Wednesday, February 26, 2014

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 31

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
சென்ற பதிவில் பெருமைகொள்வது பாவம் என்பது பற்றியும், அல்லாஹ்வின் கட்டளையையும், நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டி, நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நடைபெற்ற சரித்திர முக்கியமான சம்பவத்தை நாம் அறிந்தோம் படிப்பினை பெற்றோம். இந்த வாரம் இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியை சிறப்பாக செய்த உத்தம தோழர்களான அபூபக்கர்(ரலி) அவர்கள் மற்றும் உமர்(ரலி) அவர்கள் இருவரும் நபி வழியில் பெருமை பாராட்டாதவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை அவர்களின் வாழ்வில் நடைபெற்ற முக்கியமான இரு சம்பவங்களைப் பார்ப்போம், படிப்பினை பெறுவோம்.

இவ்வுலகில் சிலர் பெருமை இல்லாமல் வாழ முயற்சி செய்கிறார்கள். பெருமையற்ற வாழ்வை விரும்புகிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் நினைக்கிறார்கள் அவர்கள் பெருமைபடவில்லை என்று. ஆனால் அவர்களின் வாழ்வில் ஆங்காங்கே அவர்களின் பெருமை வெளிப்படுவதை அவர்களை அவதானித்து வருபவர்களால் அறியப்படுகிறது. பெருமை நாம் எப்போது, எங்கு எதில் பெருமைபடுகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது மிக மிக அவசியம். காரணம் நாம் முந்தைய பதிவில் சுட்டிக்காட்டிய இறைவசனங்கள், நபி மொழிகள் வீண் பெருமை அடிப்பது பற்றி வன்மையாக எச்சரிக்கை செய்துள்ளது. 

மேலும் நமக்கு எந்த ஒரு செயல் இவ்வுலகில் நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று சொல்லுவதை இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்துள்ளது. அல்லாஹ் எனக்கு எதை நாடினாலும் அது என் நன்மைக்காக என்று அவனை புகழ்வதின் மூலம் நாம் பெருமைபடவில்லை என்பதை நாம் உள்ளத்தால் உறுதிபடுத்திக்கொண்டால், நிச்சயம் வெளி உலகிற்கு நாம் பெருமை அடிப்பவர்களாக தெரியமாட்டோம். இது தான் நபி(ஸல்) அவர்களின் வாழ்வு மற்றும் நம்முடைய முந்தைய சமுதாயமான நபித்தோழர்களின் வாழ்வின் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் 'அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது' என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உலகில் உயர்ந்துவிடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்' என்று கூறினார்கள். புகாரீ 6501. 

எந்த ஒரு மனிதனோ அல்லது ஒரு பொருளோ உலகில் எந்த ஒரு உயர்ந்த நிலைக்கு சென்றாலும், என்றாவது ஒரு நாள் அந்த உயர்ந்த நிலை கீழே விழும் என்பது அல்லாஹ்வின் நீதியில் ஒன்று என்ற அருமையான தத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்கள். இதற்காகத்தான் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹப்பாக்களும் தனக்கு வெற்றி வந்தாலும், தோல்வி வந்தாலும் ஒரு துளி அளவு பெருமைபடாமல் அல்லாஹ்வை புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக வாழ்ந்துள்ளார்கள். மேல் குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து நிறைய படிப்பினை உள்ளது.

இவ்வுலகில் நாம் எந்த ஒரு உயர்ந்த நிலைக்கு சென்றாலும், நாம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த நிலை நிலைக்காது என்ற எண்ணம் நம் மனதில் வந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். நான் இன்று ஒரு அலுவலகத்தில் மேனேஜராக நல்ல நிலையில் உள்ளேனா, இது என்னுடைய திறமைக்கோ அல்லது, படிப்புக்கோ கிடைத்த்து அல்ல, இது அல்லாஹ் எனக்கு கொடுத்த்து அவனுக்கே எல்லா புகழும் என்ற எண்ணம் நம் மனதில் ஒவ்வொரு வினாடியும் எழ வேண்டும். என்றைக்கு அந்த மேலாளர் பதவி பறிபோகும் என்பதை தீர்மானிப்பவன் அல்லாஹ் ஒருவனே. 

இன்று நான் நன்றாக இருக்கிறேன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று உளத்துய்மையுடன் மனதில் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் உரிமைகள் கடமைகள் நீதிகளில் ஒன்று “நாம் பெருளாதாரத்தாலும், பதவிகளாலும், அந்தஸ்தாலும் உயர்ந்தால் நிச்சயம் ஒரு முறையேனும் அவைகளிலிருந்து கீழ் நிலைக்கு கொண்டுவரப் படுவோம்.’ இது நாம் நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலும் சரி. இவ்விசயம் ஒவ்வொரு மனிதனுக்கும் நடந்தே தீரும்.

நான் தான் அறிவாளி, நான் தான் பலசாலி, நான் திறமைசாலி, நான் சிறந்த மார்க்க பிரச்சாரம் செய்பவன், நான் தான் இந்த சமுதாயம் காக்கும் இயக்கம் என்று பெருமை சொல்லியவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் சில நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ வேறு ஒருவரையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அவர்களுக்கு மாற்றாக வைத்திருக்கிறான், அவர்களை இவ்வுலகிற்கு வெளிகாட்ட வைத்து பெருமையடித்துக் கொண்டவர்களை முகவரியற்றவர்களாக மாற்றி உள்ளான்.

மேல் சொன்ன ஹதீஸின் சம்பவத்தில் நம்மை நாம் இணைத்து கொஞ்சம் ஒப்பீடு செய்து பாருங்கள். நமக்கு ஆங்கிலம் பேசத்தெரியும், ஆனால் ஒரு முக்கிய அலுவலக கருத்தரங்கில், ஏதோ ஒரு தடுமாற்றம், ஆகவே நம்முடைய ஆங்கிலத்தை ஒருசிலர் விமர்சித்து விட்டார்கள். ஆனால் நமக்கு தெரியும் நாம் தடுமாறினோம் என்று ஆனால் தடுமாற்றம் உண்மை என்பதை உணர்ந்து பணிந்து செல்வதை காட்டிலும் ஏதாவது ஒரு சில சமாளிப்பு காரணங்களைச் சொல்லி நம்முடைய ஆங்கிலத்தில் தவறில்லை என்று நம்மை நாம் நியாயவான்களாக காட்டிக் கொண்டு பெருமையடிக்கவே விரும்புகிறோம். இது தான் எதார்த்தத்தில் நடைபெறும் உண்மை. 

இதனை யாரும் மறுக்க முடியாது. தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டு விட்டால் நாம் அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டாலும், இது அல்லாஹ்வின் நீதியில் உள்ளது. இது நடந்தே தீரும் நாம் என்னதான் பூசி முழுகினாலும் நாம் செய்வது மட்டுமே சரி என்ற அகம்பாவம் பெருமை ஒரு நாள் நம்மை அந்த பெருமைக்கு துளி அளவும் பெருத்தமில்லாதவனாக்கி விடும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. நாம் எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வை புகழ்வோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

நபி(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அது போல் கண்ணியமிக்க, கவுரவமிக்க, அவர்களின் சத்தியத் தோழர்கள் வாழ்ந்தார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் ஒரு முறை முஹம்மது இப்னு ஸலமா (ரஹ்) என்று ஒரு தாபியீனுடைய தோட்ட்த்திற்கு செல்கிறார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் “முஹம்மது இப்னு ஸலமாவே என்னுடைய ஆட்சியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். உடனே முஹம்மது இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் “உங்களுடைய ஆட்சியை நான் விரும்புவது போல் நல்லாட்சியாக பார்க்கிறேன், உங்களுக்கு யாரெல்லாம் நல்லவை நாடுகிறார்களோ, அவர்களுக்கும் அப்படித்தான் பார்க்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு “நீங்கள் மக்களிடம் ஜகாத் பணத்தை வசூலிப்பதில் கடுமையாக உள்ளீர்கள், அதனை சரியான முறையில் பயன்படுத்துவதில் பேணுதலாக உள்ளீர்கள், ஆனால் நீங்கள் கொஞ்சம் ஆட்சியில் சறுகுவீர்கள் என்றால் நான் உங்களை நேராக்குவோம் அமீருள் முஃமினீன் அவர்களே” என்றார்கள். 

தன்னுடைய ஆட்சியில் தவறே செய்யாத அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் இவைகளை பொறுமையாக செவியுற்றார்கள், கோபம் கொள்ளவில்லை, பெருமை கொள்ளவில்லை. ஆனால் உமர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “ நான் தவறு செய்தால், நான் அநீதியாக ஆட்சி செய்தால், என்னை நேர்படுத்தும் சமுதாயத்தோடு வைத்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,” என்று சொன்னார்கள். சுப்ஹானல்லாஹ்… என்ன ஒரு வார்த்தை பாருங்கள். மிகப்பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவர், நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு நீண்ட காலம் நேர்மையான ஆட்சி புரிந்தவர் என்று வரலாற்றில் அறியப்பட்ட அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்களிடம் இருந்த பணிவு, அடக்கம், விமர்சன்ங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் இன்றைய ஆட்சியாளர்களிடம் உள்ளதா? குறைந்த பட்சம் இன்றைய முஸ்லீம் தலைவர்களிடம் உள்ளதா? நம்மை விமர்சிப்பவர் நம்மை சுற்றி இருப்பது நாம் நல்லவை மட்டும் செய்வதற்கு அவர்கள் ஒரு தூண்டுகோள், நாம் நம்முடைய தவறுகளிலிருந்து திருத்திக்கொள்வதற்கு நம்மை சுற்றியுள்ளவர்களின் விமர்சன்ங்களே காரணம் என்று அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி உமர்(ரலி) அவர்களுடைய மனோபக்குவம் என்றைக்கு நம் சமுதாய தலைவர்களுக்கு வருமோ?

ஒரு முறை அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒருவர் அபூபக்கர்(ரலி) அவர்களை மிகவும் உயர்த்தி பாராட்டி விடுகிறார்கள். உடனே அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் “யா அல்லாஹ் இவர்களின் பாராட்டை வைத்து என்னை தண்டித்துவிடாதே, அவர்கள் தெரியாத என்னுடைய பாவங்களை நீ மன்னித்தருள்வாயாக, அவர்கள் என்னை இப்படி சிறந்தவர் என்று பாராட்டுகிறார்கள், இதைவிட சிறந்தவனாக என்னை ஆக்குவாயாக.” என்று அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் து ஆ செய்தார்கள். பெருமை இல்லை, அகம்பாவம் இல்லை, ஆனவம் இல்லை, பாராட்டு கொஞ்சம் என்ற கோபம் இல்லை, ஆனால் அந்த மாமனிதரிடம் பணிவு இருந்தது, நியாய தீர்ப்பு நாளின் அதிபதியின் மேல் உள்ள அச்சம் இருந்தது. அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள், அவனை புகழ்ந்தார்கள். புகழுக்குரியவன் மனிதன் அல்ல அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த நபி(ஸல்) அவர்களின் வழியில் உள்ளோம் என்பதை இந்த மனித சமுதாயத்திற்கு நினைவுறுத்தினார்கள் அபூபக்கர்(ரலி) அவர்களும் அவர்களைப் போன்ற சத்திய சஹாப்பாகளும்.

உத்தம நபி(ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் அருமைத் தோழர்களின் வாழ்வின் சம்பவங்களை அறிந்தபின்பு நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாப்பாக்கள் இந்த தீணுக்காக செய்த எண்ணற்ற தியாகங்களை நினைத்துப்பார்த்தால், நான் இவ்வுலகில் இஸ்லாத்திற்காக செய்யும் சேவை ஒரு தூசுக்குக்கூட சமமாகுமா? என்பது கேள்வி குறியே.

ஒருவனுக்கு ஏதோ ஓர் உதவி செய்துவிட்டாலோ, அல்லது ஒருவனை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தாலோ, ஒருவனுக்கு திருக்குர்ஆனை பரிசளித்தாலோ, ஜக்காத், ஃபித்ரா வினியோகம், நிவாரண உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி என்று இப்படி உதவிகள் செய்து அவைகளை இணையதளங்களிலும், வீதிக்கு வீதி ஃபிளக்ஸ் பேனர்களிலும் அவ்வுதவிகளை பட்டியலிட்டு, புகைப்பட்த்துடன் போட்டு பெருமை கொள்பவர்கள், நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் எப்படி பெருமையின்றி வாழ்ந்தார்கள் என்பதை படித்து உணர வேண்டும், திருந்த வேண்டும்.

நான் இன்று இணைவைப்பில் இருந்து மீண்டும் அல்லாஹ்வை வணங்கும் நல்லடியானாக உள்ளேன் இதற்கு காரணம் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ். நான் இன்று நிறைய சம்பாதிக்கிறேன், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நான் நோய் இல்லாமல் வாழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ். இந்த சமுதாயத்திற்காக சேவை செய்கிறேன் இவ்வாறு செய்யத்தூண்டிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், நான் நிறைய தர்மம் செய்கிறேன் இது எனக்கு அல்லாஹ் கொடுத்தது அல்ஹம்துலில்லாஹ், பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே நான் பெருமைக்குரியவன் அல்ல என்ற எண்ணங்கள் நம் அனைவரின் உள்ளங்களில் வர வேண்டும். இவ்வாறான எண்ணங்கள் நிச்சயம் நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஓர் பணிவு ஏற்படும். ஆனவத்தோடும், அகங்காரத்தோடும் வாழும் மனிதன் எவரும் இவ்வுலகில் வெற்றி பெற்றதாக ஒரு சிறப்பான வரலாற்றை நாம் காண்பது மிக மிக அரிது. பணிவோடு வாழும் மனிதனுக்கு அல்லாஹ் தரும் வெற்றி இவ்விலகிலும் மறுவுலகிலும் நிச்சயம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.

தன் வாழ் நாட்களில் பெருமையடிக்காத நபி(ஸல்) அவர்கள் மற்றும் அவர்கள் வழியில் வாழ்ந்த சத்திய சஹாப்பாக்களின் வாழ்வில் நிறைய படிப்பினைகள் உள்ளது. யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

5 comments:

  1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வழியில் தொடர்ந்த உத்தம தோழர்களான அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருவர்களைப்போல நபி வழியில் பெருமை பாராட்டாதவர்களாக நாமும் அன்னார்களைப் போல் நன்மையில் இறைபொருத்தம் ஒன்றையே நாடி செயல்படுவோமாக!

    நல்ல கல்வி தந்த சகோ. தாஜுதீன், ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  2. நல்ல கல்வி தந்த சகோ. தாஜுதீன், ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த பதிவை வாசித்து கருத்திட்ட, வாசித்த சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி..

    ஜஸக்கல்லாஹ் ஹைரா..

    ReplyDelete
  4. நல்ல கல்வி தந்த சகோ. தாஜுதீன், ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  5. சகோ. தாஜுதீன், ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.