Saturday, February 04, 2017

அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் ?


அதென்னவோ தெரியவில்லை . உலகம் இப்போதெல்லாம் ஒரு தினுசான மனநிலை கொண்டவர்களையே ஆளும் பொறுப்பில் அமர்த்துகிறது.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த  அகதிகளை அமெரிக்காவில் அனுமதிக்க தடைவித்து  உத்தரவிட்டு இருக்கிறார். ஏமன், சூடான்,ஈராக், லிபியா, ஈரான் ,சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளே தடை செய்யப்பட்டுள்ள நாடுகள்.

அகதிகள் குடியேற்றம் என்கிற மனிதாபிமானம் சார்ந்த முறையின் அடித்தளத்தையே இந்த  முடிவு ஆட்டி அசைத்து  இருக்கிறது. காரணம், உலகில் எங்கெல்லாம் அரசியல் காரணங்களால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறதோ   , அந்தநாடுகளின் மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புலம் பெயர்ந்து பல நாடுகளுக்கும் சென்று குடியேறுவது காலம்காலமாக கடைப்பிடிக்கப்படுகிற நடைமுறை.  

இத்தகைய குடியேற்றங்களின் வரலாறு நெடியது;  நீண்டது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் உலகின் எல்லா நாடுகளிலும் இருந்தும் பல்வேறு காலகட்டங்களில் அல்லல்களுக்கு  ஆளான மக்கள் , அகதிகளாக குடிபுகுந்து இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.  

பாலஸ்தீனத்தின் வரலாறைப் படிக்கும்போது பல்வேறு காலகட்டங்களில் யூதர்கள் உலக நாடுகள் அனைத்துக்கும் அகதிகளாகச் சென்று இருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

பின்னர் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டபோது பாலஸதீன மக்கள் பல்வேறு அரபுனாடுகளுக்கும் உலக நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்று குடியேறினார்கள்.

பாகிஸ்தானுக்கும் வங்க தேசத்துக்கும் போர் நடைபெற்ற போது கூட்டம் கூட்டமாக மக்கள் அருகில் இருந்த இந்தியாவுக்குள் குடி புகுந்தார்கள். அதனால் ஏற்பட்ட எதிர்பாராத செலவுகளை சரிக்கட்டுவதற்காக,  அகதிகள் புனர்வாழ்வு ( Refugees Relief Fund) தபால் தலை ஐந்து பைசா கட்டணம் வைத்து வசூலிக்கப்பட்டதை பலர் மறந்து இருக்க இயலாது.    

இலங்கையில் இனப் பிரச்னை ஏற்பட்ட போது புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகம் முழுதும் பரவி வாழ்ந்து வருகிறார்கள்.

அவ்வளவு ஏன்? அமெரிக்காவே உலகம் முழுதும் இருந்து வந்து குடியேறிய மக்களின் கூட்டம் நிரம்பிய நாடுதானே. ஆய்ந்து பார்த்தால் இதே டொனால்ட் டிரம்ப்  உடைய முன்னோர்கள் கூட  வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் புகுந்தவர்களாகவே  இருப்பார்கள். இன்று அமெரிக்கா கண்டுள்ள  வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தங்களின் இரத்தத்தை வேர்வையாக வடித்தவர்கள் உலகம் முழுதும் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான் என்ற  உண்மையை டொனால்ட் ட்ரம்ப் மறுப்பாரானால் அவர் எந்த   நாட்டின் அதிபராக இருக்கிறாரோ அந்த நாட்டின் ஆரம்பகால வரலாறையே அறியாதவராகத்தான் இருப்பதாகக் கொள்ள வேண்டும். அதற்குப் பின் அறிவுபூர்வமான எதையும் அவர் இடமிருந்து எதிர்பார்க்க இயலாது.

மனிதாபிமானம் இல்லாமல் இன்று அமெரிக்க அதிபர் எடுத்துடுள்ள  முடிவு யாருக்கு எதிராக என்றால் உண்மையிலேயே உலக மக்களின் அரவணைப்பும் ஆதரவும் தேவைப்படும் மக்களைக் கொண்ட நாடுகளை எதிர்த்துத்தான் என்ற உண்மை  மிகவும் வேதனையில் ஆழ்த்துவதாகும். எந்த மக்களுக்கு உதவிகள் தேவையோ அந்த மக்களைச் சேர்ந்த நாட்டின் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது.

உலகெங்கும் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளால் வாழவழியற்ற அகதிகள் சமுதாயம் உருவாகிற சூழல்களில் எல்லாம் அகதிகளை அரவணைப்பதில் ஜெர்மனி, சுவிஸ், அமெரிக்கா, கனடா,    பிரிட்டன், ஆகிய நாடுகள்      குறிப்பிடத் தகுந்தவைகளாகும். இப்போது உதவிக்கரம் தேவைப்படும் சூழலில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆதரவளிக்க  அமெரிக்கா தனது கரத்தை சுருட்டிக் கொண்டிருப்பதன் பின்னணியில் தீவிரவாதம் என்கிற புஸ்வானம்தான் காரணமாக சொல்லப்படுகிறது. 

ஆனால் , ஆப்கான், பாகிஸ்தான் முதலிய நாடுகள் டொனால்ட் ட்ரம்ப் உடைய தடைப் பட்டியலில் காணப்படாதது அவரது உள்நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.

டொனால்ட் ட்ரம்ப், தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய வர்த்தக நிறுவனங்களின் இயக்குனர். இன்று அவரது தடைப் பட்டியலில் உள்ள நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் எல்லாம் அவரது வணிகத்தின் வலை விரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தடைப் பட்டியலில் உள்ள நாடுகளில் டொனால்ட் ட்ரம்ப் உடைய நிறுவனங்கள்  இயங்கவில்லை என்றும் நாமல்ல, INDEPENDENT  என்கிற  பத்திரிக்கை இவ்வாறு  குறிப்பிடுகிறது.

“As controversy rages about President Donald Trump’s travel ban, critics have pointed out that the seven predominantly Muslim countries whose citizens have been barred have one thing in common – they are not among the places where the tycoon does business.”

அதே பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகிறது

“ The executive order Mr Trump signed blocks entry for the next 90 days to travellers from Syria, Iran, Iraq, Yemen, Sudan, Somalia and Yemen but excluded from the list are several wealthier Muslim majority countries where the Trump Organisation has business interest, including Saudi Arabia, Lebanon, Turkey, the UAE, Egypt and Indonesia.”

வந்தாரை வரவேற்ற அமெரிக்காவில் தற்போது விசா தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரவேண்டாம் என்று தடுக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமே என்பதும் கிருத்தவ சகோதரர்களுக்கு அந்தத்தடை இல்லை என்பதும் நாகரிகத்தை நோக்கி நகரும் உலகின் உள்ளத்தை  உலுக்கிப் பார்க்கிறது.

முஸ்லிமகள்தான் தீவிரவாதத்தை உலகில் பரப்புகிறார்கள் என்கிற அவதூறுக்கு அடியுரம் இடுவதைப் போல இருக்கிறது டொனால்ட் ட்ரம்ப் உடைய செயல்.

முதல் உலகப் போரையும் இரண்டாம் உலகப் போரையும் நடத்தியவர்களும் தூண்டியவர்களும்  முஸ்லிம்களா? ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டை வீசியவர்கள் முஸ்லிம்களா? வட அமெரிக்காவில் 100 மில்லியன் இந்தியர்களைக் கொன்றவர்கள் முஸ்லிம்களா? தென் அமெரிக்காவில் 50 மில்லியன் இந்தியர்களைக் கொன்றவர்கள் முஸ்லிம்களா? 180 மில்லியன் ஆப்ரிகர்களை அடிமைகளாக இழுத்துச் சென்று அவர்களில் 88% சதவீத மக்களை இறந்து விட்டார்கள் என்று நடுக்கடலில் வீசி எறிந்துவிட்டு கைகளை டிஷ்யூ பேப்பரில் துடைத்தது முஸ்லிம்களா? ஈராக்கில் புகுந்தவர்கள் யார்? இஸ்ரேலில் பாலஸ்தீனியர்களை குழிதோண்டிப் புதைப்பவர்கள் யார்? ஆப்கானில் நாட்டாண்மை  செய்து வருபவர்கள் யார்? உலக அரசியல் வன்முறைகளுக்கு காரணமாக முஸ்லிம்களை சொல்வது இட்டுக்கட்டிய சொத்தைவாதம் . வரலாறு இவ்வாறு இருக்க முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது யாரை திருப்தி படுத்த?

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது . இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான் MAKE IN INDIA என்ற கோஷத்தை முன் வைக்கிறது. ஆனால் முன்னேறிய அமெரிக்காவும் அதே  போல ஒரு கோஷத்தை அமெரிக்கர்களுக்கே வேலை என்றெல்லாம் முன்வைப்பது,  மோடியின் நாற்றம் அமெரிக்காவரை வீசுகிறதே என்று வியப்பாக இருக்கிறது.

உலகச் சந்தைப் பொருளாதாரத்தை , உலகமயமாக்கல் தத்துவத்தை , முதலாளித்துவ முன்னெடுப்பை உலகுக்கே சொல்லித்தந்து முன்வரிசையில் நின்றுகொண்டிருந்த அமெரிக்கா தனது வானளாவிய தந்துவங்களை ஒரு தகரப் பெட்டியில் அடைத்ததுபோல் அமெரிக்கர்கள் அமெரிக்கர்களுக்கே வேலை என்றெல்லாம் தனி அடையாளம் காண  ஆரம்பித்து இருப்பது டொனால்ட் ட்ரம்ப் நடத்தும் அரசியல், இதுவரையில் ஆனந்தராகம்  இசைத்த  கச்சேரியில்  அபஸ்வரமாக ஒலிக்கவில்லையா?

பொதுவுடைமைத் தத்துவத்தை சொல்லிக் கொண்டிருந்த சீனா போன்ற நாடுகள் உலகமயமாக்கல், உலகச் சந்தை என்று பேசத் தொடங்கி இருக்கும் இந்தக் காலத்தில்  முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கு மூலகாரணமான அமெரிக்கா,  தன்னை ஆளவந்த டொனால்டு ட்ரம்ப் உடைய காரியங்களால் தனது அடையாளத்தையும் மூல முகவரியையும் தொலைக்கத் தொடங்கி இருக்கிறது என்றுதான் துரதிஷ்டவசமாக  சொல்ல வேண்டி இருக்கிறது.

“பேய் அரசாள வந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் “ என்ற  பாரதியாரின் பாடல் வரிகளை இந்தியாவில் ஏற்கனவே கண்டு வருகிறோம். இப்போது அந்தப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்திருப்பது உலகில் சாத்தான்களின் கைகள் ஓங்கி வருகின்றன என்பதை சொல்லாமல் சொல்கிறது. இறைவன்தான் இந்த  உலகைக் காப்பாற்றவேண்டும்.

அதிரை இப்ராஹீம் அன்சாரி. M.Com;

No comments:

Post a Comment

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.