சோலையும் பாலையும்...! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2014 | , , ,

எங்கும் பசுமை நிறைந்துள்ள
                  எழிலைப் பெற்றுச் சிறந்தோங்கும்
எங்கள் இந்தியப் பதிவிட்டே
                  ஏறிச் சென்றோம் விமானத்தில்.

காடும் மலையும் ஆறுகளும்
                  கடலும் கரையும் பல்வேறு
நாடும் நகரும் தாண்டிமிக
                  நன்றாய் ஊர்தி பறந்ததுவே.

சிலமணி நேரப் பயணத்தால்
                  சில்லென் றரபு துபைவந்தோம்
நலமுடன் வந்து சேர்ந்ததனால்
                  நாயன் அருளைப் புகழ்ந்தோமே.

ஃபஹிமா ஃபஹ்மிதா மச்சிகளும்
                  ஃபவ்வாஸ் மச்சான் தாஜ்மாமா
வெகுபேர் மைமுனா மாமியுடன்
                  விமான நிலையம் வந்தார்கள்

காரில் ஏறிப் புறப்பட்டோம்
                  கடிதாய்ப் பறந்தது வாகனமும்
நேரில் கண்டோம் பாலைவனம்
                  நெஞ்சில் ஆர்வம் கொண்டோமே

எங்கும் மணலின் மலைக்கூட்டம்
                  எரியும் வெயிலின் சதிராட்டம்
பொங்கும் கடலின் அலையோசை
                  புரியும் அழகுப் பாதையிலே

துபையைக் கடந்து ஷார்ஜாவில்
                  துரிதாய்ச் சென்று அஜ்மானில்
சுபமாய் நுழைந்து வீட்டுக்குள்
                  சுகமாய் வந்து சேர்ந்தோமே

பாலை நிலத்தை அற்புதமாய்ப்
                  பார்ப்ப தற்குக் கண்குளிரச்
சோலை வனமாய் மாற்றியுளார்!
                  சுகமாய்ச் சென்று பாருங்கள்!

அதிரை அஹ்மது

2 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தாத்தா!(சாச்சா)வின் பாப்பா பாட்டு வெகு ஜோர்!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பாப்பா பாட்டினூடே பெயர்களை, அதுவும் இஸ்லாமிய (அரபு?) பெயர்களை நுழைப்பதற்கு சிறந்த சாதுர்யம் வேண்டும்.

சூப்பர் காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.