Saturday, April 12, 2014

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்

தொடர் -22 

திராவிட இயக்க வரலாற்றை சொல்லுபவர்கள் ஒரு சில நெகிழ்வான நிகழ்ச்சிகளை சொல்லிக் காட்டுவார்கள். அவை யாவை என்றால் காஞ்சிபுரத்தில் அண்ணா என்று அழைக்கப்பட்ட அண்ணாத்துரை அவர்கள், மாற்றுக் கட்சியினரால் பலவாறு இழிவு படுத்திப் பேசப்பட்ட காலத்தில் நடந்த ஒரு நிகழ்வும் ஆகும் . இப்படிப் படித்தவர்களை- பண்புள்ளவர்கள் என்று ஒப்புக் கொள்ளப் பட்டவர்களை இழிவு படுத்திப் பேசுவது மற்றும் எழுதுவது என்பது இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இருந்தே இருக்கிறது. இன்று இணையங்கள் கையிலிருப்பதால் எழுதுபவர்கள் முகமூடி போட்டு எழுதுவதால் கொஞ்சம் தூக்கலாகத் தெரிகிறது அவ்வளவுதான். சரி, விஷயத்துக்கு வரலாம். 

காஞ்சிபுரத்தில் அண்ணாவின் வீட்டுக்கு எதிரே, அண்ணாவின் பிறப்பைக் கேவலமாக எழுதி சில அன்றைய தறுதலைகள் ஒரு போர்டு வைத்திருந்தார்களாம். அண்ணாவின் கவனத்துக்கு இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப் பட்டபோது அந்த போர்டை அகற்ற வேண்டாம் அது அப்படியே இருக்கட்டும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டாராம். அன்று மாலை, அந்தி சாய்ந்த நேரம் அந்த போர்டுக்கு அருகில் ஒரு அரிக்கேன் விளக்கு வைக்கப்பட்டு இருந்தது. அந்த அரிக்கேன் விளக்கில் உபயம்: அண்ணாத்துரை என்று எழுதப் பட்டு இருந்தது. இருட்டாகிவிட்டாலும் என்னை பற்றி கேவலாமாக் எழுதியவர்களின் இலட்சணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அண்ணாவே அங்கு விளக்கை வைத்தார். மறுநாள் அந்த போர்டு எங்கே போனது என்று எவருக்கும் தெரியவில்லை.

இதே போல் பெரியார் இராமசாமி நாயக்கர் அவர்கள் ஒரு பிராமண எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கும்போது அவரை நோக்கி ஒரு செருப்பு வீசப்பட்டதாம். செருப்பைக் கையில் வாங்கிப் பார்த்த பெரியார், “ இந்த ஒரு செருப்பை வைத்து நான் என்ன செய்ய முடியும்? ஆகவே செருப்பை வீசிய நண்பர்கள் இதன் ஜோடியையும் வீசும்படி கேட்டுக் கொள்கிறேன் “ என்றாராம். எதிரிகளை கையாள்வதற்காக இவர்கள் கையாண்ட இந்த முறைகள் எதிரிகளைத் தலை குனிய வைத்தன என்று சொல்வார்கள். இதை இங்கே குறிப்பிடக் காரணம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மக்களை போராட்டத்துக்கு தயாராக்கி உரையாற்றி கொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெருமகன் மீதும் அவரை, இரத்தக் காயப்படுத்தும் நோக்கத்தில் ஒரு கல் வீசப்பட்டது. அந்தக் கல் பின்னர் என்னவானது என்று காட்டத்தான். 

பாவலர் சதாவதானி செய்குத் தம்பி

சதாவதானம் என்றால் என்ன என்று தெரியாமலேயே நம்மில் பலர் இருக்கிறோம். இதை எழுதும் நான் கூட இந்த அற்புத அறிவின் ஆற்றலை அண்மையில்தான் பாவலர் அவர்களின் வாரிசு ஒருவர் மூலம் கேட்டு அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சதம் என்றால் நூறு என்று தெண்டுல்கரின் சகாப்தத்தில் வாழும் நமக்குத் தெரியாமல் இருக்காது. இப்படி ஒரே நேரத்தில் நூறு செயல்களை செய்து காட்டுவதே சதாவதானம். சிலர் எட்டு வகை செயல்களை செய்வார்கள் அவர்களுக்கு அஷ்டாவதானிகள் என்று பெயர். அதேபோல் பத்துவகை செயல்களை செய்பவர்களுக்கு தசாவதானி என்று பெயர். 

இறைவன் சிலருக்கு சில நல்ல அருட்களை வழங்கி இருக்கிறான். சிலர் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்’ சிலர் படிக்காமலேயே மேதைகளாக வாழ்கிறார்கள்; சிலர் பல சிக்கலான வழக்குகளுக்கு அனைவரும் ஏற்ருக் கொள்ளும்படி தீர்வு சொல்கிறார்கள் . இவை யாவும் இறைவன் வழங்கிய அருளே. இந்த வகையான இறைவனின் அருட்கொடை அவர்களது து ஆ மூலமும் வழங்கப் பட்டு இருக்கலாம். அல்லது இறையருளால் அமைந்த அறிவுக் கூர்மையாலும் அமைக்கப்பட்டு இருக்கலாம். இப்படிப் பட்ட அதீத அறிவின் தன்மையை, அறிவியல் ரீதியாக சிலர் ஆறாவது அறிவுக்கு மேல் உள்ள ஏழாம் அறிவு என்றும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய “இறையருள்” என்கிற வார்த்தை சிலருக்கு ஏன் அலர்ஜியாக இருக்கிறது என்று தெரியவில்லை.

இந்த வாரம் இந்த தலைப்பில் காட்டப் போகும் பாவலர் சதாவதானி செய்குத் தம்பி அவர்கள் இப்படி ஒரு அபரிதமான அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். சதாவதானம் என்கிற இந்தக் கலையில் சிறந்து விளங்கினார்கள். பாவலர் அவர்கள் ஒரு பாடல் புனையும் கவிஞர் என்பதையும் தாண்டி இந்த சதாவதானக் கலையில் பல பாராட்டுதல்களைப் பெற்றார்கள். தனது புகழை இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்தார்கள் என்பதை சுட்டும் முன்பு பாவலர் அவர்களைப் பற்றியும் அந்த கலையைப் பற்றியும் சில வரிகள். பாவலரைப் பற்றி எழுதுவதற்கு வேறு சந்தர்ப்பங்கள் வாய்க்கிறதோ இல்லையோ, அதனால் அவரைப் பற்றி சில் செய்திகளை இங்கேயே பதிவிட விரும்புகிறேன். தலைப்புக்கு தொடர்பில்லாவிட்டாலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டிய செய்திகள் இவை. பாவலர் பற்றிய இத்தகைய செய்திகளை பதிவு செய்த பின்னர் சுதந்திர வேள்விக்கு பாவலர் செய்த பணிகளை குறிப்பிடுகிறேன். 

சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து கொள்வார்களாம் . அவரைச் சுற்றி சில சீடர்கள் அல்லது நண்பர்கள் அமர்ந்து இருப்பார்கள். ஒருவர் கையில் நெல்மணிகள் இருக்கும்; மற்றவர் கையில் உளுந்து இருக்கும்; இன்னொருவர் கையில் சிறு கற்கள் இருக்கும்; ஏனைய சிலரின் கைகளிலோ பச்சைப் பயறு, மொச்சைப் பயறு போன்ற தானியங்கள் இருக்கும். ஒருவர் கையில் ஓசை தரும் மணியை வைத்து அடித்துக் கொண்டு இருப்பார். இன்னொருவர் மல்லிகைப் பூவை ஒவ்வொன்றாக எடுத்துப் பாவலர் மீது வீசிக் கொண்டு இருப்பார். கண்ணை மூடிக் கொண்டு பாவலர் அமர்ந்திருக்க, மற்றவர்களும் அதேபோல் தங்களின் கைகளில் இருக்கும் பொருட்களை எடுத்து எறிந்து கொண்டிருப்பார்கள். ஒரு நிலையில் அனைவரும் வீசுவதை நிறுத்திவிட்டு இதுவரை வீசப்பட்ட நெல்மணிகள் எத்தனை ? மல்லிகைப் பூக்கள் எத்தனை? மணி ஒலித்தது எத்தனை முறை? என்று கேட்டால் பாவலர் அவர்கள் அவற்றின் எண்ணிக்கையை சரியாக சொல்லிவிடுவார். இது பல முறை நிருபிக்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் தாண்டி கூட்டத்தில் யாராவது, வெண்பாவுக்கு ஈற்றடி கொடுப்பார்கள். தளை தட்டாமல் தனக்கு தரப்பட்ட ஈற்றடிக்கு வெண்பா யாத்து- இயற்றித் தரும் ஆற்றலும் பாவலரின் அதாவதனங்களில் ஒன்று. அதே போல் பலர் பல்துறை கேள்விகள் கேட்பார்கள் . அனைத்துக்கும் சரியான பதிலைத் தரும் ஆற்றலைப் பாவலர் அவர்கள் பெற்று இருந்தார்கள். சங்க இலக்கியத்தில் இருந்து ஒரு பாடலின் கடைசி வரியை யாராவது பாடினால் அந்தப் பாடல் முழுவதையும் தொடக்கத்திலிருந்து பாவலர் பாடிவிடுவாராம். பல ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த ஒரு தேதியைச் சொன்னால், அந்த தேதியின் கிழமை முதலிய முழு விபரங்களையும் தரும் ஆற்றல் பாவலருக்கு இருந்தது. அதேபோல் கிழமையைச் சொன்னால், தேதியைச் சொல்லும் ஆற்றலும் பாவலாரால் பலமுறை நிருபிக்கப் பட்டது. சென்னை விக்டோரியாஹாலில் பலரின் முன்னிலையில் பாவலரின் இந்தத் திறமைகள் பரிசோதிக்கப்பட்டு சதாவதானி என்கிற பட்டம் அவருக்கு வழங்கப் பட்டது. 

இவை மட்டுமா? சீறாப் புராணத்துக்கு உரை எழுதினார் திரு கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக்கோவை, நாகைக் கோவை என ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார்.

ஒருமுறை சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கிருத்துவம் பிடித்த தமிழ்ப் புலவர், பாவலரை பாட்டில் சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஒரு வில்லங்கமான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார். “ துருக்கனுக்கு ராமன் துணை “ என்பதுதான் ஈற்றடி. 

செய்குத் தம்பிப் பாவலர் அவர்கள் ஒரு முஸ்லிம். முஸ்லிம்களை துருக்கர்கள் என்றும் அழைப்பார்கள். அப்படி துருக்கருக்கு, அதாவது முஸ்லிம்களுக்கு இந்துக்களின் கடவுளான ராமன் எப்படி துணையாவான் என்று எண்ணி பாவலரை சிக்கலில் மாட்டிவிட வேண்டுமென்று இந்த ஈற்றடியைக் கொடுத்தார். முஸ்லிம் ஆன பாவலர் அவர்கள், இந்த ஈற்றடிக்கு எப்படித்தான் பாடல் எழுதப் போகிறார் என்று சுற்றி இருந்த சபையினர் திகைத்துப் போய் காத்திருந்தனர். ஆனால் இந்த செப்படி வித்தை பாவலரின் திறமைக்கு முன் தவிடுபொடியானது. பாவலர் இறுதி அடிக்கு முந்தைய அடியில் ராமனது தம்பிகளான ‘பரத, லட்சுமண, சத்’ என்று வருமாறு அமைத்து யாத்தார். இந்த யாப்பின் மூலம் ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்ற கடைசி அடி ‘சத்துருக்கனுக்கு ராமன் துணை’ என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. வில்லங்கம் செய்ய நினைத்தவரின் முகத்தில் அசடு ஆயிரம் லிட்டர் வழிந்தது. பாவலருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. 

செய்குத் தம்பிப் பாவலர் இந்தச் சாதனைகளை நிகழ்த்தி 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதைப் போற்றும் விதமாக தமிழக அரசு கலைஞர் முதல்வராக இருந்தபோது இவர் எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கி உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது. எம்ஜியார் முதல்வராக இருந்த போது பாவலர் பிறந்த கோட்டாறு அருகில் உள்ள இடலக்குடியில் ஒரு மணி மண்டபம் கட்டித் திறந்தார். அத்துடன் அங்கிருந்த அரசுப் பள்ளிக்கும் பாவலரின் பெயர் சூட்டப்பட்டது. 

இப்போது, இவ்வளவு புகழும் திறமையும் பெற்ற பாவலர், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆற்றிய பணிகளைப் பார்க்கலாம். 

பேச்சாற்றல் மிகுந்த பாவலர் அவர்கள் , தனது பேச்சாற்றலை சுதந்திரப் போராட்டத்தின் பல பரிணாமங்களுக்கு மக்களைத் தயார்படுத்த பயன்படுத்தினார். 1920 –ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி , எதிர்ப்பு இயக்கம் தொடங்கியபோது மஸ்லின் துணிகள் என்ற அந்நிய ஆடைகளை களைந்து எறிந்துவிட்டுக் கதராடை அணியத் தொடங்கினார். அந்நாளில் நடைபெற்ற எழுச்சிக் கூட்டங்கள் பாவலரின் தலைமையிலேயே நடைபெற்றன. பாவலரின் சந்தவரி மிக்க, சங்கீத இயல்புடைய பாடல்களை முணுமுணுக்காத குமரி மாவட்ட மக்களது உதடுகளே இல்லை எனும் அளவுக்கு ஜனரஞ்சகமாக சுதந்திர உணர்வுகளை ஊட்டினார்.

ஒருமுறை மயிலாடி என்கிற ஊரில் பாவலர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார். அன்றைய ஆங்கில அரசின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அடிவருடிகளைப் பற்றி தாக்கிப் பேசிக் கொண்டு இருக்கும் போது கைக்கூலிகளில் யாரோ பாவலரை காயப்படுத்தும் நோக்கத்தில் ஒரு கல்லை வீசினர். பேசிக் கொண்டிருந்த பாவலரின் முன் அந்தக் கல் குறி தவறி விழுகிறது. அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் பாவலரோ அந்தக் கல்லை எடுத்துக் கூட்டத்தினரிடம் காட்டிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார் இப்படி , 

“இது என் மேல் எறியப்பட்ட கல் அல்ல; நாட்டின் விடுதலைக்குப் போராடும் காங்கிரசின் மேல் எரியப்பட்ட கல் ; காந்தியின் மேல் எறியப்பட்ட கல் ; கண்ணாடிப் பெட்டியில் வைத்து காலமெல்லாம் காப்பாற்றப்பட வேண்டிய கல்; இந்தக் கல்லின் மீது ஒரு முத்திரை குத்தப்படும் அந்த முத்திரை இது பாவலர் செய்குத்தம்பியின் மீது விழுந்த கல் என்கிற வரலாற்று முத்திரை “ என்று பேசினார். அத்துடன் அந்தக் கல் கூட்டத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது . ஒரு பெருந்தொகைக்கு ஒரு பெருந்தகை ஏலத்தில் எடுத்தார். அந்த நிதி காங்கிரஸ் கட்சியின் போராட்ட நிதியில் சேர்க்கப் பட்டது. 

அந்த நாளில் குமரி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மக்களை வழிநடத்திய டாக்டர் இ. எம் .நாயுடு, சிவதாணுப் பிள்ளை, தோழர் பா. ஜீவானந்தம் ஆகிய முன்னணித்தலைவர்கள் அனைவருமே பாவலரையே தங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது பாவலரின் சிறப்புக்கு சிறப்பு. 

“திலகர் சுயராஜ் நிதி “ என்ற ஒரு கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி திரட்டலுக்கு மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துத் தலைவர்களும் பாவலர் தலைமையில் தெருத்தெருவாக பாட்டுப் பாடி துண்டேந்தி நிதி திரட்டினார்கள் என்பதும் வரலாறு. 

அந்நியத் துணி எரிப்புப் போராட்டத்தில் பாவலரின் பங்கு அளப்பரியது. இந்த உணர்வு பூர்வமான போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு பொதுக் கூட்டம் நடை பெற்றது. அதில் பேசிய பாவலர் பேசிய பேச்சால் உந்தப் பட்டவர்கள் அங்கேயே தங்களது உடைகளை கழற்றி வீசி தீயிலிட்டு எரித்தார்கள் என்பதும் கூட்டத்துக்காக அருகாமை கிராமங்களில் இருந்து வந்தவர்கள் உள்ளாடைகளுடன் நடந்து சென்று தங்களின் ஊர்களை அடைந்தார்கள் என்பது உணர்வுமிக்க வரலாற்றின் ஒரு பகுதி . இத்தகைய செயலைத் தூண்டிய பாவலரின் பேச்சின் பகுதி இதோ :

"கூறை என்றால் திருமணத்துக்குரிய புத்தம் புது ஆடை .அதற்கு கைத்தறித் துணிகளையே எடுப்பது நமது வழக்கம். மனிதர்கள் இறந்தால் அப்போதும் அவர்கள் மீது புது ஆடைகளையே போர்த்துவார்கள். இப்படி இறந்தவர்கள் மீது போர்த்துவதற்கு எடுக்கப்படும் துணி மில் துணிகளாகும். ஆகவே மண ஆடையாக கைத்தறித்துணியையும் பிண ஆடையாக மில்துணியையும் அணிவார்கள். எனவே, இங்கே கூடி இருக்கும் நீங்கள் எல்லாம் மணமக்கள் ஆகப் போகிறீர்களா? பிணமக்கள் ஆகப் போகிறீர்களா ? மணமக்கள் என்பது உங்கள் பதிலாக இருக்குமானால் நீங்கள் அணிய வேண்டியது கதராடைதான்" என்று பேசினார். 

பாவலரின் இந்தப் பேச்சு கூட்டத்தினரின் உணர்வைத் தூண்டி விட்டு , உடன் விளைவையும் ஏற்படுத்தியது. கூட்டத்தினரில் அந்நியத் துணிகளை அணிந்திருந்த அனைவரும் தங்களின் துணிகளைக் களைந்து வீசினர். பதிலுக்குக் கதராடையை அந்த இடத்திலேயே அணிந்தனர். இப்படிக் களைந்து வீசப்பட்ட அன்னியத்துணிகள் ஒரு மலை போலக் குவிந்தன. அந்தத் துணிகள் மீது தீமூட்டபப்ட்டது; அந்த இடம் தேசிய உணர்வுகளின் சங்கமமாக பரிணமித்தது.

இதேபோல் காந்தியடிகளின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் பாவலர் கலந்து கொண்டதுடன் கள்ளுண்ணும் பழக்கத்தை எதிர்த்து மதுவிலக்குப் பிரச்சாரத்துக்கு ஏற்ப ஒரு பாடலையும் யாத்தார். கள்ளுக்கடை மறியலுக்கு ஊர்வலமாக செல்பவர்கள் உரத்த குரலில் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டே செல்வார்களாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமான கள்ளுக்கடை மறியலின் மறக்க முடியாத அங்கமான பாவலர் எழுதிப்பாடிய பாடல் இதோ :

கள்ளைக் குடியாதே ஐயா! நீ 
கள்ளைக்குடியாதே!
கொள்ளை வியாதிமிகும் 
கொண்ட அறிவு அழியும் 
சள்ளை மலிந்த பல
சங்கடங்கள் சூழ்ந்துவரும் 
மானம் அழிவாகும் 
மதிப்புக் குறைவாகும் 
ஈனம் மலிவாகும் 
இடரோ பெருகிவிடும் 
உற்ற பொருள் அழியும் 
ஊரார் பகை வளரும்
குற்றமி ருந்து பலகூட ஒழுக்கமுறும்
பெண்டுபிள்ளை தாயென்ற 
பேதமறியாமற்
கண்டபடித் திட்டிக் 
கலகமிட நாட்டமிகும் 
பித்தம் பிடித்த தலையும் 
பேயப்பட்டி போலுமெத்த
சித்தத்தியக் கேற்றி 
சீரழிவில் ஆழ்த்திவிடும் 
தந்தை தாய் சுற்றமெலாஞ் 
சஞ்சலத்திலாழ வெகு
நிந்தைத் துயருத்தி
நிருமூலமாக்கிவிடும் 
கண் சுழல வாய் உளறக் 
கைகால் தடுமாற 
மண் சுழல விண் சுழல 
மாய மயக்கம் அளிக்கும் 
கள்ளைக் குடியாதே ஐயா! நீ 
கள்ளைக்குடியாதே!" - என்பதே அந்தப் பாடல். 

இந்தப் பாடலை இன்றைக்கும் குடியால் சீரழிந்து கொண்டிருக்கும் இந்த நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் மொழிபெயர்த்து எழுதிவைக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் சுந்தர கீதமாக இருந்த கள்ளுக் கடை மறியல் – அதற்கான காரணங்கள்- சுதந்திர இந்தியாவில் அர்த்தமற்றுப் போய்விட்டதை சந்துக்கு சந்து பொந்துக்குப் பொந்து இந்த சாக்கடை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பது சான்று பகர்கின்றன. இதற்கா இத்தனை தியாகங்கள் என்று இதயங்கள் கேள்விகளை எழுப்புகின்றன. “ பேய் ஆளவந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் “ என்பதே இதற்கு விடை. 

இன்ஷா அல்லாஹ் இன்னொரு பெருமகனின் பெயரோடு சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி

11 comments:

  1. இத்தனை பேர் உழைத்தும் பயன் இல்லை,காட்டிக் கொடுக்கும் மோடி வகையறாக்களுக்குத்‌தான் நல்ல பெயர்.நன்றி கெட்ட இந்தியா

    ReplyDelete
  2. பல்வேறு களப்பணிகளுக்கு மத்தியிலும் பன்முக தொடர் எழுத்து சாதவதனம் செய்யும் எங்கள் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு எல்லாம் வல்ல ரஹ்மான் நீடித்த ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்கவும் இன்னும் காக்கா அவர்கள் மூலம் சமுதாயம் பயனையும் விழிப்புணர்வையும் பெறவேண்டும் என நெஞ்சார பிரார்த்திக்கிறோம்.

    இன்னுமொரு கள்ளுக்கடை போராட்டத்தை நடத்திட இன்னும் பல பாவலர்கள் வரவேண்டும்.

    மாற்றுமத சமூகத்தை சார்ந்த இளம் பிஞ்சுகளும், தொண்டு கிழங்களும், கல்லூரி மாணவிகளும் தனி மனிதர்களாய் துணிவுடன் அரசாங்கத்தை எதிர்த்து போராடும் நிலையில், முன்னிலையில் நின்று களமாட வேண்டிய நம் சொந்தங்கள் எங்கே? குறைந்தபட்சம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என அனைவரையும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. //இன்னு மொருகள்ளுக்கடை போராட்டத்தை நடத்திட....//சகோதரர் adirai ameen சொன்னது// இப் ''போதை ''யபாவலர்கள் யெல்லாம்'' பாட்டால்போட்டால் தான் பாட்டு வரும்'' என்றுசொல்கிறார்களே!

    ReplyDelete
  4. பல்வேறு களப்பணிகளுக்கு மத்தியிலும் பன்முக தொடர் எழுத்து சாதவதனம் செய்யும் எங்கள் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு எல்லாம் வல்ல ரஹ்மான் நீடித்த ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்கவும் இன்னும் காக்கா அவர்கள் மூலம் சமுதாயம் பயனையும் விழிப்புணர்வையும் பெறவேண்டும் என நெஞ்சார பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  5. நம்மவர்களில் தியாகத் திருமகன் ஒருவரை அறியத்தந்தமைக்கு நன்றி காக்கா.

    ReplyDelete
  6. அறிஞர் அண்ணாதுரை அவர்களும்
    பெரியார் இராமசாமி நாயக்கர் அவர்களும் அவர்கள் எதிரிகளின் சூழ்ச்சியை எப்படி வெற்றி கொண்டார்கள் என்று தாங்கள் சுட்டிக்காட்டிய செய்திகளை நமக்கு ஒரு படிப்பினையாக நாம் எடுத்துகொள்ளலாம்

    காக்க இது போன்று இன்னும் எத்தனையோ அந்த அறிஞர்களிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் அதில் உங்கள் சிந்தனைக்கு எட்டியவைகளை என்னை போன்றவர்களுக்கு அடிக்கடி எடுத்து சொல்லுங்கள் அது சமைய சந்தர்பங்களில் நமக்கு உபயோகப்படும்

    ReplyDelete
  7. ///“இது என் மேல் எறியப்பட்ட கல் அல்ல; நாட்டின் விடுதலைக்குப் போராடும் காங்கிரசின் மேல் எரியப்பட்ட கல் ; காந்தியின் மேல் எறியப்பட்ட கல் ; கண்ணாடிப் பெட்டியில் வைத்து காலமெல்லாம் காப்பாற்றப்பட வேண்டிய கல்; இந்தக் கல்லின் மீது ஒரு முத்திரை குத்தப்படும் அந்த முத்திரை இது பாவலர் செய்குத்தம்பியின் மீது விழுந்த கல் என்கிற வரலாற்று முத்திரை “ என்று பேசினார். அத்துடன் அந்தக் கல் கூட்டத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது . ஒரு பெருந்தொகைக்கு ஒரு பெருந்தகை ஏலத்தில் எடுத்தார். அந்த நிதி காங்கிரஸ் கட்சியின் போராட்ட நிதியில் சேர்க்கப் பட்டது. ////

    ஆஹா என்ன அழகான அரசியல் சூப்பர் கல்லெரிந்தவன் தலையை பிச்சிக்கிட்டு ஏன்டா எரிந்தோம் என்று பைத்தியம் பிடித்து போஅயி இருப்பான்.

    இந்த மாதிரி டெக்னிக் ஏதாவது உங்களிடம் இருக்கா இப்பொழுது நிறைய தேவைப்படுகின்றது

    ReplyDelete
  8. ////பெண்டுபிள்ளை தாயென்ற
    பேதமறியாமற்
    கண்டபடித் திட்டிக்
    கலகமிட நாட்டமிகும்
    பித்தம் பிடித்த தலையும்
    பேயப்பட்டி போலுமெத்த
    சித்தத்தியக் கேற்றி
    சீரழிவில் ஆழ்த்திவிடும் ////

    ///கண் சுழல வாய் உளறக்
    கைகால் தடுமாற
    மண் சுழல விண் சுழல
    கள்ளைக் குடியாதே ஐயா! நீ
    கள்ளைக்குடியாதே!" - ///

    எல்லாமே மிக தெளிவான வார்த்தைகள்
    அப்படியே போர்டு எழுதி ஒவ்வொரு
    தெரு முனையிலும் வைக்கலாம்

    ReplyDelete
  9. தம்பி மன்சூர் அவர்களுக்கு,

    அண்மையில் மதுவின் தீமையைப் பற்றி சகோதரர் இப்னு அப்துல் ராஜாக அவர்கள் ஒரு பதிவினைத் தந்தார்கள். பாவலர் அவர்களின் எளிமையான அதே நேரம் " நச் " என்று இருக்கும் இந்தப் பாடலை நமது ஊரில் ஒரு பத்து இடங்களிலாவது வைக்க வேண்டும்.

    யாராவது நல்ல மனமுள்ள மனிதர்கள் முயல்வார்களா?

    ReplyDelete
  10. சகோதரர் இப்னு அப்துல் ரஜாக தம்பி அஹமது அமீன் மற்றும் தம்பி கவிஞர் சபீர் ஆகியோரின் கருத்திடலுக்கு நன்றி.

    பாவலர் அவர்களைப் பற்றி இன்னொரு தகவலையும் பகிர நினைக்கிறேன்.

    அண்ணா முதல்வரான பிறகு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் என்று அறியப்பட்ட பலருக்கு சென்னை நகர மெரீனா கடற்கரையில் சிலைகள் வைத்தார்கள். அதைக் கலைஞர் இப்படி கவிதையாக வடித்தார்

    "அந்த அன்னைக் குலம்
    போற்றுதற்கு ஔவைக்கோர் சிலை;
    அறம் வளர்த்த கண்ணகிகோர் சிலை;
    வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
    வணங்காமுடிப் பாரதிதாசருக்கம் சிலை;
    வீரமா முனிவருக்கும் சிலை
    கால்டுவெல்போப்புக்கும் சிலை;
    கம்பர்க்கும் சிலை
    தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
    திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
    பத்து சிலை வைத்ததினால் - அண்ணன்
    தமிழின் பால் வைத்துள்ள
    பற்றுதலை உலகறிய;
    அந்த அண்ணனுக்கோர் சிலை
    சென்னையிலே வைத்த போது. . ."

    என்று அந்தக் கவிதை வரும். இவர்களுள் தமிழ்த் தொண்டாற்றிய பாவலருக்கும் ஒரு சில வைக்க வேண்டுமென்று அது பற்றி காயிதே மில்லத் அவர்களிடம் அண்ணா கேட்டார். ஆனால் சிலை வணக்கம் செய்த அரபு நாட்டிலே சிலைகளை உடைத்த வரலாறு இஸ்லாமிய வரலாறு என்று சுட்டிக் காட்டிய காயிதே மில்லத் அவர்கள் , பாவலருக்கு சிலை வைக்க கடுமையாக் எதிர்ப்புத் தெரிவித்து மறுத்துவிட்டார்கள்.

    அதனால் அதற்குப் பகரமாக பாவலருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டி அதில் பாவலரின் படைப்புகளை வைக்க வேண்டுமென்று கேட்டார்கள் . அந்தப் பணி இன்று வரை தலைநகர் சென்னையில் நடைபெறவில்லை.

    ReplyDelete
  11. "என் தந்தையார் படிக்கும் பருவத்திலிருந்தே விடுதலைப் போராட்ட வீரர். கராச்சிப் பட்டே கல்யாணப் புடவையாக இருந்த எங்கள் குடும்பத்தில், கதர்ப்புடவையை வாங்கி என் தாயாருக்குத் திருமணச் சீராக வழங்கினார்களாம். முரட்டுக் கதரின் இறுக்கம் ஆயினும், விருப்பத்தோடு அணிந்த நெருக்கம் பற்றி என் தாயார் குறிப்பிடுவார்கள்."

    'அதிரை அறிஞர்' புலவர் பஷீர் அவர்களின் கூற்று.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.