அன்பிற்கினிய பண்பாளர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
ஒரு வேண்டுகோளோடு இந்த பதிவைப் பதிகிறோம். அறிவுசார் அதிரைநிருபர் தளத்தின் அன்பான வாசகர்கள் அனைவரும் நேரம் ஒதுக்கி, இதை அவசியம் படிக்க வேண்டுகிறோம்.
பல நேரங்களில் மிகவும் முக்கியமான ஜீவாதாரமான ஒரு பிரச்னை தனி நபர்களாலும் இயக்கங்களாலும் அரசாலும் அலட்சியப் படுத்தப்படும் அல்லது அந்தப் பிரச்சனையை வைத்து அரசியல் மற்றும் அலைக்கழிப்பு விளையாட்டுக்கள் நடைபெறும். உதாரணமாக தேர்வு நேரங்களில் ஒரு முக்கியமாக தேர்வில் கேட்கப்படும் கேள்வி என்று தீர்மானித்து ஆசிரியர் வகுப்பில் உயிரைக் கொடுத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். ஆனால் மாணவர்கள் அதில் அவ்வளவு கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். தரப்பட வேண்டிய முக்கியத்துவம் தரம் பார்த்து தரப்படுவதில்லை Priority என்கிற முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவைகளுக்கு கொடுக்கப் படுவதில்லை. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சேர்க்கப்பட வேண்டியது இட ஒதுக்கீட்டுக் கொள்கை.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரித்துப் பேசாத அரசியல் கட்சிகள் இல்லை; இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைபெறும் தேர்தல்களில் எல்லாம் தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யாத இயக்கங்களோ அரசியல் கட்சிகளோ இல்லை; இட ஒதுக்கீட்டுப் பிரச்னை பற்றி வாய் கிழிய பல மணி நேரம் மேடையில் பேசாத பேச்சாளரோ தலைவர்களோ இல்லை. ஆனால் இட ஒதுக்கீடு என்கிற எடுப்பார் கைப்பிள்ளை எவ்வித முன்னேற்றமும் இன்றி அரசியல் கட்சிகள் நடத்தும் பொம்மலாட்டத்துக்கும் இயக்கங்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் செயலுக்கு கைக்கருவியாகவுமே இருந்து வருகிறது. அண்மையில் இதற்கு ஒரு உதாரணமாக சுட்ட வேண்டிய “ ஜன்ஜனக்கா ஜனக்தா “ நிகழ்வும் நிகழ்ந்தது.
மொத்தத்தில், இந்த ஜீவாதாரமான சமூக நீதிக் கொள்கை ஒரு நகைச்சுவைக் கருவியாகவும் அழுகிற குழந்தைக்கு பிளாஸ்டிக் வாழைப்பழத்தைக் காட்டி அழுகையை நிறுத்தும் கருவியாகவுமே பயன்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை சிறுபான்மையினருக்குக் காட்டப்படும் கிலுகிலுப்பை ; தொட்டிலில் தொங்கவிடப்படும் குடை ராட்டினம். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு , ஊரெங்கும் கூட்டம் திரட்டி பிறகு புஸ் வாணமாக்கும் ஒரு பொழுதுபோக்கு. புலி வருகிறது என்று போக்குக் காட்டி, புளியங் கொட்டையைக் கையில் கொடுக்கும் பத்தாம்பசலித்தனம்.
இந்தியாவின் சமூக அமைப்பில் இரண்டாயிரம் ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. எனவே இந்த பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக இவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்கப்பட்டு அவர்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. இதே போல் சிறுபான்மையினராக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மற்றும் கிருத்தவ மக்களின் நிலையும் இவ்வாறே இருப்பதால் இட ஒதுக்கீடு என்கிற சமநீதி தாழ்த்தப் பட்ட, பிற்பபடுத்தப்பட்ட, முஸ்லிம், கிருத்தவர்கள் போன்றவர்களுக்கும் சேர்த்து வழங்கப் பட வேண்டுமென்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை.
இதை ஒரு மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டாயிரம் ஆண்டு காலமாக நடந்த கொடுமைகளின் ஆழம் தெரியாது. உலகில் வேறு எங்குமே நடந்திடாத கொடுமைகள் மதத்தின் பெயரால் இங்குதான் நடத்தப்பட்டு வந்தன. உடையணிய, நிற்க, நடக்க, கல்வி கற்க உரிமை இல்லாமல் ஒரு மனித சமூகம், மதத்தின் பெயராலும் மனுநீதியின் பெயராலும் மாய்க்கப்பட்டது இந்த நாட்டில்தான். சொல்லப்போனால் பெண்கள் மூட வேண்டிய பகுதிகளை மறைக்க ரவிக்கை அணியக் கூட உரிமை மறுக்கப்பட்டது. ஆண்கள் செருப்பணிந்தால் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. எந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்ட சமுதாயங்கள் இன்னல்களை அனுபவித்தார்களோ அதே அளவுக்குத்தான் சிறுபான்மை மத சமூகத்தாரும் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.
இட ஒதுக்கீடு என்பதில் நாம் தெளிவாகக் வேண்டிய ஒரு கருத்து உண்டு. பலர் இதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். சமுதாயத்தில் பொருளாதாரத்தில் மட்டும் பின் தங்கியவர்களின் பொருளாதார வளத்தைப் பெருக்குவது மட்டும் இடஒதுக்கீடு அல்ல. இந்தக் கோட்பாடு, ஒரு சாதியின் அடிப்படையான சமூகத்தில் சாதியின் வேர்கள் ஓடிப் பரவி இருக்கும் சமூகத்தில் அனைவருக்கும் சமூக நீதி சரி சமமாக வழங்கப்பட வேண்டுமென்ற கருத்திலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
உயர்ந்த சாதி என்று சொல்லப்படுபவர்களிடம் வறுமை நிலை ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் பொருளாதாரப் பற்றாக்குறையாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களின் ஏழ்மைக்கே காரணம் உயர் சாதியினரால் கட்டமைக்கப்பட்ட கற்பிக்கப்பட்ட சமூக ஏற்ற தாழ்வே அடிப்படைக்காரணம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவில் இட ஒதுக்கீட்டின் நோக்கம் சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு அல்லது பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோருக்கு இடையில் நிலவும் சமுதாய ஏற்ற தாழ்வை சமநிலைக்கு கொண்டு வருவதுதானே தவிர பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல. பொருளாதார உயர்வும் தாழ்வும் அவரவர் வினைகளுக்கு ஏற்ப அமைவது. சாதிய உயர்வும் தாழ்வும் உயர் சமூகம் தலையில் கட்டியது அதன் காரணமாக பொருளாதார வாய்ப்புக்கள் மறுக்கப்படுவது அதன் காரணமான எல்லா வகையான ஏற்ற தாழ்வுகளுமாகும். ஆகவேதான் அனைவருக்கும் வாய்ப்பு என்பது ஒரு பக்கம் ஏற்கனவே ஒடுக்கபப்ட்டவர்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை சட்ட ரீதியாக வழங்கி கை தூக்கி விடுவதன் மூலம் சமத்துவ சமுதாயம் அமைக்க முடியும் என்ற கோட்பாடு மறு பக்கம்.
எதன் பெயரால் ஒடுக்கப்பட்டோமோ அதன் பெயரால் எழுச்சி பெறுவதே சரியான தீர்வு . அப்போதுதான் ஒடுக்கபட்டதற்கான காரணம் தவறு என்பது உலகோர்க்குப் புரியும். இன்றைய தேதியிலும் வெகு குறைந்த எண்ணிக்கையிலிருந்தாலும் அதிகாரப் பதவிகளில் அமர்ந்து அலங்க்கரிப்பவர்கள் யார்? எதையும் முடிவு செய்யும் அதிகாரம் யார் கையில் இருக்கிறது?. ஊடகங்கள் தொடங்கி முதல் நிலை அரசு உயர் பொறுப்புகள் என அனைத்தையும் யார் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்? போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டையும் நிறைவேற்ற விடாமல் வில்லங்கங்கள் செய்வது யார்? மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலும் உயர் கல்விநிலையங்களிலும் நுழைவுத்தேர்வுக்கு சமஸ்கிருதம் ஏன் கட்டாயமாக்கப்பட்டது? என்பதெல்லாம் சிந்தனைக்குரிய கேள்விகள் மட்டுமல்ல தீப்பிழம்பை கைகளில் ஏந்திக் கேட்க வேண்டிய காரணம் படைத்த கேள்விகள்.
நான்கு வகை சமூகத்தில் பிறந்தவர்கள் ஒரே மாதிரி 50 மார்க் மட்டுமே எடுத்தால் நான்கு வித சமூகங்களும் ஒரே தரமாக கருதப்பட வேண்டுமென்பது அறிவுக்கு ஏற்புடையதா ? பள்ளிசெல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சாக்கடை அல்லும் தகப்பனுக்கும் செருப்புத் தைக்கும் அண்ணனுக்கும் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டும் மாமனுக்கும் உதவும் வகையில் வேலைசெய்தால் தான் பழைய சோறு உணவு என்று இருப்பவன் எடுக்கும் 50 மதிப்பெண்ணும் படிப்பு! படிப்பு! படிப்பு! என்று படிப்பைத் தவிர வேறெதும் செய்யத் தேவையில்லாமல் பாலாடைக்கட்டியை வெண்ணெயில் தோய்த்து கிசான் ஜாம் தடவி சாப்பிடுபவர்கள் எடுக்கும் 50 மதிப்பெண்களும் ஒன்றா ? சாக்கடை ஓரக் கொசுக்கடியில் அரிக்கேன் விளக்கு வைத்துப் படிப்பவன் எடுக்கும் ஐம்பது மதிப்பெண்ணும் பஞ்ச்சுத்தலையணையில் அமர்ந்து கொண்டு, மேஜை விளக்கைத் தாழ்த்திவைத்துக் கொண்டு உயரே சுற்றும் காற்றாடி தரும் சுகதத்தை அனுபவித்துப் படிக்கும் அவாள் எடுக்கும் ஐம்பது மதிப்பெண்ணும் சமமாகுமா? அனைவருக்கும் ஒரே வாய்ப்பா? இது சமூக நீதியாகுமா?
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமென்பது நல்ல சிந்தனைதான். அதற்கு முன்பு இதுவரை எல்லோரும் எல்லாமும் பெற்று சமூக அந்தஸ்து வரை பெற்று சமநிலையில் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். போட்டிக்கு அவர்களை தயார் படுத்தவேண்டும். பலமில்லாதவர்கள் தங்களுடன் போட்டி போடவேண்டும் அதில் தாங்கள் வெற்றி பெற்று அனைத்து நாற்காலிகளையும் ஆக்ரமிக்க வேண்டுமென்பது சுயநலப் பார்வையும் தன் சமூகம் சேர்ந்த பார்வையே அன்றி வேறு என்ன? சமத்துவமின்மையை மேற்பார்வை இடத்தானா மத்திய மாநில அரசுகள்?
ஒரு தாய் தான பெற்ற குழந்தைகளிடையே வேறுபாடுகளைக் களைய வேண்டுமென்று நினைத்தால் புஷ்டியாக இருக்கும் குழந்தைக்கு கொடுக்கும் உணவின் அளவுதான் நோஞ்சான் குழந்தைக்கும் கொடுக்க வேண்டுமென்றால் அது சரியாகுமா? ஒரு குடும்பத்தில் 500 மிலி பால் வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் . ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. ஒரு குழந்தை நோய் வாய்பட்டிருக்கிறது என்றால் ஆரோக்கியமான குழந்தைக்கு 200 மிலி, நோயாளி குழந்தைக்கு 300 மிலியும் வழங்குவது சரியாக இருக்குமா அல்லது இருவருக்கும் 250 மிலி என்று சமமாக வழங்குவது சரியாக இருக்குமா?
திருமறை இவ்விதமெல்லாம் எடுத்துரைக்கிறது.
மக்களின் மத்தியில் நீதியுடன் நடக்க வேண்டும் ( 4: 58 )
வறியவர், பயணி ஆகியோரின் உரிமைகளை நிலை நாட்டுங்கள் (30: 38)
நீதி செலுத்துங்கள்; மனிதர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள் (16: 90-91)
இந்த சமத்துவ சமூகப்பாதையைத்தான் மண்டல் கமிஷன் சொன்னது. மண்டலின் அறிக்கையை அன்றைய வி பி சிங் அரசும் ஏற்றுக் கொண்டு அமுல்படுத்த செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தது. அப்போது மண்டல் கமிஷன் அறிக்கையை அமல் செய்து பாராளுமன்றத்தில் வி பி சிங் ஆற்றிய இந்த உரை இட ஒதுக்கீடு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
"தகுதி, தரம் என்பது என்ன? நான்கு அறைக்குள் படித்து மதிப்பெண் வாங்குவதுதானா தரம்? அதைவிட நாட்டின் நிலையறிதல்; தன் மக்களின் நிலையறிய அவர்களோடு கலத்தல்; அவர்களின் வாழ்நிலையை, தேவையைப் புரிதல்; இவைதான் தகுதி, தரத்துக்கான அடையாளம். இவற்றில் முன்னேறிய உயர்சாதிகளைவிடப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் சிறப்பான அறிவைப் பெற்றிருக்கின்றனர்’’ என்றார்.
மேலும், உயர்சாதிக்காரர்களே தங்களைத் தகுதியானவர்கள் எனக் கட்டமைத்துக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கும் பீஹார் மாநிலத்தின் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டினார். ‘‘பொதுத்துறை நிர்வாகம் அனைத்தையும் ‘தகுதி’யுடைய உயர் வகுப்பினர்தான் நிர்வகித்துக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஆண்டொன்றுக்கு ரூ.2000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது ஏன்? இதற்கு மாறாகத் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களில், நீண்ட நாட்களாகவே பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், அங்கே நிர்வாகமும் சமூக முன்னேற்றமும் பீஹாரை விடச் சிறந்து விளங்குகின்றன.’’
சில ஆயிரம் வருடங்களாக பிறப்பின் காரணமாக ஒதுக்கப்பட்ட மக்களின் நேர்மையான முன்னேற்றத்திற்கு, அவர்களுக்குச் சில நூற்றாண்டுகளுக்காவது இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட வேண்டும்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய வருணாசிரம ஒடுக்கு முறைகளும் மனுதர்ம பாசிசமும் அதன் விளைவாய்த் தோற்றுவிக்கப்பட்ட சமூமப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் தீர இட ஒதுக்கீடு என்பது சரியான தீர்வு தான்.
ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் வரையில் இட ஒதுக்கீடு அவசியமே... என்று முழங்கினார் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்.
இப்படி ஒரு சமூக நீதியை நடைமுறைப் படுத்த துவங்கிய குற்றத்துக்காக, ஆதிக்க சாதிகளின் கைப்பாவையாக இருந்த பிஜேபி முதலிய கட்சிகள் வி பி சிங்கின் அரசைக் கவிழ்த்தன. இப்போது எந்ததெந்த கட்சிகள் இட ஒதுக்கீட்டை அமுல் செய்ய முன் வந்த வி பி சிங்கைக் கவிழ்த்தார்களோ அவர்கள் அனைவருமே இப்போது வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் தங்களின் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இதை நாங்கள் அமுல் படுத்துவோம் என்று குறிப்பிட்டு இருப்பது மக்களை ஏமாற்றும் நகைச்சுவை அல்லாமல் வேறென்ன? “சிந்தையில் கள் விரும்பி சிவ! சிவ! என்பவர்” களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால் அரசுத்துறைகளில் மட்டுமல்ல , தனியார் துறைகளிலும் கூட இட ஒதுக்கீடு தருவோம் என்று காங்கிரஸ் , பிஜேபி போன்ற தேசிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாமியே சைக்கிளில் போகும்போது பூசாரி புல்லட் கேட்ட கதையாகவே இது இருக்கிறது. இது இட ஒதுக்கீடு தொடர்பான இன்னொரு நகைச்சுவைத் துணுக்காகும்.
இந்தியாவை எண்ணூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்டிருந்தாலும் முஸ்லிம்களுடைய சமூக மற்றும் பொருளாதார நிலை ‘தாழ்வுற்று வறுமை மிஞ்சிக்’ கிடந்ததை இந்தியா முழுதும் பல இயக்கங்கள் தொடர்ந்து மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றன. மொகலாயருடைய ஆட்சி முடிவுக்கு வந்த நேரத்தில் முஸ்லிம்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டதும் பறிமுதல் செய்யப்பட்டதும் பக்கிரிகளாக விரட்டியடிக்கப் பட்டதும் நாடு கடத்தப்பட்டதும் வரலாற்று உண்மைகள்.
வாய்ப்புகள் வரும் போதெல்லாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டார்கள். சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற கட்சிகளும் முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசின. இந்தியாவெங்கும் பல இயக்கங்களும் உண்மையாகவும் பெயருக்காகவும் போராடின.
இறுதியில் மத்திய அரசு இரண்டு குழுக்களை அமைத்தன. அவற்றுள் ஒன்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவாகும். 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் குழு நீண்ட நெடிய விரிவான ஆராய்வுகள் செய்து இந்திய நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் மோசமான வாழ்வு நிலைகளைப் படம் பிடித்துக் காட்டி தனது அறிக்கையை 2007 ஆண்டு அரசிடம் அளித்தது. அதன் பின் இந்த அறிக்கையைப் படித்துப் பார்க்க மத்திய அரசுக்கு 2009 ஆண்டு இறுதிவரை நேரம் தேவைப்பட்டது. இப்படி விசாரணைக் கமிஷனின் அறிக்கை ஒரு நகைச்சுவையாக மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது ஒரு புறம் , அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளை இந்தப் பாராளுமன்றம் உயிரோடு இறந்த காலம்வரையில் கூட நிறைவேற்றவில்லை என்பது அடுத்த நகைச்சுவைக் காட்சி.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களுடைய அறிக்கையின் அம்சங்கள் முஸ்லிம்களின் மோசமான நிலைமைகளை மத்திய அரசுக்கு எடுத்துக் காட்டியது . அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறோம்.
மக்கள் தொகையில் முஸ்லீம்கள் உடைய சதவீதம் 13.4 % (2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி). இப்போது இன்னும் அதிகம்.
முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 % மட்டுமே.
முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர். முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14%
10-ஆம் வகுப்பு வரை – 10.96% . 12-ஆம் வகுப்புவரை – 4.53%
பட்டப் படிப்பு படித்தவர்கள் – 3.6% பேர் மட்டுமே.
முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.
முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.
மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர். இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு வேலைகளுக்கான உபகரணங்கள் வாங்க இயலாதவர்கள், நிரந்த வேலை இல்லாமல் அன்றாடக் கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமுடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.
இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் வாழ்கின்றனர் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொன்னது. ஆணி அடித்தது போல் அறிக்கையும் சமர்ப்பித்தது.
அத்துடன் இந்த கமிஷன் வழங்கிய சிபாரிசுகள் சுருக்கமாக,
- இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதியின் பிரகாரம் மொத்த சிறுபான்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு என்று கொடுக்க வேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை மக்கள் தொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபான்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபான்மை சமுதாயத்துக்கு அந்த இடங்களை வழங்க வேண்டும். சிறுபான்மையினர் கிடைக்கவில்லை என்பதற்காக அந்த இடங்களை பெரும்பான்மையினருக்கு கொடுத்துவிடக்கூடாது என்பது கவனிக்கத் தக்க சிபாரிசு ஆகும்.
- கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் அனைத்துத் திட்டங்களிலும் மேலே குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
- தாழ்த்தப்பட்ட – அதாவது . SC/ST- ஆகியோருக்கு இப்போது இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதற்க்கான குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களை குறைத்து விதிகளை தளர்த்த வேண்டும். அதே போல் கல்வி, வேலைக்கான விண்ணப்பங்களின் விலைகளும் கல்விக் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.
- முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலங்களிலும் , மத்திய பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும்.
- முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகம் வாழும் குறிப்பிட்ட பகுதிகளில் அங்கன் வாடிகள், நவோதயா விதியாலயாஸ் எனப்படும் நவீன கல்விப் பள்ளிகள் போன்றவை ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லீம்களின் குழந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அரசு மானியம் வழங்க வேண்டும்.
- இனக்கொடுமை காரணமாக , மனமாற்றத்தின் காரணமாக, முஸ்லீம் அல்லது கிருஸ்தவர்களாக மதத்தை மாற்றிக் கொள்ளும் தலித்துகளுக்கு கிடைத்துக் கொண்டிருந்த சலுகைகள் தொடர்ந்து கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டும்.
- கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும்.
- சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தரவேண்டும்.
- பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு முதலிய வீட்டு உபகரணங்கள் மிகக் குறைந்த விலையில் வழங்கபட வேண்டும்.
- அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் அறியாமையின் காரணமாக பின்தங்கிஉள்ளனர். எனவே அரசின் நலத் திட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு எடுத்துச்சொல்லி அரசே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசின் நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலே கண்டவை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம் சமுதாயத்தின் நிலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து அளித்த சிபாரிசுகளின் சாராம்சங்கள். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களுக்கு எண்ணற்ற நன்றிகள்.
மொத்தத்தில் இடஒதுக்கீடு எனும் உன்னதக் கோட்பாடு, “அதாங்க இது” என்ற வாழைப்பழக் கதையாக மாறிய வரலாற்றைப் பகிரலாம்.
இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்.
அதிரைநிருபர் பதிப்பகம்
This comment has been removed by the author.
ReplyDelete///மொத்தத்தில், இந்த ஜீவாதாரமான சமூக நீதிக் கொள்கை ஒரு நகைச்சுவைக் கருவியாகவும் அழுகிற குழந்தைக்கு பிளாஸ்டிக் வாழைப்பழத்தைக் காட்டி அழுகையை நிறுத்தும் கருவியாகவுமே பயன்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை சிறுபான்மையினருக்குக் காட்டப்படும் கிலுகிலுப்பை ; தொட்டிலில் தொங்கவிடப்படும் குடை ராட்டினம். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு , ஊரெங்கும் கூட்டம் திரட்டி பிறகு புஸ் வாணமாக்கும் ஒரு பொழுதுபோக்கு. புலி வருகிறது என்று போக்குக் காட்டி, புளியங் கொட்டையைக் கையில் கொடுக்கும் பத்தாம்பசலித்தனம். ////
ReplyDeleteஆஹாஹா........ எவ்வளவு அழகான விளக்கம் தற்போது எதிர்கொள்ளும் ஆபத்தான அரசியல் மூமென்டுகள் அறியாத குழந்தைகளுக்கு புரியும்படியான விளக்கம் வாழ்த்துக்கள்
///சாமியே சைக்கிளில் போகும்போது பூசாரி புல்லட் கேட்ட கதையாகவே இது இருக்கிறது. இது இட ஒதுக்கீடு தொடர்பான இன்னொரு நகைச்சுவைத் துணுக்காகும்.///
ReplyDeleteசெம காமெடி
பார்ப்பன பனியா கும்பலின் சதி திட்டம்தான் நமக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படும் உண்மை காரணம்.நன்றாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி காக்கா
ReplyDelete//ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் வரையில் இட ஒதுக்கீடு அவசியமே .. என்று முழங்கினார் அந்த புண்ணிய புருஷர். //
புண்ணிய புருஷர் என்பது நம் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்களை மட்டுமே குறிக்கும்.தயவு செய்து திருத்தி வெளியிடவும்.
நெறியாளர் அவர்களுக்கு,
ReplyDeleteசகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் ஆலோசனையை ஏற்று புண்ணிய புருஷர் என்ற வார்த்தையை வி பி சிங் என்ற அவர் பெயராலேயே குறிப்பிடலாமென்ற எனது கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
// புண்ணியம்// நல்ல செய்யல்களை செய்வதினால் கிடைக்கும் நண்மை.இது மனிதர்களுக்கும் பொருந்தும்.அதிராம்பட்டினத்தில்ஏழை மாணவர்கள் கல்விபெறதன் சொத்துக்கள் அத்தனையும் அள்ளிகொடுத்த வள்ளல் காதர்மொஹிதீன் ஒரு புண்ணியவான். வி.பி.சிங் ஒருபுனித புருஷர் என்று சொல்வதுதான் கூடாது. புண்ணியம்.வேறு.புனிதம் வேறு.
ReplyDeleteவிசாரணை கமிஷன் அமைப்பதே ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஒரு வருவாய் உண்டுபண்ணுவதற்கும் சும்மா கிடக்கும் பரண்மேல் எழுதி கொடுத்ததை போட்டு வைப்பதற்குமே!.எப்போதாவது 'நானும் ஒருM.P.யா இருக்கிறேன்' என்பதை மக்களுக்கு நினைவு படுத்த ஒருM.P.எழுந்து கமிஷன் அறிக்கைபற்றிஇரண்டேகால் நிமிஷம் பேசிவிட்டு ஊர்வந்து மேடையேறி இரண்டேமுக்கால்மணிநேரம் பீத்துபீதென்றுத்தென்று பீத்திவிட்டு போய்விடுவார்.நின்று கேட்டவன் காலில் கொசுக்கடி! உக்காந்து கேட்டவன் கண்ணத்தில் கொசுக்கடியோடு ஊடுபோய் சேரவேண்டியதுதான்
ReplyDeleteஅர்த்தம் பொதிந்த கட்டுரை!
ReplyDeleteஇட ஒதுக்கீட்டு பூச்சாண்டியை படம் வரைந்து பாகங்களைக் குறித்ததுபோல் புத்திக்கு எட்ட வைத்திருக்கும் யுக்தி மெச்சத்தக்கது!
அடிச்சிப்புடிச்சி இட ஒதுக்கீடே கிடைத்துவிட்டாலும் எந்த இயக்கக்காரங்களுக்கு எத்தனை சதவிகிதம் ஒத்குக்குவது என்பதை யார் தீர்மானிப்பதாம்?
குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த என் போன்றவர்களுக்கு கடும் உழைப்பின்மூலம் முக்கியமான விடயங்களைக் குறித்து அறிவமுதம் வழங்கி வரும் காக்கா அவர்களுக்கு
ReplyDeleteஅல்லாஹ் ஆத்தி ஆஃபியா!
This comment has been removed by the author.
ReplyDelete//அன்பிற்கினிய பண்பாளர்களே !//
ReplyDeleteஇதை முன்னாடி கொடுத்து
வாழைப்பழத்தை பின்னாடி கொடுப்பேன் என்று சொன்னதன் காரணம் என்ன வாழைப்பழம் சீப்பா கிடைக்கும் என்பதலா?
நீண்ட நாட்களாக இதனைப் பற்றி விலாவாரியாக அலச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, அதற்குரிய சுழலை அழுத்தமாக உருவாக்கி வைத்தது இந்த இயக்கங்களின் தூற்றல் !
ReplyDelete//அரசியல் கட்சிகளின் சதுரங்க ஆட்டத்துக்கு மாறி மாறி சமுதாயத்தைப் பலி கொடுத்து தங்களை உயர்த்திக் கொண்ட இயக்கத்தலைவர்கள், வாய்ச்சவடால் பேசி வசூலில் திளைத்தவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் இன்னொரு அத்தியாயம் எழுதத்தான் வேண்டும் தோழர்களே.//
ஆமாம் !
நேரடி எதிரியை விட இந்த நேர்ந்து விட்டவர்களின் எதிர் செயல்களும், பேச்சும், எழுத்தும்... அடத் தூ... ன்னு துப்பத்தான் தோனுது !
மிக நீண்ட செய்தி, புதியது எதுவுமில்லை.....ஆமாம் இதை எல்லாம் யாருங்க கேட்க போறது ?, தொப்பி போட்டு, தாடி வச்சு, சிலநேரங்கலிலே அல்லாஹ்வுடைய கலாமையும் சொல்லிக்கொண்டு, நார்த் போலில் கிப்லா எந்தப்பக்கம் ? லைலத்துல் கத்ர் அமெரிக்காவில் பகலிலா இரவிலா ? என்பன போன்ற சாதாரண மக்களுக்கு தேவையற்ற, பிரியோஜன்மில்லாத கேள்விகளை கேட்டு குழப்புகிரவர்கலா ? அல்லது யாருடைய தயவிலாவது பொட்டியை வாங்கிக்கொண்டு ஜெயித்துவிட்டு, வாயே திறக்காமல் இருந்து, இருக்கிற சலுகைகளைஎல்லாம் பெற்றுக்கொண்டு, ரெண்டு பீர்யடுக்கு பிறகு பென்சனையும் வாங்கிக்கொண்டு கடைசியாக லெட்டர் பேட் மட்டும் மிஞ்ச மண்டையை போடப்போகிறவர்களா ?.
ReplyDeleteதேர்தல் நேரத்தில் மட்டும் பேசினால் போதாது. பொதுவான விசயங்கலுக்காவது ஒன்று சேரக்கூடாதா ? அல்லாஹுவுடைய பயம் இல்லையா ? இதுதான் நமது ஈமானின் நிலையா ?. நீதி மன்றங்கள் எதற்கு இருக்கிறது, சமுதாய வக்கீல்கள் என்ன செய்கிரார்கள் ?
எல்லோரும் அல்லாஹ்விற்கு பதில் சொல்ல வேண்டும். நம் நமது ஈமானை மறு பரிசீலனை செய்து கொள்வோம் இன்ஷாஅல்லாஹ்.......
Bro. Adirai Anbuhasan
ReplyDelete//மிக நீண்ட செய்தி, புதியது எதுவுமில்லை.....ஆமாம் இதை எல்லாம் யாருங்க கேட்க போறது ?//
யாரும் கேட்காததால்தானே இந்த நிலை?
இந்த தேர்தலில் சில இயக்கங்கள் எடுத்துள்ள நிலை அவர்களை அடையாளப்படுத்தியுள்ளது. சமுதாயத்துக்கு எதிரான அரசியல் முடிவுகளை எடுப்பவர்கள்- அதை சமுதாயத்தின் மீது திணிப்பவர்கள் - சமுதாயம்த்தின் மீது பிஜேபி போன்ற இந்துத்வா கட்சிகள் தேர்தல் அறிக்கை என்கிற பெயரில் விடுத்துள்ள போர்ப்பிரகடனத்தைப் பார்த்தும் முஸ்லிம் வேட்பாளர்களை தங்களின் சொந்தக் காரணங்களுக்காக் தோற்கடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டி வேலை செய்பவர்களும் இருக்கும்போது , சில விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அவற்றைப் பகிர்வது கடமை என்றே இங்கு பகிரப் பட்டு இருக்கிறது.
தங்களின் கருத்துக்கு நன்றி. தேர்தல் நேரத்தில் மட்டும் பேசினால் போதாது என்கிற தங்களின் கருத்து சிந்திக்கப் பட வேண்டியதே.