நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், மே 05, 2016 | , ,

புத்தகைத்தைப் புரட்டிப்பார்
புலப்படும் அதில்
புதியதோர் உலகம்

எத்திவைக்கும் புத்தகச் செய்தி
எதுவாயினும் - அது
எத்தனையோ
புதுமையைச் சொல்லும்

இன்றைய கண்டுபிடிப்புக்கள்
நேற்றைய வாசிப்புக்களே
நாளைய உலகை
நகர்த்திச் செல்வதும்
நாம் படிக்கும் பக்கங்களே

வாழ்க்கையெனும் புத்தகத்தில்
வறுமையெனும் பாடமும்
உண்டு

வனப்பான வாழ்வுக்கு
பொறுப்பாய்ப் படித்த
பக்கங்களும் உண்டு

அரசியல் ஆன்மீகம்
மருத்துவம் விஞ்ஞானம்
இப்படி வாழ்வியலில்
வகைபடுத்த முடியாதவை
ஆயிரமாயிரம்

இத்தனைக்கும் மூலதனமாம்
எத்திவைப்பது புத்தகமாம்

அத்தனையிலும்
ஆதிக்கம் செலுத்தும்
புத்தகத்தால் மட்டுமே
நாளைய உலகை
நலமாக்க முடியும்

புத்தியில் மிகைத்தவர்
புத்தகம் படைத்தனர்
புத்தகம் படித்தவர்
புத்தியில் மிகைத்திடுவர்

புத்தகத்தைப் புரட்டிப்பார்
புதையலாய்க் கிட்டும்
புத்திமதி

புத்தகம் படி
புதுமையை படை
நாளை
புதியதோர் உலகை
நீ செய்வாய்

அதிரை மெய்சா

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 04, 2016 | , , ,


பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

அபுஇபுறாஹிம்

புகை(யில்லாத அதிரைப்)படங்கள் ! - MSM Clicks... 60

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மே 03, 2016 | , , ,


நம் சுற்றுவட்டாரத்தை சுற்றிப்பார்ப்போம் (புகையில்லாப்படங்களுடன்)

ஊரில் கண்ட காட்சிகளும், அத்துடன் சேர்ந்து வந்த எண்ண வெளிப்பாடும் ஒன்றிணைந்து இங்கே ஒரு சிறு ஆக்கம் உங்களின் ஏக்கம் தீர:

அஃதொரு மழைக்கால காலை நேரம் புதுமனைத்தெருவின் யாரும் நடக்காத வேளை.


தனியே தன்னந்தனியே ஒரு பாக்கு மரம் மழைத்துளியை முத்தமிட எத்தனிக்கும் நேரம்.


பசுந்தரையும், குடை பிடிக்கும் புளியமரமும், மரத்தில் விளையாடப்பட்ட சதுரங்க கருப்பு வெள்ளைக்கட்டமும் காண்போருக்கு குதூகலமளிக்கும் (அதிரை, பட்டுக்கோட்டை வழியில்.)


வீட்டுக்கு முன்னே வேப்பமரம் அது கண்ணுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி தரும்.


அமைதியாய் காட்சி தரும் செக்கடிப்பள்ளியும் அதை அரவணைக்கும் இயற்கை சூழலும்.


தூய்மையான செக்கடிப்பள்ளி கீழ்த்தளம் படுக்க பாயின்றி உறங்கினாலும் நல்ல தூக்கம் வரும்.


பள்ளிக்கு வருவோரை பரவசமூட்டி வரவேற்கும் இளம்பச்சை செடிகள்.


நண்பனின் கையில் இருக்கும் முறுக்கும், ராஜாமட சாய்ங்காலத்தென்றலும் சந்திக்கும் ஒரு அந்தி மாலைப்பொழுது.


வான் மழை வந்திறங்கினால் மண் மட்டுமல்ல நம் மனமும் புன்முறுவல் பூத்து பூரித்து போகும். (மளவேனிற்காடு)


இரு பக்கம் மரங்கள் நட்டு நடுவிலே தார் சாலை இட்டு குளிர்க்காற்றை ஓட விட்டு கொண்டாடும் இயற்கையே இறைவனின் அத்தாட்சிகள். (மளவேனிற்காடு)


சாய்ங்கால தென்றல் காற்று சாமரம் வீசிச்செல்லும் செக்கடிக்குளக்கரை


அமைதியான இயற்கைச்சூழல் அமர்ந்திருக்கும் செக்கடிக்குளமும், அதில் தப்படித்த நினைவுகளும், இக்கரையிலிருந்து அக்கரைப்போய்ச்சேர்ந்த உள்ளமும் இனி திரும்ப வாய்ப்பேதும் உண்டோ?


கம்பீர ஒற்றைக்கோபுரமும், ஒலி எழுப்பும் ஒலி பெருக்கியும் ஒரு போதும் ஓரிறையை போதிக்காமல் இருந்ததில்லை. (இடம் முஹைதீன் ஜும்மாப்பள்ளி)


வான் மழையை வாஞ்சையுடன் வரவேற்கும் செக்கடிக்குளமும், அதன் சுற்றுவட்டார சொந்தபந்தங்களும்.


வானில் ஒன்று சேரும் கார் மேகக்கூட்டமும், நேர்த்தியாய் உருவாக்கப்பட்ட தரைச்சாலையும் ஒன்றோடொன்று மொளனமாய் பேசிக்கொள்ளும் வேளை. (இடம் திருச்சி, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை)


பனைமரமும், தென்னைக்கூட்டமும், படுத்துறங்கும் பசும் நெல்கதிரும் காண்போருக்கு பரவசமூட்டும். அதில் வெள்ளைக்கொக்குகளும் வரிசையில் நின்று வரவேற்று காட்சிக்கு மெருகூட்டும்.


கரடுமுரடான காட்சிகளும் கண்கொள்ளாக்காட்சிகளாகும் கார் காலம் வந்து விட்டால் சுவிட்சர்லாந்தைக்கூட பார்வையில் பின்னுக்கு தள்ளும். (இடம் பட்டுக்கோட்டை, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை)


தண்ணீர், தண்ணீர் என பரிதவிக்கும் மனிதர்களே! சலசலப்பின்றி மொளனமாய் கடந்து சொன்று கடலில் சங்கமிக்கும் முன் இந்த ஆற்று நீரை வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டீரோ?


ஆத்தங்கரை ஓரம் ஒரு திண்ணை இருக்கும். அங்கு தான் இவ்விருவரின் சொத்து,சுகம் இருக்கும். (இடம் கலியாண ஓடை சப்தமின்றி நகர்ந்தாலும் சமீபத்தில் நமதூர் இளைஞனை பலிகொண்டு விட்டது.)


பச்சைக்கிளிகள் கூட இக்காட்சி கண்டு பொறாமை கொள்ளும் அப்படியொரு பசுமை போர்வையின்றி படுத்துறங்கும் இடம். (இடம் பட்டுக்கோடை, தஞ்சைக்கு நடுவே)


இன்னும் நன்கு வளர்ந்து மனிதர்களுக்கு பல பலன்களை அளிக்க போட்டியின்று வளர்ந்து வரும் சகோதர பனைமரங்கள்.


ரம்மியமான பசுமை கண்டு எல்லைக்கல் கூட எழில் பெரும். பசுமைக்கு பாடம் நடத்த கால் வலிக்காமல் காட்சி தரும் மின்கம்பம்.


உயர உயரவே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது; உயர உயரவே பறக்கும் பருந்தானாலும் வயிற்று பசிக்கு தரை வந்திறங்கியே தீர வேண்டும். தனியே தன்னந்தனியே தன் ரிஜ்க்கைத்தேடி ஒரு பருந்து பறந்து செல்கிறது.


காண்பதற்கு ஏதோ ஐரோப்பாவில் எடுத்த புகைப்படம் போல் காணப்பட்டாலும் காலார நடந்தே இக்காட்சிகளை நம் கண்ணுக்கு விருந்தாக்கலாம். (இடம்: ரயில்வே கேட் தாண்டி ராஜாமடம் நோக்கி செல்லும் சாலையோரம்)


முட்டுக்கால்களை முத்தமிட்டு ஓட வேண்டிய நீர் வெறும் தரையில் தவழ்ந்து பாதங்களை முத்தமிட்டு ஓடுகிறதே என பேசிக்கொள்ளும் நமதூர் சிறுவர்கள்.


பள்ளிக்கு தொழ வருவோரை வரவேற்று நிற்கும் இருபக்க மாமரங்களும், நடுவே தொழுகை முடிந்து வெளியேறும் எத்தீம்கானா மாணவர்களும். (இடம் மரைக்காப்பள்ளி)


உலக உருண்டையில் என்ன தான் உருண்டு திரிந்தாலும் இறுதியில் பாஸ்ப்போர்ட்டின்றி வந்திறங்க வேண்டிய இடம் மையவாடியல்லவா? (இடம் மரைக்காப்பள்ளி மையவாடியின் நுழைவு)


சில்லென்ற காற்றுடன் சொட்டென சொட்டும் மழைத்தூரல். அதில் தலை மூழ்கிக்கொள்ளும் தரைப்புற்கள்.  (இடம் எங்கூட்டு வாச)


கை கழுவிய மின்சாரமும், கை கொடுக்கும் அரிக்களாம்பும். ஓட்டு கேட்டு நிற்கவில்லை. ஒளி கொடுத்து ஓரமாய் நிற்கிறது. பழமைக்குத்திரும்பும் புதுமை.


அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளை அமைதிபடுத்த காட்டப்படும் கிளுகிளுப்பை போல் எல்லாக்காட்சிகளையும் கண்டு ஆனந்தமடைந்த எனக்கு இறுதியில் நாட்கள் முடிந்து ஒரு இயந்திரப்பறவையினுள் சிறைப்பிடிக்கப்பட்டேன் (சீறீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள்) வேதனையில் என் தாய் மண்ணை ஒரு சன்னலோரம் கண்டு நின்றேன். கிளுகிளுப்பைப்போல் வேடிக்கை காட்டி நின்றது மேனியில் பல வண்ணம் பூசிய அந்தவிமானம்.


அடுத்த முறை ஊர் வந்து காட்சிகள் பல காண மூலப்பொருள் மண்ணும், மண்ணுக்கு மேல் இந்த கண்ணும் இருத்தல் வேண்டும்.

இறைவன் அதற்கு நமக்கெல்லாம் வாய்ப்பளிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.....

பயணங்கள் முடியவில்லை.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

உயிர்க் கொத்திப் பறவை 12

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், மே 02, 2016 | , ,


உயிர்க் கொத்திப் பறவை
ஊர் சுற்றிப் பறந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஆயுள் முடிக்கின்ற
இதே ஊரில்தான்
என் வீடும் இருக்கிறது

எந்தத் தெரு
என்ன வரிசை
யார் வீடு முதலில்
யாதொரு முன் குறிப்புமின்றி
திடீர் திடீரென
உயிர்க் கொத்துகிறது

உழைக்கப் பெயர்ந்த
ஊரிலிருந்து
ஓய்வூதிய நாட்களை
உறவுகளோடு களிக்க
வந்திறங்கிய பின்

இழவுத் துயர் பகிர
அவ்வீடுகளின்
உள்ளே நுழைந்ததும்
ஞாபக மின்னல் வெட்ட
இடியென ஓலமிட்டு
கண்ணீர் மழை பொழியும்
சொந்தங்கள்

யாவற்றிலும் மிகைத்த
சூத்திரதாரியின்
கணிக்கவியலாத கணக்கீடுகள்
யாவும்
விதிக்கப்பட்டவையே

எவ்விதத்திலும் சாத்தியப்படாததாக
நாம் கருதும்
எல்லா சமண்பாடுகளும்
எல்லைகளற்ற
அந்தத் தொலைவில்
சமண்பட்டே முடிகின்றன

உயிர்க் கொத்தும் பறவைக்கு
கூடவே
நினைவுகளையும் பெயர்த்தெடுத்துச் செல்லும்
திராணியில்லாதது வருந்தத் தக்கதே.

கிடத்தி வைக்கப்பட்டிருந்த நடுக்கூடம்
படுக்கவைத்துக் குளிப்பாட்டிய கட்டில்
இவற்றோடு
சற்றே சிதைந்த பல் துலக்கும் குச்சி
பாதிக்குமேல் பிதுக்கப்படாத பற்பசை
நீண்ட நாட்களாகவே
உபயோகிக்கப்படாமல்
சன்னலுக்கடியில் கிடக்கும் செருப்பு
என
ஞாபகங்கள் வதைப்பது கொடுமை

உயிர் வற்றிப் போன
உடல் கொத்தி இடும்
மண்ணறைவாசிகளின்
குடியிருப்புப் பகுதியில்
காலி மனைகள்
காத்திருக்கின்றன

உயிர்க் கொத்திப் பறவையும்
ஊரைச் சுற்றிப்
பறந்து கொண்டேதான் இருக்கிறது

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இயற்கை இன்பம் – 5 13

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 01, 2016 | , , , ,

சோலை


பெருங்கடலுட்  பேரலையின் உப்புக்  காற்றைப்

                  பிறர்க்குதவும்  விதமாகச்  சுழற்சி  யாக்கி

அருங்காற்றுப்  பிள்ளைகளாய்  ஈன்றெ  டுத்தே

                  ஆவலுடன்   கொஞ்சிமிக  மகிழ்ந்து  நிற்க

விரும்புவிதம்  அணியணியாய்த்  தழுவிக்  கொண்டு

                  வீசுகின்ற  குளிர்காற்றாம்  மங்கை  நல்லாள்

கரும்பினிலும்  தேனுள்ளும்  மறைந்த  இன்பம்

                  கனிவுடனே  தருவதுவே  சோலை  யாகும்.

அதிரை அஹ்மத்

மையல் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ஏப்ரல் 30, 2016 | , , ,


இழுத்து கொண்டும்
இழைத்து கொண்டும் செல்கிறது கவிதை

தொட்டதெல்லாம்
தொடுத்து கொள்கின்றன எண்ணங்கள் வண்ணங்களாக

விடு பட்ட
எழுத்துகள் வினா எழுப்புகின்றன
எனை கொண்டு எப்பொழுது வடிப்பாய் என

இரகசியங்கள்
மெளனித்து கொள்கின்றன
வார்த்தைகளின் பிடியில் சிக்கிடாமல்

அலுப்பதேயில்லை
எழுத்துகளின் ச"மையல்"

நட்புடன் ஜமால்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 034 16

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஏப்ரல் 29, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . . 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

கொடையளித்தல், அல்லாஹ்வை பயந்து நல்ல வழிகளில் செலவு செய்தல்:

நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். (அல்குர்ஆன்: 34:39)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:272)

நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:273)

'மூன்று செய்திகளை உங்களிடம் நான் சத்தியமிட்டுக் கூறுகிறேன். அதை நீங்கள் பேணிக் கொள்ளுங்கள். 1) தர்மம் செய்வது, ஒரு மனிதனின் சொத்தை குறைத்து விடாது. 2) அநீதம் செய்யப்பட்ட ஒருவன் அது விஷயமாக அவன் பொறுமையாக இருந்தால், அவனுக்கு அல்லாஹ் கண்ணியத்தை அதிகப்படுத்தாமல் இருப்பதில்லை. 3) யாசகத்தின் வாசலை ஒருவன் திறந்து கொண்டால், ஏழ்மையின் வாசலை அல்லாஹ் திறக்காமல் இருப்பதில்லை.

இன்னும் உங்களுக்குச் சில செய்திகளைக் கூறுகிறேன். அதை நீங்கள் பேணிக் கொள்ளுங்கள். நிச்சயமாக உலகம், நான்கு பேர்களுக்கு மட்டும்தான்.

1) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தையும், அறிவையும் வழங்குகிறான். அவன் இது விஷயமாக தன் இறைவனைப் பயப்படுகிறான். தன்னுடன் அவனின் உறவினர்களை சேர்க்கிறான். மேலும் அல்லாஹ்விற்குரிய கடமைகளை அறிகிறான். இவன், உயர்ந்த பதவிகளில் உள்ளான்.

2) ஒருவனுக்கு அல்லாஹ் அறிவை வழங்கி உள்ளான். சொத்தை அவனுக்கு வழங்கிவிடவில்லை. அவன் உண்மையான எண்ணமுடையவன், 'எனக்கு சொத்து இருந்தால், நானும் இவனைப் போன்று செயல்படுவேன்' என்று கூறுகிறான். இதுவே இவனது எண்ணமுமாக உள்ளது. எனவே இருவரின் கூலியும் சமமாகும்.

3) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தை வழங்கி உள்ளான். ஆனால் அறிவை அவனுக்கு வழங்கிடவில்லை. அறிவின்றி அவனது சொத்தில் அவன் மூழ்கிக் கிடந்தான். அவன் தன் இறைவனை பயப்படவில்லை. தன் உறவினரையும் அவன் சேர்க்கவில்லை. அல்லாஹ்விற்குரிய கடமைகளையும் அவன் அறிந்திடவில்லை. இவன் மிக கீழான தகுதியில் உள்ளான்.

4) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தையும், அறிவையும் வழங்கவில்லை. 'எனக்கு சொத்து இருந்தால், இவனைப் போன்று (தீய) செயல்களை நானும் செய்வேன்' என்று கூறுகிறான். அவன் தன் எண்ணப்படி உள்ளான். இவ்விருவரின் தண்டனையும் சமமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூகபஷா என்ற உமர் இப்னு ஸஹ்துல் அன்மாரீ (ரலி) அவர்கள் (திர்மிதீ).     (ரியாளுஸ்ஸாலிஹீன்: 557)

'உன் (பணப்பையை) முடிச்சுப் போட வேண்டாம். அவ்வாறு (செய்தால்) உனக்கு எதிராக (அல்லாஹ்வினால்) முடிச்சுப் போடப்படும்'' என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில், ''நீ செலவு செய்! நீ எண்ணி (செலவு) செய்யாதே! அல்லாஹ் உனக்கு எதிராக எண்ணிக் கொடுத்து விடுவான். நீ (செலவு செய்யாமல்) தடுத்துக் கொள்ள வேண்டாம். அல்லாஹ் உனக்கு எதிராக தடுத்து விடுவான் என்று உள்ளது.'' (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 559)

'கஞ்சனுக்கும், செலவு செய்பவனுக்கும் உதாரணம், உருக்குச் சட்டையை தங்களின் நெஞ்சிலிருந்து, தொண்டைக்குழி வரை அணிந்துள்ள இருவரின் உதாரணம் போலாகும். செலவு செய்பவன், செலவு செய்யும் போது அந்த உருக்குச் சட்டை அவனது (கால்) விரல்களை மறைத்து, அவனது பாதத்தின் அடிச்சுவட்டையும் மறைத்து தோல் முடியையும் மூடி விடுகிறது. கஞ்சன், எதை செலவு செய்தாலும் அவனது உருக்குச் சட்டையின் ஒவ்வொரு வளையமும் அந்தந்த இடத்தை ஒட்டிக்கொள்கிறது. அவனோ அதை விரிவாக்க விரும்புகிறான். அதுவோ விரிவாவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 560)

'தூய்மையான (பொருளின் தர்மத்)தைத் தவிர அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதால் தூய்மையான உழைப்பின் மூலம் உள்ள ஒரு பேரீத்தம்  பழத்தின் பணத்தை ஒருவன் தர்மம் செய்தால், நிச்சயமாக  அல்லாஹ் அதை தன் வலது கையால் ஏற்றுக் கொள்கிறான். பின்பு உங்களில் ஒருவர் தன் குதிரைக் குட்டியை உயரமாக ஆகும் அளவுக்கு வளர்ப்பது போல், தர்மம் செய்தவருக்காக அந்த தர்மத்தை (மலை போல் நன்மையை) வளர்க்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 561)

வனாந்திர பூமியில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, மேகத்தில் ''இன்னாரின் தோட்டத்திற்கு நீர் வழங்கு'' என்ற சப்தத்தைக் கேட்டார். உடனே அந்த  மேகம் நகர்ந்து சென்று, தன் தண்ணீரை கறுப்புக் கற்கள் நிறைந்த பூமியில் கொட்டியது. அதன் ஓடைகளில் ஓர் ஓடை, அந்த தண்ணீர் முழுவதையும் கொண்டு சென்றது. உடனே அந்த மனிதர் தண்ணீரைத் தொடர்ந்து ஓடினார். அப்போது தண்ணீர் சென்றடையும் தோட்டத்தில் ஒருவர் நின்று  கொண்டிருந்தார். தன் மண் வெட்டியால் தண்ணீரைத் திருப்பிக் கொண்டிருந்தார். இவர் அவரிடம், ''அல்லாஹ்வின் அடியாரே! உன் பெயர் என்ன? என்று கேட்டார். 'இன்னார்' என அவர் கூறினார். அந்த பெயர், மேகத்தில் கேட்ட பெயர் போலவே இருந்தது. ''அல்லாஹ்வின் அடியாரே! என் பெயர் பற்றி ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டார். இந்த தண்ணீரைத் தந்த மேகத்தில் ''இன்னாரின் தோட்டத்திற்கு தண்ணீர் வழங்கு!' என ஒரு சப்தத்தைக் கேட்டேன். அது உங்கள் பெயராக இருந்தது. நீர் என்ன (நற்செயல்) செய்கிறீர்?'' என்று கேட்டார். ''நீ கேட்டு விட்டதால் அதை நான் வெளியே கூறும் நிலையில் உள்ளேன். (கிடைக்கும் விளைச்சலை மூன்று பங்காக்கி) அதில் ஒன்றை தர்மம் வழங்குவேன். மற்றொன்றை நானும், என் குடும்பத்தாரும் சாப்பிடுவோம். மற்றொன்றை இதிலேயே (மறு விளைச்சலுக்குப்) போடுவேன் என்று கூறினார். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 562)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

சார்ந்திருப்பவர்கள்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், ஏப்ரல் 28, 2016 | , ,

முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்க நாடான ஹபஷா(எதியோப்பியா)வை ஆண்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னரின்மீது அதே நாட்டைச் சேர்ந்த ஒரு சாரார் போர் தொடுத்தனர். அந்த நாட்டில் முஸ்லிம்களும் வசித்து வந்தனர். சிறுபான்மையினர். அதுவும் அந்நிய நாட்டிலிருந்து அங்கு வந்து குடியேறி தஞ்சமடைந்து இருந்தவர்கள். அவர்களுக்கு இந்தப் போர் அளவற்றக் கவலையை அளித்துவிட்டது.

ஏனெனில் அந்தக் கிறிஸ்தவ மன்னர் தம் நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்த முஸ்லிம்களுக்கு உரிய வசதிகள் அளித்து வெகு பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிரான இந்தப் போரில் அவர் தோற்றுவிட்டால் வெல்பவன் தங்களை என்ன செய்வானோ, ஏது செய்வானோ என்ற அவர்களுக்கு இயல்பான கவலையும் அச்சமும் ஏற்பட்டுப் போனது.

போர் தொடங்கியது. நதிக்கு மறுபுறம் களத்தில் சண்டை நடக்க, இங்கு நகரில் பதட்டத்துடனும் கவலையுடனும் அமர்ந்திருந்தார்கள் முஸ்லிம்கள். யாராவது களத்திற்குச் சென்று என்ன நடக்கிறது என்று தெரிந்து வந்து சொன்னால் நன்றாயிருக்கும் என்று அவர்களுக்குத் தோன்றியது.

‘நதியைக் கடந்து சென்று அங்கு நடப்பவற்றை அறிந்து வந்து சொல்ல யாராவது தயாரா?’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

“நான் செல்கிறேன்” என்று ஒருவர் தம் கையை உயர்த்தினார்.

“நீயா?” என்று ஏக ஆச்சரியத்துடன் கேள்வி எழுந்தது. ஏனெனில் கையை உயர்த்தியவர் இளவயதுச் சிறுவர். தொலைவில் உள்ள போர்க் களத்திற்குச் செல்ல வேண்டும்; அதுவும் நதியை நீந்திக் கடக்க வேண்டும். ‘இந்தச் சிறுவர் எப்படி?’ என்று அவர்கள் அஞ்ச,அவரோ உறுதியுடன் தலையசைத்தார்,

தோல்துருத்தியில் காற்றடைத்து, அவரது நெஞ்சுடன் அதைக் கட்டி நதியோடு போய் வா என்று இறக்கி விட்டார்கள். நீந்தி, போர் நடைபெறும் பகுதியை அடைந்தார் அந்த இளைஞர். இங்கு இருந்த முஸ்லிம்களோ அந்த மன்னருக்கு வெற்றி வாய்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர். போரில் அந்த மன்னர் வெற்றி அடைந்தார். இளைஞர் மீண்டும் நீந்தி இப்பால் வந்து, தம் ஆடையின் ஒரு பகுதியைக் கழட்டி உயர்த்திக் கொடிபோல் வீசிக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவந்தார்.

“மக்களே மகிழுங்கள்! நம் மன்னருக்கு வெற்றி. அந்த எதிரிகளை அல்லாஹ் ஒழித்தான்.”

அதைக் கேட்டு அந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும் உற்சாகமடைந்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா விவரித்துள்ள இந்த நிகழ்வு வரலாற்றில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் அபிஸீனியாவுக்கு முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தபோது அங்கிருந்த நஜ்ஜாஷி மன்னர் ஈடுபட்ட போரும் அதில் அவர் அடைந்த வெற்றியும்தாம் மேற்சொன்ன நிகழ்வு. துறுதுறுவென்று தோல்துருத்தியைக் கட்டிக் கொண்டு நீந்திச் சென்றவர் புகழ் பெற்ற தோழர் ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி).

முஸ்லிம்களுக்கு அப்படி என்ன அந்த நஜ்ஜாஷி மன்னரின்மீது பிரியம்? அவர் வெல்ல வேண்டும் என்று முஸ்லிம்கள் இறைவனிடம் இறைஞ்சும் அளவிற்கு நேசமாக இருந்திருக்கிறார்களே, அப்படியானால் அவர்கள் அந்த மன்னர் மீது எந்த அளவிற்கு அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிய வேண்டியது முக்கியம். சமகாலத்தில் வெகு முக்கியம்.

மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பக் காலங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சொற்பம். அவர்களை மக்க நகரத்துக் குரைஷிகள் புரட்டியெடுத்தனர். அடி பின்னி எடுத்தார்கள். பாலை மணலில் வெற்றுடம்புடன் படுக்க வைத்து வறுத்து எடுத்தார்கள்.வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அவர்களது கொடுமையும் தீங்கும் உச்சத்தை எட்டிய தருணத்தில் முஸ்லிம்கள் புலம்பெயர அனுமதி அளித்தார்கள் முஹம்மது நபி (ஸல்). நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் 12 ஆண்களும் 4 பெண்களும் அடங்கிய முதல் குழுவினரும் அடுத்து 83 ஆண்களும் 18 பெண்களும் கொண்ட இரண்டாவது குழுவினரும் இரகசியமாக மக்காவிலிருந்து அபிஸீனியா நாட்டிற்கு வந்து இறங்கினார்கள்.

அபிஸீனிய நாட்டை நஜ்ஜாஷி என்ற மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். நேர்மையான அரசர். மீண்டும் ஒருமுறை அழுத்தி வாசிக்கவும். முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவர் நேர்மையான அரசர். “வாங்க” என்று வந்தவர்களை வரவேற்று, தங்க இடம்,உண்ண உணவு அனைத்திற்கும் மேலாகப் பாதுகாப்பு அளித்தார் அந்த மன்னர். பாதுகாப்பு என்றால் ஒப்புக்கான பாதுகாப்பன்று. மெய்யான பாதுகாப்பு.

எப்படி?

தங்களிடமிருந்து தப்பித்த முஸ்லிம்கள் அபிஸீனியாவில் பத்திரமாக வாழ்கிறார்கள் என்று தெரிய வந்ததும் மக்காவில் உள்ள குரைஷிகளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. தப்பித்துப் போனார்கள், விட்டுத் தொலைவோம் என்று இல்லாமல் அம்ரிப்னுல்-ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ என்ற இருநபர் குழுவை, ‘ஒன்று அந்த அயல்நாட்டு மண்ணிலேயே அந்த முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட வேண்டும்; அல்லது அங்கிருந்து மக்காவி்ற்கு அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்கு அபிஸீனியா மன்னர் நஜ்ஜாஷியைச் சந்தித்துக் கச்சிதமாய் பேசி இந்தக் காரியத்தை நிறைவேற்றுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

வந்தவர்கள் ராஜ பிரதானிகளுக்கும் மன்னருக்கும் அன்பளிப்புகளை அள்ளி இறைத்து, “ஓ மன்னா! எங்கள் குலத்தைச் சேர்ந்த கீழ்குல மக்களின் கூட்டத்தினர் தங்களது இராச்சியத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். நாங்களோ அல்லது நீங்களோ அறியாத புதிய மதமொன்றை அவர்கள் புகுத்த ஆரம்பித்துள்ளார்கள். எங்கள் மதத்தை விட்டு நீங்கிவிட்ட அவர்கள், உங்கள் மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் அப்பன், சிற்றப்பன், பெரியப்பன், மாமன், எங்கள் குலத்தின் உயர்குடித் தலைவர்கள் ஆகியோர் எங்களை இங்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களை மீட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த இளையவர்கள் அங்கு நிகழ்த்தியுள்ள குழப்பத்தையும் சச்சரவையும் அவர்களே நன்கு அறிந்தவர்கள்” என்றுவேண்டுகோள் வைத்தார்கள்.

“இவர்கள் உண்மையைத்தான் உரைக்கிறார்கள் மன்னா. அந்த மக்களது சொந்த மக்களே அவர்களது செயல்பாட்டைச் சிறப்பாய் உணர்ந்து தீர்ப்பு சொல்லக் கூடியவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். மக்காவின் தலைவர்களே இவர்களை என்னசெய்வது என்று தீர்மானித்துக்கொள்ளட்டும்” என்று ஆமோதித்தார்கள் அன்பளிப்புகளில் மயங்கிய ராஜபிரதானிகள்.

முகம் சிவந்தார் நஜ்ஜாஷி! எந்தப் பரிந்துரையை சாதமாக்கிக் கொள்ளலாம் என்று குரைஷிக் குழு நினைத்ததோ அதுவே அவர்களுக்கு நேர்விரோதமாய் வேலை செய்தது.

“இறைவன் மீதாணை! – முடியாது! அவர்கள்மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டை அவர்களை அழைத்து விசாரிக்காதவரை அவர்களை யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன். இவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவர்களிடம் அந்த முஸ்லிம்களை ஒப்படைப்பேன். ஆனால் விஷயம் அவ்வாறு இல்லையெனில் நான் அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பேன். சிறந்த அண்டை நாட்டினனாய் இருப்பேன். அவர்கள் விரும்பும் காலமெல்லாம் என்னுடைய நாட்டில் வாழலாம்”

சொன்னது போலவே முஸ்லிம்களை தமது அவைக்கு அழைத்துவரச் சொன்னார் நஜ்ஜாஷி. “அழைத்து வாருங்கள் அவர்களை”

நடந்தவை அனைத்தையும் அறிந்த முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சஞ்சலம் ஏற்பட்டுப்போனது. ‘உங்களுடைய சங்காத்தமே வேண்டாம் என்றுதானேய்யா இங்கு வந்துவிட்டோம். அப்பவும் விடமாட்டீர்களா?’ மல்லுக்கட்ட பின்தொடர்ந்து வந்துவிட்ட குரைஷிக்குழுவின் திட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று கூடிப்பேசினார்கள்.

“அரசர் நம்மிடம் நம் மார்க்கத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார். நமது இறைநம்பிக்கையைப் பற்றித் தெளிவாய் அவரிடம் சொல்லிவிடுவோம். நம் சார்பாய் ஒருவர் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் அமைதியாய் இருப்போம்” என்று அவர்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹுவைத் தேர்ந்தெடுத்தார்கள். சிந்தித்துப் பார்த்தால் உண்மையிலேயே அது பிரமிக்கவைக்கும் கட்டுப்பாடு; செயல்பாடு. மிக மிக நெருக்கடியான அந்தச் சூழ்நிலையில் நிதானமாய் ஆலோசனை புரிந்து தெளிவான ஒரு வழிமுறை,அதுவும் சிறந்ததொரு வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்களது ஈமானின் வலுவையும் நபியவர்களிடம் அவர்கள் அதுவரை கற்றிருந்த வழிமுறையின் சிறப்பையும் நமக்கு எடுத்துச்சொல்லும்.

அனைத்து முஸ்லிம்களும் நஜ்ஜாஷியின் அவையை அடைந்தனர். நஜ்ஜாஷியின் இருபுறமும் பாதிரியார்கள். அனைவரும் வீற்றிருந்தார்கள். எதிரே அவர்களது நூல்கள். அம்ரிப்னுல்-ஆஸும், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவும் அவையில் ஆஜராகியிருந்தனர்.

முஸ்லிம்கள் வந்ததும் அவர்களை நோக்கித் திரும்பிய நஜ்ஜாஷி, “நீங்கள் கண்டுபிடித்திருக்கும் உங்களது புதிய மதத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். இந்தப் புது மதத்தின் நிமித்தமாய் நீங்கள் உங்கள் மக்களின் மதத்திலிருந்து நீங்கி விட்டிருக்கின்றீர்கள்.நீங்கள் எங்கள் மதத்திலும் இணையவில்லை; நாம் அறிந்த வேறு மதத்திலும் இணைந்ததாக நாம் அறியவில்லை” என்றார்.

தங்களுக்கு ஆதரவு அளிக்கும் வேற்றுமத அரசன்முன் மிகவும் பலவீனமான நிலையில் சிறுபான்மை முஸ்லிம்கள். அவர்களைக் கொத்தி தூக்கிப் பறக்க கழுகு போல் தயாராகக் காத்து நிற்கும் எதிரிகள். எத்தகைய அபாயமான இக்கட்டான சூழ்நிலை அது? வாழ்வா சாவா என்ற நிலை அல்லவா அது? எனினும், அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்திருந்தவர்கள்.

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் பேச ஆரம்பித்தார். புகழாரமில்லை. முகஸ்துதி இல்லை. எங்கே மன்னர் தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வாரோ என்ற அச்சம் சிறிதும் இல்லை.

“மன்னரே! நாங்கள் அறியாமையில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளை உண்டோம்; மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டோம்; உறவுகளைத் துண்டித்துக்கொண்டு அண்டை வீட்டாருக்குக் கெடுதிகள் விளைவித்து வாழ்ந்து வந்தோம்; எங்களில் எளியோரை வலியோர் அழித்து வந்தோம். இவ்விதமாய் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் எங்களில் ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் அவர் வமிசத்தையும் நாங்கள் நன்கு அறிவோம்”;

“நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையையே உரைக்க வேண்டும்; அடைக்கலப் பொறுப்பான அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்”;

“மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்கள்மீது அவதூறு கூறுவது போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது; தொழ வேண்டும்; செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வளவரி செலுத்த வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்”;

“நாங்கள் அவரை உண்மையாளர் என்று நம்பினோம்; அவரிடம் விசுவாசம் கொண்டோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு அனுமதித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறி நடந்துகொள்ள ஆரம்பித்தனர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும்; முன்போலவே தீயவற்றைச் செய்ய வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்தி எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயன்றனர். எங்களை அடக்கி, அநியாயம் புரிந்து, நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மதச் சுதந்திரத்துக்கும் அவர்கள் தடை ஏற்படுத்திய போதுதான் உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்”.

தெளிவான, சீரான, நேர்மையான பேச்சு அது. இஸ்லாமிய வரலாற்றின் சிறப்பானதொரு பிரசங்கம்.

ஜஅஃபரின் பேச்சை உற்றுக்கேட்ட நஜ்ஜாஷி, “இறைவனைப் பற்றி உங்களுக்கு உங்கள் நபி அளித்தது ஏதாவது தெரிவிக்க முடியுமா?”

‘தெரியும்’ என்ற ஜஅஃபர் ஓத ஆரம்பித்தார். குர்ஆனின் 19ஆவது அத்தியாயம் சூரா மர்யமின் வசனங்களை – “காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய பேரருளைப் பற்றியதாகும்” ஆரம்பத்திலிருந்து துவக்கி,

"நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கேட்டனர். "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். "இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னைப் பெரும்பேறு பெற்றவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு அறிவுறுத்தி (கட்டளையிட்டு) இருக்கின்றான். "என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது”

என்று 33ஆவது வசனத்தை ஜஅஃபர் ஓதி முடிக்கும்போது நஜ்ஜாஷியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் அவரது தாடி நனைந்து கொண்டிருந்தது! அருகிலிருந்த பாதிரிகள் கண்களில் கண்ணீர். அவர்களது வேதநூல்கள் நனைந்து கொண்டிருந்தன. ஏக இறைவன் அருளிய குர்ஆன் வசனங்களின் அழுத்தமும் தெளிவும் வசீகரமும் அவர்களை ஏகத்துக்கும் கலக்கியிருந்தன.

தங்களது கொள்கையில் எவ்வித சமரசமும் இன்றி, உள்ளது உள்ளபடி உண்மையை உரத்து உரைத்த ஜஅஃபரின் பேச்சில் இன்றைய முஸ்லிம் தலைவர்களுக்கும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பாடம் ஒளிந்துள்ளது. ஏனெனில்அவர்களது சூழ்நிலைதான் அவர்களை பலவீனர்களாக்கி இருந்ததே தவிர, உள்ளத்தில் குடிகொண்டிருந்த ஈமானில் அவ்வளவு அசாத்திய பலம்! ஏக இறைவன்மீது அசைக்க இயலாத நம்பிக்கை!

“எங்களுக்கு ஈஸா கொண்டுவந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே உங்கள் நபியும் உங்களுக்கு ஒளி கொண்டுவந்துள்ளார்” என்று கூறிய நஜ்ஜாஷி மக்கத்துக் குழுவினரிடம் திரும்பி, “நீங்கள் வந்த வழியே உங்கள் ஊருக்குப் போகலாம். நான் இவர்களை ஒப்படைப்பதாக இல்லை”

தூது வந்த குழு ஏமாற்றத்துடன் திரும்ப, சிறுபான்மை முஸ்லிம்களுக்குத் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் அந்த மன்னர் நஜ்ஜாஷி. சிறந்த அண்டை நாட்டில் சிறந்த தோழமையில் தங்கியிருக்க ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள்.பத்து ஆண்டுகள் நஜ்ஜாஷியின் அபிஸீனிய நாட்டில் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கு.

அவ்விதம் பாதுகாப்பு அளித்த  நீதியரசருக்குத்தான் அவர் போரில் வெற்றியடைய பிரார்த்தனை புரிந்தார்கள் அந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள்.

மாறாக, இன்று நம் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்களின் நிலை என்ன?

அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் பிற மதப் பிரபலங்களே C வடிவில் வளைந்து கும்பிடு போடும்போது, அவர்களையும் விஞ்சி, தன்மானத்தை அடகு வைத்துவிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர், கேவலம் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்காக தலைகீழ் L வடிவில் கும்பிடு போட்டுக் கொண்டு ருகூவில் நிற்கும் கேவலம் அரங்கேறி வருகிறது.  பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டவில்லை?

இவர்களெல்லாம் தம்மை முஹம்மது நபியின் உம்மத்துகள்; காயிதே மில்லத்தின் அரசியல் வாரிசுகள்; சமுதாயத்தின் காவலர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது அசிங்கத்தின் உச்சமில்லையா?

"இன இழிவு நீங்கிட இஸ்லாமே நன்மருந்து" என்று பெரியார் கூறினார். ஆனால், நம்முடைய இனமே இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தருவதற்கு முனைப்புக் காட்டி நிற்பகும் காலத்தின் கோலத்தை என்னென்பது?

நம்முடைய ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதே இன்றைய நிலையில் நமது தலையாய தேவையாக இருக்கின்றது.

இறைவா!

உன் பார்வையில் நரகின் எரிகொள்ளிகளான மனிதர்களைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகின்ற, அவர்களின் அநியாயங்களுக்குத் துணை போகின்ற, வக்காலத்து வாங்குகின்ற, சப்பைக்கட்டு கட்டுகின்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளின் வரம்பு மீறிய செயல்களுக்காக அவர்களோடு சேர்த்து எங்களையும் தண்டித்துவிடாதே!
நாங்கள் உன்னையே சார்ந்திருப்பவர்கள்!


நூருத்தீன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+