்க தமிழனாக இருந்தாலும் கன்னடனாக இருந்தாலும் மலையாளியாக இருந்தாலும் பம்பாய் காரனாக இருந்தாலும் நாம எல்லாம் இந்தியன் நம்மிடமோ பல வேற்றுமை இருந்தாலும் ஒரு சில விசயங்களில் ஒற்றுமை இருப்பதைத்தான் அந்தப் படம் (!!!) நமக்கு காட்டுகின்றது.

முக்கிய குறிப்பு : தேசிய நீரோட்டத்தில் இணைந்து விடும் ஐடியாவெல்லாம் இல்லை, ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால் எல்லோரும் தேசம், என் தேசம், என்று சொல்லிகிட்டு இருக்காங்க... நாமளும் ஊரைத் தாண்டி இந்தியாவையும் நேசிப்போம்னும் எப்போதான் எழுதுறதாம் !


Sஹமீது

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

(ஜமாஅத்) கூட்டுத் தொழுகையின்  சிறப்பு

''கூட்டுத் தொழுகை என்பது, தனித்துத் தொழுவதைவிட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1064)

''ஒருவர், மற்றவருடன் கூட்டாகத் தொழுவது, தன் வீட்டில், தன் கடையில் தனித்துத் தொழுவதை விட 25 மடங்கு கூடுதல் நன்மையாகும். ஒருவர் அழகிய முறையில் உளுச்செய்து, பின்பு தொழுகைக்காகவே தவிர வேறு எதற்குமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி உயர்த்தப்படாமல் இருப்பதில்லை. அவர் தொழுது விட்டதும் தான் தொழுத இடத்தில், தன் உளூ முறியாமல் அவர் அமர்ந்திருந்தால், வானவர்கள் அவருக்காக,  ''இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக!'' என்று கூறி பிரார்த்திருப்பார்கள். அவர் (மறு) தொழுகையை எதிர்பார்த்திருக்கும் வரை இது நீடிக்கும் என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1065)

''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு குருடர் வந்தார், ''இறைத்தூதர் அவர்களே!  பள்ளிவாசலுக்கு என்னை அழைத்து வருபவர் எவருமில்லை'' என்று கூறிய அவர், தன் வீட்டிலேயே தொழுது கொள்ள தனக்கு சலுகை அளிக்கும்படி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். உடனே அவருக்கு சலுகை அளித்தார்கள். அவர் திரும்பியபோது அவரை அழைத்த நபி(ஸல்) அவர்கள், ''தொழுகைக்காக பாங்கு சப்தத்தைக் கேட்கிறீரா?'' என்று கேட்டார்கள். ''ஆம்'' என்றார். ''அப்படியானால் (பள்ளிக்கு வருவது மூலம்) பதில் கூறுவீராக'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1066)

''என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, விறகு கொண்டு வர நான் கட்டளையிட்டுவிட்டு, பின்பு தொழுவதற்காக பாங்கு கூற கட்டளையிட்டு, அதன்பின் ஒருவரை மக்களுக்கு  இமாமத் செய்யச் சொல்லிவிட்டு (தொழுகைக்கு வராத) ஆண்களிடம் நான் சென்று அவர்களை அவர்களின் வீட்டோடு எரித்து விட விரும்புகிறேன்'' என்று நபி(ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1068)

''நாளை (மறுமையில்) அல்லாஹ்வை முஸ்லிமாக ஒருவன் சந்திக்க விரும்பினால் பாங்கு கூறி அழைக்கப்பட்டதும், ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணட்டும். நிச்சயமாக அல்லாஹ், உங்களின் நபிக்கு நேரான வழி முறைகளை கடமையாக்கி உள்ளான். நிச்சயமாக இவைகளும் நேரான வழிமுறைகளில் உள்ளவைகளே. தொழுகைக்கு வரப் பிந்தியவர் தன் வீட்டில் தொழுதவர் போல், உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுதால், உங்கள் நபியின் வழிமுறையை விட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் வழி தவறியவராவீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நயவஞ்சகத்தனம் தெளிவாக அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர  வேறு எவரும் தொழுகைக்கு வராமல் இருந்ததில்லை. (எங்கள் காலத்தில்) இரண்டு மனிதர்களின் தோள்களுக்கிடையே தொங்கியவராக கொண்டு வரப்பட்டு முதல் வரிசையில் நிறுத்தப்படுவார் (என்ற நிலை இருந்ததது). (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1069)

''ஒரு கிராமத்தில், காட்டில் மூன்று (முஸ்லிம்) நபர்கள் இருந்து, அவர்களிடையே தொழுகை பேணப்படவில்லையானால், அவர்களை ஷைத்தான் சூழ்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. எனவே, ஜமாஅத்தை பேணிக் கொள்ளுங்கள். ஏனெனில் பிரிந்து நிற்கும் ஆட்டைத்தான் ஓநாய் சாப்பிடும் என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1070)

''ஜமாஅத்துடன் இஷாவை ஒருவர் தொழுதால், பாதி இரவு வரை அவர் வணங்கியவர் போலாவார். ஜமாஅத்துடன் சுப்ஹைத் தொழுதால் அவர் இரவு முழுதும் வணங்கியவர் போலாவார்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)
     
''ஜமாஅத்தில் இஷாத் தொழுகைக்காக ஒருவர் கலந்து கொண்டால், அவருக்கு பாதி இரவு வரை வணங்கிய நன்மை கிடைக்கும். ஜமாஅத்தில் இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளைத் தொழுதால், அவருக்கு இரவு முழுதும் நின்று தொழுத நன்மை கிடைக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)

''இஷா மற்றும் சுப்ஹுத் தொழுகையின் மாண்பை மக்கள் அறிந்து கொண்டால், அவர்கள் தவழ்ந்தேனும் அந்த இரண்டு தொழுகைக்கும் வருவார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1072)

''நய வஞ்சகர்களுக்கு சுப்ஹு, இஷாத் தொழுகைகளை விட கடுமையானதாக வேறு எதுவும் இல்லை. அவ்விரண்டிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தேனும் (சுப்ஹு, இஷா) அவ்விரண்டுக்கும் வருவார்கள்''என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1073)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன்: 87:1)

அவனே படைத்தான் ஒழுங்குற அமைத்தான். (அல்குர்ஆன்: 87:2)

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன்: 87:3)

அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான். (அல்குர்ஆன்: 87:4)

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான். (அல்குர்ஆன்: 87:5)

(முஹம்மதே) உமக்கு  ஓதிக் காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். (அல்குர்ஆன்: 87:6)

அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான். (அல்குர்ஆன்: 87:7)

(முஹம்மதே) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம். (அல்குர்ஆன்: 87:8)

அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக! (அல்குர்ஆன்: 87:9)

(இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான். (அல்குர்ஆன்: 87:10)

துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான். (அல்குர்ஆன்: 87:11)

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். (அல்குர்ஆன்: 87:12)

பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். (அல்குர்ஆன்: 87:13)

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அல்குர்ஆன்: 87:14)

தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான். (அல்குர்ஆன்: 87:15)

ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். (அல்குர்ஆன்: 87:16)

மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். (அல்குர்ஆன்: 87:17)

இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. (அல்குர்ஆன்: 87:18,19)

(அல்குர்ஆன்: 87:1-19 அல்அஃலா- மிக உயர்ந்தவன்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? (அல்குர்ஆன்: 107:1)

அவனே அனாதையை விரட்டுகிறான். (அல்குர்ஆன்: 107:2)

ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. (அல்குர்ஆன்: 107:3)

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். (அல்குர்ஆன்: 107:4,5)

அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். (அல்குர்ஆன்: 107:6)

அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (அல்குர்ஆன்: 107:7) (அல்குர்ஆன்: 107:1-7 அல் மாவூன்- அற்பப் பொருள்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

படித்த, பார்த்த, கேட்ட, நினைத்த'வைகள்' - ஒன்று ! 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 19, 2016 | , , , , ,


தொடர்ந்து ஒரு கறியுடன் சோறு ஆக்கித் தந்து போரடிப்பதால் பல வகை கறிகளைப்போட்டு ஒரு தாலிச்சா வைத்துத்தரலாம் என்று இந்த பதிவு. தாலிச்சா என்ற பெயர் எப்படி வந்ததாம் தெரியுமா? தால் (DHALL)  என்றால் பருப்பு. “அச்சா” என்றால் சிறப்பு. பருப்பை சிறப்புடன் சமைப்பதுதான் தால்+அச்சா(உருது) தாலிச்சா.  (இது நான் கேட்டது).

கை கழுவி வாருங்கள் விருந்துக்குப் (விஷயத்துக்கு) போகலாம்.

வாழ்க்கையையும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களையும் ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பிட்டால் எப்படி அந்த பழத்தின் சுளைகளைச் சுவைத்துவிட்டு சக்கைகளையும், நெட்டிகளையும் தூரகளைந்து விடுகிறோமோ அதேபோல் வாழ்வில் கெட்டவைகளை ஒதுக்கிவிட்டு நல்லவைகளை மட்டும் நினைத்து ஏற்று நடந்தால்தான் வாழ்வு இனிக்கும். அதேபோல் நாம் சந்திக்கும் நண்பர்கள் ஆனாலும், குடும்ப உறுப்பினர்கள் ஆனாலும் அவர்களின் குணம் நாடி, குற்றம் நாடி அவற்றுள் குணமுள்ளவர்களை ஏற்று குற்றமுள்ளவர்களைத் தள்ளிவிட்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். 

சகோதரர்கள் இருவர் இருந்தார்கள். அதில் ஒருவன் மொடாக்குடியன். உதவாக்கரை. தனது வாழ்வில் அவன் எந்தக்காரியத்தையும் உருப்படியாக செய்ததில்லை. ஆனால் இன்னொரு சகோதரனோ ஒரு பெரிய படிப்பாளியாகவும், வெற்றியாளனாகவும் விளங்கினான். பெரிய பதவியில் அமர்ந்திருந்தான். 

ஒரே பெற்றோருக்கு –ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இந்த இருவரிடமும் காணப்பட்ட வித்தியாசங்கள் ஊராருக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது ஒருவர் இதை அந்த சகோதரர்களிடம் தனித்தனியே கேட்டார். குடிகாரன் சொன்னான். "என் வாழ்க்கை இப்படி கெட்டுப்போனதற்கு என தந்தைதான் காரணம். அவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பார். ஒரு வேலையும் செய்யமாட்டார் அவருக்குப் பிறந்த நான் மட்டும் எப்படி இருப்பேன். அவரைப் பார்த்தே அப்படி வாழ பழகிக்கொண்டேன்” என்று சொன்னான். 

அடுத்தவனைக் கேட்டபோது அவனும் தனது வெற்றிக்கு தனது தந்தையே காரணம் என்று சொன்னான். “என தந்தை மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்தார். அவரைப்பார்த்து அவர் மாதிரி வாழக்கூடாது என்று நான் கவனமாக வளர்ந்தேன் சின்ன வயதிலேயே அப்படி முடிவு செய்ததால் இப்படி வெற்றியாளனாக என்னால் வர முடிந்தது. அவரது தவறுகளில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னை உயர்த்தி இருக்கிறது” என்று சொன்னான்.  

வாழ்க்கை தரும் பாடங்களில் இருந்து நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  

நம் கண் முன்னே காணும் சிலருடைய வாழ்க்கை சம்பவங்கள் நமக்கு படிப்பினைகளையும் அனுபவத்தையும் தருகின்றன. அடுத்தவர்கள் எடுத்துவைக்கும் அடிகளைப்பார்த்து நல்லவற்றை பின்பற்றவேண்டும் . 

சிலர் தாம் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்வார்கள். அந்த தவறுக்கு கற்பனை காரணங்களைச் சாதகமாகக் காட்டுவார்கள். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் . ஆளுக்கு ஆள் பார்க்கும் பார்வை மாறுபடும் . காகிதத்தைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை எழுத தோன்றுகிறது. கழுதைக்கோ சாப்பிடத்தோன்றுகிறது. 

ஒரு பணக்காரத்தந்தை இருந்தார். தனது மகனுக்கு ஏழ்மையை புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக தனது மகனின் வயதை ஒத்த ஒரு ஏழைச்சிறுவனை ஒரு குப்பத்திலிருந்து கூட்டிவந்தார். மகனோடு பழகவிட்டு அந்த குப்பத்தின் வாழ்க்கையை மகனிடம் பேசச்சொன்னார். ஒரு நாள் இருந்துவிட்டு குப்பத்து சிறுவன் போய்விட்டான். பணக்காரத்தந்தையின் மகன் பெற்றவரிடம் வந்தான்,

“என்னப்பா எல்லாம் தெரிந்து கொண்டாயா?” என்று தந்தை கேட்டார். 

மகன் சொன்னான், “அப்பா அவனை ஏழை என்றீர்கள். நாம்தான் ஏழையாக இருக்கிறோம். நம் வீட்டில் ஒரு நாய்தான் இருக்கிறது அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் பத்து பதினைந்து நாய்கள் ஓடி வருமாம். நாம் இந்த அறையில் படுக்கிறோம். அவர்கள் படுக்கும் இடம் வெட்டவெளியாம்: வானம் ரோடு எல்லாம் பார்த்துக்கொண்டே படுத்து தூங்குவார்களாம்: நம்வீட்டில் டியூப் லைட்டும் டேபிள லைட்டும்தான் இருக்கின்றன. அவர்களுக்கு நிலவு, நட்சத்திரம் எல்லாம் வெளிச்சம் தருமாம். நாம் ஏசி போட்டால்தான் தூங்க முடியும் அவர்களுக்கு காற்று கடலில் இருந்து வருமாம்.  நம்மைவிட அவர்கள் நல்ல வசதியாக வாழ்கிறார்களே! “ என்றான் பையன். தந்தை பதில் பேசவில்லை.

இப்படி பார்வைகளும்,  உணர்ந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்  வித்தியாசப்படுகின்றன. ஒரே காலகட்டத்தில் அரசியல் செய்யும் ஒரு தலைவர் ஒருவருடைய பார்வையில்  தானைத்தலைவராகவும் அதே தலைவர் அடுத்தவருக்கு கொள்ளைக்கூட்டத்தின் தலைவராகவும் தென்படுகிறார். ஆனாலும் இரண்டுக்கும் மத்தியில் உண்மை என்ற ஒன்று இருக்கவே செய்கிறது . அதை உணர்ந்து அறிந்து கொள்வதே வெற்றிக்கு அடிகோலும். ஆராயாமல், சிந்திக்காமல் பொத்தாம்பொதுவிலும், சாய்ந்தால் சாயுற பக்கம் சாய்வதாக இருந்தாலும் அது வெற்றிக்கு வழியை திறந்து விடாது.  

ஒரு பட்டப்பகலில் ஒரு மரத்தடியில் ஒருவன் படுத்து நன்றாக தூங்கி கொண்டு இருந்தான். அந்த வழியாகப் போன ஒரு விவசாயி பாவம் வேலை அதிகம் போலிருக்கிறது- அதனால் தூங்குகிறான் என்று நினைத்தான். அடுத்து ஒரு குடிகாரன் அதைப்பார்த்துவிட்டு பாவம் நன்றாக குடித்திருப்பான் போலிருக்கிறது மயங்கி தூங்குகிறான் என்று நினைத்தான். அதன்பின் ஒரு திருடன் அதைப்பார்த்துவிட்டு இரவு முழுதும் கண்விழித்து திருடப்போய் இருப்பான் போலிருக்கிறது அதுதான் தூங்குகிறான் என்று எண்ணினான். ஒரு சாமியார் அதைப்பார்த்துவிட்டு சரிதான் வாழ்க்கையை வெறுத்து வந்துவிட்டான் போல இருக்கிறது – அதனால் நிம்மதியாக தூங்குகிறான் என்று எண்ணினார். இப்படி நாம் யாராக இருக்கிறோமோ அப்படியே மற்றவர்களையும் நினைக்கs சொல்லும் மனது. உண்மையை அறிந்து கொள்ள முயலும் மனப்பக்குவம் வளரவேண்டும். பார்த்த உடனே ஆராயாமல் ஒரு முடிவுக்கு வருவது பரவலான மனப்பான்மையாக இருக்கிறது. 

ஆனால் எதையுமே பாசிடிவ் அப்ரோச் என்கிற உடன்பாடு கொள்கையில் பார்த்தால் பாதி  வெற்றிபெற்றுவிட்டதாக அர்த்தம்.   பாசிடிவ் அப்ரோச் என்பது முதலில் நம் மனதை நாம் பெறப்போகும் வெற்றிக்கு  தயாராக்கி வைப்பதும் அந்த வெற்றியை நோக்கி நமது ஓட்டத்தை துவக்குவதும் ஆகும். நமக்குள் தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு குழப்பச்சோறு ஆக்கிக்கொண்டிருந்தால் ஒரு முடிவும் எடுக்க முடியாது.

"எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்-" 

என்றார் கவிஞர் அதிரை அப்துல் கலாம்.  

எல்லாவற்றையுமே எதிர்மறையாக சிந்திப்பது பலருக்கு கூடப்பிறந்த இயல்பு. பேருந்து நிற்கும் இடத்தில் காத்து இருக்கும்போது ஐந்து நிமிடம் பேருந்து வர தாமதமாகிவிட்டால் கூட வீணாப்போன மனதில் அந்த பஸ் ஏதும் மரத்தில் மோதிவிட்டதோ என்று எதிரான சிந்தனை வரும். நம்பிக்கை என்பது வாழ்வின் அடிப்படை. அதனால்தான் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஈமான் முதல் கடமையாக இருக்கிறது. நாம் எவ்வளவுதான் நம்பிக்கையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி சிலர் வருவார்கள். நம்முடைய முயற்சிகளையும், நம்பிக்கைகளையும் எதிர்மறை கருத்துக்கூறி தகர்ப்பதற்கேன்றே சிலர் வருவார்கள். 

“என்னப்பா சவூதி போறியாமே அந்த வெயில் ஒத்துக்குமா?” என்றும் , “லண்டன் போறியாமே அந்த குளிர் ஒத்துக்குமா?” என்றும், 

"மகளுக்கு இன்னார் வீட்டில் பேசி நிச்சயம் செய்துவிட்டாயாமே பையனைப்பற்றி விசாரிச்சியா அமெரிக்காவிலிருந்து வந்தவன் என்று சொல்றாங்களே!” 

“இந்த இடத்திலா மனைக்கட்டு வாங்கினே அங்கு பேய் நடமாடுதாமே!” “அவனுக்கா கடன் கொடுத்தே வந்தமாதிரிதான்!” 

“இந்த பைக் ஏன் வாங்குனே உழைக்காதே!” 

“இவரை வச்சா வீடு கட்டுறே உருப்பட்டாப்போலத்தான்.!” 

இப்படி நம்மை நோக்கி எதிர்மறை எண்ண அம்புகளை விடுவோர் அதிகம் பேர் சுருட்டு குடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருககிறார்கள். அவ்வப்போது வந்து அவர்களின் பிரடியையும் முழங்கையையும் சொரிவார்கள். நம்மிடம் ஒரு சமூசா வங்கி தின்பதற்காக நம்மை சாக்கடையில் தள்ளும் யோசனைகளைக் கூறி நம்மை குழப்பி விடுவார்கள். 

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்குத் தயாராகின, அவை மலையேற ஆரம்பிக்கும்போது பார்வையாளராக இருந்த ஒருவர் “இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடுக்கி விழுந்தால் அவ்வளவுதான்” என்று கூறினார். 

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்திவிட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் ” மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப்போகின்றன “என்றார், உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கி விட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர்“உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது”என்று கேட்டார்.

அதற்கு அந்தத்தவளை கூறிய பதில் ” எனக்கு காது கேட்காது“ என்பதாகும்.

முயற்சிகளை முறியடித்துப்போடும் ஆலோசனைகளை கேட்பதைவிட கேளாமை நல்லது. சில இடங்களில் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாய் இருந்தும் ஊமையாய் இருப்பது கூட நல்லதுதான். மூளை சலவை செய்யும் தன்னலம் மிக்கவர்கள் - நமது எண்ணங்களின் இடுப்பை ஒடித்துப்போடுபவர்கள்- வளரும் பயிர்களை முளையிலேய கிள்ளிவிடுபவர்கள் – நிறைய இருககிறார்கள். 

ஆடு கழுதையான கதை அறிந்த நமக்கு இதுபற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை. 

பலூன்காரரிடம் ஒரு சிறுமி வந்தாள்.

‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள்.

‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’

‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.

சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

‘‘ஏம்மா கேக்குற?’’

‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?’’

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.

‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா.உள்ள இருக்கிற காற்றுத்தான். .

என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தால், யார் வேண்டுமானாலும் உயரப்பறக்கலாம் ’’ என்றார். 

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. நமது உள்ளத்தின் – அறிவின்- சட்டியில் உள்ளதுதான் நமது அன்றாட வாழ்வின் அகப்பையில் வரும். நமது எண்ணமே வாழ்வு. நமது நினைப்புத்தான் நமக்கு பிழைப்பை கொடுக்கிறது அல்லது கெடுக்கிறது. ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன கலக்கம்? கண்களில் ஏன் இந்த மயக்கம்?   மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு நல்ல  குறிக்கோள் – அதை நிறைவேற்ற ஒரு திட்டம்- அதற்கான உழைப்பு, முயற்சி இவைகள் இருந்தால் வெற்றி நமதே! இன்ஷாஅல்லாஹ். 

இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு