பெயர்ப் பகுபதங்கள்
என்பன (1)பொருள்,
(2)இடம்,
(3)காலம்,
(4)சினை/உறுப்பு,
(5)குணம்,
(6)தொழில் ஆகிய ஆறு
வகைகளை உள்ளடக்கியதாகும்:
(2) 3.1.(1) பொருட்பெயர்ப் பகுபதம்
ஒரு பொருளை அடிச்சொல்லாகக் கொண்டு அமைந்த பெயர்ப்
பகுபதம், பொருட்பெயர்ப்
பகுபதம் எனப்படும்.
காட்டுகள் :
முத்து, மணி,
பொன்,
அமுது ஆகியன பொருள்களின்
பெயர்களாகும். பகுதிகளான இவற்றோடு விகுதிகள் சேர்ந்து வரும்போது,
முத்து+அன் = முத்தன் என்றும்
மணி+அன் = மணியன் என்றும்
பொன்+அன் = பொன்னன் / பொன்+னி = பொன்னி என்றும்
அமுது+அன் = அமுதன் என்றும்
பொருட்பெயர்களாக மாற்றம் பெறுகின்றன. இவை
பகுத்தக்கனவாக இருப்பதால் பொருட்பெயர்ப் பகுபதங்களாகும்.
(2) 3.1.(2) இடப்பெயர்ப் பகுபதம்
இடத்தைப் பகுதியாகக் கொண்டவை இடப்பெயர்ப் பகுபதம்
ஆகும்.
காட்டுகள் :
கருவூர்+ஆர் = கருவூரார்;
உறையூர்+ஆன் = உறையூரான்;
நாஞ்சில்+அன்= நாஞ்சிலன்;
பட்டினம்+ஆர் = பட்டினத்தார்;
உலகு+ஓர் = உலகோர்
(2) 3.1.(3) காலப்பெயர்ப் பகுபதம்
நாள், திங்கள்,
ஆண்டு ஆகிய
காலப்பெயர்களோடு விகுதி இணைந்திருப்பின் அவை காலப்பெயர்ப் பகுபதங்கள் ஆகும்.
காலப்பெயர்ப் பதங்கள் அரிதாகவே வழக்கிலிருக்கின்றன.
காட்டுகள் :
கார்த்திகை+அன் = கார்த்திகையன் (கார்த்திகேயன்);
ஆதிரை+ஆள் = ஆதிரையாள் (திருவாதிரையில் பிறந்தவள்).
(2) 3.1.(4) சினைப்பெயர்ப் பகுபதம்
உறுப்புகளின் பெயரோடு வருபவை சினை(உறுப்பு)ப்பெயர்ப்
பகுபதங்களாகும். இவையும் அரிதானவையே.
காட்டுகள் :
கண்+அன் = கண்ணன்;
குழல்+இ = குழலி (குழல் என்பது இங்குக் கூந்தலைக் குறிக்கும்).
(2) 3.1.(5) குணப்பெயர்ப் பகுபதம்
ஒரு பண்பைப் பகுதியாகக் கொண்டு,
அத்துடன் விகுதி
இணைந்து வருவது குண(பண்பு)ப்பெயர்ப் பகுபதம் எனப்படும்.
காட்டுகள் :
முருகு+அன் = முருகன் / அழகு+அன் = அழகன்;
கருப்பு+அன் = கருப்பன்;
வெள்ளை+அன் = வெள்ளையன்
(2) 3.1.(6) தொழிற்பெயர்ப் பகுபதம்
தொழிற்பெயரோடு விகுதி சேர்ந்து வருபவை தொழிற்பெயர்ப்
பகுபதங்கள் எனப்படும்.
காட்டுகள் :
கொத்து+அன் = கொத்தன்;
தச்சு+அன் = தச்சன்;
உழவு+அன் = உழவன்.