Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அதிரை அஹ்மது. Show all posts
Showing posts with label அதிரை அஹ்மது. Show all posts

தோல்வியின் காரணம் என்ன? 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 18, 2016 | ,

:::: தொடர்-30 ::::
கடந்த காலப் பொது வரலாற்றில் நாம் காணும் சில மதங்களும் இயக்கங்களும் வெற்றியைத் தழுவாமல், தோல்வியடையக் காரணமென்ன என்பதைச் சிறிது காண்போம். 

கத்தோலிக்க தேவாலயம்:  ஒரு காலத்தில், ஐரோப்பாவையும், ‘புத்துலகு’ என்று புகழப்பட்ட அமெரிக்காவையும் ஆட்கொண்டிருந்தது, கத்தோலிக்கத் திருச்சபை.  இதன் தலைமைப் பீடத்தில் இருந்த போப்பாண்டவர்தான் சலுகைகள் வழங்கினார்; அவர்தான் ஆட்சித் தலைவர்களையும் அரசர்களையும் நியமனம் செய்தார்; தம் மார்க்க வரம்புகளை மீறியவர்களுக்குத் தண்டனை கொடுத்தார்;  கிறிஸ்தவத்தைப் பரப்புதல் என்ற பெயரில் தென்னமெரிக்காவின் நாகரிகச் சின்னங்களை அழித்தொழித்தார்;  ஆஃப்ரிக்காவிலிருந்து கறுப்பினத்தவர்களைக் கடத்தும் அடிமை வர்த்தகத்தை ஆதரித்தார்;  முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப் போர்களுக்கு ஒப்புதல் கொடுத்தார்;  மக்கள் தமது வாழ்க்கையை எப்படி வகுக்கவேண்டும் என்ற கொள்கைகளை வகுத்தளித்தார்; பொது மக்கள் தமது வருமானத்தின் பத்து சதவீதத்தைத் திருச்சபைக்கும் போப்புக்கும் கொடுக்கச் செய்தார்.  இதன் மூலம் போப்புகள் பணக்காரர்களானார்கள்.

பிறகு ஒரு காலம் வந்தது.  பல சிந்தனை மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உருவாகி, எதிர்வாதங்களும் புதிய சிந்தனைகளும் சமுதாயத்தில் தலைகீழ் விளைவுகளும் ஏற்பட்டன.  ஜெர்மனியில் மார்ட்டின் லூதரும் கார்ல் மார்க்ஸும் தோன்றி, எதிரும் புதிருமான கொள்கைகளைப் பரப்பினார்கள்.  இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்டு, புரோட்டஸ்டாண்டு என்ற எதிர்ப்புக் கிரிஸ்தவ அமைப்பு, ‘ஆங்லிக்கன் சர்ச்’ எனும் புதிய அமைப்பாக உருவெடுத்தது.  இடையே அறிவியலும் தர்க்க வாதமும் ஏற்பட்டு, கத்தோலிக்கக் கிறிஸ்தவ அமைப்பை பலவீனப் படுத்தின. இல்லை, ஒழியச் செய்தன!

கிறிஸ்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவானது, ஒரு காலத்தில் பணத்தில் கொழித்துக் கொண்டிருந்தது.  புரட்சி இயக்கங்களும் புதிய சிந்தனைகளும் தோன்றிய பின்னர், எது தலைமை?  யார் தலைவர்?  என்று அறிய முடியாமல், பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் ஒரு தலைமையற்ற கிறிஸ்தவம், கொள்கை இல்லாத மதமாக மாறியது!  வணக்கத்தை விடுத்து வருமானத்தையே குறிக்கோளாகக் கொண்டதால், பொது மக்கள் தேவாலயங்கள் மேல் நம்பிக்கை இழந்தார்கள்.  விளைவு?  பிறப்பால் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொண்டு, அந்த மதத்தின் வழிபாடுகளில் பற்றுதல் இன்றி இருக்கின்றனர்.  மற்றும் பலரோ, மத மாற்றத்தில் – குறிப்பாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்வதில் முனைப்புக் காட்டிவருகின்றனர்.

மக்கள் வரியாகவும் நன்கொடையாகவும் கொடுத்துவந்த பண வரவு குறைந்து, வருமானம் இல்லாத நிலையில், மேலை நாடுகளில் பல தேவாலயங்கள் மூடப்பட்டும், பிற மதங்களின் வழிபாட்டுக்காக வாடகைக்கு விடப்பட்டும் அல்லது விற்கப்பட்டும் இருப்பது, நாம் அன்றாடம் வாசிக்கும் செய்தியாக இருக்கின்றது.  இன்று கத்தோலிக்கப் போதனைகள் வாட்டிகனின் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன.  கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் வானலாவக் கட்டிய மாதாகோவில்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இன்று இஸ்லாத்தை நோக்கித் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகள், போர்க்குரல்கள்  எல்லாம், கிறிஸ்தவர்களின் வழிபாடுகளில் தேக்க நிலை ஏற்பட்டு, சர்ச்சுகளுக்கு வணங்க வருவோர் குறைந்துபோய்விட்டனரே என்ற தாழ்வு மனப்பான்மையின் விளைவேயாகும்.  

இதையடுத்து, முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு, இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கும் கொள்கைகளைக் கொண்ட ஷியாப் பிரிவுகளுள் ஒன்றான ‘ஆகாகான் இஸ்மாயிலி தாவூதி போரா’க்களிடமிருந்து வருகின்ற எதிர்ப்பு!  இவர்களும் ‘சையிதுனா ஆகாகான்’ என்ற தனித் தலைமைக்குக் கட்டுப்பட்டு, இஸ்லாம் அனுமதிக்காத வழிபாடுகளிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு, இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கின்றனர்!    

இந்தப் பிரிவினர், உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும், தமது வருமானத்தின் 12.5% பகுதியைத் தலைவர் ஆகா கானுக்குக்கொடுத்துவிட வேண்டும் என்ற விதி.  எவ்வித மார்க்க ஆதாரமும் இல்லாத இந்தப் பணம் தனி ஒரு தலைவருக்குப் போய்ச் சேருகின்றது என்றால், அந்தத் தலைவர் எப்படிப்பட்டவராயிருப்பார்?  இது போன்ற வருமானத்தால்தான், ஆகா கான் உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்!  இவ்வாறு வரும் கணக்கற்ற வருமானத்திலிருந்து சிறு பகுதிகளை அறப்பணிகள் சிலவற்றில் ஈடுபடுத்துகின்றனர். அவ்வப்போது இந்தத் தலைவர், தன் மீது எந்த அரசாங்கமும் கை வைத்துவிடக் கூடாது என்பதற்காக, பண முடக்கம் செய்து, பத்திரிகைகளில் படம் போட்டு இடம் பிடித்துக்கொள்கின்றார்.  

இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் மதத்தின் பேரால் மனிதர்களைச் சுரண்டுபவர்கள். மனிதத் தலைவர்கள் மட்டுமே;  புனிதத் தலைவர்கள் அல்லர்.  இவர்களின் மறைவுக்குப் பின்னர், இவர்கள் வகுத்த சட்டங்கள் பஞ்சாய்ப் பறந்து போய்விடும். இறைப் பொருத்தம் இல்லாததே அவற்றின் வீழ்ச்சிக்குக் காரணம். 

இனி இஸ்லாத்தின் முன்மாதிரியில் உலகளாவிய இயக்கம் பற்றிய ஒப்பீட்டைப் பார்ப்போம்.  உலகச் சமுதாயத்தின் முன்னால் இஸ்லாம் நீதி, சமூகப் பொறுப்பு, எல்லா விதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும் போராட்டம்  ஆகியவை அடங்கிய திட்டத்தைத் திறந்த புத்தகமாக விரித்து வைத்துள்ளது பற்றிப் பார்ப்போம்.   

நீதி, சமூகப் பொறுப்பு, எல்லா அடக்குமுறைகளில் இருந்தும் விடுதலை பெறுதல்  ஆகியவை அடங்கிய தத்துவக் கோட்பாட்டை இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கியது.  மதக் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்ட கட்டளைகள் அனைத்தும் மக்களால் செயலுருப் பெற்ற பின்னர், அவை சமுதாயத்தின் சட்ட நெறிகளாயின.  வணங்கத் தகுந்தவன் அல்லாஹ் என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் வாயால் சொல்லிவிட்டால் மட்டும் போதாது.  இந்த உறுதி மொழியை வாயால் சொல்லிவிட்டால் மட்டும் போதாது.  அதற்குப்பின் விரிவான செயல்பாடுகள் நிறைய உள்ளன.  அவற்றைச் செய்தால் மட்டுமே, இந்த உறுதி மொழியின் உண்மை நிலைபெறும்.  இறை வேதத்திலும் இறுதித் தூதரின் போதனைகளிலும் இந்தக் கலிமாவை முழுமைப் படுத்தும் நற்செயல்கள் பற்றி விரிவான வழிகாட்டுதல்கள் அடங்கியுள்ளன.  

அவற்றுள் முதலாவது, தொழுகையாகும்.  இந்தத் தொழுகை எனும் வணக்கத்தைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் ‘ஜக்காத்’ என்னும் கடமையையும் சேர்த்தே அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.  மார்க்கச் சட்டத்தின் அடிப்படையில், யாரெல்லாம் இந்தக் கட்டாயக் கொடையைக்  கொடுக்கத் தகுதி பெற்றவர்கள் என்பது பற்றிய பட்டியல் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. ஜக்காத் எனும் இந்தப் பொருள் கொடையைத் திரட்டி, மத்தியக்  கருவூலத்தில் சேர்த்து வைக்கவேண்டும்.  மார்க்கத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதெல்லாம், அதிகமாக இந்த ஜக்காத் பற்றியே இருந்துள்ளது.      

ஓரிறைக் கொள்கை என்ற தவ்ஹீதை ( இறை ஒருமைப்பாட்டை ) நிலைநாட்டுதல் என்ற செயல் மட்டும் இருந்து, அதன் அடுத்தடுத்த கடமைகளுக்காக வேகத்துடன் நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டு இருந்தால், அவர்களின் பணி இலேசாக இருந்திருக்கும்.

வரலாற்றில் பதிவான நிகழ்வு ஒன்று, இங்கு நினைவுகூரத் தக்கது.  நபியவர்களின் இஸ்லாமிய அழைப்பின் தொடக்க காலத்தில், மக்கத்துக் குறைஷித் தலைவர்கள் அனைவரும் நபியைச் சந்தித்து, நபியவர்கள் ஒரே இறைவனாக நம்பி வணங்கும் அல்லாஹ்வை அவர்கள் ஒரு நாளைக்கு வணங்கத் தயார் என்றும், அடுத்த நாள் அவர்களின் கற்சிலைக் கடவுள்களை நபியவர்கள் வணங்கவேண்டும் என்றும் ‘நேர்மையான’ பரிந்துரை ஒன்றை வைத்தனர்.

அதற்குத் தமது கருத்தை நபியவர்கள் குறைஷிகளிடம் கூறுவதற்கு முன், இறைவசனம் இவ்வாறு இறங்கிற்று:

“(நபியே,) கூறுக! ‘இறைமறுப்பாளர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்.  (அது போன்றே) நான் வணங்குபவனை நீங்களும் வணங்கமாட்டீர்கள். (மேலும்) நான் வணங்குபவனை நீங்கள் வணங்கமாட்டீர்கள்.  நீங்கள் வணங்குபவற்றை நானும் வணங்கமாட்டேன். (எனவே,) உங்கள் மார்க்கம் உங்களுக்கு.  எனது மார்க்கம் எனக்கு.”  (109:1-6)

இன்றைய உலகில், அந்த மக்கத்துக் காஃபிர்களின் பரிந்துரை ‘நியாயமானதாக’ எடுத்துக் கொள்ளப்படலாம்.  இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், உங்களைத் ‘தீவிரவாதி’ என்றும், ‘அடிப்படைவாதி’ என்றும் பழி சுமத்துவார்கள்.  எனினும், அந்த நியாயமற்ற பரிந்துரையை நபியவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  காரணம், அண்ணலார் (ஸல்) அப்படி ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓரிறைக் கொள்கையுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பதாகிவிடும்; பல கடவுள் கொள்கைக்கு இணக்கம் தெரிவிப்பதாக ஆகிவிடும்.  இது போன்ற சோதனைகள்தாம், தலைவர் எதிர்கொள்ளும் சவால்களாகும். ‘தர்க்க ரீதியானது’ என்று கருதப்பட்ட இது போன்ற பரிந்துரைகளுக்கு இணங்காமல், கொள்கைப் பிடிப்புடன் இருந்தால், அதுவே அந்தத் தலைவருக்குப் பெரும் சோதனையாக மாறிவிடும்.  இருப்பினும், அவர் இறையருளைக் கேட்டுப் பெற்று, அந்தச் சோதனையில் வெற்றி பெற்றுவிடுவார்.

அதிரை அஹ்மது

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 14 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 15, 2016 | , , , ,

முக்காடும் முகத்திரையும்...

“நான் மிகவும் காட்டுமிராண்டித் தனமாக இருந்ததாக நினைத்த என் தோழியின் கணவர், என் கையில் கனமான புத்தகம் ஒன்றைத் திணித்து, ‘இதைப் படி!’ என்றார்!  அது ஒரு நல்ல துப்பறியும் நாவலாக இருக்கலாம் என்றெண்ணித் திறந்தேன்.  ஆனால், அது The Holy Qur’an என்றிருந்ததும், என் கைகள் நடுங்கின!” என்று தனது இளமைக் கால நிகழ்வை நினைவுகூர்கின்றார், ஐம்பத்தைந்து வயதுடைய அமத்துல்லா.

தனது இருபதாவது வயதில் நிகழ்ந்ததை நம் சிந்தைக்கு விருந்தாக்கும் இவர், ஷெரில் ரம்சே ( Cheryl Rumsey ) வாக ‘ஜமாய்க்கா’ என்ற மத்திய அமெரிக்கத் தீவில் பிறந்தவர்.

வாழ்க்கை என்பது இன்பம் நுகர்வதற்கே என்ற காட்டுமிராண்டிக் கொள்கையில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த ஷெரில், இப்போது மேலை நாட்டு மோகத்தில் வாழ்பவர்களுக்குக் கூறுவது என்ன தெரியுமா?

“நீங்கள் ஒரு பனிப் புகைமூட்டத்திற்குள் இருக்கின்றீர்கள்!  அது உங்களுக்கே தெரியாது!  அது விலகிய பின், ‘அடே, இது எவ்வளவு தெளிவாயிருக்கிறது!’ என்று வியந்து கூறுவீர்கள்!  இது, நான் கற்பனையாகக் கூறுவதென்று நினைக்காதீர்கள்!  என் சொந்த வாழ்வின் பட்டறிவு!”

தனக்குத் தன் தோழியின் முஸ்லிம் கணவர் தந்த குர்ஆனைப் பெற்றுக்கொண்டு, அதனை ஒரு விதமான அலட்சியத்துடன் படிக்கத் தொடங்கினாள் ஷெரில்.  நிமிடங்கள் மணிகளாயின; மணிகள் நாட்களாயின!  ஒரு பார்வை வாசிப்பு ( Reading at a glance ) என்ற நிலை மாறி, அல்-குர்ஆன் எனும் அற்புத வேதத்தின் ஈர்ப்பில் ஆழ்ந்து போனாள் ஷெரில்.  அத்தகைய ஆழ்ந்த சிந்தையில் ஐந்தாண்டுகள் கழிந்தது அவளுக்கே தெரியாது!

முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனில் மூழ்கிப் போவதற்கு முன்பே, அவள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தாள்.  “குர்ஆன் ஒரு தெய்வீக உண்மை” என்பதுவே அது!

பதினைந்தாம் நூற்றாண்டுவரை மேலை நாடுகளில் பேசப்படாத பெண்ணுரிமை, அரேபியாவில் ஆறு-ஏழாம் நூற்றாண்டுகளில் இவ்வற்புத வேதத்தின் மூலம் வழங்கப்பெற்றிருந்ததை எண்ணியெண்ணி வியந்தாள் ஷெரில்.  பிறகு என்ன?

நேர்வழியில் நடை பயிலத் தடையென்ன?  தன் 25 ஆம் வயதில் இஸ்லாத்தைத் தழுவி, அமத்துல்லாவானார் இப்பெண்மணி.

“நான் கறுப்பு நிறத்தவள்தான்.  என் மனிதாபிமானத்தைப் பார்!  என் பாசத்தைப் பார்!  என் உள்ளத்திலிருந்து வரும் இறைப் பற்றைப் பார்!  என் உடலைப் பார்க்காதே!  நான் கூறும் வாழ்வு நெறியின் உண்மையைப் பார்!  உனக்கு, 

உன் மானமான வாழ்க்கைக்கு, உன் மறுவுலக வெற்றிக்கு இதில் தீர்வு உண்டா? இல்லையா? என்று பார்!” என்று அடுக்கடுக்காகப் பேசித் தன் தோழிகளை இஸ்லாத்தின்பால் ஈர்க்கும்  இந்த ஐம்பத்தைந்து வயதையுடைய அற்புதப் பெண் தன் அன்றாடப் பணியினூடே, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று இஸ்லாமிய ‘தஅவா’வைத் தலையாய பணியாகக் கொண்டவர்.

முப்பதாண்டுகளுக்கு முன் முஸ்லிமாக மாறி, இப்போது ஒரு பிரச்சாரப் போராளியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருமதி அமத்துல்லா ரம்சே, ‘வாழ்க்கை என்பது இன்பம் நுகர்வதற்கே’ என்ற சாதாரண மனித நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு, ‘இந்தச் சில நாள் வாழ்க்கையில் துன்பம் நுகர்ந்தாலும் பரவாயில்லை; நிலையான மறுமை வாழ்வே எனது குறிக்கோள்’ என்று கருதிப் புனித வாழ்வு வாழ்கின்றார்!

“முஸ்லிம் பெண்கள் முழுவதுமாக உடலை மறைப்பது, ஆணாதிக்கத்தின் அடையாளமா?  யார் சொன்னது?” என்று கேட்டுப் போராட்டக் களத்தில் இறங்க முனைகின்றார் அமத்துல்லா.

“முக்காடும் முகத்திரையும் பேணிப் பாதுகாக்கப்படவேண்டிய பெண்ணுடலை முழுமையாக மறைக்கும் உன்னதமான உடைகள்.  ஆணாதிக்க அடக்குமுறையின் அடையாளமல்ல அவை.  இஸ்லாம் எங்களுக்கு வழங்கிய உரிமை இது.  மேலை நாடுகளில் பெண்கள் தமது உடலழகைக் காட்டுவது, ஆண்களின் இச்சைப் பொருள்களாகி அழித்தொதுக்கப்படுவதற்குக் காரணமாயுள்ளது!  ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா?  அவர்களின் ( யூத-கிருஸ்தவ ) மதங்கள், அவர்களை ஆண்களுக்குச் சமமாகப் பாவிப்பதாகக் கூறுவதுதான்!” என்கிறார் இந்த HIV தடுப்பு இயக்கத் தலைவி.

புதிதாக இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்டிருக்கு அமத்துல்லா கூறும் அறிவுரை இதுதான்:  “நீங்கள் சிறுகச் சிறுக இஸ்லாமிய வாழ்க்கையைப் பழகிக்கொண்டு, இறைவனை நினைந்து, நற்செயல்களைச் செய்து வந்தால், ஒரு சில நாட்களில், ‘மற்றவர்களைவிட நான் நன்றாய்ச் செய்வேன்’ என்ற தன்னம்பிக்கையை உடையவர்களாக மாறிவிடுவீர்கள்.”

‘செயிண்ட் ஆல்பன்ஸ்’ நகரில் தற்போது வசிக்கும் திருமதி அமத்துல்லா ரம்சே, இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம் செய்து, முஸ்லிமான கணவர்களிடமிருந்து மும்முறை ‘தலாக்’ பெற்றவர்!  முதல் கணவர், சூடானி; இரண்டாமவர், எகிப்தியர்; மூன்றாமவர், இத்தாலி-அமெரிக்கன்.  மூவருமே முஸ்லிம்கள்!

“விவாக விலக்கு, அல்லாஹ் கொடுத்த உரிமை” என்று கூறும் இவர், விவாக விலக்கு உரிமையைத் தாமே பயன்படுத்தியதாகக் கூறுகின்றார்!

“பெண்கள் கல்வி கற்றுப் பணியாற்றுவதை இஸ்லாம் தடை செய்யாதிருப்பினும் கூட, பெண்களின் தலையாய பொறுப்பு, குழந்தை வளர்ப்புதான்” என்று கூறும் இந்த அல்லாஹ்வின் பெண்ணடிமை ( அமத்துல்லாஹ் ) நம்மை அதிசயிக்க வைக்கின்றார்!

அமெரிக்காவில் 2001 இல் நடந்த செப்டெம்பர் 11 தாக்குதல் பற்றி திருமதி அமத்துல்லா கூறுவது யாது?

“அப்பாவிகளைக் கொல்வது, இஸ்லாமியக் கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும்!  பொதுவான மானிட இனத்திற்கே நாசம் விளைப்பதாகும்!” 

அதிரை அஹ்மது

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-9 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2016 | , ,


ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் கைபர் எனும் யூதக் குடியிருப்பு ஊரை நோக்கிப் படை நடத்திச் சென்றார்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.அந்தப் படையில் பல தரப்பட்ட நபித்தோழர்கள் பங்கெடுத்திருந்தனர். அவர்களுள் கவிஞர்களும் இருந்தனர்.  ஆமிர் பின் அக்வஉ (ரலி) என்பார் ‘ஒட்டகப் பாட்டு’ இசைப்பதில் வல்லவர்.  இரவு நேரமாயிற்று. அப்போது தோழர்களுள் ஒருவர் ஆமிரைப் பார்த்து, “உம் கவிதைகளுள் சிலவற்றைக் கேட்கச் செய்ய மாட்டீரா?” என்றார். உடனே அவருடைய வாயிலிருந்து கவிதைக் கடலின் அலைகள் வரிவரியாக வந்தன:

اللهم لولا أنت ما اهتدينا ، و لا تصدقنا و لا صلينا
فاغفر فداء لك ما اتقينا ، و ثبت الأقدام إن لاقينا
و ألقيا سكينة علينا ، إنا إذا صيح بنا أبينا
و بالصياح عولو علينا

(சஹீஹுல் புகாரீ – 2477, 4196,6148)

இதன் தமிழ்க் கவியாக்கம்:

இறைவா!  நீயே இலையென்றால்
இருக்க மாட்டோம் நேர்வழியில்
சிறப்பாய்த் தான தருமங்கள்
செய்தே இருக்க மாட்டோம்யாம்
மறையோன் உன்னைத் தொழுதேநல்
மாண்புற் றுயர்வைப் பெறமாட்டோம்
சிறியோர் எம்மை உன்னுடைய
திருமுன் அர்ப்பணம் செய்கின்றோம்!

நல்லற மெதுவும் எம்வாழ்வில்
நழுவிற் றென்றால் எம்மைநீ
இல்லை அருளென் றொதுக்காமல்
இறங்கிப் பொறுப்பாய் நாயகனே!
எல்லை மீறும் போக்குடைய
எதிரிப் படையைச் சந்தித்தால்
நில்லா எங்கள் கால்களையே
நிலைக்கச் செய்தே அருள்புரிவாய்! 

எங்கள் மீதே அமைதியினை
இறங்கச் செய்வாய் வல்லவனே!
பொங்கும் ஆர்வப் பெருக்காலே
போவோம் நாங்கள் போர்முனைக்கே
அங்கும் எம்மவர் ஆர்த்தெழுப்பும்
அபயக் குரலைக் கேட்டவுடன்
மங்கா அன்புத் தோழர்க்கு
மாண்போ டுதவி செய்திடுவோம்!

இந்தக் கவியடிகளைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டக ஓட்டி?” என்று கேட்டார்கள்.  “ஆமிர்” என்று மக்கள் கூறினர்.  இதைக் கேட்ட அண்ணலார், “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று வாழ்த்துக் கூறினார்கள். ‘அல்லாஹ் அருள் புரிவானாக!’என்ற இறைத்தூதரின் இறைஞ்சலின் பிரதிபலிப்பு,அதே கைபர்ப் போரில் அத்தோழருக்கு ‘ஷஹீத்’ என்ற பெரும் பதவியைப் பெற்றுத் தந்தது!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு ஒன்றில், செவிவழிச் செய்தியை வைத்துப் புனைந்துரை கூறுவதில் கவிஞரும் நபித் தோழருமான ஹஸ்ஸான் (ரலி) அவர்களும் எவ்வாறோ ஈடுபட்டுவிட்டார்! அவரை ஆயிஷாவின் சகோதரி மகனான உர்வா (ரலி) அவர்கள் பிற்றைய நாட்களில் ஏசினார்கள். இதைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “மகனே! அவரை ஏசாதீர்! ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதருக்காக, இணை வைப்பவர்களைத் தாக்கிக் கவிதை பாடி, பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்” என்றார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 4145, 6150)

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

-அதிரை அஹ்மது

எங்கே அமைதி...? - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் ) 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 20, 2016 | , , , ,

அமைதி இன்றைய நிலை!

உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது.

அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார்.

“இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?”

“ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன அது?” என அனைவரும் ஆர்வத்தோடு கேட்டார்கள்.

“அது சமாதானம்” என்றார்.

‘என்ன விலை கொடுத்தேனும் அமைதியை வாங்க வேண்டும்’ என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசையுமாகும்.

இறைவனிடத்தில் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே பிரார்த்தனை புரிய வேண்டும் என்று ஒருவனுக்குக் கட்டளையிடப்பட்டால் அறிவும் அனுபவமும் உள்ள மனிதன் ‘இறைவா! எனக்கு அமைதியைத் தா’ என்றே பிரார்த்தனை புரிவான்.

கல்வி, செல்வம், பதவி, புகழ், வீரம் எல்லாமிருந்தும் வாழ்க்கை அமைதியற்றதாகி விட்டது; அர்த்தமற்றதாகி விட்டது. இது போலவே ஒரு நாட்டில் பொருள் வளம், மனித வளம், இயற்கை வளம், அறிவு வளம் எல்லாமிருந்தும் மக்கள் அமைதியாக வாழ முடியாத அளவுக்கு வன்முறைகளும், குற்றங்களும் நிகழுமாயின் அந்த நாட்டை ‘வளர்ந்த நாடு’ என்று கூற முடியாது.

அமைதியுள்ள மனிதனே மனிதரில் சிறந்தவன் !

அமைதியுள்ள நாடே பாருக்குள்ளே நல்ல நாடு !

அமைதியை விரும்பாதவர் எவருமில்லை. அமைதியைக் குலைப்பவர்களும் அமைதியையே விரும்புகிறார்கள். உலக நாடுகளுக்கிடையே சண்டைகளை மூட்டி விட்டு இராணுவத்தளவாடங்களை விற்பனை செய்யப் போட்டி போடும் வல்லரசுகளும் தங்கள் நாடுகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றன.

உலக அளவில் ஆயுத விற்பனை செய்வதில் அமெரிக்காவுக்கே முதலிடம் ! 1990 – ஆம் ஆண்டில் மட்டும் 7.1 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை அந்நாடு விற்பனை செய்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் வாங்கிய ஆயுதங்களில் 65 விழுக்காடு அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டவையே ! (Report by Congressional Research Service – CRS – Hindu 08.08.99) ஆனால் உலக நாடுகளில் அமைதி, மனித உரிமைகள், அணு ஆயுதத்தடுப்பு ஆகியவற்றைப்பற்றி வாய் கிழிய பேசுவதில் இவர்களே வல்லவர்கள் !

எதிர்க்கட்சியாக இருக்கும் போது கலவரங்களையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள், ஆளும் கட்சியாக மாறுகின்ற போது அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ‘பாருங்கள்…! நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தக் கலவரமும் நிகழ்ந்ததில்லை’ என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

அனாவசியமாக அடுத்தவர் விவகாரத்தில் தலையிட்டுக் குட்டையைக் குழப்புகின்றனர். அமைதியைக் கெடுப்பவர்கள் தாம் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆதிக்கக்காரர்கள், தன்னலவாதிகள் ஆகியோரின் தூண்டுதலுக்குப் பலியாகி கலவரங்களில் ஈடுபட்ட பொதுமக்களும் இறுதியில் தமது தவறை உணர்ந்து அமைதிக்காக ஏங்கி அலைகின்றனர். எங்களை அமைதியாக வாழவிடுங்கள் என்று ஆதிக்கக்காரர்களுக்கு ஆணையிடுகின்றனர்.

ஆண்டுக் கணக்கில் போர் ! ஆயிரக்கணக்கில் சாவு ! கோடிக்கணக்கில் பொருட்சேதம் ! இதற்குப் பிறகு அமைதிப் பேச்சில் ஈடுபடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்!

அமைதி – இன்றைய நிலை

அமைதிக்காக ஏங்குகிறது மனித சமூகம். அது விரும்பிய அமைதி கிட்டியதா?

தனிமனிதனுக்கு அமைதியில்லை. வீட்டிலும் அமைதியில்லை. சமூகத்திலும் அமைதியில்லை. நாட்டிலும் அமைதியில்லை. சர்வதேச அளவிலும் அமைதி இல்லை.

பெருகிவரும் மனநோய்களும் தற்கொலைகளும் தனிமனித அமைதியின்மைக்குச் சான்று ! மன நோய்கள் மட்டுமல்ல; உடல் நோய்களும் அமைதியற்ற மனநிலையால் உருவாகுகின்றன. அமெரிக்க மக்களில் அறுபது சதவீதத்தினர் மனநல மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுகின்றனர். உலகிலேயே மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வரும் ஸ்வீடனிலும் சுவிட்சர்லாந்திலும்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று கூறுகிறது. ஒரு பத்திரிகைக் குறிப்பு. ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் உலகில் ஒருவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

பெருகி வரும் மணமுறிவுகள் இல்லற வாழ்வின் அமைதியின்மையை உணர்த்துகின்றன. இங்கிலாந்தில் மூன்றில் ஒரு திருமணம் மணமுறிவில் முடிகின்றது. ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாண்ட், (Scandinavian Countries) முதலிய நாடுகளில் ஏழில் நான்கு திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன. “அமெரிக்காவில் தற்கொலைக்கான முக்கியக் காரணம் மணமுறிவே ஆகும். “(The Detrioit செப்டம்பர் 1,1995)

பிள்ளைகள் – பெற்றோர்கள் உறவில் ஏற்படும் விரிசலுக்கு சாட்சியாக விளங்குகின்றன. முதியோர் இல்லங்கள். பல ஆண்டுகள், தனக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்தவர்கள் தமது வாழ்வின் மாலைப் பருவத்தை வீட்டில் குடும்பத்தினரோடு அமைதியாகக் கழிக்க வேண்டிய முதியவர்கள் தனிமையில் மன உளைச்சலோடு முதியோர் இல்லங்களில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

துள்ளித்திரியும் பதின்பருவத்தினரும் (Teenage) அமைதியிழந்து தவிப்பதும் இந்த நூற்றாண்டு வேதனைகளில் ஒன்று. இளம் வயதுக் குற்றவாளிகள் பெருகிய வண்ணம் உள்ளனர். நாட்டில் நடைபெறும் மொத்தக்குற்றங்களில் 56 விழுக்காடு குற்றங்கள் 16 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன. போதைப் பொருட்களுக்குப் பலியாகி இளமையைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சி தருகின்றனர்.

பள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கிகளோடு பள்ளிக்கூடத்திற்கு வந்து சக மாணவர்களைச் சுட்டுக் கொல்லும் நிகழ்ச்சியும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அமெரிக்க மக்கள் தொகை 25 கோடி. அமெரிக்காவில் தனியார் வசமிருக்கும் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 20 கோடி (PTI செய்தி) சராசரியாக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி !

சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

“எவர் குருதியும் சிவப்பு தான்

எவர் கண்ணீரும் உப்பு தான்”

என்று புத்தன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் ஜாதிக்கொடுமைக்கு எதிராகப் புயலாக எழுந்து நின்றான். ஆனால் இந்த நூற்றாண்டிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, கிராமங்களில் இரட்டைக் கிணறு, இரட்டை மயானம், இரட்டைப் பாதை என்ற நிலை தொடர்கிறது. தீண்டாமை மட்டுமல்ல பார்க்காமை, பேசாமை, நெருங்காமை, நிழல்படாமை ஆகிய அனைத்துக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

இந்திய மக்களின் அமைதியைக் குலைப்பதில் வகுப்புக் கலவரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. மதத்தின் பேரால் நமது நாட்டைப் போன்று உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இத்தனைக் கலவரங்கள் நிகழ்வதில்லை.

நாடுகளுக்கிடையில் நடந்து வரும் மோதல்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. போஸ்னியா, கொசாவோ, ருவாண்டா, அயர்லாந்து, இலங்கை, காஷ்மீர், பாலஸ்தீனம் என உலகில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்னைகள் ஒரு மூத்த பத்திரிகையாளரின் கணிப்புப்படி உலகில் பல்வேறு இடங்களில் -116-க்கு மேற்பட்ட இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

நொடிப்பொழுதில் உலகத்தைத் தரைமட்டமாக்கும் வலிமை வாய்ந்த அணுகுண்டுகள், மக்களைக் கூண்டோடு அழிக்கும் இரசாயன ஆயுதங்கள் (Chemical Weapons) நோய்களை உண்டாக்கும் உயிரி ஆயுதங்கள் (Biological) ஆகியவற்றைப் பெறுவதில் உலக நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து நாடுகளும் அமைதிக்காகவே இவற்றைத் தயாரிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருவர் ‘மூன்றாவது உலகப் போர் மூண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். ‘என்னால் நான்காவது உலகப் போரைப் பற்றி மட்டுமே சொல்ல முடியும்’ என்று பதில் தந்தார் ஐன்ஸ்டீன். மேலும் அவர் ‘நான்காவது உலகப் போர் நடைபெறாது. ஏனெனில் மூன்றாவது உலகப் போரிலேயே உலகம் முழுமையாக அழிந்து போகும்’ என்றார்.

இவ்வாறு தனிமனிதனும், வீடும், நாடும் இன்று அமைதியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அமைதியைத் தொலைத்துவிட்ட மனிதன் அமைதியைத் தேடி ஆலாய்ப் பறக்கின்றான்.

பிரார்த்தனை, யாகம், வேள்வி, தியானம், யோகா போன்ற வழிகளில் அமைதியைக் காண விழைகின்றான்.

உலகப்பற்றை ஒழித்து தனிமையில் தவம் புரிந்தால் அமைதி கிட்டும் என்பது சிலருடைய நம்பிக்கை !

இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான ஆரவாரமற்ற இடங்களுக்குச் சென்று அமைதி பெறத் துடிக்கிறான்.

‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நகைச்சுவை மன்றங்களுக்கும் அமைதி நாடிச் செல்பவர் உளர்.

இசை, ஆடல், பாடல் இவற்றில் லயித்து அமைதி பெற எண்ணுபவர் பலர்.

அமைதிக்காக போதை மருந்து, தூக்க மாத்திரை இவற்றை நாடிச் செல்பவர்களும் உள்ளனர்.

ஆனால் அமைதி ஒன்றும் அப்படி எளிதில் கிடைத்து விடுவதல்ல ! ஒருவேளை கிடைத்துவிட்டாலும் அது தற்காலிகமானது. தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அமைதி பலவழிகளில் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதனை அடையும் வழிகளும் பலவாகும்.

அமைதியை தனிமனித அமைதி, சமூக அமைதி, இறைவனுடன் பெறும் அமைதி எனப் பிரிக்கலாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; அமைதியற்ற மனிதன் அமைதியற்ற சமூகத்தை உருவாக்குகிறான்; அமைதியற்ற சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது.

பேராசை, பொறாமை, புகழ்வெறி, பதவி வெறி, ஆதிக்க உணர்வு உள்ள மனிதர்கள் தங்களது அமைதியையும் இழந்து விடுவதோடு சமூகத்தின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பதவி வெறி பிடித்த அரசியல்வாதியால் நாட்டின் அமைதி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வறுமை, சாதி மத வெறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை முதலிய கொடுமைகள் நிரம்பிய சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது. சமூகம் தீமைகளால் சூழப்பட்டிருக்கின்ற போது அதில் வாழும் மனிதன் மட்டும் எப்படி அமைதியாக வாழ முடியும்?

சாதி வேண்டாம் என்று தனிமனிதன் கூறினாலும் சாதி அமைப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. சாதியை அவன் விட்டாலும் சாதி அவனை விடுவதாக இல்லை. சாதியைப் பொருட்படுத்தாது அவன் திருமணம் செய்ய விரும்பினால் சமூகம் அவன் மீது சாதியைத் திணிக்கிறது.

இலஞ்சம் வாங்குவதை ஒருவன் வெறுத்தாலும் இலஞ்சம். கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறான்.

ஆபாசத்தை வெறுப்பவர்களும் ஆபாசமே ‘வாழ்க்கை முறை’ என்றாகி விட்ட சமூகத்தின் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை.

எனவே அமைதியை உருவாக்க விரும்புபவர்கள் இவ்விருவகை அமைதியின்மை பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவாக சமயவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் தனிமனித அமைதி பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர்கள் தரும் தீர்வுகள் பிரார்த்தனை, வழிபாடு, தியானம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். ஆனால் சமயச்சார்பற்ற கொள்கையுடையவர்கள் சமூக, அறிவியல், பொருளாதார விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். தனிமனித ஒழுக்கம், அமைதி, சீர்திருத்தம் ஆகியவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தனிமனிதனும், சமூகமும் அமைதி பெறும் போதுதான் உண்மையான, முழுமையான அமைதி மலர முடியும்.

தனி மனித அமைதி

சமூக அமைதி

இவ்விரண்டையும் நிலைநாட்ட வந்த சமயமே இஸ்லாம்.

இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி என்றும், கீழ்ப்படிதல் என்றும் பொருள். பொதுவாக சமயங்களின் பெயர்கள் அச்சமயத்தை நிறுவியவர்கள் அல்லது அவை தோன்றிய இடம் ஆகியவற்றோடு தொடர்புடையவையாக இருக்கும். ஆனால் இஸ்லாம் இதனின்று மாறுபட்டு ‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

பெயரில் மட்டும் ‘அமைதி’ என்பதை வைத்துக்கொண்டு, அமைதியைப் பற்றி பேசாது அமைதியாக இருந்து விடும் சமயமல்ல ! அதன் ஒவ்வொரு அடியும் அமைதியை நோக்கி எடுத்து வைக்கப்படுகிறது.

ஒருவரைச் சந்திக்கும் போது சொல்ல வேண்டிய முகமன் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ உங்கள் மீது சாந்தி உண்டாகுக என்பதே.

வீட்டினுள் நுழையும்போதும் (திருக்குர்ஆன் 24:27) தொழுகையை முடிக்கும் போதும் ‘அமைதி உண்டாகுக’ என்றே கூற வேண்டும்.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் பகுதிக்கு ‘தாருல் இஸ்லாம்’ அமைதியின் இருப்பிடம் எனப் பெயர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா எனும் நகர் வந்து இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அவர்கள் மதீனாவில் நுழைந்தவுடன் மக்களை நோக்கிச் சொன்னார்கள்:

“அமைதியைப் பரவலாக்குங்கள். உணவு அளியுங்கள். இரத்தபந்த உறவுகளை உறுதிப்படுத்துங்கள். இரவில் மக்கள் உறங்கும் வேளையில் தொழுகையில் ஈடுபடுங்கள். நீங்கள் சுவனம் புகுவீர்கள்!”

(நூல் : திர்மிதி, இப்னு மாஜா)

அமையப் போகின்ற இஸ்லாமிய அரசு எத்தகையதாக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது பெருமானாரின் இக்கூற்று.

“தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என வினவினார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். “கட்டாயம் அறிவியுங்கள்” என்றனர் நபித்தோழர்கள். மக்களுக்கிடையில் சமரசம் செய்து வையுங்கள்; உறவுகளை சீர்குலைப்பதே அழிவுக்கான காரணமாகும்” என்றார்கள் நபிகள் நாயகம். (திர்மிதி)

“குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது.” (திருக்குர்ஆன் 2 :27)

“பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். உண்மையில் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவராயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7 :85)

“குழப்பம் விளைவிப்பவன் சுவனம் புகமாட்டான்.” (புகாரி, முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் மட்டுமே அமைதியைப் பற்றிப் போதிக்கின்றன என்பதல்ல. திருக்குர் ஆனின் எல்லா வசனங்களும், நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அமைதிக்கு வழிவகுப்பதாகவே அமைந்துள்ளன. எனவேதான் இறைவன் தான் அருளிய சமயத்திற்கு ‘இஸ்லாம்’ ‘அமைதி’ என்று பெயரிட்டான். இவ்வுலகில் மனிதன் அமைதியாக வாழ வேண்டும். மறுமையில் அமைதியின் இருப்பிடமாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும்.

அமைதிக்கான வழிகளைக் காட்டுவதற்காகவே மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து, அவர்கள் வாயிலாக அமைதிக்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் இறைவன் வழங்கினான். இத்தூதர்கள் இறைக்கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கியதோடு அமைதியை நிலை நாட்டும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் மனிதராகிய ஆதம் முதல் இறைத்தூதர் ஆவார். அவரைத் தொடர்ந்து தூதர்கள் பலரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இறைவன் நியமித்தான். அந்த வகையில் இறுதியாகப் பணியாற்றியவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களாவார்.

இறைவனுன் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமே அமைதி பெறும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, கீழ்ப்படிதல் என இரு பொருள் உண்டு என்பதை தொடக்கத்தில் பார்த்தோம். இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும். இறைவழிகாட்டுதலை மீறினால் அமைதி மறுக்கப்படும் என்பதே அச்சொல் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

‘சாந்தி உண்டாகும் (இறைவனின்) நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு’ (குர் ஆன் 20 : 47) எனும் இறைவசனமும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள். ஒரே ஆன்மாவிலிருந்து பிறந்தவர்கள். எனவே அனைவரும் சகோதரர்கள் எனும் இறைக்கருத்தை மறுத்து மனிதர்களை நாம் பல வர்ணங்களாகப் பிரித்தோம். அதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தோம். விளைவு சாதி இன மோதல்கள் !

மதுவை தீமைகளின் பிறப்பிடம் என்கிறது இறைக்கோட்பாடு ! அதனை வருமானங்களின் பிறப்பிடம் எனக்கருதி அதனைத் திறந்துவிட்டோம். விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

வட்டி ஒரு சுரண்டல்; ஒரு கொடுமை என்ற இறைக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வட்டியின்றி பொருளியலே இயங்க முடியாது என்ற நிலையை உருவாக்கினோம். பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஏழைகளும், ஏழை நாடுகளும் சுரண்டப்படுதல், அடிமைப்படுத்தப்படுதல் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றோம் !

‘மானக்கேடானவற்றிற்கு அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்ற இறைக் கோட்பாட்டை மீறியதால் ஏற்பட்ட விளைவுகள் விபச்சாரமும், கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், எய்ட்ஸ்…!

இப்படி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இறைச்சட்டங்களை மீறிய போதெல்லாம் மனித சமூகம் அமைதியை இழந்து விடுகின்றது. எனவே அமைதியைப் பெறுவதற்கான ஒரே வழி –

“படைத்தவனின் பக்கம் திரும்புவதே !”

(திருக்குர்ஆன் 94 :8)

“இறைவனின் பக்கம் விரைந்து வருவதே !” (திருக்குர்ஆன் 51 :50)

( எங்கே அமைதி …? எனும் நூலிலிருந்து )

பரிந்துரை : அதிரை அஹ்மது

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை ! 51

அதிரைநிருபர் | August 27, 2016 | , , , ,

(2007 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்இயற்றியளித்த ஆய்வுக் கட்டுரை. வலைத்தள வாசகர்களின் வசதியைக் கருதி, சில தகவல்களை விடுத்தும், சில தகவல்களை எடுத்தும் உருவாக்கப்பட்டது, இத்தொடர்.)

உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும் அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக!” (அல்குர்ஆன்-16:125) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள ஹிக்மா’ (நுண்ணறிவு) என்ற சொல்லையும், “இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்மா” (திண்ணமாக, கவிதைகளில் நுண்ணறிவு பொதிந்துள்ளது. - இப்னு மாஜா) என்ற நபிமொழியையும் பொருத்திப் பாருங்கள்.

உண்மையும் அழகுணர்வும் நிறைந்த சொற்களால் வாழ்க்கையைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுவதே கவிதைஎன்று கூறுகின்றார் இலக்கிய மேதை ஒருவர். (இலக்கியக் கலை பக்கம் 46) “ஊடுருவி நிற்கும் உண்மைப் பொருளை உணர்த்த வல்லது கவிதைஎன்பர் ஆய்வாளர்கள்.

ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியில் கவிதைக்கென்று ஒரு கட்டுப்பாடான இலக்கணமே வகுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ‘கவிதைகளெல்லாம் பொய்என்ற பொதுவான கருத்தை மக்கள் கொண்டிருப்பதாலும், கற்பனைகளையே மூலதனமாகக் கொண்டு முற்காலக் கவிஞர்கள் கவி பாடியதாலும், இஸ்லாமியத் திருமறை குர்ஆன், “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224) என்று கூறுகின்றது.

என்றாலும், இறைவன் அல்லாஹ் இறக்கிய வேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிய மொழியும் அரபியாக இருப்பதால், குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம். அரபி இலக்கியத்தில், இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலிய்யாஎனும் அறியாமைக் காலத்திலிருந்தும், கவிதைகள் மலிந்து கிடக்கின்றன. இம்ரஉல் கைஸ்,

உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த், லபீத் போன்ற புகழ் வாய்ந்த கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர். ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா கலாமுல் பஷர்என்று கூற வைத்தது அல்குர்ஆன்!

மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இதற்குச் சான்றாக, அன்றாடத் தொழுகைகளில் நாம் ஓதும் சிறு சிறு அத்தியாயங்கள் ஓசை நயத்துடன் உள்ளதை நாம் உணரலாம்.

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல கவிஞர்களை ஊக்கப் படுத்தியுள்ளார்கள்! சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்ளார்கள்! கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள்! ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள்! நபிமொழி இலக்கியங்களையும் நபி வரலாற்றையும் நன்கு ஆராய்பவர்கள் இதற்கு ஏராளமான சான்றுகளை அவற்றில் காண முடியும்.

மாநபியவர்கள் மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றபோது, மதீனாவில் அவர்களை எதிர்கொண்டு அன்பாதரவுடன் சிறுவர் சிறுமியர் கூடிப் பாடிய இசைப் பாடல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றல்லவா? அது இதோ:

தலஅல் பத்று அலைனா, மின் தனிய்யாத்தில் வதாஇ
வஜபஷ் ஷுக்று அலைனா, மா தஆ லில்லாஹி தாஇ
அய்யுஹல் மபுஊது ஃபீனா, ஜுர்த்த மன் இலைஹி தாஇ

* சான்றுகள்: பைஹகீ, அபூதாவூத்

இந்த வாழ்த்துக் கவிதை வரிகளைக் கீழ்க் கண்டவாறு தமிழ்க் கவிதை வடிவில் ஆக்கலாம்:

எங்கள் மீதே ஒளிவீச எழுந்து வந்த வெண்ணிலவு
மங்கா தனியத் துல்வதாவின் மருங்கி ருந்து வந்ததுவே.

அல்லா வின்பால் அழைப்பாளர் அழைக்கும் போது நாங்களெலாம்
வல்லா னுக்கே நன்றியினை வழங்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவ னனுப்பிய தூதரிலே இறுதித் தூதாய் வந்தவரே!
குறையில் லாவும் நேர்வழியில் கூடி யுமக்குக் கீழ்ப்படிவோம்.

இறை உவப்பையும் நபி நேசத்தையும் இதயத்தில் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற கவிதை வரிகளில் இன்பத்தைக் காண்பார்கள் என்பதில் ஐயமுண்டோ?

தாரகுத்னிஎன்ற நபிமொழித் தொகுப்பில் இடம்பெறும் நபிமொழிப் பகுதியொன்று நற்கவிதைகளுக்குக் கட்டியம் கூறுவதைப் பாருங்கள்:

கலாமுன் ஃப ஹசனுஹு ஹசனுன்; வ கபீஹுஹு கபீஹுன்.

(நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.)

*** இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்

அதிரை அஹமது

இந்தியச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றை இந்திய முஸ்லிம்கள்

ஏன் கொண்டாட வேண்டும்?

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 14, 2016 | , , ,


ஏன் கொண்டாடக் கூடாது?

இந்த எதிர்க் கேள்வியின் மூலமாக  எனது நிலைபாட்டை  50% (ஐம்பது விழுக்காடு) விளங்கியிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.  

இந்திய முஸ்லிம்கள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப் படுகின்றார்கள்.  உண்மை! 

நமக்குக் கிடைக்கவேண்டிய பங்கு, யாருக்கோ போய்ச் சேருகின்றது.  இதுவும் உண்மை!

இந்திய அரசின் மறைமுக உதவியுடன் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இதைத்தான் செய்கின்றன.  இது உண்மையிலும் உண்மை!

இதனால் எல்லாம் நாம் கொண்டாடக் கூடாது என்று ‘ஃபத்வா’ கொடுக்க முடியுமா?   முடியாது!

இதற்குச் சரியான, யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் முடிவுக்கு வருவது எப்படி?  

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்ணின் மைந்தர்களாக முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர்.  எத்தனை அரசியல் மற்றும் இன மாற்றங்கள் இம்மண்ணில் ஏற்பட்டிருந்தாலும், முஸ்லிம்கள் தமது தனித் தன்மையை (identity) இழக்காமல் இதில் வாழ்ந்து மறைந்துள்ளனர் என்பது உலகறிந்த உண்மை.

இந்த நாட்டிற்காக, இதன் சுதந்திர எழுச்சிக்காக, அச்சமற்ற வாழ்க்கைக்காக, தம் உயிரைப் பணயம் வைத்தவர்கள், போரிட்டு மாண்டவர்களின் பெயர்கள் எண்ணிக்கையில் அடங்கா.

ஏன், நாடு பிடிக்கும் நரித் தந்திரத்தால் வணிகப் போர்வையில் தமது ஆளுகைக்கு அடித்தளமிட்ட ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சுதந்திரத்துக்கான போரின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் நம் மார்க்க அறிஞர்களும் சமுதாயத் தலைவர்களும் பொது மக்களுமாவர்.  

அந்நியர்களின் மொழி, மதம், பண்பாடு இவற்றுக்கெல்லாம் எதிர்ப்புக் காட்டி, மூடு விழா நடத்தியவர்கள் நமது மார்க்க அறிஞர்கள் என்பது உலகறிந்த உண்மை.  இதனால் நாம் - இன்றைய இஸ்லாமியச் சமுதாயம்  வாய்ப்பிழந்து நிற்கும் அவலம் யாருக்குத் தெரியாது?  இந்நிலையில்தான், “சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் முஸ்லிம்களாகிய நாம் கொண்டாடுவது கூடுமா?” என்ற கேள்வி கேட்கப்படுகின்றது!

‘கொண்டாட்டம்’ எனும்போது, அவர்களின் மனக் கண் முன் நிழலாடுபவை, ஆடல், பாடல், கேளிக்கை, கூத்து போன்றவைதாம்.  இவையின்றி, அமைதியாக, உரிமையுடன், முஸ்லிம்கள் தமது நாட்டுச் சுதந்திரப் பங்களிப்பை நினைவு கூர்ந்து, பசுமை நினைவுகளைப் பதிவு செய்து, மகிழ்ச்சியுடன் நாம் ஏன் கொண்டாடக் கூடாது?  ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற ‘அஜென்டா’வை வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் வக்கிரப் புத்திக்காரர்களுக்கு எழுத்தால், பேச்சால் ஏன் நாம் எடுத்துக் கூறக் கூடாது?

“இந்த நிகழ்வுகளில் முஸ்லிம்கள் பங்கெடுப்பது ஹராம்” என்று ‘ஹராம் ஃபத்வா’ கொடுப்பதற்கும் சிலர், சில முஸ்லிம் அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு பொதுமக்களை மூளைச் சலவை செய்துவரும் அரை வேக்காட்டுத் தன்மை கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவுகின்றது!

“ஆகுமானதும் விலக்கப்பட்டதும் தெளிவானவை.  இவற்றுக்கிடையில் இருக்கும் ஐயத்துக்கிடமான – தெளிவில்லாதவையும் உள. அவற்றைப் பெரிதாக்கி ஐயத்தில் வீழ்ந்துவிடாதீர்” என்பது நபிமொழியாகும்.  இந்த இடைப் பகுதியில் பட்டவைதான், அவர்களால் ‘ஹராம் ஃபத்வா’ கொடுக்கப்பட்ட நாட்டு நிகழ்வுகள்! 

முஸ்லிம் கல்வி நிலையங்கள், சேவையகங்கள், கட்சிகள், அமைப்புகள், அறக்கட்டளைகள் அனைத்தும் இந்நிகழ்வுகளை – விழாக்களை நடத்துவதன் மூலம், பிறருக்கில்லாவிட்டாலும், தம்முடைய நினைவைப் பசுமையாக்க, இது போன்ற நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.

இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் ஐயத்தைப் புகுத்துபவர்கள், இந்தியப் பெருங்கண்டத்தில் நாம் – முஸ்லிம்கள் பெருவாரியாக இருந்தபோது, முஸ்லிம்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று கூக்குரலிட்டுப் பிரிந்து போனவர்கள், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாட்டவர்கள் ஆவர்.  அவர்கள் நம் காதுகளில் ஓதிய ‘சாத்தானிய வசனங்கள்’தாம் இவை.

சுதந்திரத்துக்கு முன்னால் நாம் பெருவாரியாக இருந்தபோது, கவிஞர் இக்பால் பாடிய –

“சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” (உலக நாடுகள் அனைத்தையும்விட எங்கள் இந்தியத் திரு நாடுதான் சிறந்தது) என்ற சுதந்திர கீதம், நம்மை விரட்ட நினைக்கும் எதிரிகளின் காதுகளில் வீழட்டும்!  நம்மைப் பார்த்து, “முஸ்லிம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்குப் போகட்டும்” என்று கொக்கரிக்கும் ‘கோட்சே’ கூட்டத்தினர் அடங்கி ஒடுங்கிப் போகட்டும்!  அல்லது, உண்மை நிலையை உணரட்டும்! 

எனவே, ‘உமூரும் மினல் முஷ்தபிஹாத்’ எனும் பிரிவில் அடங்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு, இந்திய நாட்டுக்காக இரத்தம் சிந்திய நமது தியாகச் செம்மல்களை நினைவுகூர்ந்து, ‘கூடும்’ என்ற நிலைபாட்டில் நிற்போம்.

அதிரை அஹ்மது

லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் அதிரை ! 17

அதிரைநிருபர் | August 11, 2016 | ,

நமது அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எத்தகைய பாரம்பரியமானது என்பதற்குக் கீழ்க் காணும் தகவல் ஓர் எடுத்துக்காட்டாகும்:

நமது அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது. நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்கள்:

தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)

செயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)

பொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்

இளைஞரும் ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு சிந்தனை முகிழ்த்தது. 'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம். அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா?'

அன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள். அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள்.

இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து வந்த அந்தத் தீர்மானம், நம் தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது.

இந்தியச் சுதந்திரத்தில் நம் அதிரைக்கும் பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில் நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'அதிரை அறிஞர்', தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.

--அதிரை அஹமது

புகைப்படம்: அதிரைவரலாறு

மக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2016 | , , ,


இதற்கு முன்பு ‘அதிரை நிருபர்’ தளத்தின் ஓர் இழையில், ‘மதீனாவில் ராமழானும் பெருநாளும்’ எனும் தலைப்பில் ஒரு பதிவு இட்டிருந்தேன்.  இப்போது, உங்களைப் புனித மக்காவுக்கு அழைத்துச் செல்கின்றேன்.

மக்கா ‘ஹரம் ஷரீஃப்’ நிர்வாக அதிகாரியான ஹமூத் அல்-இயாத் அவர்களின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் ரமழானில் இப்புனிதப் பள்ளியில் நாற்பது லட்சம் மக்கள் தம் நோன்பைத் துறப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்!  நம் கண்கள் வியப்பால் விரிகின்றன!  இது, கடந்த இரண்டாண்டுகளுக்கு முந்தைய செய்தி.  தற்போது எப்படியோ?

எனினும், எனது அனுபவத்தில் கண்ட ‘இஃப்தார்’ எனும் நோன்பு துறக்கும் நிகழ்வைச் சில வரிகளில் தந்து, வாசகர்களின் வியப்பையும் வேட்கையையும் கிளர்ந்தெழச் செய்ய விழைகின்றேன்.

இரவு – பகல் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்ந்து நடக்கும் வணக்கம், மக்கத்துக் ‘கஅபா’வை மக்கள் வலம்வரும் வணக்கம் மட்டுமே எனில் மிகைக் கூற்றாகுமோ?  அதுவும், புனித ரமழானில்...?


‘இஃப்தார்’ எனும் நோன்பு துறக்கும் நேரம் நெருங்க நெருங்க, இறைக் காதலர்களின் நடையெல்லாம் புனிதக் ‘கஅபா’வை நோக்கியே.  விடுதிகளில் தங்கியிருப்போர், வீடுகளில் வசிப்போர், ஜித்தா – தாயிஃப் போன்ற அடுத்திருக்கும் நகரங்களிலிருந்து வந்திருப்போர், இன்னும் ரியாத், தம்மாம், புரைதா, தபூக் முதலான தொலைவிலுள்ள நகரங்களிலிருந்து வந்திருப்போர் அனைவரின் நோக்கமும், ‘கஅபாவில் இஃப்தார் செய்யவேண்டும்’ என்பதே.

‘ஹரமுல் மக்கி’ – புனிதக் ‘கஅபா’ – நிர்வாகத்தினரின் முன் அனுமதியைப் பெற்ற உள்ளூர்வாசிகள் தம் வீடுகளிலிருந்து நோன்பு துறப்பதற்கான உணவுப் பொருள்களைக் கொண்டுவரலாம்.  அவை, அவர்களுக்கு மட்டுமா? ضيوف الرحمن   (ழுயூஃபுர் ரஹ்மான்)  எனும் இறைவிருந்தினர்களுக்கும் சேர்த்துத்தான்!

‘கஅபா’ பள்ளியின் மேல் – கீழ் வளாகங்களில் விரிப்புகள் பரப்பப்பட்டு, அவற்றின் மீது மக்கத்தும் மதீனத்து (அஜ்வா, பர்ஹி) மற்றும் தாயிஃப், தபூக், கஸீம் (சுக்கரி), அல்பாஹா, கைபர் முதலான ஊர்களில் விளைந்த இனிமையான பேரீத்தம் பழங்கள் பரப்பப்படுகின்றன.  இல்லை, ‘டன்’ கணக்கில் கொட்டப்படுகின்றன!   

கெட்டித்தயிர், பாலாடைக் கட்டி, ஜூஸ், ரொட்டி முதலான உணவு வகைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.  அல்லாஹ்வின் அடியார்கள் அழுது கண்ணீர் வடித்து, அவனிடத்தில் ‘துஆ’ – இறைஞ்சல் - செய்து கொண்டிருப்பர். அது, தன் அடியார்களின் வேண்டுதல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளும் புண்ணிய நேரம்!

இதே வேளை, இன்னொன்றும் நடந்துகொண்டிருக்கும்.  மதீனாவின் ‘நபிப்பள்ளி’யில் நிகழ்ந்ததல்லவா?  அது போன்ற இழுபறி!  “தஆல், தஆல், தஆல் ஹினா” (வாருங்கள், வாருங்கள், இங்கே வாருங்கள்!”) என்ற கனிவான அழைப்போசைகள்!  அரபுகளின் அன்பழைப்பைத்  தவிர்க்க முடியாத நம்மவர்கள், தமக்காகக் கிடைக்கும் இடங்களில் அமர்ந்து, அவர்களும் ‘துஆ’விலும் இறைநினைவிலும் திளைத்திருப்பார்கள்.

‘அதான்’ (பாங்கு) சொல்லும் ‘முஅத்தின்’ ஒலிப்பானைத் தட்டுகின்றார்.  அதனைத் தொடர்ந்து, “அல்லா.........ஹு அக்பர்!  அல்லா........ஹு அக்பர்!” என்ற அழைப்போசை மக்காவெங்கிலும் எதிரொலிக்கின்றது!

“பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!”  ‘கஅபா’ பள்ளி முழுவதிலும் இதே ஓசை!  நோன்பாளிகள் விரைவாக நோன்பு துறக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “நோன்பாளிக்கு மகிழ்வுக்குரிய நேரங்கள் இரண்டு.  ஒன்று, நோன்பு துறக்கும்போது;  மற்றொன்று, அவர் தன் இரட்சகனை (அல்லாஹ்வை மறுமையில்) காணும்போது.”   - ஸஹீஹ் முஸ்லிம் (2120)

‘ஹரம்’ நிர்வாகி ஹமூத் கூறுகின்றார்:  “நோன்பு துறக்கும் நேரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்ந்தால், நோன்பாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்ய ‘ஆம்புலென்ஸ்’ வண்டிகள் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.  மேலும், ‘இறைவிருந்தாளி’ (ழுயூஃபுர் ரஹ்மான்)களை இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய் விடுவதற்காகவும் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”

இனி, ஓர் அற்புத நிகழ்வின் பக்கம் வாசகர்களின் கவனத்தைத் திருப்புகின்றேன்.  நோன்பாளிகள் பத்தே நிமிடங்களுக்குள் நோன்பைத் துறந்துவிட்டு, ‘ஜமாஅத்’ எனும் கூட்டுத் தொழுகைக்காக எழுந்துவிடுவார்கள்.  நோன்பு துறப்பு நிகழ்வின்பின் ‘கஅபா’ வளாகத்தில் பரவிக் கிடக்கும் குப்பை கூளங்களை அகற்றுவது எப்படி?  யார் அகற்றுவார்?  அதற்காகவென்றே நீல நிறச் சீருடை அணிந்த துப்புரவுப் பணியாளர்களின் ‘படை’ ஆயத்த நிலையில் வந்து நிற்கும்!  அதோ, மேலே உள்ள படத்தில் பார்க்கின்றீர்கள் அல்லவா?  அவர்கள்தாம்!

‘இப்படை தோற்கில், எப்படி வெல்லும்?’ என்று கூறுவது போன்று, அவர்கள் முடுக்கி விடப்படுவார்கள்.  முதலில், மக்கள் கடந்து செல்லாத அளவுக்குத் ‘தடைப்பட்டி’ நிறுத்தங்கள் அமைக்கப்படும்.  வரிசை வரிசையாகச் சிறு சிறு துப்புரவு வாகனங்கள் வந்து, தண்ணீரையும் உணவுத் துகள்களையும் உறிஞ்சிக்கொள்ளும்.  இவ்வாறு சுற்றிலுமுள்ள குறிப்பிட்ட ஒரு பகுதி தூய்மையாக்கப்பட்டவுடன், அடுத்த பகுதிக்கும் அவ்வாறே.  இப்படி, ‘கஅபா’ வளாகம் முழுவதுமே ஐந்து அல்லது பத்து நமிடங்களுக்குள் தூய்மை செய்யப்பட்டுவிடும்!  

இப்பணியாளர்கள் இயங்கும் விதம்!  ஆகா!  அற்புதம்!  எஞ்சியிருக்கும் தண்ணீரையும் பொருள்களையும் நீலச் சீருடைப் பணியாளர்கள் வழித்தெடுக்கும் விதம்!  Roller Scatting கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  பார்த்திருக்கிறீர்களா?  அதே போன்று, எஞ்சிய தண்ணீரையும் துகள்களையும் தம்மிடமுள்ள wiper (வழிப்பான்)களைக் கொண்டு வழித்துக் கொண்டுபோய், ‘கஅபா’ வளாகத்தின் சுற்று ஓரங்களில் தள்ளிவிடுவார்கள்.

இவர்கள் இயங்கும் விதம், மிக அற்புதமானது!  இவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்டார்களா?  அல்லது, தமது பல்லாண்டுப் பட்டறிவின் விளைவா? தெரியவில்லை! Spotless clean! ‘கின்னஸ் ரிக்கார்ட்’ பதிவுக்குப் பொருத்தமானது!  

இந்தப் பணியின் ஒரு சிறு பகுதியைத்தான் இணைப்புப் படங்களில் நீங்கள் பார்க்கின்றீர்கள்!  நேரில் போய்த்தான் பாருங்களேன், இந்த ரமழானில்!  இன்ஷா அல்லாஹ்...!       

அதிரைஅஹ்மது

பேறு பெற்ற பெண்மணிகள் - தென்றலாய் வந்தது! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | July 12, 2016 | , ,

தொடர் : 20

அது ஒரு கோடை விடுமுறை நாளின் உச்சிப் பொழுது.  ஹாங்காங் நகரத்தின் விரைவு உணவு விடுதியொன்றின் (Fast Food Outlet) முன் நின்றாள் அந்த 21 வயது இளம்பெண், ‘ஷீ மெய்-•போங்’ என்ற சீனப் பெண்.

தனக்கு வேண்டிய உணவை, அங்கிருந்த பாக்கிஸ்தானி சிப்பந்தியிடம் ‘ஆடர்’ செய்தபோது, “No pork please!” என்றும் கூறி வைத்தாள்!

அந்தப் பாக்கிஸ்தானிக்கோ, வியப்பு!  எனினும், தன்னிடம் கொடுக்கப்பட்ட ஆடரை விரைந்து தயாரித்து அப்பெண்ணிடம் கொடுத்துக் காசைப் பெற்றபோது, ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தார் அச்சிப்பந்தி:  “Are you Muslim?”

‘இல்லை’ என்பதன் அடையாளமாகத் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து அகன்ற அவ்விளம்பெண், தனக்குள் கேட்டுக்கொண்டாள்:  “Muslim?  Am I Muslim?”

அதே சிந்தனை, அவள் வீடு போய்ச் சேரும்வரை நீடித்தது.

‘இஸ்லாம் கடுமையான மார்க்கம்;  அது வலுக்கட்டாயமாக மற்றவர்கள் மீது திணிக்கப்படுகிறது’ என்றல்லவா மக்களுக்கிடையே-குறிப்பாகப் பெண்களுக்கிடையே பேசப்படுகிறது எனும் சிந்தனை வயப்பட்ட அப்பெண், மறு தடவை அந்த உணவகத்திற்குச் சென்றபோது, அந்தப் பாக்கிஸ்தானிச் சிப்பந்தியிடம் சற்று நேரம் பேச்சுக் கொடுத்தாள்.  அந்த முதல் அறிமுகத்தில், தனது இயல்பான நடைமுறைகளுக்கும் சிந்தனைக்கும் ஏற்றவாறே இஸ்லாம் எனும் மார்க்கம் இருப்பதை உணர்ந்தாள் ஷீ மெய்-•போங் (Chi Mei-fong).

கடந்த ஓராண்டாகப் பன்றிக்கறி (pork) உண்பதைத் தவிர்த்துவிட்டிருந்தாள்.  மது என்பது, அவளது வாயில் படாத ஒன்றாயிருந்தது.  உடையணிவதிலும் ஒரு வரைமுறையைக் கடைப்பிடித்து வந்தாள்.  தன் வயதொத்த தோழிகளோடு வரம்பின்றித் திரிவதில்லை.  மிகச் சில நாட்களிலேயே - அக்கோடை விடுமுறையின்போதே - குளிர்ந்த தென்றலாக வந்து அவள் இதயத்தில் இடம் பிடித்துக்கொண்டது இஸ்லாம்!

அதனைத் தொடர்ந்து, ஹாங்காங்கின் முஸ்லிம் இளையோர் கூட்டமைப்பு (Muslim Youth Association) உடன் தொடர்பு கொண்டு, 1987 ஆம் ஆண்டில் தனது வாழ்வின் நடைமுறையாக இஸ்லாத்தைத் தெரிவு செய்துகொண்டார் அவ்விளம்பெண்.  அன்றிலிருந்து அவரது Identity Card எனும் அடையாள அட்டை, ‘ஷீ மெய்-•போங்’ என்ற சீனப் பெயருடன், ‘ஹவ்ரா கதீஜா’ எனும் இஸ்லாமியப் பெயரையும் சேர்த்துப் பதிவு பெற்றது.    

முஸ்லிம் பள்ளிவாசல்கள், மற்றும் மயானங்களை நிர்வகிக்கும் அமைப்பான Incorporated Trustees of the Islaamic Community Fund of Hong Kong தரும் தகவலின்படி, தற்போது அங்கு 65,000 பேருக்கு மேல் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

ஹாங்காங் என்ற இந்தத் தூரக் கிழக்குப் பகுதியைப் பொறுத்தவரை, இஸ்லாத்தைத் தழுவும் பெண்களுக்கு, இஸ்லாமிய உணவும் உடையும் பெரும் தடைகளாக இருக்கின்றன.  ஆனால், நம் ஹவ்ரா கதீஜாவுக்கோ, அ•தொன்றும் தடையாயில்லை.  ஏனெனில், அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, அவரறியாத விதத்தில், இஸ்லாமிய நடைமுறைகள் அவரிடம் வந்து குடிகொண்டிருந்தன!

அதனால், நம் கதீஜா அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.  “மத மாற்றத்தின்போது எனக்குச் சிறியதோர் ‘அட்ஜஸ்ட்மெண்ட்’தான் தேவைப்பட்டது.  எனது நாட்டுப் பெண்களுள் மற்றவர்களைப் போன்றுதான் நானும் உடையணிந்தேன்.  ஆனால், ஒரேயொரு வித்தியாசம், ‘ஹிஜாப்’.  அதுவே என்னை மற்றவர்களிலிருந்து பிரித்துக் காட்டியது” என்று முக மலர்ச்சியுடன் கூறுகின்றார் ஹவ்ரா கதீஜா.

இஸ்லாத்தைத் தழுவியதன் பின், அங்குள்ள ‘இளையோர் இஸ்லாமிய இயக்கம்’ (Islaamic Youth Association) கதீஜாவைத் தனது அலுவலக நிர்வாகியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.  இதுவே அவரது இஸ்லாமிய வாழ்வுக்கும் உலகப் பிழைப்புக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்துவிட்டது.

அண்மைக் காலங்களில், ஹாங்கங்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கை விரைவாகக் கூடிக்கொண்டே வந்துள்ளது.  ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பேர் என்கிறார், IYA வின் உயர் அதிகாரி ஒருவர்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவை எட்டியிருந்தபோது, தன் குடும்பத்தின் எதிர்ப்பு, மற்றும் கடுமையான இஸ்லாமியச் சட்ட வரம்பு போன்றவை சிறு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தும், துணிச்சலாக முடிவெடுத்தார் கதீஜா.  அந்தத் துணிச்சலே, மிக விரைவில் பெற்றோரின் பரிவையும், இஸ்லாமியக் கொள்கைகளில் பிடிப்பையும் ஈட்டிக் கொடுத்தது என்கிறார். 

தனது பணிகளினூடே ஐவேளைத் தொழுகையைத் தவறாமல் நிறைவேற்றும் இச்சகோதரி, “நான் இஸ்லாமியச் சூழலில் இருப்பதால், மார்க்கக் கடமைகளைச் செய்வதற்கு வாய்ப்பு நிறைய உண்டு.  ஆனால், என்னைப் போன்று இஸ்லாத்தைத் தழுவியிருக்கும் என் இனிய தோழிகள் பலர் தனியார் நிறுவனங்களில் பணி செய்துகொண்டு, மார்க்கக் கடமைகளைச் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள்” என்று அங்கலாய்க்கிறார்.

இஸ்லாத்தை ஏற்றுச் செயல்படுத்துவதற்குப் பெற்றோர் மற்றும் உறவினரின் எதிர்ப்பில்லை என்பது மட்டுமன்றி, அவர்களின் ஒத்துழைப்பும் தனக்குண்டு என்று மகிழ்ந்து கூறும் கதீஜா, ‘அவர்களுக்கு இன்னும் ‘ஹிதாயத்’ வரவில்லையே’ என்று கவலைப்படுகின்றார்.                  

“மேலை நாடுகளில் உலா வரும் பித்துக்குளி இயக்கங்கள் (Cult) போன்று இஸ்லாம் இல்லை என்பது கொண்டு, என் தாய் கவலைப் படுவதில்லை.  ஆனால், ரமளானில் நான் நோன்பிருப்பதைக் காணும்போது, என் பட்டினி நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறார் கருணையுள்ளம் கொண்ட என் தாய்” என்கிறார் கதீஜா.  ஆனால், நோன்பின் நோக்கங்களுள் ஒன்றான, ‘ஏழைகளின் பசியை உணர்வது’ என்பதைப் பற்றிக் கூறியபோது, இரக்கமுள்ள தன் தாயின் இதயம் கனிந்தது என்று மகிழ்வுடன் கூறுகின்றார்.

தம் முன்னோர்களை வணங்கும் ‘ஸொராஸ்ட்ர’ மதத்தைப் பின்பற்றும் தாயோடு தனது அல்லாஹ்வை வணங்கும் தொழுகை முறை, தொடக்கத்தில் ஒத்து வரவில்லை என்றாலும், நாளடைவில் தனக்கெனத் தனியிடம் ஒதுக்கித் தொழுதுகொள்ளும் முறையைத் தானே வகுத்துக்கொண்டதாகக் கூறுகின்றார் ஹவ்ரா கதீஜா.

“ஹாங்காங் சைனீஸ் மக்கள் இஸ்லாம் பற்றி அதிகம் அறிமுகமற்றவர்கள்.  அதனால், அவர்கள் எனது இஸ்லாமியத் தோற்றத்தைக் கண்டு புதினப்படுகின்றனர்.  அதே நேரம், நான் ஓர் அரபு அல்லது மலாய்ப் பெண்ணாக இருந்தால், அவ்வளவு கவனம் என் பக்கம் திரும்பியிருக்காது.  உடல் முழுவதும் மறைப்பது, ஆண்களின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிப்பதற்கு என்பது, சிலருக்குப் புதிராகவும் எதிராகவும் உள்ளது!” என்று கூறும் கதீஜா, இந்த உடைக் கட்டுப்பாடு தனது ஒழுக்கத்தின் அடையாளமாகவும் ஒரு பாதுகாப்பாகவும் இருப்பதாக நம்புகின்றார்.

“நான் முஸ்லிம் என்பதைத் தயக்கமின்றி உணர்த்துவதற்காகவே உடலை முழுமையாக மறைக்கும் ‘ஹிஜாபை’ அணிகிறேன்.  அது, நான் முஸ்லிம் பெண் என்பதன் சரியான அடையாளம் என்பதைத் தவிர வேறில்லை.  பல இடங்களில், எனது மார்க்கப் பின்னணியைப் பற்றி அறியும் மற்றவர்கள், என் மீது அன்பு கலந்த மரியாதை வைப்பதை உணர்கின்றேன்.  ஆண்கள் என்னை ‘ஈவ் ட்டீசிங்’ செய்யப் புகுமுன், எனது வினோதமான உடையைப் பார்த்தவுடன் இரு முறை சிந்திப்பார்கள்!  இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இது எனக்கு இஸ்லாம் வழங்கிய பெருமையும் பேருபகாரமுமாகும்!”  

இஸ்லாத்திற்கு எதிராக வீசப்படும் ஏவுகணைகளுள் ஒன்றான ‘பலதார மணம்’ பற்றிக் கருத்துக் கூற விழைந்த இந்தச் சைனாக்காரப் பெண்மணி, “மக்கள் குர்ஆனிய வசனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்கள்!  சமுதாயத் தேவைகள் சிலவற்றைக் கருத்துட் கொண்டு, பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பெற்றுள்ளது.  அது ஆர்வமூட்டப்பட்ட ஒன்றன்று என்பதை 

எதிர்ப்பாளர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்” என்று கூறிச் சற்று நேரம் தாமதித்துத் தொடர்கின்றார்:

“குர்ஆனின் கூற்றைக் கூர்ந்து கவனியுங்கள்!  ‘ஒன்றுக்கு மேற்பட்ட உங்கள் மனைவியரைச் சரி சமமாக நடத்துவது மிகக் கடினம்’ என்பது, அதன் சொற்களிலிருந்து தெரியவில்லையா?”  

எத்துணை ஆணித்தரமான, அறிவார்ந்த வாதம் பாருங்கள்!
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
அதிரை அஹ்மது

ஹுதைபிய்யா உடன்படிக்கை 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2016 | ,

::::: தொடர் - 22 :::::
‘வளர்ச்சிக்கான வாயில்’ என்று நபி வரலாற்றில் ஒரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டுமாயின், அது ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’தான் என்றால், அது மிகையாகாது. மக்கத்துக் குறைஷியருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையில் நடந்த இந்த ஒப்பந்தத்தை மேலோட்டமாகப் பார்த்தால், முஸ்லிம்களுக்கு அது ஒரு பின்னடைவுதான் என்று நினைக்கத் தோன்றும்.

நபிவரலாற்றில் மிகமுக்கியமான இடத்தைப் பெற்ற இந்த உடன்படிக்கை பற்றிச் சற்று விரிவாகவே எழுத வேண்டியதாக இருக்கின்றது. மேலோட்டமாக இந்த ஒப்பந்தத்தைப் பற்றிப் படிப்போர், ‘இந்த ஒப்பந்தம், ஒருபக்கச் சார்பானது’ என்றே கருத்துக் கூறுவார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த உடன்படிக்கை நிகழ்வானது, எந்தச் சூழலில் நடந்தது? நிகழ்வதற்கான காரணங்கள் யாவை? என்பவற்றைப் பற்றி ஓரளவுக்கு விரிவாகவே எழுத வேண்டியுள்ளது. ஹுதைபிய்யா நிகழ்வானது, மாணவர்கள் தமது பட்டப் படிப்பின் இறுதித் தேர்வு எழுதுவது போன்றே இருந்தது. பெருமானார் (ஸல்) அவர்களும் அன்னாரின் தோழர்களும் ஏறத்தாழ அத்தகைய நிலையில்தான் இருந்தனர். அதில் அவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று, வெற்றியும் அடைந்தனர்! அவர்கள் இறைவனுக்குக் கட்டுப்படுபவர்கள் என்பதன் சான்றாகவும் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதை நாம் காணமுடியும்.

ஒரு நாளன்று நபியவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதில், அவர்களும் தோழர்களும் கஅபாவில் ‘தவாஃப்’ எனும் வணக்கத்தை முடித்து, தலைமுடி களைவதாகக் காட்டப்பட்டது. அவர்களுள் பெரும்பாலோர் மக்காவைத் துறந்து மதீனாவுக்குப் போய் ஆறு ஆண்டுகளாகிவிட்டது. ‘என்று திரும்புவோம்’ என்று அந்த ‘முஹாஜிர்’களின் இதயத்துள் ஏக்கமாக இருந்தது. ஒருமுறை அந்தப் புனிதப் பதிக்குச் சென்றுவந்தால், ‘இனி எப்போது இந்த மக்காவுக்குத் திரும்பி வருவோம்?’ எனும் ஏக்கத்திலேயே அவர்களின் எஞ்சிய வாழ்நாள் கழியும். இந்த உணர்வு, அந்த மண்ணின் மைந்தர்களான ‘முஹாஜிர்’களுக்கு ஏற்படாதா என்ன?

நபிமார்களின் கனவுகள் இறைச் செய்திக்குச் சமமானவைதாமே? தாம் கண்ட கனவை அடுத்து, அண்ணலார் (ஸல்) அவர்கள் தம்முடன் 1400 தோழர்களை அழைத்துக் கொண்டு, ‘உம்ரா’ வணக்கத்தை நிறைவேற்றப் புறப்பட்டுச் சென்றார்கள். மதீனா-மக்கா நெடுஞ்சாலையில், மதீனாவுக்கு அருகில் இருக்கும் ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தில் தங்கி, உம்ராவுக்கான ‘இஹ்ராம்’ என்னும் நிலைக்கு மாறிக்கொண்டு, அதற்கான ‘தல்பியா’வைக் கூறிக்கொண்டார்கள். தோழர்களும் நபியைப் பின்பற்றி, அந்நிலைக்கு மாறிக்கொண்டார்கள். தாம் கொண்டுவந்த பலிப் பிராணிகள் மீது அடையாளம் இட்டுக்கொண்டார்கள். அடிக்கடித் ‘தல்பியா’வும் சொல்லிக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து மக்காவை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களிடம், வழக்கமாக அரபுகள் வைத்துக்கொள்ளும் சிறிய கத்தியைத் தவிர வேறொரு போராயுதமும் இல்லை.

இந்தக் கூட்டம் போர் புரியச் செல்லும் கூட்டமன்று; சமாதானத்தை நோக்கமாகக் கொண்டது என்பதை, எவரும் எளிதில் அறிந்துகொள்ளும் தன்மையில் இருந்தது. எனினும், முன்னெச்சரிக்கையாக, அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) என்ற தோழரின் தலைமையில், இருபது குதிரை வீரர்களைக் கொண்ட பாதுகாப்புப் படையை எல்லாருக்கும் முன்னதாகச் செல்லும் விதத்தில் அமைத்திருந்தார்கள் அண்ணலார்.

எதிரிகளை இனங்காணும் தன்மையில், பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தவர்கள். ஆனதால், பிஷ்ர் இப்னு சுஃப்யான் என்ற தோழரை முன்னதாக மக்காவுக்கு அனுப்பி, அங்குள்ள நிலவரங்களைத் திரட்டிக்கொண்டு வருவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மக்காவை நோக்கி இக்கூட்டம் சென்றுகொண்டிருந்தபோது, அண்ணல் நபிக்கு ஆலோசனை கூறுவதில் பக்குவப்பட்ட முன்னணித் தோழரான உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள், “யா ரசூலில்லாஹ்!  எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல், நம்முடன் மோதல் நிலையில் இருக்கும் மக்களுக்கு நடுவிலா மக்காவுக்குள் நுழையப் போகின்றீர்கள்?  நாம் சமாதானமாக இருக்கும் நிலையில், அவர்கள் நம் மீது தாக்குதலைத் தொடுத்தால், அந்த நேரத்தில் நமக்குப் பாதுகாப்புக் கருவிகள் வேண்டாமா?” என்று கேட்டார்கள். இதை அறிவார்ந்த பரிந்துரையாக ஏற்றுக்கொண்டு, பெருமானார் அவர்கள், அந்த நேரத்தில் மதீனாவை விட்டு வெகு தொலைவில் தமது கூட்டம் சென்றிருக்காத நிலையில், மதீனாவுக்குச் சிலரை அனுப்பி, சில போர்க்கருவிகளைத் திரட்டிக்கொண்டு வரும்படிக் கூறினார்கள்.  எனினும், அவ்வாறு கொணர்ந்த போர்க் கருவிகளை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல், மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்றும் தம் தோழர்களுக்கு அறவுரை பகர்ந்தார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.

மக்காவுக்கு வேவு பார்க்கச் சென்ற பிஷ்ர் பின் சுஃப்யான் (ரலி), முக்கியமான செய்தியொன்றைக் கொண்டுவந்திருந்தார். ‘மக்கத்துக் குறைஷிகள், ‘அஹாபீஷ்’ என்ற பாலைவன நாடோடிக் கூட்டத்துடன் உடன்படிக்கை செய்து, முஸ்லிம்களை எதிர்ப்பதற்குத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்’ என்பதே அவர் கொண்டுவந்த முக்கியத் தகவல்!   

அரபுகளின் பண்டைய வழக்கத்தின்படி, மக்காவுக்கு ஹஜ் அல்லது உம்ராவுக்காக வரும் யாரையும் தடுப்பது மாபெரும் குற்றம் என்பதால், இந்த மோதல் நிலை எந்த அளவு மோசமானது என்பதை உய்த்துணர்ந்தார்கள் அண்ணலார் (ஸல்). இப்போதுதான் இந்த மோதலைத் தவிர்க்கவோ, குறைஷிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வதற்கோ வியூகம் வகுத்தாக வேண்டும் என்ற பொறுப்பு, தானைத் தலைவரான நபிக்கு முன்னால் இருந்தது!  

நபியவர்கள் தம் நல்லறத் தோழர்களிடம் பொருத்தமான பரிந்துரையை வேண்டி நின்றார்கள்.  “அந்த நாடோடிக் கூட்டம் அவரவர் வீடுகளில் இருக்கும் நிலையில், அவர்களின் பெண்களும் பிள்ளைகளும் சேர்ந்திருக்கும் நிலையில், அவர்களைத் தாக்கட்டுமா?  அப்போதுதான் மக்கத்துக் குறைஷிகள் வலிமையிழந்து போவார்கள்.  அதன் பின்னர் குரைஷிகளைத் தனியாகச் சந்திக்கலாமே?”  என்று தம் தோழர்களிடம் கேட்டார்கள் அண்ணலார் (ஸல்).

அப்போது எழுந்தார் அருமைத் தோழர் அபூபக்ர் (ரலி).  “அல்லாஹ்வின் தூதர் அவர்களே!  நாம் யாருடனும் சண்டையிடுவதற்காக வரவில்லை.  ஆகவே எவரையும் தாக்க வேண்டாம். நாம் நமது நோக்கமான ‘உம்ரா’வை முன்வைத்து மக்காவுக்குச் செல்வோம். யாராவது நம்மைத் தடுத்தால், அல்லது நம்முடன் போர் புரிய வந்தால், அப்போது பார்த்துக் கொள்ளலாம். அந்த நிலை ஏற்படும்வரை, முதலில் தாக்குவது நாமாக இருக்கக் கூடாது.” பேசி முடித்தார் தோழர் அபூபக்ர்.

அதுவே சரியெனப் பட்டது அண்ணலாருக்கு.  “அல்லாஹ்வின் பெயர் கூறி, அனைவரும் முன்னேறிச் செல்லுங்கள்!” என்று தம் திருக்கூட்டத்தினருக்குக்   கட்டளையிட்டார்கள்.

முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு, மக்காவின் புறநகர்ப் பகுதியான ‘ஹுதைபிய்யா’வை நோக்கி வருகின்றார்கள் என்ற தகவலை அறிந்தவுடன், குறைஷிகள் தம் இளம் தளபதிகளான காலித் பின் வலீத், இக்ரிமா பின் அபீஜஹ்ல் ஆகியோரின் தலைமையில் படை திரட்டி, ஹுதைபிய்யாவை நோக்கி வந்துகொண்டிருந்த தகவல் முஸ்லிம்களுக்குக் கிடைத்தது!

‘வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்’ என்றில்லாமல், முஸ்லிம்கள் போரைத் தடுப்பதிலேயே எச்சரிக்கையாக இருந்தனர்! "மக்காவுக்குச் செல்லும் வழக்கமான வழியை விட்டு, வேறு ஏதேனும் சுருக்கமான வழியுண்டா?” என்று தம் ஆலோசகர்களிடம் அண்ணலார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். காரணம், மோதலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கமே.

அப்போது, ‘அஸ்லம்’ கிளையைச் சேர்ந்த ஒருவர், முஸ்லிம்களுக்கு மாற்று வழி ஒன்றைக் காட்ட முன்வந்தார். அவர் காட்டிய வழி சுருக்கமானதாக இருந்தாலும், நெடிதுயர்ந்த மலைகளையும், பார்த்தால் அச்சமூட்டும் பள்ளத்தாக்குகளையும் கொண்ட கரடுமுரடான வழியாக இருந்தது! வீணான போரைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் இருந்ததால், முஸ்லிம்கள் இப்பயணத்தில் பொறுமை காத்துப் போய்க்கொண்டிருந்தனர். அத்தகைய பொறுமையின் பயனாய், விரைவில் அவர்கள் ஒரு சமவெளிப் பகுதியை வந்தடைந்தனர். அவ்விடமே, ‘ஹுதைபிய்யா’.

முஸ்லிம்கள் வழக்கமான வழியைத் தவிர்த்து, வேற்று வழியில் தம்மைத் தாண்டி, மக்காவை நெருங்கிவிட்டனர் என்ற தகவலை அறிந்த காலித் பின் வலீத், தன் படையுடன் விரைந்து, மக்காவை நோக்கித் திரும்பிச் சென்றார். காரணம், முஸ்லிம்கள் மக்காவுக்கு ஒரு நாள் தொலைவில் வந்துவிட்டனர் என்ற குறைஷிகளின் எச்சரிக்கை உணர்வேயாகும்.

‘ஹுதைபிய்யா’வின் சமவெளிப் பகுதியைச் சென்றடைந்தவுடன், நபியவர்களின் ‘கஸ்வா’ என்று பெயரிடப்பட்ட ஒட்டகம் அவ்விடத்திலேயே படுத்துவிட்டது! ஒட்டக ஓட்டிகள் வழக்கமாக தம் ஒட்டகங்களை விரைந்து ஓட்டுவதற்காகக் கூறும், ‘ஹல்ல்ல்! ஹல்ல்ல்!’ எனும் சங்கேத மொழிகள் சற்றேனும் பயனளிக்கவில்லை.

“கஸ்வா அடம் பிடிக்கிறது” என்று மக்கள் பேசிக்கொண்டனர்.  “இல்லை! அடம் பிடிப்பது அதன் வழக்கமில்லை!  முன்பு யானைப் படையை மக்காவுக்குள் வர விடாமல் தடுத்த இறைவனே, இதையும் தடுத்துவிட்டான்” என்று கூறினார்கள் நபியவர்கள்.

அரபு வரலாற்று ஆய்வாளரும் நபிமொழி வல்லுனருமான இப்னுஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:  “அல்லாஹ்வுக்கு அப்போதும் இப்போதும் நன்றாகத் தெரியும், மக்காவாசிகள் முஸ்லிம்களாக மாறிவிடுவார்கள் என்று. அதனால்தான், ‘அப்ரஹா’வின் யானைப் படையையும் இந்த ‘கஸ்வா’வையும் தடுத்து வைத்து, இரத்தக் களறி ஏற்படாமல் தடுத்தான் அல்லாஹ். அப்ரஹாவைப் பொறுத்தவரை, அவனையும் அவனது படையையும் அல்லாஹ் அழித்துவிட்டான்.  ஆனால், பெருமானாரைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தடையானது, தேவையில்லாத இரத்தக் களறியைத் தவிர்ப்பதற்கே என்பது இறைவனின் நாட்டமாகும்.”  

மக்கத்துக் குறைஷிகளை எதிர்த்துப் போர் செய்வதில் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.  மக்காவில் அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் இருந்தனர்.  பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பியதெல்லாம், தமக்குக் கனவின் மூலம் அறிவிக்கப்பட்ட ‘உம்ரா’ வணக்கத்தை அமைதியாக நிறைவேற்றிவிட்டு, மதீனாவுக்குத் திரும்பிவிடுவதுதான். அதனால்தான், “எவனின்   கையில் எனது உயிர் இருக்கின்றதோ, அந்த அல்லாஹ்வின்மீது ஆணையாக! இந்த மக்காவின் புனிதத்தைப் பாதுகாத்து, தேவையில்லாமல் இரத்தம் சிந்தாமல் இருக்க, குறைஷிகள் எந்தப் பரிந்துரை வைத்தாலும், நான் அதைக் கட்டாயம் ஏற்றுக்கொள்வேன்” என்று உறுதியாகக் கூறினார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.  இவ்வாறு கூறியதன் மூலம், தமது நோக்கம், போர் செய்வதோ, இரத்தம் சிந்தச் செய்வதோ அன்று என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார்கள்.

ஹுதைபிய்யாவில் ஒரு கிணறு இருந்தது.  ஆனால், முஸ்லிம்கள் அங்கு இருந்தபோது அக்கிணற்றில் தண்ணீரில்லை.  தோழர்கள் இது பற்றிப் பெருமானாரிடம் முறைப்பாடு செய்தபோது, தமது தூளியிலிருந்து ஓர் அம்பை உருவி, அதை அந்தக் கிணற்றுக்குள் இறக்குமாறு தோழர்களிடம் கூறினார்கள் பெருமானார் (ஸல்).  அவ்வாறே அவர்கள் செய்தபோது, கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்கியது! அவர்கள் அங்கு இருந்தவரை, அத்தண்ணீரைக் கொண்டு பயன் பெற்றார்கள்; அவர்களின் கால்நடைகளுக்கும் புகட்டினார்கள். 

அப்போதிருந்த சூழ்நிலையோ, பதட்டமானது. தமது நோக்கம், ‘உம்ரா’வை நிறைவேற்றுவதேயன்றி, மக்காவாசிகளோடு போர் புரிவதற்கில்லை என்பதை மக்காவாசிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்;  அதை அவர்களுக்கு உணர்த்தத்  தமது குழுவிலிருந்து ஒருவரை அனுப்பவும் விழைந்தார்கள்.   இப்பொறுப்பை நிறைவேற்ற, ‘குழாஆ’ கோத்திரத்தைச் சேர்ந்த கர்ராஸ் பின் உமையா என்பவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.  மக்காவில் அவர் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கும் முன்பே, மக்காவாசிகள் அவர் பயணித்து வந்த ஒட்டகத்தைக் காயப்படுத்திக் கொன்றுவிட்டனர்!  அவரையும் கொல்ல முயன்றபோது, குறைஷிகளின் உடன்படிக்கையாளர்களான ‘அஹாபீஷ்’களின் இடைமறிப்பால், அவர் தப்பித்து, ஹுதைபிய்யாவுக்கு வந்து சேர்ந்தார்!

தூதுவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற உலக நியதியையும் மதிக்காமல், அவருடைய உயிருக்கு உலைவைக்கும் விதத்தில் கடுமையாக நடந்துகொண்ட மக்காவாசிகளைப் பற்றி மனக்கவலை கொண்டார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.  இந்த நிகழ்வுக்குப் பின், மக்காவாசிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார்களா?  இல்லை!  மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் என்று விரும்பி, மற்றொருவரை அனுப்பும் திட்டத்தைத் தோழர்களிடம் வைத்தார்கள்.  முதலில், உமர் (ரலி) அவர்களை அழைத்து, அவர்கள் முஸ்லிம்களின் தூதுவராக மக்காவுக்குச் செல்வது பற்றிக் கேட்டார்கள். 

“நீங்கள் என்னைப் போகச் சொன்னால், போகிறேன்.  ஆனால், என் குலமான ‘பனூ அதிய்’யைச் சேர்ந்த ஒருவர்கூட இப்போது மக்காவில் இல்லை.  இந்த நேரத்தில் எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், எனக்குப் பாதுகாப்பு அளிப்பவர் யாருமில்லை, நாயகமே!” என்றார் உமர்.  அவர் எந்த நிலையிலிருந்து மாறி, எந்த நிலைக்கு வந்தார் என்பது பற்றி, நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர் மக்காவாசிகள்.  அதனால், உமரின் மீது பாய்ந்து, பழிக்குப் பழி தீர்ப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பது, நபியவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அருமைத் தோழரின் பேச்சை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பெருமானார் (ஸல்) அவர்கள், சற்று நேர மவுனத்துக்குப் பின், உமரைப் பார்த்தார்கள்.  அப்போது உமர் தனது பரிந்துரை ஒன்றை முன்வைத்தார்கள்.  குறைஷிப் பெருங்குடியின் கிளையான ‘பனூ உமையா’வைச் சேர்ந்த உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களை அனுப்பலாம் என்பதே அவரின் பரிந்துரை.

தமது பெயர் முன்மொழியப்பட்டவுடன், உஸ்மான் (ரலி) தமது ஆர்வத்தையும் ஆசையையும் வெளிப்படுத்தி, அப்பணிக்கு ஆயத்தமானார்கள்.  அடுத்து, அத்தோழரின் தூதுப் பணி தொடங்கிற்று.  மக்காவைச் சென்றடைந்த உடனேயே, உஸ்மானுக்கு அபான் இப்னு சஈத் இப்னுல் ஆஸ் என்ற உறவினர் அடைக்கலம் அளித்தார்.  அடுத்து, அவர் உஸ்மானைத் தனது ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு, தான் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்ததைப் பொதுமக்களுக்கு அறிவிப்புச் செய்தார்.  

இதையடுத்து, உஸ்மான் குறைஷித் தலைவர்களைச் சந்தித்தார். “குறைஷிகளே!  என்னை அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக உங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்.  உங்களை அல்லாஹ்வின் பக்கமும் இஸ்லாத்தின் பக்கமும் அழைக்க என்னை அனுப்பியுள்ளார்கள்.  தனது மார்க்கமான இஸ்லாத்திற்கு வெற்றியைக் கொடுத்து, தன் இறுதித் தூதரான முஹம்மதை கண்ணியப்படுத்துவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான்.  உங்களுக்கும் இந்த இறுதித் தூதரான முஹம்மதுக்கும் இடையில் உள்ள வெறுப்பையும் எதிர்ப்பையும் இடைநிறுத்தம் செய்யுங்கள்.  அப்பணியை வேறு யாராவது செய்யட்டும். அல்லாஹ்வின் தூதரை அவர்கள் தோற்கடித்தால், நீங்கள் அவருடன் சண்டையிடாமல், உங்களுக்குரியதைப் பெற்றுக்கொள்வீர்கள்.  அதற்கு மாறாக நிகழ்ந்தால், என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  இந்தத் தூதருடனான போர்களில் தொடர்ந்து ஈடுபட்டதால், நீங்கள் களைத்துப் போயுள்ளீர்கள்.  உங்களுள் மிகச் சிறந்த தலைவர்களும் வீரர்களும் செத்துப் போய்விட்டார்கள்.  

“என்னை உங்களிடம் தூதுவராக அனுப்பிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள், இன்னொரு முக்கியமான செய்தியைக் கூறும்படியும் என்னை அனுப்பியுள்ளார்கள்.  அதாவது, நாங்கள் இப்போது வந்திருப்பது, உங்களுடன் சண்டையிடுவதற்காகவன்று.  இந்த இறையில்லமான கஅபாவைத் தரிசித்து, ‘உம்ரா’க் கடமையை நிறைவேற்றி, பலிப் பிராணிகளை அறுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாகத் திரும்பிச் செல்வதற்காகவே நாங்கள் வந்துள்ளோம்.”    

இப்படிச் சிறந்த தொகுப்பாகவும், துணிச்சலோடும் தூதுச் செய்தியை எடுத்துரைத்த உஸ்மானிடம், அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்த அபான் இப்னு சஈத் கூறினார்:  “உஸ்மான்!  நீ இந்தக் கஅபாவைத் ‘தவாஃப்’ செய்ய விரும்பினால், உனக்குத் தடையில்லை.  நான் உனக்குப் பாதுகாப்புத் தந்துள்ளேன்.”

அதற்கு உஸ்மான் மறுமொழி கூறினார்:  “மிக்க நன்றி!  அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்யாமல், அவர்களுக்கு முன் நான் ‘தவாஃப்’ செய்ய விரும்பவில்லை.”   
    
இதே நேரத்தில், ஹுதைபிய்யாவில் உஸ்மானின் பொறுப்பைப் பற்றிப் பேசிக்கொண்ட நபித்தோழர்களுள் சிலர்,  “உஸ்மானுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.  தமது பொறுப்பை நிறைவேற்றிவிட்டு, இப்போது நிம்மதியாகக் கஅபாவைத் தவாஃப் செய்துகொண்து இருப்பார்” என்று பேசிக்கொண்டார்கள். இவ்வுரையாடல் நபியவர்களின் காதில் விழுந்தபோது, “நான் உஸ்மானிடம் எதிர்பார்ப்பதெல்லாம், அவர் மக்காவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தாலும், நான் தவாஃப் செய்வதற்கு முன்பாக அவர் செய்ய மாட்டார் என்பதே” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அதுதானே நடந்தது?  அற்புதம் அல்லவா?  அல்லாஹ்வின் ஏற்பாடல்லவா இது?

இதையடுத்து, மக்கத்து இணைவைப்பாளர்கள் ‘குழாஆ’ கோத்திரத்து புதைர் இப்னு வரகா என்பவரைத் தம் சார்பிலுள்ள தூதுவராக ஹுதைபிய்யாவுக்கு அனுப்பினார்கள்.  அவரும் தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.  இந்தக் கிளையினர் நபியவர்கள் மீது அனுதாபிகளாயிருந்தனர்.  அது மட்டுமன்றி, இக்குலத்தார் நபியின் குலமான ‘பனூஹாஷிம்’களின் நட்பு ஒப்பந்தக்காரர்களும் ஆவர்.  

ஹுதைபிய்யாவைச் சென்றடைந்த புதைர், மக்கத்துக் குறைஷிகள் நபியவர்களுடன் போர் புரிய ஆயத்தமாக உள்ளனர் என்ற தகவலைத் தெரிவித்தார்.  அதன் அடையாளமாக, புலித்தோல்களைப் போர்த்தியும்,  பால் கறக்கும் ஒட்டகங்களை ஆயத்த நிலையில் வைத்தும், நெடுநாள் சண்டைக்காகவும் காத்து நிற்கின்றார்கள் என்று அறிவித்தார்.  

“நான் யாருக்கு எதிராகவும் போர் செய்ய வரவில்லையே” என்று கூறிய பெருமானார் (ஸல்) அவர்கள், தமது நிலையினை இன்னும் தெளிவாக விளக்கத் தொடங்கினார்கள்:  “எல்லாருக்கும் தெரிந்த உண்மை ஒன்று உண்டு. அதாவது, அடுத்தடுத்துப் போர்களில் ஈடுபட்டுக் குறைஷிகள் களைத்துப் போயுள்ளனர்.  அவர்களுக்கு ஒய்வு வேண்டாமா?  அவர்கள் எனக்குத் தடையாக இருக்காமல், என்னைத் தனியாக விடட்டும்.  பொது மக்களுடன் நான் தொடர்புடன் இருக்க எனக்கு வழி விடட்டும்.  எனது போதனையால் அவர்கள் உண்மையை விளங்கிக் கொண்டால், மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியும்.  நான் எனது முயற்சியில் பின்னடைவைப் பெற்றால், அந்த இடைவெளி நாட்களில் அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்குமல்லவா?  இதற்கெல்லாம் இசையாமல், என்னுடன் போர் செய்வது ஒன்றுதான் சிறந்ததாக அவர்கள் தேர்வு செய்தால், நான் அதற்கும் உடன்படுவேன்.  இது சத்தியம்!  கடைசி மூச்சு உள்ளவரை, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நல்ல தீர்ப்பை அல்லாஹ் வழங்கும்வரை நான் அவர்களை விடமாட்டேன்.”

புதைர் பின் வரகா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, மக்காவுக்கு விரைந்தார்.  அனைத்தையும் ஒன்று விடாமல் குறைஷித் தலைவர்களிடம் விளக்கிச் சொன்னார்.  அவர் சொன்னது மிகையானது என்று கருதிய அந்தத்  தலைவர்கள், அவரைப் புறக்கணித்தனர்.

இன்னும் குறைஷிகள் அடங்கியதாகத் தெரியவில்லை.  மீண்டும் மிக்ரஸ் பின் ஹப்ஸ் என்ற ஒருவரை ஹுதைபிய்யாவுக்கு அனுப்பினர்.  “இந்த ஆள் நம்பகத் தன்மை அற்றவன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.  தன்னுடன் ஐம்பது பேரை அழைத்துக்கொண்டு வந்து, முஸ்லிம்களுள் சிலரைச் சிறைப் பிடித்துச் செல்ல விரும்பி, ஹுதைபிய்யாவில் சுற்றிச் சுற்றி வந்தான். முஸ்லிம்கள் எச்சரிக்கையானார்கள்.  அந்த எதிரிகள் ஐம்பது பேரையும் சிறைப்பிடித்தார்கள்.  மிக்ரஸ் மக்காவை நோக்கித் தப்பியோடிவிட்டான். மிக்ரசின் வரவு, போர் செய்வதன்று என்பதால், முஸ்லிம்கள் சிறைப்பிடித்த ஐம்பது பேரையும் எந்த நிபந்தனையும் இன்றி நபியவர்கள் விடுவித்தார்கள்.  

குறைஷிகள் தமது அடுத்த முயற்சியாக, ‘அஹாபிஷ்’களின் தலைவரான அல்ஹுலைஸ் பின் அல்கமா என்பவரை முஸ்லிம்களிடம் அனுப்பினர். அவர் வருவதை அறிந்த பெருமானார் (ஸல்), “இவர் இறையச்சமுள்ள மனிதர். நாம் கொண்டுவந்திருக்கும் பலிப்பிராணிகளை அவருக்கு முன்னால் ஒட்டிவிடுங்கள்.  அதனால், நாம் உம்ராவுக்காகவே வந்துள்ளோம் என்பதை உணர்ந்து கொள்வார்” என்றார்கள்.  அதன்படியே தோழர்கள் செய்தனர்.

இதைக் கண்டவுடன், அல்ஹுலைஸ் நெகிழ்ந்து போனார்.  முஸ்லிம்களின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டவராக, நபியவர்களைக்கூடச் சந்திக்காமல் மக்காவுக்கு விரைந்தார்.  குறைஷித் தலைவர்களைப் பார்த்துச் சொன்னார்:  “இந்த மக்களைக் கஅபாவைத் தரிசிப்பதை விட்டுத் தடுப்பது அநியாயம்.  இது நமது நடைமுறைக்கு ஒவ்வாதது.  அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஜுதாம், கிந்தா, ஹிம்யர், லஹாம் போன்ற யமன் தேசத்து மக்களைக் கஅபாவுக்கு வர அனுமதிக்கிறோம்;  கஅபாவின் காவலரான அப்துல் முத்தலிபின் பேரனாகிய முஹம்மதை இங்கு வரத் தடை செய்கிறோம்!  என்ன அநீதி இது!”
    
இந்த நியாயமான வாதத்திற்கு மக்கத்துக் குறைஷிகளிடம் பொருத்தமான பதிலில்லை.  எனவே, அவர்கள்தாம் கஅபாவின் காவலர்கள் என்ற திமிரைக் காட்டினர்.  “பாலைவனத்து நாடோடியே உட்கார்!” என்று உறுமினார்கள்.  இதை அந்தத் தன்மானமுள்ள ஹுலைஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“அல்லாஹ்வின் இல்லமான கஅபாவுக்கு வணங்க வருவோரைத் தடுப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை.  இந்த அடங்காத் திமிரை நிறுத்தாவிட்டால், உங்களுக்கு எதிராக ‘அஹாபிஸ்’கள் அனைவரையும் திரட்டுவேன்.  ஜாக்கிரதை!” அல்ஹுலைசின்  எச்சரிக்கை மிகச் சூடாகவே வந்தது.  

ஒப்பந்தக்கரரின் மோதல் தப்பாமல் தன் வேலையைச் செய்தது.  தலைக்கனம் கொண்டவர்கள் தணிந்து போயினர்.  ஆத்திரம் அடங்கிய ‘அஹாபிஸ்’ தலைவர் அமர்ந்தார்.

அடுத்த கட்ட முயற்சி தொடங்கிற்று.  மற்றவர்களையே தூதனுப்புவதைவிட, குறைஷித் தலைவர்களுள் ஒருவரே சென்றால்.........?  அதுதான் அவர்களுக்குச் சரியாகப் பட்டது.

உர்வத்துப்னு மஸ்ஊத் அல்-தகஃபி!  யார் இவர்?  இவரின் தந்தை தாயிஃப் நகரத்தின் ‘தகீஃப்’ இனத்தவர்.  தாய் மக்கத்துக் குறைஷி.  முரடர்களுக்கிடையே ஒரு முன் யோசனைக்காரர்.  “நான் உங்களுள் ஒருவனல்லவா? நான் அந்த மனிதரிடத்தில் போய்ப் பேசட்டுமா?”என்றார் உர்வா.  அரபுக் கோத்திரத்தின் செல்வாக்குப் பெற்ற ஒருவர் முன்வந்தால் மறுப்பார்களா?

அவர்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் உர்வா கூறினார்:  “குறைஷிகளே! நீங்கள் தூதுவர்களை அனுப்பி, நீங்கள் எதிர்பார்க்கும் மறுமொழி கிடைக்கப் பெறாவிட்டால், உணர்ச்சி வசப்படுகிறீர்கள்.  அந்தத் தூதுவர் மீது வசைப் பாட்டுப் பாடுகின்றீர்கள்.  அது போன்ற நிலை எனக்கு ஏற்படுவதை நான் விரும்பவில்லை.  அவ்வாறு நடந்துகொள்ளமாட்டீர்கள் என்பதை உறுதி மொழியாகத் தாருங்கள்.  அப்போதுதான் நான் அந்த மனிதரிடம் உங்கள் பிரதிநிதியாகப் போவேன்.” 

உர்வாவின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டனர் மக்கத்துத் தலைவர்கள். இயல்பாகவே, உர்வா தற்பெருமையும் தலைக்கனமும் கொண்டவர். தலைவர்களுக்கு நடுவில் தனது உயர்வைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனமானவர். ஹுதைபிய்யாவுக்கு வந்து சேர்ந்தவர், இடையில் வேறு யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல், அல்லாஹ்வின் தூதரிடம் ஆணவத்தோடு வந்து நின்று, முகத்தில் கடுமையைத் தேக்கி வைத்துக் கேட்டார்:  “ஏய் முஹம்மதே!  உன் இனத்தைச் சேர்ந்த மக்களை நீயே கெடுத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ பார்க்கவில்லையா?  உனது அரபுக் குலத்தில் உனக்கு முன் இப்படி யாரும் தம் மக்களுக்குத் தீங்கு விளைத்தது பற்றிக் கேட்டிருக்கிறாயா?  உன்னைச் சூழ்ந்து அமர்ந்திருக்கும் மக்களில், முகங்கொடுத்துப் பேசத் துணிந்தவர்கள் யாரையும் காணோமே!  இவர்களுள் யாரும் செல்வாக்கும் உயர்வும் உள்ளவர்களாக நான் காணவில்லையே! எங்களுடன் மோதிச் சண்டையிட்டு நீர் தோற்றுவிட்டால், உம்மை அந்தரத்தில் விட்டுவிட்டு ஓடிப்போகும் கோழைகளையல்லவா நான் பார்க்கிறேன்!”  துடுக்காகவும் மிடுக்காகவும் பேசினார் உர்வா.

குறைஷி, தகஃபி, அஸத், கத்ஃபான் போன்ற உயர் குலத்தவர்களுக்கு முன்னால், இறைத்தூதருடன் அப்போது அமர்ந்திருந்த அஸ்லம், கிஃபார், ஜுஹைனா போன்ற இரண்டாந்தரக் குலத்தவர்களைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறினார் உர்வா.   

இந்த ஆணவப் பேச்சைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்:  “குலப்பெருமை பேசித் திரியும் குறைஷிகளைவிட, இன்று கண்ணியப்படுத்தப்படும் மற்ற இனத்தவர்களைவிட, இந்த ஏழை மக்களின் நன்மைத் துலாக்கோல் கனத்து நிற்பதை மறுமையில் காண்பீர்.”

உர்வாவின் ஆணவப் பேச்சைக் கேட்டுச் சும்மா இருப்பது சரியில்லை என்று நினைத்த அபூபக்ர் (ரலி) போன்ற தோழர்கள், அவரைக் கடுஞ்சொற்களால் சபித்தார்கள்.  அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத உர்வா, “என்னை கண்ணியப் படுத்தி அமரச் செய்துள்ளீர்கள் என்ற ஒரே காரணத்தால்தான் நான் உங்களைச் சபிக்காமல் இருக்கிறேன்.  இல்லாவிட்டால், இதைவிட மோசமான சாபத்தால் உங்களைத் திட்டியிருப்பேன்.  நான் மறு பேச்சுக் கொடுக்காமல் மவுனமாக இருப்பதே உங்களுக்கு நான் செய்யும் நற்பேறாகும். இது, நான் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தியதாகும்” என்றார்.

‘பட்ட கடன்’ என்பது, மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்வதற்கு முன்னால், உர்வா செய்த ஒரு கொலைக்குப் பலித்தொகையாகப் பத்து ஒட்டகங்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் கொடுத்திருந்தார்கள்.  அதைத் திருப்பிச் செலுத்தாமல், அதுவரைத் தாமதித்துவந்தார் உர்வா.  தன் மீது அபூபக்ரின்  வசை மொழியை, அதற்குப் பரிகாரமாக்கினார் இந்த தகஃபி!  

அபூபக்ரும் மற்றவர்களும் நபியவர்களை எத்துணை உவப்புடன் மதித்தார்கள் என்பதற்கு, உர்வாவுக்குப் பேச்சால் அவர் பதிலடி கொடுத்தது சான்றாகும். நபித்தோழர்கள் தம் தலைவரை மற்றவர்கள் அவமதிப்பதோ, திட்டுவதோ, மரியாதைக் குறைவாக நடத்துவதோ, தம்மால் சகித்துக்கொள்ள முடியாதது என்று எப்போதும் உண்மைப் படுத்தியவர்களாவர்.  அவர்கள் நபியுடன் பேசும்போது, “எம் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறுவது, வெற்றுச் சொற்கள் அல்ல என்பதை அவர்களின் செயல்பாடு ஒவ்வொன்றும் நிரூபித்துக் காட்ட வல்லதாகும்.  
    
நபிமொழிக் கலை வல்லுநர் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி கூறுகின்றார்: உர்வாவைப் பொறுத்தவரை, ஒருவர் தன் இனத்தவரோடு போரிட்டுத் தோல்வியடைவது பெரிய இழுக்காகும்.  ஆனால், இஸ்லாத்திற்காக ஒருவர் தன் இனத்தவருடன் போர் புரிவது போற்றத் தக்கதாகும்.  அதில் தோல்வியைத் தழுவி, ‘ஷஹீத்’ எனும் பேற்றை அடைவது, அதைவிடச் சிறந்ததாகும்.  எது வெற்றி, எது தோல்வி என்பதை இஸ்லாம் தீர்மானிப்பதுவே உண்மையாகும். 

பேச்சுக்கிடையே, உர்வா உணர்ச்சி வயப்படும்போது, தன் கையை நீட்டிப் பெருமானாரின் தாடியைப் பிடிக்க முயல்வார்.  அப்போதெல்லாம், அண்ணலாரின் அருகில் அவர்களுக்குப் பாதுகாவலராக  நின்றுகொண்டிருந்த அல்முகீரத்துப்னு உக்பா என்ற நபித்தோழர், உர்வாவின் கையைத் தனது வாளின் அடிப்பகுதியால் தட்டிவிடுவார்.  அத்துடன், “உன் கையை உன்னோடு வைத்துக்கொள்!  அது எல்லை தாண்டி இறைத்தூதரின் தாடிக்கு வந்தால், உன் கை உன்னிடம் திரும்பி வராது!” என்று கண்டித்தார்.  இம்மாதிரி, இதற்குமுன் தன்னை அவமரியாதையாக  யாரும் நடத்தியதில்லை என்பதால், அதுவன்றியும், அவர் சாதாரண ஆள் என்பதால், உர்வா அதிர்ச்சியால் குழம்பிப் போனார்!  

“யார் இந்த ஆள்?” என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார் உர்வா.  காரணம், பிறர் அறியாத விதத்தில் அவர் முகக் கவசம் அணிந்திருந்தார்.

“தெரியாதா?  இவர் உம்முடைய மருமகன் அல்முகீராதான்” என்றார்கள் பெருமானார் (ஸல்).

அதிர்ச்சியுற்றார் உர்வா!  மாமனாகிய தன்னிடம் மருமகன் இப்படி மரியாதைக் குறைவாக நடந்துகொள்வதா?  (அரபுகளின் வழக்கப்படி, மாமன் தந்தைக்குச் சமமாக மரியாதையுடன் மதிக்கப்பட்டார்.)  ஆனால், இஸ்லாம் எப்படி மனிதர்களை மதிப்பதில் உயரிய மாற்றத்தைச் செய்துள்ளது என்பதை உர்வா அப்போதுதான் கண்டார்!  எல்லாரையும்விட, இறைத்தூதருக்கல்லவா மதிப்பும் மரியாதையும் நபித்தோழர்கள் கொடுக்கிறார்கள் என்பதைக் கண்முன் கண்டு வியந்து நின்றார் உர்வா!

தாங்க முடியாத தலைகுனிவுடனும், அடக்க முடியாத அதிர்ச்சியுடனும், உர்வா மக்காவுக்குத் திரும்பினார்.  அவர் கூறிய செய்தி, குறைஷித் தலைவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.  உர்வா கூறினார்:  “குறைஷிகளே!  நான் இதற்கு முன் மன்னர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன்.  ரோமப் பேரரசர் சீசரையும், பாரசீக மாமன்னர் குஸ்ரூவையும், அபிசீனியாவின் வேந்தர் நஜ்ஜாஷியையும் சந்தித்து வந்துள்ளேன்.  ஆனால், முஹம்மதை அவருடைய தோழர்கள் நேசிப்பது போன்றும், அவருக்கு மரியாதை செலுத்துவது போன்றும், ஒருபோதும் ஒருவரையும் நான் கண்டதில்லை!  அவர் எச்சில் துப்பினால், அது கீழே விழுமுன் அவருடைய தோழர்கள் அதைத் தம் கைகளில் தாங்கி, தம் முகத்திலோ உடலிலோ தடவிக்கொள்கிறார்கள்!  அவர் பேசத் தொடங்கினால், விரைந்தோடி வந்து கேட்கிறார்கள்!  அவரோடு பேசினால், தங்கள் குரலைத் தாழ்த்திக் கொள்கின்றார்கள்!  மரியாதையின் நிமித்தம், அவர்கள் அவரை அன்னாந்துகூடப் பார்ப்பதில்லை!  அவரை ஒருபோதும் அவர்கள் தனித்து விட்டதில்லை!  இத்தகைய தலைவர் உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பைத் தந்துள்ளார்; எனவே அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.” 

அப்போது உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்தியதன் விளைவாகத்தான், உர்வா இப்னு மஸ்ஊத் அல்-தகஃபி தன் பிந்திய வாழ்க்கையில் இஸ்லாத்தைத் தழுவி, ஈருலக வெற்றியைப் பெற்றுக்கொண்டார்.  

‘பைஅத்துர் ரிழ்வான்’:

உஸ்மான் (ரலி) அவர்கள் இன்னும் மக்காவில்தான் இருந்து, குறைஷிகளோடு இழுபறியில்தான் ஈடுபட்டிருந்தார்கள்.  ஆனால், அவர்களைப் பற்றி ஒரு வதந்தி ஹுதைபிய்யாவில் பரவத் தொடங்கிற்று.  அதாவது, அவருக்கு முந்தைய தூதுவரைக் கொலை செய்ய முயன்றது போல், உஸ்மானையும் கொலை செய்துவிட்டதாக ஒரு வதந்தி பரவிற்று. குறைஷிகள் கொலை செய்யவும் அஞ்சாத கொடும்பாவிகள் ஆனதால், முஸ்லிம்கள் அதை உண்மையென்று நம்பிவிட்டார்கள்.
    
உடனே, அவர்களுள் பெரும்பாலோர் பெருமானாருடன் எங்கு நிழலுக்காக ஒதுங்கியிருந்தார்களோ, அந்த ‘பனூ நஜ்ஜார்’களின் மரத்தடி நிழலிலேயே அனைவரும் ஒன்றுகூடினார்கள்.  ‘பழிக்குப் பழி!’ என்ற பேச்சே அவர்கள் அனைவரின் பேச்சாக இருந்தது!

அப்போது அண்ணலார் (ஸல்) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்:  “உங்கள் அனைவரிடமும் ஓர் உறுதிமொழியை வாங்கும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறித் தம் பாதுகாவலர்களான ‘பனூ நஜ்ஜார்’களைப் பார்த்தார்கள்.  மதீனாவின் பெருங்குடியினரான ‘கஸ்ரஜி’களின் கிளையினர் அல்லவா அவர்கள்?  மேலும், பெருமானாரின் தாய்வழிச் சொந்தக்காரர்கள் அல்லவா?  அதனால், முதலாவதாக அவர்களிடம் உறுதிமொழி வாங்கத் தொடங்கினார்கள்.

“அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் நாங்கள் எங்கள் உயிர்களை இழக்கத் தயாராக இருக்கிறோம்!  மக்கத்துக் குறைஷியருக்கு எதிரான எங்கள் சண்டையை விட்டு நாங்கள் வெருண்டோட மாட்டோம்!  அல்லாஹ்வின் தூதரே!  உங்கள் இதயத்தில் என்ன இருக்கின்றதோ, அதற்காக உடன்பட்டு, நாங்கள் உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறோம்!”

இதுதான் ‘பைஅத்துர் ரிழ்வான்’ எனும் உயிர்ப்பணய உடன்படிக்கை!

அப்போது அங்கிருந்த வீரப் பெண்மணி உம்மு அம்மாரா கூறுகின்றார்:  “இந்த உடன்படிக்கையைக் கேட்டவுடன், நாங்கள் இருந்த கூடாரத்தின் ஊன்றுகம்பைப் பிடுங்கி எடுத்தேன்.  வீச்சுக் கத்தியை எடுத்து என் இடுப்பு வாரில்  செருகிக் கொண்டேன்.  இந்தத் தயாரிப்பு, அந்த நிமிடத்தில் யாராவது இறைத்தூதரைத் தாக்க வந்தால், தடுத்து நிறுத்துவதற்காக!  என் கணவரோ, தன் கையில் வாளைப் பிடித்த நிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்!”

நபித்தோழர்கள் தனித்துவம் பெற்றவர்கள்.  அவர்களுள்ளும், ‘அன்சார்’கள் சிறப்பு வாய்ந்தவர்களாவர்.  அவர்கள் ஒவ்வொருவரின் தனித் திறமைகளை அறிந்திருந்த பெருமானார் (ஸல்) அவர்கள் அவரவருடைய தன்மைக்குத் தக்கபடி, உடன்படிக்கை செய்துவைத்தார்கள்.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும்.  அதாவது, இந்த மரத்தடி ஒப்பந்தத்தை உஸ்மான் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ‘ஷியா’க்கள் ஒரு பெரிய வாதமாக எடுத்து வைக்கின்றார்கள்!  அது போன்றே, ‘பத்ரு’ப் போரிலும் அவர் கலந்துகொள்ளவில்லை என்று உஸ்மானைக் குற்றப்படுத்துகின்றனர்.  இவை தவறான குற்றச்சாட்டுகளாகும்.
    
முதலில், மக்காவில் உஸ்மான் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி கிடைத்ததால்தான், இந்த மரத்தடி ஒப்பந்தமே நடந்தது.  மேலும், உஸ்மானுக்காக நபியவர்கள் தமது ஒரு கையைக் காட்டி, “இது உஸ்மானுடைய கை” என்று கூறி, அதன்மீது தமது இன்னொரு கையை வைத்து, “நான் உஸ்மானுக்காக உறுதிமொழி எடுக்கிறேன்” என்று கூறினார்கள்.  

இரண்டாவதாக, ‘பத்ரு’ப் போருக்குப் போனபோது, தன் மகள் ருகையாவின் கணவரான உஸ்மானை, ருகையா மரணப் படுக்கையில் இருந்ததால், அவரைக் கவனித்துக்கொள்ளுமாறு நபியவர்கள் கூறியிருந்தார்கள்.  அதனால், அவர் அப்போரில் கலந்துகொள்ளவில்லை.  

அல்லாஹ்வின் அருள்மறை கூறுகின்றது:  “(நபியே!) திண்ணமாக நாம் உம்மைச் சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.  (ஏனெனில்,) அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காகவும், அவனுக்கு நீங்கள் உதவி செய்வதற்காகவும், அவனை நீங்கள் கண்ணியப் படுத்துவதற்காகவும், காலையிலும் மாலையிலும் அவனை நீங்கள் துதிப்பதற்காகவும்தான் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.  திண்ணமாக, எவர்கள் உம்மிடம் உடன்படிக்கை செய்கிறார்களோ, அவர்கள் உடன்படிக்கை செய்வதெல்லாம், அல்லாஹ்விடம்தான்.  அல்லாஹ்வுடைய கை அவர்களின் கைகளுக்கு மேல் உள்ளது.  எனவே, எவர் அதனை முறித்துவிடுகின்றாரோ, அவர் முறிப்பதெல்லாம் அவர் மீதே கேடாகும்.  எதன் மீது அல்லாஹ்விடம் உறுதிமொழி அளித்தாரோ, அதனை எவர் நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு மாபெரும் கூலியை அல்லாஹ் வழங்குவான்.” (48:8-10)

இந்த மரத்தடி ஒப்பந்தத்தைப் பற்றி அல்லாஹ் மேலும் கூறுகின்றான்:  “(நபியே!) அந்த மரத்தடியில் உம்மிடம் அவர்கள் உடன்படிக்கை செய்தபோது, முஃமின்களைப் பற்றி அல்லாஹ் திட்டமாகப் பொருந்திக்கொண்டான்.  மேலும் அவர்களுடைய உள்ளங்களில் இருப்பதையும் அறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்து, அண்மையிலான வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக அளித்தான்.” (48:18)

இந்த ஒப்பந்தத்தில் பங்குபற்றிய நபித்தோழர்களைப் புகழ்ந்துரைத்தான் அல்லாஹ்.  அவனின் நேரடிப் பார்வை இதன் மீது இருந்ததால், அவர்கள் தமக்குள் உடன்படிக்கை செய்தபோது, அல்லாஹ்வாகிய தன் கை இறைத்தூதரின் கை மீது இருந்தது என்று சிறப்பித்துக் கூறினான்.  நபியவர்கள், அந்த உடன்படிக்கை நிறைவேறியபோது, தம் தோழர்களைப் பார்த்து, “இந்தப் புவியில் உள்ள மனிதர்களுள் நீங்கள்தாம் சிறந்தவர்கள்” எனக் கூறினார்கள்.  

இந்த உடன்படிக்கை முடிந்த பின்னர், மக்காவிலிருந்து உண்மைச் செய்தி வந்தது.  அதன்படி, உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதாக வந்த செய்தி வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது. உண்மையில், இந்த மரத்தடி உடன்படிக்கையானது, போரில் முடிவடையாவிட்டாலும், உண்மை விசுவாசிகளுக்கு அது ஒரு பரிசோதனை என்பதையும், அதற்காக அவர்கள் நற்கூலி வழங்கப்படுவார்கள் என்பதையும் உறுதிப் படுத்துகின்றது.

பின்னர் குறைஷிகள் சுஹைல் பின் அம்ர் என்ற குறைஷித் தலைவரை நபியிடம் பேச்சுவார்த்தை நடத்தும்படி அனுப்பிவைத்தார்கள். 

இந்தக் குறைஷிப் பிரதிநிதி, தன் மக்கத்துத் தோழர்களின் நிபந்தனைகளில் மிகவும் உறுதியாக நின்றார்.  எவ்வாறேனும் முஹம்மதை மக்காவிற்குள் இப்பயணத்தில் நுழையவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்பது, அவற்றுள் ஒன்றாகும்.  இந்தப் பிடிவாத நிலைபாடு, கஅபாவுக்கு வருவோரைத் தடை செய்யலாகாது என்ற அறியாமைக் காலத்துக் குறைஷிகளின் நிலைபாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.     

குறைஷிப் பிரதிநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, நபியவர்கள் கஅபாவுக்குச் சென்று தமது வணக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்பதில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உறுதியாக நின்றார்கள். ஆனால், குறைஷிகள் ‘விடாக்கண்டர்களாகவும் கொடாக்கண்டர்களாகவும்’ நின்றனர்.  இறுதியில், அந்தக் குறைஷிகளின் இந்த நிபந்தனையை ஆவணப் படுத்தவேண்டும் என்று அண்ணலார் விரும்பினார்கள்.  காரணம், அன்னார் விட்டுக் கொடுத்த நிகழ்வு எழுத்தில் பதிவு செய்யப்பட்டால், ஒரு வகையில் அது வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதே அவர்களின் எண்ணமாகும்.  

இறைத்தூதரின் இந்த விட்டுக்கொடுத்தல், இறைவனின் ஏற்பாடாகும்;  அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அல்லாஹ்வால் வழிகாட்டப்பட்ட ஒன்றாகும்;  நபியின் முடிவன்று என்பது, தம் அன்புத் தோழர்களுக்கும் விளங்கும் என்று கருதினார்கள்.  தமது அழைப்பின் பேரில் ‘உம்ரா’ வணக்கத்தை நிறைவேற்ற வந்த தோழர்களுக்கு, நபியவர்கள் தம் கொள்கையில் உறுதிப்பாடு உடையவர்கள் என்பதையும், தாம் குறைஷிகளால் நீதிக்குப் புறம்பாக நடத்தப்படுகிறார்கள் என்பதை, தோழர்களை அறியச் செய்யும் என்று அவர்கள் நம்பினார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையில் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது என்பதைத் தம் கண்முன்னால் கண்டுகொண்டிருந்த உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அன்னாரின் அதரங்கள் துடித்தன!  சூழ அமர்ந்திருந்த தோழர்களை விலக்கிக்கொண்டு நபியவர்களின் முன் சென்ற உமர் அவர்கள் தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு கேட்டார்கள்:

“தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பது உண்மையல்லவா?”   

“ஆம்;  உண்மைதான்.”  அமைதியாகக் கூறினார்கள் அண்ணலார் (ஸல்).  

“நாயகமே!  நாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட ‘முஸ்லிம்கள்’ அல்லவா?” எனக் கேட்டார் உமர்.

அதற்கும், “ஆம்” என்றே மறுமொழி கூறினார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.

உமரின் உணர்ச்சி அடங்கவில்லை.  “இவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத இணை வைப்பாளர்கள்தாமே?” என்றார்கள்.

“ஆம், என் அன்புத் தோழரே!” என்று அதற்கும் மறுமொழி அளித்தார்கள் மாநபி.

“அவ்வாறாயின், நமது உண்மை மார்க்கத்தைப் பொய்யாக்கி, இவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமா?”  உமரின் உணர்ச்சிக் கொந்தளிப்பால் வெளிவந்த சொற்கள் இவை!

அண்ணலார் அதற்கும் மறுமொழியளித்தார்கள்:  “நான் அல்லாஹ்வின் அடிமையாவேன்.  அதனால், அவனுக்குக் கீழ்ப்படிவேன்.  அவன் என்னைக் கைவிட மாட்டான்.”

உமரின் உணர்ச்சி  அடங்கவில்லை!  அண்ணலாரின் முன் இதற்கு மேல் பேசவும் வலிமையற்றவராக ஆனார் உமர் (ரலி).

தமது அடுத்த முயற்சியாக, அல்லாஹ்வின் தூதருடைய அணுக்கத் தோழரான அபூபக்ர் (ரலி) அவர்களிடம் போனார்.  நபியவர்களிடம் தாம் கேட்ட அதே வினாக்களை அபூபக்ரிடமும் கேட்டார்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அடக்கத்துடன் சொன்னார்கள்:  “நபியவர்கள் சொல்வதைக் கேளும்.  அவர்கள் அல்லாஹ்வின் தூதர்.  அதனால், அவர்களை அல்லாஹ் கைவிட மாட்டான்.”

உமர் அடங்கிப் போனார்.  சில ஆண்டுகளுக்குப் பின், இந்த ஒப்பந்தத்தின்போது தாம் நடந்துகொண்ட கடுமைத் தன்மை பற்றி வருந்தினார்கள் உமர்(ரலி).  அல்லாஹ்விட மிருந்து வந்த ‘வஹி’யின் அடிப்படையில்தான் நபியவர்கள் செயல்பட்டார்கள்;  அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்ட ஒன்றுக்குக் கட்டுப்பட்டு, அவனின் பொருத்தத்தை அடைந்துகொள்ளும் விதத்தில்தான் அன்னார் செயல்பட்டு, அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

உமர் (ரலி) அவர்களின் வாதத்திலும் உண்மை இருந்தது.  அவர்களின் தூய உள்ளத்தால், இஸ்லாம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாதாடினார்கள் என்பதையும் அல்லாஹ் அறிவான்.  உமர் அவர்கள் தமது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டபோது சொன்னார்கள்:  “அப்போது நான் நடந்துகொண்ட தவறான வாதத்தால் கடுமையாக நடந்துகொண்டதற்குப் பகரமாக, அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவதற்காக, தொழுதேன்;  நோன்பு வைத்தேன்; தர்மம் கொடுத்தேன்;  அடிமைகளை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தேன்.  அன்று நான் இறைத்தூதரின் செயலுக்கு மாறாக நடந்துகொண்ட முறைக்காக அல்லாஹ் என்னை மன்னித்தருள வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் செய்தேன்.”

முஸ்லிம்களுக்கும் மக்காக் காஃபிர்களுக்கும் இடையிலான உடன்படிக்கையை எழுத்தில் வடிக்க ஆயத்தமானார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.  நிபந்தனைகளை ஒவ்வொன்றாக எழுதத் தொடங்கும் முன்பு,  அலி (ரலி) அவர்களிடம், “முதலில் ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்று எழுதி, நிபந்தனைகளை ஒவ்வொன்றாகத்  தொடங்குங்கள்” என்று கூறினார்கள் அண்ணலார். 

அப்போது சுஹைல் இடைமறித்தார்!  “எங்களுக்கு அல்லாஹ்வைத் தெரியும்.  ஆனால், ரஹ்மான் ரஹீம்களைத் தெரியாது.  ஆகவே, ‘பிஸ்மிக்கல்லாஹும்ம’ என்று எழுதுங்கள்” என்றார்.  தாம் முன்பு கூறியதை மாற்றிவிட்டு, சுஹைல் கூறியபடி அலியை எழுதச் சொன்னார்கள் நபியவர்கள்.  அலி மாற்ற மறுத்தார்.  எனவே, நபியவர்களே தம் கையால் அந்த வாசகத்தை அழித்தார்கள்.

முதலில், அந்த உடன்படிக்கையின் தலைப்பாக, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மதுக்கும் மக்கத்துக் குரைஷிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம்’ என்று எழுதச் சொன்னார்கள்.  அதை அலியவர்கள் எழுதத் தொடங்குவதற்கு முன்னால், சுஹைல் குறுக்கிட்டார்.  “உம்மை அப்துல்லாஹ்வின் மகன் என்றுதான் எங்களுக்குத் தெரியும்; அல்லாஹ்வின் தூதர் நீர் என்பது எங்களுக்குத் தெரியாது.  அல்லாஹ்வின் தூதர் என உம்மை நாங்கள் ஏற்றுக்கொண்டால், இத்தகைய ஒப்பந்தத்தின் தேவையே ஏற்பட்டிருக்காதே.  ஆகவே, ‘அப்துல்லாஹ்வின் மகனான முஹம்மது’ என்றே எழுதக் கூறுங்கள்” என்றார் சுஹைல். 

நபியவர்கள் அலியிடம், சுஹைல் கூறியவாறே மாற்றி எழுதச் சொன்னார்கள்.  அலி மீண்டும் மாற்றி எழுத மறுத்தார்.  நபியவர்கள், அந்த வாசகம் எழுதப்பட்ட இடத்தைத் தமக்குக் காட்டும்படிக் கூறி, அதைத் தம் கையாலேயே அழித்தார்கள்.  அல்லாஹ் என்பதையும், அல்லாஹ்வின் தூதர் என்பதையும் தம் கையால் அழிக்க மறுத்த அலி அவர்களின் மனப்பாங்கு, முஸ்லிம்கள் அனைவராலும் அறியத் தக்கதே.  உண்மை முஸ்லிம் எப்படி இதைச் செய்வார்?

சூழ இருந்த தோழர்கள், அதுவரை தாம் கண்டுகொண்டிருந்த உண்மைக்கு மாறான கட்டாயச் சட்டத்தை, மக்காவுக்குத் தாம் ‘உம்ரா’வை நிறைவேற்ற அதன் அருகில் வந்துவிட்ட நிலையில், ‘வரக்கூடாது என்று தடுக்க, இவர்கள் யார்?’ என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

இந்த இடைத் தடைக்குப் பின், ஒப்பந்தம் இவ்வாறு எழுத்துருப் பெற்றது:

இரு தரப்பினரும் எதிர்வரும் பத்தாண்டுகளுக்குப் போர் நிறுத்தம் செய்துகொள்வது என்றும், மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சமாதானத்தின் உயர்வை மதித்து, சண்டையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மக்காவிலிருந்து யாராவது தன் பொறுப்பாளரின் அனுமதியின்றி, முஸ்லிமாகி, முஹம்மதின் பக்கம் சென்றுவிட்டால், அவரை மக்கத்துக் குறைஷிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.

மதீனாவிலிருந்து யாராவது மக்கத்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால், அவர் முஹம்மதிடம் திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டார்.

இரு தரப்பினரும் தமக்குள் உரிய புரிந்துணர்வுடனும்  நல்லெண்ணத் துடனும்  நடந்துகொள்ள வேண்டும்.

கள்ளத்தமும் கடுமைத்தனமும் களையப்பட வேண்டும்.

முஹம்மதுடன் எந்த இனத்தவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பினால், அவ்வாறே செய்துகொள்ளலாம்; எவரேனும் குறைஷிக ளுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய நாடினால், அவர்களும் அவ்வாறே செய்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ராச் செய்ய முடியாது.  மதீனாவுக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும்.  அடுத்த ஆண்டில், உம்ராவின் நாட்டத்துடன் முஹம்மதும் தோழர்களும் மக்காவுக்கு வருவதற்கு முன்னால், மக்காவாசிகளான நாங்கள் மக்காவைக் காலி செய்துவிட்டு வெளியில் சென்றுவிடுவோம்.  அப்போது முஸ்லிம்கள் கஅபாவில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றை மூன்றே நாள்களில் செய்துவிட்டு, மக்காவை விட்டுக் கிளம்பிப் போய்விட வேண்டும். 

முஸ்லிம்கள் எந்தப் போராயுதத்தையும் சுமந்துவரக் கூடாது.  அரபுகள் வழக்கமாகத் தங்கள் உறையிலிட்டு வைத்திருக்கும் கத்தி மட்டும் அனுமதிக்கப்படும். 

முஸ்லிம்களுக்குச் சாதமில்லாத, ஒரு பக்கச் சார்புடைய இந்த உடன்படிக்கைக்குச் சம்மதித்ததன் மூலம், எதிர்காலத்தில் நபியவர்கள் அமைதியுடன் இஸ்லாத்தைப் பரப்பும் சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டார்கள்.  வெறுப்பான சூழல் விலகி, சாதகமான சூழலை உண்டாக்கிவிட்ட பின்னர், முஸ்லிம்கள் மக்கச் சமுதாயத்தில் அச்சமின்றிப் பரவி, தமக்குக் கிடைத்த பேரின்ப வாழ்க்கையைப் பிறருக்கும் எடுத்துரைத்து, அழைப்புப் பணி செய்யத் தக்க வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெற்றார்கள்.  இதனால்தான், அரபுத் தீபகற்பம் முழுதும் இஸ்லாம் கோளோச்ச முடிந்தது.  எதிர்காலத்தில் வரவிருக்கும் நிலையான அமைதிக்காக, தற்காலிகமாகக் கிடைக்கும் சாதகமானதை விட்டுக் கொடுப்பது அறிவுடைமை ஆகும்.  ஒப்பந்தம் உண்டாக்கும்போது, இது போன்ற இழப்புகளைத் தாங்கித்தான் ஆகவேண்டும்; இதில் நமது சுய கவுரவத்திற்கு இழப்புண்டானாலும் சரியே என்பதுதான் நீதித் தூதர் (ஸல்) அவர்களின் நிலைபாடு.  

இந்த ‘ஹுதைபிய்யா’ நிகழ்வு ஒரு மாபெரும் சோதனையாகும்.  அதனால்தான், மக்கத்து முஹாஜிர் ‘மாணவர்’களான நபித்தோழர்கள், ‘ஹிஜ்ரா’ எனும் பயணச் சோதனை மற்றும் அவர்கள் மதீனாவில் எதிர்கொண்ட போர்கள் ஆகியவற்றால் துவண்டு போயிருந்தார்கள். இந்த உடன்படிக்கையின் பின்னர், இனிப் பத்தாண்டுகளுக்கு மக்காவாசிகள் முஸ்லிம்களை நோக்கிப் படையெடுத்து வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையால், ஓரளவு ஆறுதல் பெற்றார்கள் முஸ்லிம்கள்.  அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்பதற்கான தேர்வில் பொறுமையை மேற்கொண்டு வெற்றி பெற்றார்கள் எனக் கூறலாம்.  இந்த ஒப்பந்தத்தினால், உமர் இப்னுல் கத்தாப் (ரலி) போன்ற தோழர்களுக்கு இலகுவில் ஜீரணம் ஆக்கிக்கொள்ள முடியாத ஒன்றாகப்  பொறுமை எனும்  சோதனையை மேற்கொண்டு இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இத்தகைய சோதனை, ஒப்பந்தத்துடன் முடிந்துவிடப் போவதில்லை.  நிபந்தனைகள் எழுதப்பட்ட பின்னர், அதில் இரு பக்கத்தாரும் கையொப்பம் இடாத  நிலையில், முஸ்லிம்களுக்கு ஒரு பெருஞ்சோதனை ஏற்பட்டது!  

எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் அபூஜந்தல்!  இவர் மக்கத்துக் குறைஷியருக்குத் தெரியாமல் தப்பித்து, மதீனாவுக்குச் செல்வதற்காகப் பயணப்பட்டவர். தமது பயணத்தை இலகு படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பில் அங்கு வந்து சேர்ந்தார்.

அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ர்தான் நபியின் எதிர்த் தரப்பில் அமர்ந்து, மக்கத்துக் குறைஷியரின் பிரதிநிதியாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போகின்றவர்.  மக்காவில் இருந்தபோது அபூஜந்தல் முஸ்லிமானார்.  அதனால், மக்கத்துக் குறைஷியர் அவரைப் பிடித்துவந்து சிறைப் படுத்தினார்கள்.  அதை உடைத்துக்கொண்டுதான் அபூஜந்தல் மக்காவை விட்டுத் தப்பித்து, மதீனாவுக்குத் தனது பயணத்தை மேற்கொண்டார்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தங்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் அவருக்கு எப்படியோ தெரிந்தது.  எதற்காக அங்கே தங்கியிருக்கின்றார்கள் என்பது அவருக்குத் தெரியாது.  தாயைப் பிரிந்து சென்றுவிட்ட கன்று, தாய்ப் பசுவைக் கண்டுவிட்டால் ஓடிவரும் அல்லவா?  அதைப் போன்று விரைந்து வந்து, நபித் தோழர்களுடன் இணைந்துகொண்டார் அபூஜந்தல்.   தனது தப்பித்தலைப் பற்றிக் கூறி, நபித்தோழர்களை வியப்பில் ஆழ்த்திக் குதூகலம் கொண்டிருந்தார்.

நபித்தோழர்களின் கூட்டத்தில் தன் மகன் இருப்பதைக் கண்டுவிட்டார் சுஹைல்!  “இவன்தான் இப்போது எனது நடவடிக்கையில் முதலானவன்;  இவனுடைய விஷயத்தையே எனது முதல் நடவடிக்கையாக எடுக்கப்போகிறேன். முஹம்மதே! இவனை என்னிடம் ஒப்படைக்கவேண்டும்; அப்போதுதான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன்” என்று கூறினார் சுஹைல். 

நபியவர்கள் சுஹைலின் பிடிவாதத்தை அறிந்தவர்.  எந்த விதத்திலும் அவரைச் சமாதானப் படுத்த முடியாது என்பதை அறிந்திருந்த நபியவர்கள், அபூஜந்தலைப் பார்த்து, “நீர் உம் தந்தையுடன் போய்த்தான் ஆகவேண்டும்” எனக் கூறினார்கள். 

அபூஜந்தல் அதிர்ந்து போனார்!  “அல்லாஹ்வின் தூதரவர்களே!  என்னை மீண்டும் வேதனையை அனுபவிக்க, குறைஷியரிடம் ஒப்படைக்கப் போகின்றீர்களா?  எனது ஈமானைச் சோதிக்கவா இவர்களிடம் ஒப்படைக்கப் போகின்றீர்கள், யா ரசூலில்லாஹ்?” என்று கேட்டார் அபூஜந்தல்.  “பொறுமை செய்வீர்! அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.  உமது தியாகத்தால், அதில் நீர் காட்டும் பொறுமை மூலம்,  உம்மைப் போன்ற மற்றவர்களுக்கும் விடுதலை எனும் விடியல் பிறக்கும்” என்றார்கள் நபி (ஸல்). 

நபித்தோழர்களுக்கு இந்த நிகழ்வானது, மிகப்பெரும்  சோதனையாகிவிட்டது!  அவர்களின் நியாய உணர்வில் விழுந்த பேரிடி போன்றும் ஆகிவிட்டது!  தம் சார்பில் நின்று, சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடப் போகும் பெருமானாருக்குக் கீழ்ப்படியும் அந்தத் தோழர்களுக்கு, அவர்களின் ஈமானுக்கு, மிகப் பெரிய சோதனையாகிவிட்டது!  தமக்கு உடன்பாடில்லாத எத்தனையோ விஷயங்களுக்குக் கட்டுப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள் அருமைத் தோழர்கள்.  

கண்ணியமும் கீழ்ப்படிதலும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும்  கொண்டிருந்த தோழர்களுக்கு, மக்கத்துத் தலைவர்களுக்குச் சாதகமாகவும், முஸ்லிம்களான தமக்குப் பாதகமாகவும் இருந்த எத்தனையோ நிபந்தனைகள் மீது அவர்களுக்கு உடன்பாடு இல்லாத நிலையில், விட்டுக் கொடுத்து நிற்கும் நபித்தோழர்களின் கண் முன்னால், தம் சகோதரர் அபூஜந்தல் விலங்கிடப்பட்ட நிலையில் இறைமறுப்பாளர்களால் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்க்கச் சகிக்காத காட்சியில், அவர் அவ்வாறு இழுத்துச் செல்லப்படுவதை விரும்பாத அந்த நபித்தோழர்கள், இதற்கு மேல் தம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், உமர் போன்ற தோழர்கள், விக்கித்து நின்றார்கள்!  

இத்தகைய ஒப்பந்தங்களால் எல்லாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடுமா? ஏற்படாது! காரணம், நபியவர்கள் முஸ்லிம்களின் சார்பிலும், சுஹைல் மக்கத்துக் குறைஷிகள் சார்பிலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் காத்திருந்த வேளையில், அபூஜந்தல் எவரும் எதிர்பார்த்திராத நிலையில், காட்சியின் கதாநாயகனாக, ஹுதைபிய்யாவுக்கு வந்து சேர்ந்தார்!

ஒப்பந்தம் அதுவரைக் கையெழுத்தாகவில்லை என்ற காரணத்தைக் கூறி, அவரைத் தம்முடன் மதீனாவிற்கு அழைத்துச் செல்வதே அறிவுடைமை என்று நபி (ஸல்) அவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், சுஹைல் இணங்க மறுத்துவிட்டார்.

“இவனின் பிரச்சினையைத்தான் நான் முதலாவதாக எடுத்துக்கொள்ளப் போகின்றேன். இவன் என் மகன் என்ற உண்மையும் எனக்கு முழு உரிமையைத் தந்துள்ளது. நீங்கள் இவனை இப்போதே எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், நமக்கிடையில் வகுக்கப்பட்ட ஒப்பந்தம் புறக்கணிக்கப்படும்” என ஆவேசத்துடன் பேசினார் சுஹைல்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தமக்குப் பாதகமாக இருந்தும்கூட, அல்லாஹ் தன் அடியார்களுக்கு உதவி செய்யப் போவதாக வாக்களித்திருப்பதால், அந்த ஒருதலைப் பட்சமான ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் சம்மதித்தார்கள். 

இதன்பின், உமரவர்கள் மெதுவாக எழுந்து, அபூஜந்தலிடம் சென்றார்கள்.  “இந்தாரும், இதோ என் வாளை எடுத்துக்கொள்ளும். ஒரு நல்ல வாய்ப்பை நீர் அடைந்தால், உம்மைப் பிடித்துச் செல்லும் இறைமறுப்பாளனை வெட்டிச் சாய்த்துவிடும்.  அதன்பின் நீர் தப்பித்துக் கொள்ளலாம்” என்று கூறித் தன் வாளை அவரிடம் கொடுத்தார். ஆனால், அபூஜந்தல் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை.  அதற்கு உமர், “இவர் தன் தந்தையைக் காப்பாற்ற நினைக்கிறார்;  அவரை எதிர்த்துக் கொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.

ஒப்பந்தம் கையெழுத்தாகிற்று. தன் பணி முடிந்ததென்று வாரிச் சுருட்டிகொண்டு எழுந்தார் சுஹைல். அவரின் பரிவாரங்கள் புடைசூழ, அபூஜந்தலைக் கைது செய்து, கயிற்றால் பிணைத்துக்கொண்டு, மக்காவை நோக்கிப் புறப்பட்டார்.

இங்கு, ஹுதைபிய்யாவில், அண்ணலார் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களைப் பார்த்து, தலைமுடியை மழிக்குமாறும் பலிப் பிராணிகளை அறுக்குமாறும் கட்டளையிட்டார்கள். எப்பொழுதும் நபியவர்களின் கட்டளையைச் செயல்படுத்துவதில் போட்டி போட்டுக்கொள்ளும் தோழர்கள், இப்போது அதில் தயக்கம் காட்டினார்கள்! காரணம் என்னவென்றே புரியாமல் நபியவர்கள் தோழர்களைப் பார்த்தார்கள். ஆனால், தமது கட்டளையை இரண்டாவது முறை திருப்பிக் கூறவில்லை. சற்றே எதிர்பார்த்துவிட்டுத் தமது கூடாரத்தினுள் சென்றுவிட்டார்கள்.

ஆனால் அதுவரை, நபி வரலாற்றிலேயே நடந்திராத ஒன்று நிகழ்ந்தது! நபித்தோழர்கள் தம் தலைவராகிய நபியவர்களின் ஏவலுக்குக் கட்டுப்படாமல், என்ன செய்வதென்றே புரியாமல், அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டிருந்தனர்!

தோழர்கள் தமது ஏவலுக்குக் கட்டுப்படவில்லை என்ற நிலையைக் கண்டு, வியந்து நின்றார்கள் வேதத் திருத்தூதர் (ஸல்) அவர்கள். சற்று நேரத்தில், தோழர்களின் அந்தக் கட்டுப்படாமை, நபியின் சினத்துக்குக் காரணமாக மாறிற்று.

நபியவர்கள் தமது ஆணையை இரண்டாவது முறை கூறவில்லை. காரணம், அப்படி அவர்கள் செய்து, அது நடைமுறைப் படுத்தப்படாவிட்டால், அது அந்தத் தோழர்களை இறைமறுப்பின் பக்கம் இழுத்துச் சென்றிருக்கும்! கோபத்தோடு கூடாரத்தினுள் நுழைந்த நபியவர்களைப் பார்த்து, அவர்களின் மனைவிகளுள் ஒருவரான உம்மு சலமா (ரலி) அவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்க, நபியவர்கள் பதில் கூறினார்கள்:

“முஸ்லிம்கள் தம்மைத் தாமே இறைமறுப்பின் பக்கம் இழுத்துச் செல்கின்றார்கள்! நான் அவர்களைத் தலைமுடி கலைந்து, பலிப்பிராணிகளை அறுக்கும்படிக் கட்டளையிட்டேன்; ஆனால், அவர்களுள் ஒருவர்கூட, அதைச் செய்ய முன்வரவில்லை!” 

“அவ்வளவுதானே? யா ரசூலில்லாஹ்! இங்கே நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கையில், நீதிக்கு மாறான குறைஷிகளின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, முஸ்லிம்களின் பல உரிமைகளை விட்டுக் கொடுத்து, இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளீர்கள். அதனால், உங்கள் தோழர்கள் அதிர்ந்துபோய் நிற்கின்றார்கள் போலும். தாங்கள் வெளியில் போய், முதலில் உங்கள் பிராணிகளைப் பலி கொடுத்து, உங்கள் தலையை மழித்து, முன்னுதாரணமாக நில்லுங்கள். பிறகு பாருங்கள், அடுத்து என்ன நடக்கின்றது என்று” என உம்மு சலமா (ரலி) கூற, அண்ணலார் (ஸல்) அதன்படியே செய்தார்கள். அடுத்து நடந்தது அற்புதம்! தோழர்கள் நபி செய்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்களும் அது போல் செய்து, நபியவர்களின் கட்டளையைச் செயல்படுத்தினார்கள்!

அவ்வாறு தோழர்கள் செய்தபோது, தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை நிறைவேற்றினோம் என்ற ஆறுதல் அவர்களுக்கு இருந்தபோதும், செய்யக் கூடாததை - நபிக்குக் கீழ்ப்படியாமையை - சிறிது நேரமாவது செய்து மாறு புரிந்துவிட்டோமே என்ற வருத்தத்தினால், கண்ணீர் சிந்தி அழுதுகொண்டிருந்தார்கள்.

அதே நேரத்தில், அவர்கள் அவசர அவசரமாக முடி களைவதில் ஈடுபட்டதால், தம்மை அறியாமலேயே தலையில் வெட்டுக் காயம் ஏற்படும் அளவுக்குத் துரிதம் காட்டியதால், காயத்திலிருந்து இரத்தம் வழிந்தது! அந்த இரத்தத்தை அவர்களின் கண்ணீர் கழுவித் துடைத்தது!

எத்தகைய அற்புதமான காட்சி! உமரைப் போன்ற மிகப்பெரும் வீரர்கள் அழுது கண்ணீர் வடிக்க, தம் தூதருக்கு இப்போதாவது கட்டுப்பட்டோமே என்ற ஆறுதலால், இரு வேறு உணர்வுகளில் திளைத்திருந்தார்கள் நபித்தோழர்கள்!

இந்தக் காட்சியை அல்லாஹ் பார்த்து மகிழ்ந்தான். அதன் பிரதிபலிப்பால், அருள்மறை வசனங்களை இறக்கியருளினான்.

உமர் (ரலி) போன்ற உண்மை வீரர்களுக்கு இந்த ஒப்பந்தமானது, வெட்கித் தலை குணியத் தக்கதுதான். ஆனால், அதே வேளை, அவர்கள் இறைத்தூதருக்குக் கட்டுப்படுவதற்கான ஒரு சோதனையாகவும் வாய்ப்பாகவும் இருந்தது. எதிர்காலத்தில் அல்லாஹ் என்னென்ன வெகுமதிகளை நபித்தோழர்களுக்கு வைத்துள்ளான் என்பதற்கான அறிகுறியாகவும் அமைந்தது. தம்மால் அந்த ஆண்டில் ‘உம்ரா’ செய்ய முடியவில்லையே என்ற மனவருத்தம் அத்தோழர்களுக்கு இருந்தபோதும், நபியவர்களுக்குக் கட்டுப்பட்ட நற்குணத்தினால், ஹுதைபிய்யா உடன்படிக்கையை, ‘மகத்தான வெற்றி’ (48:01) என்று தன் அருள்மறையில் அறிவித்தான் அல்லாஹ்.

இந்த ஹுதைபிய்யா அமைதி ஒப்பந்தத்தினால் நமக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் படிப்பினைகள் இரண்டாகும்.

தலைவரானவர் எப்போதும் தான் கொண்ட குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். தலைவர் தனக்கென்றே ஒருசில நோக்குகளைத் தனது விருப்பமாகக் கொண்டிருப்பார். ஆனால், சிலபோது பொது நன்மையைக் கருத்தில் கொண்டு, அவற்றை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். தலைமை ஏற்றிருக்கும் ஒருவர், தனது தொலைநோக்கின் மூலம் எதிர்காலத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு, தனக்குக் கீழுள்ளவர்களிடம் உடன்பாட்டை எதிர்பார்க்கும்போது, அவர்களுள் சிலர் மாற்றமான கருத்தைக்கூடக் கொண்டிருப்பர். அந்த நேரத்தில், பொறுமையை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது தலைமையின் கீழ் இஸ்லாத்தின் வெற்றியையே நோக்காகக் கொண்டிருந்தார்கள். அன்னாரின் தலைமைத் தகுதி, இதை மெய்ப்பித்துக்கொண்டே இருக்கும். தோழர்களுள் சிலர் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தால்கூட, அந்தத் தோழர்களும் விரைவில் தம் கருத்தை மாற்றிக்கொள்வார்கள். ஏனெனில், அண்ணலார் (ஸல்) அவர்கள் இயக்கப்பட்டது, அல்லாஹ்விடமிருந்து ‘வஹி’யினால் அல்லவா?அண்ணலாரின் அத்தோழர்கள் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்து, அதற்கு முரணான கருத்தை அண்ணலார் (ஸல்) கொண்டிருந்தால், அத்தோழர்கள் தலைவருக்குக் கட்டுப்பட்டுத் தம் 
கருத்துகளை மாற்றிக்கொள்வர். இது, அந்தத் தோழமையின் சிறப்புத் தன்மையாகும். ஒரு கூட்டத்திற்கு வெற்றி கிட்டுவதற்குக் காரணம், சிறந்த தலைமை மட்டுமன்று; அக்குழுவில் இணைந்து உடன்பட்டுச் செயல்படும் கொள்கை வீரர்களாலும்தான்.

தலைவரைப் பின்பற்றும் வீரத் தோழர்களுக்குத் தலைவருடன் கருத்து மோதல் இருக்குமாயின், அல்லது, தலைவரின் கருத்தைப் புரிந்துகொள்வதில் இயலாமை ஏற்பட்டால், விரைவில் அத்தலைவரைப் பின்பற்றுவதில் தமது கட்டுப்பாட்டை வெளிப்படையாகக் காட்டவேண்டும். படைத் தளபதி, அல்லது குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவருக்குக் கட்டுப்படுவதுதான் சிறந்த கட்டுக் கோப்பாகும். இறைத் தூதர் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை, இத்தகைய கட்டுப்பாடு இறைநம்பிக்கை எனும் ஈமானின் கடமைகளுள் ஒன்றாகும். காரணம், அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும், ‘வஹி’ எனும் வேத வசனங்களைப் பெற்றுத் தரும் ஆன்மிகத் தலைவர் என்றும் தோழர்கள் நம்பியிருந்தார்கள். தோழர்களுக்குப் புரியாத, நம்ப முடியாத ஒன்றை நபியவர்கள் செய்ததைக் கண்டபோதும், அத்தோழர்கள் தம் அறிவுக்கு வேலை கொடுக்காமல், அப்படியே நம்பினார்கள்! ஏனெனில், அவர்கள் இறைவனால் வழி நடத்தப்பட்டார்கள். தோழர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை நபியவர்கள் செய்து, அதற்கு மாறான கருத்தை அந்த நபித்தோழர்கள் கொண்டிருந்தாலும், அதற்குக் கட்டுப்பட்டார்கள். அத்தகைய கருத்து அல்லது நிகழ்வு, பிந்திய நாட்களில் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும்.

நபி அல்லாதவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றாலும், இறைச் செய்தியைப் பெறும் தகுதியில் அவர்கள் இல்லாவிட்டாலும், ஏன் எதற்கு என்று கேட்காமல், அத்தலைவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற பொதுக் கருத்தும் அச்சமூகத்தில் நிலவிற்று. இதுவே இஸ்லாம் கற்பிக்கும் ‘தலைவருக்குக் கட்டுப்படல்’ ஆகும். நபியல்லாத வேறொருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவருடைய கருத்து பொருத்தமற்றதாக இருப்பின், அவர் தலைமைக்குத் தகுதியற்றவர் என்றோ, தலைமையில் மாற்றம் தேவை என்றோ கருத்துக் கொள்ளவேண்டிய கட்டாயச் சூழல் உண்டாகும்.

தம் தோழர்கள் இலகுவாகத் தம்முடன் கருத்தாடல் செய்ய முடியும் நிலையில் அத்தலைவர் இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அத்தலைவர் தன் தோழர்களால் நெருங்கி நேசிக்கப்படுகின்றாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு தலைவர்-தோழர் தொடர்பு வலுப்பெற்றதாக அமையும். அப்போதுதான், தலைவரின் சொல்லையும் செயலையும் நன்கு புரிந்துகொள்ள முடியும். எதிர்காலத்தில் தலைவராகப் பணி புரியப் போகும் ஒருவர், இத்தகைய பண்புகளைத் தம்மிடம் உருவாக்கிக் கொள்வது, அந்த எதிர்காலத் தலைவருக்கு மிகவும் இன்றியமையாததாகும். 

அதிரை அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு