Saturday, June 06, 2020

காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அரசியலும் ஆளுமையும்

இந்திய அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்க்கிற போது , இந்திய சுதந்திர
போராட்ட காலத்திலும் சரி , சுதந்திரம் பெற்ற பின்பு அரசியல் அமைப்பை கட்டமைத்து இனி வரும் காலங்களில் நாட்டை கொண்டு செலுத்துகிற தேசம் தழுவிய  அரசியலில் கோலோச்சிய தமிழக தலைவர்கள் சிலரது  பட்டியலில் இன்றளவும் பெருந்தலைவர் காமராஜர், முத்துராமலிங்கத்தேவர் போன்ற வெகு சிலரே  நினைவு கூறப்படுகிறார்கள். அப்படி நினைவுகூறத் தக்கோரின் பட்டியலில் நாம் பார்க்க வேண்டிய மற்றுமொரு மாபெரும் மக்கள் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்கள் ஆவார்கள். 

1896 ம் ஆண்டு ஜூன் 5 ம்தேதியில் பிறந்த திருநெல்வேலி பேட்டையில் பிறந்து ஒரு மாணவராக வளர்ந்த  முகம்மது இஸ்மாயில், மகாத்மா காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, காந்தியின் அறைகூவலுக்கு செவி சாய்த்து,  தான் எழுதவேண்டிய B.A இறுதியாண்டு பொதுத்தேர்வை புறக்கணித்து அரசியலில் கால்பதித்தார். 

முகமது அலி ஜின்னா வின் பாகிஸ்தான் பிரிவினைக்கோரிக்கையைத் தொடர்ந்து நாடு விடுதலை பெற்ற பிறகும் இந்த நாட்டில் எஞ்சி இருக்கிற சிறுபான்மை முஸ்லிம்களுக்காகவும் இதர தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களினத்துக்காகவும் குரல் கொடுக்க ,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்ற ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்த நாடெங்குமிருந்த தலைவர்கள் , அதன்  தேசியத்தலைவராக காயிதே மில்லத் அவர்களைத்  தேர்ந்தெடுக்கிறார்கள். 

முஸ்லிம் லீக் ஒன்றுபட்ட இந்தியாவில் ஒரே கட்சியாக இருந்த போது சேர்க்கப்பட்ட பொது நிதியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஒரு பங்கு தருகிறோம் என்று பாகிஸ்தான் தலைவர்கள் கேட்டபோது, எங்கள் நாடே பிரிந்துவிட்டது; உங்கள் பணம் எங்களுக்கு எதற்கு என்று உதறித்தள்ளிய உத்தமர் காயிதே மில்லத். 

 இந்திய அரசியலமைப்பு நிர்ணயக்குழுவில் இடம்பெற்று இன்று நாம் பின்பற்றும் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்க கருத்துக்களை எடுத்து வைத்த  பெருமைக்கும் காயிதே மில்லத் அவர்கள் சொந்தக்காரர்.  இந்த நாட்டுக்கு ஆட்சிமொழியாகும் தகுதி தமிழுக்கே உண்டு என்று அரசியல் நிர்ணய அவையில் அவர் எடுத்து வைத்த முழக்கம் , தமிழ் வாழும் காலமெல்லாம் வாழும். 

இந்திய  பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும்  அன்றைய மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு அடுத்த எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு   எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார்.

குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள உதவிய அரசியல் சிற்பிகளில் ஒருவராகத்திகழ்ந்தார். 

 தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் , 1962,67, 71  என தொடர்ந்து மூன்று முறை கேரளா மஞ்சேரி தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை எம்பியாக பணியாற்றினார். அந்த மூன்று முறையும் தனக்காக வாக்குக்கேட்டு அந்தத் தொகுதிக்கே போகாமல் மூன்று முறையும்,  "படுத்துக்கொண்டே ஜெயித்த"  உண்மையான தேசியத்தலைவராக திகழ்ந்தவர் . 

1967 ம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியை பிடிப்பதற்கு முக்கியப்பணி ஆற்றியவர் காயிதே மில்லத் ஆவார்கள். இன்றைக்கு தமிழகத்தில் புற்றீசல் போல இயக்கங்களை வைத்துக்கொண்டு ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் ஆலாய்ப்பறக்கிற காட்சிகளைக்காணும்போது , காயிதேமில்லத் எவ்வளவு பெரிய ஆளுமை மிக்க தலைவராக இருந்தார் என்பதை நாம் உணரமுடிகிறது.

 1967 கூட்டணி உருவாகி தொகுதிப்பங்கீடு தொடங்கிய போது 234 தொகுதிகளுக்கான பட்டியல் அண்ணாவிடமிருந்து காயிதே மில்லத்தின் வீடு இருந்த சென்னை புதுப்பேட்டைக்கு வந்தது. காயிதே மில்லத் அவர்கள் முதலில் தனக்கு வேண்டிய தொகுதிகளை  தேர்ந்தெடுத்த பிறகே மற்ற கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதே அண்ணாவின் திட்டம். காயிதே மில்லத் அவர்களை பனிரெண்டு தொகுதிகளை டிக் செய்யும்படி அண்ணா கேட்டார் . ஆனால் காயிதே மில்லத் அவர்கள் ஏழு தொகுதிகளை மட்டும் டிக் செய்து தேர்ந்தெடுத்த போது , இவை போதுமா என்று கேட்கப்பட்டது. போதும் என்று சொன்ன காயிதே மில்லத் அவர்கள் ஏழு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி ஏழு தொகுதிகளிலும் முஸ்லிம் லீகை  வெற்றி பெற வைத்தார். முஸ்லிம்களுக்கு முன்னுரிமை  தரப்பட்ட அந்தக் கால நினைவுகள்   நம்மிடையே பெருமூச்சை வரவழைக்கிறதே! 

இன்று நாம் பார்க்கும் இயக்கங்களின் எடுப்பார் கைப்பிள்ளை   அரசியலுக்கு இது ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம். காயிதே மில்லத் அவர்கள் காலத்தில் எப்படி இருந்த நாம் எப்படி ஆகிவிட்டோம் என்பதை இ்ந்த வரலாறு நமக்கு உணர்த்தினால் சரிதான். 

காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று அர்த்தம். கண்ணியமிகு காயிதேமில்லத் என்ற அடைமொழியை திராவிட இயக்கம் அவருக்கு வழங்கி சிறப்பித்தது. அதற்கான காரணம் நேரு , படேல், லால் பகதூர் சாஸ்திரி , அம்பேத்கர் , பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் என நாடு தழுவிய எல்லா தலைவர்களோடும் அவருக்கு  செல்வாக்கு மிகுந்த உறவு இருந்தது.  இந்திரா காந்தி அம்மையார் வங்கிகளை தேசியமயமாக்கிய போது காயிதே மில்லத் அவர்களிடமும் ஆலோசனை கேட்டதாக ஒரு செய்திக்குறிப்பு உண்டு. அவர்கள் வாழ்ந்த நாட்களில் அரசியலிலும் தனிப்பட்ட வாழ்விலும் காட்டிய கண்ணியம் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பாடமாக நிற்கிறது. 

1972ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காயிதேமில்லத் அனுமதிக்கப்பட்ட செய்தி கோவையில் சுற்றுப்பயணத்தில் இருந்த முதலமைச்சர் கலைஞருக்கு தெரிந்ததும் தனது பயணத்தை இடையில்  நிறுத்திவிட்டு உடனடியாக சென்னை திரும்புகிறார்.  ஸ்டான்லி மருத்துவமனையில் ,

 “ஐயா! நான் கருணாநிதி வந்திருக்கிறேன்!” என அவர் முன்னால் வணங்கி நின்றபோது கலைஞருடன் காயிதே மில்லத் உரையாடியது தான் அவர் கடைசியாக பேசியது என தென்காசி என்.கே.ரிபாயி தான் எழுதிய கவ்மின் காவலர் என்ற நூலில் குறிப்பிடுகிறார். 

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் இறுதியஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தந்தை பெரியார் வந்து அஞ்சலி செலுத்தினார். பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு காயிதே மில்லத் இறுதி ஊர்வலத்தின் போதும் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கட்தொகையை அன்றைய சென்னை மாநகரம் கண்டது. திருவல்லிக்கேணி வாலாஜா சாலை முழுதும் மனித தலைகளாக காட்சியளித்தது.  சென்னை அண்ணாசாலை அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டினார் கலைஞர். மடிப்பாக்கம் பெண்கள் கல்லூரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. ஒன்றிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும் அவரது பெயரை சூட்டினர் . 

சிறுபான்மை சமூகமாக இருந்தும் பல்வேறு இயக்கங்களாகவும் அமைப்புகளாகவும் பிரிந்துகிடக்கும் தற்போதைய இஸ்லாமிய சமூகத்துக்கு காயிதேமில்லத் போன்ற ஒரு தலைவர் தான் தேவை என்றால் அது மிகையில்லை. வெறுப்பரசியலும் ஆதாய அரசியலும் உச்சம் பெற்றுள்ள தற்போதைய சூழ்நிலையில் கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற ஒரு தலைவரின் இழப்பு , இஸ்லாமிய சமூகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த பொது சமூகத்துக்குமே ஈடுசெய்யமுடியாத இழப்பு தான். 

காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று சரியாக பல தலைவர்கள்  சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.  இது மிகவும் பொருத்தமானதே. 

எமது சக எழுத்தாளர் லிியாக்கத் அலி கலீமுல்லாஹ்  கூறுகிறார். " வழிகாட்டி என்கிற சொல்லுக்கு அரபியில் சாயிக், காயித் என்று இருவேறு பதங்கள் உள்ளன. ஒட்டகத்தின் மீது அமர்ந்துகொண்டு அதை சரியான பாதையில் செலுத்துபவர் சாயிக் எனப்படுவர். 

அந்த ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்து மேடு பள்ளங்கள் மற்றும் கரடுமுரடுகளில் அதன் கால்கள் இடறிவிடாமல் பக்குவமாக அழைத்துச் செல்பவர் காயித் எனப்படுவர்.

எவ்வித கரடுமுரடுகளிலும் கால்கள் இடறிவிழாமல் முஸ்லிம் சமுதாயத்தை வழிநடத்திச் சென்றதால் அவரை "காயிதே மில்லத்" என்றழைத்தோம்." 

காயிதேமில்லத் அவர்களுடைய 125 ஆம்  பிறந்த நாளில் நாம் பகிரும்  நமது நினைவலைகளில் சிலவே இவையாகும்.

காயிதே மில்லத் அவர்களின் சிறந்த மறுமைப்பதவிக்கு இறைஞ்சுகிறோம்.

-இபுராஹிம் அன்சாரி M.Com


காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அரசியலும் ஆளுமையும் http://adirainirubar.blogspot.com/2020/06/blog-post_6.html

Posted by Adirainirubar on Friday, June 5, 2020

2 comments:

  1. தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…
    ஜஜகல்லாஹ் கைர் காக்கா..

    கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் என்றைக்கும் நம் தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல முன் மாதிரி

    ReplyDelete
  2. எவ்வளவோ சந்தோஷமும் குதூகலகமுமான தினங்கள் நாமெல்லாம் அ நியில் கலக்கிய தினங்கள்.
    வெல்கம் பேக் அ.நி. And Very much welcome to our respected இ.அ. காக்கா.

    வழக்கம்போல் தெளிவான அருமையான பதிவு.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.