எழுத்துப் பிழைகள் – 6 ஒவ்வாத ஒற்றுப் பிழை
சென்ற பதிவில் சில ஒற்றுப் பிழைகளையும், அவற்றைக் களைய வழி காட்டும் சில இலக்கண வரம்புகளையும் பற்றி அறிந்தோம். பெரும்பாலோர் இதில் கவனம் செலுத்தாமல், மீண்டும் மீண்டும் பிழையாக எழுதி வருவதால், இதனை இன்னும் விரிவாக விளக்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு.
தமிழிலக்கணப் பகுப்புகளில், ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்ற விதியொன்று உண்டு. இதைக் கண்டு அஞ்சற்க! ஒவ்வொரு சொல்லாக இதனை விளக்குவோம். ‘ஈறு’ என்பது, ஒரு சொல்லின் இறுதி எழுத்தைக் குறிக்கும். ‘கெட்ட’ என்பது, இல்லாமல் போன என்பதன் குறிப்பாகும். ‘எதிர்மறை’ என்பது, எதிரான என்று பொருள்படும். ‘பெயரெச்சம்’ என்பது, ஒரு பெயர்ச்சொல் முடியாமல் எஞ்சி நிற்பதைக் குறிக்கும். இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். இதன் எடுத்துக்காட்டுகளாக – அறியாத, ஆகாத, இல்லாத, ஈடில்லாத, உணர்வில்லாத, ஓயாத, காணாத போன்ற எதிர்மறைச் சொற்களைக் காட்டலாம்.
இடையில் ஒரு சிறு விளக்கம். அதாவது, இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வருகின்றன. அவற்றுள் முதல் சொல்லை ‘நிலைமொழி’ என்று, அதற்கடுத்து வரும் சொல்லை, ‘வருமொழி’ என்றும் பகுக்கும் தமிழிலக்கணம்.
மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளை நிலைமொழிகளாகக் கொண்டால், அவற்றை அடுத்து வரும் வருமொழிகள் க, ச, த, ப, ஆகிய வல்லின எழுத்துகளைக் கொண்டு தொடங்கினால், நிலைமொழியின் இறுதியில் ஒற்று மிகும். அப்பாடா...! இவ்வளவு விளக்கமா? ஆம்; வேண்டும்போது விளக்கித்தான் ஆகவேண்டும்.
மேற்கண்ட ‘அறியாத, ஆகாத, இல்லாத, ஈடில்லாத, உணர்வில்லாத, ஓயாத, காணாத’ எனும் சொற்களை, ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாக மாற்றி எழுத வேண்டுமாயின், அறியா, ஆகா, இல்லா, ஈடில்லா, உணர்வில்லா, ஓயா, காணா என்று ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகவும் எழுதலாம். அவ்வாறாயின், அவற்றுக்குப் பின் இருக்கும் வருமொழி மேற்கண்டபடி, க, ச, த, ப, ஆகிய வல்லின எழுத்துகளைக் கொண்டு தொடங்குமாயின், நிலைமொழியின் இறுதியில் ஒற்றெழுத்து மிகும். இவ்வாறு:
அறியாப் பிள்ளை, ஆகாச் செயல், இல்லாத் துணை, ஓயாப் பணி.
ஈறு கெடாமல் நிலைமொழி முழுமையாக இருந்தால், ஒற்று சேர்த்து எழுதுவது பெருங்குற்றம்!
அறியாதப் பிள்ளை, ஆகாதச் செயல், இல்லாதத் துணை, ஓயாதப் பணி என்றெல்லாம் எழுதினால், என்னைப் போன்ற வாசகன் ஏற்றுக்கொள்ள மாட்டான்! ஆனால், நம்மில் மிகப்பலர் இப்படித்தான் எழுதுகின்றனர்! திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுவே எனது வேட்கை.
No comments:
Post a Comment
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.