Tuesday, May 08, 2018

எழுத்துப் பிழைகள்! - 04 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]

எழுத்துப் பிழைகள் – 4 நற்றமிழ் தேர்க!
‘மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்’ என்ற அடிப்படையில், சென்னை ‘இலக்கியச் சோலை’ வெளியீடாக வந்த ‘நல்ல தமிழ் எழுதுவோம்!’ என்ற எனது சிறிய நூலைப் பற்றி உங்களுள் பலர் அறிந்திருக்கலாம்.

பள்ளி நாள்களில் / நாட்களில் தமிழாசிரியர், புலவர் கி.கு. அப்துல் வகாப், பின்னர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர், கல்லூரிக் கல்வியின்போது ‘இறையருட்கவிமணி’ போன்ற சான்றோரின் தொடர்பாலும், நற்றமிழ் நூல்களின் வாசிப்பினாலும் வளர்த்துக்கொண்ட மொழியறிவே என் மூலதனம்.

எனது பதின்மப் பருவத்திலேயே, நற்றமிழ் மீது – அதாவது வடமொழி கலவாத தனித்தமிழ் மீது ஒரு காதல். புலவர் அப்துல் வகாபின் வகுப்பென்றால், அங்கே தனித்தமிழ் கோலோச்சும். “சுத்தமென்று சொல்லாதே! தூய்மை என்று சொல்லடா!” என்று எச்சரிப்பார். போதும், சுயபுராணம்! இல்லையா?

முதலில், இயலுமானவரையில், தூய தமிழில், பிறமொழிக் கலப்பின்றி எழுதப் பழகவேண்டும். வேற்று மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால்தான், தான் கூறவந்த செய்தி, படிப்பவர்களுக்கு முழுமையாக விளங்கும் என்றெண்ணினால், அரிதாக அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஏனெனில், தொல்காப்பியம் இப்படி ஓர் இலக்கணத்தை வகுத்துள்ளது:

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் 
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி 
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ 
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.”
- சொல்லதிகாரம் (எச்சவியல்)

தாய்த் தமிழில் கருத்துப் பரிமாற்றமே சிறப்புடைத்து. வாசிப்போருக்கு இலகுபடுத்துவதற்காக, அரிதினும் அரிதாய்ப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தலாம். தனித்தமிழ், என்றும் சிறப்பு. தேர்ந்த தமிழறிஞர்களின் நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பது கொண்டு, மொழியறிவு தானே வளரும்.

வேற்று மொழியைக் களைந்து எழுதவேண்டுமாயின், ஓரளவேனும் அம்மொழி பற்றிய அறிவு வேண்டும் என்று நான் சொன்னால், பலருக்கு வியப்பாயிருக்கும். தனித்தமிழ் வித்தகர்களான மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்றோர் வடமொழியறிவும் பெற்றிருந்தனர் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்த போது, SSLCவரை நானும் இந்தி படித்தவன்தான்! இன்னொரு மொழி கற்றுக்கொள்வதில் தவறில்லை. தாய்மொழியில் பிழையின்றி எழுதப் பழகுவது மிக்க நன்று; பாராட்டத் தக்கது.

தொடரும்...

No comments:

Post a Comment

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.