ரமளான்! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2014 | , ,


திசைகளைத் தொலைத்த
தீன் குலத்தோர்க்கு
களங்கரை விளக்கம் - ரமளான்
ஷைத்தானை விரட்ட
முஸ்லிமுக்கு வேண்டிய
கலன்களை விளக்கும்!

குர்ஆனும் மாநபி(ஸல்)யும்
போதித்தவைக் கொண்டு
புலன்களை அடக்கும் - ரமளான்
படைத்தவன் மகிழ
பலமுறை துதித்தால்
பலன்களைக் கொடுக்கும்

மண்டையில் வெயில் காய்ந்து
தொண்டை வறண்டாலும்
பருகுவதைத் தடுக்கும் - ரமளான்
குடிநீரின் மாண்புதனை
துளிநீரில் நிரப்பிவைத்து
அருந்த பின் கொடுக்கும்

ருசியான உணவே
பசிநேரம் வாய்த்தும்
புசிக்காமல் பழக்கும் - ரமளான்
குடலையும் சுறுக்கி
உடலையும் உருக்கி
வறுமையை உணர்த்தும்

கட்டாய வணக்கங்களை
தட்டாமல் நேரத்தில்
நிறைவேற்றப் பணிக்கும் - ரமளான்
உபரியான தொழுகைகளை
உவப்போடு அர்ப்பணிக்க
உள்ளமெல்லாம் இனிக்கும்

இருக்கின்ற செல்வம்
இல்லாதோர்க்கும் செல்ல
கணக்கு வரையறுக்கும் - ரமளான்
அழுக்குப் பணப்பொதியை
சதவிகிதக் கணக்கிட்டு
அசுத்தக் கறை அகற்றும்

நல்லவற்றைப் பெருக்க
தீமையதைத் தடுக்க
பிரகாச இரவு தரும் - ரமளான்
ஒன்றுக்குப் பலவாக
உளமெல்லாம் பூரிக்க
நன்மைகளை அள்ளித்தரும்

அருள் சுமந்த இரவில்
பொருள் நிறைந்த குர் ஆன்
இறங்கிய நல் மாதம் - ரமளான்
இருள் நீக்கி நெஞ்சில்
ஒளி இலங்கச் செய்ய
வழங்கியதோ இறை வேதம்

பொய்யின்றி புறமின்றி
பிறர் மனம் புண்படாமல்
பேச வலியுறுத்தும் - ரமளான்
நன்மையை ஏவி
தீமையைத் தடுக்க
வழிவகை வகுக்கும்

பசிப்பிணி தாகம்
பாவச்செயல் யாவும்
விலக்கியே விரட்டும் - ரமளான்
பொறுமைக்குப் பரிசாக
பழுதற்று கொண்டாட
பெருநாளைக் கொடுக்கும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

5 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

எந்தவரிகளைதொடுவதுஎந்தவரிகளைவிடுவதுஎன்றDilemmaவைஉண்டு பண்ணும்அற்புதவரிகள்.//திசைகளைதொலைத்ததீன்குலத்தோர்க்கு கலங்கரைவிளக்கம்....//என்றஅற்ப்புதவரிகள்சொற்பதம்கொண்ட பாராட்டுக்கும் அப்பாற்பட்டது.

Yasir said...

அருமை அருமை காக்கா....மன அழுக்கு நீக்கும் இந்த ரமளானை முழுவதுமாக பயன்படுத்தி ஈமான பலப்படுத்த அல்லாஹ் நம் எல்லாருக்கும் உதவுவானாக...அமீன்

Ebrahim Ansari said...

//அழுக்குப் பணப்பொதியை
சதவிகிதக் கணக்கிட்டு
அசுத்தக் கறை அகற்றும்//

அனைத்துமே பிடித்த வரிகள் ! அவற்றுள் இவை ஈர்த்த வரிகள்.!

தம்பி கவிஞர் சபீர் அவர்களின் முதல் பத்து ரமழானுக்கான பரிசுக் கவிதை. அடுத்த பரிசை அன்புடன் எதிர் பார்க்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ரமளான் கவிதை,
அழகான விதை !

//திசைகளைத் தொலைத்த
தீன் குலத்தோர்க்கு
களங்கரை விளக்கம் - ரமளான்
//

தனிமனிதனுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் தான்...

//பொய்யின்றி புறமின்றி
பிறர் மனம் புண்படாமல்
பேச வலியுறுத்தும் - ரமளான்
//

கவிதைக்கு கருவென்று ஒரே வார்த்தைதான் பேசிக் கொண்டோம், சரசரவென்று கொட்டிருக்கிறது வரிகள் !

சென்ற வருடம் போன்று பிரார்த்தனைக் கவிதையொன்றும் வேண்டுமே !!!

கிடைக்குமா?

இன்ஷா அல்லாஹ் !

Riyaz Ahamed said...

சலாம். மூனு வரிகளில் ரமலானின் பன்புகளை சொல்லி மூவரிகளில் அதற்கு விளக்கம் தருவது அருமையான ஸ்டைல் தான், கருத்துகள் ஆழமானவை

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.