Friday, April 04, 2014

நத்தை போல் நகர்ந்த சொத்து வழக்கு, சொத்தை வழக்கா?

"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு"

"என் கடன் பணி செய்து கிடப்பதே"

"உங்களுக்காக உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள்"

தேர்தல் நேரத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் நமது காதில் விழும் கோஷங்களும் கண்ணில் படும் சுவரொட்டி வாசகங்களும்தான் அவை. இந்த கோஷங்களைத் தொடர்ந்து கோடிகள் கொட்டப்படுகின்றன. இப்படிக் கொட்டப்படும் கோடிகள் கோஷங்களை எழுப்பும் கொள்கைச் சிங்கங்களின் முதலீடுகள்தான். பல நூறு கோடி முதலீடு, பல்லாயிரம் கோடிகளாகத் திரும்பக் கிடைக்கும் இலாபகரமான வணிகம், அரசியல்- ஆட்சி- அதிகாரம் ஆகியவைதான். இதன் ஒரு சிறு காட்சிதான் நமது கண்முன்னே கடந்த ஐந்து வருடத்துக்குமுன் இத்துப் போன செருப்பு அறுந்து போனால், அதை எடுத்து தினமலர் பேப்பரில் வைத்து சுற்றி கம்புக்கட்டில் வைத்துக் கொண்டு சென்றவர்கள் எல்லாம் இன்று ஏ/சி இணைத்த இன்னோவா காரில் போவதுதான். சிங்கிள் டீக்காக பிடரியை சொரிந்து கொண்டு முச்சந்தியில் நின்றோர், இன்று தங்கத் தாம்பாளத்தில் தயிர் சோறு சாப்பிடும் நிலைகள்தான். அரசியல் அதிகாரம் என்பது ஒரு கற்பகத்தருவாக இன்று கனி தருகிறது. 

சாதாரண வார்டு கவுன்சிலர் முதல் அமைச்சர் நிலைவரை மட்டுமல்ல எதிர்க் கட்சி எம் எல் ஏ க்களாக இருந்தாலும் கூட பொருளாதார ரீதியில் தங்களின் நிலைகளை உயர்த்திக் கொள்ளும் மந்திரக் கயிறும் அலாவுதீன் விளக்கும் அலிபாபா குகையும்தான் அரசியல் அதிகாரம் என்று ஆகிவிட்டது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத்தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர், பதவியை விட்டுப் போகும்போது அவருக்கு சொந்தமாக ஒரு தொலைக் காட்சி சேனல் , ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு கலைக் கல்லூரி, நிறைய நிலபுலங்கள் ஆகியவை சொந்தமாகிப் போகின்றன. வேலை இல்லாமல் வேட்டியாகத் திரிந்து கொண்டிருந்த ஒருவர் ஒரு கட்சியும் அதற்கு ஒரு கொடியும் வைத்துக் கொண்டு,ஒரு லெட்டர் பேடையும் பத்து வெத்து வேட்டுக்களையும் கூட வைத்துக் கொண்டு வருகின்ற தேர்தலில் எங்கள் ஆதரவு இன்னாருக்கே என்று அறிவிக்கிறார். முதலமைச்சரைக் கூட சந்தித்து மாலை போட்டு ஆதரவு தெரிவிக்கிறார். அப்போது எடுத்த போட்டோவை பழனி சித்த வைத்தியர்கள் போல் பலபேர்களிடமும் காட்டி தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக பிலிம் காட்டி பணம் பண்ணுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதி என்று அழைக்கப்படுவது ஒரு ஐ ஏ எஸ் படித்த அதிகாரிக்கு இருக்கும் மதிப்பைவிட அதிகம். அரசியலில் இருப்பது இப்படி ஒரு அளவிடமுடியாத வருமானத்தைத தரும் தொழிலாக மாறிப் போய்விட்டது. 

அண்மையில் பத்திரிகையில் வந்த தலைப்புச் செய்திகளில் ஒன்று மத்திய அமைச்சர் கபில் சிபிலி ன் சொத்து மதிப்பு, கடந்த முறை அவர் கொடுத்திருந்த மதிப்பில் இருந்து மூன்று மடங்கு அதிகமாகிவிட்டதாகச் சொன்னது. பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த (இருக்கும்) திருமதி மீரா குமார் அவர்களின் சொத்து மதிப்பு சிலபல கோடிகள் அண்மையில் அதிகமாகிவிட்டன என்றும் பத்திரிகைகள் படம் போட்டுக் காட்டின. இவர்கள் இருவரும் வெறும் உதாரணங்களே. ஆனாலும் இவர்கள் பதவிக்கு வரும் முன்பே பணக்காரர்கள்தான். அத்துடன் தாங்கள் வகிக்கும் பதவிக்குரிய முழுச் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக் கொண்டவர்கள். மேலும் உயர்ந்து கொண்டே வரும் நிலம் முதலிய அசையாச் சொத்துக்களின் மதிப்புக் கூடுதல் இவர்களின் சொத்துக்களின் மதிப்பையும் கூட்டிக் காண்பிக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. 

ஆனால் , பதவிக்கு வரும் முன்பு தான் பணக கஷ்டத்தில் இருப்பதாக பத்திரிகைகளில் பேட்டி கொடுத்த – பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகொயோர் வசூல் செய்து கொடுத்த சுமார் ஒன்றரைக் கோடி ரூபாயில்தான் செலவுகளை சமாளித்து வந்ததாகவும் சொல்லி, தேர்தலை எதிர் கொண்டு வெற்றி பெற்றதும் அரசின் சலுகைகள் எதுவும் தனக்கு வேண்டாமென்றும் அடையாளமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொண்டு முதலமைச்சர் பணியை மக்களுக்கானத் தொண்டாக செய்வதாக அறிவித்த இன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது வருமானத்துக்கும் அதிகமாக அளப்பரிய அளவு சொத்துக்களை வாங்கிக் குவித்துப் போட்டு இருப்பதாக நீண்ட காலமாக ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த கஜினி முகமது காலத்து வழக்கின் வரலாறு பெரும்பாலும் அனைவரும் அறிந்ததுதான்.

இதே போல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் திமுக அமைச்சர்களாக இருந்த பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தென்னரசு ஆகியோர் மீதும் நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்த வழக்குகளின் சட்டபூர்வமான ஆட்சேபத்துக்குரிய சொத்துக்களின் மதிப்பு பெரிய மதிப்பு வாய்ந்தவை அல்ல. நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற அடிப்படையில் சிறிய அளவு குற்றமானாலும் குற்றம் குற்றமே . அவை ஒரு நீதிமன்றத்தில் அதனதன் நியமங்களுக்கு உட்பட்டு நடைபெற்று வருகின்றன. 

ஆனால் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீதான வழக்கு பல பரிணாமங்களைக் கொண்டது; பதினேழு ஆண்டுகள் வயது நிரம்பிய வழக்கு அது. பலமுறை இழுத்தடிக்க்கப் பட்டு தா! தா! வாய்தா என்று இந்த வழக்கே ஒரு தாத்தா ஆகும் நிலைக்கு வந்துவிட்டது. அந்த வரலாற்றை சுருக்கமாகப் பார்க்கலாம். 

நவீனகால நாரதரான, டாக்டர் சுப்பிரமணிய சுவாமி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1996 ஜூன் 14ம் தேதி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அதுபற்றி விசாரிக்க உத்தரவிடவேண்டுமேன்ரும் கேட்டுக் கொண்டு இருந்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணை நடத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதை அப்போது தலைமை போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகா சரண், புகார் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் அதிகாரி வி.சி. பெருமாளுக்கு 26.6.1996 அன்று உத்தரவிட்டார். அவர் விசாரணை அறிக்கை கொடுத்தபின், இவ்வழக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 1997 ஜூன் 4ம் தேதி சென்னை தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மறுநாள், வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோருக்கு சம்மன்கள் அனுப்பப்பட்டன. 1997 அக்டோபர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில், 39 சாட்சிகளைத்தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் 2001 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த செல்வி ஜெயலலிதா, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது சென்னையில் நடந்து வந்த விசாரணையில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து, 2002 நவம்பர் முதல் 2003 பிப்ரவரி 21ம் தேதி வரை விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 விதியின்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல், நீதிமன்ற உத்தரவின்படி நேரில் சென்று கேள்வி கேட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதனிடையே குற்றம் சாட்டப்பட்டவரின் கீழே உள்ள நீதி நிர்வாகத்தில் இந்த வழக்கை நடத்தினால் உரிய நீதி கிடைக்காமலிருக்க வாய்ப்புக்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி, இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக்கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதையேற்று சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்கு 2003 பிப்ரவரி 28ம் தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம், இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்து 2003 நவம்பர் 18ம் தேதி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சென்னை தனி நீதிமன்றம், வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை 2004 செப்டம்பர் 10ம் தேதி பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் சார்பில் தனி நீதிமன்றம், தனி நீதிபதி, தனி அரசு வழக்கறிஞர் என நியமனம் செய்யப்பட்டு 2005 பிப்ரவரி முதல் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. அவை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

சொத்துக்குவிப்பு வழக்கு 1.7.1991க்கு முன் இருந்த சொத்துக்கள் 1.7.1991 முதல் 30.4.1996 வரை சேர்த்த சொத்துக்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.

வழக்கு காலத்திற்கு முன் ரூபாய் 2 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததும், வழக்கு காலத்திற்கு பின் சொத்து மதிப்பு ரூபாய் 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கில், குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் முதல் குற்றவாளியாக காட்டப்பட்டுள்ள செல்வி ஜெயலலிதா தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த சம்பந்தமான உறவினர்கள் ஆவார்கள். (நன்றி: தினகரன், முரசொலி, முன்னாள் தினத்தந்தி, மாலைமுரசு, நக்கீரன் )

இந்த வழக்கின் அடிப்படை, முதல் குற்றவாளியும் இரண்டாவது குற்றவாளியும் குற்றம் இழைக்கப்பட்டகாலத்தில் ஒரே வீட்டில் குடியிருந்தார்கள் என்பதாகும். இதை மெய்ப்பிப்பதற்காக 9 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 1 முதல் 4 வரையிலான குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கான பல கம்பெனிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச்சதி செய்து, முதல் குற்றவாளி முதலமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும், அவரைச்சார்ந்த மற்ற 3 குற்றவாளிகளூக்காகவும் சேர்த்து தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் நோக்கமும் அடிப்படையுமாகும். 

இந்த வழக்கில் பல தடைகளுக்குப் பிறகு அரசு வழக்கறிஞர் பவானிசிங் கடந்த வாரம் ஆஜராகி, ஏற்கனவே அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விவரத்தை எடுத்துரைத்தார். அப்போது, ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாட்டில் 800 ஏக்கர் நிலமும், ஊத்துக்கோட்டையில் 200 ஏக்கர் நிலமும், 25 ஏக்கர் பங்களா நிலமும், உள்ளதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் அவர் படித்துக்காண்பித்தார்.

‘’அந்த நிலங்களை, அப்போது அரசுப்பணியில் இருந்த வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் என்பவரை முறைகேடாக சொந்தத்தேவைகளுக்குப் பயன்படுத்தி, நிலங்களை அவர் ஆய்வு செய்த பிறகு வாங்கப்பட்டுள்ளன’’ என்றும் பவானிசிங் குறிப்பிட்டார். மேலும், வாகனங்கள் வாங்கிக்கொடுத்தவர்கள் அளித்த சாட்சியங்களின் விவரத்தையும் பவானிசிங், நீதிபதியிடம் எடுத்துரைத்தார்.

அப்போது அவர், ‘’வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலைக்கும், அவர்கள் வாங்கிக்குவித்துள்ள நிலங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. இவை அனைத்தும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதன் மூலம் வாங்கப்பட்ட நிலங்கள் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது’’ என்று வாதிட்டார்.

‘’1991 ம் ஆண்டு ஜூலைத்திங்கள் முதல் 1996 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரையிலான அந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள், சேர்த்த சொத்துக்களின் அன்றைய மதிப்பு பல லட்சங்கள். இன்று அதன் மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி உள்ளது’’ என்றும் பவானிசிங் தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.

வழக்கின் பிராதானமான அம்சம், ஒரு பிரம்மாண்டமான ஆடம்பரத் திருமணம் ஆகும். ஒரு மங்களகரமான திருமணம் இவ்வளவு சட்டச்சிக்கலை ஏற்படுத்துமென்று நீதி நியாயங்களை மீறி உற்சாகமாக இந்தத்திருமணத்தை முன்னின்று நடத்திய யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஓட்டு மொத்த அதிகார வட்டம் ஒருங்கிணைந்து இந்தத் திருமணத்தை நடத்தியது. மூன்றாவது குற்றாவளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனை முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள செல்வி ஜெயலலிதா, தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்தார். இந்தத் திருமணத்திற்காக பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. இந்த வழக்கில் இந்த திருமணத்துக்கான செலவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 

அரசு வழக்குரைஞரான பவானி சிங் உடைய உதவியாளர் வழக்கறிஞர்முருகேஷ் மரடி, பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட சாட்சிகளின் விபரங்களை நீதிபதி முன்பு படித்துக் காண்பித்தார். அதில், குற்றாளிகள் பல நிறுவனங்களை வாங்கியதற்கான ஆவணங்கள் குறித்தும் , அந்த நிறுவனங்களின் பெயரிலேயே பல அசையாச்சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ள விவரங்களையும் அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான சென்னையை அடுத்த சிறுதாவூரில் 22 ஏக்கர் நிலத்தை சுதாகரன் மிரட்டி வாங்கியது குறித்து அளிக்கப்பட்ட சாட்சியத்தினை நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார்.

அடுத்து, சசிகலாவும், இளவரசனும் சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவை சுற்றிப்பார்த்து அதை வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் வழங்கியிருந்த சாட்சியத்தை படித்துக் காண்பித்தார்.

அதே போன்று நீலாங்கரையில் நீச்சல் குளம் உள்ளிட்ட ஒரு பங்களா அமைந்த இடத்தினை சுதாகரன் வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் அளித்திருந்த சாட்சியத்தையும் நீதிமன்றத்தில் பவானிசிங் படித்தார்.

மேலும், ஜெயலலிதா கொடநாட்டில் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தினை சீரமைக்க வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணனை அழைத்தது பற்றி அந்த அதிகாரியே சாட்சியம் அளித்துள்ளதைப் படித்து காண்பித்தார்.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்வி ஜெயலலிதாவும் மற்றும் குற்றம் சாட்டப் பட்டுள்ள சசிகலா உட்பட மற்றவர்களும் வாங்கி குவித்ததாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பட்டியலிட்ட சொத்துக்களில் சில. இதய வியாதி உள்ளவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம். 
  • போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு 7.30 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. 
  • வாலாஜா பாத்தில் 600 ஏக்கர்
  • சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா 5 .40 கோடி.
  • நீலாங்கரையில் 2 ஏக்கர்.
  • நமது எம்ஜியார் பத்திரிகையின் சொத்து மதிப்பு 2. 13 கோடி.
  • கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள் ( இங்கு ஒரு ஏக்கர் ரூபாய். -5 -கோடி மதிப்பு இருக்கும் . இது மட்டுமே 4 ஆயிரம் கோடியைத் தாண்டும். இது கூட ஒரு உத்தேசமான மதிப்பே.
  • காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.
  • கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் 1190 ஏக்கர்.
  • தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
  • ரேவரே அக்ரோ பாரம் என்ற பெயரில் 100 ஏக்கர்.
  • 30 வகையான மற்றும் வண்ணங்களில் விதவிதமான கார்கள், வாகனங்கள்.
  • ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.
  • வழக்கில் குற்றம் சாட்டபப்ட்டுள்ளவர்களுக்கு சொந்தமான கம்பெனிகளின் முதலீட்டு மதிப்பு 3.05 கோடி.
தமிழக அரசால் நியமனம் செய்யப்பட ஜெயபால் என்கிற மதிப்பீட்டாளர் கொடுத்துள்ள கணக்குப்படி , ஈக்காட்டுத் தாஙளில் 20.43 லட்சம், சோழிங்க நல்லூரில் 29.59 லட்சம் மயிலாப்பூரில் 53.11 லட்சம் , நந்தனம் பட்டம்மாள் தெருவில் 80.37 லட்சம் , கிண்டி திரு. வி. க. தொழில் பேட்டையில் சொத்து மதிப்பு 77 லட்சம் என்றெல்லாம் கூட கணக்கிடப்பட்டு இருக்கின்றன. 

இரண்டு வருடங்களில் முதலமைச்சர் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்றதன் மூலம் அவரது மொத்த வருமானம் இருபத்தி நாலு ரூபாய் மட்டுமே. ஆனால் அந்த இருபத்திநாலு ரூபாயில் அவர் வாங்கிவைத்திருந்த தங்க நகைகளின் மதிப்பு இருபத்தி மூன்று கிலோ. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட உயர்ந்த ரக வெளிநாட்டுக் கடிகாரங்களின் எண்ணிக்கை ஏழு. அவற்றில் தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது. ஒன்றின் விலை ஐந்து இலட்சம் மற்றொன்றின் விலை மூன்று இலட்சம். இதை ஐ. எம் நமாசி என்கிற மதிப்பீட்டாளர் சாட்சியமாகப் பகிர்ந்து இருக்கிறார். இது போக 91 கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ஒன்பது இலட்சமாம். 

அரசின் வேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், சுதாகரனால் முறைகேடாக சொந்த தேவைகளுக்காக அனுப்பப்பட்டு, அவர் திருநெல்வேலியில் 1190 ஏக்கர் நிலத்தினை ஆய்வு செய்த பிறகு, வாங்கியது குறித்த ஆதாரத்தையும் சாட்சியத்தையும் பவானி சிங் நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார்.

சென்னை அருகே உள்ள வாலாஜாபாத்தில் 100 ஏக்கர் நிலத்தினை அந்த இடத்தின் உரிமையாளர்களை அணுகி, வாங்கிக்கொடுத்த நிலத்தரகர் ராஜாராம் வழங்கியிருந்த சாட்சியத்தையும் படித்துக்காண்பித்தார்.

இவ்வாறு ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளால் வாங்கப்பட்ட பல சொத்துக்கள் தொடர்பான விவரங்களையும், அது தொடர்பான சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் . 

தமிழக அரசின் பொதுப் பணித்துறையில் முதன்மைப் பொறியாளராக இருந்த மாரியப்பன் என்பவரும் இந்த சொத்துக்களை அடையாளம் காட்டி சாட்சியம் அளித்துள்ளார் என்று அரசு வக்கீல் படித்துக் காட்டினார். 

"சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான 5 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டசொத்துக்கள் இன்றைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள வையாக விளங்குகின்றன’’ என்று நாடே அதிரும் வண்ணம் குறிப்பிட்டார்.

பீகாரின் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடை தீவன ஊழல் வழக்கு நடத்தப் பட்டு லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு அனுப்பப்பட்டார். இதனால் அவரது எம் பி பதவியும் பறிக்கப்பட்டது. சுக்ராம் என்கிற தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஒருவர் வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. ஹிதேன் தேசாய் என்கிற மத்திய சுகாதாரத்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு அதிகாரி மருத்துவக்கல்லூரிகளுக்காக விதிகளை மீறி அனுமதிகள் வழங்கிய வழக்கில் அவரது வீடு சோதனையிடப்பட்டபோது பல லட்சக்கணக்கான ரூபாய் கரன்சி நோட்டுகளும் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கர்நாடகாவில் எடியூரப்பா, மராட்டியத்தில் ஆதர்ஷ் வீட்டு ஊழல் , கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் என்று இப்படி அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து செர்த்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனாலும் செல்வி ஜெயலலிதா வின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எல்லோருக்கும், “ பெப்பே” காட்டுகிறது. 

நாமாக எதையும் எழுத விரும்பவில்லை. இவை யாவும் நமது கற்பனையல்ல. இங்கே தொகுக்கப்பட்டவை யாவும் நீதிமன்றத்தின் முன் எடுத்து வைக்கப்பட்டவையே. தீர்ப்பு நீதிமன்றத்தில் வர இருக்கிறது. இவைகள் உண்மையா அல்லது ஜோடிக்கப்பட்டவையா என்பது தீர்ப்பில் தெரிந்துவிடும். 

இதே போல் இன்னொரு மயக்கம் தரும் சொத்துப் பட்டியலை, இதே வலைதளத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர் வைத்திருந்ததையும் ஒரு முறை வெளியிட்டு இருக்கிறோம். 

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கிறோம்.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்."

   அதிரைநிருபர் பதிப்பகம்   

11 comments:

  1. தல சுத்துதே... என்ன கருத்துச் சொல்றது...?

    யபா...!

    ReplyDelete
  2. // (நன்றி: தினகரன், முரசொலி, முன்னாள் தினத்தந்தி, மாலைமுரசு, நக்கீரன் )//

    ரசிக்கத்தக்க குசும்பு!

    ReplyDelete
  3. இப்போது பார்க்கும் டி வி செய்திகளில் இந்தியர்களுக்குத்தான் அளவுக்கு அதிகமான அம்னீசியா இருப்பதாக தெரிகிறது.

    இருப்பினும் இதற்கு முன் நடந்த தேர்தலில் [ 2011? ]

    பேசப்பட்ட விசயங்களும் அதற்கு முன்னும் / பின்னும் நடந்த விசயங்களும் உங்கள் ஞாபகத்திற்காக

    1. அதிராம்பட்டினத்தில் பேசிய விஜய்காந்த மனைவி அல்-அமீன் பள்ளிக்கு உடன் தீர்வு காணப்படும் என்று பேசினார் ..அந்த அம்மா தீர்த்து வச்சிடுச்சா?

    2. இலங்கையில் பிரபாகரன் இறந்த தருணத்திற்கு சில நாட்களுக்கு முன் நடந்த உட்ச கட்ட போரின்போது வாய்திறந்து ஒரு வார்த்தையும் பேசாத கருணாநிதி தனது பேரப்பிள்ளை / பிள்ளைகள் இவர்களின் அமைச்சர் பதவி விசயமாக டெல்லியில் தனது உடல்நிலையும் பொருட்படுத்தாமல் சக்கர வண்டியியிலேயே சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஆட்களிடம் தவ கிடந்தார்----இப்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதா காரணம் என சொல்கிறார்.

    3. ராஜ பக்சே தமிழர்களை கொன்று குவித்தான் என்றவர்கள் நம் சக முஸ்லீம் இனத்தையே வன்முறைக்கு பழி கொடுத்த மோடிக்கு ஆதரவு தருகிறார்கள்---- நமது சகோதரர்களின் உயிரும் , நமது பெண்களின் மானமும் அவ்வளவு கேவலமாக போய் விட்டதா?

    4. விஜய்காந்த் நிதானத்தில் இல்லை...எப்போதும் குடி போதையில் உளருகிறார் என்ற டாக்டர் ராமதாஸ் இன்று விஜய்காந்த்துடன் கூட்டணி!!

    5. தவ்ஹீத் ஜமாத் எடுத்த முடிவில் [ ஜெயலலிதாவுக்கு ஆதரவு ] ...அவர்களுக்கே நெருடலாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் ஏன் ஆதரவு கொடுத்ததற்கெல்லாம் விளக்க கூட்டம் ? [ மற்ற கட்சிகள் இதை செய்கிறதா? ]

    6. . தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும்போது இவ்வளவு பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் இந்தியா கொஞ்சம் கூட இலங்கையை மிரட்டாமல் எந்த தைரியத்தில் கடலோர பகுதிகளில் காங்கிரஸ் தேர்தலில் நிற்கிறது ?



    இஸ்லாமியர்களை ஒட்டுக்காக மட்டும் பயன்படுத்தும் இத்தனை ஏமாற்றுக்காரர்களையும் வேட்பாளர்களாக கொண்ட தேர்தலில் மக்கள் எந்த தைரியத்தில் நம்பிக்கையில் ஒட்டுப்போடுகிறார்கள் என்று தெரிய வில்லை....



    ReplyDelete
  4. ஆதார புருஷர்கள் ! அயர்ந்து உரங்கிக் கொண்டிருப்பார்கள் (அப்பாடா !)

    அசத்தல் காக்கா,

    //இப்போது பார்க்கும் டி வி செய்திகளில் இந்தியர்களுக்குத்தான் அளவுக்கு அதிகமான அம்னீசியா இருப்பதாக தெரிகிறது.//

    :) இது மட்டுமா ? இன்னும் இருக்கே...!

    ReplyDelete
  5. கைதிகளாகப் போகின்றாவர்களின் டைரி(yea)

    ReplyDelete
  6. மருமகன் ஜாஹிர் சொன்னது// இஸ்லாமியர்களை ஒட்டுக்காக மட்டும் பயன் படுத்தும்........// தேர்தல் நடப்பதே' மக்களுக்கு இன்னும் அம்னிசியா இருக்கா? இல்லையா?' என்பதை Test பண்ணி பார்ப்பதற்க்கே அன்றி வேறு எதற்க்கும் அல்ல! 'உண்டு! உண்டு! உண்டு!'என்றுமுரசுதட்டி நிருபித்தே காட்டுவோம்!

    ReplyDelete
  7. எத்தனை லஞ்ச ஒழிப்பு துறைகள் இருந்தும் இந்தியாவை பொறுத்த மட்டில் வெத்துதான் அந்த துறை ஒழுங்காக செயல்பட்டிருந்தால் அரசியைல் தலைவர்களின் சொத்து குவிப்பு பட்டியல்கள் தொடராது

    இந்திய மக்கள் வரிப்பணமெல்லாம் அரசியல் வாதிகளின் சொந்த சொத்துக்களாக மாறும்போது அரசியல் வியாபரத்தில் ஈடுபட யாருக்கு ஆசை வராது

    கட்சி ஆரம்பிப்பதும் நிறைய வாய்ச்சவடால்கள் விட்டு மக்களை முட்டாளாக்கி வரிப்பணங்கலையும் லஞ்சத்தால் பல கோடிகளையும் தன் சொந்த சொத்தாக சேர்ப்பதற்குதான் என்பது நமக்கு புரிந்திருந்தும் நம் அறியாமையால் விட்டில் பூச்சிகளைப்போல் அந்த கொள்ளையர்களுக்கு கொடி பிடித்து அவர்களை மீண்டும் மீண்டும் கொள்ளயடிக்க லைசன்ஸ் வாங்கி கொடுத்து அரியணையில் ஏத்தி வைக்கும் நாம் தான் பெறும் முட்டாள்கள்

    மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
    தான் மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்ளுவார்

    இந்த பாட்டு பொய்யாகவில்லையே

    இப்படி சொத்து சேர்ப்பவர்களுக்கும் தேச துரோகிகளுக்கும், கிரிமினல்களுக்கும்
    இஸ்லாமிய சட்டத்தை பாச்சி இஸ்லாமிய தண்டனை தண்டனை கொடுத்தால்
    ஒரு பய அரசியல் செய்ய ஆசைப்படமாட்டான்

    புதுசா கட்சிகள் உறுவாகாது
    ஒவ்வோரு கட்சிகளுக்கு இடையில் இருக்கும் குரோதமிருக்காது ஒருத்தனை ஒருத்தன் அடித்து சாப்பிடும் அளவுக்கு வெறி கிளம்பாது

    மக்களிடம் அமைதி இருக்கும் ஆரவாரம் இருக்காது
    குணமிருக்கும் குரோதமிருக்காது
    மக்களின் வரிப்பணம் மக்களுக்கே கிடைக்கும்

    ஓவ்வொருத்தரின் சொத்து குவிப்பு வழக்குக்காக தனி நீதிமண்றம் அமைத்து மக்களின் வரிப்பணம் வீனாகாது

    இல்லாவிட்டல்
    இந்த அரசியல் வாதிகளின் கொள்ளைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் ஜப்பானில் உள்ளபடி யாகுசா குரூப் ஒன்று இந்தியாவில் பாம் ஆனால்தான் இவர்களை சீர் செய்ய முடியும்

    ReplyDelete
  8. //இதே போல்இன்னொரு மயக்கம் தரும் தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பத்தினர்.....//[அ.நி.Editorial.]உலகஉருண்டையை ஒன்பதுமுறை சுற்றிவரும் நீளத்திற்க்கு Editorial எழுதினாலும் புத்தியும் சொரணையும் கொண்ட மக்கள் இங்கே இல்லை! போட்டுக்கொண்டே இருப்பார்கள் ஒட்டு!

    ReplyDelete
  9. ''//விஜயகாந்த் எப்போதும் குடிபோதையில்உளறுகிறார்....''என்று சொன்ன ராமதாஸ் விஜயகாந்த்தோடுகூட்டு சேர்ந்தது ஏன்?'' மருமகன் ஜாஹிரின் கேள்வி// விசய காந்துடன் கூட்டு சேர்ந்த தற்கு 'விசயம்' இருக்கு!

    ReplyDelete
  10. என்னங்க இது rubber மாதிரி இழுக்குது.இழுத்தாலும் நல்லா ஈஈக்குது.இவ்வளவு விசித்திரமான அரசியலா?...well,author done with nice concept .keep on do it.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.