Wednesday, April 23, 2014

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 35

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முந்தைய பதிவில் பொய் சொல்லுவதால் ஏற்படும் தீமைகள், பொய் சொல்ல வேண்டிய சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டினோம், அவைகளில் இருந்து படிப்பினைபெற்றோம். இந்த வாரம் பிறர் மானம், நலம் பேணுதல் தொடர்பாக பார்க்கலாம்.

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. (திருக்குர்ஆன் 4:139)

மேல் சொன்ன திருக்குர்ஆன் வசனம் குறிப்பாக தேர்தல் பேரம் பேசிவிட்டு அரசியல் சாக்கடைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூழ்கி இருக்கும் சமுதாய இயக்க சகோதரர்களுக்காக நினைவூட்டலாக இந்த பதிவு.

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் “மார்க்கம் என்பது நன்மையை நாடுவது” என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: “யாருக்கு?”நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் நாடுபவராக இருந்தால்தான், தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்புவார். ஆனால் இது மிகவும் சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டுமென்பது ஈமானின் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். மார்க்கம் என்பதே “பிறர் நலன் பேணல்’ என்ற அடிப்படை, முஸ்லிமின் உணர்வுடன் ஒன்றிவிட்டால் இதைச் செயல்படுத்துவது சிரமமல்ல.

முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமிடம் வெளிப்படுத்த வேண்டிய இயற்கைப் பண்பாகும். இதற்கு முரணாக ஒர் உண்மை முஸ்லிமால் செயல்பட இயலாது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் வாழும் முஸ்லிம் சுயநலம், அகம்பாவம் போன்ற கீழ்த்தரமான காரியங்களில் இறங்க மாட்டார். ஆம்! பாத்திரத்தில் இருப்பதுதான் அகப்பையில் வரும்! மலர்கள் நறுமணத்தைத்தான் பரப்பும்! செழுமையான பூமி நல்ல மரங்களைத்தான் வளர்க்கும்!

உண்மை முஸ்லிம், நண்பர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், உபகாரம் செய்வதையும் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நட்பின் நெருக்கத்தை பலப்படுத்தும் விதமாக உபகாரத்தை தனது இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் வெளிப்படுத்திய நற்பண்புகளே அவர்களை உலக மனிதர்களில் சிறந்தவர்களாக்கியது.

இஸ்லாம் கற்றுக் கொடுத்த நேர்மை, உபகாரம், பிறர் நலம் பேணுதல், நேசம் கொள்வது என்பது போன்ற பண்புகளின் நோக்கம் என்னவெனில் ஒருவர் தனது முஸ்லீம் சகோதரருக்கு எல்லா நிலைகளிலும் உதவி செய்தாக வேண்டும். அதாவது தனது முஸ்லீம் சகோதரர் சத்தியப் பாதையில் இருந்தால் அவருக்கு உதவி, ஒத்தாசை செய்து அவரைப் பலப்படுத்த வேண்டும். அவர் அசத்தியத்தில் இருந்தால் அவரைத் தடுத்து மேலும் அவரை அசத்தியத்தின் பக்கம் இட்டுச் செல்லவிடாமல் பாதுகாத்து, அவருக்கு நல்வழி காட்டி, வழிகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதையே பின்வரும் நபிமொழி நமக்கு போதிக்கிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் தனது சகோதரருக்கு உதவி செய்யட்டும்! அவர் அநீதியிழைப்பவராக, அல்லது அநீதியிழைக்கப்படுபவராக இருந்தாலும் சரியே. அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், அவரைத் தடுக்கட்டும். அது அவருக்கு உதவியாகும். அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு உதவி செய்யட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

முன்மாதிரியாகத் திகழும் உண்மை முஸ்லிம், தனது சகோதரர்களுடன் மென்மையாகவும், அவர்களை நேசிப்பவராகவும், அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் உயர் பண்புகளை வலியுறுத்தும் இஸ்லாமின் கண்ணோட்டத்தை ஆய்வு செய்வார்.

நபி (ஸல்) அவர்களுடனே இருந்து அவர்களுக்கு ஊழியம் செய்து வந்த அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட “அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி) நெற்றி மண்ணில் படட்டும் என்பதற்கு பொருள் அதிகமாக ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதாகும்.

மேல் குறிப்பிட்ட நபிமொழியில் இருந்து நபி(ஸல்) அவர்களின் உயரிய நற்பண்புகளில் பிறரை கண்டிக்கும்போதும்கூட கண்ணியத்தை கடைபிடித்தார்கள் என்று பார்க்கிறோம்.

சுப்ஹானல்லாஹ்! இன்று பார்க்கிறோம், ஒரு முஸ்லீம் என்றோ செய்த தவறை அல்லது அவர் மேல் சொல்லப்பட்ட அவதூறுகளை வைத்துக் கொண்டு, வருடக் கணக்கில் நேட்டீஸ் அடித்து வைத்துக் கொண்டு அவர் யார் தெரியுமா? இவர் யார் தெரியுமா? அவன் பொம்புல பொறுக்கி? அவன் கஞ்சா வியாபாரி? அவன் ஒரு ஒட்டு பீடி? நம்ம ஜமாத்துக்கு எதிரி? என்று குர்ஆன் சுன்னா என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் சகோதரர்கள்கூட நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த நற்பண்புகளை மறந்து, கண்ணியமற்ற முறையில் பேசுவது அன்றாட வாடிக்கையாகிவிட்டது.

அவர்களின் அந்த ஈனச் செயலுக்கு முட்டு கொடுக்கும்விதமாக, வரம்பு மீறலுக்கு வரம்பு மீறல் என்று ஒரிரு குர்ஆன் வசனத்தை தங்களுக்கு சாதகமாக்கி விளக்கம் கொடுத்து, தங்களின் தவறை குர்ஆன் வசனத்தை வைத்து நியாப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அல்லாஹு அக்பர். அல்லாஹ் நம் எல்லோரையும் அந்த வழிகேட்டு கூட்டத்திலிருந்து பாதுகாப்பானாக.

ஒவ்வொருவரின் உள்ளத்தில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, அவனுடைய உள்ளத்தில் இறை நம்பிக்கை எப்படி உள்ளது என்பதை எந்த ஒரு மனிதனை வைத்தும் நாம் எடை பேட்டுவிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அரசியல் பொதுவாழ்வில் எந்த ஒரு இஹ்லாசான (இறையச்சமுள்ள) முஸ்லீமால் தன்னுடைய கொள்கையின் அடிப்படியில் 100% வாழ்வதை வெளி உலகத்தின் பார்வைக்கு காட்டுவது என்பது மிக மிக கடினம். ஏன் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களாலும், தங்களின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் கட்சிகளுக்கு ஆதரவு தேர்தல் பிரச்சாரம் போன்றவைகளினால், 100% தான் ஏற்றிருக்கும் குர்ஆன் சுன்னா வழியில் உலக பார்வைக்கு வாழ்ந்து காட்டுவது என்பது கடினம். 

அரசியல் மேடைகள், பிரச்சாரங்களில் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள், மனிதன் என்கிற அடிப்படையில் ஏற்படுகின்ற திணிக்கப்படும் தவறுகள். பிற மதத்தவர் சார்ந்திருக்கும் அமைப்பு கட்சிகாரர்கள் நம்முடைய கொள்கையை புரியாதவர்கள் அல்லது அக்கொள்கைக்கு உடன்படாதவர்கள் அல்லது நம்முடைய கொள்கைக்கு எதிரானவர்கள் அல்லது அவர்கள் கொள்கையை திணிப்பவர்கள் என்று ஒரு கடின சூழலில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இங்கு நாம் முக்கியமாக கருத வேண்டியது என்னவென்றால், தற்செயலாக நடைபெறும் தவறாக இருந்தாலும், தான் செய்தது தவறு என்று வருந்துபவனே ஓர் உண்மை முஸ்லீமாக இருப்பான். இல்லவே இல்லை தான் செய்தது தவறே இல்லை என்று வரட்டு வாதத்தை வைத்து செய்த தவறை நியாப்படுத்தும் விதமாக, அவன் அப்படி செய்யவில்லையா, இவன் இப்படி செய்யவில்லையா, அவனைப் போய் கேள், இவனை போய் கேள் என்று எதிர் கேள்விகள் கேட்டு தப்பிப்பவனை என்ன நிலையில் நாம் வைப்பது? சுப்ஹானல்லாஹ்.

உண்மை முஸ்லிம் தனது முஸ்லீம் சகோதரன் அநீதம் செய்பவனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனைப் பிரியமாட்டார். ஏனெனில் தான் விரும்புவதையே தமது முஸ்லீம் சகோதரனுக்கும் விரும்ப வேண்டுமென்கிறது இஸ்லாம். எந்தவொரு முஸ்லிமும் தான் பிறருக்கு அநீதி இழைப்பதையோ பிறர் தனக்கு அநீதி இழைப்பதையோ விரும்பமாட்டார். அவ்வாறே தனது சகோதரருக்கும் இதை விரும்பமாட்டார். அதனால் சகோதரன் அநீதிக்குள்ளாக்கப்பட்டால் அவருடைய தோளோடு ஒட்டி நின்று அநியாயத்தைத் தடுத்து உதவி செய்வார். அநீதி செய்பவராக இருந்தாலும் தோளோடு ஒட்டி நின்று அவரை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பார். இதுதான் உண்மையான உபகாரம். இதுதான் தூய்மையான பிறர் நலம் பேணுதலாகும். இதுதான் ஒரு முஸ்லிம் எங்கும், எப்போதும் மேற்கொள்ள வேண்டிய அழகிய பண்பாகும்.

இன்றைய காலகட்டத்தில், குர்ஆன் ஹதீஸ் என்று பேசுபவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு என்னவென்றால், முதல் நிலை – “மார்க்க அடிப்படையில் பெரும்பாலான சந்தர்பங்கள் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. உதாரணமாக மன்னிக்கும் தன்மை, கண்ணியமாக பேசுவது, பிறர் நலம் நாடுதல், நம் நற்செயல்கள் மூலம் பிறரை திருத்துவது போன்றவைகள்.” இரண்டாம் நிலை – “மார்க்க அடிப்படையில் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் எடுக்கப்படவேண்டிய நிலைகள். உதாரணமாக – தன்னை திட்டிவனை திட்டுவது போன்றவைகள்” ஆனால் மிக உயர்ந்த நிலையான முதன் நிலையை நம் சகோதரர்கள் எடுப்பதை காட்டிலும் இரண்டாம் நிலையையே தங்களுடைய நிலைகளை சாதகமாக்கிக் கொள்ள எடுத்துக் கொள்கிறார்கள். இது தான் எதார்த்தம்!.

“வார்த்தைகளில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வார்த்தை, வழிகாட்டுதலில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்” என்று ஒவ்வொரு மார்க்க சொற்பொழிவுகளிலும் வார்த்தை அளவில் சில சொல்லுவதற்கு மட்டுமே என்றாகிவிட்ட்து. அது நடைமுறையில் செயல்படுத்துவது எல்லா சந்தர்பத்திலும் தான் என்பதை மறந்தவர்களாகவே பெரும்பாலன முஸ்லீம்களை காணுகிறோம். அன்றைய காலகட்டதில் “வார்த்தைகளில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வார்த்தை, வழிகாட்டுதலில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்” என்பதை உத்தம நபியின் உன்னத தோழர்களும், அவர்கள் பின்னால் வாழ்ந்த இமாம்களும் பின்பற்றி வாழ்ந்து மரணித்துள்ளார்கள் என்பதற்கு லட்சக்கணக்கான ஆதாரங்களே சாட்சி.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்..
M.தாஜுதீன்
நன்றி: www.readislam.net www.tamililquran.com

9 comments:

  1. வரம்பு மீறுவதில் தீவிரவாதிகளாக இருப்போர்களுக்கு பாடம் தரும் நல்ல பதிவு!

    ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  2. ////உண்மை முஸ்லிம், நண்பர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், உபகாரம் செய்வதையும் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நட்பின் நெருக்கத்தை பலப்படுத்தும் விதமாக உபகாரத்தை தனது இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் வெளிப்படுத்திய நற்பண்புகளே அவர்களை உலக மனிதர்களில் சிறந்தவர்களாக்கியது////

    இது ஒரு மானிட வசந்தம்

    மிக அருமையான நினைவூட்டகள் இந்த பதிவு முழுதும் காணப்படுகிறன அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  3. தன் னை திட்டியவனை மட்டுமல்ல தன்னை திட்டாதவனையும் கூட திட்டுவதில் மனிதனுக்கு தனியே ஒரு சுகம்உண்டு.ஏனெனில் மனிதனே பேசதெரிந்த பிராணி அதனால் அவன் பேசியே ஆகவேண்டும்.

    ReplyDelete
  4. 'வரம்பு மீறினால் வரம்பு மீறுங்கள்’ என்ற காஃபிர்கள் விஷயத்தில் புனித மாதங்களில் போர் புரிவது சம்பந்தமாக இறங்கிய குரான் ஆயத் இன்று சகோதர முஸ்லிமின் கன்ணிம், மானம், அந்தரங்க வாழ்கை ஆகியவற்றை பாழ்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது தமிழ் முஸ்லிம் உலகின் துர்பாக்கியம். சகோதர முஸ்லிமின் மானம், மரியாதை மக்கா நகரின் கண்ணியத்திற்கு ஒப்பானதாகும் என்ற அல்லாஹ்வின் தூதரின் இறுதிப் பேருரையை வசதியாக மறைத்துவிடுகிறார்கள்.

    [’வரம்பு மீறினால்....’ (2:194) மற்றும் ’அநீதம் இழைக்கப்பட்டவனைதவிர...’ (4:148) என்ற குரான் ஆயத்துகள் இன்று தமிழக தவ்ஹீதிகளால் எவ்வளவு கொச்சையாக சித்தரிக்கப்படுகிறது என்பதையும், அதற்கான சரியான விளக்கம் என்ன என்று அறியவும் தஃப்சீர் இப்னு கஸீரை பார்க்கவும்.

    2:194----http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=230

    4:148----http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=589&Itemid=59

    இது சம்பந்தமாக நீண்ட ஆக்கம் ஒன்று தமிழில் எழுதும் எண்ணம் எனக்கு உண்டு. சேஹ் இக்பால் மதனி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் உதவியையும் இதற்காக நான் நாடியுள்ளேன்.}

    -அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
    ஷார்ஜா, UAE.

    ReplyDelete
  5. வரம்பு மீறுதல் தொடர்பாக விளக்கமான பதிவு அவசியம்தான். காரணம், "அதே அளவு" வரம்பு மீறலாம் என்று விவாதிக்கும் சகோதரர்கள் அறிவதில்லை அவர்கள் அளவுக்கு அதிகமாகவே வரம்பு மீறுகின்றனர் என்று.

    ReplyDelete
  6. வரம்பு மீறல் (ஆகுமென்ற) போர்வையில் குளிர் காயும் கூட்டம் சொல்லுவது வரம்பு மீறல் உங்களுக்கு அவர்களுக்கு அதற்கு வரம்பு இல்லை !

    சிலகாலங்களுக்கு முன்னர் ஒரு கட்சியில் மகளிர் அணி அர்ச்சனை போருக்கு கிளம்பியது, கேடுகெட்ட வார்த்தைகளைக் கயாண்டு அசிங்கமான செய்கைகள் செய்து வந்ததனை நினைவு படுத்துகிறது இந்த வகைக் கூட்டம் !

    அன்றைய அவர்களின் செயலும் இன்றைய இவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் வித்தியாசம் இல்லை !

    ReplyDelete
  7. யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்,

    இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரா...

    யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

    ReplyDelete
  9. //சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல்//

    சகோதரரே, இது தான் சத்தியப் பாதை. மற்ற அனைத்து கூட்டங்களும், கொள்கைகளும் தெளிவான வழிகேடுகள். இதை தான் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ‘மா அன அலைஹி வ அஸ்ஹாபிஹில் யவ்ம்’ (நானும் எனது தோழர்களும் இப்போது எந்த வழியின் மீது இருக்கிறோமோ அவ்வழி) என்று 73 கூட்டங்கள் தொடர்பான பிரபல்யமான ஹதீஸில் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

    அல்லாஹ் கூறுகிறான் “யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருடன் முரண்பட்டு, முஃமிணீன்கள் வழி அல்லாததை பின்பற்றுகின்றானோ அவன் செல்லும் வழியிலேயே அவனை செல்லவிட்டு,அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம்.செல்லுமிடத்தில் அது மிக கெட்டதாகும். (அல்குர்'ஆண் 4:115)


    குறிப்பு : இந்த வசனம் இறங்கும்போது," முஃமிணீன்கள்" என்பவர்கள் நபி( ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் )அவர்களோடு, சஹாபாக்கள் மட்டும்தான் இருந்தனர். அவர்கள் செல்லாத வழிகளில் சென்று நரகத்தில் நுழையும் அபாயத்திலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

    மேலும் அல்லாஹ் கூறுகிறான் “முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்” (9:100)

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.