Thursday, December 29, 2016

கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது !

இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு சொந்தக்காரர் அறிஞர் என்று தமிழகம் அடைமொழி சூட்டி அழைக்கும் அண்ணா அவர்களாவார்கள். இந்தக் கட்டுரையின் பேசு பொருளுக்கு இதைவிட சிறந்த தலைப்பு எனக்குத் தென்படவில்லை. ஆகவே அண்ணா அவர்களிடமிருந்து இதைக் கடன் வாங்கிவிட்டேன். ஏற்கனவே அவரது இதயம் கடன் வாங்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியும் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதானே!

1970 களில் தமிழக அரசு தலைமைச் செயலக வட்டாரங்களில் ஒரு நகைச்சுவையான நிகழ்வை பரவலாக கிசு கிசு என்று பேசிக் கொள்வார்கள் . அந்த நேரத்தில் ஆளும்கட்சியின் அமைச்சர்களின் கல்வித் தரத்தை விமர்சிக்க எதிர்க் கட்சி மேடைகளில் கூட இந்த நிகழ்வு பேசப்படும்; கைதட்டி ரசிக்கப்படும். நாமும் அதைப் பகிர்ந்து ரசிக்கலாம்.

விஷயம் இதுதான்.

ஐந்தாம் வகுப்புக் கூட தேறாத ஒருவருக்கு, கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் என்ற முறையில் அமைச்சர் பதவியை வழங்கினார். அன்றைய முதல்வர்.

அமைச்சர் தனது அறையில் வந்து அமர்ந்தார். எப்போதும் திரைப்படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் பழக்கம் உடைய அவருக்கு ஒரு கையடக்கமான சிறிய ட்ரான்சிஸ்டர் இருந்தால் நல்லது என்று தோன்றியது.

தனது பி. ஏ யை கூப்பிட்டார். பி.ஏ ஒரு புதிய I A S அதிகாரி.

“ஒரு சின்ன ரேடியோ வேணும். என்ன வாங்கலாம்?”

“ பிலிப்ஸ் ரேடியோ வாங்கலாம் சார். அதுதான் நல்ல குவாலிடியாக இருக்கும் “

“ சரி ! ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கிட்டு வரச் சொல்லுங்க! இந்தாங்க பணம். “

I A S அதிகாரி பணத்தைப் பெற்றுக் கொண்டு போனார். சற்று நேரத்தில் ட்ரான்சிஸ்டர் வந்ததது. அதைப் பெட்டியை திறந்து அதை மின் இணைப்பில் பொருத்தி அமைச்சரே இயக்கினார்.

ரேடியோவில் அப்போது செய்திகள் சொல்லும் நேரம். ரேடியோ இப்படி சொல்லியது .

“ இது ஆல் இந்தியா ரேடியோ ! “ 

இதைக் கேட்டதும் அமைச்சருக்கு முகம் சிவந்தது. ரேடியோவை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மீண்டும் பி ஏ யைக் கூப்பிட்டார்.

“ஏன்யா ! நான் உம்மை என்ன ரேடியோ வாங்கிவரச் சொன்னேன்? நீர் என்ன வாங்கி வந்திருக்கிறீர்?”

“பிலிப்ஸ் ரேடியோ வாங்கச் சொன்னீங்க! அதுதான் இது. “

“ யாரைய்யா ஏமாத்தறீங்க? இது ஒன்னும் பிலிப்ஸ் ரேடியோ இல்லே”

“இல்லே சார் இது பிலிப்ஸ்தான் “

“யோவ் ! அவனே சொல்றான் இது ஆல் இந்தியா ரேடியோன்னு நீர் திரும்பவும் பிலிப்ஸ் பிலிப்ஸ் என்கிறீர். உடனே இதைக் கொண்டு போய் திருப்பிக் கொடுத்துட்டு உண்மையான பிலிப்ஸ் ரேடியோவோட வாரும்! “

விழிகள் பிதுங்க தலையில் அடித்துக் கொண்டே புதிய I A S அதிகாரி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே ரேடியோவைத் தூக்கிக் கொண்டு மாண்புமிகு அமைச்சரின் அறையைவிட்டு வெளியே வந்தார்.

கடைசியில் முதல்வர் தலையிட்டு விபரம் கூறி புரியவைத்தார் என்பதுதான் அந்த செய்தி. நகைப்பிக்கிடமான அந்த செய்தியை இன்று நினைத்துப் பார்க்கும் தருணம் வந்து இருக்கிறது.

I A S, I P S, I F S, போன்ற தேர்வுகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்பவர்கள் பொதுவாக சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். சிறுவயது முதலே ஆரம்பக் கல்வி வகுப்பில் இருந்தே முதலிடம் பெற்று சிறந்து விளங்குவார்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

எவ்வளவு பெருமை வாய்ந்த படிப்புகளும் பதவிகளும் இருந்தாலும் I A S - I P S - I F S ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்று பதவிகளில் அமர்பவர்களுக்கு இருக்கும் பாங்கும் மதிப்பும் அளப்பரியது.

பிறப்பிலேயே அறிவாளிகளாக அல்லது வளர்க்கப்படும்போது அறிவாளிகளாக வளர்க்கப்படும் I A S - I P S - I F S ஆளுமை பெற்றவர்களுக்கு எந்த அளவு அறிவு இருக்கிறதோ, நிர்வாகத் திறன் இருக்கிறதோ, அதே அளவு நாட்டின் நலனிலும் அவர்களுக்கு பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும் நன்னடத்தை உரியவர்களாகவும் இருக்க வேண்டுமென்றும் நாட்டு நலனின் அக்கறை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் கல்வியறிவில்லாத மக்கள் எதிர்பார்ப்பது இயல்பு. அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பும் இயல்பே மக்களுடையது.

கடுமையான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தங்களின் அறிவுத்திறமையை நிருபிப்பவர்களே I A S - I P S - I F S போன்ற தகுதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய தேர்வில் கலந்து கொள்ளும் பலர் பலவித தரங்களிலும் நிலைகளிலும் சோதிக்கப்பட்டு, வடிகட்டப்பட்டே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். Civil Services Examinations எனப்படும் கடினமான இத்தேர்வுகளை Union Public Service Commission (UPSC) என்கிற அமைப்பே நடத்துகிறது.

எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டு ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் கலந்து கொண்ட தேர்வுகளில் 180 பேர்கள் மட்டுமே தகுதி பெற்றார்கள் என்ற மலைக்கவைக்கிற புள்ளிவிபரம் இந்தத் தேர்வுகளில் தேர்வானவர்களின் அறிவுத்திறமைகளை பறை சாற்றும்.

ஆனாலும்,

ஜனநாயகம் என்கிற அருமையான கருவி, எவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த்துகிறதோ அவ்வாறே சில ஆபத்துக்களையும் நிகழ்த்துகிறது. அந்த ஆபத்துக்களின் ஒரு அச்சமூட்டும் அம்சம்தான் ஐந்தாம் வகுப்புக் கூட படிக்காதவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள், பேட்டை ரவுடிகள், கட்டைப் பஞ்சாயத்துக்காரர்கள் இடும் உத்தரவுக்கு I A S, I P S, I F S படித்தவர்கள் தலையாட்டும் நிலைமையும். சுயநல அரசியல்வாதிகளின் கரங்களில் சிக்கி உயர் படிப்புப் படித்த I A S, I P S, I F S அதிகாரிகள் பணியாற்றுவது – இட்டதை செய்வது – எடுப்பார் கைப்பிள்ளை ஆவது போன்ற நிலைமைகள் சமூகஅரசியல், நிர்வாகம் ஆகிய உயர்ந்த இலக்குகளின் மீது தடவி வைக்கபட்டிருக்கும் சகதிச் சான்றுகள். இன்றைய நிர்வாக அமைப்பில் அகற்ற இயலாத அசிங்கங்கள். பல்வேறு அரசுத் திட்டங்களில் ஆளும்கட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டணி கொடி கட்டிப் பறக்கிறது.

இதைக் குறிப்பிடும் நேரத்தில் மீண்டும் அறிஞர் அண்ணா அவர்களை நினைவு கூற வேண்டியவர்களாகிறோம். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டதும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டைக் கூட்டினார்.

அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் பேசும்போது I A S, I P S அதிகாரிகளைப் பார்த்து இவ்வாறு கூறினார். “ இன்று நான் இந்த மாநிலத்தின் முதலமைச்சராகி இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சராகவேண்டும் என்று முயற்சி செய்தால் உங்களில் ஒருவர் முதல்வராகவும் இன்னும் சிலர் அமைச்சர்களாகவும் வந்துவிட முடியும். ஆனால் முதலமைச்சராகிய நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களைப் போல I A S, I P S அதிகாரியாக ஆக இயலாது; இயலவே இயலாது “ என்று கூறி பலத்த கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். இது சரித்திரம்.

அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசாண்ட கட்சிகள் எவ்வளவுதான் பல்வேறுவகையான நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப் படுத்தி இருந்தாலும் சர்க்காரியா கமிஷன் என்றும் சொத்துக் குவிப்பு வழக்கு என்றும், அமைச்சர்களின் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து, செம்மண் முதலிய கனிம வளக் கொள்ளை போன்ற வழக்குகள் ஆகியவையும் இருபிறவிகளாக இணைந்து வளர்ந்ததையும் நாம் புறந்தள்ளிட இயலாது. இந்த ஊழல்களில் எல்லாம் உயர் படிப்புப் படித்த அரசு அதிகாரிகளின் கரங்களும் இணைந்து இருந்தன என்பதையும் மறுக்க இயலாது.

படிப்பில் சிறந்து விளங்கிய காரணத்தால், பதவிபெற்று அறிவுசார்ந்த மேன்மையுடைய I A S, I P S அதிகாரிகள், தங்களுடைய ஆசை அவர்களுடைய அறிவின் கண்களை மறைத்துவிட்ட காரணத்தால் மக்கள் விரோத செயல்களிலும் இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபடும் முதல் அமைச்சர் உட்பட்ட அமைச்சர்களுடைய நடவடிக்கைகளுக்கு தாங்களும் ஒத்துழைப்பு கொடுப்பது ஒரு பக்கம், அவ்வாறே ஆளும் வர்க்கமும் நிர்வாக வர்க்கமும் இணைந்து ஊழல் செய்யும்போது ஏற்படும் சட்ட பூர்வ பிரச்னைகளில் இருந்து அமைச்சர்களை தற்காத்துக்கொள்வது எப்படி என்கிற வழிகளையும் சொல்லித்தருபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் கடந்தகால வரலாறுகளில் இருந்து நாம் கவனிக்கும்போது I A S, I P S அதிகாரிகளைப் பார்த்து படித்தால் மட்டும் போதுமா ? என்றே வினா எழுப்ப வைக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 23/06/2015 ஆம் தேதி வெளியான தகவல் இவ்வாறு சொல்கிறது.

100 IAS officers came under the CBI scanner in the last five years for their alleged involvement in various corruption cases with the Central Government according sanction to prosecute 66 of them.

The CBI has sent requests seeking sanction to prosecute 100 IAS officers, 10 CSS Group A officers and nine CBI Group A officers since 2010. Minister of State for Personnel, Public Grievances and Pensions, Jitendra Singh said a written response in the Rajya Sabha.

2010, ஆம் ஆண்டிலிருந்து 100 IAS அதிகாரிகளின் மீது பல்வேறுவகையான ஊழல் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளை CBI ஆய்வு செய்தது. அவற்றுள் 66 வழக்குகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய துணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமான தனது பதிலில் பாராளுமன்ற மேலவையில் தெரிவித்து இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இன்னொரு தகவலையும் நாம் காண நேரிட்டது. அது இதுதான்

Press Information Bureau 

Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
23-April-2015 17:13 IST

Corruption Cases Against IAS/IPS/IRS Officers 
According to the information made available by the Central Bureau of Investigation (CBI), it had registered 74 cases of Prevention of Corruption Act against IAS/IPS/IRS officers during the last three years i.e. 2012, 2013, 2014 & 2015 (31.03.2015). 

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது என்றால் படிப்பு வேறு; பண்பு வேறு என்பதுதான். படித்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்கிற பொது விதி அல்லது நம்பிக்கை குழி தோண்டி புதைக்கபட்டிருக்கிறது என்கிற நிதர்சனம்தான்.

தன்னலம் கருதி அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளைத் தவிர அடிப்படைக் கல்வியறிவு இல்லாமல் அமைச்சர்களாக ஆக்கப்படுபவர்களுக்கு தவறான வழிகளை சொல்லிக் கொடுத்து ஊழலில் திளைக்க நீரூற்றி வளர்ப்பதும் இத்தகைய IAS / IPS / IRS அதிகாரிகள்தான்.

தவறான புரிதல்களில் இருந்து அடிப்படைக் கல்வி அறிவு இல்லாமல் ஜனநாயக முறையில் அமைச்சர்களாக ஆகி வருகிறவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டிய பொது நலனும் பொறுப்பும் இததகைய அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் எத்தனை பேர்கள் இவ்வாறு நல்வழியில் நடப்பதற்கு துணை நிற்கிறார்கள் என்பது கேள்விக்குறி.

அமைச்சர்களுக்கும் அதிகாரத்தலைமைக்கும் தவறான வழிகளைக் காட்டுவது, அமைச்சர்களும் அதிகாரத் தலைமையும் தாங்களாகவே தவறுகளை செய்யத் துணியும்போது தைரியம் கொடுத்து துணை நிற்பது, தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துவது போன்ற பொறுப்புகளை மறந்து தாங்கள் கற்ற கல்விக்கு இழுக்குத் தேடுவதாகவே பலரின் செயல் அமைந்து இருக்கிறது.

அப்படியானால் ஒழுங்கான, உருப்படியான, நேர்மையான அதிகாரிகளே இல்லையா ? இப்படி ஒட்டு மொத்தமாக அனைவரையும் குற்றம் சாட்டுவது சரியா என்ற கேள்வி எழலாம். எத்தனையோ நேர்மையான முத்துக்கள் போன்ற சிறந்த அதிகாரிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளோடு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் அத்தகைய அதிகாரிகளின் திறமைக்கேற்ற துறைகள் அவர்களுக்கு வழங்கப் படுவதில்லை. ஒரு அரசில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து பல நல்ல காரியங்களை செய்த அதிகாரி, அடுத்த ஆட்சி மாறும்போது எங்கேயாவது தண்ணி இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். இதனால் நமக்கு ஏன் வம்பு என்று தங்களை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு நிர்ப்பந்தத்துக்கு அதிகாரிகள் ஆளாக்கப்படுகிறார்கள்.

அண்மையில் தமிழக தலைமைச் செயலாளர் திரு. ராம் மோகன்ராவ் அவர்களின் வீடு வருமானவரி, அமலாக்கத்துறை, சி பி ஐ ஆகிய மத்திய அரசின் அதிகாரிகளால் சோதனை இடப்பட்டது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உடைய அறை மத்திய ரிசர்வ் காவல் துறையின் துணையுடன் நாடே பதைத்து நிற்க சோதனையிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தலைமைச் செயலாளர் உடைய மகனுடைய வணிக நிறுவனங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இந்த வலையில் பல கொழுத்த மீன்களும் அகப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானோம். பலகோடிகள் அவர்களது வீடுகளிலும் அலுவலகங்களிலும் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன. இவைகள், அதிகாரவர்க்கங்கள் மக்களின் வயிற்றில் மண்ணை அடித்து சுய இலாபத்துக்காக சேர்த்துவைத்துகொண்ட அசிங்கமான அடையாளங்களுக்கும் சேகர் பாபு போன்ற சுரண்டல் பேர்வழிகளுடன் அதிகாரவர்க்கங்கள் கைகோர்த்துக் கொண்டு கொண்டாடிய ஊழல் திருவிழாவுக்கும்  அங்கு கைப்பற்றப் பட்டவை சான்று பகர்கின்றன.

ஆலமரமாய் கிளைகள் பரப்பி இருக்கும் இத்தகைய ஊழல் சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்துக்கு வைட்டமினாகவும் உரமாகவும் திகழ்ந்தவர்கள் அந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்த தார்மீக பொறுப்பு எடுத்து இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே. ஆனால் தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ஆட்சியின் திட்டங்களில் அதிகார வர்க்கங்களுடன் அதிகாரிகள் கூட்டணி அமைக்கிறார்கள்.

“அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்“ என்று புறநானூறு கூறுகிறது. நாடு, அறிவுடையோரை அடையாளம் கண்டு, அவர்களை தத்தமது துறைகளில் பயிற்றுவித்து, அவர்களுக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் ஊதியங்களை வழங்கி, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்கிறது. அதற்காக அவர்களிடம் இருந்து நன்னடத்தை, நற்பண்பு,ஒழுக்கம், ஊழலற்ற தன்மைகள், பொறுப்புணர்வு, பொதுநலன் ஆகிய தன்மைகளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மங்கை சூதகமானால் கங்கைக்குப் போகலாம். ஆனால் கங்கையே சூதகமானால் இந்த நாட்டை யார்தான் காப்பாற்ற முடியும்.

அரசு அதிகாரிகளின் ஊழல் கூட்டணியால் நாட்டு நலம் என்கிற குன்றம் தாழும்; கூட்டுச்சதி, ஊழல் போன்ற கோடுகள் உயரும்.

இபுராஹீம் அன்சாரி

No comments:

Post a Comment

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.