ஊரில் மழையாமே II 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2015 | , , ,

இரவு முழுதும்
பூமியோடு
உறவு கொண்ட மழை
விடியற்காலையில்
விடைபெற்றுச் சென்றிருக்க

காற்றின் ஈரம்
காது மடல்களில் குளிரும்

மழை நின்ற காலையில்
கிளை உலுப்ப
தலையெல்லாம் பெய்யும்
இழை தளைகளில்
தங்கிய மழை

கண்டிப்பான மாமியாருக்கு
கட்டுப்பட்ட மருமகளாய்
மழை
தரையை யெல்லாம்
தேய்த்து
கழுவி விட்டிருக்கும்

ஊர்க் காற்றில்
ஈரமிருக்கும்
ஓடும் ஆற்றிலொரு
ராகமிருக்கும்

தற்காலிக ஓடைகளின்
தடம் பதிந்த மண்ணில்
நேற்றிரவு மழையின்
தடயம் இருக்கும்

தேநீர்க் கடைகளின்
ஈரமான
கீற்றுக் கூரைகள்
பொது இடமென்றும் பாராமல்
புகை பிடிக்கும்

அசைபோடும் பசுக்களின்
கழுத்து மணியின்
இசை பிடிக்கும்

ராப்போது பொழிகையில்
மழை மலடாகி
வானவில்லை பிரசவிப்பதில்லை

தூர ரயில் சப்தம்
துயில் எழுப்ப
ஈர வெயிலில் நடக்கயில்
திசை மாறிய மயில் ஒன்று
சாலை வழி
காணக் கிடைக்கும்

பருவமழை கணக்கீடுகளை
இயற்கை மாற்றிப்போட
அகலப்பாதை திட்டங்களை
அரசாங்கம் தள்ளிப்போட

மழை பெய்த மறுநாளின்
காட்சிகள் மாறி...

கரையும் காகமும்
கலைந்து
விரையும் மேகமும்
உலர்ந்த தரையும்
தற்காலிக மழையின்
எச்சங்களாக
இன்றைய அதிரையில்
காணக்கிடைக்கின்றன

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
காணொளி : Sஹமீது

3 Responses So Far:

நட்புடன் ஜமால் said...

ஊரில் பெய்த மழையை
விசை பலகையின்
இசை கொண்டு
எங்களையும்
நனைய வைத்து விட்டீர்கள்

அதிரை.மெய்சா said...

இடியொலியுடன் இனிய ராகம் பாடி
இன்னிசை முழக்கத்துடன்
மின்னல் வெளிச்சம் காட்டி
வான் பிளந்து பூமியழப்பெய்தது
அதிரையில் மழை

sheikdawoodmohamedfarook said...

//ஊர்காற்றில்ஈரமிருக்கும்ஓடும்நதியில்ராகமிருக்கும்//இந்தவரிகள்நெஞ்சில்ஈரத்தையும்காதில்ராகத்தையும்விதைத்தது.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.