Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label புதுசுரபி. Show all posts
Showing posts with label புதுசுரபி. Show all posts

போரடிக்குது.... ! 8

அதிரைநிருபர் | February 16, 2016 | , , ,


அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இடையிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள்.

ஒருவேளையில், "ஒருநிமிஷம்", என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று வந்தார்.

"ஒண்ணுமில்லே, ரொம்ப 'போர்' அடிக்குதாம், அதான் வீடியோகேம் விளையாட வேண்டுமென்று கேட்டாள்" என்று சொன்னார்.

"நாம ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போகும்வரை பிள்ளைக்கு 'போர்' அடிக்கும்ல்ல, அவளுக்கு  பொழுதுபோகனும்ல்ல" என்று தனது ஐந்து வயது மகளுக்கென ஒரு பத்து இருபது கார்டூன் சி.டிக்கள், வீடியோகேம், பொம்மைகள் என்று வாங்கி குவித்திருப்பதாகவும் தகவல் தந்தார்.

அவர்மட்டுமல்ல, இன்று நம்மில் பெரும்பாலோனரும் இதைத்தான் செய்கிறோம். இன்றைக்கு, ஆண்பிள்ளையோ அல்லது பெண்பிள்ளையோ வித்தியாசம் இல்லாமல் சொல்லும் ஒருவார்த்தை- 'ஒரே போரடிக்குது'

அநேக குழந்தைகள் 'போர்'அடிப்பதை போக்குவதற்கு அமர்வது அல்லது அமர்த்தப்படுவது தொலைக்காட்சியின் முன்பாகவோ அல்லது கணினியின் முன்பாகவோதான் என்பதை மறுப்பதிற்கில்லை.

ஆக மொத்தம் ஏதோ ஒரு திரை அவர்களின் வாழ்க்கைக்குத் திரைபோட துடிக்கிறது. ஆனால் 'போரடிக்கட்டும், அவர்களுக்கு எந்த திரையும் வேண்டாம் ' என்கிறார்கள் கல்வியியல் வல்லுநர்கள்.

"கனவு காணுங்கள்" என்று சொன்னாரே கலாம்; அந்த கனவுக்கு அதிகம் வழிவகுப்பது 'போரடிக்கும்' காலம்தானம்!

பொதுவாக, சலிப்படையும் (போரடிக்குது... இனி தமிழில்) தன்மைக்கும் தனிமைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தனிமையே சலிப்பினை தோற்றுவிக்கிறது. 

அதேவேளையில், சலிப்படைந்து இருக்கும்போது "என்னைக் கொஞ்சம் தனியா இருக்கவிடு" என்று தனிமையையும் தேடுகிறது வித்தியாசமாய் சிந்திப்பவர்களைப் பார்த்து 'ரூம் போட்டு யோசிப்பாய்களோ?' என்று கிண்டலாய் சொல்வதுண்டு. 

நாம் தனிமையில் விடப்படும்போதுதான்  நமக்குள் இயற்கையாகவே பொதிந்துள்ள படைப்பாக்கத்திறன்  வெளிவருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலேய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர்.போல்டன் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார். புகழ்பெற்று விளங்கும் பல நூலாசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் இறுதியில் ஆச்சரியமான அந்த உண்மையினை போல்டன் நிரூபித்துள்ளார்.

சலிப்படையும் காலத்தில் ஆக்கப்பூர்வமாய் சிந்தித்து சிகரம் தொட்டவர்களில், ஆய்வுக்காக டாக்டர். போல்டன் சந்தித்த அஷ்டாவதானி மீரா சியல் பற்றிபார்ப்போம்..

இவர், இங்கிலாந்தின் தலைசிறந்த நகைச்சுவைக் கலைஞர், சிறந்த நூலாசிரியர், நாடக ஆசிரியர், உள்ளங்கவரும் பாடகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், குணச்சித்திர நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். 

குக்கிராமத்தில் வளர்ந்தது இவரது இளம்பிராயம், சலிப்பூட்டும் காலங்களில் திரைகளுக்குமுன் செல்லாமல், சன்னலின் திரைகளை பின்னுக்குத் தள்ளி  இயற்கையை ரசித்திருக்கிறார், வயல்வெளியில் நடந்திருக்கிறார், தன்னை நெருங்கும் காலங்களை உணர்ந்திருக்கிறார். அந்த நினைவுகளை தன்னுடைய குறிப்பேட்டில் குறித்து வைக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்.

இளம்வயதில், சலிப்பூட்டும் காலங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுதான் தன்னை  பின்நாளில் ஒரு எழுத்தாளராக உருவாக்கியது என்று மனப்பூர்வமாய் நம்புகிறார். இதேபோல டாக்டர். போல்டன் சந்தித்த நபர்களில் இன்னொருவர் உலகின் தலைசிறந்த மூளைநரம்பியல் மற்றும் மூளையின் செயல்திறன் ஆராச்சியாளர் பேராசிரியர். சூஸன் க்ரீன்பீல்டு ஆவார்.

ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவருக்கு, பொம்மைகள் வாங்கி விளையாடும் அளவிற்கு கூட வசதியில்லையாம். தன்னுடைய 13 வயது வரையிலும் சகோதர சகோதரிகளின்றி (இயற்கையாகவே) தனிமையில் வளர்ந்திருக்கிறார்.

இவர் தன்னுடைய சலிப்பூட்டும் காலங்களில் கதைகேட்பது , கதைசொல்வது, தான் சொன்ன கதைகளுக்கேற்ப ஓவியங்கள் வரைவது மற்றும் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிப்பது என்று நேரத்தை செலவிட்டிருக்கிறார்.

தன்னுடைய கற்பனைத்திறன் அதனை வெளிப்படுத்தும் ஓவியத்திறன் ஆகிய இரண்டும்தான் மூளைத்திறன் பற்றி ஆராய்வதற்கான உள்ளீட்டினை தனக்கு தந்ததாக சொல்கிறார்.

"ஆழ்ந்த சிந்தனையினைத் தூண்டும் எந்தவொரு செயலும், நம் வாழ்க்கையினை நகர்த்துவதற்கு தேவையான உள்ளீடைத்தரும் உந்து சக்தியாய் அமையும்" என்பது இவரது நம்பிக்கை, 

"நம்மை படைத்த இறைவன் ஒருபோதும் நம்மை, சிந்திக்காத வெற்றுமதி கொண்டோராயிருக்க  அனுமதிக்க மாட்டான் என்றும், நமக்கு கிடைத்த உள்ளீடுகளை வைத்து நாமே நம்முடைய சிந்தனைக்கலனை நிரப்பிக்கொள்கிறோம்" என்பது இவரது நம்பிக்கை.

தவறான உள்ளீடுகளின் காரணத்தினாலேயேதான் சில இளைஞர்கள்,  பொதுச்சொத்துகளுக்கு குந்தகம் விளைவிப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்கள் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது இவரின் குற்றச்சாட்டு.

முன்பு ஒரு ஆய்வில், ஏதும் வேலையில்லாமல் இருக்கும் குழந்தை உடனடியாக நாடுவது தொலைக்காட்சி, வீடியோ, கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் போன்ற ஏதோ ஒரு திரையைத்தான் என்றும், நாளடைவில் இதில் செலவழிக்கும் நேரம் கணிசமாக உயர்ந்துவிடுகிறது என்றும் இதனால் குழந்தைகளின் எழுதக்கூடிய திறன் குறைந்துவிடுவதையும் கண்டறிந்தனர்.

இப்போது அவசரத்தேவை தேவை 

குழந்தைகளின் சலிப்பூட்டும் காலத்தினை ஆக்கப்பூர்வமாய் மாற்றுதல்.

எழுத்துக்கும் எழுதுவதற்கு உறுதுணையாய் இருக்கும் கற்பனைத் திறனை  வளர்த்தல்.

கற்பனைக்கு ஆணிவேராய் இருக்கும் தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாய் உட்கிரகிக்க சிந்திக்கச் செய்தல்.

கற்பனைத் தூண்டலுக்கு வேட்டு வைக்கும் உள்ளீடு தரும் தளங்களைத் தவிர்த்தல், 

போரடிக்குதா?????

புதுசுரபி ரஃபீக்

மீள் பதிவு

கன்னத்தில் முத்தமிட்டால்... ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2014 | , , ,

"வாப்பா....... வாப்பா............."

”என்னம்மா?”

”வாப்பா... சாயங்காலம் சீக்கிரம் வந்திருங்க, சரியா ஆறு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிச்சிருவாங்க, கலெக்டர் தான் சீப் கெஸ்ட். நான் பேச ஆரம்பிக்கையில் நீங்க இருக்கணும் சரியா....."  சொல்லிக்கொண்டே கல்லூரிப் பேருந்தைப் பிடிக்கப் பறந்தாள் ஆயிஷா.

"சரிம்மா, உம்மாவோடு வந்திடறேன் இன்ஷா அல்லாஹ்" சிரித்துக்கொண்டே பதிலுரைத்தார் வாப்பா.

"சிரிக்காதீங்க, என்ன தான் இருந்தாலும் நம்ம வூட்டு பொண்ணுவொ பேசிற தலைப்பையா தேர்ந்தெடுத்திருக்கிறாள்; முத்தமாம் முத்தம், எனக்கு வர இஷ்டமில்லை....." கோபத்துடன் சமையலறைக்குள் நுழைந்த உம்மா.

ஆயிஷா, மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி. கல்லூரியின் இலக்கியப் பேரவை சார்பில் நடத்தப்படும் விழாவுக்கு கலக்டர் அழைக்கப்பட்டிருக்கிறார். விழாவில் மாணவர்களின் பேச்சுப் போட்டியும், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆயிஷா தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு 'முத்தம்'. அதனால் தான் இத்தனை யுத்தம்.

"இதற்காகவா ரெண்டு நாளா குறிப்பெடுத்தீங்க வாப்பாவும் மகளும்..... சரியில்லைங்க....."  உம்மா மீண்டும் குமுறிக்கொண்டே சிற்றுண்டியை மேசையில் வைக்கும் போது.

"சரி விடு, நீ அவ கூடரெண்டு நாளா சண்டை போட்டே,  அதுதான் உனக்கு சஸ்பென்ஸ்ன்னு சொல்லியிருக்காள்...... , வந்து கேட்டுப்பாரு" 

"அஞ்சு மணிக்கு வர்றேன், ரெடியா இரு."  சிற்றுண்டி முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினார்.

கல்லூரியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 'ஆயிஷா என்ன பேசப்போகிறாள்?' 

எல்லோரும் கேட்டுக்கொண்ட கேள்வியும் இதுதான்.

மணி 6:15  ஆகிவிட்டது, வாப்பாவை காணவில்லையே என்ற வருத்ததோடு வாசலை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஆயிஷாவை பேச அழைத்தார் தொகுப்பாளர்.

கல்லூரி வாயிலைஅடையும் நேரம், ஆயிஷாவை தொகுப்பாளர் அழைக்கும் சப்தம் கேட்டு விரைவாக உள்ளே நுழைந்தனர் வாப்பாவும் உம்மாவும்.

மேடையில் உள்ளோரையும், வந்திருந்தவர்களையும் வரவேற்று பேசி முன்னுரையினை முடிக்கும் நேரம், பெற்றோரைப் பார்த்த சந்தோசத்தில் பேச்சைத் தொடரந்துகொண்டிருந்தாள் ஆயிஷா.

".......... முத்தத்தினால், தனக்கு கிடைக்க வேண்டிய கவர்னர் பதவியினை ஒருவர் இழந்து விட்டார்,  அப்படி பதவி மறுக்கப்பட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. நான் ஒன்றும் குற்றம் புரியவில்லையே, முத்தம் கொடுப்பதில்லை என்று தானே சொன்னேன், இதற்கும் என்னுடைய பதவிக்கும் என்ன தொடர்பு? அந்த மனிதருக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது. "

"அன்பர்களே, உங்களுக்கும் கூட இந்த ஐயம் எழலாம், இன்னும், இது எந்த மாநிலத்தில் நடந்தது? என்றும் கூட கேட்கத் தோன்றும். பதவி இழப்பு இன்று ஒருவேளை நடந்திருந்தால் முத்தம் கொடுத்ததற்காக வேண்டுமானால் நேர்ந்திருக்கும்."

அவையில் ஒரே சிரிப்பொலி; உம்மாவுக்கோ மகள் அரசியல் பேசுகிறாளே என்ற வியப்பு!

நண்பர்களே! விஷயத்திற்கு வருகிறேன்,  நான் சொன்ன அந்த நிகழ்ச்சி ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. உமர் பின் கத்தாப் (ரழி) என்ற நபித் தோழர் 'கலீபா'வாக ஆட்சி புரிந்த நேரம், அந்த மனிதர் ஆளுனராக பதவியமர்த்த அழைக்கப்பட்டிருந்தார். அந்த நேரம் கலீபாவுக்கும் ஆளுநராக பதவியேற்க வந்திருந்தவருக்கும் நடந்த உரையாடலின் இடையே, "......நானெல்லாம் என் குழந்தைகளை கொஞ்சுவதா? முத்தமிடுவதா?? அப்படி எதுவுமே செய்தது கிடையாது" என்று அது ஏதோ குற்றமான செயல் போல சொன்ன மாத்திரத்திலேயே, கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், அந்த நபருக்கு தரவிருந்த பதவியினை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். 

குழம்பிப்போய் இருந்த அந்த நபரிடம் சொன்னார்கள், "உனது மனம் உன் குழந்தைகளிடமே இரக்கம் காட்டவில்லை கருணை காட்டவில்லையெனில், பிறகு நீர் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்துகொள்வீர்? இறைவன் மீது ஆணையாக உம்மை ஒருபோதும் ஆளுனர் ஆக்கமாட்டேன்" என்று கூறி திருப்பி அனுப்பினார்கள். 

அவை மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது, ஆயிஷா அடுத்ததாக தொடர்ந்தாள்.

முத்தத்திற்கும் கருணைக்கும் தொடர்பா?  ஆம் நண்பர்களே, அண்மையில் ஒரு அறிவியல் செய்தியினைப் படிக்க நேர்ந்தது. நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சி அரவணைத்து முத்தமிட்டு மகிழ்வது நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் பாசம் காரணமாக என்று நினைத்திருக்கிறோம், ஆனால் அது அவற்றையும் மீறி இதயத்தின்பால் ஊறுகின்ற கருணையின் காரணமாக என்றறியும் போது வியப்பை அளிக்கிறது, 

பெற்றோர் குழந்தையினை முத்தமிடுவத்தின் மூலம் அந்தக் குழந்தை ஓர் உணர்வு ரீதியான அரவணைப்பைப் பெறுகிறது. அதுவும் ஒரு தாய் முத்தமிடும் போது குழந்தையுடனான பாசப்பிணைப்பு உயிரியல் மூலம் உறுதிசெய்யப்படுகிறது, பெற்றோரின் இந்த ஆத்மார்த்தமான முத்தத்தினால், எந்த ஒரு எதிர்மறையான சூழ்நிலையிலும் தாழ்வுமனநிலை என்பது குழந்தையின் உள்ளத்தினைப் பாதிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,

மேலும், குழந்தையினை முத்தமிடுவதால் குழந்தைக்கும் அதேவேளையில் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையினை அடையமுடிகிறது, குழந்தையின் இதயம் சீராக செயலாற்ற பெரிதும் உதவுகிறது.

தாய் தன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ன நடக்கிறதென்பதை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையை உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.  ஒரு தாய் தன் குழந்தையினை கருவில் சுமக்கும் போது அதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கான தேவைகளை ஈடுசெய்கிறாள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு வெளி உலகில் குழந்தையினைத் தாக்கும் நோய்க்கு எதிர்சக்திகளை உருவாக்குவதில் முத்தம் பெறும் பங்கு வகிக்கிறது. ஆச்யர்யமாக இருக்கிறதல்லவா?? ஆம், ஒரு தாய் முத்தமிடுவதன் மூலம் கிருமிகளின் மாதிரி எடுக்கப்பட்டு வெளித் திசுக்கள் மற்றும்,   நினைவுத்திறன் 'பி' வகை செல்கள் மூலம் அந்த கிருமிகளின் வீரியம் அழிக்கப்பட்டு, இதற்கான நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாக்கப்பட்டு அவை 'பி'வகை செல்களினால் நினைவுத்திறன் கொண்டு தாய்ப்பால் மூலம் குழந்தைக்குப் போய்ச்சேருகிறது. குழந்தையும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறது.

எனவே தான் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே, அறிவியல் அறிந்திராத காலத்தில் தோன்றிய எங்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், குழந்தைகளை முத்தமிடாத ஒரு கிராமவாசியைப் பார்த்து, "இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா??" என்று கூறினார்கள்.

"அன்பும் கருணையும் கலந்திருக்கும் முத்தத்தினைப்.........................."

வார்த்தையினை முடிப்பதிற்குள் அரங்கில் கரவொலி நிரம்பியிருந்தது. உம்மா, ஆயிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

புதுசுரபி (ரஃபீக்)
10-08-2011

புன்னகை 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 12, 2014 | , ,



’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’

மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.

பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும் இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பது கேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.

தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு வழிமுறை. ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்த உலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக் கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது அட அது இதுன்னு ஒன்றுமே இல்லையா.. கவலையே வேண்டாம், ஒரு புன்னகை ஒரே ஒரு புன்னகை நம் எதிரிலிருப்போரைப் பார்த்து புன்னகை செய்தாலே போதும் தர்மம் செய்த புண்ணியம் நிச்சயமுண்டு என்று நபிமொழியினை மேற்கோளிட்டும் விவாதம் தொடர்ந்து நடந்தது கொண்டிருந்தது.. 

’அதெப்படீங்க.. நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்கு அவரும் புன்னகைப்பார் அவ்வளவுதான். எப்படி.அது தர்மமாகும்? லாஜிக் இடிக்குதே?’  இது ஒரு நண்பர்.

‘இதிலே தலைகாக்கும் தந்திரம் எங்கிருக்கிறது?’ இது மற்றொரு நண்பர்.

அறிவியல் பேசலாமா? அவர்களின் கவனத்தைத் திருப்பினேன்.


உண்மைதான், நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்கு அவரும் புன்னகைப்பார். அப்போது நம் தலையை மட்டுமல்ல அவரின் தலையையும் நம் புன்னகை காக்கிறது நாம் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டதுதான் புன்னகை. ஆம், முப்பரிமான அல்ட்ராஸோனிக் தொழில்நுட்பம் மூலம் கருவறையில் இருக்கும் சிசு புன்னகைப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாம் பிறக்கும் போதும் புன்னகைக்கிறோம், பிறந்தபின்னும் புன்னகைக்கிறோம். பிறந்த குழந்தைகள் தூக்கத்திலும் புன்னகைப்பதைப் பார்த்திருப்போம். கண்பார்வை இல்லாத குழந்தைகள் கூட மனிதர்களின் குரலறிந்து புன்னகை புரிகின்றனர். 

மனிதர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த சார்லஸ் டார்வின் எழுதிய The Origin of the Species என்ற நூலில் முகத்தில் உள்ள தசைகள் ஏற்படுத்தும் மாற்றங்களின் விளைவுகள் குறித்த கோட்பாடுகள் வரும்போது புன்னகை பற்றி பேசப்படுகிறது.

ஒரு மனிதன் புன்னகை புரியும் நேரத்தில் அவனின் முகத்தசைகளின் மாற்றங்களின் மூலம் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உணர்கிறான் என்று டார்வின் சொல்கிறார்,

அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், 2009ம் ஆண்டில் ஜெர்மனியில் ஒரு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் புன்னகை புரிவதின் மூலம் மூளையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டபோது. புன்னகை மகிழ்வான மனநிலையினைத் தருவது உறுதியானது.

இந்த புன்னகை என்ன விலை தெரியுமா? நாம் புன்னகை செய்யும் நேரத்தில் நம் மனதில் (மூளையில்) ஏற்படும் மகிழ்ச்சித் தூண்டலினால் 2000 சாக்லேட்டுகள் சாப்பிட்ட அளவிற்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். காசைப்பார்த்து தான் காந்தி தாத்தா போல புன்னகை புரிவேன் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையாக தூய மனதோடு புன்னகைத்தால் 16,000 பவுண்ட் ( ஏறத்தாழ 13 இலட்சம் ரூபாய்) நம் கையில் இருந்தால் ஏற்படும் அளவுக்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். (போலியான புன்னகையினை மூளை அங்கீகரிப்பதில்லையாம்)

அளவுக்கு மிஞ்சிய சாக்லேட்டுகள் வேண்டுமானால் உடலுக்கு தீங்கு தரலாம். ஆனால் அளவுக்கு மீறிய புன்னகைகள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும். மனஅழுத்தம், இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கிறது. மனதையும் உடலையும் இதமாக வைத்துக்கொள்ள உதவும் ’எண்ட்ரோஃபின்ஸ்’ அளிக்கிறது.

புதுப்பணக்காரர் மார்க் ஸூக்கர்பெர்க் முகத்தில் தவழும் புன்னகையும், பணமென்றால் என்னவென்றே அறியாத புதுக்குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகையும் ஒரே மாதிரியாய் இருக்கும், ஏன் தெரியுமா? குழந்தை ஒருநாளைக்கு 400 முறை புன்னகைக்கிறதாம்.

ஒரு சிறு புன்னகை அனைத்தையும் விட மாபெரும் தர்மம் தானே??

அனைவரின் முகத்திலும் பூத்தது புன்னகை!

புதுசுரபி

மலாலா ஒரு மாயையா? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 19, 2014 | , , , ,

இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா
பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும்…

சரி, பிறகு எழுதலாம் என்று. விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் எப்போதுமே வேண்டியதில்லை என்றாகிவிடும்.

முதலில் எல்லோரும் சொல்வது போலவே மலாலாவுக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்வோம்!

அது தகுதியுடையதா அல்லது இல்லையா என்பதை இக்கட்டுரையின் முடிவில் உங்களின் தீர்ப்பில் தெரிந்து கொள்வோம்.

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை பெறுவதற்காக இதுவரையிலும் இல்லாத அளவிற்கு தனிநபர்களின் மனுக்கள் மற்றும் 47 நிறுவனங்கள் உள்பட 278 மனுக்கள் பரிசீலனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதியாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவ்விருவரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த திரு.கைலாஷ் சத்யார்த்தி மற்றொருவர் பாகிஸ்தானைச் சார்ந்த இங்கிலாந்து வாழ் சிறுமி மலாலா யூஸுஃப்ஸாய்.

“சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வி அவர்களைச் சென்றடைய பாடுபடுதல் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் / இளைஞர்கள் நலன் காக்கப் போராடுதல், குறிப்பாக ’தஃலிபான்’களின் அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் கல்வியில் உயர உழைக்கிறார்.” எனும் அடிப்படையில் நோபல் பரிசுக்கு மலாலா தேர்வானார் என்ற பரிசு ஊக்குவிப்புச் செய்தியினை அறியமுடிகிறது.

பாகிஸ்தானில் பல பள்ளிக்கூடங்களை நடத்திவரும் ஜியாவுதீன் யூஸுஃப்ஸாய் மற்றும் தூர்பெகாய் யூஸுஃப்ஸாய் ஆகியோரின் மகளாக 1997ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் 12ம் தேதி வடமேற்கு மாகாணமான மிங்கோராவில் பிறக்கிறார் மலாலா யூஸுஃப்ஸாய். 

செல்வந்தரின் மகளாக வளர்கிறார். தன்னுடைய 11ம் வயதில் BBC Blogல் ’தஃலிபான்’களின் அடக்குமுறை பற்றி எழுதுகிறார். அதன் உண்மைநிலை அறிய BBC குழு அங்கு வருகிறது. பின்பு மலாலாவுக்கு ஒரு சர்வதேச விருது அளிக்கப்படுகிறது. பிறகு ’தஃலிபான்’களின் பார்வை மலாலா பக்கம் திரும்புகிறது. 

அதாவது, 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி பள்ளிக்கூடம் செல்லும் வழியில் மலாலா, ’தஃலிபான்’களின் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகிறார். பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று பின் மேல் சிகிச்சைக்காக இலண்டன் செல்கிறார். சிகிச்சைக்குப் பிறகு பள்ளிப் படிப்பினை அங்கேயே தொடர்கிறார். இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகிறார். அமெரிக்கா செல்கிறார்; அதிபரை சந்திக்கிறார். வேறு சில நாடுகளுக்குப் பயணிக்கிறார். புத்தகம் எழுதுகிறார். இப்போது நோபல் பரிசளிக்கப்பட்டிருக்கிறார்.

மேற்சொன்னவைதான் ஊடகங்கள் வாயிலாக நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட மலாலா கதை.

சரி, இப்போது ஷபானா பாஸிஜ் ராஸிக் என்பவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஆம் இவரைப் பற்றி நமது ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிந்திராத நிலையில் அறிமுகம் என்பதே சரியான சொல்லாய் இருக்கும்.

இவரது வாழ்க்கை மலாலா போன்று மலர்களால் மூடிய சோலையல்ல; முள்கள் நிறைந்த பாலை.

தங்களின் பள்ளியில் சேர்த்து கல்வியூட்ட, மலாலா போன்று பள்ளிக்கூடங்களின் முதலாளி அல்ல இவரின் பெற்றோர்கள்!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து அவர்களுக்கு கல்வியூட்ட வேண்டும் என்று நினைத்த கருணைமிகு பெற்றோருக்குப் பிறந்தவர் ஷபானா பாஸிஜ் ராஸிக். 

ஆஃப்கான் தலைநகர் காபூலில் பிறந்து வளர்ந்த இவரின் தற்போதைய வயது 24.

ஷபானா சிறுமியாக இருந்த பொழுது ஆஃப்கான் தஃலிபான்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. எங்கும் கெடுபிடி, பெண் குழந்தைகள் வெளியில் செல்லமுடியாத சூழல். படிப்பிற்காக வெளியே செல்லுதல்கூடாது என்று ஊர்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலம். அன்று வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் மட்டுமே (25வயது அதற்கு மேற்பட்டோர்) முறையாக பள்ளி சென்று எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். 

42 இலட்சம் குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் (இதில் பெண் குழந்தைகள் சதவீதம் அதிகம்) கல்வியை எட்டாக் கனியாகப் பார்த்திருந்த சூழல். காரணம் அன்று அங்கு நிலவிய போர் மேகம், போர் என்ற பெயரில் வன்முறை, வாழ்வாதாரங்களை இழந்த ஏழ்மை நிலை இவையனைத்திற்கும் மேலாக ஊர்க்கட்டுப்பாடு என்று அன்று பிள்ளைகள் வீடுகளில் முடங்கிக் கிடந்த பரிதாப நிலை.

இதுபோன்ற சூழலில்தான் ஷபானாவின் தந்தை, மிகப்பெரிய ஆபத்தான சூழலிலும் தன் மகளுக்கு கல்வி போதிக்கப்பட வேண்டுமென நினைக்கிறார். இவர் போன்ற பெற்றோர் எடுத்த முடிவினால் நகரத்தில் ஆங்காங்கு நடைபெறும் இரகசியப் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்கின்றனர். 

பள்ளி என்றால் நாம் கற்பனை செய்வது போலில்லாமல், ஒரு வீட்டின் ஹாலில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அடைத்து வைத்து கல்வி போதிக்கப்படும். அனைவரும் ஒரே நேரத்தில் வருவது கூடாது; அதேபோல கலைந்து செல்லும் போதும் கூட்டமாக செல்லுதல் கூடாது. இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி, போதிக்கும் ஆசிரியர்கள், பாதுகாப்பிற்கென வரும் பெற்றோர்கள் என எவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

இதுபோன்ற ஒரு பள்ளிக்குத்தான் ஷபானா அனுப்பப்படுகிறார். எப்படித் தெரியுமா? ஆண் பிள்ளையின் உடைகளை அணிந்து, மளிகைக் கடைக்கு சாமான்கள் வாங்குவது போன்ற தோற்றத்தில் பையில் புத்தகங்களை அடுக்கி சென்று வருகிறார். தினமும் ஒரே பாதையில் சென்றால் சந்தேகம் ஏற்படுமென்று தினமும் வெவ்வேறு பாதைகளில் அந்த இரகசியப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்.

இப்படி நித்தமும் உயிரைப் பணயம் வைத்து பள்ளி சென்று வந்த நிலையில், 2001ம் ஆண்டு ’தஃலிபான்’களின் ஆட்சி கவிழ்கிறது. அப்பாவிற்கும் மகளுக்கும் மனம் நிறைய மகிழ்ச்சி, என்னவெனில் இனிமேல் நாம் முறையான வழக்கமான பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்கலாம் என்பதே. ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை, கலவரம் காரணமாக அது கனவாகிப் போனது. ஆனால் தொடர்ந்து இரகசியப் பள்ளியின் கல்வியில் மிளிர்கிறார் ஷபானா.

ஒருமுறை மிகவும் விரக்தியான மனநிலையில், “இப்படி ஒரு சூழலில் நான் படிக்க வேண்டுமா அப்பா?” என்று ஷபானா கேட்க, ”இதுமட்டுமல்ல மகளே, உன் வாழ்க்கையில் நீ செல்வங்களை இழக்கலாம், பெற்றோரை இழக்கலாம் ஏன் நீ கூட நாடு கடத்தப்படலாம். ஆனால் இறுதிவரையிலும் உன் கூடவே இருக்கப்போவது நீ கற்கும் கல்வியும் பெறும் அறிவும் மட்டுமே! உன் படிப்பின் கட்டணத்திற்காக எங்கள் இரத்தத்தை விற்றேனும் பணம் கட்ட வேண்டிய சூழல் வந்தாலும் அப்படியே தருகிறோம்” என்று கல்வியின் அவசியத்தை உணர்த்தினார் தந்தை.

இந்நிலையில், படிப்பில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஷபானா, அமெரிக்காவின் YES (Youth Exchange Studies) நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் தனது (மேல்நிலைப்) பள்ளிப் படிப்பை அமெரிக்காவில் தொடரும் வாய்ப்பினைப் பெறுகிறார். அதிகமான சகமாணவர்கள் ஆஃப்கான் பற்றி தெரிந்துகொள்ள இவரிடம் வந்து குவிகின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மூலம் தன் நாட்டின் முகம் தெரிகிறது. பட்ட துன்பம் தெரிகிறது, அடிப்படைக் கல்வி, சுகாதாரம் மறுக்கப்பட்டு இருப்பதை, ஏறத்தாழ 90 சதவீத பெண்கள் முறையான கல்வியறிவற்று இருப்பதை உணர்கிறார். ஆஃப்கான் பற்றி அதிகம் அமெரிக்காவில் பேசுகிறார். ஆஃப்கானின் தூதுவர் போல பார்க்கப்படுகிறார்.

இவரை துணை நிறுவனராகக் கொண்டு 2008ல் SOLA (School Of Leadership Afghanistan) என்ற சர்வதேச தரம் கொண்ட பெண்களுக்கான உறைவிடப் பள்ளி ஆரம்பிக்கப்படுகிறது. இதுவே ஆஃப்கானின் முதல் மற்றும் ஒரே பெண்களுக்கான உறைவிடப்பள்ளி ஆகும். 34 மாகாணங்களைக் கொண்டுள்ள ஆஃப்கானின் அனைத்து தரப்பு மாணவிகளும் இங்கு வந்து பயிலும் நோக்கத்துடன் உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டுகிறது.

கள ஆய்வுப்பணி, பள்ளிக்கூடம் நிறுவுதலுக்குப் பிறகு 2011ம் ஆண்டில் அமெரிக்கா திரும்பி  Middlebury கல்லூரியில் International Studies and Women & Gender Studies எனும் ஆய்வுப் படிப்பில் பட்டம் பெறுகிறார்.  தாம் சிறுவயதில் கல்விக்காக பட்ட துயர், துன்பம் இனி ஆஃப்கான் பெண் குழந்தைகள் படக்கூடாது என்ற நோக்கத்தில் தம் கல்லூரிக் காலத்திலேயே HELA எனும் பெயர்  (ஆஃப்கான் மொழியில் நம்பிக்கை எனும் பொருள்)  கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல், திறமையான ஆசிரியர்களை உருவாக்குதல், உலக மொழிகள் கற்பித்தல், நெருக்கடியான சூழலில் சிந்திக்கும் ஆற்றல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயிற்றுவித்தல், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதாரம் மற்றும் சத்துணவு பற்றிய விழிப்புணர்வுக் கல்வி என ஒரு பெரிய திட்டங்களுடன் இந்த தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுகிறது.நான்கு மாணவிகளுடன் 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இன்று ஆஃப்கானின் 14 மாகானங்களிலிருந்தும் மாணவிகள் தங்கிப் பயிலுகின்றனர், இங்கு பயின்று மேற்படிப்பிற்காக இதுவரை 40 மாணவர்களுக்கு ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள உறைவிடப் பள்ளி, பல்கலைக்கழகங்களில் படிக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 34 மாகாணங்களுக்கான ஆளுமைகளை தலா பத்து வீதம் 340 தலைவர்களை உருவாக்குவது என்று சொல்கிறார் ஷபானா

ஒரு மாணவியை உருவாக்குதல் என்பதிலிருந்து விலகி அதற்கும் மேலாக இந்நாட்டின் ஒரு தலைவியை உருவாக்குவதே SOLAவின் இலட்சியம் என்கிறார். மாணவி எந்த பிரிவைச் சார்ந்தவராய் இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல இங்கு வந்தவுடன் நீ ஒரு SOLA பெண் என்பதாக அவர்களிடம் அறிவுறுத்துகிறார்.

ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஆஃப்கானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு போகமுடியாத நிலை இருந்தது. அரசியல் என்பது ஒருபுறமிருந்தாலும், மேலே படிக்க பள்ளிகள் இல்லை, பொருளாதார சரிவுநிலை, கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை, இதுபோன்ற சில காரணங்களுக்காகவும் 12 வயதினையெட்டிய பெண் பிள்ளைகள் வீட்டில் வைக்கப்பட்டனர், வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனிக்கும் படி பணிக்கப்பட்டனர். சமையல், வீட்டைப் பராமரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர், பிறகு திருமணம் முடித்துக் கொடுக்கப்படுவார்கள்.

இந்நிலையை மாற்றி அவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும், எனக்கு கிடைத்த இந்த கல்வியறிவு மற்ற பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு முயற்சியில் அவர்களது பயனுள்ள நேரங்கள் அனைத்தும், அவர்களை இந்த உலகிற்கு பயனுள்ளவர்களாக மாற்றுவதற்கு எனக்கு வேண்டும். அதுதான் இந்த உறைவிடப் பள்ளியின் இலட்சியம், நோக்கம் என்று தன் உறைவிடப் பள்ளியின் கனவினை விவரிக்கிறார் ஷபானா.

.இந்த வெற்றிகரமான திட்டத்தை மற்ற நாடுகளில் எங்கெங்கெல்லாம் பெண் குழந்தைகளின் உரிமைகள் நசுக்கப்படுகின்றதோ அங்கு தொடங்குவதே அடுத்த கட்டப் பணி என்கிறார் திடமாக. 
  • தன் நாட்டின் பெண்களின் கல்விக்காக கல்லூரிப் பருவத்தி்லேயே அயாராது சிந்திக்கும், உழைக்கும் இவருக்கு, மிக உயர்ந்த பத்து கல்லூரி மாணவிகளில் ஒருவர் என்று ஒரு அமெரிக்கப் பத்திரிகை விருது வழங்குகிறது.
  • இவர் படித்த கல்லூரி இவருக்கு தலைசிறந்த பொதுச்சேவகி பட்டம் /விருதினை வழங்கி கௌரவிக்கிறது.
  • இவரை 2011-2012ம் ஆண்டின் தேசிய பெண்கள் நலன் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அரசின் கிராம மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைச்சகம் நியமித்தது.

இந்த ஆண்டின் வளரும் ஆராய்ச்சியாளர் எனும் பட்டத்தை நேஷ்னல் ஜியோக்ராபிக்ஸ் கொடுத்துள்ளது.

சர்வதேச அரங்குகளில் இவரின் குரல் பெண்களின் முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம், தலைமைப் பண்பு ஆகியவைப் பற்றி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவரின் முயற்சிகளை.இப்படியே இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆஃப்கான் போன்ற நாடுகளில் வளரும் பெண் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் உழைத்தல் என்பதினைப் போற்றி அமைதிக்கான நோபல் பெற வேண்டியது யார்?

உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்!

'புதுசுரபி' ரஃபீக்

புதிய தொடக்கம்! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | May 12, 2013 | , , ,


நம் தமிழகத்தில் பரவலாக பள்ளிவாசல்களில் அதிகாலைத் தொழுகைக்குப் பிறகும் அந்தி வேளைத் தொழுகைக்குப் பிறகும் அனைத்து பிறமத சகோதர சகோதரிகள் (சமயத்தில் கைக் குழந்தைகளுடன்) வரிசையாக நின்றிருப்பார்கள். அவர்களின் பிணி. துயரம் அல்லல்களை அல்லாஹ் நீக்குவான் என்ற நம்பிக்கையுடன் வாசலில் காத்திருப்பார்கள். அதுபொழுது நினைத்ததுண்டு, சிலசமயங்களில் நிர்வாகிகளிடம் கேட்டதுமுண்டு.

”ஏன் இந்த பள்ளிநிர்வாகம் இதுபோன்று வருபவர்களை முறையாக உபசரிப்பதில்லை?, 

அவர்களிடம் ஏன் நல்ல முறையில் அன்புடன் கனிவுடன் பேசுவதில்லை? 

ஏன் அவர்களுக்கு நம் வணக்க வழிபாட்டினை விளக்குவதில்லை?

அவர்களை வரிசையாகவோ அல்லது பாதையில் இடையூறில்லாமல் நிற்கும்படி சொல்வதைக்கூட கடிந்துகொள்ளாமல், கனிவுடன் சொல்லலாமே?” 

என்று பல கேள்விகள் தொடுத்ததும் உண்டு.

இருதினங்களுக்கு முன் படித்த செய்தியொன்று தூக்கிவாரிப்போட்டது. 

செய்தியினை முழுவதும் படித்துமுடித்தவுடன் கண்கள் குளமானது.

முஸ்லீம்களென்றால் தீவிரவாதிகள், திருக்குர்ஆன் போதிப்பது தீவிரவாதம், முஸ்லீம்களல்லாதோரைக் கொல்வதே புனிதப்போர் என்று எள்ளளவும் உண்மையற்ற, மேல்நாட்டினரின் கீழான சிந்தனைகளை உள்ளிருத்தி 2008ம் ஆண்டு (FITNA) விதைத்த விதை 2013ல் தமிழ் நடிகரின் மூலம் (விஸ்வரூபமாய்) விருட்சம் கண்டபோது உலகளாவிய தமிழ்பேசும் முஸ்லீம்களல்லாது பொதுபுத்தி கொண்டோரையும் வெகுண்டெழச் செய்த படவிவகாரம் உலகறியும்.

அந்த விதை பரவ காரணமாக இருந்த நெதர்லாந்து (டச்சு) நாட்டின் பாரளுமன்ற உறுப்பினர் ஆர்நோத் வான் டோர்ன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்பதே அந்தச் செய்தி.

”எப்படி நீங்கள் போய்.............?” என்ற கேள்விக்கு, 

“பள்ளிவாசலில் எனக்குக் கிடைத்த கனிவான வரவேற்பே இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறியத் தூண்டியது......” என்ற பதில் என் கண்களை குளமாக்கியது.

இஸ்லாத்தின் எதிரிகள் என்று பட்டம் சூட்டப்பட்ட பலர் இஸ்லாத்தினைத் தழுவினர் என்ற செய்தி, நமக்கு வேண்டுமானால் இஸ்லாத்தின் தொடக்க வரலாற்றுப் பக்கங்களில் உமர் (ரலி) அவர்கள் தொட்டு பழக்கமானதாய் அறிந்திருக்கலாம்.

நம் ஈருலக நாயகர் பெருமானார் (ஸல்) அவர்களின் உயிரை மாய்க்க வந்த உமர் அவர்கள், உடன்பிறந்தவள் உரைத்த திருவசனம் கேட்டு, ’உண்மைதான் இது உண்மைதான்’ என்று பொருளறிந்து ஓடோடி உத்தம நபியின் முன் சத்திய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டார்.

முஸ்லீம்களாகிய நம்மிடையே நித்தம் ஐவேளை திருவசனங்கள்  மொழியப்பட்டும் ஏதும் பொருளுணராததால் எந்த மாற்றமும் திடுக்கமும் ஏற்படுத்தாத சூழலில், ஆர்நோத் வான் டோர்ன் போன்றோருக்கு இஸ்லாத்தினை இழிவுபடுத்துதலே புனிதம் என்று கற்றுக் கொடுத்திருக்கும் போது திருவசனங்கள் கேட்டும் என்ன மாற்றங்கள் நேர்ந்திருக்கும்? 

உலகில் நடந்த விரும்பத்தகாத குற்றச்செயல்களையும், அதன் பின்னுக்கு இருந்தவர்களையும், நியாயம் கோரி போராடுபவர்களை தீவிரவாதிகளாகவும் இறைமறை வசனங்களின் உண்மையறியாமல் இவர்களாக பொருள் தேடி, சில பல வசனங்களை ஒலிக்கச் செய்தும் மேற்கோளிட்டும், இஸ்லாமியர்களுக்குச் சான்றாய் மூன்றரை வயது குழந்தையிடம் பேட்டி(!)கண்டும், பெண்களுக்கு சுதந்திரமில்லை என்றும் இவை அனைத்திற்கும் மேலாக இஸ்லாத்தினை மனித குலத்திற்கே எதிரானதாக  சித்தரித்தும் படங்கள் தயாரிப்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

ஆர்நோத் வான் டோர்ன் இன்று கதறுகிறார்........ யாரிடம்? 

படைத்த வல்ல அல்லாஹ்விடமும் அவனின் திருத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடமும் கண்ணீர் வடிக்கிறார். ”இறைத்தூதரே என் அறியாமையால் நான் வெளியீடு செய்த படத்தை நினைத்து வருந்துகிறேன்” என்று கலங்கி நிற்கிறார்.

”கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஊடகம் தான் எனக்கு இஸ்லாத்தினை இவ்வளவு கொடூரமாக அறிமுகப்படுத்தியது. இஸ்லாம் என்பது வன்முறை போதிக்கும் மதம் என்றும், பெண்களை அடிமைப்படுத்தும் மதம் என்றும் சமூகத்திற்கெதிரானது” என்று மட்டுமே அறிந்திருந்ததாக சொல்கிறார் டோர்ன்.

ஃபித்னா படத்திற்கு உண்டான எதிர்ப்பு, வெளியான அரைமணி நேரத்திலே தடைசெய்யப்பட்ட நிகழ்விற்குப் பின் இஸ்லாத்தினை மேலும் அறிந்துகொள்ள நினைத்த போது, அவரின் நண்பர் அபு ஹுலானி உள்ளூர் பள்ளிவாசலுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார், அங்கு அவருக்குக் கிடைத்த சிறப்பான உபசரிப்பும், வரவேற்பும் ஆச்சர்யமளித்திருக்கிறது. தாம் நினைத்திருந்ததிற்கு முற்றிலும் எதிராக நடக்கிறதே என்று இஸ்லாத்தினை அறிய அதிக ஆர்வம் பிறந்திருக்கிறது.

திருக்குர்ஆன், ஹதீஸ் தொகுப்புகள் மற்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை ஓராண்டு ஆராய்ந்து கற்றுத்தேர்ந்து, உலகின் உன்னதமான மார்க்கம் இஸ்லாமே என்று ஓங்கியொலித்து உறுதியோடு ஏற்றுக்கொண்டுள்ளார் டோர்ன்

உலகமே இதை நம்ப மறுத்திருக்கையில், நகர மேயரைச் சந்தித்து தான் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதை முறையாக அறிவித்து, தனக்கும் மற்ற முஸ்லீம்களைப் போலவே அலுவலக நேரத்தில் தொழுகைக்கான நேரத்தில் தொழுவதற்கு அனுமதிகோரியுள்ளார்.

புனித இறையில்லம் மற்றும் இறைத்தூதரின் பள்ளியினைத் தரிசிக்க வந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் உலகுக்குச் சொன்னது,

”யார் நம்ப மறுத்தாலும், இது (இஸ்லாத்தினை ஏற்றிருப்பது) எனது வாழ்க்கையில் ஓர் முக்கியமான முடிவாகும். இதுநாள் வரையிலும் மற்றவர்களைப் போலவே நானும் நிறைய தவறுகள் பாவங்கள் செய்திருக்கிறேன்.  அதனால் நிறைய பாடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது அல்லாஹ் எனக்கு நேர்வழியினைக் காட்டியிருக்கிறான். இந்த நேரான வழியில் செல்லும் என் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தில் கற்றுக்கொள்ள வேண்டியதோ கடலளவு. 

’தீமையினை நன்மையைக் கொண்டு மாற்றவேண்டும்’ என்ற இறைவசனத்திற்கேற்ப, அறியாமையினால் இஸ்லாத்தினை தவறாகச் சித்தரிக்கும் படம் கொடுத்த இந்த உலகிற்கு, இஸ்லாத்தின் மாண்பையும், ஈருலக நாயகர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புனித வாழ்வினையும் சொல்லும் படம் தயாரித்து வெளியிடுவேன்.”

நமது பள்ளிவாசல்கள் உள்ளூரில் செய்யப்போகும் புதிய தொடக்கம் எப்போது?

புதுசுரபி

புன்னகை 17

அதிரைநிருபர் பதிப்பகம் | May 08, 2013 | , ,



’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’

மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.

பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும் இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பது கேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.

தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு வழிமுறை. ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்த உலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக் கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது அட அது இதுன்னு ஒன்றுமே இல்லையா.. கவலையே வேண்டாம், ஒரு புன்னகை ஒரே ஒரு புன்னகை நம் எதிரிலிருப்போரைப் பார்த்து புன்னகை செய்தாலே போதும் தர்மம் செய்த புண்ணியம் நிச்சயமுண்டு என்று நபிமொழியினை மேற்கோளிட்டும் விவாதம் தொடர்ந்து நடந்தது கொண்டிருந்தது.. 

’அதெப்படீங்க.. நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்கு அவரும் புன்னகைப்பார் அவ்வளவுதான். எப்படி.அது தர்மமாகும்? லாஜிக் இடிக்குதே?’  இது ஒரு நண்பர்.

‘இதிலே தலைகாக்கும் தந்திரம் எங்கிருக்கிறது?’ இது மற்றொரு நண்பர்.

அறிவியல் பேசலாமா? அவர்களின் கவனத்தைத் திருப்பினேன்.


உண்மைதான், நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்கு அவரும் புன்னகைப்பார். அப்போது நம் தலையை மட்டுமல்ல அவரின் தலையையும் நம் புன்னகை காக்கிறது நாம் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டதுதான் புன்னகை. ஆம், முப்பரிமான அல்ட்ராஸோனிக் தொழில்நுட்பம் மூலம் கருவறையில் இருக்கும் சிசு புன்னகைப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாம் பிறக்கும் போதும் புன்னகைக்கிறோம், பிறந்தபின்னும் புன்னகைக்கிறோம். பிறந்த குழந்தைகள் தூக்கத்திலும் புன்னகைப்பதைப் பார்த்திருப்போம். கண்பார்வை இல்லாத குழந்தைகள் கூட மனிதர்களின் குரலறிந்து புன்னகை புரிகின்றனர். 

மனிதர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த சார்லஸ் டார்வின் எழுதிய The Origin of the Species என்ற நூலில் முகத்தில் உள்ள தசைகள் ஏற்படுத்தும் மாற்றங்களின் விளைவுகள் குறித்த கோட்பாடுகள் வரும்போது புன்னகை பற்றி பேசப்படுகிறது.

ஒரு மனிதன் புன்னகை புரியும் நேரத்தில் அவனின் முகத்தசைகளின் மாற்றங்களின் மூலம் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உணர்கிறான் என்று டார்வின் சொல்கிறார்,

அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், 2009ம் ஆண்டில் ஜெர்மனியில் ஒரு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் புன்னகை புரிவதின் மூலம் மூளையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டபோது. புன்னகை மகிழ்வான மனநிலையினைத் தருவது உறுதியானது.

இந்த புன்னகை என்ன விலை தெரியுமா? நாம் புன்னகை செய்யும் நேரத்தில் நம் மனதில் (மூளையில்) ஏற்படும் மகிழ்ச்சித் தூண்டலினால் 2000 சாக்லேட்டுகள் சாப்பிட்ட அளவிற்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். காசைப்பார்த்து தான் காந்தி தாத்தா போல புன்னகை புரிவேன் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையாக தூய மனதோடு புன்னகைத்தால் 16,000 பவுண்ட் ( ஏறத்தாழ 13 இலட்சம் ரூபாய்) நம் கையில் இருந்தால் ஏற்படும் அளவுக்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். (போலியான புன்னகையினை மூளை அங்கீகரிப்பதில்லையாம்)

அளவுக்கு மிஞ்சிய சாக்லேட்டுகள் வேண்டுமானால் உடலுக்கு தீங்கு தரலாம். ஆனால் அளவுக்கு மீறிய புன்னகைகள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும். மனஅழுத்தம், இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கிறது. மனதையும் உடலையும் இதமாக வைத்துக்கொள்ள உதவும் ’எண்ட்ரோஃபின்ஸ்’ அளிக்கிறது.

புதுப்பணக்காரர் மார்க் ஸூக்கர்பெர்க் முகத்தில் தவழும் புன்னகையும், பணமென்றால் என்னவென்றே அறியாத புதுக்குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகையும் ஒரே மாதிரியாய் இருக்கும், ஏன் தெரியுமா? குழந்தை ஒருநாளைக்கு 400 முறை புன்னகைக்கிறதாம்.

ஒரு சிறு புன்னகை அனைத்தையும் விட மாபெரும் தர்மம் தானே??

அனைவரின் முகத்திலும் பூத்தது புன்னகை!

புதுசுரபி

சொல்மந்திரம்...! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | April 20, 2013 | , , ,

சொல் - இது உள்ளத்தில் பிறக்கும் உணர்வின் ஒலி வடிவம்.

’ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’.

இது தமிழகத்தில் அதிகமாய் அறியப்படும் ஒரு சொல்லாடல்.

வள்ளுவர்கூட,

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.

ஒரு சொல்லினால் பிறர்க்குத் துன்பம் தருவதிலிருந்து நீங்கி இனிய சொல்லாக, இன்பம் தரும் சொல்லாக, மனதிற்கு தெம்பூட்டும் சொல்லாக மாறும் போது அச்சொல் வழங்குவோனுக்கும், வழங்கப்பெறுவோனுக்கும் இக்காலத்திற்கும் மறுமைக்கும் இன்பம் தரும் என்கிறார்.

’சரி.. சரி.. சொல்ல வந்ததை சொல்ல வேண்டியதுதானே...’ ங்றது கேட்குது...

1994ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் பனிச்சறுக்கல் போட்டியில் அதிவேக பனிச்சறுக்கு வீரர் டான் ஜான்ஸேன் தங்கம் வென்றார். இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது எது தெரியுமா?

ஒரு ’சொல்’ அந்த ஒரு ’சொல்’ தாங்க...

டான் 12 வயது சிறுவனாய் இருந்த போது ஒரு நகரில் நடந்த சறுக்குப் போட்டியில் கலந்து கொண்டார். அவருக்கு முதலிடம் எட்டாக்கனியானது.

போட்டி முடிந்து கவலைதோய்ந்த முகத்துடன் தந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் மனதை, ’தம்மை தந்தை என்ன ‘சொல்’லப் போகிறாரோ??’ என்ற கவலை மட்டுமே ஆட்கொண்டிருந்தது.

தந்தையோ ஒன்றுமே ‘சொல்’லாமல் வீடு வந்து சேர்ந்தார்.

படுக்கையில் உறக்கமில்லாமல் தவித்த டானுக்கு அப்பா வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

ஒரு ’சொல்’ ....... “ வாழ்க்கை என்பது பனிச்சறுக்கு வட்டத்திற்கும் மேலானது”  என்பது மட்டுமே.

அந்த ஒரு ‘சொல்’  அவரின் தன்னம்பிக்கையினை விரிவாக்கி ஒலிம்பிக்கில் தங்கம் பெற மந்திரச்சாவியாய் மாறியது.

டானின் தந்தையைப் போலவே, நம்மிடமிருந்து ‘சொல்’லப்படும் ஒரு ‘சொல்’ 
அது நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ,  ஆக அதன் வலிமை எத்தகையது என்று மட்டும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

அதிலும் குறிப்பாக நமது பிள்ளைகளிடம் ‘சொல்’லக்கூடிய ‘சொல்’லில் தான் பொருட்டு இருக்கிறது. அச்’சொல்’லே அவர்கள் யார் என்றும் தீர்மானிக்கின்றது.

சொல்வோமா?

புதுசுரபி

விதை ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | April 14, 2013 | , , ,


"என்னங்க இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?"

நண்பர் ஒருவர் என்னைப்பார்த்து கேட்ட கேள்விதாங்க இது. எதற்கு தெரியுமா?

என்னுடைய மொபைல் போனை வாங்கியவர், அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியிலோ(!) சொன்ன வார்த்தைதான் அது.

என்ன புதிராயிருக்கா? அவர் சொன்னதை கேளுங்களேன், 

"என்னதான் புள்ளைங்க மேல பாசமாயிருந்தாலும் ....அதுக்குன்னு இப்படியா சின்னப்பிள்ளைங்க மாதிரி....."

விஷயத்திற்கு வருகிறேன், நண்பர் என் மொபைல் போனை வாங்கியதும் அதில் ஏதும் திரைப்பாடல்களையோ அல்லது படங்களையோ தேடிஇருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு இது ஒரு சாதாரண விஷயமாகத்தானிருக்கிறது ஆனால் நண்பருக்கு என் மொபைல் போனில் காணக்கிடைத்ததோ சிறுவர்களுக்கான நல்லொழுக்கம் பற்றிய  'அனிமேஷன்' படம் மற்றும் பாடல்கள். இது மேலோட்டமாக பார்க்கும்போது நண்பர் சொன்னது போலவே 'சிறுபிள்ளைத்தனமாக'த்தான் தோன்றும்.

ஆனால், 

நண்பர்களை விட அதிக உரிமையுடன் நம் மொபைல் போனை ஆராய்பவர்கள் இல்லை இல்லை ஆள்பவர்கள் நமது பிள்ளைகள்தானே? 

'சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்' என்பார்கள். அதுபோல நம்மிடம் என்ன உள்ளீடு இருக்கிறதோ அவைதானே நம்மை பார்த்து வளரும் நமது பிள்ளைகளின் முன்பருவ காலத்தில் எதிரொலிக்கும். அவைதானே விதையாய் விழுந்து விருட்சமாய் மாறும்.

முன்னொரு காலத்தில் (இன்று அப்படி சொல்ல வேண்டிய நிலை) சினிமா என்பது பொழுதுபோக்கிற்காகவும், திரைப்பாடல்களின் வார்த்தைகள் மனசாட்சி கொண்ட கவிஞர்களால் அதிகம் எழுதப்பட்டும், வசனங்களில் விஞ்சிநிற்கும் மொழிஆளுமை கையாளப்பட்டும், காட்சிகளில் பண்பாட்டின் அக்கறை போர்த்தப்பட்டும் வெளிவந்தது . இன்று நிலை எப்படியுள்ளது என்பதை விபரமாக எழுதவேண்டியதில்லை; நானறிவேன், நீங்களறிவீர்கள், நாடறியும் ஏன் நாளிதழ்களும் சாட்சி சொல்கின்றன.

எவையெல்லாம் நன்னெறிகள் என்று போதிக்கப்படுகிறதோ அவைகளுக்கு வேட்டு வைப்பவைகளாகத்தான் இன்றைய படங்கள்,   பாடல்கள் உள்ளது. காசுதான் கடவுளென்றும், ஓடிப்போய் கல்யாணம் செய்வது தவறில்லை மதுதான் சோகத்திற்கு மருந்து  என்றும் திட்டமிட்டு  புதுவிதிகள் புகுத்தப்படுகின்றன. இந்த முரண்பாடுகளைப் சிறுபிள்ளைகள் அறியாமலேயே  பாடல்களாக மனப்பாடம் செய்கிறார்கள் பின்னாளில் பொருளறியும் போது நன்னெறிகளுக்கு முரண்பட்டு வாழ்கையில் பிறழ்ந்திருப்பார்கள். இல்லை  பிறழச்செய்கிறார்கள். அநேக பெற்றோர்கள் தன் குழந்தை பாடும்  இதுபோன்ற விஷமூட்டும் பாடல்களை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் பாடச்செய்து மகிழ்கின்றனர். பகிரங்கமாக அங்கீகரிக்கின்றனர்.

பாடபுத்தகத்தின் நடுவே பாட்டு புத்தகத்தை மறைத்து வைத்திருந்து ஆசிரியரிடமோ அல்லது அப்பாவிடமோ மாட்டிக்கொண்டால் பெருங்குற்றம் புரிந்தவன் போல தடுமாறுவதும், அவர்களின் வசைப்பாட்டை வாங்கிக்கொள்வதுமான காலம் காலமாகிவிட்டது.

இன்று வன்முறை, ஆபாசம், தரக்குறைவான நகைச்சுவை, மது, புகை  இவையெல்லாமே தவறில்லை என்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட குற்றங்கள் என்றும் சமூகத்தில் விதைக்கப்படுகிறது. 

சமீபத்திய ஆய்வு ஒன்றில் 90 சதவீத திரைப்படங்களில் 68 சதவீத வீடியோ விளையாட்டில் 60 சதவீத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றும் 15 சதவீத இசை ஆல்பங்களிலும் வன்முறை மற்றும் ஆபாசங்கள் தலைவிரித்து ஆடுகிறது என கணிக்கப்பட்டுள்ளது. மேலும்  இதுபோன்ற உள்ளீடுகனின் விளைவு எதிகால சந்ததியினரை சமூக அக்கறையற்றவர்களாகவும் சமூகத்திற்கெதிராக குற்றம் புரிவோராகவும்  மாற்றிவிடுகிறது என்றும் கண்டித்துள்ளனர் 

மேலைநாடுகளில் காலத்திற்கேற்ப திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு மதிப்பீடு போடப்படுகிறது. இது எந்த வயதினருக்கு பொருத்தமானது? சிறுவர்கள் மட்டும் காணக்கூடியதா? பெற்றோரின் வழிகாட்டுதலுடன் காணக்கூடியதா? என்று தரம் பிரித்து மதிப்பிடப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று வைத்துக்கொள்வோம்.

அதில் இடம்பெறும் காட்சிகளில் ஆபாசம், வன்முறை, கொலை, மது, புகை மற்றும் போதை போன்றவைகள் இடம்பெறாதிருக்குமாயின் அந்த நிகழ்ச்சிக்கு அல்லது படத்திற்கு "G" அதாவது General Audiences - குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு  பார்வையாளருக்கும் உகந்தது என்று மதிப்பிடப்படுகிறது.இதுபோல "PG" Parental Guidance Suggested பெற்றோர் அணுசரனையுடன் காண உகந்தது அல்லது பெற்றோர் பார்த்துவிட்டு இது பிள்ளைகளுக்கு பரவாயில்லை என்று  பரிந்துரைக்கக்கூடியது. 

அடுத்து  "PG-13" - Parents Strongly Cautioned இப்படி ஒரு தரம். இது 13 வயது பூர்த்தியடையாதவர்கள் பார்க்க  கண்டிப்பாக அனுமதியில்லை. இந்த தரமுத்திரை இடப்பட்ட படங்களில் ஆபாசம் ,வன்முறை,மது,புகை,போதை மற்றும் அருவருப்பான சொல்லாடல்கள் இருக்கும். (கிட்டத்தட்ட நம்மூர் 'குடும்ப' படமென்று சொல்லி வெளிவரும் படங்கள் போல - நமது தணிக்கைத்துறை தாராளமாய் அனுமதிக்கும் படங்கள்). இன்னும் R - Restricted என்றொரு மதிப்பீடு. இது 17 வயதுக்குட்பட்டவர்கள் கண்டிப்பாக பெற்றோர் அல்லது பெரியோர்களுடன் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்  மேலும் இந்த மதிப்பீடிட்ட படங்களை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காண்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தவும் செய்கிறார்கள்.

எல்லா அக்கிரமங்களும் அநியாயங்களும், தடித்த வார்த்தைப் பிரயோகங்களும் நிரந்த படங்களுக்கு NC -17 No one 17 and under Admitted. அதாவது 18 வயதிற்கு கீழுள்ளோரை ஒருபோதும் அனுமதிக்கவே வேண்டாம் என்ற மதிப்பீடு.

நம்நாட்டில் சினிமா காலடி எடுத்துவைத்தது 1896ம் ஆண்டு. ஆனால் திரைப்படங்களுக்கான மதிப்பீட்டினை நிர்ணயிக்க சென்சார் போர்டு எனும் தணிக்கைத்துறை நிறுவப்பட்டது எப்போது தெரியுமா? நாடு சுதந்திரமடைந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1952ம் ஆண்டு தான். அன்று நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீடு இவ்வாறு உள்ளது:-

U - Unrestricted - 4 வயது குழந்தை முதல் அனைவரும் எந்த தடையுமின்றி பார்க்கலாம்;

A - Adults only - 18 வயது மற்றும் மேற்பட்டோர் பார்க்கலாம் (இது மேலைநாடுகளில் உள்ள R க்கு நிகரானதாம்!) அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1983ம் ஆண்டு,

UA - Under Adult Guidance - 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பெரியோர்களின் துணையுடன் பார்க்கலாம்; (இது மேலைநாடுகளில் உள்ள PG -13க்கு நிகரானதாம்!)

S -Specialised Audience - சில சிறப்பு பார்வையாளர்கள் அதாவது மருத்துவர்கள் போன்ற நிபுணர்களுக்கான பிரத்யேகமான படங்கள் என சில சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டதோடு நின்றுவிட்டது. சரி, இவையெல்லாம் மேற்சொன்ன அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட அந்தக்காலத் திரைப்படங்களுக்கு வேண்டுமானால் பொருந்தியிருக்கலாம். ஆனால் அதற்கு பிறகு எந்த சமூக அக்கறையுமின்றி இலாப நோக்கில்  தயாரிக்கப்படும்  இன்றைய திரைப்படங்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் நிர்ணயித்த அதே மதிப்பீட்டு அளவுகோல்களும், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன பின் சின்னத்திரை வழியாக வீட்டிற்குள் நுழைந்து அனைத்து வயதினரின் முன்பாக வரும்போது எந்த மதிப்பீடு கண்காணிக்கிறது என்பதும் இன்றளவும் கேள்விக்குறியே.

மிகவேகமாக மக்களைச் சென்றடையும் ஊடகத்தினை சரியான நெறிமுறைகளுக்கு உட்படுத்தத் தவறியாதால் பெருகும் குற்றங்கள்தான் இமயம் தொட்டிருக்கிறது.

”அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா”, என மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி வேதனை தெரிவித்தார். - இது 2010ம் ஆண்டு செய்தி.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவணக் காப்பக மையம்,1953ம் ஆண்டில் நாட்டில் பதிவான குற்றங்கள் எண்ணிக்கையையும் அதேபோல் 2011ம் ஆண்டில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு  வளர்ச்சியினை(!) பட்டியலிட்டுத் தரும் விகிதாச்சாரமோ கதிகலங்க வைக்கிறது.

கொலைக்குற்றம் - 250%, கற்பழிப்பு - 873%, ஆட்கடத்தல் - 749%, வழிப்பறி - 194% மற்றும் சமூக வன்முறை - 234% ஆக மொத்த குற்றங்களின் வளர்ச்சி 286% வளர்ந்திருப்பதாக புள்ளிவிபரம் அலறுகிறது.

விழித்துகொண்டு வழிசொல்ல வேண்டிய தணிக்கைத்துறை உறங்கிக்கொண்டிருக்கிறதே.....

விதியென்று சொல்லிக் கொண்டிராமல் நாம் இனி செய்ய வேண்டியதென்ன?

விபரீதங்களை விளையாட்டாய் பார்க்கிறோமே..... விளங்கி அவற்றிற்கு விலங்கிடுவது எப்போது??

விருட்சங்களுக்கான விதை இங்கே; விதைப்பவர் எங்கே???

புதுசுரபி

போரடிக்குது.... ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 03, 2013 | , ,


அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இடையிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள்.

ஒருவேளையில், "ஒருநிமிஷம்", என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று வந்தார்.

"ஒண்ணுமில்லே, ரொம்ப 'போர்' அடிக்குதாம், அதான் வீடியோகேம் விளையாட வேண்டுமென்று கேட்டாள்" என்று சொன்னார்.

"நாம ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போகும்வரை பிள்ளைக்கு 'போர்' அடிக்கும்ல்ல, அவளுக்கு  பொழுதுபோகனும்ல்ல" என்று தனது ஐந்து வயது மகளுக்கென ஒரு பத்து இருபது கார்டூன் சி.டிக்கள், வீடியோகேம், பொம்மைகள் என்று வாங்கி குவித்திருப்பதாகவும் தகவல் தந்தார்.

அவர்மட்டுமல்ல, இன்று நம்மில் பெரும்பாலோனரும் இதைத்தான் செய்கிறோம். இன்றைக்கு, ஆண்பிள்ளையோ அல்லது பெண்பிள்ளையோ வித்தியாசம் இல்லாமல் சொல்லும் ஒருவார்த்தை- 'ஒரே போரடிக்குது'

அநேக குழந்தைகள் 'போர்'அடிப்பதை போக்குவதற்கு அமர்வது அல்லது அமர்த்தப்படுவது தொலைக்காட்சியின் முன்பாகவோ அல்லது கணினியின் முன்பாகவோதான் என்பதை மறுப்பதிற்கில்லை.

ஆக மொத்தம் ஏதோ ஒரு திரை அவர்களின் வாழ்க்கைக்குத் திரைபோட துடிக்கிறது. ஆனால் 'போரடிக்கட்டும், அவர்களுக்கு எந்த திரையும் வேண்டாம் ' என்கிறார்கள் கல்வியியல் வல்லுநர்கள்.

"கனவு காணுங்கள்" என்று சொன்னாரே கலாம்; அந்த கனவுக்கு அதிகம் வழிவகுப்பது 'போரடிக்கும்' காலம்தானம்!

பொதுவாக, சலிப்படையும் (போரடிக்குது... இனி தமிழில்) தன்மைக்கும் தனிமைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தனிமையே சலிப்பினை தோற்றுவிக்கிறது. 

அதேவேளையில்,சலிப்படைந்து இருக்கும்போது "என்னைக் கொஞ்சம் தனியா இருக்கவிடு" என்று தனிமையையும் தேடுகிறது வித்தியாசமாய் சிந்திப்பவர்களைப் பார்த்து 'ரூம் போட்டு யோசிப்பாய்களோ?' என்று கிண்டலாய் சொல்வதுண்டு. 

நாம் தனிமையில் விடப்படும்போதுதான்  நமக்குள் இயற்கையாகவே பொதிந்துள்ள படைப்பாக்கத்திறன்  வெளிவருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலேய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர்.போல்டன் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார். புகழ்பெற்று விளங்கும் பல நூலாசிரியர்கள்,கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் இறுதியில் ஆச்சரியமான அந்த உண்மையினை போல்டன் நிரூபித்துள்ளார்.

சலிப்படையும் காலத்தில் ஆக்கப்பூர்வமாய் சிந்தித்து சிகரம் தொட்டவர்களில்,ஆய்வுக்காக டாக்டர்.போல்டன் சந்தித்த அஷ்டாவதானி மீரா சியல் பற்றிபார்ப்போம்..

இவர்,இங்கிலாந்தின் தலைசிறந்த நகைச்சுவைக் கலைஞர், சிறந்த நூலாசிரியர், நாடக ஆசிரியர், உள்ளங்கவரும் பாடகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், குணச்சித்திர நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். 

(இவரின் நாவல்தான் 'பாம்பே ட்ரீம்ஸ்" ஆக மாறி ஏ.ஆர்.ரஹ்மானை இந்திய எல்லையினை தாண்ட வைத்தது.)

குக்கிராமத்தில் வளர்ந்தது இவரது இளம்பிராயம், சலிப்பூட்டும் காலங்களில் திரைகளுக்குமுன் செல்லாமல்,சன்னலின் திரைகளை பின்னுக்குத் தள்ளி  இயற்கையை ரசித்திருக்கிறார், வயல்வெளியில் நடந்திருக்கிறார், தன்னை நெருங்கும் காலங்களை உணர்ந்திருக்கிறார். அந்த நினைவுகளை தன்னுடைய குறிப்பேட்டில் குறித்து வைக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்.

இளம்வயதில், சலிப்பூட்டும் காலங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுதான் தன்னை  பின்நாளில் ஒரு எழுத்தாளராக உருவாக்கியது என்று மனப்பூர்வமாய் நம்புகிறார். இதேபோல,டக்டர்.போல்டன் சந்தித்த நபர்களில் இன்னொருவர் உலகின் தலைசிறந்த மூளைநரம்பியல் மற்றும் மூளையின் செயல்திறன் ஆராச்சியாளர் பேராசிரியர்.சூஸன் க்ரீன்பீல்டு ஆவார்.

ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவருக்கு, பொம்மைகள் வாங்கி விளையாடும் அளவிற்கு கூட வசதியில்லையாம். தன்னுடைய 13 வயதுவ்ரையிலும் சகோதர சகோதரிகளின்றி (இயற்கையாகவே)தனிமையில் வளர்ந்திருக்கிறார்.

இவர் தன்னுடைய சலிப்பூட்டும் காலங்களில் கதைகேட்பது , கதைசொல்வது, தான் சொன்ன கதைகளுக்கேற்ப ஓவியங்கள் வரைவது மற்றும் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிப்பது என்று நேரத்தை செலவிட்டிருக்கிறார்.

தன்னுடைய கற்பனைத்திறன் அதனை வெளிப்படுத்தும் ஓவியத்திறன் ஆகிய இரண்டும்தான் மூளைத்திறன் பற்றி ஆராய்வதற்கான உள்ளீட்டினை தனக்கு தந்ததாக சொல்கிறார்.

"ஆழ்ந்த சிந்தனையினைத் தூண்டும் எந்தவொரு செயலும், நம் வாழ்க்கையினை நகர்த்துவதற்கு தேவையான உள்ளீடைத்தரும் உந்து சக்தியாய் அமையும்" என்பது இவரது நம்பிக்கை, 

"இயற்கை ஒருபோதும் நம்மை, சிந்திக்காத வெற்றுமதி கொண்டோராயிருக்க  அனுமதிக்காது என்றும், நமக்கு கிடைத்த உள்ளீடுகளை வைத்து நாமே நம்முடைய சிந்தனைக்கலனை நிரப்பிக்கொள்கிறோம்" என்பது இவரது தத்துவம்.

தவறான உள்ளீடுகளின் காரணத்தினாலேயேதான் சில இளைஞர்கள்,  பொதுச்சொத்துகளுக்கு குந்தகம் விளைவிப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்கள் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது இவரின் குற்றச்சாட்டு.

முன்பு ஒரு ஆய்வில், ஏதும் வேலையில்லாமல் இருக்கும் குழந்தை உடனடியாக நாடுவது தொலைக்காட்சி, விடீயோ, கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் போன்ற ஏதோ ஒரு திரையைத்தான் என்றும், நாளடைவில் இதில் செலவழிக்கும் நேரம் கணிசமாக உயர்ந்துவிடுகிறது என்றும் இதனால் குழந்தைகளின் எழுதக்கூடிய திறன் குறைந்துவிடுவதையும் கண்டறிந்தனர்.

இப்போது அவசரத்தேவை தேவை 

குழந்தைகளின் சலிப்பூட்டும் காலத்தினை ஆக்கப்பூர்வமாய் மாற்றுதல்.

எழுத்துக்கும் எழுதுவதற்கு உறுதுணையாய் இருக்கும் கற்பனைத் திறனை  வளர்த்தல்.

கற்பனைக்கு ஆணிவேராய் இருக்கும் தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாய் உட்கிரகிக்க சிந்திக்கச் செய்தல்.

கற்பனைத் தூண்டலுக்கு வேட்டு வைக்கும் உள்ளீடு தரும் தளங்களைத் தவிர்த்தல்.

போரடிக்குதா?????

புதுசுரபி

ஈத் பெருநாள் - ஓர் இஸ்லாமியப் பார்வை 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2012 | , , ,



பண்டிகை, கொண்டாட்டம் என்பது மனித வாழ்வில் இயற்கையாகவே பதியப்பட்ட ஒன்றாய் இருக்கிறது.. எல்லா மனிதர்களுமே  ஒரு தினத்தினை சிறப்பானதாக்கி  கொண்டாடிவருவதும்  வாடிக்கையாய் உள்ளது.

பொதுவாக இன்று உலகத்தில் பண்டிகை, கொண்ட்டாட்டம் என்பது உலக சம்பந்தப்பட்ட  விஷயங்களுக்காகவே  நடைபெறுகிறது. உதாரணமாக  வருடப்பிறப்பு, அறுவடைத்திருநாள், பருவநிலை மாற்றத்திற்கு  விழா, ஆசிரியர் தினம், சுதந்திரதினம்  என அடுக்கிக்கொண்டே  போகலாம். பெரும்பாலும்  அதுபோன்ற விழாக்களில்  மதம் சார்ந்த பண்டிகைகள் இருப்பதையும்  காணமுடிகிறது . இவற்றில் இஸ்லாமியர்களின்  பண்டிகை முற்றிலுமாக வேறுபடுகிறது.

இன்று முஸ்லிம்கள் மத்தியில் மற்ற கலாச்சாரங்களின்  பாதிப்பால்  ஏராளமான  பண்டிகைகளும் , சடங்குகளும் மலிந்துள்ளன.  ”ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பண்டிகை உள்ளது, இது உங்களுடைய (முஸ்லிம்களுடைய) பண்டிகை என்று நபி (ஸல்) அவர்கள், இரண்டு ஈத் பெருநாட்களை சுட்டிக் காட்டியுள்ளதை  கவனத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லீம்களுக்கு ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாளும்   ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ் பெருநாளையும்   தவிர வேறேதும் கொண்டாடும் வகையில் பண்டிகைகளோ அல்லது தினங்களோ கிடையாது என்பதை பின் வரும் ஹதீஸ் வலுவாக எடுத்துரைக்கிறது .

நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றிருந்தபோது  அங்குள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட இரு தினங்கள் விளையாட்டிலும், கொண்டாட்டங்களிலும்  கழித்தனர். அப்போது  நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்களைப்  பற்றிக் கேட்டார்கள். அதற்கவர்கள், “நாங்கள் ஜாஹிலிய்யா காலத்திலிருந்தே  இதுபோன்ற விழாக்களில்  ஈடுபடுவது வழக்கம்"  என பதிலுரைத்தனர். நபியவர்கள்  சொன்னார்கள்  "அல்லாஹ் உங்களுக்கு இவைகளை விட மிக சிறப்பான ( ஃபித்ர் மற்றும் அழ்ஹா ) தினங்களை கொடுத்திருக்கிறான்  என்று.     (அறிவிப்பாளர்   அனஸ் (ரலி) நூல்  - அபுதாவூத் )
இவ்வாறு நமக்கு வழங்கப்பட்டுள்ள  ஈத் பெருநாள்களின்  போது நாம் பின்பற்ற  வேண்டிய பண்புகள் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தந்த  வழிமுறையினை  பின்பற்றுவது முஸ்லிமாகிய நம் அனைவர் மீதும் தலையாய கடமையுமாகிறது .

குளிப்பு:  பெருநாளன்று  தொழுகைக்கு செல்வதற்கு முன் குளிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது . சயீத் இப்ன் ஜுபைர் அவர்கள் ," பெருநாளன்று  மூன்று விசயங்கள் ஸுன்னத்துகளாக கருதப்படும் அவையானது, 

1) (தொழுகைக்காக ) நடந்துசெல்வது .
2) குளிப்பது 
3) தொழுகைக்கு செல்லும் முன் சிற்றுண்டி அருந்துவது.” என அறிவிக்கிறார்கள் .

தொழுககைக்கு முன் உணவு:  ஈது பெருநாளன்று யாரும் நோன்பு நோற்கக்கூடாது , நோன்பு காலம் முடிந்துவிட்டது என்பதை அறிவிக்கும்  பொருட்டும் ,  அந்நாளில் அனைவரும் உண்டு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்கான அடையாளமாகவும் பெருநாளன்று காலை தொழுகைக்கு முன்பாக சிற்றுண்டி அருந்தவேண்டுமென்பது  அவசியமாகிறது .
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக  புஹாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்,

"நபி (ஸல்) அவர்கள் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று காலையில் சில பேரீத்தம் பழங்களையாவது சாப்பிடாமல்  வெளியே செல்லமாட்டார்கள், மேலும் அவர்கள் பேரீத்தம்பழங்களை  ஒற்றைப்படையில் சாப்பிடுவார்கள்" என நமக்கு சொல்கிறது . (ஹஜ் பெருநாள் தினத்தன்று தொழுகைக்கு பின் உணவருந்துவது  நபிவழி )

தக்பிர் முழக்கம் : தக்பீர் முழங்குவது என்பது பின்பற்ற வேண்டிய சுன்னத்களில் மிகவும் அவசியமானதாயிருக்கிறது  ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான் ,

”..............................(நோன்பின் ) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும் , அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காகவும்  நீங்கள் அவனுடைய மேன்மையைப்  போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்கு காண்பிக்கப்படுகிறது  !) 2:185

எனவே பெருநாளன்று  தக்பீர் முழங்குவது அவசியமாகிறது. பிறை பார்த்ததிலிருந்து  இமாம் தொழுகையை முன்னிருத்தும் நேரம் வரையிலும் தக்பீர் சொல்வதற்குரிய  நேரமாக கருதப்படுகிறது. . 

அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் , லாயிலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து ( அல்லாஹ் மிகப் பெரியவன் , அல்லாஹ் மிகப் பெரியவன் , அல்லாஹ்வைத்தவிர  வேறெந்தக் கடவுளுமில்லை ,அல்லாஹ் மிகப் பெரியவன் , அல்லாஹ் மிகப் பெரியவன் மேலும் அவனுக்கே புகழனைத்தும் ).

ஆடை அலங்காரம்: 

”ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் கடைத்தெருவில்  செல்லும் போது ஓர் உயர் ரக ஆடை (மேலங்கி) ஒன்று விற்பனைக்காக இருந்தது. ,அது பட்டுத்துணியால் ஆனது. இதனை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வாங்குமாறும், அந்த ஆடையை ஈத் தினத்தன்றும் மற்றும் அயல்நாட்டு தூதர்களை சந்திக்கும் போதும் உபயோகிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கிய போது , நபியவர்கள்  " இது மறுமையில்  எந்த பங்கும் கிடைக்காத மனிதர் உடுப்பது " என மறுத்துவிட்டார்கள்  .  
( அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்: புஹாரி)

உமர் (ரலி) அவர்களின் , ஒருவரின் தோற்றத்தினை  செம்மைப்படுத்தும்  யோசனையினை   அங்கீகரித்த நபியவர்கள்  பட்டுத்துணிக்குத் தடைவிதித்தார்கள். .

நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த  சிறந்த ஆடையையே ஈத் தினத்தன்றும் ஜும்ஆ தினங்களிலும் அணிந்ததாக  ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  .
ஆக நம்முடைய உடைத்தேர்வுகளில்  மிகுந்த கவனமாயிருத்தல்  வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரையில்  தொழுகைக்காக வெளியே செல்ல நேருமாயின் அலங்காரங்களைத் தவிர்த்தல் வேண்டும். . நாம் வெளியே செல்வது இறைவனைத் தொழவே ஆகையினால் மிகக் கவனமாயிருத்தல்  உகந்தது.  

ஒருவழி சென்று மறுவழி வருதல் :

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காக நடந்து செல்வதும், பாங்கு , இகாமத் ஏதுமின்றி தொழுவதும் , பிறகு தொழுகை முடிந்து வேறு வழியில் வீடு திரும்புவதையும்  வழக்கமாய் கொண்டிருந்தார்கள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும்  ஹதீஸில், “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈத் தொழுகைக்காக சென்றுவர இருவேறு பாதைகளை உபயோகிப்பார்கள் ” என்று குறிப்பிடுகிறார்  . இந்த முறையையும் நாம் பின்பற்றுதல் வேண்டும்;

வல்ல இறைவன் நமக்களித்த இந்த ஈத் திருநாளில் அவனது தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைகளைப்  பின்ற்றி , ஈகைத் திருநாளின் நோக்கத்தையும்  பொருளையும்  உணர்ந்து சிறப்பாக கொண்டாடி ஏக இறைவனின் உவப்பை பெறுவோம் !

ரஃபீக் சுலைமான்
புதுசுரபி

இந்தியா உலகின் குப்பைத்தொட்டி ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 12, 2012 | , , ,

இந்தியாவின் வலிமையினை உலகுக்கு பறைசாற்றும் தொழிநுட்ப புரட்சியின் வித்தாய் திகழ்வது மின்னணுவியல். தகவல்-தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மருத்துவம் என இதன் எல்லையில்லா பங்களிப்பு தொடர்வது கொண்டிருக்கும் வேளையில் நம்நாடு மட்டுமன்றி மேலைநாடுகளில் பயன்படுத்தப்பட்டு உபயோகமற்ற எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு புதைகுழியாய் நம்நாட்டின் நகரங்கள் மாறிவருகிறது. 

மின்னல் வேகத்தில் வளரும் இந்திய பொருளாதரத்தில், ஒவ்வொரு ஆண்டும் 5 ,00 ,000 டன் எடை கொண்ட மின்னணு குப்பைகளும் சேர்ந்தே வளர்கின்றது. இது 2012 ல் ஒரு மில்லியன் டன் அளவுக்கு வளரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு இன்று உபயோகமற்ற நிலையில் இருக்கும் கம்ப்யூடர் பாகங்களும், செல்போன்களும், மருத்துவ உபகரணங்களும் என ஒரு புறம் இருந்தாலும், 1992 ம் ஆண்டு உலக  வல்லரசுகளை சமாதானம் செய்வதற்காக தற்கொலைக்கு சமமான 'காட்' ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதன் உட்கூறாய் நம் மீது திணிக்கப்பட்ட 'ஓபன் ஜெனரல் ரைட்ஸ்' எனும் விதிதியின் கீழ், மேலை நாடுகளில் சேரும் கழிவுகள் 'கொடை' என்ற பெயரிலும், மறுசுழற்சி என்ற போர்வையிலும் நம் மீது திணிக்கப்படுகிறது. 

நம்நாட்டைப் பொறுத்தவரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூடர் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டரும் அதன் உதிரி பாகங்களும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களும் அந்த முறையில் நம்நாட்டிற்கு தருவிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இன்று வளர்ந்த  நாடுகளின் குப்பைகளை கொண்டு வந்து இந்தியாவில் கொட்டும் அரசாங்க ஆணையாக செயல்படுகிறது.

கடந்த 2006  ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மேலைநாடுகளிலிருந்து தானமாக(!) வழங்கப்பட்ட கழிவுப் பொருட்கள் 190 மடங்கு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அலறுகிறது.

இந்தியாவிற்கான ஒட்டுமொத்த இறக்குமதியில் 48 % மேலை நாடுகளின் குப்பை கழிவுகள்.

பேரழிவுகளைத் தரக்கூடிய கழிவுகளை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆட்சேபம் தேவிக்கும் சட்டம், உரிமை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தாலும் மேற்சொன்ன 'ஓபன் ஜெனெரல் ரைட்ஸ்' என்ற விதி எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாக் கழிவுகளையுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய நங்க்கூரமிடுத்கிறது.

ஆபத்தின் ஆழமறியா நம்மூர் அப்பாவி குடிசைவாசிகள் அதுபோன்ற குப்பைகளை தரம் பிரித்து காசு பார்க்க அலைமோதுகின்றனர், குடிசைத் தொழிலதிபர் ஆவதற்காக.

மேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் தீபக் ஜெயின் என்ற பழைய இரும்புக்கழிவு வியாபாரி உட்பட ஆறு தொழிலாளர்கள் மயங்கி சரிந்து விழுந்து உயிருக்கு போராடத் துவங்கியவுடன் அள்ளிக் கொண்டுபோய் அப்போல்லா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவருக்கு கை, கால் மற்றும் உடல்பகுதியில்  உள்ள முடிகள் உதிரத் தொடங்கி, மெழுகுபோல் அவர்கள் கை, கால்கள் உருகத்தொடங்கியதைக் கண்ட மருத்துவக்குழு செய்வதறியாது திகைத்து நின்றது. நோயாளிகளின் பின்புலங்களை ஆராய்ந்தபோது, அவர்களுடைய  இருப்பிடம்,குடோன் ஆகியவற்றை பரிசோதிக்குமாறு அகில இந்திய மருத்துவக்கழகம் பணித்தது. மாநகராட்சி, மாநகர காவல்துறை, அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம் என பலரும் களத்தில் இறங்கினர். 

ஆய்வின் முடிவில் "முறுக்கேற்றப்பட்ட இரும்புக்கம்பி பின்னல்கள்" என்ற பெயரில் எட்டு மூட்டைகளை பாதிக்கப்பட்ட ஜெயின் குடோனிலிருந்து கைப்பற்றியது அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம்.பரிசோதனைக்கு  பிறகு பகீர் தகவலையும் வெளியிட்டது. காமாக் கதிர்களை வெளியிடும் கோபால்ட் - 60 என்ற உயிர்க்கொல்லும் கதிரியக்கப் பொருள்தான் இந்த மோசமான விளைவுக்குக் காரணம் என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திவிட்டு தன் கையைக் கழுவிக்கொன்டது அணுசக்தி ஒழுங்குமுறைக் கழகம். ஆனால் "இது பாதுகாப்பனதோ அல்லது பாதுகாப்பற்றதோ என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை" என்கிறார்கள் கம்ப்யூடர் கேபிள்களை உருக்கி அதிலிருந்து தாமிரக் கம்பியினைப்  பெறும் வேலையினைச் செய்யும் பெண் தொழிலாளர்கள். 

தாமிரம் பெறுவதற்காக நச்சுப்புகையில் கருகும் இவர்களை கேன்சர் நோய் மட்டுமல்லாது குழந்தைப் பேறின்மை, சிறுநீரகங்கள் செயலிழப்பு, நரம்புகளின் செயலிழப்பு போன்ற பெருநோய்களும் தாக்கலாம். தாமிரம் எடுத்துக்கொண்டபின் எஞ்சியுள்ள பாதரசக் கலவை மற்றும் ஈயம் போன்றவற்றினை ஆறுகளிலும், விளைநிலங்களிலும் வீசி விடுகின்றனர் உணவு தானியங்கள் மூலம் மற்றவர்களுக்கும் அப்பெரும் வியாதிகள் பரவும் என்பதினை அறியா அப்பாவிகள்.

கிராமப்புறத்தில் வாழ்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெறும் சவாலாய் நிற்கும் இப்பிரச்சனைக்கு சட்ட வல்லுனர்கள் முன்னின்று இந்தியப் பெருநாட்டின் மக்களின் வாழ்வில் நஞ்சைக் கலக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்ப குப்பைகளை முறையாக, சுற்றுச்சூழலுக்கும், மனித மற்றும் மற்ற உயிரினங்களுக்கும், விவசாயப் பெருந்தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அழித்திட வகைசெய்யும் ஆலைகளை அமைத்தல் வேண்டும். மேலை நாடுகளிலிருந்து 'கொடை' அல்லது 'மறுஉபயோகம்' எனும் பெயரில் நம் மீது குப்பை கொட்டுவதை தடைசெய்யப்பட வேண்டும். கோபால்ட்-60  விவகாரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு விவாதப்பொருளாகவே அறியப்பட்டது போலில்லாமல், மக்களின் வாழ்க்கையையும், உயிர் உடைமைகளையும், உலக வெப்பமயமாதல் என்ற நெருங்கிவரும் அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்கள் வகுப்பதன் மூலமே இப்பேராபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும். 

புதுசுரபி

எல்லாப் புகழும் இறைவனுக்கு! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2012 | , , , ,


திருச்சியின் சுகந்தம் அதன் எல்லையினை உணர்த்தியது.

சென்னையிலிருந்து இரவு கிளம்பிய பேருந்து, காலை சுமார் ஆறேகால் மணிக்கு திருச்சியின் எல்லையினை அடைந்தது.

பேருந்து ஓட்டுனர் இரவு விளக்கினை அணைத்துவிட்டு 'ஆல் இந்தியா ரேடியோ' வினைத் திருப்பிக்கொண்டிருந்தார்.

"ஸலாதுல்லாஹ்.... ஸலாமுல்லாஹ்...
அலா தாஹா ரஸூலுல்லாஹ்...
ஸல்லல்லாஹு அலா முஹம்மது 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..."  

பக்திப்பாடல் வரிசையில் காற்றில் கலந்து கொண்டிருந்தது இந்தப் பாடல்.

சக பயண நண்பரோடு, இரவெல்லாம் இஸ்லாம் பற்றியும், இறைத்தூதரைப்பற்றியும் வாதம், விவாதம் மற்றும் விளக்கங்கள் என நீண்டநேர சம்பாஷனை இரவின் இறுதிப்பகுதி வரை நீண்டது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நண்பரின் தூக்கத்தை மெல்ல கலைத்தது பாடலின் சப்தம்.

"ஆங்... பாருங்க, உங்ககிட்ட கேட்கணும்ன்னு நினைச்ச விஷயங்களில் இதும் ஒன்று.... ஏன் உங்கள் இறைத்தூதருக்கு புகழ் பாடுகிறீர்கள்?, அவரின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எல்லா முஸ்லீமும் உருதில் புகழ் பாட்டு பாடுகிறீர்களே?, ஏதோ மந்திரம் சொல்கிறீர்களே?? இந்தப் பாடலின் வரிகள் கூட அவற்றை உறுதிப்படுத்துகிறதே?? தனிமனித புகழ்ச்சி இல்லை என்று சொல்லும் நீங்கள், எப்படி உங்கள் இறைத்தூதருக்கு மட்டும் புகழ்ச்சி கூடும்? அவரும் ஓர் மனிதர்தானே?" என்று கேள்விக் கணைகள் பாயத்தொடங்கின.

புன்னகையுடன் அவரின் கேள்விக்கு பதில் தந்தேன். 

"நிச்சயமாக புகழ் அனைத்தும் நம்மையெல்லாம் படைத்துப் பாதுகாக்கின்ற இறைவன் ஒருவனுக்கே என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. இதில் இருவேறு கருத்துக்கும் இடமில்லை, ஆனால், நீங்கள் எண்ணியவாறு, நபியவர்கள் பெயரைக் கேட்டவுடன் நாங்கள் (முஸ்லீம்கள்) சொல்வது எந்த ஒரு மந்திரமுமில்லை, புகழவுமில்லை. இது ஒரு நன்றிக்கடன் அவ்வளவுதான்" 

'................' அவருடைய மௌனம் எனக்கு சம்மதமாய் தெரியவில்லை.

மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தேன். 

'நண்பரே!, நான் சொன்ன பதிலில் நீங்கள் திருப்தியானதாக நான் உணரவில்லை. நீங்கள் விரும்பினால், நீங்கள் பகிர்ந்துகொண்ட உங்கள் வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தே விளங்க வைக்கிறேன்." என்றவுடன்..

சிறிது தயக்கத்துடன் தனது கைக்கடிகாரத்தினைப் பார்த்துவிட்டு, "...........ம், சொல்லுங்க..." என்றார்.

"இரவு பேசும்போது,நீங்கள் இளம்வயதில் வறுமை காரணமாக மும்பையிலிருந்து குடும்பத்தோடு தென்இந்தியா வந்ததாக சொன்னீர்கள். அப்படி இங்கு வந்தவுடன் யாரும் முன்வந்து பழகவில்லை, பேசவில்லை ஏன் குறைந்தபட்சம் ஒரு புன்னகை கூட இல்லை என்று வருத்தப்பட்டீர்கள்.

நண்பர்களில்லை, உறவினர்களில்லை. அண்டைவீட்டார்கள் கூட ஆறுவாரம்  கழித்துத்தான் நாங்கள் வந்திருப்பதையே அறிந்து கொண்டார்கள் என்று ஆதங்கப்பட்டீர்கள்."

"ஆம் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"  இலேசான கோபம் தெரிந்தது.

"நீங்கள்பட்ட துயரம், வேதனை, வலி ஆகியவற்றை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

பாருங்கள், எங்கள் இறைத்தூதர் போதித்திருப்பதை.." என்று பட்டியலிட ஆரம்பித்தேன் 

• முன் பின் தெரிந்திராத அறிந்திராத நபருக்கும் முன்வந்து சலாம் (முகமன்) கூறுங்கள்.
• உன் சகோதரனுக்காக புன்முறுவல் செய்தும் தர்மமே.
• உனக்கு சமைக்கும் போது உன் அண்டை வீட்டாருக்கும் சிறிது சேர்த்துக்கொள்.
• அண்டைவீட்டார் பசியோடிருக்கும் போது தான் மட்டும் புசிப்பவன் நம்மைச்சார்ந்தவனல்லன்.

என்று அவர் போதித்த மனிதநேயப் பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒருவேளை இந்த போதனைகளை ஏற்றுக்கொண்ட ஒருநபர் உங்கள் அண்டைவீட்டுக்காரராய் இருந்திருந்தால், நீங்கள் சென்ற விரக்தியின் எல்லை என்னவென்றே அறியாதிருந்திருப்பீர்கள்.

பாசமிகு சகோதரத்துவம் உங்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும். புதியதோர் உறவு உங்களை சொந்தம் கொண்டாடியிருக்கும்.

'எப்படி சார் இப்படி சகமனிதர்களோடு பழகுவதைக்கூட தவிர்ப்பவர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்ளமுடியும்?' என்று உங்களைப் போன்றோர்களின் ஆதங்கத்தினை உடைத்தெறியும் நற்பண்புகளை கற்றுக் கொடுத்தவர்தான் எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள். உங்கள் பாஷையில் சொல்லப்போனால் எங்களை மனிதர்களாக மாற்றியவர்.

ஈருலக நாயகர் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது நன்றியின் பெருக்கால் இதயத்தின் ஆழத்திலிருந்து (எங்களை முழுமனிதானக்கிய) நபி (ஸல்) மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்" என்று அவருக்காக இறைவனிடத்தில் இறைஞ்சும் பிரார்த்தனைதான் இது.

சொல்லுங்கள், இது தனிமனித புகழ்ச்சியா? மந்திரமா?.......

அசைவற்று கேட்டுக்கொண்டிருந்த அந்த நண்பரின் உதடுகளை அசைத்த வார்த்தை என்ன தெரியுமா??

"ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்"....!!!!

அல்ஹம்துலில்லாஹ்..

-புதுசுரபி

அதிரைநிருபர் எவ்வகையிலும் இசை மற்றும் அதன் சாயல் தொடும் எதனையும் ஆதரிப்பதில்லை, மாற்றுமதச் சகோதரர்களிடம் இசை வடிவிலும் அறிமுகமான இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை தடம் புரளாமல் கட்டுரையாளர் கையாண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறப்பையும் அவர்களுக்கு முஸ்லீம்கள் மத்தியில் இருக்கும் அளவிடமுடியாத நன்மதிப்பையும் எடுத்துரைத்து தெளிவுற வைத்த விதம் அற்புதம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நாடினால் இதனை செவியுற்ற மாற்றுமத சகோதரர் கலிமாவை முன்மொழியும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ் !

-அதிரைநிருபர்-குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு