Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

சுவாசத்தின் வாசல் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2015 | , , , , ,

மூக்கு மிக முக்கியமான பாகம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்றே தோன்றுகிறது. ஜீரண மண்டலம் எப்படி வாயில் இருந்து தொடங்குகிறதோ, அதேபோல் சுவாச மண்டலமும் மூக்கில் இருந்துதான் தொடங்குகிறது.

வாய் மூலமாக சுவாசிக்க முடியும் என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் மூலமாகத்தான் சுவாசிக்கிறோம். மூக்கு ஏதாவது ஒரு காரணத்தால் அடைபடும்போதுதான் அவசரத் தேவைக்காக வாய் உதவுகிறது. எனவே, நம் உயிர் ஆதாரமான ஆக்சிஜனை உடலுக்குள் அனுப்பி வைக்கின்ற நல்ல காரியத்தைச் செய்வது மூக்குதான்.

வாயால் தொடர்ந்து சுவாசிப்பதும் நல்லதல்ல. தேகப் பயிற்சியின்போதும் நீச்சல் அடித்த பிறகும் வாயால் சுவாசிக்கலாம். அப்போது மூக்கோடு, வாயின் துணையும் தேவைப்படும். மற்ற சமயங்களில் சுவாசிக்க மூக்கே சிறந்தது.

வாசனையை முகர்ந்து பார்த்து இன்றைக்கு வீட்டில் இறைச்சி ஆனமா ? கோழிக் குருமாவா ? இல்லே பொரிச்ச மீனா ? என்று முதலில் அறிவிப்பது மூக்குதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் ஆச்சர்யமான தகவல் என்னவெனில், நம் மூக்கில் உள்ள ஒரு சிறிய பகுதியால் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளைப் பிரித்து உணர முடியுமாம்.

மூக்கின் பயன் இதோடு முற்றுப் பெறுவதில்லை.நாம் நன்றாகப் பேசுவதற்கும் மூக்குக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பேச்சு என்றால் வாய்க்கும் தொண்டைக்கும் தானே வேலை? மூக்கோடு அதை எப்படி முடிச்சு போடுவது என்பவர்கள், ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். ஒலி ஒழுங்கு இல்லாமல் வரும்.

நம்மிடம் இருந்து வெளிப்படுகிற ஒலிக்கு ஓர் ஒழுங்கான வடிவத்தையும் இனிமையையும் தருவதில் தொண்டைக்கு மட்டுமல்ல, மூக்குக்கும் அதில் உள்ள சைனஸ் அறைகளுக்கும் கூட முக்கிய பங்கு இருக்கிறது.

மூக்கு நாம் சுவாசிக்கும் காற்றைத் தனது முன்பக்கத்தில் உள்ள மயிரிழைகளால் வடிகட்டி, சுத்தப்படுத்தி பின்னர் மூக்கிலே சுரக்கும் திரவத்தால் குளிரூட்டி உள்ளே அனுப்புகிறது. காற்றை ஏன் குளிரூட்டி அனுப்ப வேண்டுமா ? அப்படி இல்லையென்றால் நாம் சுவாசிக்கும் காற்றின் வெப்பம் நுரையீரலைப் பாதிக்கும். இது மட்டுமின்றி, மூக்கில் இருந்து சுரக்கும் இந்தத் திரவத்தில் 'லைசோசைம்' என்ற ஒரு கிருமி நாசினி உள்ளது. இது மூக்கின் வழியாக நமது உடலுக்குள் எந்தக் கிருமியும் நுழையாமல் பார்த்துக் கொள்கிறது.

சகஜமாக மூச்சுவிட வேண்டுமானால், உள்ளே இழுக்கப் பட்ட காற்று மூக்கின் வழியாகத் தடை எதுவும் இல்லாமல் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். மூக்கு வழியாகச் செல்லும் காற்றில் தூசிகள், மூக்கில் உள்ள சிறிய ரோமங்களால் வடிகட்டப்பட்டு, ரத்தம் எந்த வெப்ப நிலையில் உள்ளதோ அந்த அளவுக்கு சுடாக்கப்பட்ட நிலையில் உள்ளதோ அதே அளவுக்கு சூடாக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. அந்தக் காற்று உலர்ந்தால் அதை ஈரமாக்கும் வேலையையும் மூக்கு செய்கிறது.

மூக்கில் உண்டாகும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று சைனஸ், சைனஸ் என்ற பகுதி பாதிக்கப்பட்டால் உண்டாகும் தொந்தரவின் பெயர் சைனுசைடிஸ், இந்தப் பாதிப்பையே சைனஸ் தொந்தரவு என்று குறுப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது.

நம் முகத்தில் மூக்கைச் சுற்றி உள்ள காற்றுப்பைகள்தான் சைனஸ் எனப்படுகிறது. இவற்றில் சில, கண் இமைகளுக்கு அருகே இருக்கும். சில, கண் எலும்புகளுக்கு உள்புறம் அமைந்திருக்கும். வேறு சில, கண்களுக்கு நடுவே அமைந்திருக்கும்.

நம் உடல் அரோக்கியமாக இருக்கும்போது, இந்த சைனஸ் பகுதிகள் காற்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் காரணமாக, நம் முகத்தில் உள்ள எலும்புகள் எடை குறைந்தவையாகவும் இருக்கும். சைனஸ் மட்டும் இல்லை என்றால் நம் மண்டை ஓடு மிகவும் அதிக எடை கொண்டதாக மாறிவிடும்.

சைனஸால் பாதிக்கப்படுவதற்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது இரண்டுமேகூட காரணமாக அமையக்கூடும், பொதுவாக, ஒருவரது சைனஸ் பகுதி பாதிக்கப்படும்போது அவருக்கும் கடும் ஜலதோஷம் ஏற்படுவது உண்டு. இப்படி ஏற்படுவதை Viral Sinusitis என்பார்கள்.

ஒவ்வாமை காரணமாகவும் சைனுசைடிஸ் உண்டாகலாம். ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை காரணமாக மூக்கடைப்பு ஏற்படும்போது, சைனஸ் பகுதியில் பாக்டீரியா பரவியிருப்பதன் காரணமாக, இந்தச் சளியை வெளியேற்ற முடியாமல் போகலாம். இந்த நிலையை Bacterial Sinusitis என்று அழைப்பார்கள். வைரஸால் ஏற்படும் சைனஸில் அதிக வலி இருக்கும். வீக்கமும் அதிகமாக இருக்கும். காய்சலும் இருக்கக்கூடும்.

பாக்டீரியா காரணமாக சைனுசைடிஸ் உண்டாகியிருந்தால் மூக்கில் இருந்த அடர்த்தியான சளி வெளியாகும். தொடர்ந்து இரு வாரங்களுக்கு மூக்கு ஒழுகும். இருமலுக்கும் குறைவிருக்காது. கண்களைச் சுற்றி வீக்கமோ வலியோ இருக்கக் கூடும். கன்னது எலும்புகளைச் சுற்றி வலி தோன்றும்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் முன்புறம் குனிந்தாலே தலைவலி உண்டாகும். என்னதான் பற்களைத் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் உண்டாகும்ம். மேல் வரிசை பல்லில் வலி இருக்கும் 102 டிகிரியைத் தாண்டலாம்.

தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை டாக்டர் எழுதிக்கொடுக்கக்கூடும். உடல்நிலை சரியாகிவிட்டதென்று எண்ணி பாதியிலேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம். அடங்க தொடங்கியிருக்கும் பாக்க்டீரியா மீண்டும் பலம் பெற்று எழ வாய்ப்பு உண்டு.

சைனஸ் பாதிப்பு, தொற்று நோய் அல்ல. ஆனால், இருமலும் இத்துடன் இணையும்போது அதைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பரவக்குகூடும். சைனஸ் பாதிப்பு ஏற்படும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு அடங்கிய, மூக்குல் விடக்கூடிய சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறினால் ஏதோ உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி சிலர் பதறுவார்கள். மூக்கில் முன்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறினால் அது ரொம்ப சாதரணமான விஷயம். இதில் கவலைப்ட எதுவும் இல்லை.

மூக்கில் அடிபட்டுக் கொண்டதாலோ, மிகவும் பலமாக மூக்கை சிந்திவிட்டுக் கொண்டதாலோ மூக்கின் முன்பகுதியில் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வெடிப்பதன் காரணமாக இரத்தம் வெளியேறலாம்.

இப்படி இரத்தம் வெளியேறினால் தலையை முன்புறமாக சாய்த்துக் கொள்ளுங்கள். மூக்கின் முன்பகுதியை சுமார் 5 நிமிடத்திற்கு அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் (வாய் வழியாக மூச்சு விட்டால் பரவாயில்லை). இரத்தம் வெளியேறுவது நின்றவுடன் முமூக்கை சிந்திவிட்டுக் கொள்ள வேண்டாம் சொல்லப்போனால் அடுத்த நாள் முழுவதும் மூக்கை சிந்தவிட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

சில சமயம், மூக்கின் பின்புறம் இரத்தம் வெளியேறி அது தொண்டைக்குள் போகலாம், பெரும்பாகும் இதனால் உபத்திரவம் இல்லை. தானாக நின்றுவிடும்.

ஆனால், அதிக நேரம் இது தொடர்ந்தால் இரத்த இழப்பு அதிகமாகும். இப்படி நேர்வதற்கு எது காரணமாக இருக்கக்கூடும்? அதிக ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்றவை காரணங்களாக இருக்கலாம். அதிக மதுப் பழக்கமும் காரணமாக அமையக்கூடும்.

மூக்கில் இருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தால் மருத்தவ ஆலோசனை பெறுங்கள்.

'ஆகா என்ன ஒரு மணம்' என்று ரோஜாவையோ மல்லிகையையோ நாம் பாராட்டக் காராணம், நம் மூக்கு சரியாக வேலை செய்வதனால்தான். இதற்கு நம்மூக்கு மற்றும் நாக்கு நரம்புகள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

உணவுப்பொருள் கெட்டுபோயிருந்தால் அது நமக்குத் தெரிய வேண்டாமா ? அதற்கு மூக்கு மற்றும் நாக்கு நரம்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்த நரம்புகள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்வதில் கோளாறுகள் ஏற்படும்.

மூக்கில், வாசனை அறிவதில் கோளாறு ஏற்பட்டால் பலவித சங்கடங்கள் உண்டாகும், விபரீதங்களும் ஏற்படலாம். சந்தேகமாக இருக்கிறதா? சமையல் அறையில் காஸ் கசியத் தொடங்கும்போது அதை உங்கள் மூக்கு உணரவில்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மூக்கில் கோளாறுகள் உண்டானால் முன்பு ரசித்த வாசனைகளை கூட "நாத்தம்டிக்குதே" என்று ஒதுக்கத் தோன்றும்.

சுவை மர்றும் வாசனையை அறிவதில் ஏன் கோளாறுகள் உண்டாக வேண்டும் ? தலையில் அடிபட்டால் இப்படி நேரலாம். கடுமையான ஜலதோஷத்தின் காரணமாகவும் இந்தக் கோளாறுகள் உண்டாகலாம். சிலவகை மருந்துகள்கூட நம் வாசனை மற்றும் சுவை அரும்புகளைப் பாதிக்கக்கூடும். வயதுகூட இதில் பங்கு வகிக்கலாம். முதியவர்கள் சரியான வாசனையையும், சுவையயும் அறியாமல் தவிப்பதும் நாம் அடிக்கடி காணும் காட்சிதானே. இந்தக் கோளாறுகளை, உரிய மருந்துகளின் மூலம், டாக்டர் மெல்ல மெல்ல குணப்படுத்துவார்.

அடிக்கடி தும்மல் வருகிறது, மூக்கு ஒழுகிறது, இருமலுக்கும் குறைவில்லை. கண்கள், மூக்க்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு உண்டாகிறது. கண்ணைச் சுற்றி சமீபகாலமாக கருவளையங்கள் தோன்றியுள்ளன.

மேலே உள்ள அத்தனை அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றில் சில இருந்தாலே கூட, அது ஹே காய்ச்சலின் (Hay Fever) அறிகுறியாக இருக்கக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது ? கீழே விழும் மரம், புல் அல்லது களை, போன்றவை மகரந்தப் பொடிகளை வெளிப்படுத்தலாம். அவற்றில் சில காற்றின் வழியாக உங்கள் மூக்கு அல்லது தொண்டையை அடையக்கூடும். இந்தப் புதிய பொருள் ஒவ்வாமை உண்டாக்கி, அது ஹே காய்ச்சலில் முடியலாம்.

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக்குரிய மருந்துகளின் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும்.

என்ன மூக்கைப் பொத்திட்டீங்க ? இனிமேல்தான் இருக்கு இன்ஷா அல்லாஹ்...

இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டணி.

நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.

உணவுக்கும் நானே; சுவாசத்துக்கும் நானே ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 09, 2015 | , , , , , ,

உணவு, ஆக்சிஜன் - நாம் உயிர் வாழ்வதற்கு இவைகளும் இன்றியமையாதது என்பது உங்களுக்குத் தெரியும். உணவு, உணவுக் குழாயின் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. ஆக்சிஜன், சுவாசக் குழாயின் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இதில் இரண்டு குழாய்களுமே தொண்டையின் வழியாகத்தான் பயணப்படுகின்றன என்பதைத்தான் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்(!!)

ஆக, உணவும் ஆக்சிஜனும் உடலுக்குள் செல்ல தொண்டையும் ஒரு முக்கியமான பாதையாக இருக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் உணவுப் பாதையிலும் சுவாசப்பாதையிலும் தொண்டையும் ஓரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.

இதோடு தொண்டையின் வேலை முடிவதில்லை. உணவு, சுவாசக் குழாய்க்குள் போகாமல், சுவாசக் காற்று உணவுக் குழாய்க்குள் போகாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம். அந்த சிறப்பான பணியையும் பொறுப்புடன் நிறைவேற்றுவது திருவாளர் / திருமதி (செல்வன் / செல்வி) தொண்டையார்தான். பொதுவாக, சுவாசப் பாதை எப்போதும் திறந்தே இருக்கும். உணவுப்பாதை எப்போதும் மூடியே இருக்கும், உணவு சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும், உணவுப் பாதை திறக்கும்.

உணவு உள்ளே போனதும் உணவுப் பாதை மீண்டும் மூடிக் கொள்ளும், சுவாசப்பாதை திறக்கும். இந்த வேலையை EPGLOTTIS என்ற பாகம் செய்கிறது. டான்சில்ஸ் என்ற குட்டிச் சதையும் இதில் பங்கேற்கிறது.

உணவுப் போக்குவரத்து நடைபெறும்போது (இங்கேயும் நம்மில் சிலர் ஒரு கவலம் உட்சென்று இறங்குவதற்குள் அடுத்தடுத்து உள்ளே அனுப்பி டிராஃபிக் ஜாம் ஏற்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்) சுவாசப்பாதையின் வாயிலை மூடவும், சுவாசப் போக்குவரத்து நடக்கும்போது உணவுக் குழாயின் வாயிலை மூடவும் இவை பயன்படுகின்றன. இதனால், சுவாசக் குழாயில் உணவு செல்லாமல் தடுக்கப்படும். அதேபோல், காற்றும் உணவுக் குழாயில் செல்லாமல் இருக்கும், ஆனால், சாப்பிடும்போது பேசினால், பேசுவதற்காக சுவாசக் குழாய் திறக்கும். இங்கே சிக்னலில் சிக்கல் வந்தால் "யாரோ நினைக்கிறாங்கமா" என்ற ஸ்லோகன் அருகிலிருப்பவரிடமிருந்து தானாக வரும் !

இதன் காரணமாக, சிலசமயம், சுவாசக் குழாயில் உணவு நுழைந்துவிடும். இது மிகவும் ஆபத்தானது. இதனால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கத்தான், உணவை சுவாசக் குழாய் வெளியே பலவந்தமாகத் தள்ளும். இதைத்தான் "புரையேறுதல்" எனக் கூறுகிறோம். இதனால் சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படும்.

பொதுவாக, பாடகர்களும், பேச்சாளர்களும் தங்களது தொண்டையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள், பராமரிப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தில் எங்களுக்குச் சம்மதம் இல்லை என்று மற்றவர்கள் ஒதுங்க முடியாது. ஏனெனில், நம் ஒவ்வொருவருக்கும் தொண்டை மிகமிக முக்கியம். எட்டுக்கட்டை ஸ்ருதி பாடுவது இருக்கட்டும், பிறர் காதுகளில் எட்டும் வகையில் பேசுவதற்காவது தொண்டை தேவைப்படுமே.

தொண்டையில் உணவுக் குழாயும், சுவாசக் குழாயும் சந்தித்துக் கொள்ளும் இடத்துக்கு மிக அருகில் உள்ள குரல்வளைதான் நாம் பேசுவதற்கான ஆதாரம். ஆனால், அங்கிருந்து எழும்பும் ஒலியை மேம்படுத்தி, பாலீஷ் போட்டு, இனிமையான குரலாக, கரகர குரலாக வெளிப்படுத்த வாய், கன்னம், சைனஸ் அறைகள் போன்றவற்றோடு தொண்டையும் முக்கியமாகப் பயன்படுகிறது.

தொண்டைக்குள் தாகத்துக்கும்கூட மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நம் அனைவருக்குமே எப்போதாவது தாக உணர்வு ஏற்படுவது இயல்புதான். முதலில் தண்ணீரின் அவசியம் புரிந்தால்தான் தாகத்தின் அருமையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூன்று வாரங்கள் தண்ணீர் குடிக்காமல் ஒருவர் இருந்தால் அவர் இறந்து போவதற்கான வாய்ப்பு அதிகம்.

நம் உடலில் பொதுவாக, 47 லிட்டர் தண்ணீர் இருக்கிறது. தசைகளில் முக்கால்வாசி தண்ணீர்தான் அடங்கியிருக்கிறது. கல்லீரலில் 70 சதவீதம் தண்ணீரே. சிறுநீரகத்தில் 83 சதவீதம், மூளையில் 79 சதவீதம் என்ற அளவில் தண்ணீர் இருக்கிறது. வாயும் தொண்டையும், வறண்டுபோனால் தாகம் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அச்ச உணர்ச்சிகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகும் சிலருக்கு நாக்கும் தொண்டையும் வறண்டு போகலாம் அல்லது எச்சில் ஊறும் வேகம் திடீரென்று குறைவாக இருக்கலாம். இதனாலும் வறட்சி உண்டாகி இருக்கக்கூடும். கொஞ்சம் எலுமிச்சை ஜூஸை குடித்தால் எச்சில் மீண்டும் வழக்கம்போல் சுரக்கும்.

மிக அதிகமாக எச்சில் சுரந்தால் (அல்லது சுரக்க வைக்கப்பட்டால்) தாகம் அடங்கிவிடுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். எச்சில் சுரந்து வயிறு நிரம்பி விட்டால்கூட தாகம் ஏற்படலாம்.

சரி, இப்போது அடிப்படைக் கேள்விகளுக்கு வருவோம். 

"தாகம் ஏன் ஏற்படுகிறது. ?"

"நம் உடலில் உள்ள உப்பு, சர்க்கரை ஆகிய இரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் இந்த விகிதம் மாறி உப்பின் அளவு (தண்ணீரோடு ஒப்பிடும்போது) அதிகமானால் தாகம் எடுக்கும்."

நம் மூளையில் தாக மையம் (Thirst Center) என்ற பகுதி உண்டு. இது நம் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். உப்பின் சதவீதம் அதிகமானால், உடனே தொண்டையின் பின்பக்கத்தில் உள்ள நரம்புகளுக்குத் தகவலைத் தெரிவிக்கும். அந்தத் தகவல் மூளையை எட்டும். இப்படி தகவல் பரிமாற்றங்கள் நடக்கும்போதுதான் நாம் தாகத்தை உணர்கிறோம். தண்ணீர் குடித்து உப்பு - தண்ணீர் விகிதத்தை சரி செய்கிறோம்.

தொண்டையின் தொண்டு பற்றி விரிவாகப் பார்த்தாகிவிட்டது. இனி, தொண்டையில் ஏற்படும் சின்னச் சின்ன தொந்தரவுகளையும் வரிசையாகப் பார்க்கலாம்.

அங்கே இருமல், விக்கல் தும்மல் என்ற தொண்டர் அணியின் அணிவகுப்பை அடுத்தடுத்து பார்க்கலாம்....

சொடுக்குத் தகவல்:-

அடிக்கடி ஏப்பம்! ஏற்படக் காரணம் என்ன ? 

உணவுக் குழாய் உள்ளே காற்று இருப்பதனால் ஏப்பம் வருகிறது. சாப்பிடும்போது அதிகமாகப் பேசுவது, கரிய மில வாயு கலந்த பானங்களை குடிப்பது, புகைப்பிடித்தல், இவற்றி ஏதாவது ஏப்பம் வரக் காரணமாக இருக்கும். வாயிலும், தொண்டைக் குழியிலும் இருக்கும் காற்று, வயிற்றுக்கும் குடலுக்கும் செல்லாமல் வாயின் வழியாக ஏப்பமாக வருகிறது. சாப்பிடும்போது அதிகமாக பேச வேண்டாம். குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். புகைப் பழகத்தில் இருந்து மீள வேண்டும். இவற்றைச் செய்தாலே ஏப்பம் வருவது பெரும்பாலும் நின்றுவிடும்.

இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டனி.
நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.

இனிப்பான கசப்பு - சர்க்கரை நோய் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | December 14, 2014 | , , ,

"என்ன சாப்பிடுகிறீர்கள்? 'டீ' அல்லது 'காபி'? - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், "ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்..." என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப்

பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ

அதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்", "மதுர நோய்", "சர்கரை நோய்", "நீரிழிவு நோய்" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர?) தகவல்:

பழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு "இனிப்பான சிறுநீர்" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்!

சர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

வகை I (Type - I):
Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM) - இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.

வகை - II (Type - II):
Adult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்

மூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய்(gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.

மேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில்(pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு "இன்சுலின்" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது? இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் "இன்சுலின்" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக(glycogen - கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது(பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாம்' போடுவதுமாதிரி!). அடுத்த உணவு கிட்டதபோதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.

இப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogen ஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்? அவைகளைக் விரிவாகக் காண்பதற்கு முன்னால்

இந்த நோய் ஏற்பட்டிருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதைக் காணலாம்.

குறிப்பு:

கீழ்க் காணும்வற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் அச்சப் பட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமான ஒன்றாகக் கூட இருக்கலாம். அவை தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.

அறிகுறிகள்:

-அதிகப்படியான தாகம்

-அடிக்கடி சிறுநீர் போதல்

-அதிகமாப் பசித்தல்

-காரணமில்லாத எடை குறைவு

-உடம்பில் வலியெடுத்தல்

-சோர்வு

-காயங்கள் எளிதில் ஆறாமை

-அடிக்கடி சிறு சிறு நோய்கள் தொற்றுதல்

-சில நேரங்களில் பார்வை தெளிவின்மை.

மேற்கண்டவற்றில் சிலவோ அல்லது எல்லாமோ ஒருவருக்கு இருக்கலாம். இனி, இந்த குறைபாடு எப்படி வருகிறது என்பதையும் ஒவ்வொரு வகையின் தன்மையையும் காண்போம்.

வகை I

அதிகப்படியான சர்க்கரையை glycogen (கிளைக்கோஜன்) ஆக மாற்றி சேமித்து வைக்க கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் தேவையான ஒன்று என்று கண்டோமல்லவா? கணையம் இன்சுலினை சுரகத் தவறும்போது இந்நோய் வெளிப் படுகிறது. ஏன் இப்படி? இந்த இன்சுலின் சுரக்கக் காரணமாக இருக்கும் beta((பீட்டா) செல்கள் கணையத்தில் மிக மிகக் குறைந்தோ, அல்லது முழுவதுமாக இல்லாமலோ இருக்கலாம். இப்படி, பிறக்கும்போதே கூட சில இளம் நோயாளிகளுக்கு இருக்கலாம். அல்லது ஏதோ ஓர் காரணத்தால் அவை அழிக்கப் பட்டும் இருக்கலாம். இம்மதிரியான குறை, இளம் வயதில் (கிட்டத்தட்ட 20 வயதிற்குள்) தோன்றிவிடுவதால் இவ்வகையை Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் என்றழைக்கிறார்கள். இம்மதிரியான நோயாளிகளுக்கு இன்சுலினை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.

வகை II

இரண்டாவது வகை வயதானவர்களுக்கு(40 வயதிற்கு மேல்) வருவதாகும். கணையதில் இருக்கும் பீட்டா செல்கள் அளவு குறைந்தோ அல்லது இன்சுலின் போதுமான அளவு சுரந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள இயலாத ஓர் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கலாம். இம்மாதிரியான குறைபாடுடையவர்கள் வாய் மூலம் உட்கொள்ளும் மருந்துகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் ஒரு நோயல்ல - ஒரு குறைபாடு. அந்தக் குறைபாட்டை மருந்துகள் உண்டோ அல்லது இன்சுலின் எடுத்தோ எவ்வழியிலாவது சரிசெய்ய முடியுமானால் வாழ்க்கையைச் சிக்கலின்றிக் கழிக்கலாம்.

முதல் வகையானது 10 விழுக்காடே காணப் படுகிறது. இரண்டாவது வகைதான் வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். ஒருவரின் உடற்கூறு, வாழும் வகை, உண்ணும் உணவு, செய்யும் தொழில் இவை எல்லாமே சர்க்கரை நோயின் அளவை நிர்ணயிக்க கூடியவை.

ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை சர்க்கரை நோய் என்று அறிய வந்துவிட்டால்(கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற தற்காலிக வகை தவிர) அந்த 'வரத்தோடு' வாழ வேண்டியதுதான். ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒரு பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள்: சர்க்கரை நோய் நம்மை ஆளுவதற்கு முன்னால் அதை நாம் ஆளத் தொடங்கிவிட வேண்டும். அதனால்தான் சர்க்கரை நோயை treat செய்வதாகச் சொல்வதில்லை; manage செய்வதாகச் சொல்கிறோம். என்ன, முன் சொன்ன அறிகுறிகளில் சில உங்களுக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு குறுதிச் சோதனை செய்து கொண்டுவிட்டீர்களா? எல்லாம் சரியாக இருக்கிறதா? வாழ்த்துக்கள்.

இல்லை, இரத்தத்தில் சர்க்கரை இருப்பதாகத் தெரிய வந்ததா? கவலையை விடுங்கள். அயர்ந்து போக வேண்டாம். இந்த உலகில் நீங்கள் தனித்தவரல்லர். உங்களோடு கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்களுள் இலட்சக் கணக்கான அறிவியலாளர்களும், பேராசிரியர்களும், பொறியிலாளர்களும், கணினி வல்லுனர்களும், மருத்துவர்களும், விளையட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்த நோய் கொண்டிருந்தும் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களும் உண்டு. அது ஏன் -

கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப் பந்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த வசீம் அக்ரம், இன்சுலின் எடுத்துக் கொள்ளும் ஒரு சர்க்கரை நோயாளிதானாம்!

சர்கரை நோயை முன்னறிய முடியுமா? அவற்றை தடுத்துக்கொள்ள முடியுமா? இக்கட்டுரையைப் படிக்கும்போது எல்லோர் மனதிலும் எழக்கூடிய முதல் கேள்வி. இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் சொல்ல இயலாது. காரணம், கணையத்தில் ஏற்படக்கூடிய கட்டி, கல்லடைப்பு, வீக்கம் போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப் படும் சூழ் நிலை தவிர இது உடம்பிற்குள்ளேயே முன் கணிக்கப்பட்ட(programmed) ஒன்றாக அமைந்து விடுகிறது. இதில் பாரம்பரியமும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. தாயோ அல்லது தந்தையோ சர்க்கரை நோயாளியாக இருந்தால் பிள்ளைகளுக்கும் வர அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி முன் கணிக்கப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள இயலுமா? கடினம்தான். ஆனால் இந்த நோய் தலைகாட்டப் போகும் சற்று முன் அறிந்து கொள்ள இயலும். இதற்கு GTT - glucose tolerance test(சர்க்கரை அளவை தாங்கும் தன்மை) ஒன்றைச் செய்து கொள்ளலாம். ஓர் இரவுப் பட்டினிக்குப் பின், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்(எடுத்துக்காட்டாக அரை மணிக்கொருமுறை) ஒரு குறிப்பிட்ட அளவு(50 - 100grams) கரைக்கப் பட்ட சர்க்கரையை(glucose)க் கொடுத்து அதே இடைவெளியில் இரத்ததை எடுத்து சோதனை செய்வர். ஒரு நோயில்லாத மனிதருக்கு சர்க்கரையின் அளவு அவ்வளவு ஒன்றும் கூடிவிடாது. ஆனால் நோய் இருக்கும் மனிதருக்கு அதன் அளவு கூடியே இருக்கும்.

பொதுவாக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பிருக்கிறது. உடல் எடையை அளவாக வைத்துக் கொள்ளுதல், தொடர்ந்த உடற்பயிற்சி, மனச் சிக்கல்(stress) இல்லாமல் பார்த்துக் கொள்ள்ளுதல் ஆகியவை இந்த நோயைத் தூர வைப்பதற்குண்டான வழியாகும்.

சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகமாகியிருக்கிறது. என்றாலும் பலருக்கு இந்தோய் இருப்பது தற்செயலாகவே தெரிய வருகிறது. வேறு ஏதாவது ஒரு நோய்க்காக குறுதிச் சோதனை செய்யும்போது குறுதியில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகத் தெரிய வரும்போதுதான் பலர் இந்த நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று அறிய வருகிறார்கள்.

நாம் முன்பு கண்டபடி இந்நோயின் சில அறிகுறிகளோடு(தாகம், அடிக்கடி சிறுநீர் போதல், சோர்வு போன்றவை) இதன் தாக்கம் நின்று விடுவதில்லை. அவ்வறிகுறிகள் இனி ஏற்படப் போகும் சிக்கல்களுக்கான முன்னோடிகள். சர்க்கரை நோய், வேறு பல நோய்களின் தாய் என்று சொன்னேனல்லவா? அவற்றுள் அச்சமுறுத்தும் நோய்கள் சில:

-கண்பார்வை பாதித்தல்

-சிறுநீரகங்கள் பழுதடைதல்

-இதய நோய்

-கால்களில் புரையோடிய புண்

அதிர்ந்து போய்விடாதீர்கள். சர்க்கரை நோய் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் இவை வந்துவிடுதில்லை. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காமல் ஆண்டுக் கணக்கில் தொடர விடுவோமானால் இவ்விளைவுகள் உண்டாகும். முதலில் தொடக்க கால அறிகுறிகளான தாகம், சிறுநீர் அடிக்கடி போதல் போன்றவை ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? இந்த சர்க்கரையும் அப்படித்தான். உடலுக்கு எரிபொருளாய் விளங்கினாலும் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. நம் சிறுநீரகங்களின் பணி, இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது. அவ்வகையில்தான் மீந்திருக்கும் சர்க்கரையும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செய்யவேண்டியிருப்பதால் சிறுநீரகங்கள் அதிகமாகப் பணியாற்றி சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. எனவே உடலில் நீர் அளவு குறைந்து தாகம் எடுக்கிறது. இன்சுலின் சுரக்காததாலோ அல்லது இருக்கும் இன்சுலினை உடம்பு பயன்படுக்கொள்ள வகையில்லாததாலோ சேமித்து வைக்கப்பட்ட புரதத்தையும் கொழுப்பையும் உடல் இழக்க நேரிடுகிறது. அதன் விளைவாக உடல் இளைக்கிறது. இப்படியே இரத்தத்தில் சேர்ந்துவிடும் பொருட்களால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. விளைவு? உடலுறுப்புக்களுக்குப் போதிய இரத்தம் கிட்டாது. குறிப்பாக மிக நுண்ணிய இரத்த நாளங்களைக் கொண்ட கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப் படுகின்றன. சிறு நீரகங்கள் செயல் இழக்க ஏதுவாகிறது. இதில் மிகக் குறிப்பாகக் கவனிக்க வேண்டியவை கண்கள். கண்களின் விழித்திரையில்(retina) மிக, மிக நுண்ணிய இரத்த நாளங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளில் ஏற்படும் அடைப்புக்களால் அவை வெடித்து கண் உள்ளேயே இரத்தம் கசியலாம். இந்த அடைப்புக்களால் புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் தோன்றி அவை தடித்து விழித்திரையின் சமமான பரப்பை மேடுகளாக மாற்றலாம். அதன் விளைவாக ஒழுங்கில்லா உருவங்கள்(distorted images) தெரியலாம். இவைகளின் பின் விளைவுகள் பார்வை இழப்பாகவும் அமையும்.

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பே இருதய நோய்க்கு வழி வகுக்கிறது என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோயாளிக்கு இரத்த நாள அடைப்பு ஏற்படுவதால் இதயநோய் வருவதற்கு எளிதாக வழி வகுத்து விடுகிறது. இதய நோயாளிகளில் ஒரு கணிசமான அளவு சர்க்கரை நோய் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகளிடையே ஏற்படும் மற்றொரு சிக்கல், நரம்பு மண்டலம் பாதிக்கப் படுவதாகும். குறிப்பாக கால்களில் மெல்ல மெல்ல உணர்ச்சிகள் குறைந்து விடும். அதனால் ஏதேனும் அடித்தாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ கூட வலி தெரியாது. எனவே நோயாளி அதை கவனிக்காது அலட்சியம் செய்து விடுவார். மேலும் கால்களில் இரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதால் புண் எளிதில் ஆறாமல் விரைவில் பரவும். அதன் விளைவாக அப்பகுதியை வெட்டியெடுக்கும்படியாகக் கூட நேரலாம். இவையன்றி வேறு உறுப்புக்களும் பாதிப்படையலாம்.

சர்க்கரை நோயாளிக்கு ஏற்படக் கூடிய மூன்று 'pathy' களைப் பற்றிச் சொல்வார்கள்:

Nephropathy (நெப்ரொபதி) - சிறு நீரகக் கொளாறுகள் - செய்லிழத்தல்

Neuropathy (நியுரொபதி) - நரம்புகள் பாதிக்கப் படுதல்

Retinopathy (ரெட்டினொபதி) - கண் விழித்திரை பாதிப்படைதல் - பார்வை இழத்தல்

இவையல்லாமல் அவ்வப்போது தொற்றும் சில்லரை நோய்கள். மற்றவரைவிட சாதாரணமாக நம்மிடையே புழங்கும் சிறு சிறு நோய்கள்கூட இவர்களை எளிதில் பற்றிக் கொள்ளும். இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகள் இவை.

மேற்கண்ட விளைவுகளைப்பற்றித் தெரிந்து கொள்ள முறையான சோதனைகள் தேவை. ஒரு முறையான - குறிப்பாக நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் தேவையான சோதனைகளைச் செய்வர். அவற்றுள் சில:

இரத்தம்:

- சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.

- கொழுப்பின் அளவு

- யூரியா(உப்பு)வின் அளவு

- ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ª உதவும் சில சோதனைகள்

சிறுநீர்:

- சிறுநீரில் சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.

- சிறுநீரில் புரதம், அசிடோன்

- மேலும் சில சோதனைகள்

மேலும் ஒரு தேவையான சோதனை HbA1c எனப்படும் ஒரு குறுதிச் சோதனையாகும். இந்த சோதனை வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சர்க்கரை நோய் சிறப்பு நிலையங்களிலோ அல்லது பெரிய இரத்தச் சோதனை நிலையங்களிலோ இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சர்க்கரை அளவின் சராசரியை இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது செய்யப்படும் சர்க்கரைச் சோதனைகள் உணவிற்குத் தக்கவாறும் நேரத்திற்குத் தக்கவாறும் மாறுவதால் இந்த HbA1c சோதனை ஒரு சரியான அளவுகோலாகக் கருதப் படுகிறது.

என்ன. இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகளை அறிந்து கொண்டதும் அச்சமாக இருக்கிறதா? இந்தக்கட்டுரையின் நோக்கம், சர்க்கரை நோயின் கொடிய விளைவுகளை அறியத்தருவதும் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதைச் சாமர்த்தியமாகவும் எளிதாகவும் கையாண்டு மேற்சொன்ன சிக்கல்களை தவிர்க்கும் வழிகளை அறியத் தருவதுமாகும். அச்சம் தவிருங்கள்; இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை செய்வது? எவ்வாறு மேலும்

சிக்கல்கள் நேராமல் பார்த்துக் கொள்வது? கட்டுரையின் இந்த இரண்டாவது நோக்கத்தை இனிக் காண்போம்.

மூன்று தலையாய விடயங்கள் இந்த நோயை மேலாண்மை செய்வதிலே இருக்கின்றன.

1. உணவுக் கட்டுப்பாடு

2. தேவையான மருந்துகளைத் தவறாமல் எடுத்தல்

3. தெவையான அளவு உடற்பற்சி.

ஏன் உணவுக் கட்டுப்பாடு தேவை?

இந்தக் கட்டுரையின் துவக்கதில் கண்ட சில அடிப்படையான விடயங்களை மீண்டும் நினைவு கூர்ந்தால் உங்களுக்கு ஓர் உண்மை தெரியவரும். இரத்தத்தில் சேரும் அதிகப் படியான சர்க்கரையைச் சேமித்து வைத்துக் கொள்ள உடல் ஏதுவாக இருக்கவில்லை என்றும் அதனால்தால்தான் மேற்கண்ட சிக்கல்கள் தோன்றுகின்றன என்று கண்டோமல்லவா? ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான சர்க்கரையைச் சேரவிடாமல் செய்துவிட்டால்? சிக்கல்களைத் தவிர்க்கலாமல்லவா? ஆம்; அதில் ஒன்றுதான் உணவுக் கட்டுப்பாடு. இந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கைக் கொள்ள வேண்டுமானால் முதலில்.உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரி(சக்தி) தேவைப்படும் என்று அறிய வேண்டும்.

ஒவ்வொருவரூக்கும் தேவைப் படும் கலோரியின் அளவு வேறுபடும். ஒருவரின் உடல் வாகு, செய்யும் வேலை, அவர் உடல் சக்தியை எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பன போன்றவை இதில் அடங்கும். ஒரு நல்ல 'Dietitian"(சத்துணவு நிபுணர்) இதனை கணக்கிட்டு அறியத் தரக்கூடும்.

தேவையான மருந்துகளை எடுத்தல்:

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் தகுந்த அளவுப்படி தகுந்த நேரங்களில் எடுக்கவேண்டும். சில மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிகம் சுரக்கவைக்கும் வகையாக இருக்கலாம். சில, இன்சுலின் உடம்பில் தேவையான அளவு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலிருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றலாம்.

சிலருக்கு இன்சுலினை ஊசிமூலம் தேவைக்கேற்ற அளவு ஒரு நாளில் ஒருமுறை, இருமுறை அல்லது மும்முறை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றிலும் விரைவாச் செயல்படக் கூடியது, மெல்லச் செயல் படக்கூடியது என இருக்கின்றன. அவை இரண்டும் கலந்த வகையும் கிடைக்கிறது. இதையும் சரியான நேரத்தில் சரியான அள்வு எடுக்க வெண்டும்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி மிக இன்றியமையாததாகும். வயதிற்கேற்ற, அவரவர் தேவைக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வகையானது எவருக்கு உகந்தது என்பதையும் மருத்துவர் அறிவுறுத்துவார். உடற்பயிற்சிகளில் எல்லாம் சுலபமானது, எவ்வயதினரும் செய்யக் கூடியது நடையாகும். ஒரு நாளில் குறைந்த அளவு 40 நிமிடம் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நடப்பது மிகத் தேவையான ஒன்றாகும்.

மேற்சொன்ன மூன்றையும் முறையாகச் செய்வோர் அச்சத்தைத் தூர வைத்துவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடரலாம்.

இறுதியாக, இநோயாளிகள் செய்யக் கூடியன, கூடாதன பற்றியும் மேலும் சில தகவல்களையும் காண்போம்.

"உங்களுக்கு சர்க்கரை நோயா? அரிசிச் சோறு உண்ணாதீர்கள்;கோதுமை உண்ணுங்கள்" என்றும் "கேழ்வரகு இதற்கு நல்ல மருந்து" என்றும் பலர் உபதேசம் செய்யக் கேட்டிருக்கிறோம். சர்கரை நோயாளி, தான் ஏதோ ஒதுக்கி வைக்கப் பட்டவர்போல் உணரத் தொடங்கி விடுவார். சர்க்கரை நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்ற பத்தியமில்லை. அடிப்படையை விளங்கிக் கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு மெதுவாகச் செறிக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் செரிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும். கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு ஒன்றும் மருந்தல்ல. ஆனால் அதில் நார்ப்பொருள்(உமி) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். மற்றப்படி அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே(70%) மாவுப் பொருள் இருக்கிறது. மேலும். எந்த வகை உணவு உண்கிறோம் என்பது பொருட்டல்ல; எவ்வளவு உண்கிறோம் என்பதே பொருட்டாகும். பொதுவாக கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நலம். கீரை வகைகள் மிக நல்லது. ஒரு நாளைய உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் சர்க்கரை அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். நாம் முன்பு கண்டபடி மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவர். இது தவறாகும். மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என பரிந்துரைத்தாரோ அவ்வண்ணமே செய்ய வேண்டும். மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மறந்து விட்டால் போகட்டும் என விட்டுவிட வேண்டும். அவ்வறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.

அடுத்து உடற்பயிற்சி. பெரும்பாலும் நடையே பரிந்துரைக்கப் படுகிறது. உங்களுக்குள் ஒரு "வாக்" உறுதி(வாக்குறுதி) எடுத்துக்கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதுவும் மருத்துவர் குறிப்பிட்ட அளவோடுதான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செயதால் சர்க்கரை அளவு குறைந்து போகக் கூடும். ஆக, எதுவாயினும் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கவேண்டும்.

சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். சர்க்கரை குறைவதற்குத்தானே இவ்வளவும் செய்கிறோம். குறைவதற்காக ஏன் அச்சப் படவேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை கூடியிருப்பதைவிட வேண்டிய அளவில் மிகக் குறைந்திருப்பது அபாயகரமானதாகும். மயக்கம் வரலாம். இந்நிலை அதிக நேரம் தொடர்ந்தால் "கோமா"(Coma) நிலைக்குக் கூட போகலாம். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

- உங்கள் சிறுநீரை அடிக்கடி(குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக் கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.

- வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்க்கக "One touch", "Gluco meter" போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவு உண்டபின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வெண்டும்.

- HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாததிற்கொருமுறை செய்து கொள்ள வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சரசரியைக் காட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்:

* 5.6% க்குக் கீழே - நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது

* 5.6% to 7% - சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள்

* 7% to 8% - ஒரளவு கட்டுப்பாடு

* 8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை

+ 10% க்கு மேல் - கட்டுப்பாடு மிக மோசம்

நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புக்கள்:

- உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது அது கை கொடுக்கும்.

- உங்களுடன் இருப்பர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.

- உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பை காலை நெருக்காத அளவுக்குத் தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று அவதானியுங்கள்.

- கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

- இரத்த அழுத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.

- வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள்.

எல்லவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள். உங்கள் உடம்பை நீங்கள் ஆள கற்றுக் கொள்ளுங்கள்; இனிமையான வாழ்வை எதிர் கொள்வீர்கள்!
 
A.உமர் தம்பி
கணினி தமிழ் எழுத்துரு கொடையாளி

தமிழ் வலை உலகில் புகழ் பெற்றவரும், தேனி, வைகை போன்ற கணினி ஒருங்குறி எழுத்துருக்களை இணைய பயன்பாட்டிற்கு கொடையாளித்த நம்மூரைச் (அதிராம்பட்டினம்) சேர்ந்த மர்ஹூம் உமர் தம்பி அவர்கள் தென்றல் என்ற தனது வலைத்தளத்தில் கடந்த 2003 ஆண்டு, நவம்பர் 14ம் தேதி அன்று பதிந்த அருமையான மருத்துவ ஆய்வுக் குறிப்பு ஆக்கத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

பசிக்காக சாப்பாடு... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 04, 2014 | , , ,

சின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு எழுதுகிறேன். வயிறு அதன் சார்ந்த செரிமான செயல்பாடுகளை தெரிய தஞ்சாவூர்    பஸ் ஸ்டான்டில் 'இஞ்சிமரப்பா"விற்கும் மனிதர் விவரமாக சொல்லிவிடலாம். இருப்பினும் இதை சரியாக புரிந்து கொண்டால் இறைவனின் எத்தனையோ அதிசயங்களில் இதுவும் ஒன்றாக தோன்றும். வாய்க்கு பக்கத்திலேயே கெட்ட உணவு / நல்ல உணவு கண்டுபிடிக்கும் ஸ்கேனர் [வாசம் அறியும் மூக்கு] வைத்த இறைவன் சில விதி முறைகளையும் வைக்காமல் இருந்திருக்க மாட்டான்.

40 வயதுக்குள் 70 வயது "சாப்பாடு கோட்டா" வை முடித்து விடுபவர்கள் கவனத்திற்க்கு

முதலில் சாப்பாடு பசிக்காக , பிறகு ருசிக்காக என பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது ஏற்க்கனவே அதிகம் சாப்பிட்டு ரப்பர் பேண்ட் மாதிரி பெரிதாக்கி வைத்துஇருக்கும் குடலை சாப்பாடு கொண்டு நிரப்புவது என ஆகி விட்டது.

இப்போதெல்லாம் நம் ஊரில் விருந்துக்கு பஞ்சமில்லை. இப்போது உள்ள ட்ரெண்ட் என்னவென்றால் திருமண விருந்தில் வயிறுமுட்ட வெலுத்துக்கட்டுவது பிறகு செறிமானத்துக்கு என பெப்ஸி, கோக் என கார்பனேட்டெட் சமாச்சாரங்ளில் சந்தோசப்படுவது ஒரு விதமான் அறியாமைதான். ஏற்கனவெ உள்ளே போன ஹெவியான சாப்பாட்டுக்கு இன்சுலின் தயாரிக்க சிரமப்படும் பேன்க்ரியாசஸ் " விட்டுருங்க காக்கா" என கையெடுத்து கும்பிடும்போது நீங்கள் இன்னும் அவதிப்படு என கோக்/பெப்ஸியை அனுப்புவது மஹிந்த்ரா ராஜபக்சே தனமானது.

ஏனெனில் ஒரு 35 வயது மனிதனுக்கு தேவை 1462 கலோரி ஒரு நாளைக்கு போதுமானது , ஆனால் விருந்தில் சாப்பிடும் ஆட்டிறைச்சி மட்டும் [ உதாரணமாக 200 கிராம்] 738 கலோரியை தருகிறது. இதெற்க்கெல்லாம் செத்துபோன ஆடு கலோரி மீட்டரை கழுத்தில் கட்டிக்கொண்டு வந்து உங்கள் கனவில் வந்து செய்தி சொல்லும் என எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு. இனிமேலும் தெரியாமல் அதிகம் சாப்பிட்டால் தேவைக்காரவீட்டு ஆட்களிடம் சொல்லி கலோரியை ஆட்டிறைச்சியில் ப்ரின்ட் செய்ய சொல்லவேண்டியதுதான்.

நம் ஊரில் ஆட்கள் சமீப காலமாக நடப்பதை [ ராஜாமடம் ரோடு] பார்க்கிறேன். பெரும்பாலான ஆட்கள் "கார்டியோ வாக்" செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லையோ என தெரிகிறது. முதல் பத்து நிமிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து 20 வது நிமிடத்திலிருந்து 35 நிமிடம் வரை முடிந்த்த அளவு வேகம் அதிகறித்து 35 - 45 நிமிடம் வரை மெதுவாக நடந்து பிறகு அமைதியான் இடம் பார்த்து அமர்ந்து அமைதி அடைவது கார்டியோவாக். இதனால் இதயம் பலப்படும், நம் கண்ணுக்குதெரியாமல் அடைபடும் ஆர்ட்டரியில் தெளிவான ரத்த ஓட்டம் தரும்.

சுத்தமில்லாத தண்ணீர் , உணவு மூலம் பரவும் கிருமிகளின் "அதபு" நம் ஊர் போன்ற இடங்களில் அதிகம்.முன்பு எல்லோரும் 'ஒற்றுமையுடன்" கழுவிய குளங்களின் மூலம் அமீபியாசிஸ் பரவி நம் ஊர்க்காரர்களின் பீஸில் தஞ்சாவூர் ஆஸ்பத்திரிகள் வளர்ச்சி அடைந்து விட்டது.

தொடர்ந்து செரிமானகோளாரு இருந்தால் ஒருமுறை ஸ்கோப் செய்து அத்துடன் பயோப்சி செய்து விடுவது நல்லது. இப்போது பெரும்பாலானவர்களின் வயிற்றுப்பிரச்சினைக்கு காரணமான வில்லன் H.Pylori எனும் கிருமிதான். [ இது ரத்த பரிசோதனையிலும் தெரியும்.] இது இருக்கும் இடம் தேடி கொல்வதற்க்கு மருந்து கண்டுபிடித்த டாக்டருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மருந்து ஒரு வாரம் சாப்பிட்டு ஒருமாதம் கழித்து Breath Test டெஸ்ட் எடுத்தால் வில்லன் உங்கள் வயிற்றில் இருக்கிறாரா இல்லையா என சொல்லி விடும் ..அதனால் தான் முன்பெல்லாம் வேப்பெண்ணை / விளக்கெண்ணை தருவார்கள் என சொல்ல வரும் வாசகர்களுக்கு இது கொஞ்சம் திமிர் பிடித்த கிருமி அவ்வளவு ஈசியாக சிக்காது.

இப்போது காலத்துக்கு ஒவ்வாத உணவுகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. [நாமும் அதைத்தான் விரும்புகிறோம்]. இதனால் அதிகம் GERD எனப்படும் வியாதி நெஞ்சு எரிச்சல் அதிகமாகி விட்டது. இதனாலும் இதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 'சுத்தம் சோறு போடும் ,ஆனம் ஊத்தும்' என நாம் பள்ளிக்கூடத்தில் படித்த நல்ல விசயங்களை நம் வீட்டுக்கு கொண்டுவர மறந்து விட்டோம்.

வெளியூர் போனால் நாம் அதிகம் விரும்பும் சைவ உணவை நாம் மத சாயம் பூசி தூர வைத்து விட்டோம்.

கீழ்காணும் தத்துவ ஞானிகளிடம் கவனமாக இருக்க கடவது.

'எனக்கு தெரிந்து ஒரு நண்பன் சைவம்தான் சாப்பிடுவார், அவருக்கு ஹார்ட்லெ அடைப்பாம் இதுக்கு என்ன சொல்றெ?'

"டாக்டர்னா அப்படித்தான் சொல்வான் அவன் சொல் கேட்டா பட்டினிதான் கெடக்கனும்''

மற்றும்,

" ஆறிலும் சாவு நூறிலும் சாவு--இனிமேல் நூறுதான் மாப்லே " என சொல்லும்போது 'ஆறிலேயெ உன்னை தப்பிக்கவிட்டது யார்?" என கேட்க தோன்றும்.இவனுக கிட்டே நம்ம ஸ்டேசன் எடுக்காது என விலகி விடுவது நல்லது.

எடை அதிகரிப்பு , கட்டுப்பாடு இல்லாத உணவு இவைகளில் கவனம் செலுத்தாமல் சின்ன சின்ன உடற்பயிற்சி இவைகளை ஒதுக்கி வீட்டு "நேரம் எங்கே கிடைக்குது" என சொல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் சுகாதார வாழ்க்கைக்கு நீங்கள் ஆப்சென்ட் ஆகி எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரசென்ட் ஆக வேண்டும்.

மற்றபடி 'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை தூர அனுப்பிவிடலாம்" போன்ற பழமொழிகளை நம்பி இருந்து விடாதீர்கள், அதற்க்கும் சுகாதார வாழ்க்கைக்கும் 100 சதவீத தொடர்பு இல்லை அதுமாதிரி பழமொழி எல்லாம் ஆப்பிள் வியாபாரிகளின் ஆடித்தள்ளுபடி வியாபார யுக்தி.

ஜாஹிர் ஹுசைன்
2010 வருடம் பதிக்கப்பட்டது
இது ஒரு மீள்பதிவு

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி 9

அதிரைநிருபர் | January 28, 2014 | , , ,


மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.

கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி

- இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இம்மருத்துவ குறிப்பு ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக நமக்கு கிடைத்திருந்தாலும், நல்ல பயனுல்ல தகவல் என்பதால் இங்கு அனைவரின் பார்வைக்கு தருகிறோம். இச்செய்தியை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துக்கொண்ட அஸ்கர் (மாதவலாயம்) அவர்களுக்கு மிக்க நன்றி.

தகவல்: அதிரை அஹ்மது
இது ஓர் மீள்பதிவு

கண்கள் இரண்டும் - தொடர் - 15 6

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2013 | , ,


கண்புரைக்கு மருத்துவம்

கண்ணில் புரை ஏற்பட்டால் அதனை மருந்துகளால் குணப்படுத்த முடியாது. ஆரம்ப காலத்தில் சில மருந்துகள் பயன்பட்டாலும் சொட்டு மருந்துகள் பயன்படுத்தினாலும் பயனளிப்பதில்லை. சத்து நிரம்பிய உணவும், பயிற்சிகளும் புரையை குணமாக்காது. தடிமனான லென்ஸ் பொருந்திய கண்ணாடிகள் பயன்படுத்தினாலும் ஆரம்பத்தில் பார்வை கிடைக்கும் சிறிது நாளில் படித்தல், எழுதுதல், தெளிவான பார்வை கிடைக்காது. கண் புரை முற்றி கண் சிவத்தல், கண்ணில் நீர் அழுத்தம் அதிகமாகி கண்வலி ஏற்பட்டு வாந்தியும் ஏற்படலாம். 

இவைகள் ஏற்பட்டால் உடன் கண் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்து நவீன அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழுப்பார்வயும் பெறலாம். படிப்பதற்கு எழுதுவதற்கு மட்டும் கண்ணாடி அணிந்து பலனடையலாம். கண்புரையினை அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் கண்பார்வை பாதிக்கப்பட்டவரின் உடலை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக இரத்தம், சிறுநீர், பற்கள், சைன்ஸ், இரத்த அழுத்தம் ஆகியவை சரிபார்த்திட வேண்டும் சர்ககரை அதிகமிருந்தாலும், இரத்த அழுத்தம் அதிகமிருந்தாலும் இவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 

பற்கள் சொத்தை இருந்தால் சொத்தைப் பற்களை நீக்கிவிட வேண்டும். பல் ஈறுகளில் புண் இருந்தால் குணப்படுத்த வேண்டும். இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இதயம் நன்றாக வேலை செய்கிறதா என்பதனை EGC மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் 5 நாட்கள் கண்களுக்கு சொட்டு மருந்து இடப்பட்டு கிருமிகள் கொல்லப்பட வேண்டும். முதல் நாளில் இருந்தே உணவை மருத்துவரின் ஆலோசனை அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பரவலாக மருத்துவ அறுவை சிகிச்சை முறையில் கருவிழியின் மீது சிறு கோடுஇட்டு கண்ணுக்குள் இருக்கும் கண்புரை அகற்றப்படும். கண் மறத்துப் போவதற்கும், மேலும் கீழும் அசையாமல் இருப்பதற்கும் ஊசி மூலம் மருந்தை செலுத்தி கண்புரை இரண்டு முறைகளில் அகற்றப்படுகிறது.

முறை 1: லென்சையும் அதனைச் சுற்றியுள்ள ஜவ்வுடன் அகற்றலாம். இதை இடுக்கி மூலமாகவும்,ஐஸ் கட்டிகளின் கூரிய முனையாலும்அகற்றலாம இந்த முறைக்கு ‘இன்ட்ரா கேப்கலர’ என்று பெயர்.

முறை 2: லென்சை மாத்திரம் சவ்வு நீங்கலாகி அகற்றுவதற்கு ‘எக்ஸ்ட்ரா கேப்கலர்’ என்று பெயர். இம்முறையில் கண்புரை அகற்றிய பிறகு பிளாஸ்டிக் லென்ஸ் பொருத்தப்ப்டும். லென்ஸ் பொருத்திய பிறகு கண் ந்ல்ல பார்வையை பெற்றுவிடும்.

இந்த இரண்டு முறையை தவிர மற்றொரு முறையும் தற்பொழுது மருத்துவதுறையில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ‘பேக்கோ மெஸ்ஸிபிகேஷன்’ இம்முறையில் அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்ணின் கருவிழியில் ஓரு சிறிய துவாரத்தின் வழியாக ஊசியை செலுத்தி கண்புரையை சேதப்படுத்தி அதை வெளியில் எடுத்து விடுவார்கள் , பின் ‘பேர்டபிள்’ IOI-யை ஊசி மூலமாக பொருத்துவார்கள். இதற்கு ‘ NO INJECTION, NO STITCH, NO PAD SURGERY’ இம்முறை மிகவும் பழமையானது.

கண்புரை ஆபரேஷன்  செய்வதற்க்கு மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்ப்படுகிறது. மாதம் ரூபாய் 8,500-க்கு குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு கட்டணச் சலுகைகளில் கேட்டராக்ட் ஆபரேஷன் செய்யப்படுகிறது. 

கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை

அறுவை சிகிச்சை செய்த கண்ணுக்கு ஒரு பாதுகாப்புத் திரை அணிவிக்கப்படும், இது கண்ணிற்கு எவ்வித பாதிப்பும்(அடிபடுதல்) போன்றவை ஏற்படாதிருக்க அணிவிக்கப்படும்  மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் திரவ உணவே எடுத்துக்கொள்ள வேண்டும்

மருத்துவர் ஆலோசனைப்படிமுறையாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், தூய்மையான பஞ்சினால் கண்ணை லேசாக துடைத்து தினந்தோறும் ஆறு முறை மருந்திடுதல் வேண்டும். குனிந்து நிமிருதல், எளிதில் ஜீரனமாகாத உணவை உண்ணுதல், புகையுள்ள இடங்களில் இருப்பது போன்றவைகளை கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். எளிதில் உணர்ச்சி வயப்படுதல், கண்ணீர் வரவழைத்தல் போன்றவைகளை தவிர்ததல் வேண்டும்.

வாரம் ஒரு முறை கண்களை கண்மருத்துவரிடம் காண்பித்து தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.* கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 வாரங்கள் கழித்து கண் பரிசோதனை செய்து மருத்துவர் பரிந்துரைக்கும் பார்வைத்திறன் கொண்ட கண்ணாடி அணிவதன் மூலம் பூர்ண பார்வையையும் பெற முடியும். படிப்பதற்கும் எழுதுவதற்கும் வேண்டுமானால் தனி கண்ணாடி பயன்படுத்திகொள்ளலாம்.

கண் வலி ஏற்பட்டாலும், கண்ணில் நீர் வடிந்தாலும், கண் சிவப்பாக இருந்தாலும் உடனடியாக கண் மருத்துவரிடம் கண்ணை பரிசோதித்து தேவையான சிகிச்சை எடுத்துககொள்ளவேண்டும்.* கண் அறுவை சிகிச்சை செய்து சில ஆண்டுகள் கழித்து கூட கண் வலி ஏற்பட்டலும் , கண் சிவத்தல் தோற்றத்தில் மாற்றம் ஆகியவை ஏற்பட்டாலும் காலதாமதமின்றி கண் மருத்துவரிடம் கண்ணை பரிசோதித்து கொள்வதன் மூலம் கண் பிரச்சனையை சரிசெய்து கொள்ள முடியும், ஏனெனில் கண்களை கண்ணாக பார்ப்பது மிகவும் அவசியம்.

கண்புறை (Cataract) நோயிலிருந்து காக்கும் உடற்பயிற்ச்சி!

கடுமையான உடற்பயிற்ச்சி செய்தால் கண்புறை நோய் (Cataract) மற்றும் முதுமையில் ஏற்படும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்  என்றும் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவின் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வுகூடத்தில், சுமார் 41,000 ஓட்டப் பந்தய வீரர்களில் (ஆண்களும் பெண்களும்), 7 வருடங்களாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளதாக கூறுகிறார் ஆய்வாளர் பால் வில்லியம்ஸ் அவர்கள்!

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் அத்தியாயத்தில் பார்வை கோளாறை சரி செய்யும் கண் செல்கள் பற்றியும்  செயற்கை கண்கள் பற்றியும் அலசுவோம்.

தொடரும்
அதிரை மன்சூர்