Saturday, March 08, 2014

நிழலாடும் சம்பவங்கள் 1 & 2

சம்பவம் 1

அப்போது எனக்கு  ஏழு  வயது இருக்கும் மாலையில் பள்ளிகூடம் விட்டு வந்ததும் புத்தகங்களை வைத்து விட்டு (தூக்கி  வீசி விட்டு) கால்பந்து விளையாட  சென்று விடுவேன் அப்படி ஒருமுறை கால் பந்து விளையாடும் போது காலில்  ஒரு முள் குத்தி விட்டது அங்கு விளையாடி கொண்டிருந்த அனைவரும் என்னை படுக்கப் போட்டு காலில் குத்திய முள்ளை எடுக்க முயற்சித்தும் முடியவில்லை காரணம் முள் ஆழமாக பாய்ந்து விட்டது வலியும் தாங்க முடியவில்லை ஒருபுறம் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

இதை  பார்த்துக் கொண்டிருந்த 'பெரிய செட்' கால்பந்து காரர்களில் ஒருவர் வந்து காலை பார்த்துவிட்டு பல்லை நல்லா கடிச்சிக்கடா என்று சொன்னவர் முள்ளை பிடித்து வெடுகின்னு இழுத்து முள்ளை உருவினார் உருவியவர் உருவிய முள்ளை வெளியோ வந்ததும் பார்த்துவிட்டு முள்ளின் முன் பகுதி காலின் உள்ளேயோ இருக்கு என்று சொல்லி ஒரு முள் குண்டை வீசிவிட்டு எடுத்த முள்ளையும் வீசி விட்டு போய்  விட்டார்.

நடப்பு சம்பவம் வீட்டிற்கு தெரியாமல் இருக்க வெட்டி குளத்திற்கு வந்து வழிந்து ஓடிய இரத்தத்தை கழுவி துடைத்து விட்டு நல்ல பிள்ளையாய் வீட்டிற்கு போய்  சேர்ந்தேன். 

மறுநாள் கால்பந்து விளையாடும் போது வலி ஒன்றும் தெரியவில்லை அடுத்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து காலில் சிறிய வீக்கமும் ஒரு சுகமான வலியும் வந்து வந்து போனது அப்படி வலி வரும் போதெல்லாம் முள் குத்திய இடத்தில் கை விரலை வைத்து தடவதடவ ஒருவகை சுகமாக இருந்தது.

நாட்கள் ஆக ஆக காலில் முள் குத்திய இடம் வீங்கி பழுத்தது இரவு முழுதும் தூக்கம் தொலைந்தது அதற்க்கு மேல் வலி பொறுக்க முடியாமல் உம்மாவிடம் சொன்னேன் அப்போதெல்லாம் எதற்க்கெடுத்தாலும் உடனே ஆஸ்பத்திரி போவது கிடையாது கை மருந்து எதாவது கொடுத்து பார்த்து விட்டுத்தான் முடியாதபட்சத்திற்கு ஆஸ்பத்திரிக்கு போவார்கள்.

கை மருந்து என்ன செய்யலாம் என்று பக்கத்து வீட்டு ஜமில் சாச்சா உம்மா அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன மருந்து மஞ்சளை நன்றாக அரைத்து கருவை இலை கொழுந்தை சேர்த்து வைத்து காலில் முள் குத்தி சழம் வைத்த இடத்தில் கட்ட சொன்னார்கள் அப்படி செய்தால் சலத்தை வெளியோ  கொண்டு வந்து விடும் என்று  சொன்னார்கள்.

மறுநாள் மாலை முள் குத்தாமல்  கருவமுள் இலை கொழுந்தை  பறித்து வந்து மஞ்சளும் அரைத்து உம்மா காலில் கட்டு கட்டி படுக்க போட்டார்கள் காலையில் எழுந்து  கட்டை  பிரித்தால்  காலின்  உள்ளே  இருந்த சலம் எல்லாம்  வெளியோ வந்து  இருந்தது உடைந்த  முல்லை தவிர!

இரண்டு  நாட்கள்  காலில்  வலி  இல்லாமல்  மௌனமா  போனது மூன்றாவது நாள் வலி திரும்பவும் ஆரம்பித்து கால் உள்ளே  கொந்தளிப்பு அதிகமானதால் தூக்குகூட இயலவில்லை. ஆஸ்பத்திரிக்கு  என்று  என்னை  அங்கு கொண்டு போய் சேர்த்தார்கள்.

இப்ராஹீம் டாக்டர் என்ன நடந்தது என்று கேட்டார் நடந்த வரலாற்றை அப்படியே காப்பி பேஸ்ட்டாக மறைக்காமல்  டாக்டரிடம்  சொன்னேன். காலை பார்த்த டாக்டர் காலில் முள் குத்திய இடத்ததை கீறி விட்டு உள்ளே இருக்கும் முள்ளை  எடுக்கணும்  என்றார்.

நானோ மருந்து மாத்திரை  ஏதாவது  கொடுத்து  கரைக்க முடியாதா? என்று டாக்டரிடம் கேட்டேன். அதற்கு  அவர் சொன்னார் நீ நெனக்கிற மாதிரி எல்லாம் மருத்துவம் பார்க்க முடியாது போய் அந்த கட்டிலில் படு வலிக்காம உள்ளே உள்ள முள்ளை எடுத்து விடேறேன் என்றார்.

காலை  நொண்டிக் கொண்டு  கட்டிலில்  போய்  படுத்தேன் டாக்டர்  கையில் உரை  மாட்டிக் கொண்டு  கத்தி போன்ற  ஒரு சிறியதாக அதனை பார்க்க வித்தியாசமானதாக இருந்த  ஒன்றை  எடுத்துக் கொண்டு  அங்கு ஊசி  போட ஒரு ஆள் கட்டையாக ஒரு குட்டி பயில்வான் போல்  ஒருவர் இருப்பார் அவரையும் அழைத்து வந்தார்.

அந்த குட்டி பயில்வான் வந்ததும் என்னை ஒரே அமுக்க அமுக்கி பிடிக்க முயற்சி செய்தார் நான் திமிறிய திமிரில் பயில் வான் என்னிடம் தோற்று போனார் டாக்டர்  கோபப்படாமல் என்கிட்டே வந்து ஒன்னோட நல்லதுக்குதானே நான் வைத்தியம் பார்க்கேறேன் நீ  இப்படி செய்தால் நான் எப்படி வைத்தியம்  பார்ப்பது  என்று  கொஞ்சம் அதட்டலா  சொன்னார்.

நான்  டாக்டரிடம் சொன்னேன்  என்னை  யாரும் பிடிக்க  வேண்டாம்  நானே எங்காலை பிடித்துக் கொள்கின்றேன் என்றேன் சரி என்று சொன்ன டாக்டர் ஏறி கட்டிலில் உட்கார  சொன்னார்  நான் ஏறி உட்கார்ந்து என்  காலை  தூக்கி இன்னொரு காலின் மேல்  வைத்து  முள்  குத்திய காலை இரண்டு கைகளாலும் அமுக்கி பிடித்துக் கொண்டேன்.

டாக்டர்  கத்தியை எடுத்து முள் குத்திய இடத்தில் வைத்து அந்த கத்தியால் ஒரு இரண்டு இஞ்சுக்கு ஒரு  கோடு போட்டார் கோடு  போட்ட இடத்தில் ரத்தமும் சீழும் வழிந்தோடியது நான் வலி  தாங்க முடியாமல் காலை பிடித்துக் கொண்டு கத்தினேன்.....

சரி  எல்லாம் முடிந்தது என்று கொஞ்சம் நிம்மதியா நிமிர்ந்து உட்கார்ந்தேன் மறுபடியும் கத்தரிக்கோலும் அதன் நுனியில் மருந்தில் நனைத்த  பஞ்சும் கிட்டிக் கொண்டு வந்தவர் அறுத்த இடத்தை பிளந்து விட்டு அந்த பஞ்சை அதன் உள்ளே விட்டு சுத்தமாக துலாவி உடைந்த முள்ளை வெளிய எடுத்து விட்டார்  அதன்  பிறகு காலில் கட்டு போட்டு  விட்டு நீ ரெம்ப நல்லவேன்னு ஒரு சர்டிபிகட் எனக்கு கொடுத்தார்.

கட்டுக்கட்டிய  காலுடன் லேச நொண்டி நொண்டி உம்மா கூட நடந்து வந்தேன் வரும் வழியில் ஜாகிர் வீட்டு கிட்டே வந்ததும் வாய்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது (அந்த வாய்க்காலில் இப்போது சாக்கடை நிரந்தரமா ஓடுது ) கட்டு போட்ட காலுடன் தண்ணீரில் நடக்க முடியாது  என்பதால் என்  உம்மா என்னை தூக்கி இடுக்கிக் கொண்டு தண்ணீரை கடந்து போகும் போது என் உம்மா பெயரை  சொல்லி  ஒருவர் அழைத்தார் 

அழைத்தது  யார் என்று திரும்பி பார்த்தால் சாச்சி (ஜாகிர் உம்மா) வீட்டு வாசலில் நின்று கொண்டு கேட்டார்கள் புள்ளைக்கு காலில் என்ன கட்டு (என்னத்தான் புள்ளேன்னு  சொன்னங்க).

முழு கதையையும் கேட்ட சாச்சி புள்ளைக்கு (மறுபடியும் என்னைத்தான்) வாயெல்லாம் காஞ்சி போய் இருக்கு டீ போட்டு தாரேன் குடிச்சிட்டு புள்ளையை (திரும்பவும் என்னைத்தான்) தூக்கிட்டு போ என்று சொன்னவர்கள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் டீ யை கொண்டு வந்து கொடுத்தார்கள்.

நான்  எப்போது   ஜாகிர்  வீட்டு பக்கம் போனாலும் அந்த மொசைக்கள் அந்த காலில் போட்ட கட்டு  அந்த டீ யின் ருசி   மனதில் வந்து போகும்.

சம்பவம் 2

10 வயது, வருஷம் 1977 என் வாப்பா அவர்கள் மலேசியாவிலிருந்து எனக்கு சுன்னத் செய்வதற்காக வந்திருந்தார்கள். அப்போது எமர்ஜென்சி  நேரம் என்பதால் பெரிய அளவில் விருந்து வைத்தால்  போலீஸ்  புடிக்கும். கூட்டம் கூடினால் போலீஸ் புடிக்கும் என  ஆளாளுக்கு அவுத்து உடுறாங்க எனக்கு எதுவும் சரியா வெளங்கல ஒருபக்கம் விருந்துக்கு  எப்பாடு நடக்குது ஒருபக்கம் எனக்கு தொப்பி தச்சு புது வேட்டி சட்டையெல்லாம் ரெடியாகுது.

மாப்பிள்ளை சோடிக்கும் நேரமும் நெருங்கியது என்னை ஒரு சேர் போட்டு அந்த சேர் மேலே ஒரு துப்பட்டிய போட்டு அது மேலே என்னை உட்கார வச்சு கைலே மருதாணி எல்லாம் விடுறாங்க யார் யாரோ வந்து வந்து மோந்து கிடுறாங்க அப்படி மோந்து கொள்ளும் போது பொடி-தூள்  வாடையும் வெத்திலை வாடையும்  மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தது நான் பாட்டுக்கு தம தம ன்னு முழிச்சிகிட்டு  இருக்கேன்.

சரி சரி மாப்பிள்ளையை கெளப்புங்க என்று சொல்லி சிரித்த முகத்துடன் என் மாமா அவர்கள் (அன்சாரி மாமா) என்னை கெளப்பி கொண்டு மாப்பிள்ளை ஊர் வளத்தை கெளப்பி விட்டார்கள் ஊர்வலம் கிளம்பியது போகும் வழியில் என் உம்மாம்மா வீடு அங்கே மறுபடியும் வெத்திலை வடையும் மூக்கு பொடி வாடையும் அது முடிந்து நேராக ஊர்வலம் தர்கா சென்று பாத்திகா ஓதிவிட்டு (அப்போ இப்போ மாதிரியான விழிப்புணர்வு (!!???) கிடையாது அண்ணன் பேச்சுக்கள் அடங்கிய CD எல்லாம் கிடையாது) வீட்டுக்கு திரும்பும் வழியில்.

அன்சாரி  மாமா  அவர்கள் என்முகத்தை பார்ப்பதும் லேசா  சிரிப்பதும்  பிறகு சிறிது நேரம் கழித்து என் முகத்தை திரும்ப பார்ப்பதும் லேசா சிரிப்பதும் எனக்கு ஏன்  என்று  புரியவில்லை.

வீட்டிற்கு வந்ததும் நான் போட்டிருந்த புதிய உடுப்புகளையெல்லாம் உருவி விட்டு  வெள்ளை ஒத்தப் பொடவையை  கிழித்து எனக்கு கட்டி வீட்டின் நடுவே கவுத்தி போட்ட உரலில் என்னை உட்கார வைத்து என் இரண்டு கால்களையும் தூக்கி பொறடியில் தூக்கி  வைத்து என்னை நான்கு பேர் பிடித்துக்கொண்டு நாசுவன் கையில் சாம்பலை எடுத்து தடவியதும்தான் எனக்கு அப்போது புரிந்தது அந்த சிரிப்பின்  அர்த்தம்.

இப்போதும் அன்சாரி மாமா கூட பேசும்போது அவர்கள் சிரிக்கும் அந்த சிரிப்பை பார்த்தால் எனக்கு அந்த சிரிப்பின் நினைவுகள் மனதில் வந்து போகும்.

இனி உங்கள் சாய்ஸ் - வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் பகிரலாமே !  

Sஹமீது

7 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    ஆக, என் சிரிப்புக்கு உள்ளர்த்தம் உண்டென்று பொருளா?

    சற்று நேரம் உடுத்தி இருக்கும் உடையிலும், அணிவிக்கப் படும் மாலையிலும், தரப்படும் முத்தங்களிலும் , முழங்கப் படும் பைத்திலும் மகிழ்ந்து கொள் மருமகனே!

    விரைவில்
    அவைகள் களையப்பட்டு இடுப்பில் ஒரு பழைய புடவை கிழித்து அணியப்படும். சாயமரக்காயர் வீட்டு உரல் கொண்டு வரப்படும் - ஒரு சேவல் தயாராக உள்ளது. நாசுவர் கையில் கத்தி- ஈக்குச்சி எல்லாம் தயார்.
    நீ அப்போ கதறப் போகும் கதறலைக் கட்டுப் படுத்த முருக்கு கூட தயார் என்று நிகழ்வின் மறுபக்கத்தையும் நினைத்துப் பார்த்தே உன்னைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தேன்.




    ReplyDelete
  2. அடிபட்ட சேதியும் அடியில் 'பட்ட' சேதியும் அறியத்தந்த ஹமீதுக்கு சலாம்,

    ஈனா ஆனா காக்காவோட சிரிப்பை உடனே மறந்துவிடுவது நல்லது. இல்லேனா அவொள பாக்கும்போதெல்லாம் வெட்கவெட்கமா வரும்.

    அந்த நிகழ்வு ஏறத்தாழ நம்மூர்ல எல்லோருக்குமே காப்பி பேஸ்ட்தான். என்ன ஒண்ணு, ஆதாரம் காட்ட முடியாது அவ்ளோவ்தான்.

    அதற்கப்புறம் அந்த வெர்ட்டிக்கல் த்டெண்ட்டை ஒரு கைலையும் மடக்குக்கத்தியை ஒரு கைலயும் புடிச்சிக்கிட்டு அலையனும்...ஷவர் மாதிரி ஒண்ணுக்குப் போகும்போதுதான் வெட்டிக்குளத்து மீன்களுக்கு உணவாகும் சேர்வை!

    அதுக்குப்பிறகு பிறகு சில நாட்கள் செமத்தியா கூசும்!

    (ஞாபகம் இருப்பதைத்தான் சொன்னேன், ஸனது எல்லாம் கேட்கப்படாது)

    ReplyDelete
  3. ஹமீது,

    கூவல் பலமாகக் கேட்கிறதே
    கூவம் திசை மாறி ஓடுகிறதா?

    முன்னால உள்ளவங்கள்ல்லாம் அப்டி அப்டியே உட்கார்ந்தா நமக்கு மறைக்காது.

    ReplyDelete
  4. ஆமா நாத்தம் தாங்க முடியல

    ReplyDelete
  5. என்னாது இது ? திறைமறைவில் நடந்தவைகளை தங்களது செயல்களால் காட்டி மாட்டிக் கொள்பவர்களைப் போல் நீங்களுமா இப்புடி ??

    ஆ 'தரவு ' ஆ சை(கை)யின் திறவுகோல் !

    பதிவுக்கு சம்பந்தமில்லைன்னு குழம்பினால் நான் பொறுப்பல்ல... (நீங்கதான் இன்னும் அப்டேட் (ஆ) தரவு பன்னாமல் இருக்கீங்க...)

    ReplyDelete
  6. சம்பவங்கள் அனைத்தும் நல்ல நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.அருமை ஹமீது காக்கா

    ReplyDelete
  7. வேதனை கூடிய சுவையான சம்பவங்கள்

    ஈனா ஆனா காக்காவோட சிரிப்பை உடனே மறந்துவிடுவது நல்லது. இல்லேனா அவொள பாக்கும்போதெல்லாம் வெட்கவெட்கமா வரும்.

    நல்ல உள்ளம் கொண்டோரின் நல்வார்த்தைகளை காப்பி பேஸ்ட் செய்வதை அவ்வுள்ளம் கொண்டோர் பெரிசுபடுத்த மாட்டர்கள் என்ற நம்பிக்கையில்!



    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.