நேற்று ஒரு சுவையான சம்பவம். அமெரிக்காவில் நான் தங்கி இருக்கும் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கு ஒரு நண்பர் புதிதாக குடி வந்தார். அவர் பெயர் சுஷில்குமார். எதேச்சையாக சந்திக்க நேர்ந்தபோது ஒரு 'ஹாய்' சொல்லிக் கொண்டோம். கை குலுக்கும்போது அவரவர் பெயர் சொல்வது முறை என்பதால் 'Hi.. This is Safath ' என்றேன்.
பதிலுக்கு அவரும் "Hello.. This is Sushil'' என்றார்.
பிறகு பேசத் தொடங்கினோம்.
'' Where are you from ?"-இது நான்.
"I'm from Chennai. "
'ஓ அப்படியா.. நானும் தமிழ்நாடு தான்'- தமிழுக்கு மாறியாச்சு....
'நெஜமாவா? பார்த்தா அப்படி தெரியலையே.'- இதே போல் என்னிடம் சொன்ன மூணு லட்சத்து முப்பதாயிரத்து முன்னூற்றி ஒன்றாம் நபர் இவர். எண்ணிக்கையை அவரிடம் சொல்லாமல், சின்ன புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன்.
பிறகு அவர் தொடர்ந்தார்.
"தமிழ்நாட்டுல எங்கே?"
"தஞ்சாவூர்-ங்க."
"தஞ்சாவூர் ல எங்கே?"
"தஞ்சாவூர் பக்கத்துல பட்டுக்கோட்டை-னு ஒரு ஊர், அங்கே தான்".
"ஓ அப்படியா? பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல அதிராம்பட்டினம் காதிர் மொஹைதீன் கல்லூரி தெரியுமா"- இது அவர்.
என்னடா இது... நம்ம ஊரைப் பத்தி நம்ம கிட்டயேவா?
"அதிராம்பட்டினம் காதிர் மொஹைதீன் கல்லூரில தான் நான் M.C.A படிச்சேன், நாங்க தான் முதல் Set. ஜெயவீரன் சார் தெரியுமா? அப்துல் காதர் சார் தெரியுமா? NAS சார் தெரியுமா?"னு பட்டியலும் பேச்சும் நீண்டது. பின், கல்லூரி நாட்கள், நம்மூரில் அவர் இருந்த மூன்றாண்டு கால வாழ்க்கை, நாயக்கர் கடை சாப்பாடு-னு பேசினார்.
இதே மாதிரி எனக்கு இதுக்கும் முன்பே ஒரு அனுபவம். நம்மூர் கல்லூரியில் இளங்கலை முடித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர்ந்த சமயத்தில் என்னுடைய ஆசிரியரில் ஒருவரும் இப்படி கேட்டார்.
"நீ எந்த ஊருப்பா?"
"தஞ்சாவூர் சார்"
"தஞ்சாவூர் ல எங்கேப்பா?"
"தஞ்சாவூர் பக்கத்துல பட்டுக்கோட்டை-னு ஒரு ஊர் சார்,"
"அப்படியா.. எதுக்கு கேக்குறேன்னா.. அதிராம்பட்டினம்னு ஒரு ஊர்ல காதிர் மொஹிதீன் காலேஜ்-னு ஒரு காலேஜ் இருக்கு, அங்கே இருந்து வருஷத்துக்கு ஒரு மாணவரையாவது இந்த கல்லூரிக்கு மேல்படிப்புக்கு அனுப்பிடுறாங்க. ஒரு வேளை நீயும் அங்கே இருந்து தான் வர்றியோ-னு தான் கேட்டேன்"
"சார், நான் அந்த காலேஜ்-ல இருந்து தான் சார் வர்றேன், உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ-ன்னு தான் தஞ்சாவூர்-னு சொன்னேன் சார்".
ஆக மொத்தத்துல நான் எடுத்திருக்கிற முடிவு என்னான்னா... யாராவது தமிழ் ஆட்கள் நம்ம கிட்ட, எங்கே இருந்து வர்றீங்க?-னு கேட்டால், அதிராம்பட்டினத்துல இருந்து வர்றேன்னு முதல்-ல சொல்லனும். "அது எங்கே இருக்கு?"-னு கேட்டாங்கன்னா மட்டும் "என்னங்க நீங்க. G.Kல இவ்ளோ கம்மியா இருக்கீங்க.. பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல தான்". இதையும் தாண்டி "அது எங்கே இருக்கு?"-னு கேட்டாங்கன்னா... "அது தஞ்சாவூருக்கு பக்கத்துல இருக்கு-னு சொன்னா மட்டும் உங்களுக்கு புரியவா போகுது?"-னு கேட்கனும்!!!

ஓ.கே. On a serious note......இந்த கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்ட சுஷில்குமார் போன்று, நமதூர் கல்லூரியில் பயின்று, இன்று நல்ல பொருளாதார வசதியோடு, நல்ல நிலைமையில் வாழ்ந்து வருவோர் நிறைய பேர் இருக்கின்றார்கள். என்னுடைய சக நண்பர்களாக இருக்கட்டும், இதை வாசிக்கும் நீங்கள் ஒரு வேளை காதிர் மொஹைதீன் கல்லூரியில் பயின்றவராக இருந்தீர்களானால் உங்க வயது ஒத்தவர்களில் கூட நிறைய பேர் நல்ல நிலைமையில் இருக்கின்றார்கள் என்பதை, கண்டிப்பாக ஒத்துக்கொள்வீர்கள். ஆனால், நம் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? எப்படி இருக்கின்றார்கள்? என்ற ஒரு தகவலும் இது வரையிலும் கல்லூரிக்கு தெரியாது. பழைய மாணவர்களோடு இருந்திருக்க வேண்டிய தொடர்பு, இறந்திருக்கின்றது. "பழைய மாணவர்கள் சங்கம்" என்ற ஒரு அமைப்பு கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்களது மூன்றாடு கால கல்வியோடு, அவர்களுக்கும் கல்லூரிக்குமான தொடர்பு அறுந்துபோய் விடுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். நமதூர் கல்லூரியில் பழைய மாணவர்கள் பற்றிய தகவல் திரட்டப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
சரி. இதனால் என்ன நன்மை ?
நிகழ்கால மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழி காட்டல்.
பழைய மாணவர்களின் உதவியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
கல்வி முறைகளில் செய்யப்படவேண்டிய முன்னேற்றம் பற்றிய முன்னாள் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அவற்றை செயல் படுத்துதல்.
இது போன்ற அரும்பெரும் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நிகழ்கால உதாரணம் தேடுவோர் 'திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி'யின் அலும்னி-அமைப்பைப் பற்றி விசாரித்து அறியலாம். அவர்கள் செய்வது போன்று, வருடத்திற்கு ஒருமுறை சென்னையில் 'முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகள்' நடத்தலாம். சிந்திப்போம், செயல்படுத்துவோம்.
அன்புடன்,
-- அதிரை என்.ஷஃபாத்