Showing posts with label மாயை. Show all posts
Showing posts with label மாயை. Show all posts

மாயை 13

ZAKIR HUSSAIN | April 17, 2016 | , , ,

அன்றைக்கு கொஞ்சம் வித்யாசமாக பயணிக்க நினைத்து நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 100 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஸ்லிம் ரிவர் எனும் ஊருக்கு காரில் போய் பின்பு ரயிலில் திரும்பினேன்.



பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 70 வயது இருக்கும் என்னிடம் அவராகவே பேச்சுக்கொடுத்தார்.

மனதுக்குள் அவர் ஏதோ சுமப்பது போல் என் உணர்வு சொன்னது.. தமிழ்நாட்டில் இருந்து வருவதாக சொன்னார்...ஏதோ  நீடாமங்களம், மன்னார்குடி   ஊர் பக்கம் மாதிரி சொன்னார்.

இந்தியாவுக்கு சொந்தமான அடர்த்தியான காட்டன் சட்டை...கையில் கொஞ்சம் பெரிய சைஸ் லெதர் பெல்ட் வாட்ச். இங்க் பேனா, கையில் ஏதொ நேத்திக்கட கயிறு, ஒழுங்கு படுத்தாத மீசை..குரலில் ஒரு விதமான ஸ்ரத்தையின்மை..அனுபவத்தை எழுத ஆரம்பித்த வெள்ளைமுடிகளின் ஆதிக்கம்.

முதன் முறையாக மலேசியா வந்ததாக சொன்னார்.

நீங்கள் தேடி வந்தது.... உங்களிடம் சின்ன வயதில் பழகிய பெண்ணா?.... இப்போது வயது எப்படியும் 60 தை தாண்டியிருக்க வேண்டுமே??. இப்படி கேட்ட உடனே...

எப்படி இவ்வளவு துள்ளியமா சொல்ரே தம்பி? என்றார்

“இந்த வயதில் இவ்வளவு தூர பயணம்...காதல் / நட்பு இரண்டுக்குத்தான் மிகப்பெரிய சாத்யம்” என்றேன்

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டேன். சம்பாத்யம் சரியாக இல்லாமல் , தங்கை , தாய் , சகோதரன் எல்லோரையும் கவனிக்க ஓய்வில்லாமல் உழைத்தேன் அற்ப காசுக்கு...என்கிட்டே அன்பா இருந்தது இந்த புள்ளெதான் [இன்னும் புள்ளெ இமேஜில் இருந்து அந்த அம்மா டெலிட் ஆகலே]. எல்லோரும் என்னெ வையும்போது 'நீ ஒரு நாள் நல்லா வருவே"னு தைரியம் சொன்னது இந்த புள்ளெ தான்

ரயிலின் வேகத்துக்கு அவரின் பேச்சு கொஞ்சம் திணறியது. கொஞ்சம் அவதானித்தே அவர் பேசினார்.
 

'அப்புறம் நீங்க விரும்பறதெ சொல்லலியா?''

சொல்லலாம்னு நினைக்கும்போதெல்லாம் ஏதாவது தடைவரும்...ஆனா அது ஒருமுறைகூட அப்படி என்னிடம் பேசியதில்லெ...மனசுலெ இருந்திருக்கலாம்.

ஒரு நாள் சொல்ல நினைத்து , பண வசதி , வறுமை எல்லாத்தடையும் மீறி சொல்ல போனால் ...அந்த புள்ளெக்கு கல்யாணப்புடவை எடுக்க கும்பகோணம் பஸ்ஸில் அந்த புள்ளெயோட வீட்லெ உள்ளவங்க புறப்பட்டு போனவுடனே என்னுடைய மனசை மாத்திக்கிட்டேன்...பிறகு அந்த புள்ளெ இங்கெ கல்யாணம் கட்டி இங்கெ வந்து இப்போதைக்கு பெரிய குடும்பம்...வசதி அப்படி ஒன்னும் சொல்லிக்கிறாப்லெ இல்லெ.. எனக்கு பிறகு கல்யாணம் , குடும்பம் , பிள்ளைங்க , பேரப்புள்ளைங்க, கார் , வீடு , சொத்து , எல்லாம் குறையில்லெ....

'இருந்தாலும் உங்க குடும்பத்திலெ...இப்போதைக்கு உங்கள் சொல்லுக்கு அவ்வளவுக்கு முக்கியத்துவம் இல்லெ..."


எப்படி தம்பி இப்படி கரெக்ட்டா சொல்றே?..

'இது ஒன்னும் அதிசயமில்லெ....இது பரிணாம வளர்ச்சி மாதிரியான விசயம், செடி வளந்து பிறகு வயதாகி காய்ந்து போற மாதிரி..'

இப்போ அவங்க வீட்டுக்கு போனீங்களா?...

'போனேன்...அவங்க வீட்டுக்காரர் , அந்த புள்ளே , அதனோட பேரப்புள்ளைங்க எல்லாம் என்னெ நல்லா கவனிச்சாங்க..." இப்போ நாங்க ரென்டு பேரும் வாழ்க்கையின் கடைசிய்லெ நிக்கிறோம், எனக்கு உள்ள சீக்கு புணியெ சொல்லிக்காண்பிச்சேன்'…

அந்த புள்ளே நான் அவங்க வீட்டெ விட்டு புறப்படும்போது என்ன சொன்னிச்சு தெரியுமா?..." 

நீங்க நல்லா இருப்பீங்க..உங்களுக்கு ஒரு குறையும் வராது"...

"உன் கிட்டே பேசினப்புறம் மனசு ரொம்ப லேசாயிடுச்சு தம்பி " என்றார்.  உன்னெ பார்த்தப்போ எனக்கு என்னவோ என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லனும்னு தோனுச்சி'''


சிலரின் எண்ண ஒட்டம் எவ்வளவு தூரம் அன்பைத்தேடி இவ்வளவு தூரம் பயணம் செய்ய வைத்துள்ளது என்பதை நினக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. 

மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு நாம் அன்பு செலுத்துபவர்கள் எல்லாம் நம்மிடம் அன்பாகத்தான் இருக்கிறாற்கள்/ இருப்பார்கள் என்று நம்புவது.

உறவு என்பதே மாயை...இந்த மாயையை நிஜமாக்கி பின்னப்பட்டதுதான் வாழ்க்கை. இந்த மாயையில்தான் மனிதன் இத்தனை வக்கிரங்களையும், அன்பையும், தர்மத்தையும், கஞ்சத்தனத்தையும் ..

மன்னிக்கும் தன்மையையும் வன்முறையையும் நிஜம் என்று நம்பி வாழ்கிறான். உறவுகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடிமானம் இருக்காது, வெல்வதற்கு எதுவும் இருக்காது... பின்னாளில் உறவுகளின் நடத்தையை வைத்து அந்த மாயையில் ப்ரயோஜனம் இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.

எல்லோருக்கும் காலம் தான் பதில் சொல்லும்.

ZAKIR HUSSAIN

மலாலா ஒரு மாயையா? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 19, 2014 | , , , ,

இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா
பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும்…

சரி, பிறகு எழுதலாம் என்று. விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் எப்போதுமே வேண்டியதில்லை என்றாகிவிடும்.

முதலில் எல்லோரும் சொல்வது போலவே மலாலாவுக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்வோம்!

அது தகுதியுடையதா அல்லது இல்லையா என்பதை இக்கட்டுரையின் முடிவில் உங்களின் தீர்ப்பில் தெரிந்து கொள்வோம்.

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை பெறுவதற்காக இதுவரையிலும் இல்லாத அளவிற்கு தனிநபர்களின் மனுக்கள் மற்றும் 47 நிறுவனங்கள் உள்பட 278 மனுக்கள் பரிசீலனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதியாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவ்விருவரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த திரு.கைலாஷ் சத்யார்த்தி மற்றொருவர் பாகிஸ்தானைச் சார்ந்த இங்கிலாந்து வாழ் சிறுமி மலாலா யூஸுஃப்ஸாய்.

“சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வி அவர்களைச் சென்றடைய பாடுபடுதல் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் / இளைஞர்கள் நலன் காக்கப் போராடுதல், குறிப்பாக ’தஃலிபான்’களின் அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் கல்வியில் உயர உழைக்கிறார்.” எனும் அடிப்படையில் நோபல் பரிசுக்கு மலாலா தேர்வானார் என்ற பரிசு ஊக்குவிப்புச் செய்தியினை அறியமுடிகிறது.

பாகிஸ்தானில் பல பள்ளிக்கூடங்களை நடத்திவரும் ஜியாவுதீன் யூஸுஃப்ஸாய் மற்றும் தூர்பெகாய் யூஸுஃப்ஸாய் ஆகியோரின் மகளாக 1997ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் 12ம் தேதி வடமேற்கு மாகாணமான மிங்கோராவில் பிறக்கிறார் மலாலா யூஸுஃப்ஸாய். 

செல்வந்தரின் மகளாக வளர்கிறார். தன்னுடைய 11ம் வயதில் BBC Blogல் ’தஃலிபான்’களின் அடக்குமுறை பற்றி எழுதுகிறார். அதன் உண்மைநிலை அறிய BBC குழு அங்கு வருகிறது. பின்பு மலாலாவுக்கு ஒரு சர்வதேச விருது அளிக்கப்படுகிறது. பிறகு ’தஃலிபான்’களின் பார்வை மலாலா பக்கம் திரும்புகிறது. 

அதாவது, 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி பள்ளிக்கூடம் செல்லும் வழியில் மலாலா, ’தஃலிபான்’களின் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகிறார். பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று பின் மேல் சிகிச்சைக்காக இலண்டன் செல்கிறார். சிகிச்சைக்குப் பிறகு பள்ளிப் படிப்பினை அங்கேயே தொடர்கிறார். இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகிறார். அமெரிக்கா செல்கிறார்; அதிபரை சந்திக்கிறார். வேறு சில நாடுகளுக்குப் பயணிக்கிறார். புத்தகம் எழுதுகிறார். இப்போது நோபல் பரிசளிக்கப்பட்டிருக்கிறார்.

மேற்சொன்னவைதான் ஊடகங்கள் வாயிலாக நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட மலாலா கதை.

சரி, இப்போது ஷபானா பாஸிஜ் ராஸிக் என்பவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஆம் இவரைப் பற்றி நமது ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிந்திராத நிலையில் அறிமுகம் என்பதே சரியான சொல்லாய் இருக்கும்.

இவரது வாழ்க்கை மலாலா போன்று மலர்களால் மூடிய சோலையல்ல; முள்கள் நிறைந்த பாலை.

தங்களின் பள்ளியில் சேர்த்து கல்வியூட்ட, மலாலா போன்று பள்ளிக்கூடங்களின் முதலாளி அல்ல இவரின் பெற்றோர்கள்!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து அவர்களுக்கு கல்வியூட்ட வேண்டும் என்று நினைத்த கருணைமிகு பெற்றோருக்குப் பிறந்தவர் ஷபானா பாஸிஜ் ராஸிக். 

ஆஃப்கான் தலைநகர் காபூலில் பிறந்து வளர்ந்த இவரின் தற்போதைய வயது 24.

ஷபானா சிறுமியாக இருந்த பொழுது ஆஃப்கான் தஃலிபான்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. எங்கும் கெடுபிடி, பெண் குழந்தைகள் வெளியில் செல்லமுடியாத சூழல். படிப்பிற்காக வெளியே செல்லுதல்கூடாது என்று ஊர்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலம். அன்று வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் மட்டுமே (25வயது அதற்கு மேற்பட்டோர்) முறையாக பள்ளி சென்று எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். 

42 இலட்சம் குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் (இதில் பெண் குழந்தைகள் சதவீதம் அதிகம்) கல்வியை எட்டாக் கனியாகப் பார்த்திருந்த சூழல். காரணம் அன்று அங்கு நிலவிய போர் மேகம், போர் என்ற பெயரில் வன்முறை, வாழ்வாதாரங்களை இழந்த ஏழ்மை நிலை இவையனைத்திற்கும் மேலாக ஊர்க்கட்டுப்பாடு என்று அன்று பிள்ளைகள் வீடுகளில் முடங்கிக் கிடந்த பரிதாப நிலை.

இதுபோன்ற சூழலில்தான் ஷபானாவின் தந்தை, மிகப்பெரிய ஆபத்தான சூழலிலும் தன் மகளுக்கு கல்வி போதிக்கப்பட வேண்டுமென நினைக்கிறார். இவர் போன்ற பெற்றோர் எடுத்த முடிவினால் நகரத்தில் ஆங்காங்கு நடைபெறும் இரகசியப் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்கின்றனர். 

பள்ளி என்றால் நாம் கற்பனை செய்வது போலில்லாமல், ஒரு வீட்டின் ஹாலில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அடைத்து வைத்து கல்வி போதிக்கப்படும். அனைவரும் ஒரே நேரத்தில் வருவது கூடாது; அதேபோல கலைந்து செல்லும் போதும் கூட்டமாக செல்லுதல் கூடாது. இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி, போதிக்கும் ஆசிரியர்கள், பாதுகாப்பிற்கென வரும் பெற்றோர்கள் என எவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

இதுபோன்ற ஒரு பள்ளிக்குத்தான் ஷபானா அனுப்பப்படுகிறார். எப்படித் தெரியுமா? ஆண் பிள்ளையின் உடைகளை அணிந்து, மளிகைக் கடைக்கு சாமான்கள் வாங்குவது போன்ற தோற்றத்தில் பையில் புத்தகங்களை அடுக்கி சென்று வருகிறார். தினமும் ஒரே பாதையில் சென்றால் சந்தேகம் ஏற்படுமென்று தினமும் வெவ்வேறு பாதைகளில் அந்த இரகசியப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்.

இப்படி நித்தமும் உயிரைப் பணயம் வைத்து பள்ளி சென்று வந்த நிலையில், 2001ம் ஆண்டு ’தஃலிபான்’களின் ஆட்சி கவிழ்கிறது. அப்பாவிற்கும் மகளுக்கும் மனம் நிறைய மகிழ்ச்சி, என்னவெனில் இனிமேல் நாம் முறையான வழக்கமான பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்கலாம் என்பதே. ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை, கலவரம் காரணமாக அது கனவாகிப் போனது. ஆனால் தொடர்ந்து இரகசியப் பள்ளியின் கல்வியில் மிளிர்கிறார் ஷபானா.

ஒருமுறை மிகவும் விரக்தியான மனநிலையில், “இப்படி ஒரு சூழலில் நான் படிக்க வேண்டுமா அப்பா?” என்று ஷபானா கேட்க, ”இதுமட்டுமல்ல மகளே, உன் வாழ்க்கையில் நீ செல்வங்களை இழக்கலாம், பெற்றோரை இழக்கலாம் ஏன் நீ கூட நாடு கடத்தப்படலாம். ஆனால் இறுதிவரையிலும் உன் கூடவே இருக்கப்போவது நீ கற்கும் கல்வியும் பெறும் அறிவும் மட்டுமே! உன் படிப்பின் கட்டணத்திற்காக எங்கள் இரத்தத்தை விற்றேனும் பணம் கட்ட வேண்டிய சூழல் வந்தாலும் அப்படியே தருகிறோம்” என்று கல்வியின் அவசியத்தை உணர்த்தினார் தந்தை.

இந்நிலையில், படிப்பில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஷபானா, அமெரிக்காவின் YES (Youth Exchange Studies) நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் தனது (மேல்நிலைப்) பள்ளிப் படிப்பை அமெரிக்காவில் தொடரும் வாய்ப்பினைப் பெறுகிறார். அதிகமான சகமாணவர்கள் ஆஃப்கான் பற்றி தெரிந்துகொள்ள இவரிடம் வந்து குவிகின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மூலம் தன் நாட்டின் முகம் தெரிகிறது. பட்ட துன்பம் தெரிகிறது, அடிப்படைக் கல்வி, சுகாதாரம் மறுக்கப்பட்டு இருப்பதை, ஏறத்தாழ 90 சதவீத பெண்கள் முறையான கல்வியறிவற்று இருப்பதை உணர்கிறார். ஆஃப்கான் பற்றி அதிகம் அமெரிக்காவில் பேசுகிறார். ஆஃப்கானின் தூதுவர் போல பார்க்கப்படுகிறார்.

இவரை துணை நிறுவனராகக் கொண்டு 2008ல் SOLA (School Of Leadership Afghanistan) என்ற சர்வதேச தரம் கொண்ட பெண்களுக்கான உறைவிடப் பள்ளி ஆரம்பிக்கப்படுகிறது. இதுவே ஆஃப்கானின் முதல் மற்றும் ஒரே பெண்களுக்கான உறைவிடப்பள்ளி ஆகும். 34 மாகாணங்களைக் கொண்டுள்ள ஆஃப்கானின் அனைத்து தரப்பு மாணவிகளும் இங்கு வந்து பயிலும் நோக்கத்துடன் உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டுகிறது.

கள ஆய்வுப்பணி, பள்ளிக்கூடம் நிறுவுதலுக்குப் பிறகு 2011ம் ஆண்டில் அமெரிக்கா திரும்பி  Middlebury கல்லூரியில் International Studies and Women & Gender Studies எனும் ஆய்வுப் படிப்பில் பட்டம் பெறுகிறார்.  தாம் சிறுவயதில் கல்விக்காக பட்ட துயர், துன்பம் இனி ஆஃப்கான் பெண் குழந்தைகள் படக்கூடாது என்ற நோக்கத்தில் தம் கல்லூரிக் காலத்திலேயே HELA எனும் பெயர்  (ஆஃப்கான் மொழியில் நம்பிக்கை எனும் பொருள்)  கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல், திறமையான ஆசிரியர்களை உருவாக்குதல், உலக மொழிகள் கற்பித்தல், நெருக்கடியான சூழலில் சிந்திக்கும் ஆற்றல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயிற்றுவித்தல், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதாரம் மற்றும் சத்துணவு பற்றிய விழிப்புணர்வுக் கல்வி என ஒரு பெரிய திட்டங்களுடன் இந்த தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுகிறது.நான்கு மாணவிகளுடன் 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இன்று ஆஃப்கானின் 14 மாகானங்களிலிருந்தும் மாணவிகள் தங்கிப் பயிலுகின்றனர், இங்கு பயின்று மேற்படிப்பிற்காக இதுவரை 40 மாணவர்களுக்கு ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள உறைவிடப் பள்ளி, பல்கலைக்கழகங்களில் படிக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 34 மாகாணங்களுக்கான ஆளுமைகளை தலா பத்து வீதம் 340 தலைவர்களை உருவாக்குவது என்று சொல்கிறார் ஷபானா

ஒரு மாணவியை உருவாக்குதல் என்பதிலிருந்து விலகி அதற்கும் மேலாக இந்நாட்டின் ஒரு தலைவியை உருவாக்குவதே SOLAவின் இலட்சியம் என்கிறார். மாணவி எந்த பிரிவைச் சார்ந்தவராய் இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல இங்கு வந்தவுடன் நீ ஒரு SOLA பெண் என்பதாக அவர்களிடம் அறிவுறுத்துகிறார்.

ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஆஃப்கானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு போகமுடியாத நிலை இருந்தது. அரசியல் என்பது ஒருபுறமிருந்தாலும், மேலே படிக்க பள்ளிகள் இல்லை, பொருளாதார சரிவுநிலை, கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை, இதுபோன்ற சில காரணங்களுக்காகவும் 12 வயதினையெட்டிய பெண் பிள்ளைகள் வீட்டில் வைக்கப்பட்டனர், வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனிக்கும் படி பணிக்கப்பட்டனர். சமையல், வீட்டைப் பராமரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர், பிறகு திருமணம் முடித்துக் கொடுக்கப்படுவார்கள்.

இந்நிலையை மாற்றி அவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும், எனக்கு கிடைத்த இந்த கல்வியறிவு மற்ற பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு முயற்சியில் அவர்களது பயனுள்ள நேரங்கள் அனைத்தும், அவர்களை இந்த உலகிற்கு பயனுள்ளவர்களாக மாற்றுவதற்கு எனக்கு வேண்டும். அதுதான் இந்த உறைவிடப் பள்ளியின் இலட்சியம், நோக்கம் என்று தன் உறைவிடப் பள்ளியின் கனவினை விவரிக்கிறார் ஷபானா.

.இந்த வெற்றிகரமான திட்டத்தை மற்ற நாடுகளில் எங்கெங்கெல்லாம் பெண் குழந்தைகளின் உரிமைகள் நசுக்கப்படுகின்றதோ அங்கு தொடங்குவதே அடுத்த கட்டப் பணி என்கிறார் திடமாக. 
  • தன் நாட்டின் பெண்களின் கல்விக்காக கல்லூரிப் பருவத்தி்லேயே அயாராது சிந்திக்கும், உழைக்கும் இவருக்கு, மிக உயர்ந்த பத்து கல்லூரி மாணவிகளில் ஒருவர் என்று ஒரு அமெரிக்கப் பத்திரிகை விருது வழங்குகிறது.
  • இவர் படித்த கல்லூரி இவருக்கு தலைசிறந்த பொதுச்சேவகி பட்டம் /விருதினை வழங்கி கௌரவிக்கிறது.
  • இவரை 2011-2012ம் ஆண்டின் தேசிய பெண்கள் நலன் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அரசின் கிராம மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைச்சகம் நியமித்தது.

இந்த ஆண்டின் வளரும் ஆராய்ச்சியாளர் எனும் பட்டத்தை நேஷ்னல் ஜியோக்ராபிக்ஸ் கொடுத்துள்ளது.

சர்வதேச அரங்குகளில் இவரின் குரல் பெண்களின் முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம், தலைமைப் பண்பு ஆகியவைப் பற்றி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவரின் முயற்சிகளை.இப்படியே இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆஃப்கான் போன்ற நாடுகளில் வளரும் பெண் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் உழைத்தல் என்பதினைப் போற்றி அமைதிக்கான நோபல் பெற வேண்டியது யார்?

உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்!

'புதுசுரபி' ரஃபீக்