Saturday, November 09, 2013

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 5


வாஸ்கோடகாமா

எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ இந்தியாவுக்குள் வந்தார்கள். அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால், வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான். இந்தியாவுக்கு வர கடல் வழி ஒன்றைக் கண்டுபிடிக்க விரும்பினார். அவ்வளவுதான்! ஆனால் வரும் வழியில் அவன் செய்த அக்கிரமம் வரலாற்றில் மறைக்கப் பட்ட அக்கிரமம். 

வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ஆனாலும், அவரும் இந்தியாவுக்கு ஒரு கடல் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான், இடறி விழுந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ஆகவே, இந்தியாவுக்கு வர போர்ச்சுகீசியர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். வாஸ்கோடகாமா மூன்று முறை போர்ச்சுகலில் இருந்து இந்தியாவின் மேற்குக் கரையோரம் உள்ள கோழிக்கோடு அல்லது கள்ளிக்கோட்டைக்கு கடல் வழியாகவே வந்திருக்கிறார். ஆனால், அவர் முதன்முறையாக அந்தக் கடல் வழியைக் கண்டுபிடித்த பயண வரலாறே வரலாற்று ஆசிரியர்களால் வரையப் பட்டுள்ளது.  

போர்ச்சுகலில் இருந்து கிளம்பி ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரமாகவே கீழே இறங்கி செயின்ட் ஹெலனா வழியாக ஆப்பிரிக்காவின் கீழ்க் கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு மீண்டும் மேல் நோக்கிச் சென்று திடீரென்று கிழக்கில் திரும்பி கள்ளிக்கோட்டையை அடைந்திருக்கிறார். 1497&ம் வருட காலகட்டத்தை கவனத்தில் கொள்ளும்போது மிகவும் கஷ்டமான கண்டுபிடிப்புதான் இது. எந்த நேரத்திலும் வழி தவறி மேற்கே போய்விடக்கூடிய அபாயம்; இதன் நடுவில் மாதக் கணக்காக வேற்று முகத்தையே பார்க்காமல், போகும் முடிவும் தெரியாமல் சில மாலுமிகளும், சில கப்பல் பணியாளர்களும் திரும்பத் தன் நாட்டுக்கே போய்விட வேண்டும் என்று கலகம் செய்தது; ஆங்காங்கே கரையில் இறங்கிய இடத்தில் அபாயம், உணவுப் பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை, புயல் சீற்றத்தின் பயமுறுத்தல் என்று எண்ணிலடங்காத சோதனையைக் கடந்து கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததே சாதனைதான் என்றெல்லாம் மட்டுமே வரலாறு சொல்கிறது. 

ஆனால் வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வர நேர்ந்த சூழ்நிலை – அவரது அரக்கத்தனமான நோக்கம்- வரும் வழியில் கடலிலேயே அவன் செய்த படுகொலைகள்- அடித்த கப்பல் கொள்ளைகள் ஆகியவற்றை வரலாறு பாட நூல்களில் குறிப்பிடவில்லை. காரணம் இவனது அட்டூழியத்தால் பாதிக்கப் பட்டோர் முஸ்லிம்கள். வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டை என்கிற கோழிக் கோட்டில் கால் பதித்தபோது அவனது கரங்களில் இருந்த இரத்தக் கரை  முஸ்லிம்களுடையது. இது ஒரு கண்ணீர் கதை . அந்நியரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்டம் நடத்திய ஒரு முஸ்லிம் மாவீரனின் கதை அதைத்தொடர்ந்து வருகிறது.  வாருங்கள் மறைக்கப் பட்ட வரலாற்றைக் கண்டு வரலாம். 

கோழிக்கோட்டைச் சேர்ந்த முஸ்லிம் வணிகர் ஒருவரின் வாணிகக் கப்பல் தனது வியாபாரத்தை அரபு தேசங்களில் முடித்துவிட்டு நிறைந்த செல்வங்களுடன் தாயகம் நோக்கித்  திரும்பிக் கொண்டு இருந்தது.  அந்தக் கப்பலில் , சுமார்  நானூறு முஸ்லிம்கள் தங்களின் புனித ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு கூடவே பயணம் செய்துவந்தார்கள். இவர்களில் ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் குழந்தைகளும் கூடவே இருந்தனர். அனைவரது கரங்களிலும் தஸ்பீஹ் மணி மாலை தவழ்ந்து கொண்டு இருந்தது.  அவர்களது இதழ்கள் இறைவனின் நாமத்தை திக்ர் செய்து கொண்டு இருந்தன. 

அவர்கள் வந்திறங்கவேண்டிய  கோழிக் கோட்டின் கடற்கரை நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில், கொள்ளைக்கார போர்ச்சுகீசியரின் கப்பல்கள் ஹஜ் பயணிகள் வந்துகொண்டிருந்த கப்பலை சுற்றிச் சூழ்ந்தன. ஹஜ் பயணிகள் வந்த கப்பலை கொள்ளை அடித்து, அந்தக் கப்பலை மூழ்கடிக்கும்படி போர்த்துக்கீசியத் தளபதி உத்தரவிட்டான். கப்பலில் பயணம் செய்த கப்பலின் உரிமையாளரும் எகிப்து நாட்டின் அன்றைய அதிபரின் தூதருமாகிய ஜாபர் பைக் , போர்த்துகீசிய தளபதிக்கு ஒரு தூது விட்டு கப்பலில் பயணம் செய்த நிராயுதபாணிகளான  ஹாஜிகளின்  உயிருக்காக  கோரிக்கைவிடுத்து மன்றாடினார்.  

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான புனிதமான ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வயதானவர்களும் பெண்களும் குழந்தைகளும் கப்பலில் இருக்கிறார்கள் எனவும் கப்பலை எவ்வித சேதமும் இல்லாமல் கோழிக் கோட்டுத் துறை முகத்துக்கு செல்ல அனுமதித்தால் நிறைய பணமும் கப்பலில் உள்ள பெண்கள் அணிந்திருக்கும் அனைத்து தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தையும் பணயமாகத்  தருவதாகவும் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அந்த இறுகிய மனம் படைத்த இரக்கமற்ற தளபதி அனைத்தையும் மறுத்தான். கப்பலில் இருந்த அனைத்து சரக்குகளையும் விலை மதிப்பற்ற பொருள்களையும் பல நாடுகள் சுற்றி வாங்கிச் சேர்த்த எல்லாவற்றையும் கப்பலுடன் கூடவே எடுத்துக் கொள்ளும்படியும், தேவைப் பட்டால் கோழிக் கோடு சென்று அடைந்தபின் இன்னும் கூட பணமும் நகைகளும் தருவதாகவும் கெஞ்சிப் பார்த்தனர் ஹாஜிகள்.  ஆனால் இரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் போதித்த கிருத்துவ மதத்தைச் சார்ந்த அந்த போர்த்துக்கீசிய போத்து ( போத்து என்றால் மலையாளத்தில் மாடு) ஏற்கவில்லை. 

கப்பலை நெருங்கிய போர்ச்சுக்கீசிய கப்பலில் இருந்த வீரர்கள் ஆயுதங்களுடன் ஹாஜிகள் இருந்த கப்பலுக்குள் குதித்தனர். ஒருகன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று தங்களின் திருச்சபையில் பாடம் படித்த அந்த கோழை வீரர்கள் ,  குர் ஆனையும் தஸ்பீஹ் மணி மாலையையும் தங்களின்  கரங்களில் ஏந்தி நின்று தவித்துக் கொண்டிருந்த  அனைவரையும் வெட்டி வீழ்த்தினார்கள். தங்களின் மார்போடு அணைத்து வைத்திருந்த மழலைச் செல்வங்களை தாய்மார்களிடமிருந்து பிடுங்கி நடுக்கடல் நோக்கி வீசி எறிந்தார்கள். கப்பலில் இருந்த பொருட்கள்  மற்றும் தூசி துரும்பு வரை கொள்ளையடிக்கப் பட்டு முடிந்ததும்  கப்பல் தீ வைத்து  எரிக்கப் பட்டது.  கத்தி மற்றும்  கட்டாரிகளால் வெட்டப் பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாய்க் கதறிக் கொண்டிருந்த ஹாஜிகள் கப்பலுடன் சேர்ந்து நெருப்பில்  எரியும்போது எழுப்பிய மரண ஓலத்தை ஆனந்த பைரவி ராகம் கேட்பது போல் சிரித்துக் கைதட்டி  ரசித்துக் கொண்டு இருந்தான் போர்த்துக்கீசியத் தளபதி.     அவன் பெயர்தான் இந்தியாவின் மேற்கு எல்லையை தனது ஆயுதபலத்தாலும் மிருக வெறியாலும் அடிமைப் படுத்தி , அந்நியரின் ஆட்சிக்கு இந்தியாவில் அஸ்திவாரம் அமைத்த வாஸ்கோடகாமா. ( Ref:  The Rise  of Portuguese Power in India- White way).   

பாபர் இந்தியாமீது படையெடுத்தார்- வழிபாட்டுத்தளங்களை இடித்தார் – பலரை மதம் மாற்றினார் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்திய வரலாற்றின் பக்கங்கள் இந்தக் கடலில் நடந்த படுகொலையை கண்டும் காணாமல்தான் இருக்கின்றன. காரணம் செத்தவர்கள்- முஸ்லிம்கள் .  கொன்றவன் வெள்ளைத்தோல் கொண்ட போர்த்துகீசியன்.

அன்றைய இந்தியாவின் இந்தக் கொடூரம் நடந்த  காலத்தில் இந்தியாவை ஆண்ட அரசு விஜயநகரப் பேரரசு  ஆகும். அடிப்படையில் இந்துத்வா கொள்கைகளைக் கொண்டிருந்த அரசே விஜயநகரப் பேரரசு என்பதால் நடுக்கடலில் நடந்த படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் வாஸ்கோடகாமாவுக்கும் அவனது அணிக்கும் பட்டுக் கம்பளம் விரித்தது அந்த அரசு. அதன் பயனையும் பின்னர் அனுபவித்தது. வினை விதைத்தவர்கள் வினையைத்தானே அறுப்பார்கள்? அது பற்றி பின்னர் பார்க்கலாம். இப்போது  ஒரு கருத்தை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். இந்தக் கருத்துப் பதிவின்  கதாநாயகன் ஆகிய இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான குஞ்சாலி மரைக்காயரைப் பற்றிய உண்மை வரலாற்று விபரங்கள் வேறு ஒரு அத்தியாயத்தில் . நான் பதிய விரும்பும் கருத்து, 

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் முன்னிலைப் படுத்தப் படவில்லை. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.  இந்த வரலாறுகளை இன்ஷா  அல்லாஹ் தனியே காண இருக்கிறோம்.  

அதற்கு முன் போர்த்துகீசியருக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன பகை என்பதை பதிந்து இந்த அத்தியாயத்தை நிறைவு செய்யலாம். 

இஸ்லாமிய வரலாறில் நான்கு முதல் கலிபாக்களுக்குப் பிறகு உமய்யா கலிபாக்கள் மற்றும் அப்பாசிய கலிபாக்கள் ஆகியோர் இசுலாமிய பேரரசை உலகில் விரிவுப்படுத்தினர். இவர்களின் ஆட்சியின் கீழ் அரேபிய தீபகற்பம், வடக்கு மற்றும் வடமேற்கு ஆப்ரிக்கா மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் சிந்து மற்றும் போர்ச்சுகல் ஸ்பெயின் இத்தாலி ஆகிய பகுதிகள் வந்தன. இந்த பகுதிகளில் எல்லாம் இஸ்லாம் வேகமாக பரவியது. குறிப்பாக அப்பாஸிய கலிபாக்கள் ஆட்சிகாலம் 'இஸ்லாமின் பொற்காலம்' என அழைக்கப்படுகின்றது. இந்தக்  காலத்தில் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளிலும் செழித்து வளர்ந்தது.  துருக்கியின்ஆட்டோமான்  பேரரசின் எழுச்சிக்குப் பிறகு, கலிபாக்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து இரண்டாம் வலீத்,  எகிப்து மற்றும் பைசாந்தியப் பேரரசுகளின் பகுதிகளை மீளவும் கைப்பற்றியதோடு வட ஆப்ரிக்காவின் மேற்குப்பகுதி மற்றும் கார்தேஜ் ஆகிய நிலப்பரப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். படைத்தலைவர்களை  தேர்வு  செய்வதிலும் அவர்களை வழிநடத்துவதிலும் மிகப் பெரிய பங்காற்றினார் அல்-வலீத்.  கட்டுக்கோப்பானதொரு இராணுவத்தை விஸ்தரிப்பதிலும் உமைய்யாக் காலப்பிரிவிலேயே  வலிமை பொருந்தியதொரு கப்பற் படையை உருவாக்குவதிலும் மிகவும் கவனம் செலுத்தினார். இவ்வாறான காரணங்களே அவரது கிலாபத் ஸ்பெயின் வரை விரிவடைய உதவின. அல் வலீதின் காலப்பிரிவு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் உச்சமாக கருதப்படுகிறது.

போர்ச்சுக்கல், ஸ்பெயின் இத்தாலி ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன. (கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது.  பல நூற்றாண்டுகளாக மூர் (மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு மட்டும்,  எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது. 

ஸ்பெயினை எடுத்துக்கொண்டால் 800 வருடங்கள் இஸ்லாமியர்களின் நிலையான ஆட்சி. இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் முஸ்லீம்களின் ஆட்சி 800 வருடங்கள். இவ்வாறு உலகையே கட்டி ஆண்டவர்கள் முஸ்லீம்கள். அவ்வாறு ஆளப்பட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யமான ஸ்பெயினிலும்;, இந்தியாவிலும் முஸ்லிம்களின் இன்றைய நிலையையும் எண்ணிக்கையையும் பற்றி சற்று சிந்தித்தாலே முஸ்லிம்களின் எந்தத் தலைமையும் தன் ஆட்சியின்கீழ் முஸ்லிமல்லாதவர்கள் மீது எவ்வித துஷ்ப்பிரயோகங்களும் செய்யவில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

வெறும் ஆட்சி அதிகாரங்களில் மட்டும்தான் முஸ்லிம்கள் கோலோச்சியிருந்தார்களா என்றால் இல்லை. அன்றைய உலகின் அத்துனை துறைகளுக்கும் வல்லுனர்கள் முஸ்லிம்கள்தான். கி.பி 1600 வரை ஐரோப்பா என்பது அறிவொளியற்ற ஓர் இருண்ட கண்டமாகவே காட்சியளித்தது. பூமி உருண்டை வடிவமானது என்ற குர்ஆன் கூறும் உண்மையை அன்றைய விஞ்ஞானிகள் சொன்னதற்காக பூமி தட்டை என்ற பைபிளின் கூற்றுக்கு அது மாறுபடுகிறது என்று கூறி அவர்களை தூக்கிலிடச்சொன்னது அன்றைய கிருத்தவத் திருச்சபை. அந்த அளவிற்கு ஐரோப்பாவும் கிருத்துவ திருச்சபைகளும் அறியாமை இருளின் படுபாதாளத்தில் மூழ்கியே கிடந்தன. ஆனால் முஸ்லிம்களோ அறிவில் சிறந்து விளங்கி வரலாறுகள் பொற்காலம் (Golden age) என்று வர்ணிக்கும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருந்தனர்.

கி.பி 700ன் இறுதியில் ஹாருன்-அல்-ரஷித் அவர்களின் தலைமையில் வீற்றிருந்த அப்பாஸியர்களின் ஆட்சியில்; வானவியல், கணிதம், மருத்துவம், வேதியல், உடற்கூறுகள் பற்றிய ஆய்வு போன்றவைகளில்; வல்லுனர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் சிறந்து விளங்கியவர்கள் முஸ்லிம்கள்தான். அந்நாளில் முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் ஒரு கரையைக் கடந்து விட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு உலகின் எத்துறையில் யார் ஆய்வுகளை மேற்கொண்டாலும் முஸ்லிம்கள் எழுதிய அரபிமொழியில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகளையும், ஆராய்ச்சி நூல்களையும் மேற்கோளுக்காக  புரட்டியே ஆகவேண்டும் என்ற நிலைதான் இருந்தது. இவ்வாறு கல்வி அறிவு, நிர்வாகத்திறன் போன்றவற்றில் முஸ்லிம்கள் பேரெழுச்சி பெற்றிருந்தனர்.

அன்று மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தவர்களின் பொதுவான அபிப்பிராயத்திற்கு மாறாக, இஸ்லாமிய உலகம் திகழ்ந்தது. பாக்தாத்தில் பல்கலைக்கழகம் அமைத்து, தலைசிறந்த இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தார்கள். 

கிருத்தவ நாடுகளில் இருந்து இஸ்லாமிய ஆட்சியை ஒழித்துக் கட்ட போப்  ஆண்டவர் உட்பட  பொய்ப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இன்று,  இந்து மடாதிபதிகளும் சாமியார்களும் இந்தியாவில் இஸ்லாத்துக்கு எதிராகத் தடிகளை எடுத்துக் கொண்டு  திரண்டு நிற்பதற்கும்  இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.   மக்களின் மனதில் விஷத்தின் விதைகள் தூவப்பட்டன; துவேஷத்துக்கு தூபம் போடப் பட்டது. போப்  ஆண்டவர் உடைய பொய்யான போதனைக்கு  பொது மக்கள் பலர்  பலர் செவி சாய்த்தனர்.  இதனால் இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்களும் அதற்காக முடுக்கிவிடப்பட்டது.  

இந்தப்  பிரச்சாரத்தின் பொழுது முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. "முஸ்லிம் மன்னனின் அரசவையில், தங்கத்திலான கடவுள் சிலைக்கு முன்னால் கிறிஸ்தவர்களின் தலை வெட்டப் படுவதாக,"   அன்றைய  பிரச்சார ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவற்றை இன்றைக்கும் ஐரோப்பிய முயூசியங்களில்  காணலாம். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான சிலை வணக்கம் இல்லை     என்கிற சாதாரண அடிப்படைத் தகவலைகூட  ஐரோப்பாவில் அன்றிருந்த அரசியல் மற்றும் மதத் தலைவர்கள்  அறிந்திருக்கவில்லை. உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு,  உண்மைகளைத்  திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு இலக்காகினர். 

போர்ச்சுகீசியர்கள் முஸ்லிம்களை மூர்கள் என்று இழிவாக அழைத்துப் பேசினர். இலங்கைத்தலைநகர்  கொழும்பில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த பகுதி மூர் தெரு என்று அழைக்கப் பட்டது. இதேபோல் தமிழகத் தலை நகர் சென்னையிலும் ஒரு மூர் தெரு இருக்கிறது. இதே காரணமாக இருக்கலாம்.  இப்படி மூர்கள் என்று அழைக்கப் படக் காரணம் மொராக்கோ முஸ்லிம்கள் என்ற  இன ,நிற, மத  பேதம் வளர்க்கவே. 

சாதாரண கிறிஸ்தவ குடிமக்களின் சிந்தனைப் போக்கை, இங்கே விளக்கத் தேவையில்லை. அன்றைய சராசரி ஐரோப்பியனின் மனோநிலையானது, "கிறிஸ்தவர்கள் மட்டுமே உலகில் நாகரீகமடைந்தவர்கள்" என்று கருதியது. அதுவே, காலனிய காலகட்டத்தில், "வெள்ளையினத்தவர் மட்டுமே உலகில் நாகரீகமடைந்த இனம்." என்ற கருத்தியலாக மாறியது. அவர்களைச்  சுற்றியிருந்த அனைத்து மக்களையும், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற மதங்களை சேர்ந்தவர்களையும் நாகரீகமடையாத காட்டுமிராண்டிக் கூட்டங்களாக கருதினார்கள். 

பின்னர் முஸ்லிம்கள் ஆண்ட  பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், இஸ்லாமிய நுணுக்கத்தின் அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழக‌ங்களில் போதித்தனர். இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர். 

ஆனால், உன்னத நாகரீகத்தைக் கொண்டதாக கருதிக் கொண்டவர்கள் தான், போர் விதிகளை மதிக்காது, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டார்கள். எதிரிகளைக் கொன்று, மனித மாமிசம் புசிக்குமளவிற்கு கொடூர மனம் கொண்டிருந்தனர். அன்றைய ஐரோப்பாவில், நாடாளும் மன்னர்களுக்கு, தமது சொந்த மொழிகளைக் கூட எழுதப் படிக்க தெரிந்திருக்கவில்லை. 

இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது. 
ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ஆம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது. அதுவும் தன்னை ஒரு பெரிய மனித உரிமைகளின் காவலர்கள் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டு அடுத்த நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடவே. 

ஐரோப்பியர்களின் மனித உரிமைகள் அரங்கேற்றப்பட்ட அவலத்தைத்தான் கோழிக் கோட்டில் கண்டு கண்ணீர் சிந்தினோமே!  இதே போல் பல உதாரணங்கள் பாலஸ்தீனம் தொட்டு , உலகெங்கும் உள்ள வரலாற்றில் ஒளிந்து கிடக்கின்றன.  போர்ச்சுக்கீசியர்களின் இரத்தத்தில் விதைக்கப் பட்ட முஸ்லிம் விரோத  துவேஷத்தின் விளைவே இரக்கமில்லாத அரக்கர்களால் ஹாஜிகள் கடலில் வைத்துக்           கொல்லப்பட்டதன் காரணம். 

அதுமட்டுமல்ல , 

இலங்கையின் வரலாற்றைப்  படிக்கும் போது , இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்கள் இணைந்து கடல் வணிகத்தில் அன்றைக்குக் கொடி கட்டிப் பறந்தனர் என்பதும் தெளிவாகிறது.  இதனால் கடல் வணிகத்தில் போர்ச்சுகீசியருக்குப் பெரும் போட்டியாக இருந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தோரை வாளுக்கு இரையாக்குவதில் தயக்கம் காட்டவில்லை வாஸ்கோடகாமா. 

இந்த வஞ்சகன் பெயரில் கோவாவில் ஒரு ரயில் சந்திப்புக்குப் பெயர் சூட்டப் பட்டிருப்பது ஒரு வரலாற்றுக் களங்கம் . மும்பா தேவி கோயில் இருக்கும் பம்பாய் மும்பை ஆகிவிட்டது.  காளி  கோயில் இருக்கும் கல்கத்தா,  கொல்கத்தா ஆகிவிட்டது. ஆனால் மத சார்பற்ற இந்தியாவில் , வாஸ்கோடகாமா என்கிற ஊர் பெயர் மட்டும் சரித்திர சின்னமாக இருக்கிறது  . காரணம் அவனால் கொல்லப்  பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம்கள்.     

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
இப்ராஹீம் அன்சாரி

19 comments:

  1. வரலாற்றின் சுத்திகரிப்பு தொடர்கின்றது.
    மறைக்கப்பட்ட பக்கங்கள் மின்னுகின்றன


    அபு ஆசிப்.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களே !

    வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மின்னுகின்றன.

    உங்களின் ஊடுரவல் தொடர்ந்து எங்களைப்போன்றவர்களுக்கு
    வரலாற்றிலிருந்து உருவப்பட்ட விஷயங்களை தொடர்ந்து தரட்டும்.

    போலி வரலாற்று ஆசிரியர்களின் முகத்திரை கிழியட்டும்.


    அபு ஆசிப்.

    ReplyDelete
  3. போலிகளின் முகமூடி அம்பலமாகிறது.

    உங்களைப் போன்றோர் அன்று இல்லாமல் இருந்தது ஏனோ!

    கொடுங்கோலன் வாஸ்கோடகாமா பற்றி பாரம்பரியமிக்க கட்சியாகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தெரியாதா?

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    காக்கா,

    அடுக்கடுக்கானப் புள்ளி விபரங்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. வாஸ்கோடகாமாவை வீரனாக மனப்பாடம் செய்து வந்த, செய்துகொண்டிருக்கிற மாணவச் சமுதாயம் எத்தகைய ஏமாற்றத்திற்குள்ளாக்கப் பட்டிருக்கிறது!

    வரலாற்றைத் திருத்தி நேர்மையாகப் பதிந்தாலே பெரிய தஃவா பணி செய்தது போலாகும் போலுள்ளதே!

    கடின உழைப்பை எங்களுக்காக காணிக்கையாக்கிவரும் காக்கா அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஹயாத்தையும் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் கொடுப்பானாக, ஆமீன்.

    அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

    ReplyDelete
  5. //வரலாற்றைத் திருத்தி நேர்மையாகப் பதிந்தாலே பெரிய தஃவா பணி செய்தது போலாகும் போலுள்ளதே!//

    ஆமாம் தம்பி.

    ReplyDelete
  6. பள்ளிப் பிராயத்தில் மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்ததும் உம்மாவிடம்,

    "உம்மா, வாஸ்கோடகாமா" என்பேன். உம்மா மலைச்சிப்போயி புள்ள இங்கிலீஷ்ல மேசுறான் என்று "என்ன வாப்பா தஸ்புஸ்ங்கிறே?"என்று கேட்கும்.

    நான் உடனே," உனக்கு இங்கிலீஷு தெரியாதுமா. வாஸ்கோடகாமான்னா சோறுபோட்டுத்தாமான்னு அர்த்தம்" என்பேன்.

    காரணம் அந்தப் பெயரில் அப்படி ஓர் ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தனர் வரலாற்றுத்துறையினர்.

    இப்ப, முகமூடி கிழியுதுط

    ReplyDelete
  7. கடின உழைப்பை எங்களுக்காகக் காணிக்கையாக்கிவரும் காக்கா அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஹயாத்தையும் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் கொடுப்பானாக, ஆமீன்.

    அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

    தமிழகத்தில் தான் வலுவான ஊடகமான திரைப்படத்தில் து(ர்)ப்பாக்கிய சாலிகளாய் முஸ்லிம்களை வர்ணிக்கின்றனர். ஆனால், இங்கு நீங்கள் சொல்லிய அனைத்து மறுக்கவோ, மறக்கவோ, மறைக்கவோ முடியாத பேருண்மைகளை மலையாள நடிகர் மம்முட்டி நடித்து வெளிவந்த “வாஸ்கோடாகாமா” என்னும் திரைப்படத்தில் அப்பட்டமாகக் கூறும் அப்படம். உண்மையை உரத்துச் சொல்வதில் இப்பொழுது நீங்கள் தான் உயர்ந்து நிற்கின்றீர்கள், காக்கா. அதற்கு அ,நி. தளமும் , எங்களின் பே|ராதவும் அல்லாஹ்வின் கிருபையால் கிடைத்துக் கொண்டே இருக்கும்.--

    ReplyDelete
  8. \\"உம்மா, வாஸ்கோடகாமா" என்பேன்.\\

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது இதுதானோ?

    ஆம். இதனைப் படித்ததும் என் சிறுவயதின் எழுத்தார்வமும், பேச்சும் கியாபகத்தில் வருகின்றன.

    எங்கள் வீட்டின் வாசல் நிலைகளில் எல்லாம் “கலாம் கூறும் சலாம்” என்று எழுதி வைப்பேன்

    என் உடன்பிறப்புகள் எவரேனும், யான் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் சத்தமிட்டுப் பேசிக் கொண்டிருந்தால்,

    “ஒரு துளிச் சத்தம் வந்தால், பல துளி இரத்தம் வரும்” என்று மிரட்டுவேன்

    (ஐயமிருப்பின் கவிவேந்தர் அவர்களின் உறவினர் வீட்டுச் சம்பந்தியிடம் கேட்டுத் தெளிவு பெறுக)

    ReplyDelete
  9. இந்த வாரப்பதிப்பு 2 வாரத்துக்கு வர வேண்டிய அளவு அதிகமான விசயங்கள். உங்களின் எழுத்துத்திறமையால் ஒரே வாரத்துக்குள் தந்து இருக்கிறீர்கள்.

    வாஸ்கோடகாமா ஒரு கடல்கொள்ளையன் என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவான வரலாற்று சான்றுகளுடன் படித்ததில்லை.


    உங்களின் இந்த மாபெரும் முயற்சி ஒரு ஆங்கிலத்திரைப்படமாக வந்தால் நிச்சயம் வெற்றிபெரும். உலகத்தின் இது போன்ற வரலாறுகள் திரைப்படமாக வந்தால்தான் அது அதிகமான இடத்தை சென்றடையும்.


    இந்திய சுதந்திரப்போராட்டத்தில் நடந்த விசயங்களில் எதையெல்லாம் மறைத்தார்கள் என்பதை ஒரு வெள்ளைக்காரன் எடுத்து வெளியிட்ட ' மெளன்பேட்டன் தி லாஸ்ட் வைஸ்ராய்" இதன் சான்று.

    ReplyDelete
  10. வாஸ்கோடாகாமாவிடம் முஸ்லிம் ஹாஜிகளுக்காக நடத்திய பேரம் நெஞ்சை உலுக்குகிறது; அதைப் படிப்படியாக விவரிக்கவிவரிக்க அவர்களின் நிலைமையை எண்ணி கண்ணீர் ததும்புகிறது.

    அரக்க மனம்கூட இறக்கப் படக்கூடிய அந்தச் சூழலில் நிராயுதபாணிகளான முஸ்லிகளைக் கொன்றவனைக் கோழைத்தனத்திற்கு அடயாளமாகக் குறிப்பிடாமல் வீரன் என்கிறதே பாழாய்ப்போன வரலாறு.

    விந்தை!

    ReplyDelete
  11. இந்திய சரித்திரம் எழுதியவர்கள் மஹா கெட்டிகார்கள்தான். இல்லை யென்றால் வாஸ்கோட கமாவுக்கு ஒரு அடைப்பை குறியோ அல்லது ஒரு புள்ளியோகூட போடாமல் இவ்வளவு காலம் முழுப் பூசணியேயும்
    சோற்றில் மறைத்திருக்க முடியுமா ?

    S.முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

    ReplyDelete
  12. வரலாறு படைத்தான், படைக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வது இவ்வாறான கொடூரங்களைச் செய்து வந்தவர்களுக்குத்தானே சிவப்புக் கம்பளம் விரித்தாண்டார்கள் இந்த கேடுகெட்டவர்கள்

    உறையவைக்கும் உண்மைகள் ! என்ன செய்ய இன்றளவு நம் காலத்திலேயே நடக்கு இன அழிப்புக்களை கலவரம் என்று பெயர் சூட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர்.. எம்மால் இறைஞ்சத்தான் இயலும் !

    வாஸ்கோடகாமாவின் கொடூரம் படித்திருந்தாலும் இவ்வளவு ஆதாரங்களோடு நம்மை தாக்கியதில்லை அவைகள் !

    காக்கா, இன்னும் கண்டெடுங்கள் கயவர்களின் களவானித்தனங்களை !

    ReplyDelete
  13. இந்த பொண்ணப்பய “வாஸ்கோடகாமா” அட்டுழியங்க்ளை உங்களின் இத்தொடர் மூலம் படிப்பது வரலாறு எந்த அளவிற்க்கு கயவர்களால் மட்டுறுத்தி எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது...அவன் முஸ்லிம் ஹாஜிகளை அழித்த சம்பவங்களை படிக்கும்போது நெஞ்சு குமுறுகின்றது...அல்லாஹ் அவனுக்க்கு உச்சக்கட்ட கப்ரு வேதனை தந்து கொண்டிப்பானாக..ஆமீன்

    கடின உழைப்பை எங்களுக்காக காணிக்கையாக்கிவரும் மாமா அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஹயாத்தையும் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் கொடுப்பானாக, ஆமீன்.

    ReplyDelete
  14. அன்புத் தம்பி ஜாகிர்

    //இந்த வாரப்பதிப்பு 2 வாரத்துக்கு வர வேண்டிய அளவு அதிகமான விசயங்கள்.//

    உண்மைதான். இரண்டு வாரங்களுக்கு வரும்படித்தான் இதை அனுப்ப நினைத்தேன். ஆனால் கண்டினுயுட்டி கருதி ஒரே வார வெளியீடு ஆக்கப்பட்டது.

    அத்துடன் உங்கள் அனைவரின் மீதுள்ள நம்பிக்கை. .

    ReplyDelete
  15. மாமா உங்களின் கட்டுரையால் வாஸ்கோடகாமா சுத்தமா வாஸ் அவுட் ஆய்ட்டார்

    ReplyDelete
  16. அன்பான சகோதரர்களே!

    கண்ணீர் சிந்திப் படித்த இந்த சம்பவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த நாயனுக்கே எல்லா புகழும்.

    இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ள

    //இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது.
    ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ஆம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது. அதுவும் தன்னை ஒரு பெரிய மனித உரிமைகளின் காவலர்கள் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டு அடுத்த நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடவே. //

    என்கிற கருத்தின் தாக்கத்தை வைத்தே பல வரலாற்று நிகழ்வுகளை நாம் காட்ட முடியும். இன்ஷா அல்லாஹ் காட்ட இருக்கிறோம்.

    முக்கியமாக பாலஸ்தீன் ? இன்ஷா அல்லாஹ் .

    ReplyDelete
  17. //(ஐயமிருப்பின் கவிவேந்தர் அவர்களின் உறவினர் வீட்டுச் சம்பந்தியிடம் கேட்டுத் தெளிவு பெறுக)//

    ஆகட்டும் கவியன்பன் அவர்களே!

    ஜாகிர் சொல்வதுபோல் தற்காலத்தில் மிகவும் வலிமையாகத் திகழும் விஷுவல் மீடியா வாயிலாக உண்மையான வரலாற்றைச் சொல்லுதல் காலத்தின் கட்டாயம்.

    இதன் துவக்கும்தான் "தி மெஸேஜ்" திரைப்படத்தின் தமிழாக்கம் வெளியீடு.

    ReplyDelete
  18. அந்த வாஸ்கோடாகாமாவுக்கும் அடிவருடியாகவும், முஸ்லிம் அரசிக்கு எதிராகக் காட்டிக் கொடுத்ததும் அவாள் என்பதை அப்பட்டமாக அப்படத்தில் காட்டுகின்றனர். அதுபோலவே, வரலாறு மட்டுமன்று; நடைமுறையில் கூட, இன்றும் அவாள்கள் “அக்பர் தி கிரேட்” என்று என்னிடம் வந்து (அலுவலகத்தில் உள்ள அவாள்) சொன்னதும், அவாளுக்குச் சரியான பதிலடி கொடுத்தேன்”ஆம் உங்களைப் பொருத்தவரை தீன் இலாஹி என்று இஸ்லாத்திற்கெதிரான ஒரு மதத்தை உருவாக்கினார் என்பதால்தானே அக்பரை மெச்சுகின்றீர்கள்” என்றேன். எங்களுக்கும் வரலாறு தெரியும்; தெரியாததை எங்களின் மூத்த சகோதரர் இ.அ.காக்கா அவர்களிடம் பாடம் கேட்டு “நெத்தியடி” பதில் கொடுப்போம்.,இன்ஷா அல்லாஹ்.

    காக்கா, தங்கட்கும் , எனக்கும் வரலாறு பாடம் புகுமுக வகுப்பில் நடத்தும் பொழுது பேராசிரியர் அவர்கள் சொல்வார்களே நினைவிலிருக்கும் என்று நினைக்கின்றேன்: WHAT IS HISTORY? "HISTORY IS A BUNDLE OF LIES"

    ஆக, உலகம் ஒத்துக் கொண்ட உண்மையாக வரலாறுகள் பொய்யர்களால எழுதப்பட்ட பொய் மூட்டை; அன்றும் இன்\றும் பொய்சொல்லி ஐரோப்பியரகளுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள் தான், இன்றும் பொய்சொல்லி ஆட்சியைப் பிடிக்கத் தகிடுதத்தம் செய்கின்றனர். மோடி மஸ்தான் செய்யும் வேடங்களும் இதில் அடங்கும்.

    ReplyDelete
  19. முற்றிலும் உண்மை டாக்டர் காக்கா!
    இந்தியாவின் அபிரிதமான மிளகு வளம் வாஸ்கோடகாமா என்ற கடற்கொள்ளையனுக்கு மிருக வெறியை உண்டாக்கியதையும் வரும் வழியில் ஹாஜிகளின் ரத்தத்தால் அரபிக்கடலே சிவப்புநிறமானதையும் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பிரபுதேவா, ஆர்யா, பிருத்விராஜ் நடித்த 'உருமி' என்ற மலையாளப் படத்தில் தத்ரூபமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் சகோதரர்கள் முடிந்தால் அந்தப் படத்தைப் பார்க்கவும். எனக்கு எமிரேட்ஸில் வரும்போது அந்த வாய்ப்பு கிடைத்தது.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.