நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேசியத் தினம் 45 26

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், நவம்பர் 30, 2016 | , , , , , , ,


ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!

இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்

இந்த ஒற்றுமை
நாற்பத்திஐந்து ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்

தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்

ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!

அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது

உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது

வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!

அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!

சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு

இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு

எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு

ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்

வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது

படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது

இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்

நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்

நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை1

....ஈஷி பிலாதி... எமராத்தி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

பயணம் ஒன்று... பாதைகள் வேறு! - [ஏன் இஸ்லாம் ?] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், நவம்பர் 28, 2016 | , , ,

பயணம் ஒன்று... பாதைகள் வேறு!
(ஏன் இஸ்லாம்?)

வா சகோதரி
வந்திங்கு அமர்
வாழ்வியல் தத்துவத்தின்
வாஸ்தவம் உணர்!

படைப்பினங்களுடன் இணங்கு
படைத்தைவனை மட்டும் வணங்கு
மனிதன் படைத்ததை
மக்கள் வணங்குவது
பகுத்தறிவுக்குப்
பங்கமல்லவா?

படைக்க ஒரு கடவுள்
பரிபாளிக்க ஒன்றெனும்
நூரிறைக் குழப்பம் உகந்ததா
ஓரிறைக் கொள்கை உயர்ந்ததா?

உலகைப் படைத்தவனே
உன்னையும் என்னையும் படைத்தான்
விண்ணையும் மண்ணையும் படைத்தான்

வணக்கத்துக் குரியவன் ஓருவன்
வழிகாட்டத் தந்தது குர்ஆன்
உறுதியாய் வாழ்ந்து காட்டிடவே
இறுதியாய் வந்தவர் இறைத்தூதர்!

தோளோடு தோள்சேர்ந்துத் தொழுவதே
திருத்தூதர் காட்டிய வழிபாடு
எளியவன் வலியவன் பாராத
ஏற்றமிகு சமன்பாடு இறைஇல்லம்!

ருசித்துப் பழகிய நாவும்
பசித்து நிறைகின்ற வயிறும்
கசிகின்ற மணத்தோடு இரைஇருக்க
புசிக்காமல் துதிப்பர் இறையை

பொறுமை புகட்டும் நோன்பைப்
பிடிப்பதும்
பொருளைப் புரிந்து திருமறை
படிப்பதும்
நல்லறம் கொன்டு ஷைத்தானை
அடிப்பதும்
நன்னீர் ஓடும் நதிகளைக்கொண்ட
சொர்கத்திலோரிடம்
பிடிக்கும்!

ஏழைக்குக் கொடுக்காமல் செல்வம்
பேழைக்குள் பதுக்கினால் பாவம்
கணக்கிட்டுக் கொடுக்காமல் போனால்
கைக்கெட்டும் தூரம்தான் நரகம்.

ஆரோக்கிய உடலும் அமைந்து
பார்மெச்சும் செல்வம் இருந்தால்
மரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்
பயணம் மேட்கொள்தல் கடமை.

எத்தனை வழியுண்டு ஈடேற
எதனால் ஏற்கனும் இஸ்லாம்?

இஸ்லாத்தில்தான்...
பாதை பண்பட்டிருப்பதால்
பயணம் இலகுவாகும்!
பெண்கள்...
போகப்பொருளாக வல்ல
பொக்கிஷமாகப்
பாதுகாக்கப்படுவர்!

புர்கா என்றொரு திரை எதற்கு?

தெருச்சரக்கா பெண்மை
திறந்து கிடக்க?
தீயவர் கண்கள்
தீண்டிக் கெடுக்க?
நட்சத்திர அந்தஸ்தல்லவா
நங்கையர்க்கு தீனில்?!
புஷ்பமல்லவா
பொத்திவைத்துப் பாதுகாக்க?!
தீபமல்லவா
கடுங் காற்றினின்றும்
காத்துக்கொள்ள?!

பெண்கள் பணிக்குச் செல்ல தடையா?

தடையில்லைப் பெண்ணே...
உடைதனைப் பேணி
அன்னிய ஆடவரிடமிருந்து
விலகி உழைத்தல்
நடைமுறைச் சாத்தியமெனில்!

அங்கங்கள் மறைத்தல்
அடிமைப் படுத்துவதா?
பெண்மையெனும் தன்மையே
பெண்ணுக்குச் சிறப்பென்ற
சீர்திருத்தம் செப்பினால்
பெண்ணுரிமைப் பறிப்பதாய்
பிதற்றுதல் நேர்மையா?!

ஒருவனுக்கு ஒருத்திதானே சரி?

பலதார மணம்
கடமையல்ல பெண்டிரே,
சின்னவீடு வப்பாட்டி
கள்ளத்தொடர்பு கண்றாவி...
தவிர்க்கமுடியாவிடில்
மறுபடி நீயும்
மணந்துகொள் என்பது
நேர்வழியல்லவா?

மனைவியர் மட்டுமல்ல,
மதிகெட்டு மாந்தரிடம்
மயங்கிச் சிக்குவரும் பெண்டிரே!
மறுமணம் அவளுக்கு
கவுரவம் அல்லவா?!

ஒற்றை நோக்கு
இஸ்லாத்தில் இல்லை
அத்தனை கோணங்களுக்கும்
மொத்தத் தீர்வே இஸ்லாம்!

பாதை மாறினால்
பயணம் முடிந்தாலும்
எட்டவியலாது இலக்கை!

கலிமாச் சொல்
கண்ணியம் கொள்
காட்டிய பாதை செல்
காலத்தை வெல்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062 8

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 25, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

லுஹாத் தொழுகையின் சிறப்பு

''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுமாறும், தூங்கும் முன் வித்ருத் தொழுமாறும் என்னிடம் என் நேசர் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1139)

''ஒருவர் தன் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் காலையிலேயே தர்மம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தஸ்பீஹும் ''சுப்ஹானல்லாஹ்வும்'', தர்மம் ஆகும். ஒவ்வொரு ''அல்ஹம்துலில்லாஹ்''வும் தர்மமாகும். ஒவ்வொரு ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' கூறுவதும் தர்மமாகும். ஒவ்வொரு ''அல்லாஹு அக்பரும்' தர்மமாகும். நல்லதை ஏவுவது தர்மமாகும். கெட்டதை தடுப்பதும் தர்மமாகும். இவை அனைத்துக்கும் பகரமாக லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது போதுமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1140)

''நபி(ஸல்) அவர்கள், லுஹா நேரத்தில் நான்கு ரக்அத் தொழுவார்கள். அல்லாஹ் நாடிய அளவுக்கு (சில நேரம்) அதிகமாக்கிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1141)

சூரியன் உதயமாகி உயர்வதில் இருந்து உச்சியிலிருந்த சாயும்வரை 'லுஹா' தொழுகை தொழுவது கூடும்.

''சிலர் லுஹாத் தொழுகையை தொழக் கண்டேன். ''இந்த நேரம் அல்லாத நேரத்தில் லுஹாத் தொழுவது மிகச் சிறந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்வது நல்லது. ஏன், எனில் நபி(ஸல்) அவர்கள், ''இறைவனிடம் மீளும் மக்கள் (லுஹாவை) தொழுவது, ஒட்டகக் குட்டிகள் சூடு பொறுக்காமல் கரிந்து விடும் (பகல்) நேரம் ஆகும்'' என்று கூறினார்கள் என நான் அவர்களிடம் கூறினேன். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)

பள்ளிவாசலுக்குரிய காணிக்கைத் தொழுகை தொழுதிட ஆர்வமூட்டுதல்!மேலும் பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இரண்டு ரக்அத் தொழும் முன் உட்காருவது கூடாது. அந்த இரண்டு ரக்அத், பள்ளிவாசல் காணிக்கை தொழுகையாகவோ, அல்லது பர்லான தொழுகையாகவோ, அல்லது வழமையான சுன்னத், மற்றும் நபிலான தொழுகையாகவோ இருந்தாலும் சரியே!

''ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், இரண்டு ரக்அத் தொழும்வரை உட்கார வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கதாதா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1144)

''பள்ளியில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களிடம் வந்தேன். ''இரண்டு ரக்அத் தொழுவீராக!'' என்று அப்போது நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1145)

உளு செய்தபின் இரண்டு ரக்அத் (தொழுவது) விரும்பத்தக்கது

''பிலாலே! இஸ்லாத்தில் நீர் செய்கின்ற சிறந்த செயல் பற்றி என்னிடம் கூறுவீராக ஏன் எனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பு உம் செருப்பு சப்தத்தைக் கேட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிலாலிடம் கூறினார்கள். ''இரவிலோ, பகலிலோ எப்போது உளு செய்தாலும் அந்த உளுவுக்குப் பின் இரு ரக்அத் நபில் தொழாமல் நான் இருந்ததில்லை.  இதைவிட வேறு சிறந்த செயல் செய்ததில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)   அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1146)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன்: 86:1)

தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? (அல்குர்ஆன்: 86:2)

அது ஒளி வீசும் நட்சத்திரம். (அல்குர்ஆன்: 86:3)

ஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன்: 86:4)

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குர்ஆன்: 86:5)

குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். (அல்குர்ஆன்: 86:6)

அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன்: 86:7)

இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன்: 86:8)

அந்நாளில்  இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
(அல்குர்ஆன்: 86:9)

அவனுக்கு எந்த வலிமையும் எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 86:10)

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன்: 86:11)

பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன்: 86:12)

இது தெளிவான கூற்றாகும். (அல்குர்ஆன்: 86:13)

இது கேலிக்குரியதல்ல. (அல்குர்ஆன்: 86:14)

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். (அல்குர்ஆன்: 86:15)

நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன்: 86:16)

எனவே(என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக! (அல்குர்ஆன்: 86:17)

(அல்குர்ஆன்: 86: 1 -17 அத்தாரிக் - விடிவெள்ளி)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
 இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 061 3

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 18, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அஸரின் சுன்னத்

''அஸருக்கு முன் நான்கு ரக்அத் தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1120)

''நபி(ஸல்) அவர்கள் அஸருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுவார்கள்.(அறிவிப்பவர்: அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1121)

மஃஹ்ரிபுக்கு முன் - பின் சுன்னத்

''மஃஹரிபுக்கு முன் (சுன்னத்) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறிவிட்டு ''விரும்பியவருக்கு (அனுமதி)'' என்று கூறினார்கள்(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முஃஹப்பல் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1122)

ஜும்ஆவின் சுன்னத்

''உங்களில் ஒருவர் ஜும்ஆவை தொழுதுவிட்டால், அதன்பின் நான்கு ரக்அத்தை தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1126)

வீட்டில் நபில் தொழுகைகளை தொழுவது

''மனிதர்களே! உங்கள் வீடுகளில் தொழுங்கள். நிச்சயமாக தொழுகையில் மிகச் சிறந்தது, ஒருவர் கடமையான தொழுகையைத் தவிர, தன் வீட்டில் தொழும் தொழுகைதான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள்  (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1128)

''வீடுகளிலும் உங்கள் தொழுகைகளை வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை கப்ருகளாக (மண்ணறைகளாக) ஆக்கிவிடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1129)

''ஒருவர் தொழுகையைத் தன் பள்ளிவாசலில் நிறைவேற்றி விட்டால், தொழுகையின் ஒரு பகுதியை தன் வீட்டிலும் தொழுது கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ், அவரின் வீட்டில் அவரது தொழுகையின் காரணமாக நல்லதை ஏற்படுத்துகிறான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1130)

வித்ருத் தொழுகை

''வித்ருத் தொழுகை, கடமையான தொழுகை போல் கட்டாயமானதல்ல! எனினும் நபி(ஸல்) அவர்கள் அதை முறையாக்கினார்கள். மேலும் ''நிச்சயமாக அல்லாஹ் ஒருவன். அவன் ஒற்றைப்படையை (வித்ரை) விரும்புவான். எனவே குர்ஆனைப் பெற்றவர்களே! நீங்கள் வித்ருத் தொழுங்கள்'' என்று  கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1132)

''ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுவார்கள். (சில சமயம்) இரவின் ஆரம்பித்திலும், நடு இரவிலும், இரவின் இறுதியிலும் தொழுவார்கள். அவர்களின் வித்ருத் தொழுகை ஸஹர் நேரத்தில் முடியும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1133)

''உங்கள் இரவுத் தொழுகையில் இறுதியாக வித்ரை ஏற்படுத்துங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1134)

''நீங்கள் சுப்ஹுநேரம் வரும் முன் வித்ருத் தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)

''இரவின் கடைசியில் எழாமல் இருப்பதை ஒருவர் பயந்தால், அவர் இரவின் ஆரம்பத்திலேயே வித்ருத் தொழட்டும். இரவின் இறுதியில் எழுந்திடுவதை ஆசைப்பட்டவர் இரவின் இறுதியில்  வித்ருத் தொழட்டும். இரவின் இறுதியில் தொழுவது, (மலக்குகளால்) சாட்சி கூறப்படத்தக்கதாகும். மேலும் அதுவே மிகச் சிறந்தது   என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1138)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன்:96:1)

அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். (அல்குர்ஆன்:96:2)

ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். (அல்குர்ஆன்:96:3)

அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்(அல்குர்ஆன்:96:4)

அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான் (அல்குர்ஆன்:96:5)

அவ்வாறில்லை! தன்னைத் தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன்:96:6,7)

உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு. (அல்குர்ஆன்:96:8)

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன்:96:9,10)

அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? (அல்குர்ஆன்:96:11,12,13)

அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? (அல்குர்ஆன்:96:14)

அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். (அல்குர்ஆன்:96:15)

அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. (அல்குர்ஆன்:96:16)

அவன் தனது சபையோரை அழைக்கட்டும். (அல்குர்ஆன்:96:17)

நாம் நரகின் காவலர்களை அழைப்போம். (அல்குர்ஆன்:96:18)

எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக! (அல்குர்ஆன்:96:19)
(அல்குர்ஆன் : 96:1-19 அல் அலக்-கருவுற்ற சினைமுட்டை)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . 

காலத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன்: 103:1)

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 103:2)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர. (அல்குர்ஆன்:103:3 அல் அஸ்ர் காலம்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள்''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

கற்கை நன்றே! - National Education Day 11-November... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 11, 2016 | , , , , ,

கைநாட்டுக் காலங்கள்
கடந்து போகட்டும் - குறுகிக்
கைகட்டும் கோலங்கள்
கலைந்து போகட்டும்

கண்கட்டும் வித்தைகளைக்
களைந் தெடுக்கவே - கல்வி
கலைகற்று உலகில்
கிளர்ந்து எழட்டும்

கல்லாதோர் கூடி
கைப்பற்றிய நாட்டில் - நன்கு
கற்றுத் தேர்ந்தோர்
கைகள் உயரட்டும்

அளவுகள் விளங்காத
அறியாமை யாலேயே - காணி
களவுகள் போனது
கவனத்தில் இருக்கட்டும்

சட்டதிட்டம் எதிலும்
பட்டம் பெறாததால்- இன்று
கிட்டத்தட்ட சமூகம்
கெட்டதுவும் போதும்

பாமர சனமென
பாராமுகம் காட்டும் - நம்
பாராளு மன்றத்தினருக்குப்
பயந்ததுவும் போதும்

அறிவினில் சிறக்கவும்
அறிவியல் விளங்கவும் - நாம்
கல்வியின் மூலம்தான்
களம் காண வேண்டும்

வாசிக்கக் கற்பதுவே
வசிப்பதின் அர்த்தம் - இதை
வசியச் செய்வினைபோல்
வாழ்வினில் காண்போம்

கொடுக்கக் கொடுக்க
குறையாச் செல்வம் - கல்வி
எடுக்க எடுக்க
என்றும் நிலைக்கும்

பிச்சை எடுத்தேனும்
பயிலச் சொல்வர் - மூச்சை
விட்டுக் கொடுத்தேனும்
கற்கை நன்றே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

அம்மாவைப் பிடித்த பேய் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், நவம்பர் 10, 2016 | , ,

அப்படி
அடிக்கடி ஆட்டிவைத்தது
அம்மாவைப் பிடித்திருந்த
பேய்

அதிவேகமாகத்
தலையைச் சுழற்றி
பிரிந்துகிடக்கும் நீள்கேசத்தை
சாட்டையென
இடமும் வலமுமாய்ச்
சொடுக்கும்

அத்தனைக் கொடூரமான
அலறல்களும்
ஆக்ரோஷமானக் கூச்சலும்
அம்மாவின் குரலாய்
இருந்ததில்லை

நான்கு ஆட்கள்
பிடித் தழுத்தியும்
முண்டியடிக்கும்
அம்மாவிடம்
அப்படியொரு சக்தியை
கண்டதில்லை நான்

'மொத்தி மீன் மண்டை'யும்
'காளிமார்க் கல'ரும்
கொடுத்தாலோ
வாங்கித்தருவதாய் வாக்களித்தாலோ
மலையேறிப் போகும்
அம்மாவைப் பிடித்திருந்த
முச்சந்தி வீட்டு
'மோமுதாமா' பாட்டி

ஆத்திரத்தில்
'கல'ருக்குப் பதிலாக
'படிக்கன் தண்ணி'யைக்
குடிக்கத் தந்த
தாய்மான் சொன்னது
'குடித்தது அம்மா அல்ல' என்று

என்
அக்காளையும் தம்பியையும்
குழந்தைகளாகவே கொன்றது
அம்மாவின் பேய்தான்
என்ற மிரட்சி
என்னை அண்டவிடாமலேயே
வைத்திருந்தது

அதன் பிறகு
கிழிந்த நாராய்
பாயில் கிடக்கும்
அம்மா
என்னை
அருகில் அழைத்து
மெல்ல அனைத்துக் கொள்ளும்
தலையணையைக்
கண்ணீர் நனைத்துச் செல்லும்

பிற்காலத்தில்...

பிழைப்பு வேண்டி
பல வருடங்கள் முன்பு
பரதேசம் பயணப்பட்ட
அப்பாவை
அழைத்து வந்து
கடவு அட்டையக் கைப்பற்றி
காடு கழனி கவனிக்கச் சொல்லி
வீட்டோடு வைத்த பிறகு...

அப்பாவின் மீதான
கோபதாபங்களின்போது
ஓர்
அதட்டலான
முறைப்புக்காக மட்டுமே
அம்மா
பேயைப் பயன்படுத்திக் கொண்டது !

சபீர் அஹ்மது அபுஷாரூக்

தீரன் திப்பு ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், நவம்பர் 07, 2016 | , , , , ,

வீரத்தின் உதிப்பு
விடுதலையின் மறுபதிப்பு
மாவீரன் திப்பு..

உன் பேரிலான
விழாவுக்கா
தடை விதிப்பு ?

வரலாற்றை திரிப்போரின்
வழக்கமான கொதிப்பு...
நீதியின் நெஞ்சத்தில்
நரிகளின் மிதிப்பு..

இவர்கள் கைபட்டா
குறையும் உன்
இசைமிகு மதிப்பு ??

இனி எல்லோர் கையிலும்
தவழும்
உன் வரலாற்றைப் பகரும்
புத்தகப் பதிப்பு..

வஞ்சகக் கூட்டத்தின்
நெஞ்சகமே அடையும் பாதிப்பு..  நீ...
அஞ்சுதல் என்னும்
அடையாளமறியா மா-திப்பு !!

அதிரை என். ஷஃபாத்

பகையன்று நகை! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, நவம்பர் 06, 2016 | , , ,பகையன்று நகை!

வாழ்க்கை  என்பது  வாய்கெடச்  சிரிப்பதும்,
சீழ்க்கை  யடித்துச்  சிரிப்பை  மூட்டலும்,
சிறப்பாம்  வாழ்வைச்  சிரிப்பாய்  ஆக்கிப்
பொறுப்பாய்  வாழாப்  பொய்மை  மக்களின்
கானல்  வாழ்வைக்  கடைப்பிடித்  தொழுகல்
ஈனம்  அன்றோ!  இதுதான்  வாழ்வா?

மாறாய் –

உளத்திலும்  சொல்லிலும்  உண்மையைத்  தேக்கி,
அளப்பரும்  அருளால்  ஆண்டவன்  தந்த
நல்ல  வாய்ப்பாம்  நகைச்சுவை  தன்னை
மெல்ல  எடுத்து  மிகையிலா  விதத்தில்
சொல்லிடா  திருப்பதும்،  சோகம்  ததும்ப
மல்லிட்  டிருப்பதும்  வாழ்க்கையா?  சொல்வீர்?

உண்மையில் –

நகைச்சுவை  யென்று  நமக்கெலா  முண்டு!
பகைச்சுவை  யன்றது;  பண்பு  நபியார்
பயனுறு  வாழ்வில்  பளிச்சிடச்  செய்த
நயனுடை  நாயன்  நல்கிய  வரமது!
மிகைப்படப்  பேசி  மெய்மறக்  காமல்
நகைச்சுவை  நுகர்வோம்!  நாயனைப்  புகழ்வோம்!

அதிரை அஹ்மத்

சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2 23

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, நவம்பர் 05, 2016 | , ,

தொடர் 17.

திப்பு சுல்தானின் தீரமும் வீரமும் தியாகமும் ஓரிரு அத்தியாயங்களில் அடங்கிவிடாது. ஆகவே இன்னும் தொடர்ந்து பார்க்கலாம். 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷார் சிலருக்கு அடையாள பட்டபெயர்களை வழங்கினார்கள். “அரை நிர்வாண பக்கிரி” என்பது தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு வழங்கப் பட்ட பெயர். அந்தப் பெயர் மகாத்மா காந்தியின் தன்னலமற்ற - எளிமையான இயல்பைத்தான் உலகுக்குப் பறை சாற்றியது. 

அதே போல் ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ என்பது திப்பு சுல்தானுக்கு பிரிட்டிஷ் பத்திரிகைகள் வழங்கிய பெயராகும். இந்தப் பெயர் திப்புவின் வீரத்தையும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அவர் எவ்வளவு பெரிய சவாலாக இருந்தார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களின் இதயங்களில் அவ்வப்போது அச்சத்தை விதைத்த வீரராகவே தீரர் திப்பு திகழ்ந்தார். அன்றைய ஆங்கிலேயர்களுக்கு திப்புவின் பெயர் ஒரு மாக்காண்டி, சாக்கு மஸ்தான் போல பயமுறுத்தலுக்காகக் காட்டப்பட்டது; கருதப்பட்டது. அதனால்தான் திப்பு சுல்தான் வீரமரணம் அடைந்த செய்தியை அறிந்து மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் என்பவன் உடனே உதிர்த்த வார்த்தைகள் ‘அப்பாடா! இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்பதாகும். 

“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என்று தனது யங் இந்தியா பத்திரிகையில்காந்தியடிகள் புகழ்ந்து எழுதினார். 

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார். (‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

திப்பு, 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார். 

கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்கள் அனைத்திலும் திப்புவே வெற்றி பெற்றார்.

கி.பி. 1776ஆம் ஆண்டு மராட்டியர்களுக்குச் சொந்தமான காதி கோட்டையைத் திப்புசுல்தான் கைப்பற்றினார்.

திப்பு தன்னகத்தே விடுதலை தாகம் மிக்க மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். அவரது வீரர்கள் வெறுமனே கூலிக்கு மாரடிப்பவர்கள் அல்ல. இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். பிரிட்டிஷாரின் அத்துமீறல்களை அடக்குவதற்கு வாளும் வேலும் மட்டும் பயன்படாது என்று உணர்ந்து, முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டுமென்று மூளையில் பதித்துக் கொண்டவர் திப்பு. அதனால் , தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதைத் திப்பு சுல்தான் புரிந்துகொண்டார். ஆதலால் கடற்பயிற்சி பள்ளிகளை உருவாக்கி, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் பிரிட்டிஷாருக்கு நிகராக நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தானே.

திப்பு சுல்தானிடம் மொத்தம் 3.20 லட்சம் வீரர்கள் இருந்தனர். மூன்று லட்சம் துப்பாக்கிகளும் 929 பீரங்கிகளும் 2.24 லட்சம் வாள்களும் இருந்தன. தன் தந்தை பயன்படுத்திய ஏவுகணைகளைத் திப்புசுல்தான் பிரெஞ்சு படைவீரர்களின் துணையுடன் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதுவகையில் பயன்படுத்தினார்.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் , கோலாரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருந்த பாடி என்கிற இடத்தில் போர்க்களத்தில் வைத்து ஒரு சிறு கூடாரத்தில் மவுலவிகள் மற்றும் இந்துப் பண்டிதர்கள் முன்னிலையில், மைசூரின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார் . 

இன்றைய அரசியலில், முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்த உடன் போடும் முதல் கையெழுத்து என்று எப்படி ஒரு பழக்கம் ஆரம்பித்து இருக்கிறதோ அப்படி மன்னராக முடி சூட்டிக் கொண்ட உடனே தனது மந்திரியிடம் திப்பு கேட்ட முதல் கேள்வி “ எங்கே அந்த துரோகிகளின் பட்டியல்?” துரோகிகளின் அழித்தொழிப்பு ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அந்தப் பட்டியல் திப்புவின் கைககளில் தரப்பட்டது. உடனே அந்தப் பட்டியல் சுக்கு நூறாக திப்புவால் கிழிக்கப் பட்டது. எனக்கு துரோகிகள் ஆனாலும் இவர்கள் என்னையும் என் மண்ணையும் சேர்ந்தவர்கள் இவர்களை அழிக்கும் பணியில் இனி நான் இறங்க மாட்டேன். நம் அனைவரின் பொது எதிரி ஆங்கிலேயன் தான் என்ற முழக்கத்துடன் அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் கிழிபட்டு காற்றில் பறந்ததன. வன்மமும் பகை உணர்வும் திப்புவின் நெஞ்சிலிருந்து நீக்கப்பட்டன . ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு ‘ திப்புவிடமிருந்து வெளிப்பட்டது. 

மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. ஆனால் வெள்ளைத்தோல் வெள்ளைத்தோலுக்கு விட்டுக் கொடுத்தது. பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி, பிரிட்டனுடன் ஒரே கோப்பையில் ஒயின் அருந்தி சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் அநியாயமாக எதிர்பாராமல் இணைந்துக் கொண்டனர். ஆனாலும் இதனால் சற்றும் பின்வாங்கிவிடாத திப்பு, எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் அடக்கி வாசித்து ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக ரூபாய் 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது.( சில நூல்களில் வராகன் என்று எழுதுகிறார்கள்) இழப்பீடு தொகையை செலுத்துவரை பிரிட்டிஷார் அடமானமாகக் கேட்டது என்ன தெரியுமா? 

திப்புவின் இருமகன்கள் எட்டுவயது நிரம்பிய அப்துல் காலிக் ஐந்து வயது நிரம்பிய முய்சுதீன் ஆகிய இரண்டு வீரத்திருமகனின் இன்னுயிர்ப் புதல்வர்களே ஆங்கிலேயர்கள் கேட்ட அடமானப் பொருள்கள். அதன்படி அடமானமாக வைக்கப் பட்டனர். இது எவ்வளவு பெரிய சோதனை என்பதை என்னும் போது கலங்காத - கண்ணீர் வடிக்காத நெஞ்சமே இருக்க இயலாது. ஒப்பந்தப் படி முழுத்தொகையும் கொடுத்த பின்னரும் காரன் வாலிஸ் பிளாக் மயில் செய்து வளம் மிக்க கூர்க் போன்ற பகுதிகளை அபகரித்தான். அத்துடன் அடமானத் தொகையை செலுத்தி இரண்டு வருடத்துக்குப் பிறகே தன்னுடைய மகன்கள் ஆங்கிலேயரால் திப்புவிடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டனர். தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.

1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் துருக்கியின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இப்படி திப்புவின் துரோகம் செய்யும் அமைச்சர்களோடு தொகுதி உடன்பாட்டை முடித்த வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிட்டான். “இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்” .

ஆங்கிலேயருக்கு பயந்து அனைவரும் கைவிட்ட நிலையில், இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான். 

இப்படி இத்தனை நாள் முற்றுகையிட்டும் ஆங்கிலப் படை திப்புவின் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையை நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும். அந்தக் கோட்டையைச் சுற்றி காவிரி நதி ஓடிக்கொண்டு இருக்கும். கோட்டையின் உள்ளே இருந்து காவிரி நதிக்கு செல்லும் வகையில் ஒரு படித்துறை உண்டு. அந்தப் படித்துறை கோட்டை வாசல் போல பாதுகாப்பு மிக்கது. அங்கு பலத்த காவல் இருக்கும். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையை சுற்றிலும் காவி ஆற்றிலும் ஆங்கிலப் படைகள் சுற்றி வளைத்து இருந்தன. உள்ளே வரும் ஒரே வழியான ஆற்றுப் படித்துறை கோட்டை வாசலை ஒரு துரோகி ஆங்கிலேயப் படைகளுக்குத் திறந்துவிட்டான். திட்டமிட்டபடி அந்த வழியே ஆங்கிலப் படை உள்ளே நுழைந்தது. களத்தில் தனது வீரர்களுடன் தன்னந்தனியே திப்பு. 

போர்க்களத்தில் ஒப்பாரி ஏது? தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை. குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்! வாயை மூடு! ” என்று உறுமுகிறார் திப்பு. இந்த சந்தர்ப்பத்தில்தான் கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று திப்பு செய்த வீரப்பிரகடனம் வெளிப்பட்டது. அந்தப் பிரகடனத்துடனே இவ்வுலகில் தீரமிக்க - ஒரு மானமுள்ள மன்னனை மரணம் தழுவிக் கொண்டது. 

தன் வீரர்களின் உடல்களின் குவியல்களுக்கு மத்தியில் 1799, மே 4 அன்று ஷஹீதான திப்புவின் உடல் கிடந்தது. இந்திய மண்ணின் விடுதலைக்கு இப்படி ஒரு உரமானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக் குர்ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன. திப்புவின் உடல் கிடந்தது கண்டெடுக்கப் பட்ட இடத்தில் இன்றும் ஒரு கல் நடப்பட்டு இருக்கிறது. அதைப் பார்ப்பவர்கள் கண் கலங்காமல் இருக்க முடியாது.

இந்த நிகழ்ச்சியைப் படிக்கும்போது எனக்கு கீழ்க்கண்ட நாலடியார் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?

என்பதே அப்பாடல்.

வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 04.05.1799ஆம் நாள் திப்புசுல்தானை வீழ்த்திய பிரிட்டிஷார் அவரது அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த 9,700-க்கும் மேற்பட்ட நவீன ராக்கெட்டுகளை கைப்பற்றினர்.

திப்பு சுல்தான் தன் அரண்மனையில் அமைத்திருந்த ஓரியண்டல் லைப்ரரி என்ற பெயருடைய நூலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ராக்கெட் தயாரிப்பு சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு திட்டக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டனர்.

இங்கிலாந்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புசுல்தானின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான். திப்புசுல்தானின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய பிரிட்டிஷ் அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர் மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் என்பவரை அணுகியது.

சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ், திப்புசுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளைத் திருத்தி, திப்புசுல்தானின் ராக்கெட்டை மேம்படுத்தி 1804 ஆம் ஆண்டு “காங்கிரிவ்“ என்ற ராக்கெட்டை வடிவமைத்தார். 16அடிகள் நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட “காங்கிரிவ் ராக்கெட்டுகள்“ ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கி.பி. 1800களில் நடந்த பல யுத்தங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

திப்புவின் மரணத்துக்குப் பின் கி.பி. 1799ஆம் ஆண்டில் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து புலம் பெயர்ந்து வேலூரைச் சுற்றி முகாமிட்டனர். இன்று வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, மேல் விசாரம் , வழுத்தூர் ஆகிய ஊர்களில் உள்ளோர் இப்படிப் புலம் பெயர்ந்தவர்களின் வம்சாவழிகளே.

சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, ஆலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீர்ப் புரட்சி செய்ய என்று முடிவு செய்தனர். ஆனால், அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து ஆங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலூர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. 

இதனை அறியாத திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 10.07.1806ஆம் நாள் அதிகாலை 2.00மணியளவில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினர். 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கொன்றனர். கோட்டையின் மேல் திப்புசுல்தானின் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர். திப்புவைப் போன்ற ஒரு வீரன் புதைக்கப்படவில்லை விதைக்கப் பட்டான் என்பதற்கு இதுவே உதாரணம். 

இரண்டு நாட்களில் ஆற்காட்டிலிருந்து பிரிட்டிஷாரின் 19 லைட் ட்ரகூன்ஸ் என்ற 19ஆவது குதிரைப் படை ஆயுதங்களுடன் வந்து அப்புரட்சியை முற்றிலும் முறியடித்தனர். 3000த்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைப் பீரங்கி வாய்களில் கட்டி, பீரங்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.

அந்தப் புரட்சிக்குப் பின் திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் சில அண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. ஆனால் வழங்கவில்லை. பிரிட்டிஷாரைப் போலவே அதன்பின் வந்த இந்திய அரசும் அவர்களைக் கைவிட்டு கை கழுவி விட்டது. இன்று திப்புவின் வாரிசுகள் கல்கத்தாவில் ரிக்ஷா இழுப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. 

திப்புவைப் பற்றி பல வல்லுனர்கள் வழங்கிய புகழ் மொழிகள் சிலவற்றை இங்கு பட்டியலிடுவதில் பெருமை கொள்கிறேன். 
  • Major Base, “He was a God fearing man in the real sense of the world. He never formulated dual policies and avoided lies and hypocrisy”.
  • Lord Carnwallis (British Governor General in India) “Were Tipu happened to be let go scot-free, we would have bid farewell in India”.
  • Lord Wellesely (British Governor General during the Fourth Battle). “After Tipu’s death no ruler has enough guts to challenge us in future.”
  • Dr. John R. Anderson, “Never again would India witness a man of the likes of Tipu.”
  • Sir Thomas Menzo in his autobiography, “Everybody in the Sultanate Khudadad’ was treated with justice, without any bias and partiality because of which his state had become extremely strong in the country and still remains unparalleled till now.”

விடுதலைப் போரின் முன்னோடியாகவும் ஆங்கிலேயனின் குலை நடுக்கமாகவும் வாழ்ந்து காட்டிய மாவீரன் திப்புவின் வாழ்வேன் வீர வரலாற்றை சஞ்சய் கான் என்கிற பாலிவுட் நடிகர் , தொலைக் காட்சியில் தொடராக தயாரிக்க முற்பட்டபோது இந்தியாவின் நாசகார சக்திகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சமல்ல. 

சஞ்சய்கான் ’SWORD OF TIPPU SULTHAN‘ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்குத் தீ வைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்த காயங்களுடன் பல மாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர்தப்பினார்.

இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனை னைக்கொண்ட மல்கானி என்பவர் ஆவார். கரசேவைக்கு கல் அனுப்பிய கட்சியினரிடமிருந்து கஞ்சி வாங்கிக் குடிக்கும் கயமைத்தனம் கொண்ட அவரோ தீரன் திப்புவின் தியாக வரலாற்றை ‘கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கண்மூடித்தனமாகக் கூறினார். முஸ்லிம்களின் வரலாற்றை மறைப்பதற்கு கூச்சம் இல்லாத கூமுட்டைகளும் அவ்வாறே செய்து ஒளிபரப்பின. நடக்காத இராமாயணமும் மகாபாரதமும் வரலாறு என்று ஒளிபரப்பாகின்றன. ஆனால் நடந்த வரலாறு கற்பனைக் கதை என்கிற முத்திரையிடப்பட்ட நிகழ்வையும் சுதந்திர இந்தியா பார்த்துவிட்டு அதன் பொக்கை வாய்பொத்தித்தான் இருந்தது நண்பர்களே! 

தீரன் திப்புவின் புகழ், இப்படி ஆயிரம் கைகளால் மறைக்கப் பட்டாலும் ஆதவன் மறைவதில்லை என்றே இந்திய வரலாற்றில் நின்று நிலவும். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.
=================================================== 
எழுத உதவியவை : 
Nadvi, M. Ilays, Tipu Sultan (A Life History) translated by M. Saghir Hussain, N. Delhi 2004, p.83.
Irfan Habib, Resistance and Modernisation under Haider Ali and Tipu Sultan, 1st ed., N. Delhi, p. Xxiii.
I.H. Qureshi: “The Purpose of Tipu Sultan’s Embassy to Constantinople”, Journal of Indian History, Vol.24 (1945), pp. 77-84.
B. Shaik Ali, Tipu Sultan, New Delhi, 1971, p.57.
Jawaharlal Nehru, The Discovery of India, 6th ed., Delhi, edn., Delhi, 1956,pp. 272-73.
Tarachand, History of Freedom Movement of India, revised edn., Delhi, 1965, 
தமிழ் e பேப்பர்.
=================================================== 
இபுராஹீம் அன்சாரி

சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 2

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், நவம்பர் 03, 2016 |

தொடர் 16.

எதிரிகளுடன்  போரிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சரணடைந்தால் உயிர்  தப்பிக்கலாம் என்கிற நிலை வரும் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பதே மனித இயல்பு . ஆனால் வீரர்களுக்கென்று ஒரு நியதி இருக்கிறது. மரணமே வரினும் மாற்றானிடம் மண்டி இடுவதைவிட மரணத்தை ஏற்றுக் கொள்வதே ஒரு உலகம் போற்றும் மாவீரனின் உண்மை சரித்திரமாக இருக்க முடியும் . அப்படி ஒரு சரித்திரம்தான் தீரன் திப்பு சுல்தானின் சரித்திரம். எந்த நேரமும் மரணம் தன்னை தழுவக் கூடுமென்ற நிலையில் எதிர்களால் தாக்கப் பட்டு சரிந்து கொண்டிருந்த திப்புவிடம் , அந்த மாவீரனின் உடனிருந்த பணியாள்  ஓடிவந்து, “அரசே! நாம் சரணடைந்து,  சமாதானமாகப் போனால் நமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்”  என்று தயங்கித் தயங்கி எடுத்துரைத்த போது, உயிருக்குப் போராடும் நிலையிலும் அந்த வீரன் உதிர்த்த வரிகள் வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியவை. “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று அந்த சிங்கம் சிலிர்த்தெழுந்து இவ்வார்த்தைகளை மரணப் படுக்கையில் உதிர்த்த தென்றால் அரண்மனையில் – அரியணையில் – அதிகாரத்துடன் ஆட்சி செய்த காலங்களில் இந்த சிங்கம் எப்படியெல்லாம் கர்ஜித்து இருக்கும்? வாருங்கள் நண்பர்களே! தீரமிக்க திப்புவின் தியாக மிக்க வரலாற்றின் அன்பும் அரவணைப்பும் ஆளும் தன்மைகளும் நீதியும் நியாயமும் எழுச்சியும் நிறைந்த காட்சிகளைக் காணலாம். 

தியாகம் நிறைந்த திப்புவின் வாழ்வைப் படிக்கும்போது தோள்கள் தினவெடுக்கும். முதலில் அவரது வாழ்வு மற்றும் ஆட்சிமுறையின் சிறப்பம்சங்களை அறியத் தருகிறேன். பின்னர் போகலாம் போர்க்களத்துக்கு. 

பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில் நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான்.

திப்பு சுல்தான் பதவிக்கு வந்தது முதல் இறக்கும் வரை அவரின் முகத்துக்கு முன்னால் சில எதிரிகளும் முதுகுக்குப் பின்னால் பல துரோகிகளும் அவரைத் தாக்கத் தயார்நிலையில் காத்திருந்தனர்.  திப்பு சுல்தான் தன் மன, உடல், அறிவு வலிமையாலும் இறைவனின் ஆசியாலும்  அவர்களைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கியபடியே இருந்தார். உலகில் எந்தப் பேரரசருக்கும் இல்லாத நெருக்கடிகள் திப்புசுல்தானுக்கு இருந்தன. அவற்றைத் தகர்த்தபடியே அவர் தன்னை மைசூரில் நிலைப்படுத்திக் கொண்டார்.

திப்பு சுல்தானின் தந்தையான மைசூரின் மன்னர் ஹைதர் அலியின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். அவருக்கும் ஹைதர்  அலிக்கும் பெண்குழந்தைகளே பிறந்தன. ஆண் வாரிசு இல்லை. ஆதலால் ஷாபாஸ் பேகமின் வற்புறுத்தலின்பேரில் ஹைதர் அலிக்கு ஃபக்ர் உன்னிஸாவைத் திருமணம் செய்துவைத்தனர்.  ஃபக்ர் உன்னிஸா தனக்குப் பிறக்கும் முதல்குழந்தையை அல்லாஹ்வின் திருப்பணிக்கு அர்ப்பணிக்கக்கவும்  அடுத்த குழந்தையை அரசாலும்  வாரிசாக ஏற்றுக்கொள்ளவும் ஹைதர் அலியிடம் அனுமதிபெற்றுக்கொண்டார்.  அத்தம்பதியருக்கு ஐந்தாண்டுகள் குழந்தைப்பேறு இல்லை.

முதல் குழந்தையாகத் திப்பு சுல்தான் 20.11.1750ஆம் நாள் பிறந்தார். ஹைதர் அலி தன் இரண்டாம் மனைவி ஃபக்ர் உன்னிஸாவின் விருப்பப்படி திப்பு சுல்தானை இறைப்பணிக்கு ஒப்படைத்தார். ஹைதர் அலியின் முன்னோர்களின் சூஃபி மரபு இனி திப்பு சுல்தானால் தொடரும் என்று நம்பினார். திப்புசுல்தானுக்கு இஸ்லாமிய மார்க்கக் கல்வியும்  பிற இந்திய மதங்களும் கற்பிக்கப்பட்டன. அமைதி என்பது ஒரு மந்திரமாகவே திப்பு சுல்தானுக்குக் கற்பிக்கப்பட்டது.

ஹைதர்  அலி – ஃபக்ர் உன்னிஸா தம்பதியருக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. கரீம் என்று பெயரிட்டனர். அவனையே தன் அடுத்த ஆட்சி வாரிசாக ஹைதர் அலி நினைத்தார். ஆனால், அல்லாஹ்வின் கணக்குவேறு விதமாக இருந்தது.

கரீம் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையானான். ஹைதர் அலி கலங்கினார். அவர் திப்பு சுல்தானைப் பார்க்கச் சென்றார். அப்போது திப்பு சுல்தான் ஒரு பண்டிதரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே ஹைதர் அலி தன் முதல் மகன் திப்பு சுல்தானின் மொத்த ஆன்மீகப் படிப்பையும் நிறுத்தினார். திப்பு சுல்தானின் கைகளில் தன் வாளை ஒப்படைத்தார். இனி திப்பு சுல்தான் ஆன்மிகப் பாதையில் பயணிக்க முடியாது. ஆட்சிகட்டிலும் அரியாசனமும்தான் அல்லாஹ் அவருக்கு விதித்த வழி என்பது அன்று முடிவானது. 

திப்பு சுல்தானுக்குப் போர்க் கலைகள் கற்பிக்கப்பட்டன. ஒரு தகுதிவாய்ந்த இளவரசராகத் திப்பு சுல்தான் உருவானார். அப்போது திப்பு சுல்தானுக்கு வயது 15.பெத்தனூர் அரசர் ஹைதர் அலியிடம் வாலாட்டினார். இதனால் வாளாட்டவேண்டிய நிலை ஏற்பட்டது.  பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலியின் படைகள் பெத்தனூரை நோக்கி முன்னேறின. இந்தப் போரைக் காண்பதற்காக 15 வயதுடைய  திப்பு சுல்தானும் போர்க்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். போர்க்களம் அவருக்கு ஒரு  பூங்காவாகவே தெரிந்தது. இப்படித்தான் திப்பு வீரப் பால் ஊட்டப்பட்டு , போராடி வளர்ந்தார். தந்தையும், மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர்.

ஹைதர் அலியும் அவரது படைகளும் பெத்தனூர் அரசனைப் பந்தாடின. திப்புசுல்தான் போர்க்களத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்தார். தன் தந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று கருதிய திப்பு சுல்தான் மாற்று வழியில் ஹைதர் அலி போரிடும் பகுதிக்குச் சென்றார். அவ்வாறு போகும் வழியில் பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைச் சந்தித்தார். போரினால் பாதிக்கப் பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்த அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவந்தார். அந்தக் குடும்பத்தின் நிலை போர்த் தர்மத்தின்படி பிணைக் கைதிகளின் நிலையானது. இச்செய்தி பெத்தனூர் அரசருக்குத் தெரிந்ததும், மேற்கொண்டு சண்டையிட மனம் இன்றி பெத்தனூர் அரசர்   ஹைதர் அலியிடம் சரணடைந்தார்.

திப்பு சுல்தான்,  பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைப் பிணைக் கைதியாகப் பிடித்துள்ளார் என்பதனை அறிந்த ஹைதர் அலி மகிழ்ச்சியுடன் திப்பு சுல்தானைப் பார்க்க வந்தார். அதற்குள் ஹைதர் அலியின் தளபதி மக்பூல்கான் திப்பு சுல்தானிடம் வந்து, பிணைக் கைதிகளைப் பார்வையிட்டார். திப்பு சுல்தானின் நேரத்துக்குத் தகுந்த  வீரத்தைப் புகழ்ந்தார். பின் வழக்கம்போலப் பிணைக் கைதிகளிடம்,  வென்றவர்கள் நடத்தும் அத்துமீறல்களைச் செய்யத் துணிந்தார் . அச்செயல்கள்  மனிதாபிமானம் மிக்க, திப்புசுல்தானுக்குப் பிடிக்கவில்லை. தளபதியை எச்சரித்தார். திமிர் கொண்ட  அவன் சிறுவர் திப்புவின் பேச்சைக் கேட்கவில்லை. திப்புசுல்தான் தன் கைத்துப்பாக்கியால் கொடுமை செய்யத் துணிந்த மக்பூல்கானை   நோக்கி சுட்டார். திப்புசுல்தானின் அரசியல் கொலைகளின் எண்ணிக்கை மக்பூல்கானின்  கொலையிலிருந்து தொடங்கியது. அந்தக் கொலை மனிதாபிமான அடிப்படையிலானது. ஒரு அடைக்கலம் தேடிய அரச குடும்பத்தைக் காப்பாற்ற தனது தளபதி என்றும் பாராமல் சுட்டுத் தூக்கி வீசினார் திப்பு. 

திப்புசுல்தான் பெத்தனூர் அரச குடும்பத்தாரைப் பாதுகாத்ததும் மக்பூல்கானைக் கொன்றதும் ஹைதர் அலிக்குச் சரியாகவே பட்டது. திப்புசுல்தானின் விருப்பப்படி ஹைதர்அலி பெத்தனூர் அரசரையும் அவரது குடும்பத்தாரையும் விடுவித்தார். அந்த இளவயதில் திப்பு சுல்தான் எடுத்துவைத்த முதல் அடி அவரது எதிர்கால இரக்கமிக்க நீதி நிறைந்த ஆனால் உறுதியான உள்ளத்தை உலகோருக்கு எடுத்துக் காட்டியது. 

“எங்கெல்லாம் பிரிட்டிஷார் அத்து மீறி ஆக்கிரமிப்பு நடத்துகிறார்களோ அங்கெல்லாம் விரைந்து செல்லவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, நம் எதிரியாகவே இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்து நிற்கவேண்டும்.” இதுதான் திப்புசுல்தானுக்கு அவரின் தந்தை ஹைதர்அலி சொல்லிச் சொல்லி வளர்த்த அரசியல் அரிச்சுவடி.  இதனையே திப்புசுல்தான் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அதனால்தான் அவர் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார்.

இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒரு விடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது. சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு அதுவும் ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவித்  தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன்.

திப்புவின் இயந்திரப் புலி சுவாரசியமானது. ஒரு புலி ஒரு பிரிட்டிஷ் வீரரைக் கடித்துக் குதறுவது போன்று ஓர் இசை இயந்திரத்தை  பிரெஞ்சுக் கலைஞர் ஒருவரைக் கொண்டு திப்பு வடிவமைத்திருந்தார். ஒரு விசையை இயக்கியவுடன் அந்தப் புலி,  கர்ஜனையுடன் அந்த பிரிட்டிஷ் வீரனைக் கடித்துக் குதறும். வீரன் அலறுவான். புலியின் கர்ஜனையும் வீரனின் மரண ஓலமும் கூடிய இந்த இயந்திரப்புலி திப்புவுக்கு பிரிட்டிஷாரைப் பழிதீர்க்கும் எண்ணத்தை அவ்வப்போது நினைவூட்டிவந்தது. இந்த இயந்திரப் புலி ஒரு குறியீடு. அது திப்புவின் ஆழ்மனது. அது திப்புவைத் திப்புவுக்கு நினைவூட்டியபடியே இருந்தது. திப்புவின் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை வளர்த்துவந்தது. திப்புவின் இறப்பிற்குப் பின்னர் அது பிரிட்டிஷாரால் திருடப்பட்டு, இலண்டனுக்குக் கடத்தப்பட்டது. இப்போதும் அந்த இயந்திரப் புலி இலண்டனிலுள்ள  அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

திப்பு ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர், தொழுகையாளர். தனது அரசை இறைவழியில் செயல்படும் அரசு என்றார். தனது வீரர்களை முஜாஹிதீன்கள் என்றார்.

ஆங்கிலேயருக்கு எதிரான தனது விடுதலைப்போரை ‘ஜிஹாத்’ என வர்ணித்தார், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றார். தவறு செய்த முஸ்லிம்கள் மீது ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கினார். மற்றவர்களுக்கு பொதுச் சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கினார்.

தனது அதிகாரிகளுக்கு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடும் போது நபி(ஸல்) அவர்கள் எமது தலைவர் என குறிப்பிடுவார்.ஆடம்பரங்களை எதிர்த்த திப்பு,  ஒருதனி நபர  தனது மொத்த வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே திருமணத்திற்காக  செலவு செய்ய வேண்டும் என அறிவித்த சீர்திருத்தவாதி.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை அமல்படுத்திய திப்பு, காமராஜருக்கு முன்னோடி எனலாம். அவரது ஆட்சியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் மதரஸா கல்வி கூடுதலாகப் போதிக்கப்பட்டது.

இஸ்லாம் மனித குலத்துக்கான அருட்கொடை என்பதை ஆழமாக நம்பிய திப்பு, ஹதீஸ்களை ஆழ்ந்து படித்தார். குர்ஆனை தானும் படித்து, தனது ஆட்சியில் வாழும் முஸ்லிம்களையும் படிக்குமாறு வலியுறுத்தினார்.தன் பிள்ளையை படிக்கவைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான் என்பது அவரது கூற்று.

இந்தியாவிலேயே நூலகங்களை தனது அரண்மனையில் ஏற்படுத்திய முதல் மன்னன் திப்புசுல்தான். அவரது நூலகத்திற்கு ஓரியண்டன் எனப் பெயரிட்டார். அந்த காலத்திலேயே 2000-க்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது. திப்பு ஒரு பன்மொழிப் புலவர். உருது, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் அவரது நாவில் சுரக்கும்.

திப்பு பல பரிமாணங்களைக் கொண்டவர். மிகச்சிறந்த அரசியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் வெளியுறவுத் துறையின் கொள்கை வகுப்பாளர் எனலாம். ஆங்கிலேய ஆட்சியை இந்த மண்ணில் வேரூன்ற விடமாட்டேன் என முழங்கியதோடு நில்லாமல், அதற்கான மாற்று செயல் திட்டங்களையும் வகுத்தார்.

தமது மக்களின் சமுதாய,பொருளாதார ஆன்மீக நன்மைக்காக மதுவை காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும் என திப்பு (வருவாய்துறை சட்டம் 1787) அறிவித்து அதை அமல்படுத்தினார்.

திப்பு சுல்தான் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு பிரிட்டிஷார் நடத்திய போர்களுக்குப் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள் பொருளுதவிச் செய்து வந்தனர்.    ( இன்றும் இவர்கள்தான் குஜராத்தில் இஸ்லாமிய விரோத சக்திகளுக்குத் துணை போகின்றனர்) ஆனால், வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றியவர் திப்புசுல்தான்.

அரசுக்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தன் அமைச்சரைக் கண்டித்த திப்புசுல்தான், “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். இந்தக்கேள்வியை நாம் இப்போது நம் அரசிடமும் கேட்கவேண்டும்.

பிரிட்டிஷார் விவசாயிகளைக் கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் திப்புசுல்தான் தடை செய்தார். பிரிட்டிஷார் பாலியல் தொழிலில் பணம் சம்பாதித்தபோது திப்புசுல்தான் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் பாலியல் தொழிலைத்தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளைக் கோயிலுக்குத் தேவதாசியாகத் தானமளிப்பதையும் தடை செய்தார்.

அடிமை விற்பனையைத் தடை செய்வதற்காகத் திப்புசுல்தான் ‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என்று ஆணை பிறப்பித்தார். வரதட்சணைக் கொடுமையும் சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளையும் திப்புசுல்தான் நீக்கினார்.

கேரளத்தில் நம்பூதிரிகள் கொண்டிருந்த ஆச்சாரப் பழக்கவழக்கத்தில் உள்ள தீய முறையை நீக்கவேண்டியும் தன் மக்கள் தூயவாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கிலும்,  “உங்களுக்கு மத்தியில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்” என்றார்.

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தார் திப்புசுல்தான். இதை நான் எழுதிய மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறேன். ( பக்கம் 31 ).

மதச்சார்பின்றி அனைத்து மதத்தினருக்கும் அரசுப் பணத்தில் கொடைகள் வழங்கினார். இந்துக் கோயில்களுக்கும் அறநிலையங்களுக்கும் பிராமண மடங்களுக்கும் முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கும் திப்புசுல்தான் ஆண்டுதோறும் 2.34 லட்சம் வராகன்கள் செலவிட்டார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்திருக்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் மூன்று லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

விவசாயம்தான் ஒரு நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்த திப்பு ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார்.

1790ல் காவிரியின் நடுவே அணைகட்ட அடிக்கல் நாட்டினார் திப்பு. . 1792ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப்பின் திப்புசுல்தானிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து பிரிட்டிஷாரின் வரிக் கொடுமை தாளாமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தானின் ஆட்சிப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்ததை,  1796ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் மன்றோ தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

“விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றினார்.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்குத் திப்புசுல்தான் எழுத்துப் பூர்வமாக ஆணையிட்டார்.

பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய திப்புசுல்தான், “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்று ஆணையிட்டார்.

இத்தனை நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஆட்சிபுரிந்த திப்புசுல்தானின் மீது வரலாற்றாசிரியர்கள் மதவாத, இனவாதக் கருத்துக்களைத் தூவி அவரின் புகழுக்குக் களங்கம் விளைவித்தனர். சங்கும் சுட்டாலும் வெண்மைதரும் என்ற விதிக்கு ஏற்ப திப்புசுல்தானின் புகழ் இம்மி அளவும்  குறையவில்லை.

இஸ்லாத்தை எல்லா நிலைகளிலும் போற்றிய திப்பு, ஒரு தொழுகையாளி மட்டுமல்ல. அழைப்புப் பணியிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். நெப்போலியனுக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி விளக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார். தனது தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அரண்மனை அருகே பள்ளிவாசலை கட்டினார். அவர் கொல்லப்பட்ட பிறகு, எரிக்கப்பட்ட அவரது அரண்மனை நூலகத்தில் 44 குர்ஆன் பிரதிகளும், குர்ஆன் தப்ஸீர் நூல்களும், 41 ஹதீஸ் நூல்களும், 56 இஸ்லாமிய அறிவியல், வரலாறு, வானியல், சட்ட நூல்களும் கண்டெடுக்கப்பட்டன.

திப்பு தன் நாணயங்களுக்கு அரபி, பார்ஸி பெயர்களை சூட்டினார். அதில் கலீஃபாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகியோரின் பெயர்களைச் சூட்டினார். தங்கம், வெள்ளி நாணயங்களிலும் கலீஃபாக்களின் பெயர்களை பொறித்தார். ஆனால் எதிலும் தனது பெயரை அவர் பொறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தானே. அவர்தான் குறுந்தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரித்து பயன்படுத்தினார்.

இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தனது ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நான் பயிற்சிபெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வுக்கூடமான வாலோபஸீக்கு சென்றேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் வரவேற்பு கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒருபோர்க்களத்தின் மிகப்பெரிய ஓவியத்தைப் பார்த்தேன்.

அது பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்பு நடத்திய விடுதலைப்போர் காட்சி என்பது என் வியப்பை அதிகரித்தது.

திப்புவின் தாய்மண்ணே நினைவு கூர்வதற்கு தவறிய அவரது ராக்கெட் போர் நுட்பத்தை, உலகின் மறுகோடியில் நவீன ராக்கெட் நுட்பத்தின் உயர் தளமான நாசாவில் நினைவு கூரப்பட்டு ஓவியமாக நிற்பது எனக்கு ஒரு இந்தியன் என்ற வகையில் பெருமிதத்தையும், பெருமகிழ்ச்சியையும் தந்தது”  என்று  அப்துல்கலாம் எழுதியுள்ளார்.

புராணங்களையும் , நம்ப முடியாத சம்பவங்களையும்  உண்மை நிகழ்வுகளைப் போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொழுது மாபெரும்  வீரனின் வரலாற்றை ‘கற்பனைக் கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்திய அரசு திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்தது . இது ஒரு வரலாற்று துரோகம். இதற்காக வருத்தம் தெரிவிக்கக் கூட இந்த வக்கற்றவர்களுக்கு வழி தெரியவில்லை. இது திப்புவின் தியாகத்தின் மீது பூசப்பட்ட களங்கத்தின் காயாத சேறு. 

அண்மையில்  200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய அத்துமீறிய கொடும் ஏகாதிபத்தியவாதிகள்  அபகரித்த பொருட்களில் ஒன்றான திப்புவின் போர்வாள்  வாள் ரூபாய்3.5 கோடிக்கு இலண்டனில்  ஏலமிடப் பட்டபோது , அதனை ஏலத்தில் எடுத்து ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கக்கூட இந்திய அரசுக்கு துப்பில்லை. 

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரை வார்க்கும் கும்பல்களுக்கு, திப்புவின் தியாக வாழ்க்கையின் பக்கங்கள் நிறைய  நிறைய பாடங்கள் இருக்கின்றன. ஏகாதிபத்தியத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் கொடி பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையைக் காவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கும் திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. ஆனால் படித்துக் கொள்ளத்தான் ஆள் இல்லை. 

'திப்பு'வின் தியாகங்கள் தொடரும் இன்ஷா அல்லாஹ். 

இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு