Saturday, February 11, 2017

நடிகையாயிருந்து... தலைவியாகி !

ம்முவுக்கும் எவிடாவுக்கும் நிறையவே தொடர்பு இருந்தது.... 

ஆரம்ப கால அவமானங்களிலும் சரி, சமகாலத்தின் விமர்சனங்களிலும் சரி, இறந்த பின் கொண்டாடப்பட்டதாகினும் சரி... எல்லாவற்றிலும் பத்தில் ஒன்பது பொருத்தம் இருந்தது. மிச்சம் ஒரு பொருத்தத்தில் தான் இருவரும் வித்தியாசப்பட்டனர்!

அம்முவின் அம்மா எப்படி  இரண்டாம் மனைவியோ அதுபோலவே எவிடாவின் அம்மாவும் 2ம் மனைவி!  வசதியாக இருந்த குடும்பம் தந்தையின் மறைவுக்கு பின் எப்படி திக்கு தெரியாத திசைக்கு பயணப்பட்டுக்கொண்டு சென்றதோ விதி அது போலவே அம்மு எவிடா வாழ்க்கையிலும் விளையாடி தீர்த்தது ! ஆனாலும் அவர்களே எதிர்பார்த்திருக்காத பல திருப்பங்களை தந்தது . இருவரும் நடிப்புத் துறைக்கு வந்ததும் பாதி திட்டமிட்ட நிகழ்வுகள் தான். சந்தர்ப்பங்கள் கை கூடின... அரசியலின் பிரவேசமும் அப்படி தான்! நாடே இவர்களின் பக்கம் பார்வையை செலுத்தியது.

மக்கள் ஓர் நடிகையை தலைவியாக்கி ஆட்சி அதிகாரம் கொடுத்தது "அம்மா" என வாயாற அழைத்து மகிழ்ந்தது இந்தியாவில் மட்டும் நிகழ்ந்த அத்திபூத்த சம்பவமல்ல... அர்ஜென்டினா மக்களாலும் ஓர் நடிகை  'நாட்டின் தாய்' என்னும்  உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டார். எவிடா என செல்லமாக அழைக்கப்பட்டவரான இவா பெரோன்... அம்மு என செல்லமாக அழைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கும் தான் எத்தனை விஷயங்களில் ஒத்து போகின்றன ?

இனி, இவா - ஜெயலலிதா என்றே அழைத்துக்கொள்வோம்.

ஜெ பற்றி நமக்கு நன்றாய் தெரியும். இவாவின் வாழ்க்கையும் கிட்டதட்ட அதே போல் அமைந்ததுதான் பெரும் ஆச்சர்யம். இவா வின் அம்மா இரண்டாம் மனைவி ஆனதால் தனக்கான உரிமைகளை இழந்து நின்றார். இரண்டாம் தாரத்தின் மனைவிக்கு பிறந்த குழந்தைகளும் சூழலின் புயலில் வெவ்வேறு திசைக்கு அழைக்கழிக்கப்பட்டனர்.   

அழகு, திறமை என அனைத்தும் ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவிற்கு அம்மா நடிகை என்ற  அடையாளத்தால் வாய்ப்புகள் தேடி வந்துகொண்டே இருந்தன.  நடிகையாகவேண்டும் என தன் முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக்க முயன்ற ஈவா  ,   ஊசலாடிய உயிருக்கு உதவ தன் பணத்தையெல்லாம் கொடுத்து அடுத்தொன்னும் செய்ய இயலா நிலையில் வாய்ப்பு தேடினார். இருவருக்கும் அதிஷ்ட்டம் வந்தது. வாய்ப்பு கிடைத்து. வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தினார்கள். தனது துறையில் ஜொலித்தார்கள்.

தாய்க்கு பின் அதற்கு ஈடான, அவ்விடத்தை நிரப்பும் எந்த உறவும் ஜெயலலிதா பெற்றிருக்கவில்லை. அதனால் தானோ என்னவோ தனக்கு ஏற்பட்ட தனிமையின் நீட்சியாய் அவரின் அணுகுமுறைகள் அமைந்திருந்தன. ஈவாவோ தந்தைக்கும் தாக்கும் பிறகும் காதலால் ஆசீர்வதிக்கப்பட்டாள்.  தனிபட்ட வாழ்க்கையில் தோல்வி கண்ட நிலையில் ஜெ அரசியல் பிரவேசம் கண்டார்.  ஈவாவோ அரசியல்வாதியான பெரோனின் கரம்பிடித்தாள். பல விமர்சனங்கள் கண்டபோதும் அரசியலில் இரு ஆளுமைகளும் அடைந்தது உச்சமே! இருவரை தவிர்த்த அரசியல் பக்கங்கள் பூர்த்தியிட முடியாதவை. காலம் கடந்த பின்னும் அவர்கள் கொண்டு வந்த சட்டங்களும் பெற்று தந்த உரிமைகளும் அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும் ! 

நடிகை என்பதையும் மீறி அவர்களிடமிருந்த ஆளுமைத்திறன் மட்டுமே அவர்களின் பெயரை வரலாற்றில் பொதிக்க காரணமாய் இருந்தது. ஒருவரின் புறத்தோற்றமும் தொழிலும் அவரைப்பற்றிய மதிப்பீடுகளுக்கு  முழுமை தந்துவிடாது. நிகழ்கால விமர்சனங்களும்  கூட எதிர்கால புகழை மட்டுப்படுத்திவிடாது ! 

ஆமினா முஹம்மத்

No comments:

Post a Comment

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.