Showing posts with label உணர்வுகள் மூன்று. Show all posts
Showing posts with label உணர்வுகள் மூன்று. Show all posts

உணர்வுகள் மூன்று ! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | April 21, 2012 | , , ,

தீராதவை…

அம்மா கைகளில்
குழந்தை…
சும்மாச் சும்மா
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.

கன்னங்களிலோ
நெற்றியிலோ
குத்து மதிப்பாக
முகத்திலோ
இன்ன இடம்தான்
என்றில்லாமல்
வாகாக வாய்க்கும்
எந்த இடத்திலுமோ
வென...

வாகனங்களைக்
காட்டியொரு உம்மா
வானத்தைக்
காட்டியொரு உம்மா
மரங்களைக்
காட்டியொரு உம்மா
மனிதர்களைக்
காட்டியொரு உம்மா

கத்தும்
குருவியைக் காட்டியும்
கொத்தும்
கோழியைக் காட்டியும்
கழுவும்
கறி மீனைக் காட்டியும்
காத்திருக்கும்
கரும் பூனையைக் காட்டியும்
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.

இடது கையிலிருந்து
வலது கைக்கு
மாற்றும்போதொரு உம்மா
மயங்கும்
விழிகளில் உம்மா
மெல்லச் சுமந்து
தூளியில் இட
கிடத்தும்போதொரு உம்மா
கிடத்திய பின்னொரு உம்மா

தூளியைத் தூக்கி
கொத்துக் கொத்தாக
பலமுறை உம்மா
என
சும்மாச் சும்மா
உம்மா கொடுத்தும்
தீர்ந்து போனதா
அம்மாவின் உம்மா?


தொலைவில் மழை

தொலைக்காட்சியில்
மழை கண்டு
அலைபேசியில் ஊரழைத்தால்
தொலைபேசியில்
சப்தமாய் மழை

சாளரம் வழியாக
சாரலாய் மழை
கூரையின் நுனியிலும்
குட்டிக்
குற்றாலமாய் மழை

கத்திக் கப்பல்களும்
காகிதக் கப்பல்களும்
கரை சேரவில்லையாம்
கனுக்கால் வரை மழை

மின்சாரம் வெட்டுப்பட
முட்டை விளக்கின்
மட்டுப்பட்ட வெளிச்சத்தில்
முகங்களில் மழை

இரவின் இருளில்
மழை பெய்வதில்லை
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே
கேட்டுக் கொண்டிருக்கும்

அடைமழை காலத்தில்
குடைமேல் மழை
தடைபட்ட தூரலில்
உடையெல்லாம் மழை

முகிழ் முயங்கி
மழை பொழிந்து
மண் ணடைந்து
மடை வழிந்து
கட லடைந்து
கலக்கும் வரையான நீரை
மழை என்றே
அழை!


அகம்!

இன்று
வியாழன்...
வெள்ளி சென்றது
நேற்றுப்போல்.
எத்தனை
வேகமாய்
கடக்கிறது
இந்தியனின் இளமை
வளைகுடாவில்?!

எத்தனை
ஆண்டு அல்ல
குடும்ப வாழ்க்கை
ஓராண்டில்
எத்தனை
தடவை
என்றாகிப்போனதே!

ஊரிலிருந்து
வந்த நண்பன்
உன்
நினைவுகள் மொய்க்கும்
பெட்டியொன்று தந்தான்.

அட்டைப்பெட்டியின் மேல்
எழுதியிருந்த
என் பெயர்
சற்றே அழிந்தது ...
அட்டைப் பெட்டியை
நீ
ஒட்டிக் கட்டுகையில்
பட்டுத் தெறித்த உன்
நெற்றிப் பொட்டின் வியர்வையா
சொட்டுக் கண்ணீர் பட்டா?

அக்காள் கையால் செய்த
நார்த்தங்காய் ஊறுகாய்
உம்மா பெருவிரலால்
நசுக்கி உலர்த்திய அப்பளம்
பீட்ரூட் அல்வா
விகடன், ஜூ வி
உன் கையால்
கலந்தரைத்த மசாலாப்பொடி

நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன
நீயாக அனுப்பிய
கடுஞ்சோகப் பெருமூச்சும்
நிலைகுத்திய பார்வைகளும்...

-சபீர்