Monday, April 21, 2014

கண்கள் இரண்டும் - தொடர்-33


சுர்மா

அந்தக் கரிய கல்லினை ஒரு கூழாங்கல்லில் தேய்த்து விரலால் தொட்டெடுத்துக் கண்களின் கீழிமைகளில் தீட்டிக் கொண்டேன். “மை போட்டது போல் இருக்கிறது” என்று கேலி பேசினாள் அவள்.

கண்கள் பெண்களுக்கு மட்டும் இருக்கும் பாகம் அல்லவே? ஆண்கள் மையிட்டுக் கொண்டால் ஆகாதா? யாரும் அப்படி இட்டுக் கொண்டதே இல்லையா என்ன? -இப்படிச் சிந்தித்தேன்.

இதனைத் தொடர்ந்து சரம் சரமாய் எண்ணங்கள் உதிக்கத் தொடங்கின. கண்-மைச் சிந்தனைகள்.

”கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு”

என்னும்வைர முத்துவின் வரிகள் தவழ்ந்தது என் நினைவில். கண்ணுக்கு மை எப்படியோ அப்படித்தான் கவிதைக்குப் பொய்.

அதாவது கற்பனை. மை என்பது இயற்கையிலேயே கண்ணில் இல்லாத ஒன்றுதானே? அதனை ஒப்பனையாகத்தான் கண்ணுக்கு எழுதுகிறார்கள். அது போல் கற்பனை என்பது பொய்தான். ஆனால் கண் உண்மையாக இருப்பது போல் கவிதை உண்மையாக இருக்க வேண்டும். மையே கண் ஆகி விடாது. பொய்யே கவிதை ஆகி விடாது.

அழகிய கண்களுக்கு மை தீட்டினால் அழகு அதிகம் ஆகும். ஆனால் இயல்பிலேயே ஒன்றரைக் கண்ணாக இருப்பதற்கு மை தீட்டுவதால் அழகு வந்துவிடாது அல்லவா? கவிதையும் அப்படித்தான். கேவலமான சிந்தனைகளுக்குக் கற்பனை அலங்காரம் அழகு சேர்க்காது.

பெண்கள் தங்கள் கண்களுக்கு அஞ்சனம் தீட்டி அழகுபடுத்திக் கொள்ளும் பழக்கம் மிகவும் தொன்மையான ஒன்று. மண்ணில் அது கலவையாகக் கிடைக்குமே அன்றித் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. சொல்லப் போனால் பெண்மை பேணும் கண்-மையும்கூட தனிமைக்கு எதிரானதுதான்!

இரண்டாம் லெட் சல்ஃபைடு என்பது மற்றொரு வஸ்து. இது காரீயம் என்னும் உலோகத்தின் கலவை. கலீனா என்பது இதன் செல்லப் பெயர். காரிகையின் கண்ணுக்குக் காரிய வீரியம் நல்கும் போலும். இதில் கொஞ்சமாக வெள்ளியின் சல்ஃபைடுக் கலவையும் இருக்குமாம்.

அல் நிறத்து அஞ்சனத்தை ஒளிமிகு விழியில் எழுதிக் கல் தரத்து நெஞ்சுகளைக் கரைக்கும் அந்தப்புரத்து அழகிகள் அற்றை நாள் எகிப்திலும் கிரேக்கத்திலும். அவர்கள் மேலிமைக்கு கொஹ்ல் கொண்டு கறுமையும் கீழிமைக்கு ’மலச்சைட்’ (காப்பர் ஹைட்ராக்ஸைடுத் தாது) தாமிரக் கலவையால் பச்சை நிறமும் தீட்டி அலங்கரித்தனர். பார்க்கும் கண்களிலேயே கரிய நிறமும் பச்சை நிறமும் தோன்றுதடா நந்தலாலா!

அந்நாட்களில் எதிரிகள் மீது ஏவப்படும் கணைகளின் முனைகள் கொடிய விஷத்தில் முக்கி எடுத்தவையாக இருக்கும். காயத்தோடு எவரும் தப்பிக்க முடியாமல் அது காயத்தை உயிர் உலர்ந்த கட்டை ஆக்கிவிடும்! புறப்போரின் இந்த மரபை அகப்போரில் ’அப்ளை’ செய்து பார்த்தேன். சிந்தை ஒரு சிறு கவிதையை உடனே ’சப்ளை’ செய்தது. ’வில் வில் வில் உன் விழியம்பில் எனைத் தாக்காதே’ என்று பாடிய கவிஞர் வாலியின் பாணியில்:

“அம்பாகப் பாய்ச்சுகிறாள் அவளின் விஷனை
மையென்று வைக்கிறாள்
அதன் முனையில் விஷமாக

’அல்-குஹ்ல்’ என்னும் அரபிச் சொல்லின் அடியாகப் பிறந்த ஆங்கிலச் சொல் ஆல்கஹால் (alcohol). ஆல்கஹால் என்றால் மது / சாராயம். ஆனால் அரபியில் மதுவுக்கு ஷராப்/ நபீத் /ஃகம்ர் என்று பெயர்(கள்)! ’குஹ்ல்’ என்பது கண்-மைதான்.

”மை எழுதிய கண்களால
வசியம் வார்க்கிறாள்
ஆண்களின் மனதில்”

மேல் வர்க்கத்துப் பெண்கள் தம் கண்களுக்கு மை தீட்டுவது அழகின் பாற்பட்ட ஒன்றாக இருந்தாலும், எகிப்திய எத்தியோப்பிய அரேபியப் பகுதிகளில் பாலைவனத்தில் வாழ்க்கை நடத்தி வந்த மக்கள் – ஆண் பெண் இருபாலரும் – தம் கண்ணுக்கு மை இட்டுக் கொண்டது அழகு கருதி அல்ல.

பாலை எனும் பாவையின் மேனி முழுதும் பகலவனின் வெய்யில் எனும் பசலை படர்ந்து தகிக்கும் காட்சி காண்போருக்குக் கண் கூசும்! பார்த்துக் கொண்டே இருந்தால் எரிச்சலும் உண்டாகும்! அந்நிலைக்கு ஆகாமல் விழிகளைக் காக்கும் பொருட்டு அவர்கள் அஞ்சனம் அப்பிக் கொண்டனர். ஆமாம், மையின் கறுப்பு வெய்யில் ஒளியை உள்வாங்கிக் கொள்வதால் அதன் அடர்த்தி குறைந்து மிதமாகவே கருவிழிப் பாவை மீது படும்!

பண்டைய இந்தியாவில் பாவையர் தம் விழிப் பார்வை கூர்மை பெறும் பொருட்டு இமைகளின் விளிம்பில் இட்டுக் கொண்ட மை, சந்தனத் திரி எரியும் விளக்கின் புகையை ஆமணக்கு எண்ணெய்யில் (விளக்கெண்ணெய்யில்) படிய வைத்து வழித்துத் தயாரிப்பது.

விட்டில் பூச்சிகள் கவரப்பட்டு விழுகின்ற
விளக்கின் புகை கொண்டு மை செய்தது
விழிகளையே விளக்காக்கித் தம் காதலரை
விட்டில் பூச்சிகளாய்க் கவர்வதற்கா?

வரலாறும் அறிவியலும் இப்படிச் செப்ப இலக்கியத்தின் பக்கம் என் இதயம் திரும்பியது.

”கண்ணுள்ளார் காதலவர் ஆகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1126)

என்று காதலி ஒருத்தி சொல்வதாகப் பாடுகிறார் திருவள்ளுவர்.

‘கண்ணில் என் காதலர் இருக்கிறார். மறைவார் என்பதால் மை எழுத மாட்டேன்’ என்று இதற்குப் பொருள். ‘இமைக்கும் நேரம் கூட இடைவெளி இன்றி அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எனவே கோலம் போடக் காலம் இல்லை’ என்பது மணக்குடவர் இக்குறளுக்கு எழுதிய உரையில் காணப்படும் கருத்து!

இக்கருத்தையே கொஞ்சம் மாற்றி அப்துல் ரகுமான் இப்படிச் சொன்னார்:

‘வீட்டுக்குள் அவர். வாசலில் எதற்கு வரவேற்புக் கோலம்?’

அப்துல் ரகுமானின் கஸல் துளி ஒன்று என் சிந்தனை மீது சில்லென்று தெரித்தது.
“கண்ணுக்கு மை தீட்டக்
கோல் எடுக்கிறாள்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?”

நானும் ஏதாவது சொல்லிப் பார்க்க நாடினேன். சட்டென்று தோன்றின இவ்வரிகள்:

“அவளின் கருவிழிகள்
இரு கவிதைகள்
அதற்கு
அவளே வரைகிறாள்
மையால் உரை”

“கண்ணுக்கு மை என்பது அளவாக எடுத்து நிதானமாகத் தீட்டப்பட வேண்டும். கோதி எடுத்து அப்பிக் கண்ணையே மறைத்து விடக்கூடாது. அது போல் வேதத்திற்கு இயற்றப்படும் உரை அளவாக இருக்க வேண்டும். நிதானமாக எழுதப்பட வேண்டும். மூலக் கருத்தையே மறைப்பதாக இருக்கக் கூடாது.” 

கண்களுக்கு இடும் சுர்மா பற்றிய இத்தொடர்  அடுத்தவாரத் தொடரையும் அலங்கரிக்கும்
(வளரும்)
அதிரை மன்சூர்

7 comments:

  1. மச்சான்,இது பற்றி ஹதீஸ் குறிப்பிடவும்.

    ReplyDelete
  2. கண்ணைப்பற்றி கவிமன்றமே நடத்தி இருக்கின்றீர்கள் மன்சூர் காக்கா....

    ReplyDelete
  3. கூடத்திலே மனப் பாடத்திலே -விழி
    கூடிக் கிடந்திட்ட ஆணழகை
    ஓடைக் குளிர் மலர்ப் பார்வையினால் - அவள்
    உண்ணத் தலைப்படும் நேரத்திலே
    பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
    பட்டுத்தெறித்தது ஆணின் விழி
    ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான்
    அவன் ஆயிரம் ஏடு திருப்புகிறான்.

    - பாரதி தாசன்.

    கண்ணொடு கண்ணினை நோக்கொக்கில் வாய்ச் சொற்கள்
    என்ன பயனுமில

    - திருக்குறள்.

    தம்பி மன்சூரின் இந்தக் கண் கவி அரங்கிற்கு என் நினைவிலிருந்து சில. இன்னும் நினைவுகள் வந்தால் இன்னும் பதியலாம். .

    ReplyDelete
  4. மச்சான் இரண்டு ஹதீஸ்கள் ஸஹீஹ் முஸ்லிமில் கிடைத்தது இரண்டுமே இத்தா இருப்பவர்களுக்கு மட்டும் அஞ்சனம் தீட்டுவது அனுமதி இல்லை என்றே உள்ளது

    5336. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
    இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். ('இத்தா'விலிருக்கும்) என் மகளின் கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்ளலாமா?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'வேண்டாம்' என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். ஒவ்வொரு முறையும் வேண்டாம்' என்றே கூறினார்கள். பிறகு, '(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) 'இத்தா'க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் தாம். (ஆனால்,) அறியாமைக் காலத்தில் (கணவன் இறந்தபின்) மனைவி (ஓராண்டு 'இத்தா' இருப்பாள்.) ஆண்டின் முடிவில் ('இத்தா' முடிந்ததன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவான். (அந்த நிலை இப்போது இல்லை)' என்றார்கள்.


    5338. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
    ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். ('இத்தா'வில் இருந்த அவளுடைய கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். எனவே, அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது 'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்' என்று கூறினார்கள்.

    ReplyDelete
  5. தேடல் தொடர்கின்றது மச்சான்

    ReplyDelete
  6. சமீபத்தில் ஸ்டாலின் ஒரு பிரசாரக்கூட்டத்தில்:

    "அண்ணலும் நோக்கினான் அவனும் நோக்கினான் என்பதற்கொப்ப மோடியும் நோக்க ஜெயலலிதாவும் நோக்க அஇஅதிமுகவுக்கும் பிஜெபிக்கும் தொடர்பிருக்கிறது அதுவும் கள்ளத்தொடர்பு"

    கண் பதிவு கவிதைப்பதிவாக ஈர்க்கிறது.
    சூப்பர் மன்சூர்.

    ReplyDelete
  7. யாசர் ஜசாக்கல்லாஹ் கைர்

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.