Showing posts with label அஜ்மான். Show all posts
Showing posts with label அஜ்மான். Show all posts

நோன்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி..! 55

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

முதலில் நம்மூர் வழக்கப்படி ‘கொருத்துப்போட்டு’விடுவோம்.  வாங்க… அமீரகத்தில் பள்ளிக்கூடங்களின் விடுமுறை மாதங்களான ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வீட்டுக்கார அம்மாக்களால்  அம்போ என்று விடப்பட்ட தற்காலிக பிரமச்சாரிகள் எல்லாம் என் பக்கம் வந்துவிடுங்கள்.  விடுப்பு கிடைத்தாலும் விடுவதாயில்லை என்று ஊருக்குப் போகாமல் வீட்டுக்காரம்மாக்கள் இங்கேயே தங்கிவிட்ட, அட்டைப்பூச்சிகளை மணந்த,  நிரந்தர சம்சாரிகள் அந்தப் பக்கமாக என்று கொருத்துப்போட்டுக்கொண்டால் ஆட்டத்தைத் துவங்கி விடலாம்.

நோன்பு என்றாலே எனக்கு அமல்களுக்குப் பிறகு சட்டென்று அடிப்பது நோன்புக் கஞ்சி வாடைதான்.  தங்கத்தைவிட நோன்புக் கஞ்சியின் மஞ்சள்தான் எனக்கு மனோரஞ்சிதம்.  அதுவும், பரிமாறும் தருணத்தில் கஞ்சியின் ஆடை மல்லாவின் மேல்புறத்தில் உறைந்துபோய் கிடக்க, பிய்த்துப்போட்ட வாடாத் துண்டுகள் அந்த ஆடையின் பரப்பு இழுவிசையைத் துளைக்க முடியாமல் மிதக்க… நகரா அடிப்பது போலல்லாமல் அனைப்பதுபோல் ஆனந்தமாக இருக்கும்.  நோன்புக் கஞ்சி இல்லாமல் நோன்பு துறப்பது என்பது ஏர் அரேபியாவில் பயணிப்பதைப் போல, பயணம் வசதியாக இருந்தாலும் பட்டினி போட்டுறுவாய்ங்க.  விவரமானவர்கள் எல்லாம் விமானம் பறந்தெழுந்தவுடன் (flight take off) பொட்டலங்களைப் பிரித்துவிடுகிறார்கள்.  அதென்னவோ, விமானத்தில் தரும் சாப்பாடு என்னவாக இருந்தாலும், நமக்கு முன் வைக்கப்படும் சாப்பாடு மீனாகவேக்கூட இருந்தாலும் கொஞ்சம்கூட உணவு வாசம் நாசி தொடாது; மணமே இருக்காது.  ஆனால், ஏர் அரேபியப் பயணிகள் பொட்டலங்களைத் திறந்தவுடன் பலதரப்பட்ட உணவு வாசம் மூக்கைத் துளைக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் வாடை சட்டையைப் பிடித்து உலுக்கும்.  சாதாரண சான்ட்விச் (sandwich) கூட செழிப்பாக மணக்கும்  இப்படியாகத்தான் யாருக்கு ஃபோன் பண்ணினாலும், எங்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருக்கின்றன என்னும் ஏர் அரேபியத் திமிரோடு,  தாம் நோன்புக் கஞ்சி காய்ச்சித்தான் நோன்பு துறப்பதாகச் சொல்லவே உசுப்பேத்தப்பட்ட நான், “நானும் கஞ்சி காய்ச்சப் போகிறேன்” என்று சூளுரைத்தேன்.

சொன்னதுதான் தாமதம், என் நளபாதத் திறமைகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் நண்பர்கள் என்னைக் கஞ்சி காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்கள்.  “தலைப்பிறையில் கஞ்சி காய்ச்சப் போகிறாயே, தலைக்கறிக் கஞ்சியா?’ என்று ரைமிங்கில் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.  தலக்கஞ்சியா? தலையா? மூச்!  கோலாலம்ப்பூர் பார்ட்டி ஏற்கனவே எச்சரித்தது நினைவில்லையா? (ஆட்டு மூளை வறுவலும் ஆஸ்பத்திரி டோக்கனும்) “ஆட்டுக்கரியாவது ஒரு ரெட்டைக்கிளி தீப்பட்டி சைஸில் சாப்பிட்டுக்கோ ஆனால், பார்ட்ஸ் (organs of animal) சாப்பிட்டே உன்னோட பார்ட்ஸ் கெட்டுடும்” என்ற எச்சரிக்கை எனக்கு ஆட்டை முழுசாப் பார்க்கும்போதுகூட நினைவில் வரும்.

ஆனால், நான் கோலால்ம்பூர் போயிருந்தபோது கவனித்த வகையில் மலேசியக்காரவுக ஒன்னும் ஆரோக்கியமான உணவு உண்பதாகத் தெரியவில்லை.  ஒரு நாள் தங்கியிருந்ததில் கவனித்த வகையில் ஜங்க் ஃபுட்(junk food)டைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.  என் நண்பர்களோடு தங்கியிருந்த ஓட்டலின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள ரெஸ்ட்டொரென்டில்  சாப்பிட போனபோது, நம்மூர்ல ‘லொக்கடா’ன்னு சொல்வோமே ஒரு ப்ரெவுன்(brown) நிறக் கவர், அதைக்கொண்டு பொட்டலம் பொட்டலமாக மடித்து வைத்திருந்ததைக் காட்டி, “ரெண்டு” ஆர்டர் பண்ணினான் ‘கலிஃபோர்னியா’ பார்ட்டி.  வந்ததும் பிரித்துப் பார்த்தால் அருமையான புலாவ் சாதத்தை அப்படியே தராமல் அதில் நெத்திலிக்கருவாட்டைப் போட்டு ‘நாசமாப்போச்சி’ என்று ஏதோ பேர் வைத்துத் தந்தார்கள். எனக்கு அந்தப் ‘பொட்டலத்தில் சாதம்’ பார்த்ததும் ஏனோ ‘பட்டணத்தில் பூதம்’ நினைவுக்கு வந்தது.  இதற்கிடையே மீ கொரிங்க் வாங்கி சாப்பிட்டுகொண்டிருந்த எனக்கு வாயில் வைத்ததும் காலை வரை காத்திராமல் ‘எங்கேயோ’ எறிந்தது. என் சிங்கப்பூர் நண்பனுக்கு தலையில் எஞ்சியிருந்த நான்கைந்து உரோமங்களும் உறைப்புத் தாழாமல் கண்முன்னே உதிர்ந்து விழுந்தன.  மலேசியர் சாயலில் இருந்த மற்றொரு நண்பன் ஏற்கனவே ச்செக்கச்செவப்பே, முகம் மெத்தச் செவந்து செவ்விந்தியராகிப்போய் ‘உறைப்புத் தாங்க முடியலே. கொஞ்சம் குறைத்துத் தரமுடியுமா?’ என்று தட்டைத் திருப்பிக் கொடுக்க, அவர்கள் குறைத்துக் கொடுத்த மீ கொரிங்க் சாப்பிடுகையில் கண்ணீர் சிந்தினான் கத்தார் பார்ட்டி.  இந்தக் களேபர நாடகங்கள் முடிந்து திரையிறங்கும் நேரத்தில் எங்களைப் பார்க்க வந்த ஜாகிருக்கு உறைப்பை மறைத்து இனிமையாகச் சிரித்து வைத்தோம். “உனக்கும் ஒன்னு ஆர்டர் பண்ணவா?’ என்று கேட்ட கலிஃபோர்னியக்காரனுக்கு “வேண்டாம் வேண்டாம்” என்று பதறிய ஜாகிரின் மறுப்பு எனக்கொன்றும் புதிராகத் தோன்றவில்லை.

கஞ்சி மேட்டருக்கு வருவோம்.  கஞ்சி காய்ச்சப்போறேன் என்று சொன்னதும் என்னைக் கஞ்சி காய்ச்சத் துவங்கிய பார்ட்டிகளுக்கு சவாலாக களத்தில் இறங்கினேன்.  எப்படி காய்ச்சுவது என்று நான் எத்தனை பேரிடம் கேட்டேனோ அத்தனை பேரிலும் ஒருத்தர்கூட மற்றொருவருடைய முறையை ஒத்துச் சொல்லாதது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது, மன உளைச்சலுக்கு உள்ளானேன், வேதனைப்பட்டேன்.  எனக்கு ஏனோ எல்லாக் கருத்துகளிலும் வேறுபட்டு நிற்கும் இயக்கக் காரர்களின் மார்க்க விளக்கங்கள் சட்டென்று நினைவுக்கு வந்தது.  

முதலில் மனைவிக்கு ஃபோன் போட்டு, “நீ சூப்பரா நோன்புக் கஞ்சி காய்ச்சித்தருவியே, எப்படி செய்தே?” என்று கேட்டேன்.  “ உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.  கஞ்சி குடிக்கனும்னு தோணினா கடைல வாங்கிக் குடிங்களேன்” என்றவளிடம் கட்டாயப்படுத்தி கேட்டதில், “இன்னென்ன பொருட்களையெல்லாம் போட்டு ப்ரெஷெர் குக்கரில் 4 விசில் வச்சா கஞ்சி ரெடி” என்றாள்.  அடுப்பங்கரையில் தேடிப்பார்த்ததில் ப்ரெஷர் குக்கரின் விசிலைக் காணவில்லை. “விசில் எங்கே?” என்று மீண்டும் ஃபோனில் கேட்டால், ‘இல்லாட்டி என்ன? நீங்களே 4 விசில் அடிச்சிட்டு இறக்கிடுங்க” என்று சொல்வாளோ என்கிற பயத்தில் என் காக்காவுக்கு ஃபோன் பண்ணினேன். அவர், “அரிசி இந்தா இம்புட்டு, கடலைப்பருப்பு இம்புட்டு” என்று ஆரம்பிக்க, “காக்கா, இம்புட்டுன்டா அளவு பிடிபடமாட்டேங்குதே. இத்தனை கிராம் என்று சொன்னால்தானே விளங்கும்” என்றேன். “நோன்பாளிகளைச் சித்ரவதை செய்யாதே” என்று ஃபோனை வைத்துவிட்டார் .  அதிரை நிருபரின் அபு இபுவோ, “காய்ச்சி வைத்தால் நெறிப்படுத்த மட்டுமே தெரியும்” என்று தன்னைத் தற்காத்துக்கொண்டார்.  தம்பி தாஜுதீனுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி அல்லவா, அந்த நினைப்பில் எனக்கு உதவ முன்வந்தார்.

“ஒரு சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக்கொள்ளுங்கள். இன்னொரு சட்டியில் அரிசி பருப்பு வெந்தயம் இவற்றை ஊர வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது சட்டியில்” என்று துவங்க, “இருங்க இருங்க. ஒக்கே ஒக்கடு மல்லா கஞ்சி காய்ச்ச இத்தனை சட்டிகளா? ஒரு சட்டியை ‘அட் எ ட்டைத்ல ஹேன்ட்ல் (handle at a time)’ பண்றதே எனக்கு பெரிய விஷயம்.  மூன்றெல்லாம் ட்டூ மச், வீண் முயற்சி’ என்று அந்தத் திட்டத்தைக் கை விட்டேன். “ஏங் காக்கா சிரமப்படுறிய? நோன்பு திறக்க இங்க வந்துடுங்களேன்” என்ற தாஜுதீனின் அழைப்பில் அன்பிருந்தது; கஞ்சி மணத்தது.  “துபையில் அந்தரத்தில் காரை பார்க்கிங் செய்யும் வசதி வரும்வரை அங்கு வருவதாயில்லை” என்று மறுத்து விட்டேன்.

அப்பத்தான் எனக்கு சவுதியில் ஜுபைலில் வசிக்கும்போது இதுபோன்றொதொரு சூழலில் ‘எப்படி நோன்புக் கஞ்சி காய்ச்சுவது’ என்று ரஹிமாவில் வசித்த, பெரிய கண்களோடு கண்ணாடிக்கடையில் இருந்த நண்பன் ஆஷிக்கின் ரெசிப்பி(recipe) நினைவுக்கு வந்தது.

“உனக்கு மட்டும்தானேடா? ஒரு முறை செய்து ரெண்டு நாட்களுக்கு வைத்துக்கொள்” என்று வழக்கம்போல் சிக்கனத் தொனியில் புத்தி சொல்லிவிட்டு,”கைப்பிடியளவு அரிசி, அரைக்கைப்பிடியளவு கடலைப் பருப்பு, காற்கைப்பிடியளவு வெந்தயம் மூன்றையும் அலசி ஆறு மடங்கு தண்ணீரில் அதே சட்டியை அடுப்பில் வைத்து கொதிக்கவை. அது கொதிக்கும்போதே வரிசையாக வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, முட்டைக்கோசு, காரெட், பீன்ஸ் ஆகியவற்றை வரிசையாக நறுக்கிப் போட்டுக் கொண்டே வா.  அத்துடன் மசாலாவை ஸ்பூனில் எடுக்காதே. ஒரு கத்தியை எடுத்து அதைக்கொண்டு, அதாவது கத்தி முனையளவு மஞ்சள், இரண்டு கத்திமுனையளவு சீரகத்தூள், இரண்டு கத்தி முனையளவு மிளகுத்தூள், தேவைக்கேற்ப உப்பு போட்டு கொதிக்கவை.  இடையில் மல்லி மற்றும் புதினாத் தழைகளின் இலைகளை மட்டும் பறித்துப் போடு. கொஞ்சம் தேங்காய்ப்பால் ஊத்தி இறக்கினால் கஞ்சி ரெடி” என்றான்.

எம்ப்பி 3 யில் ஒரு ஜூஸ் குர் ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போதே இவையாவையும் செய்து பார்த்ததில் தஞ்சாவூர் ஆத்தங்கரை பள்ளியில் தரும் பால் கஞ்சி ரேஞ்சுக்குத்தான் கஞ்சி வந்தது, துவையல் இல்லாததுதான் குறை. நம்மூர் நோன்புக் கஞ்சிக்கு நாக்கைத் தொங்கப் போட்ட என்னைப்பார்த்து ‘பெப்பே’ என்றது பால் கஞ்சி. ஏனோ கஞ்சியில் எல்லாப் பொருட்களும் கொஞ்சம் கொஞ்சம் குறைவாகவே எனக்குப் பட்டது.  அவனிடம் கேட்டபோது, “இதுதான்டா ‘சிக்கன’க் கஞ்சி; கோழி போட்டேன்னா ‘சிக்கன்’ கஞ்சியாயிடும்” ன்னான்.

“நீ ஏன்டா யார் யார்ட்டேயெல்லாம் கேட்டே. நான் சொல்றபடி செய்” என்று முன்வந்த என் நண்பன் அஸ்லம் என் சமையல் திறமைகளைப் பற்றி முன்பின் அறியாததால் முதலில் மேலோட்டமாகச் சொல்லத் தலைப்பட்டவன், நான் கிரகிக்கத் தடுமாறுவதைப் பார்த்து சற்றே மிரண்டு போனான்.  “நான் வேணா வந்து காய்ச்சித் தரவா?” என்று தப்பிக்க முயன்றவனை என்னோடான நட்பு ஆட்டிப்படைக்க, ஆனா ஆவன்னாவிலிருந்து துவங்கினான்.  அவன் சொன்ன குறிப்புகள் இலகுவாக இருந்ததோடு கற்பனையில் செய்யும்போதே நம்மூர் நோன்புக்கஞ்சி வாடை வீசியது.  இறங்கி விட்டேன்.

ஆஷிக் சொன்ன அதே பொருட்களை “மொத்தமாக வெட்டி வைத்து சட்டியில் போட்டு வேகவை” என்கிற இலகுவான முறை என்னைக் கவர்ந்ததால் அப்படியே செய்தேன். .  கஞ்சியின் திடப்பொருட்கள் அனைத்தும் அணிதிரண்டு ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடக்க மேலே தெளிவாகத் தண்ணீர்மட்டும் தனித்துக் கிடந்தது.  கரண்டிகொண்டு கலக்கிவிட்டாலும் சுழன்று முடிக்கும்போது மீண்டும் தனித்தனியாகவே திரண்டு கொண்டன.  காய்ச்சி முடித்த நோன்புக் கஞ்சியை நான் குடித்தபோது என் எதிரில் இருந்திருக்க வேண்டும் நீங்கள்.  இஞ்சி தின்ற குரங்குபோலானது கஞ்சி குடித்த என் மூஞ்சி. என்ன செய்ய? வேறு வழியில்லாமல்,  கிரிக்கெட்டில் தோற்ற அணியின் மிகவும் பிரசித்தி பெற்ற வசனமான, “வி வில் லேன் ஃப்ரம் அவர் மிஸ்ட்டேக்ஸ் (we will learn from our mistakes) என்னும் தாரக மந்திரத்தின்படி என் கஞ்சி காய்ச்சும் தினங்கள் தொடர்கின்றன.  

உருப்படியான நோன்புக்கஞ்சி உங்களிடம் இருப்பின் ஷார்ஜாவுக்கு ஒரு மல்லா பார்சே….ல்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்