Showing posts with label முத்துப்பேட்டை. Show all posts
Showing posts with label முத்துப்பேட்டை. Show all posts

முத்துப்பேட்டை லகூன் ! - ஆவணப் படம்...! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | February 02, 2014 | , , , ,

முத்துப்பேட்டை அருகே இருக்கும் லகூன் என்றொரு சுற்றுலாத்தளம் இயற்கை அழகோடு எண்ணிடலங்கா இனிமையையும் தூய்மையான பொழுதுகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதை, ஒரு குட்டி ஆவணப் படமாக சகோதரர் ஷஃபி அஹமது (ShafiCast) நமக்கு வழங்கியிருக்கிறார்.

புகைப்பட கலையில் அதீத ஆர்வம் கொண்ட ஷஃபி அஹமது, அதன் தாக்கத்தை மற்ரொரு முயற்சியாக காணிப்படமெடுத்து நல்லதொரு ஆவணமாக நமக்களித்திருப்பதில் மிக்க மகிழ்வே !


ஆவணப் படம் : ஷஃபி அஹமது (ShafiCast)
அதிரைநிருபர் பதிப்பகம்

நேர்மை ! தூய்மை! தாய்மை! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 15, 2013 | , , , ,


தாய்மைக்கு நிகர் சொல்லும்படி உலகில் ஏதேனும் உண்டென்றால் இல்லை என்றுதான் எல்லோரும் ஒரு குரலில் கூற முடியும். அவ்வளவு அற்புதமான அமைப்பாக பெண்மையை அல்லாஹ் படைத்திருக்கின்றான். அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி எழுதுவதென்றால் கடல்நீர் அவ்வளவையும் மையகக்கொண்டு வானளவு காகிதக்கட்டுகளை பரப்பி வைத்து வாழ்த்துக்கள் எழுதினாலும் போதாது. அவ்வளவு கருணையும் அற்புதங்களும் கொண்டவன் அல்லாஹ். 

மண்ணாக இருந்த மனிதனை தந்தையிடம் தரிக்கச்செய்து, தாயின் கருவறையில் உதிக்கச் செய்து ஒப்படைக்கிறான். இதை திருக்குர்ஆனில் சொல்லியும் காட்டுகிறான். “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது" என்று அண்ணல் நபிகள் மொழிந்தார்கள். “முந்தி தவமிருந்து, முன்னூறு நாள் சுமந்து அந்தி பகலாக தொந்தி சரியக் கிடந்து” என்று தாய்மையைப் பற்றி வானளாவப் பாடுகிறார் பட்டினத்தார். “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்” என்று திருவள்ளுவரும் கூறுகிறார்.    கல்லூரி நாட்களில் உலகத்தில் சிறந்தது எது? ஓர் உருவமில்லாதது எது? வீரமா? காதலா? தாய்மையா? என்றெல்லாம் பட்டிமன்றங்கள் கண்டுள்ளோம். அனைத்திலும் தாய்மையே வென்றுள்ளது. 

உள்ளே கருச்சுமந்து உதிரத்தால் பால் கொடுத்து அள்ளி எடுக்கும் போதெல்லாம் அன்பையே சேர்த்தெடுத்து – தொல்லை தனக்கென்றும்  சுகமெல்லாம் நமக்கென்றும் சொல்லாமல் சொல்லிவரும் தேவதைதான் தாய். பண்பு  தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணை தாய். பசித்த முகம் பார்த்து பழம் தரும் சோலை தாய். இருக்கும் பிடி சோறும் தனக்கென எண்ணாது கொடுக்கின்ற குலமகள் தாய். 

இந்த தாய்மையைப் பற்றி இஸ்லாத்தின் வரலாற்று ஏடுகளில் சில சம்பவங்களை குறிப்பிட்டுக் காட்டவே இந்த அறிமுகம். 

தாய்மையின் வலிமையை பச்சிளங்குழந்தையைக் கொண்டு பேசவைத்த   சம்பவத்தை விவரிப்பதை முதல் முத்திரைச் செய்தியாகப் பதித்துத் தொடங்கலாம்.  

ஒரு குழந்தை பிறக்கப் போகிறது ; அது தனது ஆட்சிக்கு எதிரானது; ஆட்சிய ஆட்டங்காண வைக்கப் போகிறது என்று ஆடிப்போனான் பிர் அவுன். அதன் விளைவு கற்பந்தரித்த தாய்மார்களின் வயிற்றை வாள் கொண்டு கிழித்து வயிற்றின் உள்ளே துளிர் விட்டிருந்த தளிர்களை வெட்டி வீழ்த்தினான் அந்த விவேகமற்றவன் .  பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை பஸ்பமாக்கினான் அந்த பாதகன். சிந்தப் பட்ட இரத்தங்கள் செங்குருதி நதியாக ஓடியது என்றால் மிகையல்ல. 

அந்தப் படுபாதகமான நிலையிலும், தான் மடிந்தாலும் பரவாயில்லை தன் குழந்தை பிழைக்க வேண்டுமென்று நைல் நதியினிலே , ஒரு பேழையில் வைத்துக் காப்பாற்றி ஓடவிட்டாள் ஒரு தாய் . அவள் பெயர் யாரிஹா. பேழையில் வைத்து அனுப்பப்பட்ட குழந்தையின் கதி என்ன  என்று அறிய தன் மகள் சாராவை நைல் நதியின் கரையோரம் சென்று கண்காணித்துக் காவல் புரிய வைத்தாள்  அந்தத் தாய். அதையும் விட ஒரு படி மேலாக, எந்த பிர்  அவுன் குழந்தைகளைக் கொள்ள வேண்டுமென்று துடியாய்த் துடித்தானோ, அதே கொடுங்கோலனின் கொலுமண்டபத்திலே தன் பெற்ற குழந்தையைப் பேணி வளர்க்க வேஷம் போட்டு வளர்ப்புத்தாயாக வேலைக்கும் சேர்ந்தாள். கொடியவனின் கூடாரத்திலே... விஷப் பாம்பின் புற்றுக்குள்ளே.. சிங்கத்தின் குகைக்குள்ளேயே தனது குழந்தையை தானே பராமரிக்க தன்னுயிரைத் துச்சமென மதித்து உட்புகுந்த தாயின் உள்ளத்தை என்னவென்று சொல்வது?

அடுத்து, கன்னி மரியம் தாய்மை அடைகிறார். ஊராரின் தூற்றலுக்கும் துன்மார்க்கரின்  துடுக்கான வார்த்தைகளுக்குமிடையில் அனாதையாக ஆதரவற்றவராக அன்னை மரியம் பட்ட அவதிகள் கொஞ்சமா? காரூனின் சகோதரி கற்புக்குக் களங்கம் வந்துவிட்டது; கயமைத்தனம் கொண்டுவிட்டாள் என்றெல்லாம் நரம்பில்லா நாக்குகளின்  கொடிய வார்த்தைகளுக்கு ஆளானார்.  கணவன் இல்லாமல் கர்ப்பமடைந்த அன்னை மரியம். அந்த நெடும் பாலை மணலில் பட்ட துன்பங்கள் கொஞ்சமா? ஊருக்கு வெளியே உன்மத்தம் பிடித்தவர்களின் பார்வைகளுக்கப்பால் பெற்றெடுத்த குழந்தையை கொன்று போட்டிருந்தால் யாருக்குத் தெரியும்? யார் என்ன  கேட்டிருக்க முடியும்? தாயல்லவா? பத்து மாதம் சுமந்த குழந்தையை கொன்று போட மனம் வருமா?

குமுறும்  மனத்தோடு, கொதிக்கும் பாலைமணலில் குழந்தையைத் தன் இரு கரங்களில் ஏந்தி வரும்போது எள்ளி நகையாடிய கூட்டங்கள்- ஏளனம் பேசிய எத்தர்களுக்கிடையில் தன்னந்தனியே தாய்மை உணர்வோடு வந்தது சாதாரண நிகழ்வா?

அவ்வூர் மக்கள் இம்ரானின் மகனை நோக்கி அள்ளி வீசிய அச்சிடமுடியாத அபத்த வார்த்தைகளை அல்ல வசை சொற்கள் விஷம் தோய்ந்த வாளைவிட மோசமானவை. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பச்சிளம் குழந்தை பவளவாய் திறந்து பேசிய அற்புதம் நிகழ்ந்தது. தொட்டிலில் கிடத்தப் பட்டிருந்த குழந்தை பேசியது. 

திருக்குர்ஆன் அத்தியாயம் 19 – வசனம 29 to 33 வரை இந்த நிகழ்ச்சியைக் காணலாம். 
  • “ நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் ஆக்கி இருக்கிறான். 
  • நான் எங்கிருப்பினும் வளமிக்கவனாகவே இன்னும் என்னை ஆக்கியுள்ளான் இன்னும் உயிர் வாழும்(காலம்) வரை தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்றிட) எனக்கு உபதேசித்துள்ளான்.
  • இன்னும் , என் தாயாருக்கு நான் நன்மை செய்ய வேண்டுமென்றும் (எனக்குக் கட்டளை இட்டுள்ளான்) இன்னும் பெருமையடிப்பவனாகவோ துர்ப் பாகியமுடையவனாகவோ என்னை அவன் ஆகிவிடவில்லை. 
  • இன்னும், நான் பிறந்த நாளிலும் நான் இறக்கும் நாளிலும் நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலை பெற்றிருக்கும் “ என்று அந்தக் குழந்தை கூறியது. அதுதான் மரிய்முடைய மகன் ஈசா ( ஸல்). என்று முஸ்லிம்களும் இயேசு என்று கிருத்துவர்களும் கூறுகின்றனர். தாயின் மீது சுமத்தப் பட்டக்  களங்கத்தை துடைப்பதற்காக பச்சிளங்குழந்தை வாய்திறந்து பேசிய வரலாறு தாயின் கற்புக்கு அளித்த புனிதமான  சாட்சியமாகும்.
இதுவன்றியும், ஒரு குழந்தை தாய்க்கு தைரியம் சொல்லி நெருப்புக் குழம்பில் வீசச்சொன்ன வரலாற்றையும் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டியுள்ளது. முன்னது நேரிடையானது; பின்னது மறைமுகமான வரலாறு. மீண்டும் ஒரு குழந்தை பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தியாயம் 85  அல் புரூஜ் அத்தியாயத்தில் இறைவன் வசனம் 4 முதல் 8  வரை இறைவன் குறிப்பிடும் வசனங்கள் இந்த ஒரு வரலாற்றைக் கூறுகிறது.
  • நெருப்புக் குண்டவாசிகள் சபிக்கப் பட்டனர் 
  • எரி பொருளுடைய நெருப்புக் குண்டம் 
  • அவர்கள் அதனருகில் உட்கார்ந்திருந்தபோது 
  • (ஓரிறை) நம்பிக்கையாளர்களை ( நெருப்புக் குண்டத்திளிட்டு அவர்கள்) ளுடன் இவர்கள் நடந்து கொண்டதற்கு இவர்களே சாட்சியாளர்கள்
  • (யாவற்றையும்)மிகைத்தோனும் புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டதர்காகவன்றி ( வேறு எதற்கும்) இவர்கள் பழி வாங்கவில்லை. 
ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக நிகழ்ந்த சம்பவம். ஓரிறைக் கொள்கையை வலியுறுத்திய ஒரு சிறுவனைக் கொன்று போட கொடுங்கோலன் செய்த அனைத்து சதிகளும் அல்லாஹ்வின்  கருணையால் முறியடிக்கபபட்டன. இறுதியில் சிறுவன் சொன்னபடியே அச்சிறுவனை அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி அம்பெய்து கொன்றான் அரக்க அரசன்.

ஆனால் அங்கு கூடி இருந்த மக்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் இந்த சிறுவனின் இறைவனான அல்லாஹ் மீது நாங்கள் அனைவரும் இப்போது நம்பிக்கை கொண்டோம் எனக்  கூறினர். இதைக் கண்ட அரசன் மேலும் பீதியடைந்து பெரும் நெருப்புக் குண்டங்களை ஏற்படுத்தி ஏக இறைக்  கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் நெருப்புக் குண்டத்தில் எறிந்தான். இறுதியாக ஒரு தாய் தனது கையில் பச்சிளங்குழந்தை ஏந்தி இருந்தவள் நெருப்பில் இறங்க தயக்கம் காட்டினாள். தான் வேண்டுமானால் தீயிலும் இறங்குவாள் தான் சாவதைப் பற்றி தயங்கத் தயாரில்லை.   ஆனால் தன் குழந்தையை எவ்வாறு வீசுவாள்? தயங்கினாள். ஒதுங்கினாள் பதுங்கினாள் .  ஆனால் தாயின் கரங்களில் தவழ்ந்த அந்தக் குழந்தை , “ என்னருமைத் தாயே! நீ பயப்படாதே! ஏனென்றால் நீ சத்தியத்தின் மீது இருக்கிறாய் ”  என அல்லாஹ்வின் அனுமதியோடு பேசிய அற்புதம் அங்கு நிகழ்ந்து. அந்தத் தாயும் குழந்தையுடன் நெருப்புக் குண்டத்துள் குதித்து தன் உயிரை இறைவனுக்காக அர்பணித்துவிட்டாள்.  இந்த சம்பவமே மேற்கண்ட திருமறையின் அத்தியாயத்தின் வசனங்களில் சுட்டப் படுகிறது. (முஸ்லிம் திர்மிதி ).  இந்த சம்பவத்துக்குப் பிறகு அங்கு ஏகத்துவம் நிலைப் பெற்றது. 
இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் நிறைவுறும்
முத்துப்பேட்டை P.பகுருதீன் B.Sc

மாணவர்கள் போராட்டம் இனிக்குமா? கசக்குமா? - அலசல் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2013 | , , , , ,


மாணவர்களின் போராட்டம் பூதாகரமாய்  வெடித்தால் ஆட்சியாளர்களுக்கு அவதி; மக்களுக்கு பரபரப்பான செய்தி; ஊடகங்களுக்கு குதூகலம். 

1965. இந்தியை எதிர்த்து மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஆட்சியில் இருந்தவர்கள் அடையாளம் தெரியாமல் தூக்கி வீசப்பட்டார்கள். அன்றைய மாணவர் போராட்டம் உணர்ச்சி பூர்வமானது. மாணவச் சமுதாயம் தமிழ் மொழிக்காக உயிர் கொடுக்கவும் மனக் குமுறலுடன் பொங்கி எழுந்த மாபெரும் வரலாறு அது. அந்தப் போராட்டத்தில் 80%  நியாயம் இருந்தது; 20% அரசியல் விளையாடியது. திரு . எம். பக்தவத்சலம் முதல்வராக இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளைக் கொண்டு சுமார் இருபது மாணவர்கள் வரை கொன்று குவித்தார்.


இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறத் தொடங்கிய உடனே தமிழ்நாடெங்கும் கல்லூரிகளும்   பள்ளிகளும்  காலவரையின்றி மூடப்பட்டன. இப்போதும் அப்படித்தான் மூடப்பட்டு இருக்கின்றன. கல்வி நிலையங்கள் மூடப்பட்டாலும் போராட்டம் தொய்வின்றி நடந்தது. நாடெங்கும் போராட்டம் பேயாட்டம் ஆடியது. வன்முறைகள் அரங்கேறின.  அர்ச்சுனன் என்கிற காவல்துறை ஆய்வாளர் வாயில்  பெட்ரோல் ஊற்றப்பட்டு வன்முறையாளர்களால் உயிரோடு எரிக்கப்பட்டார். பல இடங்களில் ரயில்கள் நிறுத்தப் பட்டன. எங்கு பார்த்தாலும் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டன.                 

காஷ்மீரைத்தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களின் அமைதி காப்பதில் அதுவரை  ஈடுபடுத்தப்படாத இந்திய  இராணுவம் , முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும் கடிதங்கள் பிரித்துப்  பார்க்கப் பட்டு  தணிக்கை செய்யப்பட்டன. இரயில நிலையங்களும்  அஞ்சல் அலுவலகங்களும், மத்திய அரசின் அலுவலகங்களும் காவல்துறையின் பாதுகாப்பில் இயங்கின. 

மாணவர் தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட சில மாணவர்கள்  தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில்   கைது  செய்யப்பட்டு அவற்றுள் 10 பேர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர்.  ( இவர்களில் பலர் பின்னாளில் அமைச்சர்களாயினர் –இதில் நினைவு கொள்ளத்தக்கவர்கள்  கா. காளிமுத்து, எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோர்). 

வீரியம் நிறைந்த மாணவர்களின் போராட்டத்தின் காரணமாக  ஆட்சி சுக போகத்தை காங்கிரசார் இழந்தனர். அன்றைய அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த தியாகச் செம்மலான திரு. காமராஜர்  அவர்கள் தனது சொந்த ஊரில் சீனிவாசன் என்றழைக்கப் பட்ட ஒரு மாணவர் தலைவரால் பரிதாபமாகத் தோற்கடிக்கப்பட்டார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஆட்டம் காண்பதற்கு அச்சாரமாக இருந்தது அறுபத்தி ஐந்தாம் ஆண்டில் மாணவர்கள் நடத்திய போராட்டம். உலக வரலாற்றை பல உணர்வு மிக்க போராட்டங்கள்தான்  மாற்றியமைத்து இருக்கின்றன. பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சிவரை இதற்கு சான்றுகள் ஏராளம். 

ஆட்சியை இழந்து போகிற  போக்கில் பக்தவத்சலம் புலம்பிவிட்டுப் போன ஒரு பொருத்தமான  வாசகம் இன்றும் பலரால் நினைவு கூறப்படுகிறது. அன்றைக்கு அவர் சொன்னது ஏதோ வயிற்றெரிச்சலில் சொன்னதாகவும் வேடிக்கையாகவுமே எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இன்று அந்த வாசகங்கள் உண்மையிலும் உண்மையாகத் தெரிகின்றன.  

அப்படி என்ன சொன்னார் பக்தவத்சலம்?     

“I accept the verdict of the people. But I am sure ,  virus spread all over Tamilnadu.” 

“மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தமிழகம் முழுதும் விஷக்கிருமிகள் பரவிவிட்டன.” சொல்லப்பட்ட ஆண்டு  1967.  ஒரு சின்னத் திருத்தம் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு இந்தியா என்று திருத்திப் படித்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு இன்றளவும் அந்த வார்த்தைகள் உண்மையாகிவிட்டன. . 

அப்படி ஒரு மாபெரும் சாதனை அந்நாள்  மாணவர்களின் போராட்டத்தால் விளைந்த வரலாற்று சம்பவம். இன்றுவரை அதே நிலை  தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  வேரூன்றி நிலைத்து நின்ற காங்கிரசை வேருடன் பிடுங்கி வீழ்த்திக் காட்டியது அந்தப் போராட்டம்.

இந்தப் போராட்டத்துக்குப் பிறகு மாணவர்கள் உள்ளூர் பிரச்னைகளுக்காக சிறு சிறு போராட்டங்கள் நடத்தி வந்திருக்கலாம். ஆனால் நாட்டு மக்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் அண்மையில் நடந்த ஒரு வரலாற்றில் இடம் பெற்ற மாணவர்களின் போராட்டம் தலை நகர்  டில்லியில் நடைபெற்றது. 

டில்லியில் ஒரு நடு நிசி இரவில் பொதுப்  பேருந்தில் வைத்து ஒரு மாணவி சில மனித மிருகங்களால் கற்பழிக்கப் பட்டு கொடூரமான முறையில்   அவரது இறுதி மூச்சு அடங்கியது. வேதனையிலும் வேதனையான இந்த நிகழ்வைக் கேள்வியுற்ற டில்லியின் மாணவர் கூட்டம் கொதித்தெழுந்தது. ( மாணவர்கள் மட்டும்தானா இல்லை கூலிப்படைகளும் கூட்டத்தில் சேர்ந்தனரா?) நாட்டின் பெண்மையே கற்பழிக்கப் பட்டுவிட்டது போல் உணர்ச்சிக் கொந்தளிப்புகள். பக்கம் பக்கமாகப் படங்கள். தொலைக் காட்சிகள் இருபத்திநாலு மணி நேரமும் நேரலையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. 

குடியரசுத்தலைவரின் மாளிகைக்குள் மாணவர்கள் நுழைய முயற்சி நடந்தது.  காவல்துறையின் பலம் கொண்டு அவை தடுக்கப்பட்டன. நட்ட நடு நிசியில் பிரதமர் வீட்டை விட்டு வெளியே வந்து மாணவர்களை சமாதானப் படுத்த நேரிட்டது. இதே நிலை சோனியா காந்திக்கும் டில்லியின் முதல்வரான ஷீலா தீட்சித்துக்கும் ஏற்பட்டது. சில ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை ஒரு வரிச்  செய்தியாக்கின. அதே நாளில் ஒரு ஹரிஜனப் பெண் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட மற்றொரு செய்தியை வேண்டா வெறுப்புடன் ஒரு மூலையில் எட்டு வரியில் போட்டு பத்திரிகையில் செய்தி வெளியானது. ஆஹா ! என்ன பத்திரிகை     (அ) தர்மம்? இதைப் பற்றி ஒருவரும் மூச்சுவிடவில்லை. காரணம் கற்பழிக்கப் பட்டவள் ஒரு ஹரிஜனப் பெண் என்பதால் என்று ஒரு நீதிபதியே கண்டித்தார்.  

டில்லியில் நடந்த மாணவர்களின் போராட்டத்தில் உணர்ச்சியும் உண்மையும் ஒரு புறம இருந்தாலும் இந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டு அரசியல் இலாபம் பார்க்க சில குறிப்பிட்ட அரசியல் சக்திகள் தூபம் போட்டன என்பதை மறுக்கவோ  மறைக்கவோ  இயலாது. டில்லியில் இதைப் போல முன்பும் பல சம்பவங்கள் நடந்தன. நடந்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அன்று மட்டும் அரங்கேறவில்லை. வாசாத்தியில்,   திருக்கோயிலூரில், உத்திரப் பிரதேசத்தில்,  பீகாரில் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. நாதியற்ற பல மக்களுக்கு உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைத்  தட்டிக் கேட்க ஆள் இல்லை. அப்போதெல்லாம் இல்லாத மாணவர் போராட்டம் இப்போது ஏன் டில்லியில் ஏற்பட்டது? எல்லாம் அப்பட்டமான அரசியல். மாணவர்களைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காயலாம் ஆட்சியைக் கவிழ்ந்து போகும் அளவுக்கு குழப்பம் விளைவிக்கலாம் என்கிற காழ்ப்புணர்வில் விளைந்த தப்புக் கணக்கு. இத்தகைய கயமைத்தனத்தின் கடைசி வரி வரை சென்று விட்டது அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும்.  

இதே அரசியல்தான் இன்று மாணவர்களை போராட்ட வலைக்குள் தள்ளிவிட்டு தவணைமுறையில்  ஆறுதல் சொல்லி அழகு பார்க்கிறது. இதனால் இன்று தமிழகம் முழுதும் மீண்டும் மாணவர்களின் போராட்டக் குரல் இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்திருந்த மாணவர்கள் ஒரே கருத்தால் ஒன்றி இருந்ததுபோல் இன்று நடைபெறும் போராட்டங்கள்  ஒரே மையக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு போராட்டக் களத்தில் இருந்தும் வித்தியாசமான கோரிக்கைகள் வைக்கப் படுகின்றன. 

அமெரிக்கா  கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் 

இந்தியாவே கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் 

தனி  ஈழம்தான் வேண்டும் 

ராஜபக்சேயை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் 

ராஜபக்சேயை தூக்கில் இட வேண்டும் 

தனி ஈழத்துக்காக ஐ, நாவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் 

தனி ஈழத்துக்காக இலங்கையிலேயே வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் 

என்று பல வகையான கோஷங்கள் முன் வைக்கப்படுகின்றன. 

ஒரு பொது வேலைத் திட்டமாக இன்ன இன்ன கோரிக்கைகள் என்று அறுதி செய்யப்பட்டு அனைவராலும் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில்  பொதுவாக வைக்கப் படவில்லை.  அந்த அளவுக்கு மாணவர்களை அரசியல் கட்சிகள் சிந்திக்க விடவில்லை.   மாணவர்கள் ஒரே ரீதியாக சிந்திக்க விடாமல் செய்வது மாறுபட்ட எண்ணிலடங்கா அரசியல் கட்சிகள் மட்டுமல்ல ; சாதி வலையின் பின்னல்களும்தான். இன்று இராமேஸ்வரத்தில் மூட்டப்பட்டிருக்கும் கலவரத்துக்குக் காரணம் சாதி மோதலை உருவாக்கி மாணவர்களின் போராட்டத்தை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டுமென்பதே  என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.    

ஒரு செய்தியை நாம்  சிந்தித்தால் சிரிப்பு வரும். மனித உரிமை மீறல்களை எதிர்த்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல. உலகில் கொலம்பசால் தேடிக் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு  விஷ வித்து ; வேட்டையாடும் மிருகம் ; வட்டமிடும் கழுகு ; வாய் பிளந்து நிற்கும் ஓநாய் . சாத்தான் வேதம் ஓதுகிறதா? நரிக்கு நாட்டாண்மைப் பட்டமா? என்று உலகம் சிரிக்கிறது. நோக்கமே   தவறான இந்த தீர்மானம் இப்போது நிறைவேறி இருந்தாலும் இன்னும் கடுமையான வாசகங்களுடன்  இந்த தீர்மானம் நிறைவேறி இருக்க வேண்டுமென்று மாணவர் சமுதாயம் நினைக்கிறது. ஐ.நா விடம் கையேந்தி நிற்கிறது. 

ஐ. நா மட்டும் நடுநிலையாக எந்தக் காலத்தில் செயல் பட்டது.? ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். ஈராக்கிலே அமெரிக்க படையெடுப்பு நிகழ்த்தப் பட்டபோது அமெரிக்காவால் சொல்லப் பட்ட காரணம், ஈராக்கில்,  உயிரை அழிக்கக் கூடிய ஆயுதங்கள் கிடங்குகளில் குவித்து வைக்கப் பட்டிருப்பதாகவும் அவற்றைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக அமேரிக்கா சொன்னதை நம்பி ,  ஈராக்கின் மீது படையெடுக்க ஐ நா  தீர்மானம் போட்டு அனுமதி அளித்தது. ஆனால் போர் முடிந்து சதாம் உசேன் வீழ்த்தப் பட்ட பிறகு ஈராக்கில் , அமெரிக்கா அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டை போல் எவ்வித உயிர் கொல்லி  ஆயுதங்களும் இல்லை என்று நிரூபணம் ஆனது. இதைப் பற்றி ஐ. நா இதுவரை கேள்வி எழுப்பி இருக்கிறதா? இந்தியா மூச்சு விட்டு இருக்கிறதா? மற்ற நாடுகள் முனங்கிக் கூட உலகம் கேட்கவில்லை. 

சரி அது போகட்டும் அப்படி ஐ. நா தீர்மானத்தால் அனுமதியளிக்கப் பட்டு ஈராக்கில் நுழைந்த அமெரிக்க இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் எவ்வளவு? சிறையில் அடைக்கப் பட்ட இஸ்லாமியக் கைதிகளை செய்த  சித்ரவதை மனித உரிமைகளின் மறு பிறவியா? காஷ்மீரில் மீறப்படும் மனித உரிமைகள் எத்தனை? எத்தனை? லெபனானில், பாலஸ்தீனத்தில் , காசாவில் மனித உரிமைகள் இதே அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரேலால் மீறப் பட்ட போது அமெரிக்கா வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததா? அரபு நாடுகள் கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் போதெல்லாம் தனக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தால் அநியாயங்களுக்கு அங்கீகாரம் வழங்கிய அமெரிக்காவுக்கு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றி பேசும் தைரியம் எப்படி வந்தது? கம்போடியாவிலும் வியட்நாமிலும் அமெரிக்க ராணுவம் கபடி ஆடப் போயிருந்ததா? கபட நாடகத்தின் ஒரு சாட்சியே இந்தக்  காட்சி. 

நல்ல வேளை . இந்தியாவின் திராவிட மற்றும்  தமிழ் தேசிய இயக்கங்கள் கேட்டுக் கொண்ட இன அழிப்பு என்கிற வாசகம் அமெரிக்க தீர்மானத்தில் இடம் பெற்று கலங்கப் பட்டுவிடவில்லை. லெபனானில் நடு நிசியில்  நாடற்ற பாலஸ்தீன அகதிகள் முகாமில் புகுந்து வயிற்றில் இருந்த குழந்தைகள் வரை கொன்று குவித்த இஸ்ரேல் படைகளுக்கு ஆயுதம் வழங்கி வழி அனுப்பி வைத்த அமெரிக்க புண்ணிய புருஷர்கள் போடும் வேஷமே இலங்கைக்கு  எதிரான மனித உரிமை மீறல் தீர்மானம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.  .  

உலகெங்கும் அரசியல் பிரச்னைகளில் அழையாத விருந்தாளியாக மூக்கை நுழைத்து தனது சூப்பர் பவர் அதாரிடியை எப்பாடு பட்டாவது நிலை நாட்டிக் கொள்ள வேண்டுமென்பதே அமெரிக்காவின் நோக்கம். அது ஜார்ஜ் புஷ் ஆக இருந்தாலும் சரி – ஒபாமாவாக இருந்தாலும் சரி என்பதை மாணவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். 

உலகெங்கும் இலட்சக் கணக்கான இளந்தளிர்களின்   உயிர்களை கொன்று குவித்து கும்மாளம் போட்ட ரத்தக் கரை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரனாகிய அமெரிக்க தீர்மானத்துக்கு இத்தனை  கூக்குரல்கள் போடுவது எத்தகைய உலக அரசியல் அறிவு என்று எவருக்கும் புரியவில்லை. உலக ரவுடியிடம் உண்மையின் தத்துவத்தை எதிர்பார்க்கலாமா? இதை ஏன் மாணவர் சமுதாயம் சிந்திக்கத்தவறியது?

மாணவர்களுடைய போராட்டம் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்றா அல்லது ஈழத்தமிழருக்காகவா? அமெரிக்காவுக்கு வெண்சாமரம் வீசுவதற்கு இந்தியாவை ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் போட்டா போட்டி காட்டா  குஸ்தி நடைபெறுகிறது. கடைசியில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் என்ன இருந்தது? அந்தத் தீர்மானம் ஒரு நீர்த்துப்போன நெருப்பு. அது உண்மையான நீராகவே இருந்தாலும் அள்ளிக் குடித்து தாகம் தீர்க்க உதவாத  கடலோரம் தெரியும் கானல் நீர். 

இந்தியாவுக்காக அமெரிக்கா வாக்களித்த அணுசக்தி  தீர்மானம் என்ன ஆனது? அணுசக்தி ஆனது. யுரேனியம் தருவதாக வாக்களித்த அமெரிக்கா அல்வாதானே  கொடுத்தது? இதைக் கேட்பதற்கு இந்திய அரசுக்கு தைரியம் இருந்ததா?

எனவே மாணவச் செல்வங்களே ஈழத்தமிழருக்காக ஆக்க பூர்வமாக எதுவும் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அமெரிக்காவை சார்ந்திருக்கும் போக்கை கைவிடத் தயாராகுங்கள். எதைச் செய்தால் தாய் நாட்டுக்கு மரியாதை  என்று  சிந்தியுங்கள். இப்போது நீங்கள் நடத்தும் போராட்டத்துக்கு அமெரிக்காவைத் துணைக்கு அழைப்பீர்களானால் ஏமாந்து போவீர்கள். உங்களின் சக்தியை தனது அயோக்கியத்தனத்துக்கு ஆதரவாக்கிக் கொள்வதில் அமெரிக்காவுக்குத்தான் இலாபம். தமிழருக்கோ அல்லது ஈழத்தமிழருக்கோ அல்ல. அல்லவே அல்ல. 

இலங்கையில் அழிக்கப் பட்ட இனம் தமிழ் இனம். அதே நேரம் மற்றொன்றை மாணவர்களின் சிந்தனைக்குத் தர விரும்புகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்கள் மூன்று வகையினராக இருக்கிறார்கள். ஒன்று மலையகத் தமிழர்கள் ; இரண்டு இஸ்லாமியத் தமிழர்கள் ; மூன்று யாழ்ப்பாணப் பகுதியிலே வாழும் தமிழர்கள். இப்போது நடை பெற்ற இந்த இன அழிப்பு யாழ்ப்பாணப் பகுதிகளில்தான் பெருமளவு நடை பெற்றது. மற்ற பகுதிகளில் அவ்வளவாக பிரச்னை இல்லை என்று சொல்லப் படுகிறது. அதே நேரம் தமிழ் பேசும் முஸ்லிம்களை யாழ்ப்பாணப் பகுதியில் கோலேச்சிய விடுதலைப் புலிகள் இஸ்ரேலியர்களை விடக் கொடுமையாகக் கொலை செய்த காத்தான்குடி சம்பவத்தையும் ஒதுக்கி மறப்பதற்கில்லை. தமிழ் இனத்தை தமிழ் இனமே அழித்த சம்பவங்கள் எவ்வளவு திரை போட்டு மறைத்தாலும் வெளிவந்தே தீரும். ஆகவே இன்று இலங்கையில் மிச்சம் மீதி வாழ்ந்து கொண்டிருக்கும் மூவகை  தமிழ் சமுதாயத்துக்காக ஆக்க பூர்வமாக - அவர்கள் அமைதியாக வாழ என்ன வழி காணலாம் என்பது மட்டுமே இந்த மாணவர்களின் போராட்டங்களின் நோக்கமாக இருந்தால் அனைவருக்கும் நல்லது. 

கோஷம் போட்டு குதிப்பதைவிட்டு மாணவர்கள் ஒன்று இணைந்து ஆக்க பூர்வ வழிகளை அரசியலை புறந்தள்ளிவிட்டு ஆலோசித்து செயல்பட்டாலே நலம். விலையற்ற மாணவர்களின் எதிர்காலமும் இன்னுயிரும் எடுப்பார் கைப் பிள்ளைகளாக ஆகிவிடக் கூடாது. மாணவச் செல்வங்களின் எதிர்காலம் சிதைந்து விடக்கூடாது. இலங்கையில்  வாழும் நமது அனைத்து சொந்தங்களும் இனியாவது சுதந்திரமாய் வாழ வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டதாக மாணவர்களின் போராட்டம்  இருக்க வேண்டும்.

முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.,