Saturday, March 15, 2014

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்...!

தொடர் - 19

சென்ற வாரத் தொடரை, இன்னும் இருக்கின்றன இந்தப் பட்டியலின் பக்கங்கள் என்று நிறைவு செய்து இருந்தோம். இதோ அந்த வரிசையில் இன்னும் சில பக்கங்கள்.

பீர் அலி :

சிப்பாய் கலகம் நடந்த 1857 முதல், அதன் தாக்கமாக, நாடெங்கும் புது உத்வேகம் ஏற்பட்டது. அதே நேரம் அரசும் சட்டங்களைக் கடுமையாக்கியது. அவற்றில் ஒன்று முக்கிய நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஒருவரும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என்பதுமாகும். ஆனால் இந்தத் தடையை மீறி பாடலிபுத்திரத்தில் பீர் அலி என்று அழைக்கப்பட்ட ஒரு இளைஞனின் இளைய தோழர்கள் பல நூறு பேர்கள் ‘உச்சி மீது வானிடிந்து வீழ்ந்துவிட்ட போதிலும் அச்சமென்பதில்லையே’ என்று கூடி நின்றனர். அனைவரும் கரங்களில் சுதந்திரத்தின் பதாகைகளையும் ஏந்தி, ஓங்கி ஒலிக்கும் குரலில் சுதந்திரத்தின் கோஷத்தையும் முழங்கியவண்ணம் செல்கின்றனர். 

ஆங்கிலேய அரசின் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த வீர ஊர்வலம் விபரமாக தெரிவிக்கப் பட்டதும், அடக்கி ஒடுக்கும் இராணுவத்துடன் ஆங்கிலேய அதிகாரி லாயால் என்பவன் தலைமை ஏற்று வருகிறான். இராணுவத்துக்கும் பீர் அலி தலைமையிலான எழுச்சி மிக்க இளைஞர் படைக்கும் ஒரு பெரும் வீதிக் கலவரம் மூண்டு விடுகிறது. கலவரத்தில் ஆங்கில அதிகாரி லாயலை சுட்டுக் கொல்கிறார் அடக்குமுறைக்குப் பின்வாங்காத பீர் அலி. 

அதிகாரத்துடன் கூடிய ஆணவப் படையை சொற்பமாகத் திரண்ட பீர் அலியின் இளைஞர் படை எதிர்த்து நிற்க இயலாமல் போனது. பீர் அலியும் கொலைக் குற்றத்துக்காக கைது செய்யப் பட்டார். வழக்கம் போல மரண தண்டனை வழங்கப் பட்டது. 

பீர் அலிக்கு மரண தண்டனை வழங்கப் பட்ட நேரத்தில்தான் அவருக்கு முதல் குழந்தை பிறந்து இருந்தது. தாய் நாட்டின் சுதந்திர வேள்வியில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட பீர் அலிக்கு ஒரு தந்தையின் இயல்பான பாசமும் அவ்வப்போது தலை காட்டி வந்தது. 

தூக்கு மேடை! பீர் அலி போன்ற சுதந்திர வீரனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் சொன்னது போல ஒரு பஞ்சு மெத்தைதான். தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டப் போகும் நேரத்தில், தான் பெற்ற பச்சிளம் குழந்தையின் நினைவு அவருக்கு வர, முகத்தில் ஒரு சோக ரேகை மின்ன்னல் வெட்டாகத் தென்பட்டது. 

பீர் அலியின் முகத்தில் தெரிந்த சோகத்தை உற்று நோக்கி கவனித்த ஒரு ஆங்கில அதிகாரி , தூக்கு மேடையில் நின்ற பீர் அலியின் அருகில் நெருங்கி வந்து காதுகளில் கிசுகிசுத்தார், “ உன்னைத் தூண்டிவிட்ட தலைவர்களின் பெயரைச் சொல்லிவிட்டால் உனது தூக்கு தண்டனையை நிறுத்தி விடுதலை செய்து உன் மனைவி, குழந்தையுடன் வாழ ஆங்கில அரசு வழி செய்யும் . உனக்கு சம்மதமா? “ என்று சாவின் விளிம்பில் சமரசம் பேசினான். 

தலையை பலமாக ஆட்டி காட்டிக் கொடுக்க மறுத்த பீர் அலி , தூக்குக் கயிற்றை தனது கரங்களாலே தனது கழுத்தில் மாட்டிக் கொண்டு ஷஹீதாகத் தயாராக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தூக்குமேடையில் நின்றார். சற்று நேரத்தில் லாயிலாஹா இல்லல்லாஹ் என்ற முழக்கத்துடன் பீர் அலியின் இன்னுயிர் பிரிகிறது. 

கைர் முகமது :

இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் ஒரு நகரில் ஒரு முக்கிய வீதியில் மக்கள் கூடும் முச்சந்தியில்- இன்று சில இயக்கங்கள் தெரு முனைப் பிரச்சாரம் செய்கிறார்களே அதே போல் கூட்டம் கூடி நிற்க சுதந்திர வீர உரை ஆற்றுகிறான் ஒரு சிறுவன் . அவனின் வயது பதினொன்று.பெயரோ கைர் முகமது. அவன் சென்று முழங்கும் இடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம். உணர்ச்சிப் பெருக்காய் உரையாற்றுகிறான் . அவன் நடத்தியது கதா காலட்சேபமல்ல . அவன் இசைத்தது சுதந்திர கீதம். ஆங்கிலேயரை எதிர்த்து அனல் கக்கும் முழக்கம். நாடெங்கும் எட்டிய அவனது முழக்கம் நாடாள்வோருக்கு கேட்காமல் இருக்குமா? ஆளும் வர்க்கம் ஆயுதந்தரித்த காவலரை அனுப்பி பதினொரு வயது சிறுவனை கையில் விலங்கு பூட்டிக் கைது செய்தது. அவனது கைகளுக்குத்தான் விலங்கு. அவனது சுதந்திர உணர்வுகளுக்கல்ல. கேட்டால் அயர்ந்து போவோம் இவனது வீரத்தை. 

ஹைதராபாத் ( பாகிஸ்தான்) நீதிமன்றத்தின் வழக்குக் கூண்டில் சிறுவன் கைர் முகமது நிறுத்தப்படுகிறான். வழக்குக் கூண்டின் உயரம அளவுக்குக் கூட உணர்வுகளால் உயர்ந்திருந்த சிறுவனின் உயரம் இல்லை. அவனது தலையைக் கூட எட்டிப் பார்த்துதால்தான் தெரியும் என்கிற நிலைதான் அங்கு இருந்தது. அங்கு நடந்த விசாரணை உணர்வு பூர்வமானது – உத்வேகம் ஊட்டக் கூடியது- ஒரு முஸ்லிம் சிறுவனின் சுதந்திர வேட்கையை உலகுக்கு அறிவித்தது. 

நீதிபதி: உன் பெயர் என்ன சொல் ?

கைர் முகமது: என்பெயர் ஆசாத் – ( அதாவது விடுதலை) 

நீதிபதி வழக்கு பற்றிய காகிதத்தைப் பார்க்கிறார் அதில் கைர் முகமது என்று எழுதப்பட்டு இருக்கிறது. ஆச்சரியத்துடன் அடுத்த கேள்வியைக் கேட்கிறார். 

நீதிபதி: இங்கு வேறு பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே!

கைர் முகமது: அது இந்த உலகம் வழங்கிய பெயர் ஆசாத் என்பது என் உணர்வின் பெயர். 

நீதிபதி: உன் தந்தையின் பெயர் என்ன?

கைர் முகமது: (வழக்குக் கூண்டின் இரு முனைகளையும் இறுக்கிப் பிடித்தபடி) இஸ்லாம்.

நீதிபதி: (எரிச்சலுடன் ) நீ எந்த ஜாதியைச் சேர்ந்தவன்?

கைர் முகமது: ஒத்துழையாமை ஜாதியை ! 

நீதிபதி: என்ன வேலை செய்கிறாய்? உன் தொழில் என்ன?

கைர் முகமது: நான் செய்வது எனது நாட்டில் புகுந்துள்ள அன்னியரை விரட்டும் தொழில். அதைப் புரட்சி என்றும் அழைக்கலாம். 

நீதிபதி: அது குற்றமென்று தெரியுமா?

கைர் முகமது: எனது நாட்டில் புகுந்துள்ளோரை விரட்ட முயல்வது குற்றமென்று நான் நினைக்கவில்லை.

நீதிபதி: உனக்குப் பிணை தர யாராவது இருக்கிறார்களா?

கைர் முகமது: ஆம் இருக்கிறார். அவர் என்னைப் படைத்த அல்லாஹ் ஒருவனே.

நீதிபதி: (சிறுவனின் வயது- அதை மீறிய உணர்வு- தைரியம் எல்லாவற்றையும் கண்டுவிட்டு) நீ உன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டால் உன்னை விட்டுவிடச் சொல்லி உத்தரவிடுகிறேன். மன்னிப்புக் கேட்கிறாயா?

கைர் முகமது: குற்றமே செய்யாத நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். நான் செய்தது எனது உரிமையை நிலை நாட்டும் கடமை. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். 

இவனை வெளியே விட்டால் ஆபத்து அதிகம் என்று நீதிமன்றம் கருதுவதால் கைர் முகமதுக்கு தண்டனை அளித்து சிறையில் அடைத்தது அன்றைய சட்டம். இப்படிப் பட்ட இளைய நெஞ்சங்களின் தைரியமும் அச்சமில்லா உணர்வுகளும் சுதந்திர உணர்வுகளுடன் கலந்த ஈமானின் வெளிச்சமும் பாராட்டத்தக்கது. இப்படிப் பல இளம் முஸ்லிம்கள் தியாக உணர்வுடன் உதித்தனர். 

வைக்கம் அப்துல் காதர்:

“உங்களின் இரத்தத்தை சிந்த நீங்கள் தயாராகி என்னோடு வாருங்கள் இந்திய சுதந்திரத்தை நான் பெற்றுத் தருகிறேன் “ என்று முழங்கி ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய இளைஞர்களை திரட்டியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் . நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இணைந்தனர். இவர்களில் பலர் பர்மா, சிங்கப்பூர் , மலேசியா முதலிய நாடுகளுக்குத் தங்களின் குடும்பத்துக்காக உழைத்துப் பொருளீட்டச் சென்றவர்கள். அப்படிக் குடும்பத்துக்காக நாடு துறந்த முஸ்லிம் வீரர்களின் நெஞ்சில் தாய் நாட்டில் சுதந்திரக் கனல் மூட்டப்பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது என்பதும் சொந்தக் குடும்ப நலனை பின்னுக்குத் தள்ளி நாட்டின் சுதந்திரத்தை முன்னிலைப் படுத்திய அத்தகைய வீர உணர்வுகள் நம்மை ஆச்சரியப் படுத்தும் செய்திகளாகும். 

இப்படிப் பட்ட முஸ்லிம் வீரகளின் படையில் ஒற்றர் படைப் பிரிவும் இருந்தது. இந்த ஒற்றர் படையில் அங்கம் வகித்தவர்தான் வைக்கம் அப்துல் காதர். இந்த ஒற்றர் படைக்கு தரப்பட்ட ஒரு பணியின் காரணமாக நீர்மூழ்கிக் கப்பல் வழியாக 1942- ல் டிசம்பர் மாத இறுதியில் கேரளத்தின் கோழிக்கோடு அருகில் இருந்த ஒரு ஒதுக்குப் புறமான கடற்கரையில் வைக்கம் அப்துல் காதர் , பவுஜா சிங், ஆனந்தன், பரதன் , பெரேரா ஆகிய ஐவர் வந்து இறங்கினார்கள். இவர்களுக்குத் தரப்பட்ட பணிகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கும்போது எங்கும் நிறைந்து இருக்கும் எட்டப்பர்கள் இவர்களின் இரகசியச் செயல்களை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்ததால் கைது செய்யப் பட்டனர். ஒற்றர்கள் கைது செய்யபட்டால் ஆங்கிலேயரின் பழக்கம் அவர்களை பள்ளிவாசலில் வைத்து “ஓதி”ப் பார்ப்பதல்ல . நேரடியாக தூக்குமேடைதான் அவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனைப் பரிசு. இவர்களில் பெரேரா மட்டும் ஏதோ காரணத்தால் விடுவிக்கப் பட்டார். 

1943- ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி இவர்களின் தூக்கு தண்டனைக்காக நாள் குறிக்கப்பட்டது. பொதுவாக தூக்கு தண்டனை விதிக்கபப்ட்ட எந்த ஒரு கைதிக்கும் அதற்கு முதல்நாள் இரவு எப்படி இருக்குமென்று நாம் கற்பனை கூட பண்ணிப் பார்க்க இயலாது. விடிந்தால் தூக்கு. அந்த மனங்கள் என்ன பாடுபடுமென்பதை இதயமுள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று இருக்கிறோம் நாளை இருக்க மாட்டோம் என்று இறுதிநாள் குறிக்கப்பட்டதை அறிந்த நெஞ்சங்கள் என்ன பாடு படும்?

ஆனாலும் முதல் நாள் இரவு வைக்கம் அப்துல் காதர் தனது நாட்டு மக்களுக்காகக் ஒரு கடிதத்தை எழுதுகிறார். கல்லும் கரையும் வண்ணம் எழுதப் பட்ட அந்தக் கடிதத்தின் வாசகங்கள் இதோ:

“அல்லாஹ் எனக்கு இப்போது அமைதியான மனதைத் தந்துள்ளான். எனது வாழ்வை நான் இழக்க இருக்கிறேன். அப்படி இழப்பது எனது நாட்டுக்காகவே. இந்த நாடு அதன் மகன்களில் ஒருவனான என்னை இழக்கிறது. நாளை விடியும்போது இதை எழுத்தும் இந்த உயிர் இருக்காது; சுதந்திர வேட்கை கொண்டு இந்த இதயம் இயங்காது; இதை எழுதும் கரங்கள் இயங்காது. எத்தனையோ வளர் பிறைகள் போல வளர்ந்து இந்த நாட்டுக்காக உயிர் விட்ட எண்ணற்ற நிலவுகளின் பட்டியலில் நான் ஒரு சிறு மெழுகுவத்தி. இந்த ரம்சான் மாதம் வெள்ளிக் கிழமை காலை பிறந்துவிட்டது என்று இதோ சிறைக் கடிகாரம் பனிரெண்டு மணி அடிக்கிறது. ஐந்து மணிக்கும் ஆறு மணிக்கும் இடையே எனது உயிர் பிரிந்துவிடும். அதன் தொடக்கம்தான் இந்த பனிரெண்டு மணியின் நடுநிசி ஓசை. ஒரு காலம் வரும் அன்று இப்படி உங்களின் ஒரு மகன் இந்த நாட்டுக்காக உயிர் துறந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள் !" என்று எழுதி இருந்தார்.

சென்னை மத்திய சிறைச்சாலைதான் வைக்கம் அப்துல் காதர் மற்றும் அவர் தோழர்களின் பிரியும் ஆவிகளைப் பெற்றுக் கொள்ள தூக்குக் கயிற்றால் அலங்கரிக்கப்பட்டது. வைகறைப் பொழுதில் வைக்கம் அப்துல் காதரும் மற்ற மூவரும் குளிப்பாட்டி அழைத்துவரப்பட்டனர். அப்போது சிறையில் இருந்த மற்ற கைதிகள் அனைவரும் வெல்க பாரதம் என்று முழங்கினர். 

அனைவரும் தூக்கு மேடையில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அறுபடப் போகும் கோழியின் கடைசி ஆசையைக் கேட்பது ஆங்கிலேயரின் பழக்கம். அப்துல் காதரின் ஆசை என்ன என்று கேட்கப் பட்டது. சாவின் விளிம்பில் அவர் சொன்னார் “ என்னையும் இந்து மதத்தைச் சேர்ந்த எனது நண்பர் ஆனந்தனையும் ஒரே நேரத்தில் உயிர் பிரியும்படி தூக்கிலிடவேண்டும் என்பதே என் கடைசி ஆசை “ என்று கூறினார். 

அவரது ஆசை நிறைவேற்றப்பட்டது. “ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்” என்ற முழக்கத்துடன் அனைவர் உயிரும் பிரிந்தது. 

சென்னை ஓட்டேரி முஸ்லிம் மையத்தாங்கரையில் கேரளத்து வைக்கத்தின் வீரர் அப்துல் காதரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

இன்னும் இருக்கின்றன இத்தகைய தியாக வரலாறுகள்... இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி
====================================================================
எழுத உதவியவை :
மா.சு . அண்ணாமலை எழுதிய “ சும்மா வரவில்லை சுதந்திரம்” 
எ. ஏன் .முகமது யூசுப் எழுதிய “ இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்”
கே. அருணாசலம் – ஜெய்ஹிந்த் 
தஞ்சை கிளை நூல் நிலையத்தில் தேடினால் கிடைக்கும் .
நன்றி: பேராசிரியர் மு. அப்துல் சமது. 
====================================================================

15 comments:

  1. சிலிர்க்கிறது.
    உண்மையில் இந்தியாவை நாம் தான் ஆள வேண்டும்.வந்தேறிகள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.நாம் நடுத் தெருவில்.என்ன விந்தை

    ReplyDelete
  2. தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களே!

    ஆளத்தான் முடியவில்லை. இப்போது வாழ்வதும் கேள்விக்குறியாகி வருகிறதே. எனக்கென்னவோ இந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

    "அமுதமும் விஷமும் ஒரே பூமியில் தான் விளைகிறது.
    அழகும் நஞ்சும் அதுபோல் தான்
    கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே மண்ணில்தான்"

    இந்தியாவுக்கு ம் அதன் மத சார்பின்மைக்கும் நெருக்கடியான கட்டத்தில்
    எட்டப்பர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறதே.

    திராவிட பாரம்பரியத்தில் ஊறிய வைகோ இன்று தேடி போயிருப்பது ?

    இஸ்மாயில் ராவுத்தர் போன்ற முஸ்லிம்களின் இரத்தம் குடித்து வளர்ந்த விஜய காந்த் இன்று நாடிப் போய் கூட்டணி வைத்திருப்பது ( கூத்தணி) இஸ்லாமியர்களை அழிக்க வேண்டுமென்று அரசியல் நடத்தும் கட்சியோடு.

    நமது முன்னோர்கள் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள் வீண்தானா ?

    நாம் வாழும் தமிழ் நாட்டிலோ ?

    வேண்டாம்! சொன்னால் கோபித்துக் கொள்வார்கள் சொந்த சகோதரர்கள் அவர்களே சிந்திக்கட்டும் நாம் து ஆச செய்வோம்.

    ReplyDelete
  3. சிறுவன் கைர் முகம்மதின் உயிரோடு பிணைந்திருந்த 'உணர்வு', இன்று சிலருக்கு ஒரு 'பத்திரிக்கையின் பெயர்' என்ற அளவில் மழுங்கிப் போய்விட்டது நம் சமுதாயத்தின் சாபக்கேடே! தலைவன் எதை வாந்தியெடுத்தாலும் அதை அப்படியே உண்ணுவேன் என சொரணையற்ற ஒரு கூட்டம் உருவாக ஒரு காலத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு காரணி என்பதால் ஏக இறைவனின் மன்னிப்புக்காக மன்றாடுகிறோம்.

    இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் வரலாற்று நிரூபங்கள் படித்தோம் ரசித்தோம் ரகமல்ல மாறாக உதவட்டும் இருமுனை சுதந்திரத்திற்கு, ஒன்று மீட்கப்பட வேண்டிய உள்நாட்டு வாழ்வுரிமைகள் இன்னொன்று இயக்க மயக்க விடுதலை.

    சமுதாயத்தின் இரத்த சுத்திகரிப்பு வேலையை தங்களின் எழுத்தில் இன்னும் வர இருக்கும் இஸ்லாமிய வரலாற்று நாயகர்கள் நிச்சயம் செய்வார்கள் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    வீரம் பொதிந்த வரலாற்று வசனங்களை வாசிக்க வாசிக்கக் கோழைக்குக்கூட சுதந்திர வேட்கை பிறக்கும்.

    நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் விதத்தில், தோரணையில் இன்னும் நீளாதா இவ்வத்தியாயம் என்று ஏக்கம் பிறக்கிறது.

    மறைக்கப்பட்ட வரலாறு வெளிக்கொணரப்படும் பணியோடு இலக்கிய ரசம்சொட்டும் தமிழும் செழுமை பெறுகிறது.

    அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

    ReplyDelete
  5. அன்பின் தம்பி சபீர்!

    வ அலைக்குமுஸ்ஸலாம்.

    தங்களைப் போன்ற ஒரு தாரணி போற்றும் கவிஞரின் கைகள் எனது தமிழைப் பாராட்டி எழுதுவது காண மகிழ்வாக இருக்கிறது.

    ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

    .

    ReplyDelete
  6. முத்துப் பேட்டையைச் சேர்ந்த ஒரு இளைய தம்பி கேட்டார் .

    " உங்களைப் பற்றி தாக்கி - குறிப்பாக நீங்கள் எங்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சட்ட மன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா மற்றும் ம ம க பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி அவர்களை பேட்டி எடுத்தது பற்றிய தாக்குதலுக்கு ஏன் பதில் அளிக்கவில்லை ?" என்று கேட்டார்.

    நான் சொன்னேன் சில சகோதரர்களின் கேள்விகளை அல்லது பதிவுகளை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.
    அப்படி எடுத்துக் கொண்டால் நமது பதிவுகளும் பதிலும் சீரியசாகும் !

    ஒரு புறம் அவர்கள் தீ வைக்க மறு புறம் நாமும் தீ வைப்பது சரியான வழிமுறையல்ல. கேட்ட கேள்விகளுக்கு பல தளங்களில் கண்ணியமாக பதில் அளித்து இருக்கிறோம். அவர்கள் படித்து இருப்பார்கள் படிக்காதது போல் எழுதலாம் அல்லது உண்மையில் இன்னும் படிக்க வாய்ப்பு இல்லாமலும் இருந்து இருக்கலாம்

    தனி நபர்களின் செயல்களை அவர்கள் ஒரு அமைப்பின் தலைவராக /பிரதிநிதியாக இருந்தால் தவிர நான் விமர்சிப்பதில்லை .
    அவர்களின் அமைப்பு அல்லது கட்சி முடிவுகளைத்தான் விமர்சிக்கிறேன் ! இப்படி நான் மட்டுமல்ல பலரும் விமர்சிக்கிறார்கள். எனது விமர்சனம் மட்டும் களங்கப் படுத்தப் படுவதற்கு அவர்கள் தரப்பில் காரணங்கள் இருக்கலாம்.

    அதற்காக என்னை தனிப்பட்ட முறையில் திட்டி தீர்ப்பவர்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை !

    அது அவர்களே அவர்களுக்கு இழைத்துக் கொள்ளும் தண்டனை. ஆண்டவனுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள்" என்றேன்.

    ஆனால் ஒன்று நான் ஒரு அரசியல் இயக்கத்தின் அனுதாபியாக இருக்கலாம். அது எனது உரிமை.

    நான் எழுதும் கட்டுரைகளை வெளியிடும் தளங்களுக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன.

    நெறியாள்மை இருக்கின்றன. அவைகளை மதித்தும் அவைகளுக்கு உட்பட்டுமே நான் எழுதுகிறேன். நான் அனுதாபியாக இருக்கும் இயக்கத்தின் கொள்கைகளை நான் திணிப்பதும் இல்லை. அதற்காக நான் எந்தக்கட்சியுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல எந்த அன்பான சகோதரர்களுக்கும் உரிமை இல்லை. அதற்காக நான் விளக்கமளிக்கவும் தேவை இல்லை.



    ReplyDelete
  7. //காட்டிகொடுக்க மறுத்த பீர் அலி//அவர் பீர் அலி அல்ல போர் அலி! வெள்ளையன் காதுககளில்அவன் பெயர் பட்டால்அவனுக்குவரும் கிலி! வெள்ளையன் போட்டஆசைவார்த்தைகள்புலிக்கு பிடுங்கி போட்டபுல்போல!.தூக்குகயிறு வீரனுக்கு தொட்டில் கயிறு .சுதந்திரமே அவன் இலட்சியம் அது இல்லையேல் உயிர் அலட்சியம்.

    ReplyDelete
  8. உண்மை வரலாறுகளை தொடர்ந்து தருவதற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை தருவதுடன் நயவஞ்சகர்களும் அறிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  9. வரலாறுகளில் நமது ஆட்களின் வீரம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது

    இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற கோணத்தில் (மாற்றி யோசித்ததில்)இன்றைய நமது தலைவர்களின் வரலாறுகளை நமது சந்ததிகள் நாளை படிக்கும் போது ரொம்ப கேவலமா! இருக்கும்

    ReplyDelete
  10. வரலாறு... இலக்கியமாகிறது !

    ReplyDelete
  11. அஸ்ஸாலாமு அலைக்கும்
    மிக அருமையான வீரமிக்க இஸ்லாமிய விடுதலைப் போராலிகளின் மறைக்கப்பட்ட உண்மைகளை எங்களுக்கு எடுத்துக்காட்டும் இபுறாஹீம் அன்சாரி காக்கா அவர்களின் அளப்பரிய ஆய்வுகளைக்கண்டு பெருமிதம் அடைகின்றேன்

    ReplyDelete
  12. இந்திய முஸ்லீம்களின் கல்வி பின்னடைவுக்கு முக்கிய காரணம் 'வட இந்திய' முஸ்லீம் அறிஞர்களிடம் இருந்த 'உருது மற்றும் பார்சி' வெறித்தனம் தான்.

    இந்த 'மொழி வெறித்தனம் தான் முஸ்லீம்கள் 'ஆங்கிலம் படிப்பது ஹராம்' என்று இரு நூற்றாண்டுகளாக பத்வா வெளியிட வைத்தது.

    இதன் விளைவு இன்று வரை எதிரொலித்து, சரியாக 'ஆங்கிலம்' கற்க முடியாமல் 'எஞ்சினீர்' பட்டம் படித்தாலும் 'பிட்டடித்து' அரை குறை மார்க் வாங்கி, இந்தியாவில் வேலை கிடைத்தாலும், அரபு நாடுகளில் வேலை கிடைத்தாலும் 'திறமையற்ற முட்டாள்களாக' திரியும் பலரை கண்டு வருத்தம் தான் மேலிடுகிறது.

    இதில் கொடுமை என்னவென்றால் 'இதே மொழி வெறித்தனம்' இரண்டு, மூன்று தலைமுறைகளாக 'தமிழ் ஆர்வலர்கள்' என்ற பெயரில், தமிழகத்திலும் தலை விரித்து ஆடியது.

    அதன் விளைவு தனக்கு தெரிந்த எதுகை மோனையில் 'தமிழில் தத்து பித்தென்று' கவிதை புனைந்து தங்களை 'தாய் மொழி' பாதுகாவலர்களாக காட்டிய ஒரு 'படிக்காத, அல்லது அரை குறையாக படித்த ஒரு கடைசி பெஞ்சு கும்பல்' - தனக்கு சுட்டு போட்டாலும் வராத 'ஆங்கிலம்' வேறு எந்த முஸ்லீமுக்கும் வந்து விட கூடாது என்று 'உறுதி எடுத்து' போராடியது.

    இத்தகைய ஆங்கிலம் தனக்கு வராது என்ற தாழ்வு மனப்பான்மையினால், கள்ளக்காப்பி அடித்து 'எஞ்சினீர் பட்டம் வாங்கி', 'அரபு நாடு சென்று' ஆயிரக்கணக்கில் சம்பாதித்தாலும் எந்த துறையிலும் சொந்தமாக, சிறப்பாக 'சாதிக்க இயலாத மூடர்களாக' ஒரு பெருங்கூட்டம் இவர்கள் அலைந்து கொண்டிருப்பதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது - அவர்கள் 'இணையத்தில் ஆங்கிலத்தில் பிதற்றும் பிதர்ற்றல்களை வைத்து'.

    எனவே, இது போன்ற 'உருது பற்று, தமிழ் பற்று' என்று தங்களது உள்ளார்ந்த 'ஆங்கில அறியாமையை' மறைக்க 'வேடமிட்டு பாடுபடும்' மூடர்களை 'ஒத்துக்கி தள்ளிவிட்டு' - இந்த நூற்றாண்டின் உலக மொழிகளான 'ஆங்கிலம் மற்றும் எந்த நூற்றாண்டின் மொழியுமான அரபு' மொழிக்கு முன்னுரிமை கொடுத்து நமது அடுத்த தலைமுறையை படிக்க தூண்டல் வேண்டும்.

    ஆங்கில அறிவும் அரபி அறிவும் குரான், உலக வரலாறு, இஸ்லாமிய வரலாறு குறித்த தெளிவான பார்வையை நமது மாணவர்களுக்கு வழங்கி, தலை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக, துறை வல்லுனர்களாக, சாதனையாளர்களாக, 'கள்ளகாப்பி அடிக்காமல் பாசான' உண்மையான 'சரக்குள்ள எஞ்சினீர்களாக, டாக்டர்களாக, விஞ்ஞானிகளாக விளங்க வாய்ப்புள்ளது.

    முக்கியமாக நபிகள் நாயகம் (ஸல்) மீண்டும் மீண்டும் தங்களது மரணத்தருவை வரை கூறியது போன்று அல்லாஹுவின் சாபத்தை தங்கள் மீது வாங்கும் 'சமாதிகளை வணங்கும்' தர்காவாலாக்களாக இல்லாமல் ஒரு தலைமுறை காப்பாற்ற பட வேண்டுமானால் 'ஆங்கிலமும், அரபியும்' அவர்களுக்கு மிகவும் அவசியம் என்பது உறுதி.

    ReplyDelete
  13. myத்துனர் இப்ராஹிம் unஸாரி அவர்களே! இதுவரை எட்டாகனியாக இருந்த இந்திய இஸ்லாமிய சுதந்திர போராட்ட வீரர்களின்-தியாகிகளின் வரலாற்றை தோண்டிதோண்டிஅள்ளிஅள்ளி கொடுங்கள்.தாகம்தணிய குடிக்கிறோம்.அது தொட்டால் ஊறும்மணல்கேணிஇதுவரையாரும் தொடாமல் விட்டதால் கோரிக்கையற்றுக்கிடந்த வேரில்பழுத்தபலாவானது.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. அது தொட்டால் ஊறும்மணல்கேணிஇதுவரையாரும் தொடாமல் விட்டதால் கோரிக்கையற்றுக்கிடந்த வேரில்பழுத்தபலாவானது.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
    ---------------------------------------------------------------------------------------------
    அஸ்ஸலாமுஅலைக்கும். வேரில் பழுத்த பலா(பாழா)ஆகிப்போனது.

    ReplyDelete
  15. தம்பி மன்சூர்!

    வ அலைக்குமுஸ் ஸலாம்.

    மழை போல் வந்த மாமணி தம்பி கிரவுன் உட்பட கருத்திட்ட அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.