கணினித் தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்க அடிக்கல் நாட்டிய மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான், அதிரையின் மைந்தன் தேனீ உமர்தம்பி அவர்கள்!
வாழும் நாட்களில் வீசிய வசந்தம் அவரின் இறப்புக்குப் பின்னர்தான் பாரில் பரவி வியாபித்தது.
சிறு வயதிலிருந்தே அதிகமதிகம் அவர்களோடு நெருக்கமாகவும் பிரியமாகவும் பழகியவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் அதற்கான சிரத்தையும் சிலிர்க்க வைக்கும் என்பதே. அதோடு, அதன் பின்னர் கிடைக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதோடு இருக்காமல் எப்படி அதனை எட்டிப் பிடித்தார்கள் என்று விளக்கவும் செய்வார்கள்.
1994ம் வருடம் அமீரகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் இணையம் பரவ ஆரம்பித்த காலங்களில் தனது வீட்டில் இணணயத் தொடர்பைப் பெற்று அங்கிருந்து கொண்டு அவரது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அவரவர்களின் அலுவலக கணினிக்கு ஏற்படும் பிணிகளுக்கு மருத்துவம் செய்வார்கள்.
இன்றைய கால கட்டத்தின் அசுர வளர்ச்சியின் பலனாய் கணினிக்குள் ஊடுருவ எத்தனையோ மென்பொருள்கள் வந்து விட்டன, ஆனால் அப்போது இருந்தச் சூழல் முற்றிலும் வேறுமட்டுல்ல தொழில்நுட்பத்தில் எல்லாமே புதிது.
2002 வருடம் துபாயிலிருந்து விடைபெற்று ஊருக்குச் சென்ற இரண்டொரு மாதங்களிலேயே அதிரையில் இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் (துபாய், மஸ்கட்) கணினிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் காய்ச்சலை சரிபார்க்கவும் செய்தார்கள் அதோடு அதன் மேம்பாட்டையும் சீரமைத்து தந்தார்கள்.
அதிரைச் சகோதரர்களின் கணினி (தமிழ்) தொழில் நுட்ப வளர்ச்சியில் மட்டுமல்ல இணைய கணினித் தமிழ் வளர்ச்சியில் அவர்களின் பங்கும் போற்றத்தக்கதாக அமைந்திருப்பது சந்தோஷப்படக்கூடிய விஷயம்.
இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்தது, அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தேனீ உமர்தம்பி அவர்கள் 17 வருடங்களுக்கு முன்னால் இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இங்குச் சார்ஜாவில் நடந்து கொண்டிருக்கும்போது அவர்களின் (துபாய்) வீட்டுக் கணினியில் போட்டுக் காட்டிய புள்ளி விபரங்களும் கிராஃபிக்ஸும் இன்றும் அப்படியே பசுமையாக நினைவுக்கு வந்ததை மறைக்க முடியவில்லை.
இப்போதைய வளர்ச்சியில் இருக்கும் மென்பொருள்களின் உதவியால் அப்படியே மைதானத்தில் பார்க்கும் வீரர்களின் செயல்களைச் செயற்கையாகக் காணொளி போன்று செய்ய முடியும் ஆனால் அன்றே அவர்கள் ஒற்றை வரிக் கோட்டில் (single line draw) வண்ணங்களில் செய்து காட்டினார்கள்.
அதன் தொடர்ச்சியாக அவர்களை நினைவுகூறலாமே என்று மனதுக்குள் எண்ணம் தோன்றியது அதன் விளைவே இந்த ஒலிப்பேழை காணொளிப் பதிவு உங்களனைவரின் பார்வைக்காகவும் நினைவில் நிழலாடவும்.
No comments:
Post a Comment
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.