Tuesday, May 06, 2014

புன்சிரிப்பு... உன்சிரிப்பு!

(பேரன்புப் பேரா-II) :) :) :)


உன்னை நான்
தூக்கி எடுத்த கணம்
நீ
இறக்கி வைத்ததோ
என்னை அழுத்திய
கவலைகளின் கனம்

கவலை கஷ்டம்
கழிவிரக்கம்
மன உளைச்சல்
என
எல்லா ரோகங்களுக்கும்
ஒரே மருந்தென
நீ தந்ததோ
பொக்கை வாய்ப்
புன்சிரிப்பு -புது வகை
உன்சிரிப்பு

மன அழுத்தம் முற்றி
வாழ்க்கை வெறுத்தோருக்கோ
நோய்விட்டுப் போகிறது -நீ
வாய்விட்டுச் சிரிக்க

பற்கள் இல்லாத உன் சிரிப்பில்
முட்கள் இல்லாத
ரோஜா நீ

தொடர் சிரிப்பால்
தோரணம் கட்ட -நீ
காரணம் காண்பதில்லை

என்
புதுச் சட்டையில்
சிறுநீர் அடித்துகொண்டே
கண்களைப் பார்த்து நீ சிரிக்க
நான்
கழுவ மறந்து உன்னைத்
தழுவிக் கொள்கிறேன்

முக்கனிச் சுவையை
உன்னை
முத்தமிட்டு ருசித்தேன்
பிள்ளைக்கனி உன்
சப்தங்களை ரசித்தேன்

உன் சொற்களைவிட
சிரிப்புதான்
தெளிவாய்ப் புரிகிறது

எங்கெங்கோ தேடி
ஏமாந்து போன எனக்கு
மடியிலேயே வந்து வாய்த்த
விடியல் நீ

முகம் பார்க்கும்
உன் பார்வை
அகம் வரை பாய்வதை
அறிவாயா நீ
அது
இகம் வாழ்தலின்
உச்சகட்ட மகிழ்வென்பதை
உணர்வாயா நீ

என்
நெஞ்சு உதைத்து
நீ
எம்பிக் குதித்ததும்;
அஞ்சு விரல்களால்
என்
முகத்தைப் பிடித்ததும்
அவதானித்த நான்
விளையாட்டுப் பொருட்களுடனான
உன்
ஈடுபாட்டைக் கண்டு
உன் கையிலொரு
பொம்மையாகிவிடவே
பெரிதும் விழைகிறேன்

உன்னை
விட்டு வர இயலாமற் போனதால்
அங்கு உன்னிடம்
என்னை விட்டு வந்திருக்கிறேன்

இனி
நாட்பட்டக் கவலைகளை
என்னிடம் சொல்பவர்க்கெல்லாம்
பரிகாரமாக
நான் சொல்ல இருப்பது:
"பேரனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

32 comments:

  1. Assalamu Alaikkum

    Dear brother Mr. Abushahruk,

    Nice poem on innocent and beautiful laughing of a grand child.

    Almost every activity of a child really soothing and make us forgeting all our concerns and tensions. The child finds no boundary in relation, love and curiosity to learn by experimenting. Its all because of uncurrupted, clean and fresh soul.

    Simply the best and enjoyable lines.
    Keep it up.

    Thanks and best regards

    B.Ahamed Ameen from Dubai.

    ReplyDelete
  2. 1000 வாட்ஸ் பேரன் ”பளிச்” சிரிப்பும் கவிக்காக்காவின் மனதில் உள்ள மகிழ்ச்சியை காட்டும் சிரிப்பும், அன்பொழுக எழுதப்பட்ட கவிமழையும் உள்ளத்தை மகிழ்ச்சியடைய செய்து மாஷா அல்லாஹ் சொல்ல வைக்கின்றன..அல்லாஹ் அருள் புரியட்டும்

    ReplyDelete
  3. //உன் சொற்களைவிட
    சிரிப்புதான்
    தெளிவாய்ப் புரிகிறது// ஆஹா!

    //உன் கையிலொரு
    பொம்மையாகிவிடவே
    பெரிதும் விழைகிறேன்// அற்புதம்.

    //நாட்பட்டக் கவலைகளை
    என்னிடம் சொல்பவர்க்கெல்லாம்
    பரிகாரமாக
    நான் சொல்ல இருப்பது:
    "பேரனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்!// வாவ்.


    ரசித்தவை . ருசித்தவை.

    பிள்ளைகளை - அதிலும் பேரப்பிள்ளைகளை - கொஞ்சி மகிழும் சுகத்தின் விலை பத்துக் கோடி திர்ஹமாக இருக்குமா? இல்லை அதைவிடக் கூடுதல். விலைமதிப்பற்ற சுகமது.

    இரண்டுநாள் வருகைக்கே இந்தப் பேரன் இப்படி தனது பல் இல்லாத வாய்ச சிரிப்பால் ஒரு கவிதை மழையை வரவழைத்து இருக்கிறான் என்றால் இன்னும் சில நாட்கள் இவன் கூட இருந்தால் ஒரு காப்பியமே கவிதையாகப் பிறந்து இருக்குமென்பதையே என் கருத்தாகப் பதிகிறேன்.

    பேரன் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அம்மாவை பெரியம்மாவாக பார்க்கலாம்
    பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அப்பாவே குழந்தையாக தெரிவார் !
    என்பது இந்த படத்தை
    வைத்துமா புரியவில்லை
    அம்மா – அன்பை அன்பாக காட்டுவார்
    அப்பா – அன்பை கண்டிப்பாக காட்டுவார்

    ReplyDelete
  6. பேரனே
    உன்னைப் பற்றி நான் அறியேன் !
    என்னைப் பற்றி நீ அறியாய் !
    இப்பொது நாம் சிரிப்பை
    மட்டும் பகிர்ந்துகொள்வோம்

    ReplyDelete
  7. சபீர்
    வித்திட்டாய் ! வேரிட்டாய் !
    கிளை விட்டாய் !
    வாழ்க வளர்க

    ReplyDelete
  8. பேரனுக்கு சிறப்பான கவிமழை!
    பேரன் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ் !

    மழலைகள்
    மேதைகள்
    மமதையற்றவர்கள்
    மனதை மயக்குபவர்கள்

    ReplyDelete
  10. அப்பாவின் பல்ஸ்(செட்டை)
    அசைத்துப் பார்க்க வைத்த பேரன்பு பேரன் ! :)

    உலகெங்கு கிடைக்கும் கோபால் பல்பொடியா தேய்க்கிறிய ?

    ReplyDelete
  11. எல்லாமே அற்புதம்
    அனைத்தும் பிடித்த வரிகள்
    அதிலும் காப்பி பேஸ்டான வரிகள்

    //உன் சொற்களைவிட
    சிரிப்புதான்
    தெளிவாய்ப் புரிகிறது//

    இன்றைய இயக்க மயக்கத்தினரின் சொற்கள் அனைத்தும் முற்களாக போனது பரிதாபத்துக்குரியதே !

    ReplyDelete
  12. //பற்கள் இல்லாத உன் சிரிப்பில்
    முட்கள் இல்லாத
    ரோஜா நீ//


    //எங்கெங்கோ தேடி
    ஏமாந்து போன எனக்கு
    மடியிலேயே வந்து வாய்த்த
    விடியல் நீ//

    சபாஷ் கவிதை உனக்கு
    இது ஷஹ்பாஸ்!

    ReplyDelete
  13. Award winning " BLACK & WHITE " photo of the year

    ReplyDelete
  14. //பல் இல்லா சிரிப்பில் முள் இல்லா ரோஜாநீ!// முள்லிருந்து குத்தினாலும் அது வலியல்ல! வாய்ப்பு !மணம்வீசும்வாய் பூ ! வாழ்வின் சுகமான சுமைபேரன்/பேத்திகளே! நாம் அவர்களுக்கு தாத்தா . குனியவைத்து குதிரை ஏறி' தா!தா!' என்று விரட்டுவதால் தாத்தா ஆனோம்! ஒரு கைவிரல் எண்ணிக்கைக்கு தாத்தா வான இந்தசீனியர் தாத்தாவின் மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள்! ஆமீன்!

    ReplyDelete
  15. காக்கா உங்கள் பேரனே ஒரு கவிதை,அந்தக் கவிதைக்குள் இன்னொனறு,மாஷா அல்லாஹ் அதுவும் அருமை

    ReplyDelete
  16. பிள்ளைகளின் மழலை மொழியை கேட்க முடியாதவர்களாகவும் - புன் சிரிப்பபை யும் - அவர்கள் செய்யும் சேட்டைகளையும் கண்டு அனுபவிக்க முடியாமல் பலர் அடிமைகளாய் வளைகுடா நாடுகளில் .

    பணம் மட்டும் எல்லாம் தந்துவிடாது.

    பாசத்தை, அனுப்பும் பணத்தாலும் பகிரும் புகைப்படங்களாலும் மட்டும் அனுபவிக்க இயலாது.

    பிள்ளைகள் இப்போது உதிக்கும் உதையை வாங்குவது ஒரு ஆனந்தம் . இப்போது அவர்கள் துப்பும் எச்சில் அமுதம்.
    செய்யும் சேட்டைகள் சொர்க்கத்தின் மாதிரிகள்.

    இந்த சுகம் போனால் வராது பொழுது போனால் கிடைக்காது.

    ReplyDelete
  17. உன்னை நான்
    தூக்கி எடுத்த கணம்
    நீ
    இறக்கி வைத்ததோ
    என்னை அழுத்திய
    கவலைகளின் கனம்
    -----------------------------------
    Nice code;)

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும். தாமதத்திற்கு மன்னிக்கவும்!கவிதையைப்பற்றி கவியரசு,குழந்தையாகி குதூகலத்துடன் கலக்கியிருக்கும் கவிதை மொத்தமும் "கொள்ளை அழகு!

    ReplyDelete
  19. //பற்கள் இல்லாத உன் சிரிப்பில்
    முட்கள் இல்லாத
    ரோஜா நீ//
    --------------------
    //எங்கெங்கோ தேடி
    ஏமாந்து போன எனக்கு
    மடியிலேயே வந்து வாய்த்த
    விடியல் நீ//
    ----------------------------
    //முகம் பார்க்கும்
    உன் பார்வை
    அகம் வரை பாய்வதை
    அறிவாயா நீ
    அது
    இகம் வாழ்தலின்
    உச்சகட்ட மகிழ்வென்பதை
    உணர்வாயா நீ//
    --------------------------------------
    //இனி
    நாட்பட்டக் கவலைகளை
    என்னிடம் சொல்பவர்க்கெல்லாம்
    பரிகாரமாக
    நான் சொல்ல இருப்பது:
    "பேரனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்//
    --------------------------------------------------------------
    தங்க குவியல்!

    ReplyDelete
  20. பல் முளைத்த குழந்தை கையில்
    பல் முளைக்காத குழந்தை

    ReplyDelete
  21. உன்னை நான்
    தூக்கி எடுத்த கணம்
    நீ
    இறக்கி வைத்ததோ
    என்னை அழுத்திய
    கவலைகளின் கனம்
    ---------------------------------------------------
    அஸ்ஸலாமு அலைக்கும். இந்த கு(பி)ஞ்சு பறவையின் இறகு பட்டு ,கனமான சோகம் இறக்கை முளைத்து பறந்து விட்டது!இருவரும் கனம் பொருந்திய கனவான்கள் தான்!அதனால்தான் வான் நோக்கி பறந்தது கவலை!

    ReplyDelete
  22. கவலை கஷ்டம்
    கழிவிரக்கம்
    மன உளைச்சல்
    என
    எல்லா ரோகங்களுக்கும்
    ஒரே மருந்தென
    நீ தந்ததோ
    பொக்கை வாய்ப்
    புன்சிரிப்பு -புது வகை
    உன்சிரிப்பு
    ----------------------------------------
    எல்லாப்பினிகளுக்கும் மயில் பீலியாய் உன் தடவல் இதமாயும் மருந்தாயும் இருந்தது பேரா!இதுக்குப்பேர்தான் அதிசய நிகழ்வோ?

    ReplyDelete
  23. எங்கெங்கோ தேடி
    ஏமாந்து போன எனக்கு
    மடியிலேயே வந்து வாய்த்த
    விடியல் நீ
    ---------------------------------------
    அடடே! பின்றார்பா!அப்பா!அப்பப்பா! என்னமாய் பின்றார்??? கவிதை மயம்!

    ReplyDelete
  24. முகம் பார்க்கும்
    உன் பார்வை
    அகம் வரை பாய்வதை
    அறிவாயா நீ
    அது
    இகம் வாழ்தலின்
    உச்சகட்ட மகிழ்வென்பதை
    உணர்வாயா நீ
    -------------------------------------------------
    சுகமான வருடல் இந்தவரிகள். நிஜம் தாங்கிய வார்தைகள்! தாக சோகம் தீர வந்த கருனை மழையாய் இந்த மழலை! அதன் நிழலை கையில் ஏந்தினாலும் ,இதமாய் ஒரு ஆனந்தம்!

    ReplyDelete
  25. உன்னை
    விட்டு வர இயலாமற் போனதால்
    அங்கு உன்னிடம்
    என்னை விட்டு வந்திருக்கிறேன்
    -----------------------------------------------------------
    உன்னிடம் என்னை விட்டு வந்தாலும் என் இதயத்தில் உன்னையும் சுமந்தே வந்திருக்கிறேன்! அதில் நித்தம் நீ தவழும் சுகத்தை ஒரு தவம் போல் பாவித்து மயிர்சிலிர்க்கும் ஒருவித உணர்வோடு என் தினங்களின் கைகளில் நான் சிறைபடுகிறேன். இப்படிக்கு எப்படி எழுதினாலும் இன்பம் தரும் உன்னை என்னி வா(ழு)டும் அப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  26. மற்றற்ற மகிழ்ச்சியில் நீ சிரிக்க
    மழலைச்சிரிப்பில் உன் பேரன்
    சுற்றமும் மயங்கிடும் இச்சிரிப்பில்
    சூழ்ச்சியும் தகர்ந்திடும் மனமகிழ்வில்
    பேரனே தாத்தாவின் நிழலாகும்
    பேசிமகிழ மீதிகால உறவாகும்
    கற்ப்பிப்பான் உனக்கொருநாள்-
    நற்ப்பாடம்
    காண்பிப்பான் நற்ப்பேரன் நானென்று

    ReplyDelete
  27. Assalamu Alaikkum

    Dear brother Maisa

    Nice complimentary poem for the grand son.

    Please correct the typos. Can be read as follows.

    //மற்றற்ற - மட்டற்ற

    //கற்ப்பிப்பான் - கற்பிப்பான்

    //நற்ப்பாடம் - நற்பாடம்

    //நற்ப்பேரன் -நற்பேரன்

    Thanks and best regards,

    B. Ahamed Ameen from Dubai.

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி. சந்தோஷத்தைப் பகிர்வதால் சந்தோஷம் யாவருக்கும் தொற்றும் என்னும் எண்ணத்திலேயே இந்தப் பதிவு இங்கு பதியப்பட்டது. மேலும் இது யோசித்து, மூளையை கசக்கி எழுதியதல்ல; தோன்றியதை அப்படியே எழுதியது

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம். எல்லோரும் தாத்தாவாகக் கடவது. 

    ReplyDelete
  29. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! . எல்லோரும் கொள்ளுத் தாத்தாவாகக் கடவது. 

    ReplyDelete
  30. Ebrahim Ansari சொன்னது…

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! . எல்லோரும் கொள்ளுத் தாத்தாவாகக் கடவது. 
    ---------------------------------------------
    அஸ்ஸலாமுஅலைக்கும். சரியான லொள்ளுதாத்தா!

    ReplyDelete
  31. அலைக்குமுஸ் சலாம்.

    தம்பி கிரவுன்! ஏற்கிறேன்.

    பேரர்களைப் பெற்றவர்கள் அவர்களோடு லொள்ளுதான் செய்ய வேண்டி இருக்கிறது. --------மகிழ்வை மனதில் தாங்கி.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.