அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்கள் தோழர்களை எப்படி நேசித்தார்கள், நாம் அவர்களை எவ்வாறெல்லாம் நேசிக்க வேண்டும். நாம் நபித்தோழர்களை நேசிப்பதால் நமக்கு என்ன பயன் என்பது பற்றி அறிந்து கொண்டோம், அதன் வாயிலாக படிப்பினை பெற்றோம். இந்த வாரப் பதிவில் நாம் அன்றாடம் செய்து வரும் பாவங்களில் ஒன்றான பொய் பேசுவது பற்றி அச்சமூட்டி நினைவூட்ட விரும்புகிறேன்.
இன்று சர்வசாதாரணமாக பொய் பேசுவது என்பது சமுதாய தலைவர்களிடம் முதல் பள்ளிச் செல்லும் சிறார்களிடமும் வாடிக்கையான செயலாகிவிட்டது. பொய் பேசுவதினால் நமக்கு ஏற்படப்போகும் தீங்குகளை பற்றி முழுமையாக அறியாத காரணத்தாலோ அல்லது அறிந்து மறந்த காரணத்தாலோ பொய் பேசுவதை பல சந்தர்ப்பத்தில் தொடர்கிறோம். பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொய்யில் பல வகைகள் இருந்தாலும், இன்று நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சிலவற்றை நாம் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முனாபிஃக்கின் அடையாளம் மூன்று
1. பேசினால் பொய் பேசுவான்,
2. வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்
3. நம்பினால் மோசம் செய்வான்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.
அல்லாஹ் கூறுகிறான்: -“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்குர்ஆன் 16:105)
அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது பாவம்.
இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: - ‘அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய் கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம்:புகாரி.
“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.
அல்லாஹ்வின் திருவேதத்தையும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும், தங்களுடைய நிலைபாடுகளுக்கு ஏற்ப சாதகமாக்கிக் கொண்டு இஸ்லாமியர்களை வழிகெடுக்கும் பொய்யர் கூட்டம் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பும் இருந்தது, இன்று அது போன்ற வழிகேட்டுக்கூட்டங்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டு இருகிறது.
வியாபாரத்தில் பொய் கூறுவது பாவம்:
“மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பித் திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யா ரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் முஸ்லிம்.
கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது பாவம்:
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.
இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப் பரிமாற்றுச் சாதனமான facebook, பிற இணையதளங்கள் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறுகிறார்கள்.
நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உள்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது: -
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)
பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: -
உண்மையையே போதிக்கின்ற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற்குரியவர்க்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் கூறுகிறான்: அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர் பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)
அனுமதிக்கப்பட்ட பொய்கள்:
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்
1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பின்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: -
மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)
1. ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
2. யுத்தத்தின் போது
3. மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)
சமுதாய அமைப்புகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், சக முஸ்லீம்களை அற்ப அரசியல் ஆதாயத்திற்காக, பல பொய் தகவல்களையும், மறுக்கப்பட்ட அவதூறுகளையும் மீண்டும் மீண்டும் தேர்தலுக்கு தேர்தல் மக்கள் மத்தியில் பரப்பி வருபவர்கள் மேல் சொன்ன குர் ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் வாசிக்க வேண்டும்.
சமுதாயத்திற்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வாங்கித்தருகிறோம் என்று சொல்லும் சமுதாய அமைப்புகள் இன்று தங்களின் அரசியல் லாபத்திற்காக. நடக்காத ஒன்றை நடந்தது போன்ற ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கி மக்களிடம் பொய் சொல்லி நாங்கள் இதற்காகத்தான் இந்த கட்சிக்கு ஆதாரவு என்று பொய்யர்களாக சுற்றித் திரிந்து கேவலப்படுகிறாவர்கள் மேல் குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் வாசிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் நபி(ஸல்) அவர்கள் மீது போய் சொல்லுவது பாவம், வியாபாரத்தில் பொய் சொல்லுவது பாவம், நகைச்சுவைக்காக பொய் சொல்லுவது பாவம், குழந்தைகளிடம் பொய் சொல்லுவது பாவம், கேட்பதை அப்படியே பரப்புவது பாவம் என்ற அறிந்த இஸ்லாமிய இயக்கங்கள் அற்ப அரசியல் லாபத்திற்காக ஒட்டுமொத்த சமுதாயத்திடமும் வாய்கூசாமல் பொய் சொல்லுவது எவ்வகையான மார்க்க வழிமுறை?
இஸ்லாத்தில் பொய் சொல்லுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு தருணம் இரு சகோதரர்களிடயே சமாதானம் ஏற்படுத்துவதற்காக. ஆனால் இந்த விசயத்தில் மட்டும் நம்முடைய சமுதாய இயக்கங்கள் உண்மையை மட்டுமே பேசுகிறார்கள். சுப்ஹானல்லாஹ்.
ஒரு ஊரில் உள்ள ஒரு ஏழை சகோதரன் மேல் அநியாயமான முறையில் ஒரு பொய் வழக்கு போடப்படுகிறது அதே ஊர்க்கார அரசியல்வாதியால், இதனை தொடர்ந்து அந்த சகோதரன் தன் மீது பொய் வழக்கு போட்டவர்கள் மேல் தன் சார்பாக ஒரு பொய் வழக்கு ஒன்றை போடுகிறார். இவ்விரண்டும் பொய் வழக்குகள் என்பது சுற்றியுள்ள சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் தெரியும். இதில் குளிர் காய மற்றொரு சமுதாய அமைப்பு உள்ளே வருகிறது. இதில் அந்த அமைப்பு அரசியல் செய்யவே விரும்புகிறதே தவிர. சம்பந்தபட்டவர்கள் இருவரும் நம் சமூகத்தவர்கள், இவர்களிடம் சமாதானம் ஏற்படுத்த முன்வர தயங்குகிறார்கள். இது தான் இன்றைய தமிழக இயக்கங்களிடம் சமூக அக்கறையோடு நடைபெறும் அரசியல்.
ஆனால் அன்றைய காலத்து மக்களிடம் (ஸஹாப்பாக்கள்) கருத்துவேறுபாடுகள் மார்க்க விசயத்தில் இருந்தாலும், இன்று இருப்பது போல் ஒருவரை ஒருவார் காட்டிக்கொடுத்து, அரசியல் செய்து குளிர்காயவில்லை. இந்த சமுதாயத்தை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.
யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்..
M.தாஜுதீன்
நன்றி: சுவனத்தென்றல் இணையதளம்
யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
ReplyDeleteஆங்காங்கே விலை போகாமல்கிடந்த பொய்எல்லாம் தலைவாரி பூசூடி நெற்றிக்கு குங்குமப்பொட்டும் கண்ணுக்கு மையும் எழுதி தேன்நிலவு காணவரும் தேர்தல் நேரம். இந்த இரண்டு மாதத்திற்குள்ளாக கை வாசம் Stockகில்உள்ள பொய் எல்லாம்விற்றுதீர்த்து வெற்றிபெற்று விட்டால்பதினாறுதலைமுறை படுத்துக்கிட்டு சாப்பிடலாம்னு அரசியல் வாதிககள் எல்லாம் நம்பிக்கையோடு கிளம்பி இருக்கும் இந்த நேரத்தில்''பொய் சொல்வது பாவம்'ன்னு ஹதிஸ்களை சொல்லி அவர்கள் பொலப்பை கெடுப்பது உங்களுக்கே நல்லா இருக்கா? வாணாம் உட்டுடுங்க! கட்சிஜெயிச்சா 'பொய்மொழி'' மாநாடு நடத்துறதா தேர்தல் அறிக்கைலேவேறே சொல்லி புட்டாங்கோ!
ReplyDeleteஏப்ரல் பதிவு!
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் ஹைர்.
யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஇந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்கள், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.
ஜஸக்கல்லாஹ் ஹைரா..