Showing posts with label மணல் மேடு. Show all posts
Showing posts with label மணல் மேடு. Show all posts

சேது என்றொரு திட்டம் போட்ட மணல் திட்டம் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2012 | , , , ,


மீசை அரும்பாத வயதில் ஆசை அரும்பியது. ஃபோட்டோ எடுப்பதில் அன்று  கோடாக் ஃபிலிமை (Kodak Film) கேமராவில் செறுகிக் கொண்டு (இப்போ ஃபிலிம் ரோலுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது) எங்கு போனாலும் கேமராவும் கையும்தான். (இப்போ மட்டும் என்ன வாழுதாம் என்று யாசிர் கத்துவது  பாம்பன் பாலத்தில் பட்டு எதிரொலிக்கின்றது) அப்போது ரோட்டில் போன ஒருவர் நாங்கள் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த வித்தையைப் பார்த்து "இவனுவ எப்புடி எப்புடி எல்லாம் ஃபோட்டோ எடுக்குறானுவோ இன்னும் பறந்துக்கிட்டு மட்டும்தான் ஃபோட்டோ எடுக்கலே" என்று ஒரு கமெண்ட் அடித்தார். அவரின் அந்த அதிசய வார்த்தைகள் மனதுக்குள் விதையாய் இருந்தது அதுபோல் திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் தான் உங்கள் பார்வைக்கு விரித்து வைத்திருக்கிறேன். 


இந்த இடம் சேது-சமுத்திர திட்டம் "நடக்கப்போகும்" /  "நடைபெற்றுக்கொண்டிருக்கும்" / "நடைபெறும்" எக்காலத்திற்கும் பொருந்தும்  இடம்தான் இது. இத்திட்டத்தைப் பற்றி பேசாத ஆளே கிடையாது  அந்த அளவுக்கு இந்த திட்டம் நாறிப்போய்விட்டது கடலில் பிடிக்கும் மீன் தான் நாறிப்போகுதுன்னா நம் அரசியல்வாதிகளால் கடலில் திட்டமும் நாறித்தான் போகுதே!.

இந்த திட்டத்தைத் தீட்டியவர் இந்திய கடற்படையைச் சார்ந்த ஏ.டி.டெய்லர் என்ற ஆங்கிலயேர் 1860 ம் வருஷம் இந்த திட்டத்தை வடித்தார்(!!?) இத்திட்டம் இதுநாள் வரை செயல் படுத்த முடியாமல் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறது (இதனை யாரவது கின்னஸ் சாதனையில்   சேர்த்துவிடுங்களேன்!)

இன்னும் நம் கொள்ளு பேரன்கள் காலத்திலும் இது பற்றிய விவாதமும் சர்ச்சையும் நடைபெரும் என்பதில் எவ்வித ஐயமும் யாருக்கும் வேண்டாம் காரணம் இந்த திட்டம் அடிமேல் அடி வைத்து கோர்ட் படி(க்கட்டுகள்) ஏறியிருக்கிறது.  


இந்த சேது-சமுத்திர திட்டம் பலவகையான ஊனமுற்ற அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடத்த ஊன்றுகோலாய் உதவி செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தி.மு.க. வின் முக்கிய கூக்குரலான வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷத்துக்கு இது உதவியது. இதன் சகோதரிதான் சேலம் இரும்பாலைத்திட்டம். இந்த இரு திட்டங்களும் வரவேண்டுமென்று அண்ணா எழுச்சி நாள் கொண்டாடினார். அதன்படியே சேலம் இரும்பாலை ஒரு வழியாக வந்து விட்டது. ஆனால் இரும்பை உருக்க மின்சாரம்தான் இல்லை !

சேது-சமுத்திர திட்டமும் பல்வேறு அரசியல் பேரங்களுக்கிடையில் அன்றைய பிரதமர் வாஜ்பாய்தான் அடி(யில்)க்கல் நாட்டார் (அதாவது கடலுக்குள் கல்லை போட்டார்) அதன் பின்பு மன்மோகன் தொடங்கிவைத்தார். ஓடாத இரயிலுக்கு கொடி காட்டினார் அதிரையில் இரயில் நிலையத்தில் பதவி ஏற்ற நினைப்பில் !

இப்படி இந்தியாவின் இரு பெரும் தேசிய கட்சிகளின் பிரதமர்களின் ‘கை’பட்ட இத்திட்டம் (இப்படி இன்னும் எத்தனை பேர் நம்பிக்’கை’ பாடுபட போகுதோ தெரியலே) மத நம்பிக்கை என்ற பெயரில் சிலரின் தூண்டுதலால் இப்போது நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்துக் கிடக்கிறது (லேசுலே தீர்ப்பு வருமா அப்படியோ வந்தாலும் உருப்படியான தீர்ப்பா இருக்குமா? மூன்று பங்கிட்ட தீர்ப்பாக இருந்திட்டால்???) அதற்குள் தூர் வாறிய இடங்களில் எல்லாம் மறுபடியும் மண் விழுந்து விட்டது (திட்டத்தில் இன்னும் மண் விழவில்லை) என்று அறிக்கைகள் வருகிறது.  


இங்கே அரசியல் – ஓரு பாலம் இருந்ததாம் அது இடிக்கப்படுமாம் என்று, சொல்பவர்களின் புராணங்கள் போன்றே கற்பனையான இல்லாத ஒன்றை எப்படித்தான் இடிக்கப்படுமோ என்று தெரியவில்லை . அது ஒரு மணல் மேடாக கடலுக்குள் ஒரு திட்டாக தென்படுகிறது. கடத்திச் செல்லப்பட்ட புராண நாயகியை இவ்வழியேதான் இலங்கையில் இருந்து வால் கொண்ட ஒரு இனம் வைத்து பாலம் கட்டி மீட்டு வந்தார்களென்று புராண கதையாகத்தான் சொல்லப்படுகிறது. (அப்படின்னா கடத்தியவன் எந்த வழியாக கடத்திக்கிட்டு போனானாம், சரி இது எதற்கு நமக்கு இப்போ அவர்களின் விருப்பத்திற்கே ஏற்றார்போல் அமைத்துக் கொண்ட புராணம் அது). தாவித் தாவி பாய்பவரின் உதவியுடன் கட்டிய இந்த பாலம் இன்றளவும் இருந்தால் இலங்கை படை அதன் வழியாக வந்து நமது மீனவர்களை அடித்துப் போட்டுவிட்டு போய்விடுவானே.

ஒரு சிறு மண்மேட்டை வைத்து இன்று ஆன்மீக அரசியல் செய்வதனால் இந்த திட்டம் இன்னும் ஆழ்ந்த கிடப்பில் கிடக்கிறது. நல்ல வேலைங்க அந்தப்பக்கமே போன அவர் துபாய் ஜுமைரா பீச் பக்கமெல்லாம் வரவில்லை. அப்படி வந்திருந்தாக ‘அந்த-’புராணத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வரியிட்டு இருந்திருந்திருந்தால் உலகப்புகழ்பெற்ற பாம்ஜுமைரா திட்டமெல்லாம் கூட நிறைவேற்ற எதிர்ப்பு அரசியல் இந்தியாவில் கிளப்பி இருப்பார்கள் இந்த ஆன்மீக அரசியல் பிற்போக்குவாதிகள்.

மண் அள்ளும் திட்டத்திலும் மண்ணை அள்ளிப் போடுகின்றார்களே இந்த ஆன்மீக அரசியல் வாதிகள் இவர்கள் அனைவரும் மண்ணறை (!??) பயமற்ற மண்சட்டிகள் தலையில் இருப்பதை எப்படி கடலுக்கு அடியில் தூர்வாற அனுமதிப்பார்கள் ? இந்த துரோகத்திற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

-Sஹமீத்