Tuesday, March 18, 2014

யார் அங்கே ? எங்கே போனார்கள்? - தேடல் - 3

முதிர் நிலா!

நிலைக் கண்ணாடி முன்
நின்றிருந்த நிலா
தடாகத்தில் பிம்பத்தைப்போல
தத்தளிக்காமல்
திருத்தமாயிருந்ததால்
தன்னையே பார்த்துக்கொண்டு
வெகுநேரம் நின்றிருந்தது

அகத்தின் நிலைமையை
முகம் காட்ட
கண்ணாடி அதை
அப்பட்டமாகப்
பிரதிபலித்துக் கொண்டிருந்தது

விழிகளில்
விடை தெரியாக் கேள்விகளும்
இதழ்களில்
இனம்புரியா இன்னல்களும்
புத்தியில்
பதிலில்லாப் புதிர்களும்
பதிந்து கிடந்தன

கொட்டித்தீர்ந்துபோன
கோடைமழைக்குப் பிறகு
எஞ்சியிருக்கும் மேகத்தைப் போல
கொட்டித் தீர்ந்துபோகுமுன்
மிஞ்சியிருக்கும்
மெலிந்த கூந்தலில்
மலர்சூடாத
மாலைநேரக் கனவுகள்
கரைந்து கரைந்து
கண்களின் வழியே
கரையைக் கடந்தன

காத்திருப்பின் உச்சம்
வரையறுக்கப்படாததால்
வளர்பிறை காலங்களில்கூட
தேய்ந்துதேய்ந்து
வடிவை
இழந்து கொண்டிருந்தது நிலா

எப்படி இடம் மாற்றிப் பார்த்தாலும்
ரசம் கொட்டிப்போன கண்ணாடியின்
ஒரு சில இடங்கள்
நிலவின்
வடுக்களாகவே தோன்றின

இந்த
நிலைக்கண்ணாடி நிலா
நிலை தடுமாறி
தலை தொங்கிப் போகுமுன்
வலக்கரம் பற்றும்
வாழ்க்கை ஒன்று
வாய்த்து விட வேண்டும்!

Harmys அப்துல் ரஹ்மான் எழுதியதல்ல.
(அடுத்தது?)

14 comments:

  1. யார் எழுதி இருந்தால் என்ன? ஆஹா போட வைத்த கருத்துச் செறிவு மிகுந்த கவிதை.

    ஒரு முதிர் கன்னி சொல்வதாக நானும் ஒரு கவிதையை எப்போதே படித்த நினைவு.

    " நாங்களும் பாபர் மசூதிகள்தான்
    எல்லோரும் எங்களை
    இடிக்க நினைக்கிறார்கள் - ஆனால்
    "கட்ட" மறுக்கிறார்கள்.

    ReplyDelete
  2. " நாங்களும் பாபர் மசூதிகள்தான்
    எல்லோரும் எங்களை
    இடிக்க நினைக்கிறார்கள் - ஆனால்
    "கட்ட" மறுக்கிறார்கள்.

    Wow

    ReplyDelete
  3. Harmys அப்துல் ரஹ்மான் இவரை நீண்ட நாட்களாக காணவில்லை இவரை தேடிபிடித்து கொண்டு வருபவருக்கு மலேசியன் ஏற்லைன்ஸ் விமானத்தில் ஒரு டிக்கெட் இலவசம்

    ReplyDelete
  4. அக்கறையோடு சில சமூக அவலங்களைச் சொல்லும்போது சர்க்கரை போல் அழகியலைக் குழைத்துச் சொல்வது ஹார்மீஸ் பாணிதான்.

    இருப்பினும் அவரோட ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

    ReplyDelete
  5. hahahahha.........Seriously!!!! give me a week......Thanks a lot for CARE....Sabeer kaka,Shahul Kaka,ANsari kaka....

    ReplyDelete
  6. நிலைக் கண்ணாடி முன்
    நின்றிருந்த நிலா
    தடாகத்தில் பிம்பத்தைப்போல
    தத்தளிக்காமல்
    திருத்தமாயிருந்ததால்
    தன்னையே பார்த்துக்கொண்டு
    வெகுநேரம் நின்றிருந்தது
    ---------
    அஸ்ஸலாமுஅலைகும்.ஆரம்பமே அமர்களம்!அப்துற்றஹ்மான் தானோ என நினைக்க வைக்கும் கைங்கார்யம்! நிலவின் அழகில் மயங்கும் நிலவாய்! தன்னில் தன்னை மயங்கிபார்க்கும் பெண்மை!

    ReplyDelete
  7. அகத்தின் நிலைமையை
    முகம் காட்ட
    கண்ணாடி அதை
    அப்பட்டமாகப்
    பிரதிபலித்துக் கொண்டிருந்தது
    -------------------------------------------------------

    ஒப்பனை செய்யும் பெண்ணின் கவனம்!அப்படித்தான் அப்துற்றஹ்மானின் கவிதையை ஒத்தியெடுத்த டிகிரி காப்பி இது!

    ReplyDelete
  8. விழிகளில்
    விடை தெரியாக் கேள்விகளும்
    இதழ்களில்
    இனம்புரியா இன்னல்களும்
    புத்தியில்
    பதிலில்லாப் புதிர்களும்
    பதிந்து கிடந்தன
    -------------------------------------------------
    கவிவேந்தனின் சாயலை தன்னுள் மறைக்க முடியாமல் பூசிக்கொண்ட வரிகள்!!!!!மனசஞசத்தை இப்படியெல்லாம் எழுதிக்காட்ட எப்படித்தான் முடிகிறது?எதார்த்தத்தின் வார்தை மொழிபெயர்ப்பு!

    ReplyDelete
  9. கணினி கோளாறு சரிபார்க்கப்பட்ட பின் தொடருவோமே!!

    ReplyDelete
  10. கவிதைகள்- பாலைவனச் சோலைகள் . எனவே கவிஞர்களே தொடருங்கள்.

    ReplyDelete
  11. கொட்டித்தீர்ந்துபோன
    கோடைமழைக்குப் பிறகு
    எஞ்சியிருக்கும் மேகத்தைப் போல
    கொட்டித் தீர்ந்துபோகுமுன்
    மிஞ்சியிருக்கும்
    மெலிந்த கூந்தலில்
    மலர்சூடாத
    மாலைநேரக் கனவுகள்
    கரைந்து கரைந்து
    கண்களின் வழியே
    கரையைக் கடந்தன
    ----------------------------------------------------------
    முதிர்கன்னியின் தேள் கொட்டும் நிலைசொன்னாலும் கவிதை தேன் கொட்டி சொன்ன வரிகள்!சோக மேகம் சூழ்ந்த வாழ்வில் எஞ்சியிருக்கும் கேசம் கொட்டுமுன் நேசமிக்கவன் வருவானா?இதையும் மொட்டையாக சொல்லாமல் ,உயிர் முடிச்சாக்கி தலையுடன் முடிச்சி போட்ட கவிதை!கரையை கடந்த கனவு என்றாலும் மனதில் தங்கியிருக்கும் அந்த கரைகடக்கா துன்ப புயல்!

    ReplyDelete
  12. காத்திருப்பின் உச்சம்
    வரையறுக்கப்படாததால்
    வளர்பிறை காலங்களில்கூட
    தேய்ந்துதேய்ந்து
    வடிவை
    இழந்து கொண்டிருந்தது நிலா
    --------------------------------------------------------------------------------

    இளமை கடந்து போகும் நிலையில் ,கன்னித்தீவின் எல்லை அறியாத அந்த அழகு நிலாவின் வாழ்வில் காலப்பருவம் மாறினாலும் அவள் கன்னிப்பருவம் அப்படியே கடந்து போகும் சோகம் சொல்லும் வரிகள் யாவும் எதார்த்தம்!

    ReplyDelete
  13. எப்படி இடம் மாற்றிப் பார்த்தாலும்
    ரசம் கொட்டிப்போன கண்ணாடியின்
    ஒரு சில இடங்கள்
    நிலவின்
    வடுக்களாகவே தோன்றின
    ------------------------------------------------------
    சோக தளும்பு!கைப்புண்ப்பார்க்க இங்கே கண்ணாடி!அவளின் அவல நிலைக்கண்டு நிலைக்கண்ணாடியே நிலை இழந்து ,அவளின் அரிதாரம் பூசாத முகம் கண்டு தன் அரிதார பூச்சான ரசம் இழந்து விடுகிறது!அவள் அலங்கார அரிதாரம் பூசாத காரணம் அவள்தாரம் எனும் நிலை அடையாததே!அதை எந்த ஆண்மகனும் அவளுக்கு தராததே!

    ReplyDelete
  14. இந்த
    நிலைக்கண்ணாடி நிலா
    நிலை தடுமாறி
    தலை தொங்கிப் போகுமுன்
    வலக்கரம் பற்றும்
    வாழ்க்கை ஒன்று
    வாய்த்து விட வேண்டும்
    ---------------------------------------------
    அந்த மதி( நிலா)ப் பெண் நிம்மதி அடைவது திருமதி ஆனாலே! அது எந்த ஆணாலே ஆகும்? அவனே லச்சிய புருஷன்!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.