Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label k1. Show all posts
Showing posts with label k1. Show all posts

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-9 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2016 | , ,


ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் கைபர் எனும் யூதக் குடியிருப்பு ஊரை நோக்கிப் படை நடத்திச் சென்றார்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.அந்தப் படையில் பல தரப்பட்ட நபித்தோழர்கள் பங்கெடுத்திருந்தனர். அவர்களுள் கவிஞர்களும் இருந்தனர்.  ஆமிர் பின் அக்வஉ (ரலி) என்பார் ‘ஒட்டகப் பாட்டு’ இசைப்பதில் வல்லவர்.  இரவு நேரமாயிற்று. அப்போது தோழர்களுள் ஒருவர் ஆமிரைப் பார்த்து, “உம் கவிதைகளுள் சிலவற்றைக் கேட்கச் செய்ய மாட்டீரா?” என்றார். உடனே அவருடைய வாயிலிருந்து கவிதைக் கடலின் அலைகள் வரிவரியாக வந்தன:

اللهم لولا أنت ما اهتدينا ، و لا تصدقنا و لا صلينا
فاغفر فداء لك ما اتقينا ، و ثبت الأقدام إن لاقينا
و ألقيا سكينة علينا ، إنا إذا صيح بنا أبينا
و بالصياح عولو علينا

(சஹீஹுல் புகாரீ – 2477, 4196,6148)

இதன் தமிழ்க் கவியாக்கம்:

இறைவா!  நீயே இலையென்றால்
இருக்க மாட்டோம் நேர்வழியில்
சிறப்பாய்த் தான தருமங்கள்
செய்தே இருக்க மாட்டோம்யாம்
மறையோன் உன்னைத் தொழுதேநல்
மாண்புற் றுயர்வைப் பெறமாட்டோம்
சிறியோர் எம்மை உன்னுடைய
திருமுன் அர்ப்பணம் செய்கின்றோம்!

நல்லற மெதுவும் எம்வாழ்வில்
நழுவிற் றென்றால் எம்மைநீ
இல்லை அருளென் றொதுக்காமல்
இறங்கிப் பொறுப்பாய் நாயகனே!
எல்லை மீறும் போக்குடைய
எதிரிப் படையைச் சந்தித்தால்
நில்லா எங்கள் கால்களையே
நிலைக்கச் செய்தே அருள்புரிவாய்! 

எங்கள் மீதே அமைதியினை
இறங்கச் செய்வாய் வல்லவனே!
பொங்கும் ஆர்வப் பெருக்காலே
போவோம் நாங்கள் போர்முனைக்கே
அங்கும் எம்மவர் ஆர்த்தெழுப்பும்
அபயக் குரலைக் கேட்டவுடன்
மங்கா அன்புத் தோழர்க்கு
மாண்போ டுதவி செய்திடுவோம்!

இந்தக் கவியடிகளைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டக ஓட்டி?” என்று கேட்டார்கள்.  “ஆமிர்” என்று மக்கள் கூறினர்.  இதைக் கேட்ட அண்ணலார், “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று வாழ்த்துக் கூறினார்கள். ‘அல்லாஹ் அருள் புரிவானாக!’என்ற இறைத்தூதரின் இறைஞ்சலின் பிரதிபலிப்பு,அதே கைபர்ப் போரில் அத்தோழருக்கு ‘ஷஹீத்’ என்ற பெரும் பதவியைப் பெற்றுத் தந்தது!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு ஒன்றில், செவிவழிச் செய்தியை வைத்துப் புனைந்துரை கூறுவதில் கவிஞரும் நபித் தோழருமான ஹஸ்ஸான் (ரலி) அவர்களும் எவ்வாறோ ஈடுபட்டுவிட்டார்! அவரை ஆயிஷாவின் சகோதரி மகனான உர்வா (ரலி) அவர்கள் பிற்றைய நாட்களில் ஏசினார்கள். இதைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “மகனே! அவரை ஏசாதீர்! ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதருக்காக, இணை வைப்பவர்களைத் தாக்கிக் கவிதை பாடி, பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்” என்றார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 4145, 6150)

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

-அதிரை அஹ்மது

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 27

தொடர் நிறைவுறுகிறது

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2012 | , ,

இறையருட்கவிமணி அவர்கள் தமது கவிதைத் திறனால் ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சிகள் ஏராளம்.  மழலைச் செல்வங்களுக்கான குழந்தைப் பாடல்களானாலும் சரி, கவியரங்கப் பாக்களாயினும் சரி, அவற்றினூடே இழைந்தோடும் கருத்துக் கருவூலங்கள் அன்னார் செய்த சிந்தனைப் புரட்சிகளுக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

கல்வியாளர்களும் அறிஞர்களும் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளைப் பட்டியலிட விழந்த கவிமணியவர்கள், அறிஞர்கள் தாம் கற்ற கல்வியைச் சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில், ஆழிய அறிவுக் கருவூலங்களையும் இறையருள் இலக்கியங்களையும் தமிழ் மொழியில் வார்த்தெடுத்துக் கொடுக்க வேண்டிய தேவையைக் கீழ்க்காணும் கவியடிகளில் பாடுகின்றார்:

          “வான்போற்றும் கருத்துகளை வடித்தெடுத்துக் கொடுப்பதுதான்
           தீன்போற்றும் நமக்கெல்லாம் திகழ்கின்ற பணியாகும்
           அறிவுப் பசிஎடுத்தே அலமந்து நிற்போர்க்குச்
           செறிவு மிகைத்திருக்கும் சீர்மறையின் கருத்துகளைச்
           சேர்த்தெடுத்துக் கொடுத்திடுவோம்; செந்தமிழின் சுவைசேர்த்துப்
           பார்த்தெடுத்து வழங்கிடுவோம்; பாருலகில் ஓங்கிடுவோம்!”

இல்லாவிட்டால், ‘கற்றதனால் ஆய பயனென்?’ என்று கேட்பது போல் தோன்றுகின்றதல்லவா?

கற்றோர் செய்ய வேண்டிய அப்பணியை இன்னும் அழகாகப் பாடுவதைக் கேளுங்கள்:

                   “கண்ணைக் கவர்கின்ற கண்ணாடிக் கிண்ணத்தில்
                   வண்ணப் பழச்சாற்றை வார்த்துக் கொடுப்பதுபோல்
                   காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ்நடையில்
                   ஓதப் படைத்திடுவோம் ஓங்கும் நெறிக்கருத்தை!”

‘காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ் நடையில்’ எழுதுவது எல்லாராலும் சாலுமோ?  அறிவுப் பெருக்கமும் சிந்தனைச் சீர்மையும் உள்ளவர்களால்தான் இயலும்.  அத்தகைய முன்னேற்றத்தைத்தான் அறிஞர்களிடம் எதிர்பார்க்கின்றார் ‘இறையருட்கவிமணி’.

வையகத்தைக் கவிஞன் நோக்குவதற்கும் பிறர் நோக்குவதற்கும் பெருத்த வேறுபாடுண்டு.  நிறைகளைப் போற்றும் அதே வேளை, குறைகளைச் சாடும் உணர்ச்சி மிக்க மனப்பாங்கு கவிஞர்களிடம் காணப்படும் ஒன்றாகும்.

                             “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
                                 பாலித் திடவேணும்” என்று பாரதி பாடினான் அல்லவா?

இதுதான் கவிஞன் காணும் வையகப் பரிவு.  அதே பாரதி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்!” என்றும் சீற்றம் கொண்டு சீறிப் பாய்ந்தான்.  சமூகத்தில் குற்றம் காணின், கொதித்தெழுவான் கவிஞன்.  இது போன்று கொதித்தெழுகின்றார் நம் கவிஞர்:

                   “அறந்தேயும் தீச்செயலும் அடுத்தாரைக் கெடுப்பதுவும்
                   புறம்பேசும் தீக்குணமும் பொய்புரட்டும் வஞ்சனையும்
                   குணமொன்றும் நாடாமல் குழிபறிக்கும் குறுமனமும்
                   பணமொன்றே குறியாகும் பண்பில்லா உளப்பாங்கும்
                   உள்ளத்தில் பிறக்காமல் உதட்டளவில் உறைகின்ற
                   கள்ளத்தின் பொய்நகையும் கழுத்தறுக்கும் கொடுமைகளும்
                   மெய்யோட்டும் பையூட்டும் மேதினியைப் பாழாக்கும்
                   கையூட்டும் களியாட்டும் கள்ளூட்டும் பேயாட்டும் .....”

என்றெல்லாம் பாடிச் சாடிவிட்டு,

                   “மனிதகுல வரலாற்றின் மாண்பனைத்தும் போக்கிவிடும்
                   புனிதநபி நெறியினிலே புழுதியினைச் சேர்த்துவிடும்”

என்று பாடி எச்சரிக்கை செய்கின்றார்.   நேர்வழிக்கு ஒரே வழி,

                   “உளம்வாழும் நிலைகாண உயர்மறையின் நெறிசெல்வோம்!”

என்று முடிவுரை பாடுகின்றார் நம் முதுபெரும் கவிஞர். 

கல்வி கற்றல் என்ற பெயரில், மேலை நாட்டு மேதைகள், கீழை நாட்டுக் கெழுதகையோர் பற்றியெல்லாம் படிக்கின்றோம்.  ஆனால், எவருடைய வாழ்க்கை நமது முன்மாதிரியாக இருக்கவேண்டுமோ, அந்த அருள் தூதரின் வாழ்க்கையினைப் படிப்பதில்லை என்று இடித்துரைக்கும் முகமாக,

                   “அறிவுலகப் பேரொளியை அனைத்துலகப் பெருமகரை
                   முறையுடனே நாமறியோம்; முகவரியும் நாமறியோம்.
                   ஆப்பிள் திராட்சையுடன் ஆரஞ்சுப் பழமிருக்கத்
                   தோப்பில் மாங்காயைத் துழாவிக் கடிப்பதுபோல்,
                   குற்றாலத் தருவியிலே குளிக்காமல் பக்கத்துக்
                   கற்றாழைக் குட்டையினைக் கலக்கிப் புரளுதல்போல்
                   விண்கவரும் விரிநூல்கள் வீட்டின் அகத்திருக்கக்
                   கண்கவரும் நூல்படித்துக் கால்வழுக்கிக் கிடக்கின்றோம்!”

அருமை!  எத்துணை அழகிய உவமையுடன் கூடிய உணர்வூட்டல்?!

                   “வணக்கமிலாப் பள்ளிகளும் வாஞ்சையிலா மன்றுகளும்
                   இணக்கமிலா இல்லறமும் இறக்கமிலா நெஞ்சுகளும்
                   உறுதியிலா அறிஞர்களும் ஒழுக்கமிலா இளைஞர்களும்
                   நாணமிலா அரிவையரும் நலன்காணாத் தலைவர்களும்
                   நம்மிடையே பெருகிவிட்டார்; நாடகமே ஆடுகின்றார்!”

குற்றம் களையும் பணியில் கூடி நிற்குமாறு தம்மைப் போன்ற தரமான கவிஞர்களை அறைகூவல் விடுத்து அழைக்கின்றார் அருட்கவிஞர்:

                   “வணிகத்தில் கலப்படமும் வாழ்க்கையிலே பெறுகின்ற
                   அணிசிதைக்கும் சூதுமது ஆகாத கொலைகளவும்
                   வஞ்சனைகள் பொய்புரட்டு வன்முறைகள் தீச்செயல்கள்
                   மிஞ்சிவரும் உலகுக்கு மெய்விளக்காம் கவிதேவை.
                   பணமென்றால் வாய்பிளக்கும் பிணமாக மாறாதீர்!
                   செல்வர்க்கே அடிவருடும் சிறுமையிலே சிக்காதீர்!
                   அனல்கக்கும் கவிதைகளால் அநீதியினைச் சுட்டெரிப்பீர்!
                   புனல்வார்க்கும் கவிதைகளால் புனிதத்தை வளர்த்திடுவீர்!
                   அறவாழ்வு தழைப்பதற்காம் அரும்பணிகள் புரிந்திடுவீர்!”

இவ்வாறு, சீர்திருத்தக்காரர்களாகக் கவிஞர்கள் ஆகும்போது எவர்தான் கவிதைகளை வெறுப்பார்?

                   “கலைகளுக்கே அரசியெனக் கவினடையும் கவிதைகளில்
                   பலவகைகள் பகர்ந்திடுவார் பாருலகின் ஆய்வாளர்
                   உள்ளத்தில் கருவெடுத்தும் உணர்ச்சியிலே ஊற்றெடுத்தும்
                   தெள்ளமுதச் சொற்களிலே தெவிட்டாத உருவெடுத்தும்
                   பள்ளத்துள் பாய்கின்ற வெள்ளமென வெளியாகிக்
                   கள்ளமிலாக் காதுகளைக் கவ்விப் பிடித்திழுத்து
                   நெஞ்சத்தில் விளையாடி நாளெல்லாம் நம்முடனே
                   கொஞ்சுகின்ற குழவிகளே குடியுயர்த்தும் கவிதைகளாம்.

மாசற்ற மனித வாழ்க்கைக்காகக் கவிதைகளின் தேவையை – இஸ்லாம் வகுத்த இனிய நெறியில் இயங்கவேண்டிய கவிதைகளின் தேவையை – மேற்காணும் இறையருள் கவி மணிகளால் நாம் உணரலாம்.

كلام فحسنه حسن وقبيحه قبيح

(நற்கருத்துள்ளவை நல்ல கவிதைகளாகும்;  மோசமான கருத்துள்ளவை மோசமான கவிதைகளாகும்.)

என்று இஸ்லாம் கூறும் இலக்கணத்தில் இணைவோம்!  நம் மறுமை இலக்கினை அடைவோம்!.


(சான்றுகள் கணக்கின்றி உள.  விரிவஞ்சி, இத்துடன் நிறைவாக்குகின்றேன்.) 




முடிவுரை

இக்கவிதை இலக்கிய மரபு மேலும் தொடரவேண்டும்.  இந்த ஆய்வுத் தொடரில் நான் குறிப்பிட்டதற்கொப்ப, கவிதை என்பது மானிட இயல்புத் தன்மையுடன் பின்னிப் பிணைந்ததாகும்.  மனிதனை மனிதனாக வாழ வழி வகுப்பது;  வாழ்வின் உண்மை நிலைகளை உணர்த்துவது;  காலத்தால் கறை படாத கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது;  கற்பனை அழகை விரும்பும் மனித இயல்புக்குக் கருத்துணர்வைத் தர வல்லது;  உண்மையும் அழகுணர்ச்சியும் நிறைந்த சொல் வளத்தால் வாழ்வைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்ட வல்லது;  மனித வாழ்வின் ஆன்மிக இயல்பை உணர்த்த வல்லது;  அதனை ஆர்வத்துடன் படிக்கும் / பாடும் மனிதனுக்குப் புதிய வாழ்வையும் புத்துணர்வையும் கொடுப்பது.

இந்த ஆய்வின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டிய இறைமறை குர்ஆன் வசனத்தில், இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ய ‘ஹிக்மத்’ (நுண்ணறிவு) எனும் சொல் இடம்பெற்றிருப்பதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவிதையைப் புகழ்ந்துரைத்தபோது ‘ஹிக்மத்’ எனும் அதே சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாலும், “கவிதை என்பது பொய்யால் நிறைந்தது; கவிஞன் பொய்யுரைப்பவன்” என்றெல்லாம் கருத்துக் கொள்ளாமல், கவிதைகள் மூலமும் உண்மைகளை உணர்த்தலாம்;  மனித நேயத்தை மலரச் செய்யலாம்;  மார்க்கத்தை எடுத்துரைக்கலாம் என்றே நம்பவேண்டும்.

இஸ்லாம் என்பது குர்ஆனும் நபிவழியும், அப்பழுக்கில்லாமல் இவ்விரண்டின் அடியொட்டி வாழ்ந்த முன்னோரின் வாழ்க்கை முன்மாதிரிகளும் மட்டுமே.  இந்த அளவுகோள் (yardstick) கொண்டுதான் எதையும் – அது இலக்கியமாகட்டும், இசையாகட்டும், எதுவுமாகட்டும் – வரையறை செய்யவேண்டும்.  இந்த இலக்கணத்தில் அனைத்தும் அடங்கிவிட்டன.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு என்பதுவே எமது அழைப்பியல் நெறியின் துவக்கமும் முடிவுமாகும்!

இத்தனை நாட்கள் என்னுடன் பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.
     
அதிரை அஹமது
adiraiahmed@gmail.com

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 24 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2012 | , ,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா?!’ 

இந்த வினாவும் வியப்பும் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்.  குறிப்பாக, நம் சமகாலக் கவிஞர்கள் இதில் தம் கண்களையும் கருத்தையும் பதித்து, இதற்கான விடையை எதிர்பார்த்துக் காத்திருப்பதை அறிய முடிகின்றது.

மனிதர்கள் எவரிடத்தும் மண்டியிட்டுப் பாடம் படிக்காத மாமனிதரும் மனிதப் புனிதரும் ஆவார்கள் நபியவர்கள்.  இவ்வுண்மையை,

الذين يتبعو ن الرسول النبي الامي

(அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகின்றார்கள்.)

எனும் (7:157) இறைவசனத்தால் வல்ல இறைவன் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான்.  எழுதப் படிக்கத் தெரியாத நபியால் இத்துணைப் பெரிய சமூக மாற்றத்தையும் விழிப்புணர்வையும் எவ்வாறு ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அன்றைய மற்றும் இன்றைய அறிவு ஜீவிகளால் வியந்து பாராட்ட வைத்த பண்பாகும்.

இலக்கிய விற்பன்னர்களும் கவிஞர்களும் சொற்போர் வீரர்களும் நிறைந்திருந்த அன்றைய அரபுச் சூழலில், அறிவார்ந்த சொற்களால் மறுப்புரை செய்து மாற்றத்தை ஏற்படுத்த இந்த இறை இறுதித் தூதரால் முடிந்தது என்றால், அது இறைவன் அவர்களுக்கு அளித்த சிறப்புத் தகுதியே அன்றி வேறில்லை. 

ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்;  முடியவில்லை!  கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்;  தோல்வியைத் தழுவினார்கள்!  இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை!  அவர்களுள் இருந்த கவிஞர்கள் தம் திறமை முழுவதையும் கொண்டு கவிதை பாடினார்கள்; இறைப் பேரொளியைத் தம் நாவுகளால் ஊதி அணைக்கப் பார்த்தார்கள்!  அப்போது,

والشعرآء يتبعهم الغاون،  الم تر انهم في كل واد يهيمون، وانهم يقولون ما لا يفعلون

(இன்னும் கவிஞர்கள் எத்தகையோரென்றால், அவர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகின்றார்கள்.  திண்ணமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை (நபியே) நீர் பார்க்கவில்லையா?  இன்னும் திண்ணமாகத் தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்கின்றார்கள்.)

எனும் (26:2 இறை வசனங்களைக் கொண்டு நபியவர்களை ஆற்றுப் படுத்தினான்; தேற்றினான் அல்லாஹ்.  ஆனாலும், அத்தகைய கவிஞர்களுக்கும் வாயாப்புக் கொடுக்கும் வாய்ப்பினை, நபியவர்களின் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்தலுக்குப் பின்னால் அமைத்துக் கொடுக்கின்றான்.    இதற்கான பல சான்றுகளை இத்தொடரின் இடையிடையே கண்டுவந்துள்ளோம்.

புலம் பெயர்ந்த நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவில் தம் வாழ்க்கையைத் தொடங்கிய காலகட்டத்தில் முதலாவதாகச் செய்த பணிகளுள் ஒன்று, தொழுகைப் பள்ளி கட்டியதாகும்.  தோழர்களுக்குத் தோள் கொடுக்கும் விதமாக, நபியவர்களும் கற்களைச் சுமந்துவந்து இறைவணக்கத்திற்கான இல்லம் கட்டும் பணியில் உதவினார்கள்.  அந்த ஆர்வம் மிக்க நேரத்தில் இறைத் தூதரின் இதயத்திலிருந்து கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:

هذا الحمال لا حمال خيبر ، هذا ابر ربنا و اطهر
اللهم إن الأجرأجرالآخرة ، فارحم الأنصار والمهاجرة

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                                   கற்கள் சுமக்கும் இச்சுமையோ
                                               கைபர்ச் சந்தைச் சுமையன்று
                                   பொற்புள தூய நன்மையினைப்  
                                                பொழியும் இறையின் சுமையாகும். 

                                    இறைவா!  எமது கூலியதோ 
                                                இறவா மறுமைக் கூலியதே 
                                    நிறைவாய் மக்கா மதீனாவின்
                                                நேசர்க் குதவி புரிந்திடுவாய்!
(சஹீஹுல் புகாரீ – 3906)
                  
அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச்  சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது கற்பாறையொன்றில் தடுக்கி விழப் போனார்கள்!  கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்;  முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது!  அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:

إصبع دميت هل أنت إلا 
و في سبيل الله ما لقيت

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                                      செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
                                                     செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
(சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் - 3675)
         
ஹிஜ்ரி ஐந்தாமாண்டில் நடைபெற்ற அகழ்ப் போரின் முன்னேற்பாடாக மதீனாவைச் சுற்றி அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருமைத் தோழர்களைக் கண்டு கவலையுற்றும், அவர்களுக்கு ஆர்வமூட்டியும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,

اللهم  لا عيش إلا عيش الآخرة
فاغفر للأنصار و المهاجرة     

என்ற ஈரடிக் கவிதையினைப் பாடினார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 2834,4099)

அக்கவியடிகளின் தமிழ்க் கவியாக்கம் இதோ:

                                      இறைவா!  உண்மை வாழ்வதுவோ 
                                                    என்றும் நிலைத்த மறுமையதே
                                       நிறைவாய் மதினா மக்காவின் 
                                                     நேசர் களைநீ மன்னிப்பாய்!   

கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை.  அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை;  அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்;  பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.  
                                                                                                                     (போதுமா...?)
அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை - 22 14

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2012 | , ,

கல்வி கேள்விகளில் முஸ்லிம் ஈடுபட்டிருப்பது, அவனைத் தரத்தில் உயர்த்தும் ஒன்றாக்கி, இறைப் படைப்புகளை ஆழ்ந்து நுகர்ந்து, அவற்றின் அழகில் திளைக்க வைக்கிறது. கவிதை இந்நிலைக்கு மனிதனை முழுமையாக ஆளாக்கி வைக்கின்றது என்பது மிகைக் கூற்றாகாது.  கவிஞனின் சிந்தனையானது, அவனையும் அவன் கவிதையைப் படிப்போரையும், உயர்ந்த - நேரிய சிந்தனைக்குத் தூண்டுகோலாக மாற்றிவிடுகிறது. மனிதனைச் சிந்திக்கத் தூண்டும் இஸ்லாம், மனித வாழ்க்கையையே கவிதையாக மாற்றிவிடுகின்றது. இஸ்லாத்தின் இறுதித் தூதர் (ஸல்) அவர்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.

நபியவர்களே கவிதையால் காட்டுண்டார்கள் – துன்பத்திலும் இன்பத்திலும்.  அவர்களைத் தொடக்க காலம் முதல் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் கவிதையைக் கற்று, மக்கத்துக் காபிர்களுக்குக் கவிதையிலேயே வாயாப்புக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்பட்டது. இருளிலும் இறைமறுப்பிலும் இருந்த மக்கத்துக் குறைஷியரைக் கவிதைகளைக் கொண்டும் மடக்கினார்கள் அந்த நபித்தோழர்கள்.

மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த பின்னும் குறைஷியரின் கொடுமைகள் தொடர்ந்தபோதுதான்,

يا حسان اهجهم وروح القدس يؤيدك

(ஹஸ்ஸான்! இந்த இணைவைப்பாளர்களை எதிர்த்துப் பாடுவீராக!  ‘ரூஹுல் குத்ஸ்’ எனும் ஜிப்ரீல் உமக்குத் துணை புரிவார்.) என்று தம் அருமைத் தோழரும் கவிஞருமான ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்களை ஆர்வமூட்டினார்கள். (சஹீஹுல் புகாரீ)

இஸ்லாத்தின் மீள் எழுச்சியின் தொடக்க கால முஸ்லிம்களுள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) எனும் நபித்தோழரும் ஒருவர். இவர் இயல்பாகவே கவி பாடும் திறமை பெற்றவர் என்பதை முந்தையப் பதிவுகளில் பார்த்துள்ளோம்.  இவரின் இந்தத் திறமை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வியக்க வைத்தது.  அந்த வியப்பினூடே ஒரு நாள், “ரவாஹாவின் மைந்தரே!  நீர் எப்படிக் கவிதை பாடுகின்றீர்?” எனக் கேட்டார்கள்.

அதற்கு, “செய்திகளை நான் செவி மடுத்து, உள்ளத்தில் பதிய வைத்துப் பின்னர் கவிதையாக மொழிகின்றேன்; அவ்வளவுதான்” என்று அமைதியாகக் கூறினார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி).  “அவ்வாறாயின், மக்கத்துக் குறைஷியருக்கு எதிராகப் பாடலொன்றைப் பாடும்” என்று அண்ணலவர்கள் ஆணையிட்டபோது, கவிமழை பொழிந்ததங்கே:

يا هاشم الخير إن الله فضلكم،  على البرية فضلا ماله غير     
إِنِّي تَفَرَّسْتُ فِيكَ الخَيْــــرَ أَعْرِفُـــهُ،  فراسة خالفتهم في الذي نصر
ولو سالت أو إستنصرت بعضهم،  في جل أمرك ما آوو ولا نصر 
 فَثَّبَتَ اللهُ مَا آتَـــاكَ مـِنْ حـُسْـــنٍ،  تَثَبِيتَ مَــــوسَى وَنَصْرًا كَالذي نَصَروا
وَاللهُ يَعْرِفُ أنْ ما خَانَنِي الخَبَــــــرُ،  أَنْتَ النبي وَمَنْ يُحْــرَمْ شَفَاعَتُـــــهُ
يَوْمَ الحِسَابِ لَقَدْ أَزْرَى بِـهِ القَــــدَرُ

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                ஹாஷிம்குலச் செல்வர்களே உம்மை அல்லாஹ் 
                         அரிதாகப் பதவியினை உயர்த்தி வைத்தான் 
                காசினியில் அதற்குநிகர் இல்லை என்பேன் 
                          காண்கின்றேன் உங்களிடம் நற்பண் பெல்லாம்

ஆசுடைய இறைமறுப்போர் உங்க ளுக்கோ
அணுவளவும் உதவமாட்டார்; புறக்க ணிப்பார் 
பேசிவந்த தன்தூதர் மூஸா வைத்தான்
பேரருளால் காத்ததுபோல் காப்பான் உம்மை.

என்பார்வை எனக்குமாறு செய்ய வில்லை 
இறைத்தூதர் உமையன்றி யாரு மில்லை.
தன்பாவம் போக்கிடவே பரித வித்துத்
தாங்கொண்ணா வேட்கையுடன் பரிந்து ரைக்கு 
                முன்போகும் பேரருளை இழந்தோ ருக்கு  
முடிவில்லா வேதனையே; ‘சோத னைக்குள் 
என்பார்வை இல்லை’யென விதியும் போகும் 
எதிர்வினையைக் கண்டுகொள்வார் கதியற் றோரே!

அருட்கவிஞர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் தம் கவிதயடிகளுள், 

فَثَّبَتَ اللهُ مَا آتَـــاكَ مـِنْ حـُسْـــنٍ،  تثبيت موسى ونصرا كالذي نصروا 

எனும் அடியைப் பாடியவுடன், நபியவர்கள், 

وأنت فثبتك الله يا ابن رواحه

“ரவாஹாவின் மைந்தரே! அல்லாஹ் உங்களையும் உறுதிப் படுத்தி வைப்பானாக!” என்று வாழ்த்தினார்கள்.

மற்றவர்களின் சில கவிதையடிகளை நபியவர்கள் மனப்பாடமும் செய்துள்ளார்கள். ஒரு முறை அவர்களும் அருமைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களும் வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.  யாரோ ஒருவர் கவிஞன் ஒருவனின் கவியடியை இவ்வாறு பாடிக்கொண்டு சென்றார்:

ياأيها الرجل المحول رحله ** هلا نزلت بآل عبد الدار 

இதனைச் செவியுற்ற நபியவர்கள், “அது இப்படியல்லவே.  இப்படித்தான்:

ياأيها الرجل المحول رحله ** هلا نزلت بآل عبد مناف 

என்று கூறி, அபூபக்ரைப் பார்த்தார்கள். அன்னாரும் நபியின் நினைவாற்றலை எண்ணி மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்கள். (சான்று: ‘சீரத்துன் நபி’ – இப்னு ஹிஷாம்)

இவ்வாறு, நபியவர்கள் கவி பாட ஆர்வமூட்டினார்கள்; கவி பாடக் கேட்டு மகிழ்ந்தார்கள்;  கவிதையடிகளை மனப்பாடம் செய்தும் இருந்தார்கள்!

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 21 36

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2012 | , ,

கவிஞன் சிந்தனையாளன்;  நேர்மையின் பக்கம் நிலைத்திருப்பவன்; நேர்மைக்காகக் குரல் கொடுப்பவன்; ஒரு வேளை, சூழல் அவனுக்குச் சரியான தகவலைத் தந்திராததால் தவற்றைச் செய்தாலும், எது உண்மை எனத் தெரியவரும்போது, மனமிரங்கித் தன்னைத் திருத்திக்கொள்ளும் தன்மையுடையவன்.  இது ஏன் என்று சிந்திக்கும்போது நமக்குத் தெரியவரும் உண்மை இதுதான்:  கவிஞனின் கவிதை, கட்டுக்குள் அடங்கும் சிந்தனையின் சீரிய வடிவம்.  கதை, கட்டுரைகளைப் போன்று விரிந்த பொருளை விரைந்து கூறுவதன்று.  கவிதையினைப் படிக்க, புரியப் பொறுமையும் நிதானமும் வேண்டும்.  இங்குதான், கவிஞன் மற்றவர்களை விட்டு வேறுபடுகின்றான்.  கவிதையைப் புரிவதற்கு முன் கவிஞனைப் புரியவேண்டும்.

இவ்வாறு கூறும்போது, ‘கவிஞர்கள்’ என்று தம்மை விளம்பரப்படுத்தும் அனைவரையும் – அவர்களின் ‘எண்ணக் குவியல்கள்’ அனைத்தையும் தூக்கிப் பிடிப்பதாக வாசகர்கள் கருதக் கூடாது.  அப்படியாயின், நல்ல கவிஞர்களை அடையாளப் படுத்துவது எங்ஙனம்?  இதற்குத்தான், முதலில் தீய கவிஞர்களை அறிமுகப் படுத்திவிட்டு, நல்ல கவிஞர்களை அடையாளப் படுத்துகின்றது அல்குர்ஆன் இப்படி: 

إلا الذين امنوا و عمل الصالحات و ذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا و سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون

“(ஆயினும்) அவர்களுள் எவர்  நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை மிகைப்பட நினைவுகூர்ந்து, (பிறர் நிந்தனையால்) அநீதிக்கு உள்ளானதன் பின்னர் பழி வாங்கினாரோ, அவரைத் தவிர (மற்றவர்கள் குற்ற வாளிகள்தாம்.  பிறரை நிந்தனை செய்து துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாம் எங்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்பதை மிக விரைவில் அறிந்துகொள்வர்.”         (26:227)

கவிஞர் லபீத் பின் ரபீஆவைப் பற்றி முன் சில பதிவுகளில் நாம் பார்த்துள்ளோம்.  இவர் நூற்று நாற்பத்தைந்து வயதுவரை (இன்னோர் அறிவிப்பின்படி, நூற்று ஐம்பத்தேழு வயதுவரை) வாழ்ந்தவர்.  அவர் தொண்ணூறு வயதை எட்டிய பின்னர்தான் இஸ்லாத்தை ஏற்றார்!  அதுவரை, கவிதையே அவருடைய வாழ்க்கையாக இருந்தது.  அவர் இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும்கூட, அழகிய கருத்துகள் பொதிந்த கவிதைகளையே யாத்துவந்தார்.  அதனால்தான் அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் லபீதின் கவிதைகளைப் பிறர் பாடக் கேட்டு மகிழ்ந்துள்ளார்கள்!

‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்திலும், இஸ்லாம் அறிமுகப் படுத்தப்பட்ட கால கட்டத்திலும், இவருடைய கவிதைகள் உண்மை பொதிந்தவையாக, சிறந்த கற்பனை வளம் நிறைந்தவையாக இருந்தன.   அவற்றுள் ஒன்றுதான்,

الا كل شيء ما خلا الله باطل

அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே பொய்யானவை (அழியக்கூடியவை)

எனும் கவியடியாகும்.  இதனைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் விதந்து கூறினார்கள்.  அந்த நேரத்தில் லபீத் இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை.  ஹிஜ்ரி ஒன்பதில்தான் – அதாவது, மக்கா வெற்றிக்குப் பின்னர் – பெருமானார் முன்னிலையில் முஸ்லிம் ஆனார்.

பெருமானாரின் இறப்பிற்குப் பின்னர் லபீத் ‘ஷாம்’ நாட்டிற்குப் போய்த் தங்கிவிட்டார்.  அப்போது ஷாம் நாடு வளம் கொழித்த நாடாக இருந்தது.  அதனால், அங்குப் போய்த் தங்கிவிட்ட நபித் தோழர்களுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்ற ஆணையை  கலீஃபாவான அபூபக்ர் (ரலி) அவர்கள் பிறப்பித்திருந்தார்கள்.  இந்த வகையில், கவிஞர் லபீதுக்கும் ஐநூறு திர்ஹம் கிடைத்துவந்தது.  இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றார்கள்.  தமது பிந்திய வாழ்நாளில் கவிதைகளையும் கவிஞர்களையும் ஆதரித்துவந்த உமரவர்கள், லபீதுக்குக் கொடுக்கப்பட்டுவந்த ஐநூறு திர்ஹத்தை இரண்டாயிரமாக உயர்த்தி வழங்குமாறு, கூஃபாவின் ஆளுநருக்கு ஆணை பிறப்பித்தார்கள்.

கூஃபாவின் ஆளுநர் கவிஞர் லபீதை வரவழைத்து, அவரின் கவிதைகளைத் தமக்குப் படித்துக் காட்டுமாறு கேட்டார்.  ஆனால் கவிஞர் லபீதோ, அருள்மறை குர்ஆனின் நீண்ட அத்தியாயமான ‘சூரத்துல் பகரா’வை ஓதினார்.  இறைமறையின் இலக்கியத் தரத்தின் முன் தமது கவிதை எம்மாத்திரம் என்பதை அறிந்தவராக, “இந்த வேதத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவிய பின்னர், கவி பாடுவதை விட்டு அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான்” என்று மறுமொழி பகர்ந்தார்.

பிற்காலத்தில் அபூசுஃப்யான் கலீஃபாப் பொறுப்பை ஏற்றபோது, லபீதுக்கான உதவித் தொகையைக் குறைக்குமாறு கூஃபாவின் ஆளுநருக்குக் கட்டளையிட்டார்.  இதையறிந்த கவிஞர் லபீத், “நான் இன்னும் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை.  அதனால், உதவிப் பணத்தைக் குறைப்பதால் பயன் ஒன்றுமில்லை” என்றார்.  அடுத்த சில மாதங்களில் அவர் இறந்தும் போனார்! 

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 20 21

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2012 | , ,

‘தீவான்’ (ديوان) என்ற சொல் அரபியில் தற்காலத்தில் அலுவலகம், பணியிடம், அரசாணை போன்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டாலும், அரபி இலக்கியத்தில் பொதுவாகத் ‘தொகுப்பு’ என்ற பொருளில் ஆகி, கவிதைகளின் தொகுப்புக்கே குறிப்பாக்கப் பெற்று விளங்குகின்றது.  இவ்வடிப்படையில், ‘தீவான்’ எனும் கவிதைத் தொகுப்புகள் அரபி இலக்கியத்தில் பலவற்றைக் காண்கின்றோம்.

‘தீவான் அலி’, ‘தீவான் ஹஸ்ஸான்’, தீவான் இப்னுல் முபாரக்’, தீவான் அஷ்ஷாஃபிஈ’ முதலான தீவான்கள் அவற்றுள் குறிப்பிடத் தக்கவை. அவற்றில் பொதிந்துள்ள சிந்தனைக் கருவூலங்கள், அவற்றை ஆழ்ந்து படிப்போரை அறிவுச் செல்வர்களாக ஆக்குபவை என்பது மிகைக் கூற்றன்று.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும், அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் அன்புக் கணவருமான அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் நபிவரலாற்றில் எத்தகைய உயர்விடத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதற்கான ஏராளமான சான்றுகள் நம்பத் தக்க நபிமொழிகள் மூலம் உண்மைப் படுத்தப்பட்டுள்ளன.



இளமையில் இஸ்லாத்தை ஏற்று, வாலிபப் பருவத்தில் போர்க்களங்களில் தம் வீரத்தை உண்மைப்படுத்தி, ‘நுபுவ்வத்’ எனும் நபித்துவக் கல்வியை நபியவர்களின் அண்மையில் இருந்து கற்று, அறிவுச் செல்வராகப் புகழ் பெற்றுத் திகழ்ந்த அலீ (ரலி) அவர்களைப் பார்த்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
أنت مني وانا منك
(நீர் என்னைச் சேர்ந்தவராவீர்; நான் உம்மைச் சேர்ந்தவனாவேன்)
(சான்று: சஹீஹுல் புகாரீ – 3700)

அலீ என்னும் அறிவுச் செல்வரிடமிருந்து, அவரின் அறிவுப் பெட்டகத்திலிருந்து கவிதைகள் ஊற்றெடுத்து வரவர, அவரின் தோழர்கள் அவற்றைப் பதிவு செய்தனர். அவற்றின் தொகுப்புதான் ‘தீவான் அலீ’ எனும் கவிக்கோவையாகும். அந்தப் பெருங்கடலில் மூழ்கி எடுத்த முத்துப் பரல் ஒன்று வாசகர்களின் பார்வைக்கு:

النَفسُ تَبكي عَلى الدُنيا وَقَد عَلِمَت ،  إِنَّ السَلامَةَ فيها تَركُ ما فيها
 إلاالَّتي كانَ قَبلَ المَوتِ بانيها لا دارَ لِلمَرءِ بَعدَ المَوتِ يَسكُنُها،
وَإِن بَناها بَشَرٍّ خابَ بانيها فَإِن بَناها بِخَيرٍ طابَ مَسكَنُها،
 حَتّى سَقاها بِكَأسِ المَوتِ ساقيها أَينَ المُلوكُ الَّتي كانَت مُسَلطَنَةً،
وَدورُنا لِخرابِ الدَهرِ نَبنيها أَموالُنا لِذَوي الميراثِ نَجمَعُها،
أًمسَت خَراباً وَدانَ المَوتُ دانيها كَم مِن مَدائِنَ في الآفاقِ قَد بُنِيَت،
مِنَ المَنيَّةِ آمالٌ تُقَوّيها لِكُلِّ نَفسٍ وَإِن كانَت عَلى وَجَلٍ،
 وَالنَفسُ تَنشُرُها وَالمَوتُ يَطويها فَالمَرءُ يَبسُطُها وَالدَهرُ يَقبُضُها،

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                             இலையே எனக்கோர் உறைவிட மென்றே
                                      ஏங்கித் தவிக்கும் ஆன்மாவே!
                             உலகை விட்டுப் போகும் போதோ
                                      உடைமை எல்லாம் போய்விடுமே
                             பலநாள் சேர்த்த செல்வம் உனக்குப்
                                      பயனில் லாது போய்விடுமே
                             நிலையா யிருக்கும் மறுமை வீட்டை
                                      நினைவில் கொண்டு சீர்படுவாய்!

                             நன்மை களினால் கட்டும் வீடு
                                      நாளை மறுமைக் கருவூலம்
                             புன்மைச் செயலால் நிறைந்த வாழ்வோ
                                      புகுத்தும் நரகப் படுகுழியில்
                             என்னா னார்கள் உலகை ஆண்டோர்
எங்கே போனார் அறிவாயோ?
                             இன்மைக் குவளை வெந்நீர் மாந்தி
                                      இறப்பை அடைந்து போய்விட்டார்!

நமது செல்வம் நம்மோ டிணைந்து
          நம்மைத் தொடர்ந்து வாராமல்
தமதாய்க் கொள்ளக் காத்தே நிற்கும்
          தகுதி பெற்ற உறவோர்க்கே!
மமதை கொண்டு விண்ணை முட்டும்
          மாளிகைப் பேரூர் அமைத்தோர்கள்
திமிரு மடங்கி இறப்பை அணைத்துத்
          தேடிப் போனார் நரகத்தை.

ஆன்மா வெல்லாம் உலகிலி ருந்தே
          அழிந்து போகும் உண்மையினால் 
வான்மழை போன்று மரணம் இறங்கி
          வருமென நம்புக மனிதர்களே!
கான்போல் வளரும் மனித இனத்தைக்
          கட்டிப் பிடிக்கும் இறப்பாலே
ஆன்மா மீண்டும் மறுமை வாழ்வில்
          அளவைப் பெறவே  சென்றுவிடும்.

‘யாக்கையின் நிலையாமை’ பற்றியும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பது பற்றியும், ‘தன்வினை தன்னைச் சுற்றும்’ என்பது பற்றியும் அழகுற விளக்கும் அலியாரின் கவிதையும்  நமது சிந்தனைக்கும், அதனைப் பின்தொடரும் நற்செயலுக்கும் உரமூட்டுவதாகும்.

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு