Wednesday, April 09, 2014

பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை - ஒரு அலசல்

ஞ்சும் சென்று அசரும் சென்று புள்ள வந்திருக்கான்’ என்று அதிரையின் பாஷையில் சொல்வார்கள். தாமதமாக, நேரம் தவறி வருவதைத்தான் நாம் இப்படிக் குறிப்பிடுவோம். இதே போல் குறிப்பிடத் தகுதி படைத்ததாகவே பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு இருக்கிறது. நாடு முழுமைக்கான பாராளுமன்றத் தேர்தல், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று மார்தட்டிக் கொண்டு ஊடகங்களை எல்லாம் வளைத்துப் போட்டு வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, புதிய நீதிக் கட்சி என்ற பொட்டிக்கடை கட்சியெல்லாம் கூட தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகும் கூட தனது தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ஒரு மாநிலத்தில் வாக்குப் பதிவே தொடங்கிய பிறகு ஐம்பத்தி இரண்டு பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது என்றால் – அதுவும் தேர்தல் கமிஷன் தனது கண்டனத்தை வெளியிட்ட பிறகும் அதை மதித்து பதில் கூட அளிக்காமல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது என்றால் தேர்தல் அறிக்கைக்கு ஒரு தேசியக் கட்சி தரும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஒன் மேன் ஷோ நடத்தினால் உலகையே வெல்லலாம் என்ற மமதையின் வெளிப்பாடே இந்த தாமதம்.

தேர்தல் அறிக்கை என்பது தேர்தலை சந்திக்கும் கட்சிகள் தாங்கள் மக்களால் ஆதரிக்கப் பட்டு வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தால் செய்ய நினைக்கும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்த தீர்மானித்து இருக்கும் கொள்கைகள் மற்றும் கையாளப்போகும் சீர்திருத்தங்களின் பட்டியலே ஆகும். இந்த அடிப்படையில் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் யாவும் தங்களின் தேர்தல் அறிக்கைகளை பல வாரங்களுக்கு முன்பே வெளியிட்டுவிட்டன. இப்படி தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டியே வெளியிடுவதற்குக் காரணம், அந்த தேர்தல் அறிக்கையின் அம்சங்கள், கொள்கைகள் , திட்டங்கள் ஆகியவை நாடெங்கும் பல்வேறு தலைவர்களால் விவாதிக்கப் படும்; விமர்சிக்கபப்டும்; பாராட்டப்படும்; நம்பிக்கை வைக்கப்படும். ஆனால் பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை இவற்றுக்கெல்லாம் நாட்டு மக்கள் யாருக்குமே எந்த வாய்ப்புமே வழங்காமல் ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஒரு சடங்காக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்த தாமதத்துக்கு காரணம் இருக்கிறது.

அந்தக் காரணம் வேறு ஒன்றுமல்ல பாரதீய ஜனதாவின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்ற மமதை மட்டுமல்ல நரபலி நாயகனை வளர்ச்சியின் நாயகன் என்று பூவும் பொட்டும் வைத்து சித்தரித்து ஊடகங்களில் உலவவிட்டு கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பையும் நிகழ்த்திய பிறகு தேர்தல் அறிக்கை என்பது ஒரு தேவை இல்லாத ஒன்று என்று நினைத்து இருக்கலாம்.

மற்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கும் முன்பே – அதாவது 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பதினாறாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை முரளி மனோகர் ஜோஷி தலைமையில் குழு அமைத்து தனி வெப்சைட் தொடங்கி ஆரம்பித்தது பிஜேபி ஆகும். அப்போது இந்த வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருந்த ஒரு அறிக்கை காரணமாக நாட்டில் பிஜேபி மீது பல எதிர்ப்புக் கணைகள் பாயத்தொடங்கின. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள், கொள்கைகள் யாவை என்று மக்கள் நினைக்கிறார்களோ அவற்றை பிஜேபி தொடங்கிய தனி வெப்சைட்டுக்கு அனுப்பும்படி நாட்டு மக்களை கேட்டிருந்தது பிஜேபி. ஆனாலும் பிஜேபியின் அடிப்படைக் கொள்கைகளான ராமர் கோயில் , பசுவதை, பொது சிவில் சட்டம், காஷ்மீருக்குரிய தனி அந்தஸ்து நீக்கம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றில் எவ்வித கருத்து மாறு பாட்டையும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஏற்காது என்று அந்த அறிவிக்கை கூறியது. ஆனால் இவ்வளவு பில்டப்புடன் தொடங்கி. இறுதியில் கேட்க நாதியில்லாத தேர்தல் அறிக்கையாக – விவாதிக்க நேரம் தராத தேர்தல் அறிக்கையாக திருவிழாவில் காணாமல் போய் திரு திருவென்று முழித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் போல் இந்த தேர்தல் அறிக்கை வெளிவந்து இருக்கிறது.

எப்படியானாலும் நாம் நமது விமர்சனத்தை ஒரு அலசலுடன் பதிவு செய்கிறோம். 

முதலாவதாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையின் ஆணிவேர் இந்துத்வா என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை பிஜேபியின் எந்த தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறாத ஆர் எஸ் எஸ் தலைவரின் படம் இடம் பெற்று இருக்கிறது. இது அவர்கள் பார்வையில் திருஷ்டிக்காக கூட இருக்கலாம்.

அறிக்கையை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம் ஒன்று அரசு நிர்வாகம் பொருளாதாரம் வெளியுறவுக் கொள்கை ஆகியவை தொடர்பானது. மற்றது கலாச்சாரம் பண்பாடு ஆகியவை தொடர்பானது. 

அரசு நிர்வாகம், பொருளாதாரம் போன்றவற்றில் காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கும் பாரதீய ஜனதாகட்சியின் தேர்தல் அறிக்கைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் முகநூலில் பதிவு செய்தது போல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முப்பது பைசா கொடுத்து எடுத்த ஜெராக்ஸ் காபிதான் அந்தக் கொள்கைகள். ஆட்சியை மாற்ற வேண்டும் என்று போராடும் ஒரு கட்சி ஒரு புதிய பொருளாதாரக் கொள்கை என்று ஒன்றைக் கூட எடுத்து வைக்கவில்லை. அப்புறமென்ன புடலங்காய் அறிக்கை?

அதேபோல் வெளியுறவுக் கொள்கைகளிலும் காங்கிரஸ் உடைய கொள்கைகளில் இருந்து எவ்வித மாற்றத்தையும் பிஜேபி அறிவிக்கவில்லை. வழக்கம் போல் அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவோம் என்றே கூறி இருக்கிறது. தமிழ்நாட்டில் பிஜேபியுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ள வைகோ தலைமையிலான மதிமுக கூறும் தனி ஈழம் என்பது போன்ற பெரிய முதலைகளை அல்ல கச்ச தீவு போன்ற சல்லிக் கெண்டைகளைக் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடவில்லை. இதற்காக வங்கக் கடலில் விழ வேண்டியவர் வைகோதான். 

அடுத்து மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுதும் மதுவிலக்கு என்று மொடாக்குடியர்களின் மத்தியில் பேசி கைதட்டல் வாங்கும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தல் அறிக்கையை ரத்தம் சிவப்பேறிய கண்களுடன் பார்க்கிறது; இன்னும் மோடி ஆட்சிக்கு வந்தால் முல்லைப் பெரியாறு நீர் வரும், காவிரி நீர் வரும், தடை இல்லா மின்சாரம் வரும் என்றெல்லாம் சம்சாரம் சகிதமாக கதை அளந்துகொண்டு இருக்கிற விஷ(ய)காந்தனுக்கும் இந்த அறிக்கையில் ஒன்றும் இல்லை. முக்கியமாக காவிரிப் பிரச்னை மற்றும் நதி நீர் இணைப்பு ஆகிய பிரச்சனைகள் பற்றி இதில் மூச்சு விடவில்லை. அப்படி மூச்சுவிட்டால் கர்நாடகா ஆப்பு வைக்குமே என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். 

அடுத்து, கலாச்சாரம் பண்பாடு ஆகிய பிரிவில் விவாதிக்கப் போனால் நாட்டை இன மத சாதி அடிப்படையில் உளி கொண்டு பிளக்கும் அம்சங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கையாக இந்த தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கிறது. இந்தப் பகுதியே நாம் அதிகமாக விவாதிக்க வேண்டியதும் நம்மை மட்டுமல்ல நாட்டையே அச்சுறுத்தும் பகுதியாகவும் இருப்பதாகும். முதலாவதாக சங்க பரிவாரின் கோட்பாடாகிய 
  • “இந்திய நாட்டுக்கும் சமூகத்துக்கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.” என்பதை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
  • அத்துடன், “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது.
  • மேலும் “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது.
  • இன்னும், “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது
  • இதையும் தாண்டி, “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது.

மேலே குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்துமே நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோரின் கனவுகளைத் தகர்க்கும் விஷவித்துக்கள் அடங்கிய கருத்துக்களாகும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இந்த நாடு மங்கோலிய, ஆரிய, திராவிட, அந்தமான் போன்ற தீவுகளின் நீக்ரோ மற்றும் பழங்குடியினர் ஆகிய ஐந்து வகை இனங்களைக் கொண்டது. ஒரே கலாச்சாரம் என்பது இங்கு திணிக்கப்பட்டால் நாடு என்ன ஆகுமென்று நாம் சொல்லத் தேவை இல்லை. 

இத்தனையும் சொல்லும் அறிக்கை பிஜேபி பிறப்பெடுத்த காரணங்களுக்கான கரடுமுரடான காரியங்களை சொல்லாமல் விடுமா? இதோ அவை:-

1. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு கோயில் கட்டப்படும் என்று கூறுகிறது. கோயில் கட்டுவது ஒரு குறிப்பிட்ட கடவுள் மீது நம்பிக்கையுள்ள எவரும் எங்கும் கட்டலாம் . அரசியல் சட்டப்படி என்றால் கோயில் என்ன மகளிர் இட ஒதுக்கீடா? இருநூறு நாள் வேலைத்திட்டமா? உணவுப் பாதுகாப்புத்திட்டமா? அந்நிய முதலீட்டுக்கு அனுமதியா? இதில் அரசியல் சட்டத்துக்கு என்ன வேலை? வேப்பமரத்தில் ஒரு செங்கல்லை சாத்தி கோயில் என்று கும்பிட்டு வருகிற பக்திமான்கள் நிறைந்த நாட்டில் கோயில் கட்டுவதற்கு அரசியல் சட்டம் ஏன் என்று இதை தயாரித்த முரளி மனோகர் ஜோஷியின் மூளைதான் விளக்கவேண்டும். 

2. நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் அந்தந்த மக்களது தனி உரிமைகள் பறிக்கப்படும். இதனால் நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது. ஆனால் அரசால் அடக்கவே முடியாத உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட வழி வகுக்கும் என்பது அரசியல் அறிஞர்களின் கருத்து. அரசியல் சட்டத்தை வரைந்த முன்னோர்கள் ஒன்றும் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்ன கேணையர்கள் அல்ல என்பதை இன்னும் பிஜேபி உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. 

3. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற திட்டத்தின் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்படும் தனி அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று கூறுகிறது. காஷ்மீரை எவ்வளவு கஷ்டங்களுக்கிடைடையில் இந்தியாவோடு இணைத்தார்கள் என்பதை வரலாற்று ரீதியாக அறியாத வக்கில்லாதவர்கள்தான் இப்படி சொல்ல முடியும். எந்த நேரமும் அடுத்த பகைமை நாட்டுடன் இணையத் துடிக்கும் ஒரு மாநிலத்துக்கு இதுவரை வழங்கப் பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிப்பது என்பது வானத்தில் போகிற ஓணானை ஏணி வைத்து இறக்குவதுஎன்பதுதான் என்பதை பிஜேபி உணர வேண்டும். எல்லையில் தொல்லை தரவே இந்த பாம்புக்கு மகுடி ஊதுகிறது பிஜேபி. 

மேலும் பசுவதை தடுப்பு, சேதுசமுத்திரத்திட்டத் தடுப்பு ஆகிய பழைய பல்லவிகள் மீண்டும் புதிய தம்பூரா கொண்டு மீட்டப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்துமே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு அவர்களை சிறுபான்மையினருக்கு எதிராக அணிதிரட்டி அதன் மூலம் அதிகாரத்தில் அமர்ந்து ஆட்டிப் படைப்பதற்கான அரிச்சுவடியே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் இதை அப்படியே அலட்சியப் படுத்திவிட முடியாது; கூடாது. 

வஞ்சகமான வார்த்தை ஜாலங்களுடன் கூடிய அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த ஒரு அம்சமாக நாம் பார்ப்பது இந்த முறை இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்களை கவர முயற்சிக்கும் விதமாகவும் சில வரிகள் அமைந்துள்ளது தான். இது இதுவரை இல்லாத விசித்திரமானது. இரண்டு மூன்று தொப்பி போட்ட முஸ்லிம்கள் பிஜேபியில் இணைந்த காரணத்தால் இவை சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது நமது கேள்வி. இந்த விசித்திரத்தின் காரணம் சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள், விட்டில் பூச்சிகளாக வீழ்வர் என்கிற நப்பாசைதான். ஒன்றுக்கும் இல்லாவிட்டாலும் இதோ பாருங்கள் நாங்கள் இப்படி சொல்லி இருக்கிறோமே என்று மேடையில் பேசவே இவை உதவலாம். 

குஜராத்தில் 2002ல், முஸ்லிம்கள் இனப்படுக் கொலைச் செய்யப்பட்டதற்கு அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த மோடியின் மீது முஸ்லிம்கள் நேரிடையான பிரதான குற்றவாளி என்றும், மறைமுகமாய் சம்பந்தப்பட்ட குற்றவாளி என்றும் குற்றச்சாட்டுகள் சுமத்திக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு ‘தாராளமயமாய்’ பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து அசத்தி இருக்கிறது பிஜேபி.

அறிக்கையில் முஸ்லிம்களுக்கு குல்பி வைத்த குஜராத் ஐஸ் கொடுக்கும் வாசகங்கள்:

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் மாபெரும் பலமாகும். இதை பிஜேபி உறுதியாக நம்புகிறது.

இந்தியாவை ஒன்றுபபடுத்தி துடிப்புடனும், பாதுகாப்புடனும் வைத்திருக்கின்ற பன்முகத்தன்மையை நாங்கள் பெரிதும் போற்றுகிறோம்.

முஸ்லிம்களின் தொன்மைவாய்ந்த கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை போலவே அவர்களின் சமூக, பொருளாதார பங்களிப்பையும் பிஜேபி போற்றிப் பாதுகாக்கிறது.

60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பரிதாப நிலையைக் கண்டு கவலை கொள்ளும் அதேநேரத்தில், அது முஸ்லிம்களுக்கு சம வாய்ப்பளிப்பதற்கு உறுதியளிக்கிறது.

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இந்திய சிறுபான்மையினத்தார், அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் பின்தங்கிய நிலையிலும், வறுமையிலும் உழல்வது துரதிஷ்டவசமானது. நவீன இந்தியா அனைவருக்கும் சமவாய்ப்பளிப்பதாக நிச்சயம் இருக்கும்.

இந்தியாவின் முன்னேற்றத்தில் அனைத்து சமூகத்தினரும் சமமான பங்குதாரர்கள்தான் என்று பிஜேபி உறுதியளிக்கிறது.

எந்தவொரு பிரிவினர் பங்களிக்காத இந்தியா முன்னேறவே முடியாது என்று நாங்கள் நம்புகின்றோம்.

மேலும், தனது தேர்தல் அறிக்கையில் பிஜேபி முஸ்லிம்களுக்கு இவ்வாறு உறுதிகளும்  அளிக்கிறது:

சிறுபான்மை இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் எவ்வித பாகுபாடும் இருக்காது.

சிறுபான்மையினரின் கல்வி நிலையங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் நவீனமயமாக வலுப்படுத்தப்படும்.

மதரஸாக்கள் நவீனமயமாக்கப்படும்.

பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் முனைவோர்க்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.

சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வக்ஃப் வாரியத்துக்கு அதிகாரமளிக்கப்படும்.

வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்.

முஸ்லிம்களின் வளமான பாரம்பர்யம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.

உருது மொழியின் பாதுகாப்பு மற்றும் அதனை முன்னெடுத்து செல்லும் திட்டங்கள் தீட்டப்படும்.

அமைதியான, பயமற்ற சூழல்; அடக்குமுறை, சுரண்டல் போன்ற பயமின்மை உத்திரவாதம் அளிக்கப்படும்.

பல சமய தலைவர்களின் மேற்பார்வையில் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் ஒரு நிரந்தர அமைப்பு உருவாக்கப்படும்.

இவ்வளவு வாக்குறுதிகளையும் அளித்து விட்டு பிஜேபி தனது காவிமயமாக்கும் திட்டங்களை, பாபர் மசூதி, பொதுச்சட்டம், போன்ற நேரிடையாக முஸ்லிம்களை பாதிப்பதாக இருக்கும் பழைய பிரச்னைகளை முன் வைப்பதும் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ளது. ஆகவே இந்த தேர்தல் அறிக்கை ஒரு பசுத்தோல் போர்த்தி வந்துள்ள புலி. 

அதிகாரம் கையில் வந்தால் இந்தியா இன்னும் சிதறுண்டு போவதற்கான ஆபத்தான அமசங்களை உள்ளடக்கிய இந்த தேர்தல் அறிக்கையும் அதனைத் தயாரித்த தலைவர்களும் அதைத் தாங்கிப் பிடிக்கும் கட்சியும் அதற்கு துணை போக சதி ஆலோசனையில் மவுனம் காக்கும் மாநில கட்சிகளும் அந்த மாதிரியான மாநிலக் கட்சிகளை ஆதரியுங்கள் என்று கூவி அழைக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் யாவருமே குப்பையில் தள்ளப் பட வேண்டியவர்களே! அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் – இதற்கு முன் எவ்வளவு சீர்திருத்தங்கள சொன்னவர்களாக இருந்தாலும் இந்த வாழ்வா சாவா தேர்தலில் மதச் சார்ப்பின்மைக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களித்து மத உணர்வைத் தூண்டும் பிஜேபியின் கனவுகளைத் தவிடு பொடியாக்கும் முயற்சிகளுக்கு சபதம் ஏற்பதே நாம் செய்ய வேண்டியது. இதுவே இந்தியாவைக் காக்கும்; வாழவைக்கும்; வளர்க்கும். 

 - இப்ராஹீம் அன்சாரி  - 

22 comments:

  1. ஒரு தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தகுதி வாய்ப்பு அதிரைக்கு இருக்கிறது. டி ஆர் பாலுவை தோற்கடிப்பதற்காகவே இன வாக்குகளைப் பிரிக்க கருப்பு யென்கிற முருகானந்தம் னிறுத்தப் பட்டு இருக்கிறார். இது வைத்தியலிங்கத்தின் வேலை. இது ஒன்றும் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் அல்ல. வெண்டுமானால் அடுத்த முறை அதிமுகவின் அஜீசுக்கு தலைவர் வாய்ப்பை ஊர் தரலாம். தப்பில்லை. ஆனால் பாராளுமன்றத்துக்கு பிஜேபி அல்லது அதிமுக வுக்குப் போடும் ஓட்டு முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் க்கொள்ளும் வேட்டு. திமுக - கருனாநிதி- ஸ்டாலின் ஆகியோர் பிஜெபியுடன் உறவு தெர்தலுக்குப் பிறகும் இல்லை யென்று கடந்த வாரம் செய்த யெல்லாப் பிரச்சாரங்கலிலும் சொல்லி வருகிறார்கள். ஆகவே அதிரை வாக்காளர்கள் யோசிக்க வேண்டும். காங்கிரசுக்குப் போட்ட்டாலும் தொகுதி முழுதும் போதுமான ஓட்டை அதனால் பெற் இயலாது. யோசியுங்கள்.

    ReplyDelete
  2. ராணுவ மந்திரி அந்தோனியின் கருத்தே என் கருத்து.

    http://peacetrain1.blogspot.com/

    ReplyDelete
  3. Peace train - அமைதி ரயில் . படித்தேன். நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. 1) நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வோம் என்று சொல்லிவிட்டு ராமாயன யுகத்துக்கு அழைத்துச் செல்கிறது இவர்களின் தேர்தல் அறிக்கை.

    2) உ.பி, பிஹார் ஆகிய மாநிலங்களின் முஸ்லிம் வாக்காளர்களைக் குறிவைத்தே, தேர்தல் அறிக்கையில் கொஞ்சம் சீனி தூவியுள்ளனர்.

    3) இந்திய முஸ்லிம்கள் பாஜகவுக்கு எதிராக தெளிவாக வாக்களித்தால் மோடி அலை குஜராத்தோடு நிற்கும்.

    தெளிவான அலசல்.

    ReplyDelete
  5. முகநூலில் இருந்து
    =================

    பாஜக தேர்தல் அறிக்கையை படிச்சிட்டு இருந்தேன், அப்போ எழுத படிக்க தெரியாத எங்க பக்கத்து வீட்டுகாரர் பொன்னையா வந்தாரு
    பொன் :- என்ன ராசா படிக்கிற ?
    நான் :- பாஜக தேர்தல் அறிக்கை பெருசு.
    பொன் :- என்ன சொல்றாய்ங்க, தனி ஈழம் வாங்கி தருவானா?
    நான் :- இல்லை
    பொன் :- தமிழக மீனவன் கொல்லப்படுவதை தடுப்பானா?
    நான் :- இல்லை
    பொன் :- கூடங்குளம் அணு உலை மூடுவானா?
    நான் :- இல்லை
    பொன் :- முல்லை பெரியாறு, காவேரி பிரச்சனை தீருமா?
    நான் :- இல்லை
    பொன் :- அப்புறம் என்ன மயித்துக்கு இவனுக்கு ஓட்டு போடணுமாம், இவனுக்கும் காங்கிரஸ்காரனுக்கு என்ன வித்தியாசம் இருக்கு. இவன் கூட கூட்டணி வைச்சிருக்குற வைகோ மாதிரி எல்லாவனையும் மானெங்கெட்ட பொண்டுவா ன்னு நினைக்கிறானா................................................. ன்னு
    பொரிஞ்சு தள்ளிட்டாரு......................
    @Ernesto Guevara

    ReplyDelete
  6. இந்த அ .நி.யின் எச்சரிக்கை கட்டுரையோடு நேற்றைய[ஏப்ரல் 8,2014] தேதிஇட்ட ' 'தி இந்து 'தமிழ் நாளிதழில்மூத்த பத்திரிக்கையாளர் என். ராம்அவர்களின 'இந்த தேர்தல் அறிக்கை குறித்து நாம் பேசியாகவேண்டும்' என்ற கட்டுரையிலும் ஒரு அபாய எச்சரிக்கைமணியின் ஓசைகாதில் கேட்கிறது.''உத்திர பிரதேசத்தில் ப.ஜ.க.-வினர்நடத்தும் மதவாதம் தெறிக்கும் பிரச்சாரங்களும் அமித்சாவின் அனல்கக்கும்பேச்சுக்களும் எதை காட்டுகின்றன? ப.ஜ.க.வின் குணம் மாறவே மாறாது என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன'' என்றுகட்டுரையாளர் திரு.ராம் அவர்கள் சுட்டிகாட்டுகிறார். ப.ஜ.க வின் தேர்தல் அறிக்கையின் ஆசிரியர்கள் ராஷ்டிரிய சேவா சங்கத்தினரே[R.S.S.]அன்றிப.ஜ.க அல்ல !பா.ஜ.க. வென்றதும் முதல் வேலைபார்பர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதும்.சேதுகால்வாயில்ராமர்பாலம்சீர்படுத்துவதுமே அவர்களின்முதல்பணி! இதில்பல்லாயிரக்கணக்கானமுஸ்லிகளின்தலைகள்குறிவைக்கப்படுகின்றன.ராமாயணம் கட்டுக்கதை!என்று சொன்னபெரியார்-அண்ணா வழிவந்தகருப்புசிவப்பு துண்டுதொண்டர்கள் எல்லாம் ப. ஜ. க.போட்ட'துண்டுக்காக' வாலைஆட்டி தோலில்போட்டகருப்பு துண்டைதூர வீசிவிட்டு ராமர்பாலம் கட்டகல்லெடுத்துகொடுக்க கைகட்டிநிற்கிறார்கள்.ஆக மொத்தம் ப.ஜ க வுக்கும் பாஜகாவின் கூட்டணி கட்சிகளுக்கும்அண்ணா தி.மு.க. என்ற மாறுவேடபாஜகாவுக்கும் போடும் ஒட்டு இந்தியாவின் ஒருமைபாட்டுக்கும் மத ஒற்றுமைக்கும் வைக்கும் வேட்டாகப்போகிறது.

    ReplyDelete
  7. தம்பி ஜமாலுதீன் அவர்களின் கருத்துக்கு நன்றி.

    மச்சான் எஸ். எம். எப் . அவர்களுக்கு,

    திரு . ராம் அவர்களின் கட்டுரையை நானும் படித்தேன். அதைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது எவ்வளவுதான் பிஜேபி இப்படி உபயோகமில்லாத விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருந்தாலும் திரு. ஹிந்து ராம் போன்ற பல நல்ல எண்ணமுடையவர்கள் பரவலாக்க இருப்பது மதச்சார்பின்மையின் பலம்.

    இத்தகையோர் இந்த நாட்டுக்குத் தேவை மத்சக்கிப்புத்தன்மை என்பதை உணர்ந்தவர்கள்.

    ஒரு பள்ளியை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோயிலைக் கட்டிவிட்டால் நாட்டில் பஞ்சம் பசி நீங்கிவிடாது என்பதை உணர்ந்தவர்கள்.

    ஐயருக்கு சைவ சாப்பாடும் அதிராம்பட்டினத்துக் காரருக்கு ஆட்டுக் கறி சாப்பாடும் தேவை என்று இருக்கும்போது அனைவருக்கும்பொது சாப்பாடு என்று சட்டம் போட முடியாது என்பதை உணர்ந்தவர்கள்.

    கண்ணெதிரே மீனவர்கள் கஷ்டப்படும்போது கடலுக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் ராமர் பாலம் என்பது ஒரு கண்ணாமூச்சி வேளை எபதைப் புரிந்தவர்கள் .

    இத்தகைய உண்மை புரிந்த இந்து சகோதரர்கள் இருக்கும்வரை பிஜேபி அல்ல அவர்களின் பாட்டன் வந்தாலும் ஒன்றும் " நொட்ட" முடியாது. சில நிர்வாண சாமியார்களின் ஆசைக்கு இந்திய தேசத்தை கலவர பூமியாக ஆக்க முடியாது. அந்தக் கனவு பலிக்காது.

    ReplyDelete
  8. நமது கண்மணி நாயகம் ( ஸல்) அவர்களையும் அவர்களது மனைவி மார்களையும் இழிவாக இளையான்குடியில் பேசிய பிஜேபியின் ஹெச் . ராஜா சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் நிற்கிறார். பிஜேபி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இவர்தான் நிதி அமைச்சராம். இதே ராஜாதான் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றும் பேசினார்.

    இப்படிப்பட்ட துவேஷமான பேச்சுக்களுக்கு சொந்தக் காரரானவர்கள் நிற்கும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்யத் துணியாத - மனம் வராத - இயக்கங்கள் மயிலாடுதுறையில் மமக சார்பாக நிறுத்தப் பட்டு இருக்கும் ஹைதர் அலியை எதிர்த்து கூட்டம் போடுகிறார்கள். கூட்டத்தின் தலைப்பு : முஸ்லிம் என்பதால் வாக்களிக்க வேண்டுமா? என்பதாகும்.

    ஹைதர் அலி மேல் வைக்கபப்டும் குற்றச்சாட்டு அவர் வக்பு வாரியத் தலைவராக இருந்த போது ஊழல செய்தார் என்பது ஆகும். சரி நல்லதுதான். ஆனால் ஹைதர் அலியை விட்டு விட்டு வேறு யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று அவர்கள் சொல்வது என்றால் ? புடவை கட்டிய புத்தருக்கா? இல்லை. இரட்டை இலைக்கு.

    பெங்களூர் நீதிமன்றத்தின் நெடிய தூண்கள் பட்டியலைப் பார்த்துப்பதறிப் போய் விட்டன.

    படைத்த இறைவநிடம்தான் நாம் கேட்க வேண்டும். இறைவா! என்றைக்கு எங்களுக்கு நல்ல புத்தியைத் தரப் போகிறாய்?

    வேலூரில் தம்பி அப்துல் ரஹ்மான், ராமனாதபுரத்தில் ஜியாவுதீன் அல்லது ஜலீல் ,புதுவையில் நஜீம், மயிலாடுதுறையில் ஹைதர் அலி ஆகியோர் வெற்றி பெற்று தமிழகத்தின் சார்பில் நான்கு முஸ்லிம் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் பிஜேபிக்கு எதிராக முழங்கவேண்டுமென்று எல்லா முஸ்லிம்களும் து ஆச செய்யவேண்டும்.

    ஹைதர் அலியை குறிவைத்து நம்மவர்களாலேயே நடத்தப் படும் அனைத்து சதிகளையும் அல்லாஹ் முறியடிக்க வேண்டும்.

    இந்திய முஸ்லிம்களுக்கு இந்தத் தேர்தல் வாழ்வா சாவா பிரச்னை. இதில் வேடம் கட்டி விளையாடும் யாரையும் சமுதாயம் மன்னிக்காது; மன்னிக்கக் கூடாது.

    ReplyDelete
  9. தெள்ளத் தெளிவான அலசல்; நீதமான ஆலோசனை!

    அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

    பாகுபாடு இல்லாமல் சிறுபான்மையினர் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதில் “இட ஒதுக்கீடா, அப்டீன்னா?” என்கிற ஒரு உள்குத்து தொத்தி நிற்பதாக எனக்குப் படுகிறதே காக்கா, சரியா? அதிக மதிப்பெண் எடுத்தவர்க்குத்தான் தொழிற்கல்விக்கான அனுமதி என்பதே “பாகுபாடு இல்லாமல்” என்னும் சதிச்சொல்லுக்கு அர்த்தம். டாக்டர் மகன் டாக்டர், வக்கீல் மகன் வக்கீல் என்றுதான் போகும்.

    தாமதமாக அறிக்கை தருவதற்கு கண்டிப்பாக அரசியல் காரணம் உண்டு, காக்கா.

    ReplyDelete
  10. மாய மானுக்கு ஆசைப்பட்டு லட்சமணன் போட்ட கோட்டை தாண்டிய சீதை பட்டபாட்டை இப்போதைய திராவிடஇயக்கத்தினர்அறிந்துஇருப்பார்களாஎன்பதுசந்தேகமே!. ராமாயணத்தை பொய்யென்றும் புழுகென்றும் பிரச்சாரம் செய்து தன்னை வளர்த்துக்கொண்டதிராவிடஇயக்கத்தின் வாரிசுகள் 'மோடிஅலை' என்றுமீடியாக்களினால் ஊதிபெரிதாக்கியபிம்பத்தைநம்பி மாயமானை நம்பிய சீதை போல மோடிமானை நம்பி பின்னாலே போகிறார்கள்.உண்மையிலேயே 'மோடிஅலை'' வீசியிருக்குமேயானால் அவர் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கு முன்னே தன் கட்சி தேர்தல்அறிக்கையை வெளீயிட்டு இருப்பார்.' அதை நம்பி-விரும்பி மக்கள் வாக்களிப்பார்களா?' என்ற சந்தேகம் மோடியின் மனதில் ஓடிஇருக்க வேண்டும்.தன்நம்பிக்கை இல்லா ஒருவரை நம்பி அவர் பின்னேபோவதில் மாய மானை பின்தொடர்ந்த சீதைக்கு ஏற்பட்டகதிதான் மோடியை நம்பினோற்கும் உண்டாகும். வடபுலத்தையே திட்டிதிட்டி வளர்ந்த ஒருகட்சியின் சாயலில் கட்சிபெயரும் அதேகட்சி கொடியின் சாயத்தை கொஞ்சம் இடம் மாற்றி கொடியும் கொண்டவர்கள் வடபுலத்தின் பின்னே வால் பிடித்து செல்லாமல் சுயமரியாதை சிங்கங்களாக சிறுத்தைகளாக வேங்கைகளாக வீறுகொண்டு சீறிப்பாய வேண்டாமா?

    ReplyDelete
  11. அருமையான / திறமையான அலசல்...

    //தேர்தலில் மதச் சார்ப்பின்மைக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களித்து மத உணர்வைத் தூண்டும் பிஜேபியின் கனவுகளைத் தவிடு பொடியாக்கும் முயற்சிகளுக்கு சபதம் ஏற்பதே நாம் செய்ய வேண்டியது. // என்னுடைய கருத்தும் இதுவே...உணர்வுள்ள முஸ்லிம்களும் இதைதான் செய்ய வேண்டும்

    ReplyDelete
  12. தம்பி சபீர் அவர்களுக்கு,

    பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு கோட்பாடு புறந்தள்ளபபடும். ஏற்கனவே பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்பவர்கள் அவர்கள். சமூக நீதி என்று பல ஆண்டுகள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு , பெண்ணுரிமை போன்றவைகளை பேணக் கூடாது என்கிற கூட்டம்தான் பிஜேபியில் கொலுவீற்று இருக்கிறது.

    பிஜேபியை உயர் ஜாதி, சமூகத்தோக்கான கட்சி என்று திராவிடக் கட்சிகள் வர்ணித்த காலம் உண்டு.

    தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணியின் சார்பில் பெண்வேட்பாளர் ஒருவர் கூட நிறுத்தப் படவில்லை என்று நினைக்கிறேன்.

    குற்றங்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ரெபர் செய்யபப்டுவதைவிட மனுநீதி ரெபர் செய்யபப்டும் வாய்ப்பே அதிகம்.

    ReplyDelete
  13. மருமகனார் யாசிர் அவர்களுக்கு,

    கருத்துக்கு நன்றி.

    //மதரஸாக்கள் நவீனமயமாக்கப்படும்.// என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் இருப்பது சூட்சமம்- சூழ்ச்சி - வஞ்சகம் - வலைவிரிப்பு- வார்த்தை ஜாலம்- வக்கணை .

    ReplyDelete
  14. சகோதரர் அதிரை பாமரனின் கருத்துக்கும் ஆழமான ஆய்வுக்கும் நன்றி.

    இரண்டு விஷயங்கள் .

    ஒன்று அதிமுக வின் அரவணைப்பில் தஞ்சை தொகுதியில் பிஜேபி வேட்பாளர் நிறுத்தப் பட்டு இருப்பது .

    இரண்டு நீலகிரி தொகுதியில் பிஜேபி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டு இருப்பது. இரண்டுமே பிஜேபி மற்றும் அதிமுக நடத்தும் அரசியல் சதி என்கிற நாணயத்தின் இரு பக்கங்கள்.

    தஞ்சை = டி ஆர் பாலு தோற்கவேண்டும் என்பதற்காகவும்
    நீலகிரியில் = ஆ. ராசா தோற்க வேண்டுமென்பதற்காகவும் நகர்த்தப் பட்டுள்ள காய்கள்.

    ReplyDelete
  15. //அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்அரசியல் சட்டத்துக்குஉட்பட்டு ராமர் கோயில் கட்டப்படும்// பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை/ குஷ்புக்கு கட்டுனகோயிலும் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் கட்டினார்களா?

    ReplyDelete
  16. // மேலும் ஒரே நாடு என்ற இலட்சியத்தை முசங்குகிறது// அப்போ ஒரத்தநாடு,பாப்பாநாடு.கூரநாடு.மாநாடு. கொரநாட்டையெல்லாம் என்ன செய்யப் போறாங்க?

    ReplyDelete
  17. //
    //மதரஸாக்கள் நவீனமயமாக்கப்படும்.// என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் இருப்பது சூட்சமம்- சூழ்ச்சி - வஞ்சகம் - வலைவிரிப்பு- வார்த்தை ஜாலம்- வக்கணை .//

    காக்கா,

    நவீனப்படுத்தப்படும் என்றால் மதரஸாக்கள் தோறும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு அவை பிஜெபி அரசால் நெறிப்படுத்தப்படும்.

    இது எப்டி இருக்கு?

    ReplyDelete
  18. காக்கா மிக அருமையான அலசல் அல்லாஹ் உங்கள் மேலான என்னங்களை ஏற்றுக்கொள்வானாக
    மேலும் இந்த தேர்தல் சிறுபான்மையைனருக்கு குறிப்பாக முஸ்லீமகளுக்கு மிக முக்கியமான தேர்தல் என்பது எல்லாருக்கும் தெரியும்

    இந்த நேரத்தில் இட ஒதிக்கீடு பெரிதல்ல நம் சமுதாயத்தின் மானம்தான் நமக்கு முக்கியம்
    மானத்தை காக்கும் மாஹா ராசாக்களே எந்த தலைவர்களாக இருந்தாலும் பிஜேபி ஜெயித்து வந்தால் பிஜேபி காலில் விழுவது நிச்சயம் பிறகு நம் உரிமைக்கும் உடமைக்கும் வேட்டு என்பது நிச்சயம் அதை சீர்தூக்கி பாருங்கள் அல்லாஹ் அதை காப்பாற்றவேண்டும்

    நம் தலவர்களுக்கு வேறு விசயங்களில் கட்டுபட்டுகொள்ளலம்
    இது வாழ்வா சாவா என்றிரிக்கும்போது தேர்தலுக்கு பின்னால் பிஜேபி ஜெயித்துவந்தால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கொஞ்சம்கூட சிந்திக்காமல் தன் மானத்தை இழக்க வழிவகை செய்கின்றார்கள் எதிர்காலத்தின் சமுதாயத்தின் நிலை குறித்து பெரிதும் கவலைக்கிடமக உள்ளது இதை சமுதாய் சிந்தனை உள்ள பலர் வாய்விட்டு புலம்பி தள்ளுகின்றார்கள்


    காரணம் நம் சமுதாயத்தை நிறைய பேக்டீரியாக்கள் தாக்கியுள்ளன நம் சமுதாயத்திற்கு ஒருபக்கம் ஈஸிஜி எடுக்கப்படுகின்றது இன்னொரு பக்கம் நீர் மலம் இரத்த டெஸ்ட் மறுபக்கம் சலி தொந்தரவு அப்பப்பா சமுதாயத்தின் நிலமை மிகவும் கவலைக்கிடம்

    அல்லாஹ்தான் நம் சமுதாயத்திற்கு நல்ல ஆரோக்கியமான சுகத்தை கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு பர்ழு தொழுகைக்கு பின்பும் இறைவனிடம் கையேந்துவோம்

    இந்த நேரத்தில் மியான்மாரையும் குஜராத்தையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  19. நிதி நிறுவன மோசடி செய்தால் நிதி அமைச்சரா? என்ன கொடும காக்கா இது!

    http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-114011600037_1.htm

    மயிலாடுதுறை வேட்பாளர் ஹைதர் அலியின் வேட்புமனு பிரமானப்பத்திரம் http://elections.tn.gov.in/AFFIDAVITS/PDFHandler.ashx?id=371 இல் கிடைக்கிறது. அதில் ததஜ பிரச்சார பரிவாரங்கள் சொல்லும் எந்த குற்றச்சாட்டும் இல்லை. இவர்களிடம் சரக்கு இருந்திருந்தால், ஆட்சேபனை மனுகொடுத்து தகுதி நீக்கம் செய்திருக்கலாமே. வெறும் வாய்ச்சவடால் பேர்வழிகள் அவர்கள். செய்யது இப்றாஹீமின் பேச்சுக்கும், ஹெச். ராஜாவின் பேச்சுக்கும் கொஞ்ச வேற்பாடுதான். அவனைவிட வயதில் மூத்தவர் என்றுகூடப் பாராமல் அவன், இவன் என்றெல்லாம் பேசியுள்ளான்.

    1000 தர்பியா முகாம்கள் நடத்தினாலும் இவனுங்களைத் திருத்தவே முடியாது எனுமளவுக்கு வெறியூட்டப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  20. அன்பின் தம்பி அதிரைக்காரன் ஜமாலுதீன்,
    அஸ்ஸலாமு அலைக்கும்.

    நெற்றியடியாக பொருத்தமான கருத்தைப் பொருத்தமான நேரத்தில் பதிந்து இருக்கிறீர்கள்.

    குறிப்பாக ஹைதர் அலி மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் மேடை போட்டு வீரமணி சோடா குடித்துக் கொண்டு காட்டுக் கத்து கத்துவதை விட தேர்தல் கமிஷன் இடம் ஆட்சேபனை மனு கொடுத்து டிஸ்குவாளிபை செய்யலாமே. அது செய்யத் துணியாத காரணம் சட்ட ரீதியாக இவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை இருப்பதே என்பதை அழகாக சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.

    செய்யது இப்ராஹீம் உடைய பேச்சைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம். இவர் வந்து பேசியதால் இன்னும் பத்தாயிரம் ஓட்டுக்கள் அனுதாபமாக ஹைதர் அலிக்குக் கிடைக்கும் என்பதே மயிலாடுதுறையில் இருந்து வந்துள்ள செய்தி.

    அதே போல் செய்து இப்ராஹீம் அவர்களை வைத்து பாபனாசத்தில் இருந்து சீர்காழிவரை கூட்டம் போடட்டும் . போட்டால் தொகுதிக்கு இன்னும் பத்தாயிரம் ஓட்டுக்கள் ஹைதர் அலிக்குக் கிடைக்கும்.

    தர்பியா முகாம்கள்? அல்லாஹ் பாதுகாப்பானாக! உயர்ந்த இலட்சியங்கள் கீழ்த்தரமான பேச்சுக்களால் கொச்சைப் படுத்தப் பட்டுவிட்டன.

    ReplyDelete
  21. அன்பானவர்களே! கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

    அரசியல் தலைவர்களில் ஸ்டாலின் உட்பட்ட திமுக பேச்சாளர்கள், இடது வலது கம்யூனிஸ்ட் தோழர்கள், காங்கிரஸ் கட்சியினர் , விடுதலைச் சிறுத்தைகள், பல முஸ்லிம் இயக்கங்கள் ஆகியோர் இந்த தேர்தல் அறிக்கையை விமர்சித்து இருக்கிறார்கள்.

    ஆனால்

    அதிமுக, மதிமுக, தேமுதிக, பா ம க ஆகிய அனைவரும் பாலுசாமியாக மாறி, பேச்சு மூச்சையே காணோம்.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.