Showing posts with label MSM மீராஷா ரஃபியா. Show all posts
Showing posts with label MSM மீராஷா ரஃபியா. Show all posts

பெட்ரோலை போட்டு தாகத்தை தனியுங்க ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | June 22, 2012 | , , , , , ,

போடுங்க பெட்ரோலை... தனியுங்கள் உங்கள் தாகத்தை - இலவசம்...!

"யேய்.. யேய்... வண்டியை மேல ஏத்திராதப்பா..ஏத்திராதப்பா..? அட நிப்பாட்டுப்பா.."

அப்புடி என்னத்த தலைப்புல தப்பா சொல்லிபுட்டேன்! உண்மையதானே சொன்னேன்..  "

இந்தா முதல்ல தண்ணீரையோ, குளிர்பானத்தையோ குடி. இல்லாட்டி கோபத்துல வேர்த்து விறுவிறுத்து போகிருக்கின்ற முகத்தை டிஸ்ஸுல துடச்சிக்கோ".

எதுவா இருந்தாலும் கீழே உள்ள படத்தை பார்த்துபுட்டு பேசு.. அப்புறம் தெரியும் நீ யார் மேல கோபப்படனும்னு.

10 ரியாலுக்கு எரிபொருள் எண்ணெய் (Petrol/Diesel) போட்டால் 1 லிட்டர் தண்ணீர் புட்டியோ (பாட்டில்), குளிர்பானமோ அல்லது டிஸ்ஸு பெட்டியோ இலவசம் என்று சாலையோரமா ஒரு பலகை பல்லை இளித்துக்கொண்டு சாய்ந்து நின்றது.அதை அந்த எரிபொருள் எண்ணெய் உரிமையாளருக்கு தெரியாம கப்சுப்னு புகைப்படம் எடுத்தாச்சு..


அதாவது இந்திய நாணய மதிப்புப்படி 2 லிட்டர் (150 ருபாய்) அளவு எரிபொருள் எண்ணெய் போட்டால் 1 1/2 லிட்டர் தண்ணீர் இலவசமாம்.

இதைவைத்து இங்கு தண்ணீர் மலிவுன்னு நினைத்துவிடாதீர்கள்...
1/2 லிட்டர் தண்ணீர் - 1 ரியால்
1 லிட்டர் எரிபொருள் எண்ணெய் - 1/2 ரியால்

இந்தியா எரிபொருள் எண்ணெய்யின் (மூன்றாம் தரம்) விலை = 75.40 ரூபாய் / லிட்டர்.
சவூதியில் எரிபொருள் எண்ணெய்யின் (இரண்டாம் தரம்) விலை = 7.00ரூபாய் / லிட்டர் .

சவூதி அரேபியா, ஈரான் போன்ற எரிபொருள் எண்ணெய் வளமிக்க நாடுகளிடமெல்லாம் கொஞ்சம் கொஞ்சிப்பேசாமல், அறிவாளி ஆட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு சென்றுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம் இருக்கும்வரை பெட்ரோலிய விலையில் சதம்காணாமல் விடப்போவதில்லை என்று வருங்காலம் பிரகாசமாய் தெரிகின்றது.. மொத்தத்தில் இந்தியா அரசுக்கு தன் நாட்டு மனிதவளத்தையும் சரிவர உபயோகிப்பதில்லை, பிற நாடுகளையும் சரிவர உபயோகித்துக் கொள்வதில்லை.

இங்கு மின்சாரமும் மலிவுங்கிற தெனாவெட்டுல தினமும் கல்யாணக்காரவீட்டு தோரணம் மாதிரி எண்ணெய் நிறுவனத்தை சோடிச்சி வச்சிருக்கானுங்க பாருங்களேன்.

ஹும்ம்..இதை சொன்னா நம்மள போடா வெண்ணைன்னு சொல்றாங்க..

பின் குறிப்பு:
ஜம் ஜம் தண்ணீர் 5 லிட்டரு இலவசமா சில விமானத்துல ஏற்ற அனுமதிக்கின்றதுபோல் பெட்ரோலை விடமாட்டார்கலாவென்று சிலபேர் ரூம்போட்டு யோசித்துக் கொண்டும் ஆசையாய் இருக்கத்தான் செய்கிறார்கள் நம் ஆசிய பெருமக்கள்.ஹ்ம்ம்..

அன்புடன்,
மீராஷாஹ் ரஃபியா 

முதல் புனித பயணமும், முதல் மோனோ ரயில் பயணமும் - மீள்பதிவு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 07, 2011 | , , ,

இது ஓர் மீள்பதிவு..!

ஆம்.. இவ்வருடம் (2010) என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற விலை மதிக்கமுடியா பொக்கிசம் என்றுதான் கூறவேண்டும். என் முதல் ஹஜ் பயணம் வரலாற்றுமிக்க முதல் ஹஜ் ரயில் சேவையோடு தொடர்ந்தது. நூற்றிமுப்பது வயது மூதாட்டி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜிற்கு வருவதாக கேள்விப்பட்டவுடன், 'அட! நமக்கு இன்னும் முப்பது வயதுகூட ஆகவில்லை ஆனால் அல்லாஹ் நமக்கு அவன் அருளை அள்ளி கொடுத்துவிட்டானே!' என்ற பிரம்மிப்பு கலந்த சந்தோசம் .


முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ்ஜிற்கு வந்திருந்தும் அரபு நாட்டவர்களுக்கும், அந்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த மோனோ ரயில் பயணம் அல்லாஹ்வின் கிருபையால் கிடைக்கப்பெற்றது.

இந்த அனுவபத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு முன் இந்த ரயில் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக செயல்படுத்திக்கொடுத்த சஊதி அரசிற்கும், அசுர வேகத்தில் அசராமல் (24x7) நம்மை அசர வைத்த சீன நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். என்னடா இவன் அதிரம்பட்டினத்துல கம்பன் எக்ஸ்பிரசை நிப்பாடிடானுங்கங்குரத்துக்காக ரயில் வண்டியையே பார்க்காதமாதிரி! சொல்றானேன்னு பார்க்காதீங்கோ காக்காமார்களா.. நம் நாட்டில் இது நடந்தேற எனக்கு தெரிஞ்சு 6-8 வருடம் இழுப்பார்கள். இடையில் கொஞ்சம் "ராஜா.., ராணி.." ஆட்டம்லாம் வேற ஆடுவாங்க. 18 கிலோ மீட்டர் ரயில் பாதை இங்கு ஒரே ஆண்டில் முடிவுற்றது. இப்ப சொல்லுங்க நான் ஆச்சர்யப்படுவது சரிதான?


இதோ அரபியில் நாலு வரியில் எழுதக்கூடிய வார்த்தையை ஏழு கட்டத்திற்குள் கிளித்தட்டில் ஏத்தம் விட கோடு போட்டமாதிரி அடக்கிவைச்சிருக்கான்களே, இங்குதான் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இரவுபகல் வேலைபார்க்குமிடம்.

சரி சரி விசயத்திற்கு வர்றேன். பயணம் ஆரம்பமாகபோகுது சீட் பெல்ட போட்டுக்கொள்ளுங்கள்..

முதல் நாள் (ஹஜ் 8):

சுபுஹுக்குப்பின் ஜித்தாவிலிருந்து மினா வரை பேருந்தில் பயணித்தோம். ஹஜ்ஜின் கடமைப்படி மினாவில் லுகரிலிருந்து ஐந்து வேலை தொழுகை நிறைவேற்றிவிட்டு சுபுஹுக்குப்பின் அரபாவிற்கு செல்ல வேண்டும். ஆனால் ரயில் அட்டவணையின்படி எங்கள் குழு விடியற்காலை 1 மணிக்கு ரயிலை பிடித்தாக வேண்டும் என்று சஊதி அரசாங்கதிடமிருந்து உத்தரவு வந்தது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் என்று கட்டுப்பட்டு காத்திருந்தோம் . அப்போதுதான் கையில் கட்டப்பட்டது அந்த ரயில் பயணச்சீட்டு. இதை தண்ணீரில் ஊற வைத்தாலும் , வெயிலில் காய வைத்தாலும் கிழியாதாம். ஆகையால் ஒரு கரத்தில் பயண சீட்டும், மறுகரத்தில் காணாமல் போகாமல் இருக்க டென்ட் முகவரிகளும், எண்ணத்தால் சைத்தானுக்கு பூட்டும் போட்டவனாக இருந்தோம் .

பயணச்சீட்டு உங்கள் பார்வைக்காக..


இதில் நம் பயணத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நாட்கள், நாம் ஏற வேண்டிய ஸ்டேஷன் எண் மற்றும் பிரத்யேக பார்கோடு அச்சு செய்யபட்டிருந்தது.

ஸ்டேசன் எண் நம் டெண்டிற்கு அருகாமையில் இருப்பதைதான் குடுப்பார்கள்.

இரவு 12:30 மணிக்கெல்லாம் ரயிலை பிடிக்க சென்றுவிட்டோம். எனக்கு இது முதல் ஹஜ், முன்னால் ஹாஜிகளுக்கு இது முதல் ரயில் பயணம் என்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு சந்தொஷங்களோடு ஒன்று, இரண்டு மணி நேரம் ரயில்வே கேட்டின் படியின் கீழ் படர்ந்திருந்தோம். படி ஏறலாம் என்று கொடி காண்பிக்கப்பட்ட அந்த நொடியில் மக்கள் திரளாக "லப்பை அல்லாஹும்ம லப்பைக்..." என்ற சத்தம் விண்ணைத்தொட்டவாரே வின்வெளிப்பயனம்போல் ரயில் பயணத்தை தொடர்ந்தோம் . படி ஏற முடியாதவர்கள் ஒரே நேரத்தில் 60 பேர் ஏறக்கூடிய லிப்டில் ஏறினார்கள்.


 3000 மக்கள் பதினைந்தே நிமிடத்தில் மீனா - அரபா சென்றடைந்தோம். ஒரு மணிநேரத்தில் 30 ஆயிரம் மக்கள் பல்வேறு ரயில் வண்டிகள் மூலம் அரபா வந்தடைந்தார்கள். ஹஜ்ஜின் முக்கிய நாளான அன்று எங்களுக்கு எல்லா விதத்திலும் வல்ல ரஹ்மான் எளிமையாக்கிதந்தான்.

இரண்டாம் நாள் (ஹஜ் 9):


அரபாவிளிருந்து மக்ரிப் தொழுகையை முடித்துக்கொண்டு முஸ்தலிபா செல்வதற்காக வெளியில் காத்திருந்தோம். இந்த ரயிலில் பெர்த், அன்ரிசெர்வ்டு , வெயிட்டிங் லிஸ்ட் எதுவும் கிடையாது. ஆனால் ஒன்று, இரண்டு மணிநேரம் 'கொஞ்சம் வெயிட் பிளீஸ்' என்ற சத்தம் மட்டும் அரபு கலந்த ஆங்கிலத்தில் (மலையாளம் கலந்த ஆங்கிலத்தை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஸ்டைலாகத்தான் இருந்தது) கேட்டுக்கொண்டே இருந்தது. பிறகு அரபா-முஸ்தலிபாவிற்கு பத்து நிமிடத்தில் சென்றடைதோம்.


இஷாவை முடித்தவண்ணம் அங்கேயே உறங்கிவிட்டு மறுநாள் காலை ஸுபுஹ் தொழுகை முடிந்த பின் ஜமராத் கற்களை அங்கயே எடுத்துக்கொண்டு மீனாவிற்கு வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்தைவிட மினா டென்ட் எங்களுக்கு மிக அருகாமை என்பதால் பத்து நிமிட நடை பயணத்தில் வந்தடைந்தோம்.

மூன்று,நான்கு மற்றும் ஐந்தாம் நாள் (ஹஜ் 10 ,11 ,12 ):

இறுதி மூன்று நாட்கள் ஜமராத் கல் எறிவதற்காக மினா-ஜமராத்திற்கு தினமும் பத்து நிமிட ரயில் பயணம் மேற்கொண்டோம்.முன்புபோல் எங்கே வழிதவரிவிடுவோமோ, வெயில் சுட்டெறிக்குமோ, நம் ஒரு வயது குழந்தை தாக்குபிடிக்குமோ என்ற அச்சமெல்லாம் தணிந்து இறையச்சத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் ரயில் பயணத்தை மேற்கொண்டோம். கொஞ்சம் சொகுசாகவே நிறைவேற்றிவந்த இந்த ஹஜ்ஜில் உடலையும், மனதையும் இறைவனின் சோதனை கூடர்திற்கு அழைத்துச்சென்றது ஜமராத்-மக்கா. ஆறு கிலோமீட்டரை நடந்து கடக்க 2 -3 மணிநேரம் எடுத்தது (இன்ஷா அல்லாஹ் இனி வரும் வருடங்களில் இதற்கும் ரயில் பாதை அமைத்துவிடுவார்கலாம்). உண்மையில் இந்த கணம்தான் நம் முன்னோர்கள், நபி(ஸல்) அவர்கள் , நபித்தோழர்கள் செய்த தியாகம் என் மூளைக்கு எட்டியது(சுடு பட்டால்தான் உறைக்கும் என்பார்களே அது இதுதானோ!) .


மனம் குளிர ஒரு மழைத்துளி:

சிக்னல் இல்லாத ரயிலிற்கும், சிக்னல் கொடுக்காமல் வந்த மழைக்கும் கடும் போட்டி நிலவியது . முதல் சுற்றில் புகை இல்லா புகை வண்டியோடு வெற்றிபெற்று இறைவனின் அருட்கொடையை (ரயில்) குடையாய் பயன்படுத்திக்கொண்டு எங்கள் டென்ட் வந்தடைந்தோம். . பிறகு கஅபா முதல் மினா வரை மக்கள் யாவரும் ஒரு சுற்றும், முற்றும் சுற்றமுடியாமல் மழை சுழற்றி எடுத்தது. ரயில் பயணமும் சிறிது நேரம் ரத்தானது.

ஐந்து கடமையையும் முடித்துவிட்டோம் எங்கள் பிழைகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள துஅ செய்தவனாக வீடு திரும்பினோம்.


காக்காமார்களே உஷார்! உங்களுக்காக ஒரு டிப்ஸ்:

ஒரு கம்பார்மெண்டில் கிட்டத்தட்ட இருபது பேர் உட்காரும் அளவிற்கு இருக்கை இருக்கும். முட்டி மோதிக்கிட்டு கர்சீப் போட்டு முதல் ஆளாக இருக்கையில் அமர்ந்தாலும் கடைசி நபராக பெண்கள் கூட்டம் வந்தே தீரும். ஆகையால் எல்லா(மூவ்/நகரு)!! என்ற வார்த்தை தங்கள் காதுகளை துளையிடுவதற்கு முன் 'எலே.. எந்திரிலே' என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு ஏறும்போதே ஏதாவது ஒரு மூலையில் ஒதிங்கி நிப்பது புத்திசாலித்தனம்.

ஹஜ் ரயில் பயணம் ஒரு பார்வை -

1) ரயில் பயணத்தால் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் சேமிக்கபட்டது.

2) அதிக நேரம் தங்கும் இடத்திலேயே நன்மையை பெற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு (இது நாம் பயன்படுத்திக்கொள்வதை பொருத்தது).

3) இயலாதோற்கு இது இறைவன் கொடுத்த வரம்.

4) தினமும் 5000 வாகனங்கள் போக்குவரத்து நேரிசலோடு சேவை செய்யவேண்டியதை, இரு தண்டவாளங்கள் சீர் செய்தது.

5) நள்ளிரவு 11 - 3 ரயில் சேவை நிறுத்தப்படும். இது முன்னறிவிப்பு இல்லாமல் நடந்தமையால் கொஞ்சம் வாக்குவாதமும், சமாதானமும் நடந்தேறியது.

6) ஹாஜிகள் வசதிக்கேற்ப அதிக ரயில் நிறுத்தங்கள், அரபா 1- 2- 3, முஸ்தலிபா 1-2-3, மீனா 1-2-3

ஹஜ்ஜை முடித்து அலுவலகத்திற்கு வந்தபோது அரபு செய்திதாளில் படித்தேன் "சீனப்போருட்களில் தரமும் இருக்கின்றது" என்றதுபோல் ஒரு கட்டுரையை.

ஹும்ம்.. சீனர்களை கண்டாவது சின்சியாரிடியை கற்றுக்கொள் என்பது புது மொழியாக இருக்கக்கூடும் .

வல்ல ரஹ்மான் இந்த புனித ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக என்று துஆ செய்தவண்ணம் , விடைபெறுகிறேன்

- மு.செ.மு / M.S.M. மீராஷாஹ் ரஃபியா

ஜெத்தா, சஊதி அரேபியா.

திருமண அழைப்பிதழ் ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 01, 2011 | ,

அல்லாஹ்வின் திருப் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மனிதர்களே! ஓர் ஆன்மாவிலிருந்து உங்களை படைத்து, அவர் மூலம் அவரது ஜோடியையும் படைத்து, அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பெருகச் செய்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 4:1).

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண்,பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)

வயதுக்கு வந்த ஒவ்வொரு ஆண், பெண், மீதும் திருமணம் செய்து கொள்வது (நபிவழி) சுன்னத்தாக உள்ளது. யார் என் வழியைப் பின்பற்ற வில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்லர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதிஸின் கருத்து).

வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொள்வதை இந்த உம்மத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எப்படிக் கற்றுத் தந்தார்கள் என்பதை நாம் அதிகமாக சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நபிவழி திருமண வாழ்த்து:-
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்'

அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக...

(என்பது நபிவழி துஆ) அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

திருமண ஒப்பந்தத்தில் புதிதாக இணைய இருக்கும் அதிரை ரஃபியா என்று அழைக்கப்படும் ரஃபீ அஹமது அவர்களின் மூத்த மகனார் மீராஷாஹ் அவர்களின் திருமண அழைப்பினை எமது அதிரைநிருபர் குழுவுக்கும் அதன் பங்களிப்பாளர்களுக்கும் அனுப்பித் தந்தார்கள் - ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

தொழில் நுட்ப வளர்ச்சியில் வியக்கும் விதத்தில் முன்னேறியிருக்கும் நம் சமுதாய இளைஞர்களின் ஆர்வமும் அவர்களின் கலைத் திறனும், என்றுமே வித்தியாசத்தை விரும்பும் போக்கும் பாராட்டப்பட வேண்டியதே ! அதிலும் குறிப்பாக தன்னுடைய திருமண வாழ்வு எப்படி இருக்க வேண்டும் அதன் ஒவ்வொரு நிகழ்வுகளும் எப்படியெல்லாம் அமைந்திட வேண்டும் என்று திட்டமிடுவதில் இன்றைய இளைஞர்கள் நல்ல ஆரோக்கியமான முன்னேற்றமே கண்டிருக்கின்றனர்.

அவ்வகையில் எங்களது கவத்தில்பட்டது, சகோதரர் மீராஷாஹ் அவர்களின் திருமண அழைப்பிதழும் அதனை இணைய வழி தொடர்புடன் ஒருங்கிணைத்து அழைப்பிதழை ஏற்றுக் கொள்ளவும், அல்லது கலந்து கொள்ள இயலாவிடின் நண்பர்களின், உறவினர்களின் வாழ்த்துக்களை எவ்வகையிலாவது பெற்றிடுவது என்பதில் புது முயற்சியிடன் செய்திருக்கிறார்.

வரைகலையிலும், ஊடகத் துறையிலும் பட்டய பட்டம் பெற்றவர் தான் கற்ற கல்வியின் நலனைக் கொண்டு, வரைமுறைக்குட்பட்டு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். திருமண அழைப்பிதழ்ற்கு என்று இலட்சினை (LOGO)வையும் பதிந்திருக்கிறார்.

இதில் புதுமை என்னயிருக்கு என்ற கேள்விகள் எழுந்திருந்தாலும் தவறில்லை, ஆனால் தான் சார்ந்திருக்கும் துறையோடு அழைப்பிதழை மெருகேற்றி அங்கே தனக்கு அமையவிருக்கும் துணைக்கும் சேர்த்து துஆச் செய்ய வேண்டி அவர் வைத்திருக்கும் முயற்சியும், திருமணம் நடந்திடும் மணமகன் இல்லம் சென்றடைய வழிகாட்டியும் வைத்திருக்கிறார் கூகில் வரைபட உதவியுடன் ஒரு தூக்கல் தான் !

அதிரைநிருபர் குழுவும் அதன் பங்களிப்பாளர்களும் புதிதாக இணைய இருக்கும் மணமக்களை வாழ்த்துவதிலும் அவர்களுக்காக துஆச் செய்வதிலும் என்றும் முன்னிருக்கும் இன்ஷா அல்லாஹ்...

உங்களின் பார்வைக்கும் வாழ்த்துக்களுக்கும் இதோ !

உங்கள் வாழ்த்துக்களை வலைதளத்திலும் பதியலாம்.

- அதிரைநிருபர் குழு

இன்னமுமா புரியல ? ! - அனுபவம் பேசுகிறது ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2011 | , ,

அட.. ! நீங்க நினைச்சீங்கள அதேதாங்க..

அந்த காட்சி வழித்தொடர்பியல (Visual Communication) பத்திதாங்க அசலா அசைபோட போறேன்...

என்ன காக்கா உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சே, ஊர்ல எல்லாரும் எப்புடி ஈக்காக?

எல்லாம் நல்லாத்தான் ஈக்காக தம்பி. அது சரி... சவூதி அரேபியாவிலிருந்து சவுத் இந்தியாக்கு திடீர்னு காத்தடிக்குதே என்ன சங்கதி!?

ஒன்னும் இல்ல காக்கா, உங்களைலாம் பார்க்க விண்ணைத்தாண்டி வரமுடியாட்டியும் நம் மண்ணின் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் நமதூர் வலைப்பூக்கள் மூலம் கல்வி மாநாடு நிகழ்ச்சிய பார்த்தேன், பண்ணன்டாம் கிளாஸ் புள்ளயோல்வலெல்லாம் பொது தேர்வு எழுதி இருக்காக. உம்மா, வாப்பா காரவொல்லாம் நம்ம புள்ளைய அடுத்து என்ன படிக்க வைக்கிறதுன்னு யோசிக்க
ஆரம்பிச்சாடகன்னு தெரியுது.

அதான் காக்கா இந்த பாழாப்போன 2G 3G சோனியாஜி'ன்னு மக்கள் காஞ்சி போயிருக்கிறத பத்தி பேசாம, நாம படிச்ச காட்சி வழித்தொடர்பியல் பத்தி நம்ம மக்களுக்கு சொல்லி நாடு உருப்படுதோ இல்லையோ நாம உருப்பட வழியபாபோம்கிற நினைப்புல எழுதிகிட்டு இருக்கேன். நீங்க அப்பறமா நம்ம ஊர் வலைப்பூல வந்து பாருங்க காக்கா.

இப்போ எழுதபோறேன்…..

ஆம்! வாழ்கையில் நாம் ஒவ்வொருவரும் பல காட்சிகளை கண்டிருப்போம்.பல காட்சிகளில் கோர்வைதான் நம் வாழ்கை. நான் கண்ட/கற்ற காட்சி வழித்தொடர்பியல் (Visual Communication) பட்டப்படிப்பை பற்றி ஒரு அலசல் செய்ய ஆசைபடுகிறேன்.

விசுவல் கம்யுனிகேசன் என்று சொன்னவுடன் சிலருக்கு ஞாபகம் வருவது சினிமாதுரைக்கான படிப்பு என்பதுதான். உண்மையில் இதில் சினிமா என்பது பத்தில் இரண்டு பகுதி எனலாம். மேலும் அறிய கீழே படிப்போமே!!

பயிற்சி விவரம் :
  • Diploma in Visual Communication (6 months)
  • B.Sc., Visual Communication (3 years)
  • M.Sc., Visual Communication (2 years)
இதை சார்ந்த இன்ன பிற முதுநிலை பட்டப்படிப்புகள்
  • M.A. Advertising and Public Relation (2 years)
  • M.A. Mass Communication and Journalism (2 years)
இப்படிப்பின் 'சபாஷ்(+ve) என்ன? சவால்(-ve)' என்ன? என்பதை பார்போமா?

முதலில் இந்தப்படிப்பைக்கொண்டு எந்தந்த துறைக்கு நுழையலாம், எதையல்லாம் கற்றுக்கொடுப்பார்கள் என்று பார்ப்போம். சாதாரணமாக ஒரு பட்டபடிப்பு படித்தால் அது நம்மை ஒரு துறைக்கோ அல்லது அதிகபட்சமாக மூன்று, நான்கு துறைக்கோ செல்வதற்கு உதவும். ஆனால் இந்தப்படிப்பைகொண்டு பல்வேறு துறையில் கால் பதியலாம்.

அவைகளில் சில :-
  • 1. Compeer
  • 2. Film Critic
  • 3. Editor
  • 4. DTP Operator
  • 5. Script Writer
  • 6. Photographer
  • 7. Cinematographer
  • 8. film maker (Short film/Documentary/Cinema/Serial)
  • 9. Journalist
  • 10. Drawing Artist
  • 11. 3D Animator
  • 12. Web Designer
  • 13. Graphic Designer
  • 14. Printing Technology
  • 15. Copyrighter
  • 16. Advertiser
மேலே குரிப்பிடப்பட்டவைகளில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது photography, cinematography, film Industry, Graphics / Web / 3D
Designing, Journalism, Advertising. குறிப்பிட்ட துறையில் ஜாம்பவான் ஆவது அவரர் ஆர்வத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

அட..! என்ன காக்கா! சட்டுன்னு நாற்காலி நுனில உட்கார்ந்துகிட்டு மானிட்டர முறைச்சு முறைச்சு பார்க்கிறீங்க போல!! ஓஹோ.. மேலும் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கோ!!

சரி சரி.. 'சட்டு புட்டுன்னு விசயத்துக்கு வாப்பான்னு' நீங்க சொல்றது என் காதுல விழுது.. இதோ உங்களுக்காக..

சபாஷ் (+ve)
  • நாளடைவில் ஒருவன் இதை படித்து Journalist ஆனாலும் மற்ற துறைகளை பற்றிய ஞானமும் இருக்கும்.
  • ஒவ்வொரு செமெஸ்டர் விடுமுறையிலும் பயிற்சிக்காக நமக்கு விருப்பமான துறையில் அதற்கேற்ற நிறுவனங்களுக்கு சென்று பயிலும் போதே பயிற்சி பெறலாம்
  • (ஒருசிலர் பிராஜக்ட் என்ற பெயரில் கல்லூரி பக்கம் எட்டிகூட பார்கமாடார்கள், தேர்வு நாளை தவிர.)
  • உதாரணம்: All India Radio, O&M Advertising Agency Visit, Assistant Photographer, Assistant Journalist, Acting, News Reading
  • ஆர்வத்தோடு கல்வி கற்கும் முறை.
  • அதிகப்படியான துறைகளில் சுயமாக, பகுதி நேரமாக சம்பாதிக்கும் வழிகள் உண்டு.
  • உதாரணம்: Web Designing / Logo, Brochure, Business Card Designing, Photography, Videography, etc.,
  • படித்து முடித்ததும் நமக்கு போட்டியாக ஆட்கள் குறைவுதான்
  • மேல்நிலைப்பள்ளியில் நாம் காமர்ஸ், அறிவியல், கணினி போன்ற எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும் இந்த படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதி உண்டு.
சவால் (-ve)
  • UG படிப்பதற்குகூட PG (Parental Guidance) தேவைப்படும். காரணம் ஹராம்,ஹலாலை பிரித்தெடுத்துக் கூறுவதற்கு.. இப்படிப்பு கொஞ்சம் அப்படித்தான். பொழுதுபோக்கையே ஒரு பிழைப்பாக வைத்திருப்போருக்கு இது வாழைபழத்தை உரித்து வாயில் திணிப்பது போல்தான்.
  • நமதூரில் சிலர் (சிலரா? பலரா?) பெருநாள் அன்றுகூட பெரிய (வெள்ளித்) திரைக்கு வெள்ளை வேட்டி உடுத்திக்கிட்டு போகும் கூட்டம் இருக்கிறப்போ இத சொல்லவா வேணும். அவர்களுக்கு இப்படிப்பு பெரிய சினி கோட்டை. (என்னோடு படித்த சிலரிடம் கல்லூரி நூலகத்தில் அவர்கள் எடுத்த புத்தகங்களைவிட பல நூறு மடங்கிற்கு மேல் திரைப்பட சி.டி.க்கள்தான் அதிகம்.)
  • ஒரு சிலர் எல்லா துறையையும் அரை குறையாக, ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் என்றமுறையில் கற்று என்னவாகவேண்டும் என்று இறுதி வரை முடிவெடுக்கமுடியாமல் இருக்கும் சூழ்நிலையும் உண்டு.
  • இப்படிப்பிற்கு அதிகப்படியான செயல் வடிவ பயிற்சி தேவை என்பதால், இப்படிப்பை தொலைதூர கல்வி மூலம் பயின்றால் வெகு குறைவான அறிவே பெறமுடியும்.
  • விரும்பியதை மட்டும் படிக்க உகந்ததல்ல. உதாரணத்திற்கு நிரூபரகவோ, ஓவியராகவோ மட்டும் ஆகவேண்டும் மற்ற பலாய் முசீபத்துகலெல்லாம் நமக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள், கலவையாக இருக்கும் இப்படிப்பை படிப்பதற்கு பதில் B. A. Journalism, B. A. Fine Arts போன்ற விரும்பிய தனித்துவ துறைக்கான படிப்பை தேர்ந்தெடுத்து விரும்பிப்படித்து நன்கு தேர்ச்சி பெறமுடியும்.
  • என் பிள்ளை 'ஒரே ஊர் சுற்றுகிறான், சினிமாக்கு போறான், காலேஜில 100% வருகை பதிவு வாங்க மாட்டிருக்கான்' என்றெல்லாம் இப்பட்டபடிப்பு ஆசிரியரிடம் நீங்கள் புகார் கூறினால்... உங்களை பட்டப்பகலில் மேலும் கீழும் வேற்றுகிரக வாசியை பார்ப்பதுபோல் பார்த்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. இப்படிப்புகளை கற்றுக் கொடுப்பவர்கள் ஒன்னும் வாவண்ண சாரும், எஸ்.கே.எம்.ஹாஜாமி சாரும் அல்ல. ஹும்ம்.. சீனி விற்பனை செய்கின்ற கடையில் போய் 'என் பையன் அதிகம் சீனி சாபிடுகின்றான் கன்டியுங்கள்' என்று புகார் செய்யும் கதைதான்.
என் கருத்து:

என்னை பொறுத்தவரையில் இப்படிப்பு ஒரு கூர்மையான கத்தியை போல். கத்தியை வைத்து காய்கறி அறிவதும், கழுத்தை அறிவதும் பயன்படுத்துபவரின் மனநிலையை பொறுத்தது. ஆனால், ஜாக்கிரதை இரு முனையிலும் கூர்மை அதிகம்.

WARNING: HANDLE EEMAN WITH CARE

மேலும் தகவல் அறிய பின்னூட்டத்தில்(comments) பின்னி எடுத்தால் அனைவருக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்.

இல்லாவிடில் அனுப்புங்க visualmeera@gmail.com என்ற உங்கள் அன்பு சகோதரனின் மின்னஞ்சலுக்கு..

அடுத்து யாரோ அவங்க படிச்சத அலசல் பண்ணுறதுக்கு கச்சல கட்டிக்கிட்டு நிக்கிறதா தெரியுதே!!

சீக்கிரமா வாங்க.. இந்த கல்விக்கான மாதத்தில் உங்களைத்தான் எதிர்பார்த்தோம்.

இப்படிக்கு,

-மு.செ.மு.மீராஷாஹ் ரஃபி அஹமத்
-Web Designer & Digital Media Visualizer
-B.Sc., Visual Communication
-M.A.Advertising and Public Relation