Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) 16

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2013 | , , , , ,

தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து உலகின் சாதிக் கொடுமையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஓர் அதிர்ச்சியான செய்தி பெரிதும் பாதித்தது. அதுதான் 2010ம் ஆண்டு அல்லாஹ்வின் நாட்டப்படி தூய இஸ்லாத்தை தழுவிய டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் மரணச் செய்தி. திங்கள் கிழமை காலைப் பொழுதில் மரணச் செய்தியை கேட்டவுடன் அனைவரின் மனதிலும் ஆழ்ந்த சோகம் ஒட்டிக் கொண்டது. இது நம்மில் சொந்தம் ஒருவர் மறைந்த துயருக்கு நிகராக வாட்டியது. எங்கிருந்தோ இருந்தவர் இஸ்லாத்தை ஏற்று, அவருக்கு இறைவன் விதித்த மரணம் வந்தடைந்ததும் ஏன் என் மனது இப்படி பதறியது. இதற்கு தனிப்பட்ட முறையில் சில காரணங்கள் உண்டு.

இறை மறுப்புக் கொள்கையில் இருந்து தீவிர பிரச்சாரம் செய்து பின்னர் அதிலிருந்து விலகி, இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன்தான் ‘அல்லாஹ்’ என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துச் சென்ற முன்மாதிரி முஸ்லிமாக வாழ்ந்து மரணித்துள்ளார்கள் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்).


இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) தமிழகம் மட்டுமல்ல அயல்நாடுகளில் வசிக்கும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்களிடம், இறைவனின் நாட்டப்படி ‘ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதை மட்டும் சொல்லாமல், முஸ்லீம்கள் தூய இஸ்லாத்தின்படி எவ்வாறு முறையாக வாழவேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்யவும் ஆரம்பித்தார்கள்’ என்பது உலகறிந்த முக்கியத் தகவல்.

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களை இந்த வருடம் (2013) மே-மாதம் அமீரகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? என்ற ஆவணப் படம் துபாயில் அறிமுகம் செய்யும் ஏற்பாட்டிற்கு உதவும் வாய்ப்பு எனக்கும் எனது சொந்தமான மெய்னுதீனுக்கும் கிடைத்தது. எதிர்பாராத அவசர ஏற்பாடாக இருந்தாலும் அன்றைய தினம் மடிக்கணினி (Laptop), ஒளிப்படக்காட்டி (Projector) இவைகளை குறைந்தபட்ச நேரத்தில் நானும், மெய்னுதீன் இணைந்து அந்த வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படத்தை அங்கு வந்திருந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டது.

அன்றைய தினம் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்கள் ஜாஃபர் அலி, ரஃபி அஹமது, மற்றும் சென்னையிலிருந்து டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுடன் வந்திருந்த சகோதரர் செங்கிஸ்கானும் ஒரே காரில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களுடன் பயணித்தோம். உண்மையில் நினைவை விட்டு அகலாத நிகழ்வு. அந்த 30 நிமிடத்தில், டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மேடையில் பேசாத சில முக்கியத் தகவல்களை அவர்களால் சொல்லக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

இஸ்லாத்தை பெரும் தலைவர்களுக்கு எத்திவைக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினார், கருணாநிதி முதல் போப் ஆண்டவர் வரை சென்று இஸ்லாத்தை எத்தி வைத்து அவர்களோடு விவாதிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைச் சொன்னார். அவ்வாறான விவாதங்களை காணொளியாக ஆவணப்படுத்தி வெளியிடுவேன் என்றும் உறுதியாக சொன்னார். கலைஞர் கருணாநிதியை இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்ததாகவும், கலைஞர் ஒரு வாக்குறுதி கொடுத்ததாகவும் அந்த சந்தர்பத்தில் சொன்னார். அந்த வாக்குறுதி என்னவென்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இஸ்லாத்தின் பக்கம் கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் அழைப்பு விடுப்பேன் என்று தெளிவாக, உறுதியுடன் சொன்னார்கள்.

திரைப்படத் துறையில் பிரபலமானவர்களில் முக்கியமானவரான AVM சரவணன் அவர்களுக்கு இஸ்லாதிற்கு வர ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லியதோடு அல்லாமல் தன்னிடம் AVM சரவணனன் அவர்கள் பல இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாங்கி சென்றுள்ளதாகவும், தனக்கு இருக்கும் ஒரு சில பணப் பிரச்சினைகளை முடித்துவிட்டு இஸ்லாத்தில் இணைவது குறித்து யோசிப்பேன் என்று AVM சரவணன் அவர்கள் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் சொன்னார் என்ற மற்றுமொரு தகவல், அப்போது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த எனக்கும், சகோதரர்கள் ரஃபி அஹமது ஜஃபர் அலி ஆகியோருக்கும் மிகவும் இன்பமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தன்னோடு ஒன்றாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக கட்சி தலைவர் வைகோ ஆகியோர் இஸ்லாத்தை பற்றி அறிந்தவர்கள், அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மிகவும் தகுதியானவர்கள். அவர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்கள் டாக்டர் அப்துல்லாஹ்.

ஒரு முறை ஒரு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கெடுத்த போது, 7 வருடம் பட்டம் பெற்ற ஒரு இளம் மவ்லவி மற்றொரு மார்க்க சொற்பொழிவாளரை பற்றி தன் உரையில் பொது மேடையிலேயே குறை கூறி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அது தனக்கு மிகவும் எரிச்சலடைய செய்ததாகவும் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு சொன்னார்கள். தன்னைப் போன்ற இன்னொரு இஸ்லாமிய சகோதரனை திட்டுவது தான் மார்க்க சொற்பொழிவு என்று பல மார்க்க சொற்பொழிவாளர்கள் கருதுகிறார்களே, இதற்காகத்தான் 7 வருடம் மதர்ஸாவில் படித்தீர்களா? என்று ஆதங்கத்தோடு வினவியதையும் எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.

கருணாநிதி, AVM சரவணன், திருமாவளவன், வைகோ ஆகியோருக்கும் இஸ்லாத்திற்கும் இருக்கும் தொடர்பு பற்றி ஒரு காணொளி பேட்டி தர முடியுமா என்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் கேட்டேன். “அல்லாஹ்வை தவிர நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், நிச்சயம் அவர்கள் தொடர்பாக பேட்டி தாராளமாக தருவேன்” என்று சொல்லி மறுநாள் துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலுக்கு வர சொன்னார்கள்.

மறுநாள் எனது மற்றொரு சொந்தமான அஹமது முஹ்சீனையும் உடன் அழைத்துச் சென்றேன். மனோதத்துவ நிபுணரான டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக நிறைய பேர் அங்கே காத்திருந்த காரணத்தால், என்னிடம் பேட்டி தருவதாக சொல்லியிருந்தது அன்று நடைபெறாமல் போனது. இன்ஷா அல்லாஹ் திருமாவளவன், கருணாநிதி, AVM சரவணன், வைகோ ஆகியோருக்கும் இஸ்லாத்திற்கு உள்ள தொடர்பு பற்றி நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது பற்றி பொதுவில் பேசுவேன் என்று சொல்லி எங்களிடமிருந்து விடை பெற்றார் டாக்டர் அப்துல்லாஹ். 

முனைவர் பட்டம் பெற்று உலக புகழ்பெற்ற மனிதராக 63 வயது நிறைந்தவர்களக இருந்தாலும் 16 வயது வாலிபர் போல் மிகவும் சுறுசுறுப்புடன் தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், சிந்திக்க தூண்டும் நல்ல கருத்துகளாலும் குறுகிய சில நிமிடங்களில் எங்கள் அனைவரின் உள்ளத்திலும் நீங்காத இடம் பிடித்த அவர்களை சராசரி வயதில் முதிர்ந்த மனிதராக மட்டும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மரணம் நம் எல்லோருக்கும் ஒரு படிப்பினையைக் கற்றுத் தருகிறது.

நம்மில் சக முஸ்லீம் ஒருவர் உடல் நிலை பாதிக்கப் பட்டிருக்கிறார் என்றால், கருத்து வேறுபாடுகளை மறந்து அவரிடம் நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும், தூய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் அவர்களை மருத்துவமனைகளில் சந்தித்து அவர்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அல்லது அவர்கள் சார்ந்த இயக்கச் சகோதரர்களை பிரார்த்திக்கச் சொன்ன இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் மிகமிகக் குறைவே ! இதில் நிறைய தலைவர்கள் தலைமறைவானது ஏன் என்றுதான் புரியவில்லை.

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படாமல் மருத்துவ ஆராய்ச்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்ய வேண்டும், இவை அல்லாமல் வேறு வழியில் அந்த உடலை பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. தூய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு உடல் தானம் செய்வது பற்றி அறிந்தும் அதனை தவறு என்று எடுத்துச் சொல்ல தவறியவர்கள் இதற்கு அல்லாஹ்விடம் பொறுப்பாவார்கள்.

வாழும் வரைக் கற்றுக் கொடுப்பவராக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் இறப்பில் கூட இஸ்லாமிய சமுதாயத்திற்கு சில படிப்பினைகளையும் விட்டு சென்றுள்ளார்கள். அதில் முதலாவது இஸ்லாத்த்தை ஏற்கும் சகோதர சகோதரிகளின் வருகையைக் கொண்டாடும் நாம் வந்தபின் செய்ய வேண்டிய கடமைகளில் பொடுபோக்காக இருந்து வழிகாட்ட தவறி இருக்கிறோம். முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள் எனும் இறை வசனத்தின் படி இஸ்லாத்தை ஏற்று வந்தவர்களை முஸ்லிம்களாகவே மரணிக்கவும் கடைசிவரை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் நமது கடமையாகும்.

இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்ற சகோதர சகோதரிகளிடம் உடல் தானம் செய்தவது தவறு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மரணத்திற்கு பின் இறுதிக் காரியங்கள் இஸ்லாமிய முறைப்படி நடக்க வேண்டும் என்ற உறுதி மொழியை எழுத்துபூர்வமாக எவ்வித சட்டச் சிக்கல்கள் எழாமல் இருப்பதற்கு முன்னின்று செய்து முடிக்க வேண்டும்.

கருணாநிதி, வைகோ திருமாவளவன் AVM சரவணன் ஆகியோரை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்க முயற்சி செய்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவர்கள் அனைவரையும் தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்க இனி நம்மில் யார் முன் வரப்போகிறார்கள்? அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். அல்லாஹ்விடம் மட்டுமே அதற்கான விடை உள்ளது. அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழி படுத்துகிறான், தான் நாடியோரை இழிவு படுத்துகிறான்.

வல்ல ரஹ்மானே, மரணித்த நம் சகோதரர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கத்தை கொடுப்பாயாக. அன்னாரை இழந்து துக்கத்தில் இருக்கும் குடும்பததார்கள், நண்பர்கள், முஸ்லீம்கள் அனைவருக்கும் பொருமையை கொடுப்பாயாக. 

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் கடைசி அமீரக பயணத்தில் பேசியபோது பதிக்கப்பட்ட காணொளி.


M.தாஜுதீன்